என் ரோல் மாடல் வைஜெயந்திமாலா: ஹேமமாலினி


பழம்பெரும் நடிகை வைஜெயந்திமாலா தான் தனது ரோல் மாடல் என்று நடிகையும், எம்.பி.யுமான ஹேமமாலினி தெரிவித்துள்ளார்.

நடிகர், நடிகைகளுக்கு யாராவது ஒருவர் ரோல் மாடலாக இருப்பார்கள். இந்தி நடிகை ஹேமமாலினி்ககும் ஒரு ரோல் மாடல் உண்டு. அவர் வேறு யாருமில்லை பழம்பெரும் நடிகையும், நாட்டியத் தாரகையுமான வைஜெயந்திமாலா தான்.

இது குறித்து ஹேமமாலினி கூறியதாவது,

வைஜெயந்திமாலா ஒரு திறமை வாய்ந்த நடிகை. அவர் காலத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தார். சிறந்த நடிகையாக மட்டுமின்றி பாடகியாகவும் திகழ்ந்தார்.

எனக்கு சினிமாவில் ரோல் மாடல் என்றால் அது வைஜெயந்திமாலா தான். அவரை நேரில் சந்தித்து பாராட்டு மழை பொழிய வேண்டும் என்று முயற்சி செய்தேன். ஆனால் முடியாமல் போனது. தற்போது நாங்கள் நெருக்கமாகிவிட்டோம். அவர் என் குடும்பத்தில் ஒருத்தராக ஆகிவிட்டார். நான் அவரை என் மூத்த சகோதரியாகத் தான் நினைக்கிறேன் என்றார்.
 

'எக்ஸ்க்யூஸ் மீ' நான் டயட்டில் இருக்கிறேன்: அஞ்சலி


'அங்காடித் தெரு' அஞ்சலி எடையைக் குறைக்க டயட்டில் உள்ளாராம். வாயைக் கட்டி, வயிற்றைக் கட்டி தனது உடல் எடையைக் குறைக்கும் முயற்சியாம் இது.

அங்காடித் தெரு புகழ் நடிகை அஞ்சலிக்கு அண்மையில் எடை கூடிவிட்டது. இதனால் அவர் வருத்தம் அடைந்தார். இப்படி எடைக் கூடிவிட்டதே என்று நினைத்த அஞ்சலி தற்போது டயட்டில் உள்ளார். அரிசி உணவு வகைகளைச் சாப்பிடுவதால் தான் எடை கூடுகிறது என்று அவர் கருதினார்.

இதையடுத்து தற்போது அரிசி உணவை தொட்டுக்கூட பார்ப்பதில்லை. வெறும் சப்பாத்தியைத் தான் சாப்பிடுகிறார். இது தவிர ஜிம்முக்கு சென்று உடற்பயிற்சியும் செய்து வருகிறார்.

விரைவில் ஸ்டைலான, ஸ்லிம்மான அஞ்சலியைப் பார்க்கலாமாம்...'குண்டாகாமல்' பார்த்துக்கங்க அஞ்சலி!
 

பத்மநாபசுவாமி கோயில் பொக்கிஷ வரலாறு திரைப்படமாகிறது!


திருவனந்தபுரம்: பத்மநாபசாமி கோவிலின் ரகசிய அறைகள் திறக்கப்பட்டு ரூ.1 லட்சம் கோடிக்கு மேல் நகைகள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த சம்பவமே மலையாளம் மற்றும் தமிழில் திரைப்படமாகிறது.

துபாய் நிறுவனமொன்று இப்படத்தை தயாரிக்கிறது. ஸ்ரீகுமார் திரைக்கதை எழுதி இயக்குகிறார். இப்படம் மலையாளம் மற்றும் ஆங்கில மொழிகளில் தயாராகிறது. ஹாலிவுட் நிபுணர்கள் இப்படத்தில் பணியாற்ற உள்ளனர்.

திருவிதாங்கூர் சமஸ்தானத்தை ஆண்ட மார்த்தாண்டவர்மா வாழ்க்கை கதையோடு இணைத்து பத்மநாபசாமி கோவில் வரலாறைறையும் படமாக்கத் திட்டமிட்டுள்ளனர்.

