ஜிகினா விமர்சனம்

-எஸ் ஷங்கர்

Rating:
3.0/5

நடிகர்கள்: விஜய் வசந்த், சானியாதாரா, ஸ்ரீதேவி, சிங்கம்புலி

Vanna Jigina (U): இப்போதே உங்கள் டிக்கெட்டை புக்செய்யுங்கள்!

இசை: ஜான் பீட்டர்

தயாரிப்பு: லிங்குசாமி, சுபாஷ் சந்திரபோஸ் & திருக்கடல் உதயம்

இயக்கம்: ரவி நந்தா பெரியசாமி

கால் டாக்சி ஓட்டிப் பிழைப்பு நடத்தும் சாதாரண இளைஞன் பாவாடைச் சாமி (விஜய் வசந்த்). அப்பா அம்மா இல்லாத அவனுக்கு நான்கு நண்பர்கள்தான் துணை. நண்பர்களுக்கு கிடைத்ததைப் போல தனக்கும் பெண் நட்பு வேண்டும் என ஆசைப்படும் அவனை பேஸ்புக்கில் நுழைய வைக்கிறார்கள்.

தன் பெயரும் நிறமும் பெண் நட்புக்கு தடையாக இருக்குமே என்ற சந்தேகத்தில், கிஷோர் என்ற போலி பெயர் மற்றும் போலிப் படத்துடன் கணக்கு தொடங்குகிறான்.

Jigina Review

அப்போதுதான் ஏஞ்சல் என்ற பெயரில் ஒரு பெண் அறிமுகமாகிறாள் பேஸ்புக்கில். சாட்டில் பேசி காதல் வளர்க்கிறார்கள். ஒரு நாள் ஏஞ்சலை தன் டாக்சியில் சந்திக்கிறான் பாவாடை. அப்போதுதான் அவள் ஒரு பாடகி என்று தெரிந்து, இன்னும் நெருக்கமாகிறான். அந்த நேரத்தில் தான்தான் அந்த பேஸ்புக் கிஷோர் என சொல்ல முனைகிறான். ஆனால் முடியாமல் போகிறது. அப்போதுதான் ஒரு உண்மை தெரிகிறது, பேஸ்புக் கணக்கில் இருக்கும் ஏஞ்சல் வேறு பெண் என்பதும், பாடகியின் படத்தை போலியாகப் பயன்படுத்தியிருப்பதும்.

அடுத்து எந்தப் பெண்ணுடன் விஜய் வசந்த் சேர்ந்தார் என்பது மீதிக் கதை.

இன்றைய தலைமுறையின் போக்கை அறிந்து அவர்களுக்கேற்ற ஒரு கதையைச் சொல்ல முற்பட்டிருக்கிறார் இயக்குநர் ரவி நந்தா பெரியசாமி. வசனங்களிலும் காட்சி அமைப்புகளிலும் இன்னும் கவனம் செலுத்தியிருந்தால் இந்தப் படம் இன்னும் வேறு ரேஞ்சில் இருந்திருக்கும்.

விஜய் வசந்துக்கு மிக எதார்த்தமான வேடம். இதற்கு முன் நடித்த படங்களை விட சிறப்பாகவே அமைந்திருக்கிறது இந்தப் படத்தில் அவர் வேடம். ஏஞ்சல் என்ற பெயருக்கேற்ப தோற்றத்திலும் நடிப்பிலும் கவர்கிறார் சானியாதாரா.

Jigina Review

கருகுமணியாக வரும் ஸ்ரீதேவிக்கு நாயகிக்கு இணையான வேடம். உணர்ந்து நடித்திருக்கிறார்.

சிங்கம் புலி, ரவி மரியா மற்றும் விஜய் வசந்தின் நண்பர்களாக வரும் அந்த நால்வரும் தங்கள் வேலையைக் கச்சிதமாகச் செய்து, காட்சிகளை சுவாரஸ்யப்படுத்துகிறார்கள். ஆரம்ப காட்சிகளில் உள்ள வேகக் குறைவை சரி செய்திருக்கலாம்.

