கத்தி: முதல் நாள் வசூல் ரூ.23.80 கோடி - தென்னிந்திய சாதனை தகர்ப்பு!! - சொல்கிறார் ஏ.ஆர். முருகதாஸ்

சென்னை: தென் இந்திய மொழி படங்களின் அனைத்து முதல் நாள் வசூல் சாதனைகளையும் முறியடித்து கத்தி மொத்தம் ரூ.23.80 கோடி வசூலித்துள்ளது என்று அத்திரைப்படத்தின் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தெரிவித்துள்ளார்.

கத்தி: முதல் நாள் வசூல் ரூ.23.80 கோடி - தென்னிந்திய சாதனை தகர்ப்பு!! - சொல்கிறார் ஏ.ஆர். முருகதாஸ்

விஜய், சமந்தா முன்னணி வேடங்களில் நடிக்க, அனிருத் இசையில், லைகா தயாரிப்பில் வெளியான திரைப்படம் கத்தி. இதன் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இன்று தனது டிவிட்டர் தளத்தில் கத்தியின் முதல் நாள் வருவாய் குறித்த தகவலை பகிர்ந்துள்ளார்.

அதில் அவர் கூறியுள்ளதாவது:

தென் இந்திய மொழி திரைப்படங்களின் முதல் நாள் வசூல் சாதனையை கத்தி முறியடித்துள்ளது. இதன்படி மொத்தம், 23.80 கோடியை முதல் நாளில் கத்தி வசூலித்துள்ளது.

இதில் தமிழகம், கேரளா, கர்நாடகா மற்றும் வட இந்தியாவிலுள்ள தியேட்டர்களின் வசூல் ரூ.16 கோடியே 45 லட்சமாகும். வெளிநாடுகளில் வசூலான தொகை ரூ.7.35 கோடி. இவ்வாறு முருகதாஸ் தெரிவித்துள்ளார்.

இதே டிரண்ட் நீடித்தால் கத்தி மேலும் பல வசூல் சாதனைகளை முறியடிக்கும் வாய்ப்புள்ளதாக ரசிகர்கள் கருதுகிறார்கள்.

முன்னதாக தீபாவளி நாளில் இந்தப் படம் ரூ. 12.5 கோடி வசூலித்ததாக தகவல்கள் வந்தன. ஆனால், அதைவிட இரண்டு மடங்கு வசூலாகியுள்ளதாக முருகதாஸ் கூறியுள்ளார்.

 

பட்டாசு வெடிக்கையில் நடிகர் அனில் கபூரின் முடியில் எரிந்த தீ

மும்பை: தீபாவளி அன்று சரவெடி வெடிக்கையில் நடிகர் அனில் கபூரின் முடியில் தீப்பிடித்தது.

பாலிவுட் நடிகர் அனில் கபூர் தனது குடும்பத்தாருடன் மும்பையில் தீபாவளி கொண்டாடினார். அனில் தனது மகளும் நடிகையுமான சோனம் கபூருடன் ரசிகர்களுடனும் தீபாவளியை கொண்டாடினார். தீபாவளி அன்று இரவு தங்கள் வீட்டு வாசலில் கூடிய ரசிகர்களுடன் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

பட்டாசு வெடிக்கையில் நடிகரின் முடியில் தீ பிடித்தது

அப்போது அனில் சரவெடியை வெடித்தார். அப்போது அனிலின் தலையில் தீப்பொறிபட்டு முடியில் தீப்பிடித்தது. தீ பிடித்ததால் அனில் கோபம் அடைந்தார். அப்போது சோனம் தான் நிலைமையை சமாளித்தார்.

அனில் தனது மகள்கள் சோனம் மற்றும் ரியாவுடன் ஆமீர் கான் அளித்த தீபாவளி விருந்தில் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

ஒரு சூரியன், ஒரு சந்திரன், ஒரே தலைவன்: இது தனுஷின் லிங்கா 'பஞ்ச்'

சென்னை: ஒரு சூரியன், ஒரு சந்திரன், ஒரே தலைவன் என்று லிங்கா பற்றி தனுஷ் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் படம் லிங்கா. சோனாக்ஷி சின்ஹா, அனுஷ்கா என்று படத்தில் இரண்டு நாயகிகள். படத்தின் துவக்கப் பாடலை வெளிநாட்டில் படமாக்க உள்ளனர்.

ஒரு சூரியன், ஒரு சந்திரன், ஒரே தலைவன்: இது தனுஷின் லிங்கா 'பஞ்ச்'

இந்நிலையில் தீபாவளி ஸ்பெஷலாக லிங்கா பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. போஸ்டரில் ரஜினி கோட் சூட் அணிந்து கெத்தாக உள்ளார். இந்த போஸ்டரை பார்த்து ரஜினி ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்நிலையில் ரஜினியின் மருமகன் தனுஷ் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

ஒரு சூரியன், ஒரு சந்திரன், ஒரே தலைவன் என்று லிங்கா போஸ்டர் பற்றி தெரிவித்துள்ளார்.