பத்மநாபசுவாமி கோயிலை மையப்படுத்தி சினிமா எடுப்பது இது முதல்முறை அல்ல. ஏற்கெனவே 1933-ம் ஆண்டு மார்த்தாண்ட வர்மா என்ற பெயரில் படம் தயாரிக்கப்பட்டது. படத்தின் இயக்குநர் பெயர் பிவி ராவ். சுந்தர்ராஜ் என்பவர்தான் இப்படத்தைத் தயாரித்தார். காரணம், 1931-ம் ஆண்டு இந்தக் கோயிலின் இரு ரகசிய அறைகள் திறக்கப்பட்டு பொக்கிஷங்கள் கணக்கிடப்பட்டன, அன்றைய திருவிதாங்கூர் மன்னரால்.

இதனை பிரிட்டிஷ் இந்திய அரசும் பதிவு செய்துள்ளது. ஆக்ஸ்போர்டு பதிப்பக வெளியீடாக வந்துள்ள புத்தகத்திலும் இந்த தகவல் பதிவு செய்யப்பட்டுள்ளது.

80 ஆண்டுகளுக்கு முன்பே பொக்கிஷ ரகசியங்கள் அனைத்தும் திருவிதாங்கூர் மன்னர் பரம்பரைக்குத் தெரிந்திருந்தும் அவர்கள், இதனை அனந்தபத்ம சுவாமியின் சொத்தாகக் கருதி அமைதி காத்து வந்தனர். பெரும் பஞ்சம், பட்டினி, வறட்சி, சமஸ்தான நிலங்கள் இழப்பு என சோதனைகள் வந்த போதும் இந்த பொன்னை அவர்கள் தொடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்வுகளையெல்லாம் உள்ளடக்கியதாக புதிய திரைப்படம் உருவாகிறது.
 

வீட்டில் மதுவிருந்து... வைபவ், சோனா, வெங்கட் பிரபுவை கைது செய்ய கோரிக்கை


சென்னை: மங்காத்தா பட வெற்றியைக் கொண்டாடும் வகையில் மதுவிருந்து நடத்திய நடிகர் வைபவ், அதில் பங்கேற்ற நடிகை சோனா, இயக்குநர் வெங்கட் பிரபு, மகத் உள்ளிட்ட அனைவரையும் கைது செய்து தண்டிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

மங்காத்தா பட வெற்றிக்காக அதில் நடித்த வைபவ் தியாகராய நகரில் உள்ள தனது வீட்டில் மது விருந்துக்கு ஏற்பாடு செய்தார். மங்காத்தா பட இயக்குனர் வெங்கட்பிரபு அப்படத்தில் நடித்த வைபவ், மகத் உள்ளிட்ட 30 பேர் இதில் பங்கேற்றனர்.

நடிகரும் தயாரிப்பாளருமான எஸ்.பி. பி.சரண், நடிகை சோனா ஆகியோரும் இவ்விருந்துக்கு அழைக்கப்பட்டு இருந்தனர். மது விருந்தில் எஸ்.பி.பி. சரண் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக சோனா குற்றம் சாட்டினார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பாண்டி பஜார் போலீசிலும் புகார் அளித்தார்.

இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வெங்கட்பிரபு மற்றும் மது விருந்தில் பங்கேற்ற நடிகர்களிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது.

இதற்கிடையில் சோனாவுக்கு திடீர் என்று நெஞ்சுவலி ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு லேசான மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர். சோனாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், சட்ட விரோதமாக மது விருந்து நடத்திய வைபவ் மற்றும் அதில் பங்கேற்ற நடிகர் நடிகைகளை கைது செய்யக் கோரியுள்ளனர்.

இது தொடர்பாக இந்து மக்கள் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கை:

நடிகர் வைபவ் வீட்டில் மது விருந்து நடந்ததாகவும் அதில் எஸ்.பி.பி.சரண் அத்துமீறி பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், நடிகை சோனா புகார் அளித்துள்ளார்.

நட்சத்திர ஓட்டல்களில் இரவு 11 மணிக்கு மேல் மது பார்கள் திறக்க போலீசார் அனுமதிப்பது இல்லை. வீடுகளிலும் கூட்டத்தினரை வைத்து மது விருந்து நடத்த தடை உள்ளது. இப்படிப்பட்ட சூழலில் தியாகராய நகரில் உள்ள தனது வீட்டில் 30 பேரை அழைத்து நடிகர் வைபவ் மது விருந்து நடத்தியது கண்டிக்கத்தக்கது.