பாலாஜி வி ரங்காவின் ஒளிப்பதிவு, ஜான் பீட்டர்ஸின் இசை இரண்டுமே படத்துக்கு ப்ளஸ்.

இந்தப் படத்தில் குறைகள் இருந்தாலும், பேஸ்புக்கே கதி என்று கிடக்கும் சமூகத்தில், அந்த பேஸ்புக்கால் வரும் பிரச்சினைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படும் வகையில் கதையைச் சொன்னதற்காக ஒரு முறை பார்க்கலாம்!

 

அப்பாக்களின் அவஸ்தைகள் யாருக்குத் தெரியும்?- பிரபு

அப்பாக்களின் அவஸ்தைகள் யாருக்குத் தெரியும்? பிள்ளைகள் என்று வரும்போது தகப்பன்கள் படும்பாடு எங்களை மாதிரி தகப்பன்களுக்குத்தான் தெரியும், என்றார் நடிகர் பிரபு.

நேற்று நடந்த அசுரகுலம் பட இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்ற நடிகர் பிரபு பேசுகையில், "நான் 1978-ல் 'திரிசூலம்' படத்தில் தயாரிப்பு நிர்வாகப் பணியைக் கவனித்து வந்தேன். அப்போதெல்லாம் அப்பா, பெரியப்பா எம்.ஜி.ஆர் ஆகியோருக்கு சாஹுல், ஜெயமணி இருவரும்தான் டூப் போடுவார்கள். இவர்களிடயே உயரமாக இன்னொருவர் இருப்பார் அவர்தான் பெப்ஸி விஜயன். அப்போது அப்பா கூட இவர் வேலை செய்வதைப் பார்த்து 'இவன் பெரிய ரவுண்ட் வருவான்' என்று பாராட்டுவார்.

Prabhu remembers Sangili days

மாஸ்டராக இவருக்கும் எனக்கும் 'சங்கிலி' முதல்படம். அந்தப் படத்தில் நான் அப்பாவை எதிர்த்து வசனம் பேசுவேன். அப்போது அப்பா என்னை அடிக்க வேண்டும். நான்கு ஷாட்கள்தான் இருக்கும். ஆனால் 25 போடு போட்டார். இது பற்றிக் கேட்ட போது அப்பா சொன்னார் 'இவன் படுத்திய பாடு தாங்காமல் போட்டேன்.. இதுதான் சமயம் போடுவதற்கு' என்றார்.

அப்பாக்களின் அவஸ்தைகள் யாருக்குத் தெரியும்? பிள்ளைகள் என்று வரும்போது தகப்பன்கள் படும்பாடு எங்களை மாதிரி தகப்பன்களுக்குத்தான் தெரியும்.

இந்த சபரிஷின் அப்பா கஷ்டப்பட வைக்க மாட்டார். ஆனாலும் சபரிஷ் கஷ்டப்பட்டு உழைக்க வேண்டும். வாரிசுகள் இணைந்து உள்ள இப்படத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டும்,'' என்றார்.

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் கலைப்புலி எ.ஸ்.தாணு பேசும் போது, "தம்பி சபரிஷ் திரையுலகைக் காக்கவந்த குலவிளக்காக வலம் வருவார். இவர் சாமுத்ரிகா லட்சணம் பொருந்திய நடிகராகத் தெரிகிறார், வெற்றி வலம் வருவார். நல்ல படத்துக்கான கதைக் களத்துடன் இந்தப் படம் இருக்கிறது. படம் வெற்றி பெறும் வாழ்த்துக்கள்,'' என்றார்.