 

6 மகன்கள் இறுதிச் சடங்குகளைச் செய்ய எஸ்.எஸ்.ஆர் உடல் தகனம்

சென்னை: உடல்நலக்குறைவு காரணமாக காலமான பழம்பெரும் நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் உடல் சென்னை பெசன்ட் நகரில் உள்ள மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

சென்னை தேனாம்பேட்டை, எல்டாம்ஸ் சாலையில் உள்ள வீட்டில் இருந்த, எஸ்.எஸ்.ராஜேந்திரனுக்கு, இரண்டு தினங்களுக்கு முன், மூச்சு திணறல் ஏற்பட்டது. எனவே, ஆழ்வார்பேட்டையில் உள்ள மீனாட்சி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

மூச்சு திணறல் அதிகமானதால், நேற்று, அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று காலை 10.30 மணியளவில் சிகிச்சை பலனின்றி அவர் உயிர் பிரிந்தது.

6 மகன்கள் இறுதிச் சடங்குகளைச் செய்ய எஸ்.எஸ்.ஆர் உடல் தகனம்

மறைந்த நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரனுக்கு பங்கஜம், நடிகை விஜயகுமாரி, தாமரைச்செல்வி என்ற மூன்று மனைவிகளும், இளங்கோவன், ராஜேந்திர குமார், கலைவாணன், செல்வராஜ், பாக்யலட்சுமி, ரவிக்குமார், கண்ணன் 7 பிள்ளைகள் உள்ளனர்.

திரை உலகினர் அஞ்சலி

எஸ்.எஸ்.ராஜேந்திரனின் உடல், சென்னை தேனாம்பேட்டை, எல்டாம்ஸ் சாலையில் உள்ள வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. எஸ்.எஸ்.ஆரின் உடலுக்கு அரசியல் பிரபலங்கள் மற்றும் திரைநட்சத்திரங்கள் அஞ்சலி செலுத்தினர்.

திமுக சார்பில் கருணாநிதி, ஸ்டாலின், ராசா, பொன்முடி, டி.கே.எஸ்.இளங்கோவனும், அதிமுக சார்பில் ராஜேந்திர பாலாஜி, காங்கிரஸ் சார்பில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், ஜி.கே.வாசன், பா.ஜ., சார்பில் தமிழிசை செளந்திரராஜன் உள்ளிட்ட அரசியல் பிரபலங்களும், பிரபு, பாக்யராஜ், கேயார், விஜயகாந்த், முக்தா சீனிவாசன், சச்சு, ஒய்.ஜி.மகேந்திரன், சிவக்குமார், ராஜசேகர், வைரமுத்து, சரத்குமார், ராதாரவி, விஜயகுமார் உள்ளிட்ட திரைநட்சத்திரங்களும் அஞ்சலி செலுத்தினர்.

உடல் தகனம்

பின்னர் எஸ்.எஸ்.ஆரின் உடல், எல்டாம்ஸ் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து பெசன்ட் நகர் மயானத்திற்கு ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. அங்கு, அவரது 6 மகன்களும் இறுதி சடங்குகளை செய்தனர். பின்னர் இறுதியாக அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.

 

உங்களை நீங்கள் மதித்தால் என்னை மதிப்பது போல.. ரசிகர்களுக்கு விஜய் 'அட்வைஸ்'

சென்னை: கத்தி பட கொண்டாட்டத்தின்போது ரசிகர் இறந்ததற்கு நடிகர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்.

கத்தி படம் ரிலீஸானதையொட்டி விஜய்யின் ரசிகர்கள் தியேட்டர்களை அமளி துமளியாக்கி விட்டனர். தீபாவளியன்று இப்படம் வெளியானது. கட் அவுட்களுக்கு பாலாபிஷேகம் செய்வது உள்ளிட்ட சடங்குகளை அவர்கள் நடத்தி படத்தை வரவேற்றனர்.

கேரளாவில் உள்ள வடக்கன்சேரி என்ற இடத்தில் விஜய் கட்-அவுட்டிற்கு பால் அபிஷேகம் செய்யும்போது உன்னி கிருஷ்ணன் என்ற ரசிகர் ஒருவர் கீழே விழுந்து மரணமடைந்தார். தீபாவளி அன்று மதியம் இந்த துயரச் சம்பவம் நடைபெற்றது.

உங்களை நீங்கள் மதித்தால் என்னை மதிப்பது போல.. ரசிகர்களுக்கு விஜய் 'அட்வைஸ்'

இந்த நிலையில் உன்னிகிருஷ்ணன் மறைவுக்கு விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வடக்கன்சேரியில் மரணமடைந்த உன்னி கிருஷ்ணனின் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். நம் ப்ரியமானவர்களின் இழப்பு ஈடுசெய்ய முடியாததாகும்.

தங்களது உயிர்க்கும், மற்றவர்களது உயிர்க்கும் எவ்வித ஆபத்தும் இல்லாமல் பண்டிகை காலக் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு உங்களது ஆதரவை தெரிவிக்கும்படி வேண்டுகிறேன்.