அவரை போலீசார் கைது செய்யாமல் இருப்பது வியப்பாக இருக்கிறது. நடிகை சோனா பல படங்களில் கலாசாரத்துக்கும், பண்பாட்டுக்கும் விரோத மாக அரைகுறை ஆடையில் கவர்ச்சியாக நடித்தார். இப்போது ஆண்கள் நடத்திய மது விருந்திலும் கலந்து கொண்டு இருக்கிறார்.

எனவே வைபவ், சோனா மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். வீடுகளில் இதுபோன்ற மது விருந்துகள் நடத்துபவர்களை கைது செய்து கடுமையாக தண்டிக்க வேண்டும்.

-இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 

எஸ்பிபி சரண் முன்ஜாமீன் மனுதாக்கல்!


சென்னை: நடிகை சோனாவின் பாலியல் புகாரில் கைதைத் தவிர்க்க தயாரிப்பாளர் எஸ்பிபி சரண் இன்று முன்ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார்.

கவர்ச்சி நடிகை சோனா பாண்டி பஜார் போலீசில் தயாரிப்பாளர் எஸ்.பி.பி.சரண் மீது பாலியல் புகார் அளித்துள்ளார்.

"மது விருந்தில் தனது கையை பிடித்து சரண் இழுத்தார். மானபங்கம் செய்தார். இரவு தன்னுடன் தங்கும்படி நிர்ப்பந்தம் செய்தார்", என்று சோனா தனது புகாரில் தெரிவித்தார்.

இப்புகார் தொடர்பாக எஸ்.பி.பி.சரண் மீது போலீசார் பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

மது விருந்தில் பங்கேற்ற அனைவரிடமும் விசாரணை நடத்தி சம்பவம் உண்மையாக இருந்தால் எஸ்.பி.பி.சரண் கைது செய்யப்படுவார் என்று போலீசார் தெரிவித்தனர். இதை தொடர்ந்து எஸ்.பி. பி.சரண் முன்ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று மனுதாக்கல் செய்தார்.

சோனா குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்றும் சரண் மனுவில் குறிப்பிட்டு உள்ளார். இந்த வழக்கை நீதிபதி ராஜசூர்யா விசாரிக்கிறார்.
 

மதிகெட்டான் சாலை - விமர்சனம்


நடிப்பு: ஆதர்ஷ், திவ்யா நாகேஷ், சிங்கமுத்து, சந்தீப், தமிழ், கிருஷ்ணகுமார்
இசை: ஸ்ரீகாந்த் தேவா
ஒளிப்பதிவு: எஸ் தாஜ்
மக்கள் தொடர்பு: கோவிந்தராஜ்
இயக்கம்: ஜி பட்டுராஜன்
தயாரிப்பு: ஜே என் எஸ், ஜே கலை

நான்கு நண்பர்கள். நால்வரும் சின்ன வயதிலிருந்தே ஒரு ஆன்ட்டி வீட்டுக்கு சகஜமாக போய் வரும் அளவுக்கு அந்நியோன்னியமாக இருக்கிறார்கள்.

ஆட்ன்டிக்கு ஒரு பெண். இந்தப் பெண்மீது காதல் வருகிறது நால்வரில் பிரதானமாகத் திகழும் ஆதர்ஷுக்கு.

ஆனால் மற்ற மூன்று நண்பர்களும், 'ஆன்ட்டியின் பெண் நம்ம தங்கச்சி மாதிரிடா' என்று கூறி எதிர்க்க, உடனே அவர்களை கழட்டிவிடுகிறார். மீண்டும் ஆன்ட்டி வீட்டுக்கு வரமுடியாத அளவுக்கு ஒரு ட்ராமா பண்ணி நண்பர்களை விரட்டிவிடுகிறார் ஆதர்ஷ்.

ஆனால் இந்தக் காதலைப் பற்றி தெரிய வந்ததும், தன் பெண்ணை விட்டே ஆதர்ஷை விரட்டுகிறார் ஆன்ட்டி. இதனால் கோபமடைந்த ஆதர்ஷ், ஒரு ரவுடி கும்பலில் சேர்ந்து, ஆன்ட்டியின் குடும்பத்துக்கு தன் கோபத்தைக் காட்ட முயல்கிறான். அப்போதுதான் அந்தப் பெண்ணுக்கு திருமணம் என்ற செய்தி கிடைக்கிறது. அடுத்து ஆதர்ஷ் எடுத்த முடிவு என்ன என்பது க்ளைமாக்ஸ்.