Prabhu remembers Sangili days

எல்லா மகன்களுக்கும் அப்பாதான் ஹீரோ - சந்தானம்

நடிகர் சந்தானம் பேசும் போது, ''இந்த சபரிஷுடன் நான் ஏற்கெனவே 'மார்க்கண்டேயன்' படத்தில் நடித்திருக்கிறேன். இதில் நான் நடிக்கவில்லை. இருந்தாலும் அன்புக்காக வந்திருக்கிறேன். 'மார்க்கண்டேயன்' படத்தை ஒரு காட்டில் எடுத்தோம். வீரப்பன் கூட நுழையமுடியாத காடு அது. அங்கு டாய்லட் கட்டி மின்சாரம், ஏசி என்று எல்லா வசதிகளையும் செய்து கொடுத்தார் மாஸ்டர்.

பத்து மாதம் சுமந்து அம்மா பெற்றாலும் எல்லாருக்கும் ரோல் மாடல் அப்பாதான். எங்கள் அப்பா குடிக்க மாட்டார். புகைப் பிடிக்க மாட்டார். அவர் ஒரு பில்டிங் காண்ட்ராக்டர். இருந்தாலும் தன்னிடம் வேலை பார்ப்பவர்களிடம் ஜாலியாக அரட்டை அடிப்பார். அவர்தான் என் முதல் ஹீரோ. சபரிஷுக்கு நல்ல அப்பா, கிடைத்து இருக்கிறார். சபரிஷுக்குத் துணை நிற்போம். என்னை ரசிக்கும் ரசிகர்கள் என் தம்பி சபரிஷ் படத்தையும் பார்க்க வேண்டுகிறேன்,'' என்றார்.

இயக்குநர்கள் சங்கத்தலைவர் விக்ரமன் பேசும்போது, "தாய் 8 அடி பாய்ந்தால் குட்டி 16 அடிபாயும் என்பது அந்தக்காலம். இப்போது தாய் 8 அடி பாய்ந்தால் குட்டி 64 அடிபாயும். பெப்ஸி விஜயன் வில்லனாகத்தான் நடித்திருக்கிறார் அவரால் டூயட் பாட முடியாது. எனவே தன் மகனை டூயட் பாட வைத்திருக்கிறார். சபரிஷுக்கு யாருடைய சாயலும் இல்லாத முகம். யார் சாயலும் இல்லாத நடிப்பு. நாயகி வித்யாவும் புதியவராக இருக்கிறார். கண்டிப்பாக சபரிஷுடன் இணைந்து படம் செய்வேன்,'' என்று கூறி வாழ்த்தினார்.

 

ஆல் ஈஸ் வெல் அசினுக்கு 'நாட் வெல்'.. தோல்வியோடு விடைபெறுகிறார்?

ஆல் ஈஸ் வெல் படத்தோடு சினிமா உலகுக்கு குட்பை சொல்லிவிடலாம் என்ற முடிவோடு புதுப் படங்களை ஒப்புக் கொள்ளாமல், கல்யாண வேலைகளுக்கு ஓகே சொல்லியிருந்தார் அசின். படத்தின் மேல் அத்தனை நம்பிக்கை அவருக்கு.

ஆனால் நினைத்தது நடக்கவில்லை. கடந்த வாரம் வெளியான ஆல் ஈஸ் வெல்... வெரி பேட் என்று ரிப்போர்ட் வந்துவிட்டது பாக்ஸ் ஆபீஸில்.

Asin disappoints over All Is Well defeat

உமேஷ் சுக்லா இயக்கத்தில் அசின், அபிஷேக் பச்சன் நடித்திருந்தனர் இந்தப் படத்தில். காமெடிப் படமாக எடுக்கப்பட்ட ஆல் ஈஸ் வெல், வெளியான முதல் வாரத்தில் ரூ 8.72 கோடியை மட்டுமே வசூலித்தது. இந்தப் படத்துடன் மாஞ்சி தி மவுன்டெய்ன் படம் வெளியாகியிருந்தது. அந்தப் படமும் சுமாரான வசூலைப் பெற்றது.

திங்கள் கிழமைக்குப் பிறகு ஆல் ஈஸ் வெல் படத்துக்கான வசூல் இன்னும் குறைய ஆரம்பித்துள்ளது.