தயவு செய்து தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளவும். இல்லையேல் இதுபோன்ற அசம்பாவிதங்களையும், தாங்க முடியாத வலிகளையும் சந்திக்க நேரிடும். உங்களை நீங்கள் மதிப்பதே, என்னை நீங்கள் மதிப்பதற்கான அடையாளம் என்று தெரிவித்துள்ளார் விஜய்.

 

பழம்பெரும் நடிகர் எஸ்.எஸ்.ஆர். மரணம்

சென்னை: உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பழம்பெரும் நடிகர் எஸ்.எஸ். ஆர். இன்று மரணம் அடைந்தார்.

சிவாஜி கணேசனின் முதல்படமான பராசக்தி மூலம் கோலிவுட் வந்த நடிகர் எஸ்.எஸ். ராஜேந்திரன். லட்சிய நடிகர் என்று அழைக்கப்பட்ட எஸ்.எஸ். ராஜேந்திரன் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை மயிலாப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.

பழம்பெரும் நடிகர் எஸ்.எஸ்.ஆர். மரணம்

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் இன்று காலை மரணம் அடைந்தார். அவருக்கு வயது 87. திமுகவில் சேர்ந்த எஸ்.எஸ்.ஆர். கட்சிக்காக பாடுபட்டார். கடந்த 1962ம் ஆண்டு அவர் தேனி தொகுதியில் இருந்து திமுக சார்பில் சட்டசபைக்கு தேர்வானார். நம் நாட்டிலேயே எம்.எல்.ஏ.வான முதல் நடிகர் எஸ்.எஸ்.ஆர். என்பது குறிப்பிடத்தக்கது.

அவர் நடிகை விஜயகுமாரி உள்ளிட்ட 3 பெண்களை திருமணம் செய்தார். அவருக்கு மொத்தம் 9 குழந்தைகள் உள்ளனர். காலத்தால் அழியாத பல படங்களில் நடித்தவர் எஸ்.எஸ்.ஆர்.

அவரது மறைவுக்கு திரை உலகினர் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.

 

கணவருக்கு வாய்ப்பு தேடும் பாடகி

சென்னை: தாம் தூம் என்று குதிப்பதற்கு பெயர் போன அந்த பாடகி தனது நடிகர் கணவருக்கு வாய்ப்பு தேடுகிறாராம்.

பட்பட்டென்று பேசுவதற்கும், கோபம் வந்தால் தாம் தூம் என்று குதிப்பதற்கும் பெயர் போன அந்த பாடகி தான் காதலித்த நடிகரை திருமணம் செய்து கொண்டார். தனக்கு வாய்ப்பு தருபவர்களை தவிர வேறு யாரையும் கண்டு கொள்ளாதவர் பாடகி. இந்நிலையில் திருமணத்திற்கு பிறகு தயாரிப்பாளர்கள், இயக்குனர்களை கண்டால் இருந்துவிட்டு போகட்டும் என்று வணக்கம் சொல்கிறாராம்.

வணக்கத்தோடு நிற்காமல் தனது கணவருக்கு வாய்ப்பளிக்குமாறும் கேட்கிறாராம். இவ்வாறு அவர் வாய்ப்பு வேட்டை நடத்தியதில் கணவருக்கு புது படம் ஒன்று புக்காகியுள்ளது. அந்த படத்தின் பூஜை கடந்த 22ம் தேதி தான் நடைபெற்றது.

அந்த நடிகர் கடைசியாக நடித்தது அரசியல் வாரிசின் மனைவி இயக்கிய படத்தில் என்பது குறிப்பிடத்தக்கது.

 

லட்சிய நடிகர் எஸ் எஸ் ராஜேந்திரன்!

லட்சிய நடிகர் எனப் புகழ்பெற்ற பழம்பெரும் நடிகர் எஸ்.எஸ். ராஜேந்திரன் (எஸ்எஸ்ஆர்) சென்னையில் உடல்நலக் குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 86.

எஸ். எஸ். ராஜேந்திரன் என அழைக்கப்படும் சேடப்பட்டி சூரியநாராயண தேவர் ராஜேந்திரன் 1928ல் உசிலம்பட்டியில் பிறந்தார்.

லட்சிய நடிகர் எஸ் எஸ் ராஜேந்திரன்!

மேடை நாடகங்களில் நடித்து வந்த எஸ்எஸ்ஆர், 1947 ஆம் ஆண்டில் பைத்தியக்காரன் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் தடம் பதித்தார்.

தமிழ் சினிமாவின் ஜாம்பவான்கள் எம்ஜிஆர், கருணாநிதியுடன் நெருக்கமானார். திராவிட இயக்கத்தின் கொள்கைகளை திரையில் முழங்கியவர்களில் இவருக்கும் முக்கிய இடமுண்டு.