இயல்பான, அன்றாட செய்தித் தாள்களில் நாம் படிக்கும் சமாச்சாரம்தான் படத்தின் கதை. ஆனால் அதை இன்னும் அழுத்தமாக, மனதைத் தொடும் சம்பவங்களோடு சொல்லத் தவறியுள்ளார் இயக்குநர் பட்டுராஜன்.

காதலியாக வரும் திவ்யா நாகேஷை ஒரு நாயகி என்ற ரேஞ்சுக்கு பார்க்க முடியவில்லை. ரொம்ப குழந்தைத்தனமாக இருக்கிறார், தோற்றத்தில் மட்டுமல்ல, நடிப்பிலும்.

ஹீரோவாக வரும் ஆதர்ஷ் சொன்ன வேலையை நன்றாகவே செய்துள்ளார் என்றாலும், பாடி லாங்குவேஜ், வசன உச்சரிப்பு என பலவற்றில் தனுஷை ஞாபகப்படுத்துகிறார்.

டிப் டாப்பாக உடையணிந்த ஒருவர் தினசரி குறித்த நேரத்துக்கு வந்து ரவுடி கும்பல் தலைவனுக்கு வணக்கம் போட்டு, 'போய்வரேன்' என்று சொல்லிவிட்டுப் போகிறார். இதற்கான அர்த்தத்தை பின்னர் ஒரு 'அல்லக்கை' விளக்கிச் சொல்லும்போது, பகீர் என்கிறது. ஆனால் இப்படியும் சில சம்பவங்கள் நடந்திருப்பதை பழைய செய்தித்தாள்கள் புரிய வைத்தன!

கதாநாயகனுக்கும் கதாநாயகிக்கும் எந்த ஒட்டுதலும் இல்லை... ஹீரோ காதலிப்பதை அந்தப் பெண் எந்தக் காட்சியிலும் புரிந்து கொண்டதாகவும் இல்லை. அப்படியிருக்கும்போது, இப்படியொரு க்ளைமாக்ஸ் வைத்ததை ஏற்க முடியவில்லை.

டூயட் காட்சி வைக்க இயக்குநர் தேர்ந்தெடுக்கும் சூழல் மிக அமெச்சூர்த்தனம்.

சிங்கமுத்து, அவர் மனைவி அனு சம்பந்தப்பட்ட காமெடி சிரிப்பலைகளைக் கிளப்புகிறது.

எஸ் தாஜின் ஒளிப்பதிவு ஓகே. குறிப்பிட்டுச் சொல்லும்படி அமைந்திருப்பது ஸ்ரீகாந்த் தேவாவின் இசை. இரண்டு பாடல்கள் திரும்ப கேட்கும் ரகம்.

பட்டுராஜனுக்கு சினிமா எடுக்கத் தெரிந்திருக்கிறது. ஹீரோ கூட ஓகேதான். ஆனால் நாயகி தேர்வு மற்றும் திரைக்கதையில் கோட்டைவிட்டுள்ளார். தனக்கு கிடைத்த முதல் வாய்ப்பை அவர் இன்னும் சிறப்பாக பயன்படுத்தியிருக்கலாம்!
 

ரா ஒன்னை இந்தியாவின் பரபரப்புக்குரிய படமாக்கிய ரஜினி!!


'ஒரே நிமிடம்... ஜஸ்ட் ஒரே காட்சியில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கப் போகிறார்' - இந்த ஒரு செய்தி இத்தனை நாளும் தென்னிந்திய மக்களால் பெரிதாக பேசப்படாமல் இருந்த ஷாரூக்கானின் ரா ஒன் படத்தை, தலைப்புச் செய்திளில் இடம்பெறச் செய்துவிட்டது.

இதுவரை இந்தப் படத்தை ரஜினியின் ரோபோ காப்பி என்று பேசி வந்த வட இந்திய ரசிகர்களோ, ரஜினியே நடிக்கிறார் என்று தெரிய வந்ததும் மிக ஆவலுடன் அந்த செய்தி உண்மையாகும் தருணத்துக்காக காத்திருக்கின்றனர்.

அதுதான் 'ரஜினி மாஜிக்'!

வட இந்திய செய்தித் தாள்கள் மற்றும் இணையதளங்கள் இப்படித்தான் தொடர்ந்து சில தினங்களாக எழுதிவருகின்றன.