ஆல் ஈஸ் வெல் படத்தை வெற்றிகரமாக முடித்துவிட்டு, மைக்ரோமேக்ஸ் நிறுவனர் ராகுல் ஷர்மாவைத் திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிடலாம் என்று திட்டமிட்ட அசினுக்கு இது பெருத்த ஏமாற்றத்தைத் தந்துள்ளதாம்.

 

நடிகர் சங்கத்திலிருந்து நீக்கப்பட்ட குமரிமுத்து உள்ளிட்டோர் மீண்டும் சேர்ப்பு!

நடிகர் சங்கத்திலிருந்து நீக்கப்பட்ட குமரிமுத்து உள்ளிட்டோரை மீண்டும் சேர்ப்பதாக அறிவித்துள்ளார் சங்கத்தின் செயலாளர் ராதாரவி.

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு விரைவில் தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி பத்மநாபனை தேர்தல் அதிகாரியாக நியமித்து உள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.

Kumari Muthu re admitted in Nadigar Sangam

சென்னையில் எந்த இடத்தில் தேர்தலை நடத்தலாம் என்று அவர் ஆய்வு நடத்தி வருகிறார். இதற்கிடையில், நடிகர் சங்க தேர்தலில் ஓட்டுப்போட தகுதியான நடிகர்-நடிகைகள் மற்றும் நாடக நடிகர்கள் பட்டியல் சங்க பதிவாளரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இதில் 31-3-2015 வரை ஒட்டுப்போட தகுதி உள்ளவர்களாக 3148 பேர் இடம் பெற்றுள்ளனர். நடிகர் சங்கத்திலிருந்து நகைச்சுவை நடிகர் குமரிமுத்து ஏற்கனவே நீக்கப்பட்டிருந்தார். சங்க நிர்வாகிகள் மீது அவதூறான கருத்துக்களை வெளியிட்டதாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனை எதிர்த்து அவர் நீதிவழக்கு தொடர்ந்து நீக்கத்துக்கு இடைக்கால தடை உத்தரவு பெற்றார்.

இதேபோல, பூச்சி முருகன், ஆர்.எம்.சுந்தரம், பி.ஏ.காஜாமொய்தீன் ஆகியோரும் உறுப்பினர் படிவத்தை புதுப்பிக்கவில்லை என்று சங்கத்திலிருந்து நீக்கப்பட்டார்கள்.

அவர்களும் தாங்கள் நீக்கப்பட்டதை எதிர்த்து வழக்கு தொடர்ந்து தடை பெற்றார்கள். இதைத்தொடர்ந்து இந்த நான்கு பேரும் மீண்டும் நடிகர் சங்கத்தில் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

இதனை சங்கத்தின் பொதுச் செயலாளர் ராதாரவி சங்கப் பதிவாளருக்கும் தெரிவித்துள்ளார்.

 

புலி பட ரிலீஸ் தேதி திடீர் என 2 வாரத்திற்கு தள்ளி வைப்பு

சென்னை: விஜய்யின் புலி படத்தின் ரிலீஸ் தேதி 2 வாரம் தள்ளிப் போயுள்ளது.

சிம்புதேவன் இயக்கத்தில் விஜய், ஸ்ருதி ஹாஸன், ஹன்சிகா, ஸ்ரீதேவி, சுதீப் உள்ளிட்டோர் நடித்துள்ள புலி படத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். புலி படத்தின் டிரெய்லரை யூடியூப்பில் இதுவரை 40 லட்சம் பேர் பார்த்து ரசித்துள்ளனர்.

Puli release date postponed

டிரெய்லர் சான்சே இல்லை, செம என விஜய் ரசிகர்கள் பேசிக் கொள்கிறார்கள். புலி படத்தை செப்டம்பர் 17ம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருந்தனர். இந்நிலையில் ரிலீஸ் தேதியை 2 வாரங்களுக்கு தள்ளி வைத்துள்ளனர். அதன்படி படம் அக்டோபர் மாதம் 1ம் தேதி தான் ரிலீஸ் ஆகிறது.