1950கள், 60களில் தமிழ்த் திரையுலகில் புகழ்பெற்று விளங்கினார். இவர் நடித்த பூம்புகார், மறக்க முடியுமா போன்ற திரைப்படங்கள் காலத்தால் அழியாதவையாகும்.

கருணாநிதியின் வசனங்களை மிக அற்புதமாகப் பேசி நடித்த கலைஞர்கள் வரிசையில் எம்ஜிஆர், சிவாஜிக்குப் பிறகு, எஸ்எஸ் ர் இடம் பிடித்தார்.

பராசக்தி திரைப்படத்தில் சிவாஜி கணேசனுடன் இணைந்து நடித்தார். அதன் பின்னர் சிறு பாத்திரங்களில் நடித்து வந்த இவருக்கு 1957 ஆம் ஆண்டில் வெளிவந்த முதலாளி திரைப்படம் திருப்புமுனையாக அமைந்தது.

எம்.ஜி.ஆருக்கு மிக நெருக்கமாக திகழ்ந்தார் எஸ்எஸ்ஆர். எம்.ஜி.ஆர். இரண்டு வேடங்களில் தோன்றி நடித்த ராஜா தேசிங்கு (1960) படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார். 1960 ஆம் ஆண்டில் இவர் தங்கரத்தினம் என்ற பெயரில் திரைப்படம் ஒன்றை இயக்கி நடித்திருந்தார்.

பார் மகளே பார், குங்குமம், பச்சைவிளக்கு, கைகொடுத்த தெய்வம், சாரதா போன்ற படங்களில் இவருடன் இணைந்து நடித்த விஜயகுமாரியைத் திருமணம் செய்துகொண்டார். ஏற்கனவே திருமணமாகியுள்ள நிலையில் விஜயகுமாரியை மறுமணம் செய்த எஸ்.எஸ்.ஆருக்கு அவர் மூலமாக ஆண் குழந்தையொன்று பிறந்த நிலையில் அவரை விட்டுப் பிரிந்தார். பின்னர் இருவரும் தனித்தனியாக வசித்தாலும், மணமுறிவு ஏற்படவில்லை. பின்னர் இருவரும் இணைந்துவிட்டதாக பேட்டி கொடுத்தனர்.

1962இல் தேனி சட்டமன்றத் தொகுதியிலிருந்து தி.மு.க. சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்டார். நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக தி.மு.க.வின் சார்பில் 1970 முதல் 1976 ஏப்ரல் 02 நாள் வரை பணியாற்றினார்.

எம்ஜிஆர் அதிமுகவைத் தொடங்கியதும், அதில் தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டார். 1980இல் ஆண்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதியிலிருந்து அ.தி.மு.க. சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பின்னர் எஸ் திருநாவுக்கரசு தனிக் கட்சி ஆரம்பித்தபோது, அதில் சேர்ந்தார். அவர் கட்சியைக் கலைத்ததும் மீண்டும் அதிமுகவுக்கு திரும்பினார்.

மார்புச் சளி, மூச்சடைப்பால் சிரமப்பட்ட எஸ்எஸ்ஆர் உடல்நிலை நேற்று கவலைக் கிடமானது. இன்று காலை வரை உயிருக்குப் போராடிய அவர், சிகிச்சைப் பலனின்று காலை 11 மணிக்கு மரணமடைந்தார்.

 

கத்தி விமர்சனம்

Rating:
2.5/5
-எஸ் ஷங்கர்

நடிகர்கள்: விஜய், சமந்தா, நீல் நித்தின் முகேஷ், சதீஷ்

ஒளிப்பதிவு: ஜார்ஜ் வில்லியம்ஸ்

இசை: அனிருத்

தயாரிப்பு: கருணாமூர்த்தி

இயக்கம்: ஏ ஆர் முருகதாஸ்

ஒரு பெரிய ஹீரோ படத்தில், வெகுஜனங்களின் வாழ்வாதாரப் பிரச்சினை - விவசாயத்துக்கான தண்ணீரை குளிர்பான கார்ப்பொரேட்டுகள் திருடும் அயோக்கியத்தனம்- பற்றிப் பேசுவதை நினைத்தால் ஒரு சின்ன சந்தோஷம்.

கத்தி விமர்சனம்

ஆனால் அந்தப் பிரச்சினையைப் பேசுபவர்கள் யார் பாருங்கள்?

இதே தமிழ் மண்ணில் நீர் வளமுள்ள பகுதிகளாகப் பார்த்து மெகா குளிர்பான ஆலைகள் அமைத்து தண்ணீர் உறிஞ்சிக் கொண்டிருக்கும் கோக் நிறுவனத்தின் விளம்பரத் தூதரான விஜய்யும், கார்ப்பொரேட் தயாரிப்பாளர்களின் செல்லப் பிள்ளையான இயக்குநர் ஏ ஆர் முருகதாஸும்.. என்ன ஒரு முரண்பாடு!!

பெரிய லாஜிக் ஓட்டையுடன் ஆரம்பிக்கிறது கதை.