'ரா ஒன் படத்தை நம்பர் ஒன்னாக்கிவிட்டார் ரஜினி' என குறிப்பிட்டுள்ளது இந்துஸ்தான் டைம்ஸ். 'ரா ஒன்னை ரெட் ஒன்னாக்கிவிட்டார் சூப்பர் ஸ்டார்' என புகழாரம் சூட்டியுள்ளார் பிரபல சினிமா விமர்சகர் ஸ்ரீதர் பிள்ளை.

வட இந்தியாவைப் பொறுத்தவரை, இந்தப் படத்தில் ரஜினி நடித்தால், ரோபோவின் காப்பி என்ற இமேஜ் நிச்சயமாக மாறிவிடும் என்கிறார் பிரபல விமர்சகர் தரண் ஆதர்ஷ்.

சரி... இது சாத்தியம்தானா...ரஜினி உண்மையில் நடிக்கப் போகிறாரா ரா ஒன்னில்?

இந்தக் கேள்விதான் பெரும்பாலான ரசிகர்கள் மனதில்.

ரா ஒன் படத்தின் தயாரிப்பாளர் ஈராஸ் இன்டர்நேஷனல். இவர்கள்தான் ரஜினியின் ராணா படத்தை சௌந்தர்யாவுடன் இணைந்து தயாரிக்கிறார்கள். ஷாரூக்கான் ஏற்கெனவே ரஜினியிடம் 'இந்தக் காட்சியில் நடித்துத் தந்தால், படத்துக்கே அது ஒரு பெரிய கவுரவமாக இருக்கும்' என கேட்டுக் கொண்டுள்ளார். இதற்கு ரஜினி என்ன பதில் சொன்னார் என்று தெரியவில்லை.

ஈராஸ் நிறுவனத்தினரும் இதை தங்கள் விருப்பமாக தெரிவித்துள்ளனர். ஷாரூக்கானுக்காக இல்லாவிட்டாலும், ராணா தயாரிப்பாளர்கள் நலன் கருதியாவது ரஜினி இதைச் செய்யக்கூடும் என்பதுதான் திரையுலகில் பேச்சாக இருக்கிறது.

மருத்துவமனையிலிருந்து திரும்பியுள்ள ரஜினி, பூரண ஒய்வுக்குப் பிறகு கேமராவுக்கு முன் நிற்கும்போது, அந்த அதி உயர்மின் வெளிச்சம் அவருக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாமல் இருக்கிறதா என்பதை உறுதி செய்துகொள்ளவும் இந்த ஒரு நாள் ஷூட் பயன்படும் என்று திரையுலகினர் சிலர் தெரிவித்தனர்.

இன்னொரு பக்கம், விநியோகஸ்தர்கள் பெரும் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர், ரஜினி நடிக்கிறாரா இல்லையா என்பதைப் பார்த்த பிறகு இந்தப் படத்தை வாங்க. ரஜினி நடித்தால் தென்னிந்திய உரிமை பெரும் விலைக்குப் போகும் என்பதால், படத்தை நேரடியாக ஈராஸின் துணை நிறுவனமான அய்ங்கரனே ரிலீஸ் செய்யத் தயாராக உள்ளது.

இவை எல்லாமே ரஜினி சொல்லப்போகும் ஒற்றை வார்த்தை பதிலைப் பொறுத்து இருக்கிறது!
 

'மயக்கம் என்ன' படம் மூலம் பாடலாசிரியர்களான தனுஷ் - செல்வா!!


செல்வராகவன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'மயக்கம் என்ன' படத்தின் இசை வெளியீடு சென்னை ரேடியோ மிர்ச்சி அலுவலகத்தில் நடந்தது.

திங்கள்கிழமை காலை நடந்த இந்த விழாவில் இயக்குநர் செல்வராகவன், ஹீரோ தனுஷ், நாயகி ரிச்சா கங்கோபாத்யாய், இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார், செல்வராகவன் மனைவி கீதாஞ்சலி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்தப் படத்தின் மூலம் முதல் முறையாக இசை விநியோகத்தில் இறங்கியுள்ளது பிரபல கலர் லேப் நிறுவனமான ஜெமினி.

மயக்கம் என்ன படத்தில் 5 பாடல்கள் இடம்பெற்றுள்ளன. பாடல்களை முதல்முறையாக தனுஷும் செல்வராகவனும் எழுதியுள்ளனர். அதுமட்டுமல்ல இரண்டு பாடல்களை செல்வாவும் தனுஷும் பாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.