இது குறித்து புலி படத்தின் தயாரிப்பு நிறுவனமான எஸ்.கே.டி. ஸ்டுடியோஸ் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,


அக்டோபர் 1ம் தேதி புலி படம் ரிலீஸ் ஆகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

போஸ்ட் புரொடக்ஷன் மற்றும் சில வேலைகள் இருப்பதால் ரிலீஸ் தேதி தள்ளிப்போடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

 

லீடரின் படம் தள்ளிப் போனதற்கு கொக்கமக்கா தான் காரணமா?

சென்னை: பெல் நடிகரின் படம் பல ஆண்டுகள் கழித்து ரிலீஸ் ஆவதால் லீடரின் விலங்கு படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

லீடர் நடிகர் விலங்கின் பெயர் கொண்ட படத்தில் நடித்து முடித்துள்ளார். பிற நடிகர்கள், நடிகைகள் பேயாட்டம் போடுகையில் அவர் மட்டும் வித்தியாசமாக ஃபேன்டஸி

படத்தில் நடித்துள்ளார். இயக்குனர் ஆடை அலங்காரம் முதல் கிராபிக்ஸ் வரை அனைத்து விஷயத்திலும் அதிக கவனம் செலுத்தியுள்ளார்.

படத்தின் டிரெய்லரே அமோக வரவேற்பு பெற்றுள்ளது. இந்நிலையில் படம் எப்படா ரிலீஸ் ஆகும் என்று காத்திருந்த ரசிகர்களுக்கு ஒரு கசப்பு செய்தி. அதாவது படத்தின்

ரிலீஸ் தேதி 2 வாரத்திற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

படம் தள்ளிப் போனதற்கு சம்பந்தப்பட்டவர்கள் ஒரு காரணம் தெரிவித்துள்ளனர். ஆனால் உண்மையான காரணம் வேறு என்று கோடம்பாக்கத்தில் பேசிக் கொள்கிறார்கள். பல ஆண்டுகள் கழித்து பெல் நடிகரின் படம் ஒன்று தற்போது ரிலீஸாக உள்ளதாம். அந்த பட ரிலீஸின்போது விலங்கு படத்தையும் விட்டால் சரியாக இருக்காது என்று நினைத்து ரிலீஸ் தேதியை தள்ளி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

ஆக, படம் தள்ளிப் போனதற்கு காரணம் அட கொக்கமக்கா தானாம்.

 

'கபாலி'யில் தர்மதுரை கெட்டப்பில் வருகிறார் ரஜினி?

கபாலி படத்தில் ரஜினியின் கெட்அப் எப்படி இருக்கும்? ரசிகர்களின் மில்லியன் டாலர் கேள்வி இது. வலையுலகிலும் திரையுலகிலும் இதே பேச்சாக இருக்கிறது.

ரசிகர்கள் ரஜினியின் தோற்றம் இப்படித்தான் இருக்கக் கூடும் என்று கற்பனை செய்து அதற்கு ஒரு வடிவமும் கொடுத்து உலவவிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

Rajini's getup in Kabali revealed

இந்த நிலையில் 20 ஆண்டுகளுக்கு முன் வந்த தர்மதுரை படத்தின் ஆரம்ப மற்றும் இறுதிக் காட்சிகளில் வருவது போலத்தான் இந்தப் படத்தில் ரஜினி தோன்றப் போகிறார் என செய்திகள் கசிந்துள்ளன.

இந்தப் படத்திலும் ரஜினிக்கு ஒப்பனையாளராகப் பணியாற்றப் போவது பானுதான். சிவாஜி, எந்திரனில் ரஜினியை அவரது ஆரம்ப கால தோற்றத்தில் காட்டி ரசிகர்களைப் பரவசப்படுத்தியதில் பானுவுக்கும் ஒரு பங்கு உண்டு என்பது நினைவிருக்கலாம்!