கொல்கத்தா சிறையிலிருந்து தப்பிக்கிறான் ஒரு கைதி. அவனைப் பிடிக்க, அதே சிறையில் தப்பித்துச் செல்வதில் எக்ஸ்பர்ட்டான இன்னொரு கைதி கதிரேசன் (விஜய் நெ 1) உதவியை நாடுகிறது போலீஸ் (என்னா ஒரு டக்கு!). இதான்டா சான்ஸ் என்று எஸ்கேப்பாகிறான் கதிரேசன்.

கத்தி விமர்சனம்

தப்பிச் செல்லும் முயற்சியில் இருக்கும்போதுதான் ஜீவானந்தம் (விஜய் நெ 2) என்பவனை சிலர் துப்பாக்கியால் சுடுவதைப் பார்க்கிறான். அவனைக் காப்பாற்றி மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல, கதிரேசனைத் துரத்தி வருகிறது கொல்கத்தா போலீஸ்.

அவர்களிடம் ஜீவானந்தத்தை சிக்கவைத்துவிட்டு, தப்பிக்கும் கதிரேசன், ஜீவானந்தம் நடத்தும் முதியோர் இல்லத்துக்கு வந்து சேர்கிறான். அங்கு தங்கி கிடைப்பதை சுருட்டிக் கொண்டு வெளிநாட்டுக்கு தப்பிச் செல்லும் எண்ணத்திலிருக்கும் கதிரேசனுக்கு, ஒரு கட்டத்தில் ஜீவானந்தத்தின் பின்னணி, மக்களுக்கான அவனது போராட்டம் புரிகிறது.

அருமையான நீரூற்று ஓடும் வளமான அந்த கிராமத்தில், நீரை உறிஞ்சி குளிர்பான ஆலை அமைக்கப் பார்க்கிறது ஒரு பகாசுர குளிர்ப்பான நிறுவனம். அதைத் தடுத்து நிறுத்தப் போராடும் ஜீவானந்தத்தின் இடத்திலிருந்து மக்களையும் விவசாயத்தையும் எப்படிக் காப்பாற்றுகிறான் கதிரேசன், அந்த ஜீவானந்தம் என்ன ஆனான் என்பது மீதிக் கதை!

கத்தி விமர்சனம்

இன்றைக்கு மக்கள் முன் விஸ்வரூபமெடுத்து நிற்கும் தண்ணீர்ப் பிரச்சினை, அது எப்படி மண்ணின் மைந்தர்களை மீறி களவாடப் படுகிறது என்பதைக் கையிலெடுத்திருக்கிறார் இயக்குநர் முருகதாஸ். ஆனால் அந்த நல்ல விஷயத்தை அவரே கெடுத்திருக்கிறார், சொதப்பலான திரைக்கதை மூலம்.

இப்படி ஒரு வலுவான கதைக் களம் இருக்கும்போது, அதற்கான திரைக்கதையை ரமணா பாணியில் இறுகக் கட்டியிருக்க வேண்டாமா? ஆனானப்பட்ட விஜயகாந்தையே அந்த அளவு அடக்கி வாசிக்க வைத்து, பார்ப்பவர்களை ஆவேசப்பட வைத்த முருகதாஸ், இந்தப் படத்தில் கதிரேசன் விஜய்யை கோமாளித்தனமாகக் காண்பித்திருக்கிறார். காமெடி என்ற பெயரில் அந்த விஜய்யும் படுத்துகிறார்.

சமந்தாவை கொஞ்ச காலம் தமிழ் சினிமாவில் பார்க்காமல் இருந்தாலே தேவலாம். அவர் சிரிப்பு சாகடிக்கிறது (அழகால் அல்ல!). முதல் பாதி படம் எரிச்சலைக் கிளப்புவதில், விஜய் - சமந்தா காதல் காட்சிகளுக்கும் கணிசமான பங்குண்டு.

சென்னைக்கு வரும் குடிநீரைத் தடுக்க விஜய் போடும் திட்டமெல்லாம், கத்தியில் காமெடி இல்லாத பஞ்சத்தைப் போக்க வரும் காட்சிகள்!

மீடியாவை ஒரு பிடி பிடித்திருக்கிறார் ஏ ஆர் முருகதாஸ். எத்தனை ஆண்டு கால கோபமோ.. அவரது விமர்சனங்களில் பாதியை ஏற்க முடியாது என்றாலும், மீதி உண்மைதான்!

ஆனால் மக்கள் தேர்ந்தெடுத்த பிரதிநிகள் கார்ப்பொரேட்டுகளில் சோரம் போய் கள்ளமவுனம் காக்கும் தருணங்களில், இதே மீடியாதான் இப்போதும் விவசாயப் பிரச்சினையைப் பேசுகிறது, மோசடிகளை அம்பலமாக்குகிறது.