ரஞ்சித் இயக்கும் இந்தப் படத்தின் முதல் தோற்ற போஸ்டர் வரும் செப்டம் 17-ம் தேதி வெளியாகவிருக்கிறது .

 

சாமியை வெய்ட்டிங் லிஸ்டில் வைத்து சிங்கத்தை கையில் எடுத்த ஹரி

சென்னை: தமிழ் சினிமாவின் அதிரடி இயக்குநர்களில் ஒருவரான ஹரி தற்போது சிங்கம் 3 படத்தின் வேலைகளில் மிகவும் தீவிரமாக இறங்கியுள்ளார்.

2003 ல் வெளிவந்து சூப்பர் ஹிட்டடித்த சாமி திரைப்படத்தின் 2 ம் பாகத்தை உருவாக்க ஆர்வம் காட்டிய ஹரி, சிங்கம் மற்றும் சிங்கம் 2 படத்தின் வெற்றிகளைப் பார்த்த பின் சிங்கம் 3 யை முதலில் முடிக்கத் திட்டமிட்டுள்ளார்.

Director Hari Given Priority to Surya

‘சாமி' படத்தில் விக்ரம் நாயகனாகவும் இவருக்கு ஜோடியாக திரிஷாவும் நடித்திருந்தனர் படம் எதிர்பார்த்ததை விடவும் நன்கு கல்லா கட்டியது. எனினும் ‘சிங்கம் 3' முடிந்த பிறகு தான் ‘சாமி 2' வை கையில் எடுக்கப் போகிறாராம் ஹரி.

ஏற்கனவே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்ற ‘சிங்கம்', ‘சிங்கம் 2' படத்தின் தொடர்ச்சியாக இந்த புதிய படத்தை உருவாக்க இருக்கும் ஹரி படத்திற்காக சமீபத்தில் வெளிநாடுகளில் உள்ள படப்பிடிப்பு தளங்களை பார்வையிட்டு வந்திருக்கிறார்.

முதல் 2 பாகத்திலும் நாயகனாக நடித்த சூர்யாவே சிங்கம் 3 யிலும் நாயகனாக களமிறங்குகிறார்,முதல் இரண்டு பாகங்களில் ஜோடியாக நடித்த அனுஷ்கா இந்த படத்தில் இடம் பெறவில்லை என்றும் அவருக்கு பதிலாக சுருதி ஹாசன் நடிக்க இருப்பதாகவும் கூறுகின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது. சூர்யா தற்போது ‘24' என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த பிறகு ‘சிங்கம் 3' படப்பிடிப்பில் கலந்துக் கொள்ள இருக்கிறார். இப்படத்தையடுத்து இயக்குநர் ஹரி ‘சாமி' படத்தின் 2ம் பாகத்தை எடுக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

சாமியா இருந்தாலும் வெய்ட்டிங் லிஸ்ட் தான் போல....

 

நட்சத்திரங்களை தாங்கிப் பிடிப்பவர்கள் தொழில்நுட்ப கலைஞர்களே!- இயக்குநர் பி.வாசு

ஒரு படத்துக்கு கதைதான் கதாநாயகன். நட்சத்திரங்களைத் தாங்கிப் பிடிப்பவர்கள் தொழில்நுட்பக் கலைஞர்கள்தான் என்றார் ஒரு பட விழாவில் இயக்குநர் பி.வாசு.

இதுபற்றிய விவரம்:

பிரபல ஸ்டண்ட் மாஸ்டரும் 'பெப்ஸி' யின் தலைவராக இருந்தவருமான பெப்ஸி விஜயனின் மகன் சபரிஷ் நாயகனாக நடிக்கும் படம் 'அசுரகுலம்'. பழம்பெரும் இயக்குநர் கே.விஜயனின் பேரன் விக்னேஷ் மேனன் இப்படத்தை இயக்கியுள்ளார். சி.சத்யா இசையமைத்துள்ளார். ஆப்கன் பிலிம்ஸ் தயாரித்துள்ளது. இப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா நேற்று மாலை பிரசாத் லேப் தியேட்டரில் நடந்தது.