இரட்டை வேடங்கள் விஜய்க்கு. தோற்றத்தில் பெரிய மாற்றமில்லை (அது வேலைக்காகாது என்று இயக்குநருக்கும் தெரியும் போலிருக்கிறது!). ஆனால் நடிப்பில் வித்தியாசம் காட்ட முயன்றிருக்கிறார். அந்த விருது வாங்கும் விழாவில் கதிரேசன் நடந்து கொள்ளும் விதம் ஏனோ அழகிய தமிழ் மகனை நினைவூட்டுகிறது!

சதீஷ் என்ற நடிகர் செய்வதையெல்லாம் காமெடி என்று எடுத்துக் கொண்டால்... கஷ்டம்டா சாமி!

வில்லனாக வரும் நீல் நிதின் முகேஷ் கவனிக்க வைக்கிறார்.

படத்தின் பல காட்சிகள், ஏற்கெனவே தமிழில் வெளியான பல படங்களை நினைவூட்ட, ஐயாம் வெய்ட்டிங் என விஜய் பஞ்சடிக்கும் இடம், இதே விஜய் - முருகதாஸ் கூட்டணியின் துப்பாக்கியை நினைவூட்டுகிறது. என்னாச்சு முருகதாஸுக்கு?

ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவில் அந்த கிராமம் அழகு. அனிருத் இசை... இன்னும் கொலைவெறி வட்டத்தைத் தாண்டவே இல்லை. இதில் அவரிடமிருந்து காட்சிக்கேற்ற பிஜிஎம்மெல்லாம் எதிர்ப்பார்ப்பது நம்ம தவறு!

ஏ ஆர் முருகதாஸ் எடுத்துக் கொண்ட களம் சரி... கதைப் பின்னல் சொதப்பல்!

 

ஒளிப்பதிவாளர் அசோக் குமார் இறுதிச் சடங்கை கண்டுகொள்ளாத திரையுலகினர்

சென்னை: ஒளிப்பதிவாளர் அசோக் குமாரின் இறுதிச் சடங்குகளில் கோலிவுட்காரர்கள் பலரை காணவில்லை.

பிரபல ஒளிப்பதிவாளர் அசோக் குமார் உடல் நலக்குறைவால் கடந்த 6 மாதங்களாக மருத்துவமனையும், வீடுமாக இருந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவரை இனியும் காப்பாற்றுவது கடினம் என மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து கடந்த வாரம் அவர் வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டார்.

ஒளிப்பதிவாளர் அசோக் குமார் இறுதிச் சடங்கை கண்டுகொள்ளாத திரையுலகினர்

இந்நிலையில் அவர் கடந்த 22ம் தேதி கூடுவாஞ்சேரியில் உள்ள தனது வீட்டில் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 70. ரஜினிகாந்த் நடித்த ஜானி, ஷங்கரின் ஜீன்ஸ், இந்தியாவின் முதல் 3டி படமான மை டியர் குட்டிச்சாத்தான் உள்ளிட்ட ஏராளமான படங்களில் பணியாற்றியவர். இந்நிலையில் அவரது இறுதிச் சடங்கில் திரையுலகினரில் விரல் விட்டும் எண்ணும் நபர்களே கலந்து கொண்டனர்.

இது குறித்து அசோக்கின் மகன் ஆகாஷ் கூறுகையில்,

அவரது இறுதிச் சடங்கில் திரையுலகில் உள்ளவர்களில் பெரும்பாலானோர் கலந்து கொள்ளாதது வருத்தம் அளிக்கிறது. அவர் புகழின் உச்சத்தில் இருக்கையில் இயக்குனர்கள், நடிகர்கள் என்று பலர் அவரை காண வருவார்கள். அவருடன் படம் பற்றி பேசுவார்கள், பார்ட்டி வைக்க விரும்புவார்கள். என்ன மாதிரி உலகில் வாழ்கிறோம் என தெரியவில்லை என்றார்.

 

எஸ்.எஸ்.ஆர். மறைவு - தமிழ் திரைப்பட படப்பிடிப்புகள் அரை நாள் ரத்து

சென்னை: பழம் பெரும் நடிகரும், மூத்த அரசியல்வாதியுமான எஸ்.எஸ்.ஆர். மறைவை ஒட்டி இன்று அரை நாள் தமிழ்த் திரைப்பட படப்பிடிப்புகள் அரைநாள் ரத்து செய்யப்படுவதாக பெப்சி அறிவித்துள்ளது.

தமிழ்த் திரையுலகில் நடிகராக மட்டுமின்றி இயக்குநர், தயாரிப்பாளர் எனப் பன்முகத் திறமையாளராக விளங்கியவர் எஸ்.எஸ்.ஆர் என அழைக்கப் படும் எஸ்.எஸ்.ராஜேந்திரன். இவர் பழம் பெரும் நடிகராக மட்டுமின்றி, நீண்ட அரசியல் வரலாறு கொண்ட அரசியல்வாதியாகவும் திகழ்ந்தவர்.

எஸ்.எஸ்.ஆர். மறைவு - தமிழ் திரைப்பட படப்பிடிப்புகள் அரை நாள் ரத்து

சமீபகாலமாக உடல்நலக் கோளாறால் அவதிப் பட்டு வந்த எஸ்.எஸ்.ஆர். நேற்று சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார். இந்நிலையில், சிகிச்சைப் பலனின்றி இன்று அவர் காலமானார். அவருக்கு வயது 86.

பழம் பெரும் நடிகரான எஸ்.எஸ்.ஆர். மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இன்று அரை நாள் தமிழ் திரைப்பட படப்பிடிப்புகள் நடைபெறாது என அறிவிக்கப் பட்டுள்ளது. இத்தகவலை பெப்சி தலைவர் சிவா தெரிவித்துள்ளார்.

 

பூஜை விமர்சனம்

-எஸ் ஷங்கர்

Rating:
3.0/5

நடிகர்கள்: விஷால், ஸ்ருதிஹாஸன், சத்யராஜ், ராதிகா, ஜெயப்பிரகாஷ், சூரி, ப்ளாக் பாண்டி

ஒளிப்பதிவு: ப்ரியன்

இசை: யுவன் சங்கர் ராஜா

பிஆர்ஓ: ஜான்சன்

தயாரிப்பு: விஷால் பிலிம் பேக்டரி

இயக்கம்: ஹரி

கிராமங்களில் பண்ணையார்களுக்கிடையிலான அரசியல், வெட்டுக் குத்து, குடும்ப உறவுகளுக்குள் வரும் மனஸ்தாபங்கள், இவற்றுக்கிடையில் நாயகன் நாயகி காதல்... போலீஸ் கதைகள் போரடிக்கும் போதெல்லாம் ஹரிக்குப் பிடித்தமான கதைக் களம் இந்த மாதிரியான கிராமத்துக் கதைகள்தான்!

கொஞம்சம் நிஜம்போலத் தெரியும்... ஆனால் பக்கா வணிக சினிமா. அதற்குள் இருக்கும் ஓட்டையைப் பற்றி யோசிப்பதற்குள் அடுத்த காட்சி அடுத்த காட்சி என பார்ப்பவர்களை ஒரு வேக மனநிலையில் வைத்திருந்து வெளியில் அனுப்பி வைப்பது ஹரியின் சினிமா சூட்சமம்.

பூஜை விமர்சனம்

இந்த ஃபார்முலாவிலிருந்து இம்மியளவு கூட பிசகாமல் ஹரி தந்திருக்கும் அடுத்த படம்தான் பூஜை.

அவிநாசி மார்க்கெட்டில் பைனான்ஸ் பண்ணும் விஷால், ஒரு நாள் ஸ்ருதியைச் சந்திக்கிறார். மோதலில் தொடங்கும் அந்த சந்திப்பு, பின்னர் நட்பாக மாறுகிறது. இந்த நட்பை காதலாக நினைத்து, சொல்ல முயலும் விஷாலை அவமானப்படுத்துகிறார் ஸ்ருதி.

பின்னர் விஷால் யாரென்று தெரிய வருகிறது. கோவை குரூப்ஸ் என்ற பெரிய குடும்பத்துப் பிள்ளை விஷால். வீட்டில் ஒரு சின்னப் பிரச்சினைக்காக அம்மாவால் வீட்டை விட்டுத் துரத்தப்பட்டவர். விஷாலின் பின்னணி தெரிந்ததும் அவர் மேல் காதல் பிறக்கிறது ஸ்ருதிக்கு. ஆனால் சொல்லாமல் போகிறார். தோழிகள் மூலம் விஷாலுக்குத் தெரிய காதலிக்க ஆரம்பிக்கிறார்கள்.

பூஜை விமர்சனம்

அதே மார்க்கெட்டில் பெரிய பைனான்ஸ் கம்பெனி நடத்தி வரும் தாதா அன்னதாண்டவம், ஒரு நாள் போலீஸ் அதிகாரி சத்யராஜை போட்டுத் தள்ள ஆட்களை ஏவ, அவர்களிடமிருந்து சத்யராஜா காப்பாற்றுகிறார் விஷால். தன் ஆட்களிடமிருந்து சத்யராஜைக் காப்பாற்றியவன் யாரென்று தாதாவும், தன்னை காப்பாற்றியது யாரென்று சத்யராஜும் தேடுகிறார்கள்.

இந்த நேரத்தில் அன்னதாண்டவத்தின் அறங்காவலர் பதவி விஷாலின் சித்தப்பா ஜெயப்பிரகாஷுக்கு வருகிறது. பதவி ஏற்கும் அவரை, ஆள் வைத்து மக்கள் முன்னிலையில் அசிங்கப்படுத்துகிறான் அன்னதாண்டவம். இதற்கு பழிக்குப் பழி வாங்குமாறு அம்மா ராதிகா ஆணையிட, அதே போல அவனது ஊருக்கே போய் அடித்து அசிங்கப்படுத்துகிறார். மேலும் பொள்ளாச்சி ரோட்டில் வைத்து மக்கள் முன் அவமானப்படுத்தப் போவதாக சபதமும் செய்கிறார் விஷால்.