ட்ரெய்லரை பிரபு வெளியிட்டார். பாடல்களைத் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் கலைப்புலி எஸ்.தாணு வெளியிட்டார்.

Technicians are the pillars for stars - P Vasu

பி வாசு

நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இயக்குநர் பி.வாசு பேசும்போது, "விஜயன் மாஸ்டரை பரபரப்பான மாஸ்டராக ,ஒரு பலசாலியாகத்தான் தெரியும். இன்று இங்கே அவரை பொறுப்புள்ள ஒரு தந்தையாகப் பார்க்கிறேன். ஒருஅப்பாவாக உங்கள் பயம், பிரபுவின் பயம், என் பயம் எல்லாமும் ஒன்றுதான். மகன் நன்றாக வரவேண்டுமே என்கிற ஒரு தந்தையின் பயம்தான் அது.

இந்தப் படக்குழு நாளை சாதனையாளர்களாக மாறி இதுமாதிரி மேடையில் அமரவேண்டும்.வாழ்த்துக்கள். சத்யாவின் இசையில் ராஜா சாரின் டச்சை உணர முடிந்தது.

Technicians are the pillars for stars - P Vasu

இன்று ஒரு படத்துக்கு கதாநாயகன் யார் என்றால் அது கதைதான். படம்தான் நட்சத்திரம். உலகம் முழுக்க ரசிகர்கள் இருக்கிற சல்மான் கான் இந்த விஜயன் மாஸ்டரின் ரசிகர்.

கதாநாயக நடிகர்களுககு பெரிய பெரிய கட்அவுட் எல்லாம் வைப்பார்கள். அதன் உயரம் அதிகமாக இருக்கும்.அதற்கு அழகு படுத்தி மாலை எல்லாம் போடுவார்கள். பாலாபிஷேகம் செய்வார்கள்.அந்தக் கட்அவுட்டின் பின்னால் போய்ப் பார்த்தால் ஆயிரம் கட்டைகள் இருக்கும், நிறைய ஆணிகள் இருக்கும், கயிறுகள் இருக்கும்.

அவர்கள்தான் தொழில் நுட்பக் கலைஞர்கள். நட்சத்திரங்களைத் தாங்கிப் பிடிப்பவர்கள் இந்தத் தொழில் நுட்பக் கலைஞர்கள்தான் அதை மறந்து விடக் கூடாது,'' என்றார்.

விழாவில் தயாரிப்பாளர் சங்கத்தின் நிர்வாகிகள் பி.எல் தேனப்பன், ராதாகிருஷ்ணன். கதிரேசன், விநியோகஸ்தர் சங்கத் தலைவர் அருள்பதி, திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அபிராமி ராமநாதன், நடிகர்கள் தம்பி ராமையா, ஜான் விஜய், விடிவி கணேஷ், இசையமைப்பாளர் சி.சத்யா, நாயகி வித்யா, 'மஞ்சப்பை' இயக்குநர் ராகவன், 'அசுர குலம்' தயாரிப்பாளர் வேம்பையன் வேலாயுதம், இயக்குநர் விக்னேஷ் மேனன் ஆகியோரும் கலந்து கொண்டு பேசினார்கள். முன்னதாக அனைவரையும் தயாரிப்பாளர் சரவணன் கணேசன் வரவேற்றார்.

 

"வா வா வா வேட்டையாட”- கோ 2 படத்தில் பட்டையைக் கிளப்பும் விஷால் டட்லானி குரல்!

சென்னை: மறைந்த மக்கள் ஜனாதிபதி அப்துல் கலாமிற்கு அஞ்சலி செலுத்தும் பாடலை வெளியிட்ட "கோ 2" குழு தற்போது மற்றொரு சீக்ரெட் பாடல் பற்றிய செய்தியையும் வெளியிட்டு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதுதான் கோ 2 வில் விஷால் டட்லானி பாடுகின்றார் என்ற செய்தி.