சொன்னதுபோலவே, பொள்ளாச்சி சாலையில் வில்லனை துவம்சம் செய்கிறார் விஷால். அந்தக் காட்சியை ஸ்ருதி வீடியோ எடுத்து தன் தோழிக்கு அனுப்ப, அவர் யு ட்யூபில் அப்லோட் செய்ய, உலகமே தான் அவமானப்பட்டதைப் பார்த்தி ரசித்ததை அறிந்த வில்லன், விஷாலையும் குடும்பத்தினரையும் பழி வாங்க முடிவு செய்கிறான். வாங்கினானா என்பது மீதி!

பூஜை விமர்சனம்

மிக நீண்ட பழிவாங்கும் கதை. சண்டைக் காட்சிகள்தான் பிரதானம். அந்தக் காலத்தில், 'மயிர்க் கூச்செரியும் சண்டைக் காட்சிகள் நிறைந்தது' என நோட்டீஸ் அடித்து விளம்பரம் செய்வார்களே... அப்படி!

இந்த மாதிரி கதைகள் விஷாலுக்கு பக்காவாக தைத்து வைத்த கலர் சொக்காய் மாதிரி கச்சிதமாகப் பொருந்துகின்றன. மனிதர் அடித்து ஆடுகிறார்! அவரது உடற்கட்டும் தோற்றமும் அத்தனை காட்சிகளையும் நம்ப வைக்கிறது.

ஸ்ருதியை கோவை கிராமத்துப் பெண்ணாகப் பார்க்க முடியவில்லை. படங்களின் எண்ணிக்கை கூடக் கூட கவர்ச்சியின் எல்லை அதிகரித்துக் கொண்டே போகிறது. அதுவும் அப்பா அம்மாவிடம் டபுள் மீனிங்கில் பேசுகிறார் ஸ்ருதி...

பூஜை விமர்சனம்

சூரி, ப்ளாக் பாண்டி கொஞ்சம் கலகலப்பூட்டுகிறார்கள். கவுண்டர் - செந்தில் பாணியை இவர்கள் மீண்டும் ஆரம்பிக்கிறார்கள் போலத் தோன்றுகிறது.

ராதிகா, சத்யராஜ், அன்னதாண்டவமாக வரும் முகேஷ் திவாரி, ஜெயப்பிரகாஷ், பிரதாப் போத்தன், தலைவாசல் விஜய் என ஏகப்பட்ட நட்சத்திரங்கள். தங்கள் வேடமுணர்ந்து நன்றாகவே நடித்துள்ளனர்.

பூஜை விமர்சனம்

ஹரியின் எண்ணம் உணர்ந்து செயல்பட்டிருக்கிறார் ஒளிப்பதிவாளர் ப்ரியன். யுவன் சங்கர் ராஜாவும் அப்படியே. பாடல்கள் புதிதாக இல்லை என்றாலும், பின்னணி இசை படத்தின் வேகத்தை கடைசி வரை காப்பாற்றுகிறது.

கதையின் அடுத்த திருப்பம் என்னவென்பதை எளிதில் யூகிக்க முடிவது மைனஸ் என்றால், அதை கவனத்தில் தங்க விடாது அடித்து விரட்டும் திரைக்கதை இந்தப் படத்துக்கு பலம்!

 

லட்சிய நடிகர் என்ற பெயருக்கு ஏற்றபடியான கொள்கைகளை உடையவர் எஸ்.எஸ்.ஆர்: பாக்யராஜ்

சென்னை: லட்சிய நடிகர் என்ற பெயருக்கு ஏற்றபடியான கொள்கைகளை உடையவர் எஸ்.எஸ்.ஆர். என தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார் நடிகரும், இயக்குநருமான பாக்யராஜ்.

பழம்பெரும் நடிகரும், மூத்த அரசியல்வாதியுமான எஸ்.எஸ்.ஆர். இன்று காலை காலமானார். அவருக்கு வயது 86. அன்னாரது உடல் தேனாம்பேட்டையில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப் பட்டுள்ளது.

லட்சிய நடிகர் என்ற பெயருக்கு ஏற்றபடியான கொள்கைகளை உடையவர் எஸ்.எஸ்.ஆர்: பாக்யராஜ்

இந்நிலையில், அன்னாரது மரணம் குறித்து பிரபல நடிகரும், இயக்குநருமான பாக்யராஜ் தனது இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது :-

லட்சிய நடிகர் என்ற பெயருக்கு ஏற்றபடியான கொள்கைகளை உடையவர் எஸ்.எஸ்.ஆர். அவரது நிறைய படங்களை பார்த்துள்ளேன். பெண்கள் மத்தியில் நன் மதிப்பை பெற்றவர். அவரது படங்கள் மீண்டும் மீண்டும் நம்மை ஞாபகப்படுத்தி கொண்டே இருக்கும். அவருக்கு எனது இரங்கலை தெரிவித்து கொள்கிறேன் என இவ்வாறு அவர் தெரிவித்தார்.