இப்படத்தின் இசையமைப்பாளர் லியோன் ஜேம்ஸ், பாடகர் விஷால் கோ 2 படத்தில் ஒரு பாடலை பாடி உள்ளார் என்று தெரிவித்துள்ளார்.

Vishal Dadlani sings for Ko 2

"வா வா வா...வேட்டையாட" என்று தொடங்கும் இப்பாடலை கடந்த வாரம் மும்பையில் பதிவு செய்துள்ளனர்.

தூக்கி நிறுத்தும் காட்சி:

இதுகுறித்து படத்தின் இயக்குனர் சரத், "இந்த படத்தினை தூக்கி நிறுத்தும் ஒரு இக்கட்டான காட்சியில் இப்பாடல் வர உள்ளது. பத்திரிக்கையாளரான கதாநாயகனுக்கான பாட்டாக இது பின்னணியில் ஒலிக்க உள்ளது.

ஸ்பெஷல் வாய்ஸ் தேவை:

இதற்காக ஒரு ஸ்பெஷலான வாய்ஸ் தேவைப்பட்டது. எலக்ட்ரானிக் சத்தத்துடன் ராக் பாடலாக இது வந்துள்ளது. கவிஞர் நா.முத்துக்குமார் இப்பாடலை எழுதியுள்ளார்" என்று தெரிவித்துள்ளார்.

விரைவில் திரையில்:

விரைவில் வெளியாக இருக்கின்ற இப்படத்தில் நடிகர் பாபி சிம்ஹா கதாநாயகனாகவும், நிக்கி கல்ராணி கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். நடிகர் பிரகாஷ்ராஜூம் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வணக்கம் சென்னை பாடல்:

விஷால் டட்லானியைத் தெரியாதவர்களுக்கு.. இவர்தான் "வணக்கம் சென்னை" பாடலை அனிருத்துடன் பாடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

’பலி’யைப் பார்த்து கோடு போட்டுக் கொள்ளும் டைகர்... தயாரிப்பாளர் கவலை!

சென்னை: சமீபத்தில் வெளியாகி வசூலில் சாதனை படைத்துக் கொண்டிருக்கும் ‘பலி' படத்தைத் தூக்கிச் சாப்பிடுவது போல் தனது டைகர் படம் இருக்க வேண்டும் என ஆசைப்படுகிறாராம் அதன் ஹீரோ.

ஏற்கனவே, இந்தப் படத்திற்கான கிராபிக்ஸ் காட்சிகள் வெளிநாட்டில் தான் தயாரிக்கப் பட்டது. ஆனால், அவற்றில் சில காட்சிகள் திருப்தியாக இல்லை என்று அவர் சொல்லி விட்டாராம்.

இதைவிட அந்த பலி படத்தின் காட்சிகள் சூப்பராக இருந்தது. எனவே, அதைவிட இன்னும் சூப்பராக இந்தக் காட்சியை மெருகேற்றுங்கள் என சில காட்சிகளைக் கூறி விட்டாராம். இதனால், மீண்டும் அக்காட்சிகளை வெளிநாட்டிற்கு அனுப்பி, மாற்றுகிறார்களாம்.

முதல் வரலாற்றுப் படம் என்பதாலும், பலி படத்தோடு தன் படத்தை மக்கள் ஒப்பிட்டு விடக் கூடாது என்பதாலும் தான் நடிகர் இந்தக் கூடுதல் கவனம் எடுத்துக் கொள்கிறாராம்.

ஆனால், இவ்வாறு மீண்டும் சில காட்சிகளை வெளிநாட்டிற்கு அனுப்பி கிராபிக்ஸ் செய்வதால் தயாரிப்புச் செலவு இன்னும் சில கோடிகள் அதிகரித்துள்ளதாம். இதனால், அப்படத்தின் தயாரிப்பாளர் ஹேப்பி இல்லையாம் அண்ணாச்சி!