திருமுருகன் என்டர்டெயின்மென்ட் சார்பில் சி.வி.குமார் தயாரித்துள்ள படம் 'அட்டகத்தி'. தினேஷ், நந்திதா, ஐஸ்வர்யா, ஷாலி நடிக்கிறார்கள். பா.ரஞ்சித் இயக்கி உள்ளார். சந்தோஷ் நாராயணன் இசை. இதன் பாடல் வெளியீடு சென்னையில் நடந்தது. இசை அமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா வெளியிட, வெங்கட்பிரபு பெற்றார். விழாவில் இயக்குனர் வெற்றிமாறன் பேசும்போது, ''வட சென்னை என்றாலே வன்முறைதான் ஞாபகத்துக்கு வருகிறது. தாதாக்கள், ரவுடியிசம் என்று சினிமா காட்டியிருக்கிறது. அதற்கு நானும் ஒரு காரணம். ஆனால், வட சென்னை என்பது பல கிராமங்கள் சேர்ந்த தொகுப்பு. அதை இந்தப் படம் பதிவு செய்திருக்கும் என்று நம்புகிறேன்'' என்றார். விழாவில் தயாரிப்பாளர் சங்க செயலாளர் எல்.தேனப்பன், பொருளாளர் கலைப்புலி தாணு, தேசிய திரைப்பட வளர்ச்சி கழகத் துணை பொது மேலாளர் ராமகிருஷ்ணன், இயக்குனர்கள் ராஜேஷ், சசி உட்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக சி.வி.குமார் வரவேற்றார். முடிவில், பா.ரஞ்சித் நன்றி கூறினார்.
கிளாமராக நடித்தால் வாய்ப்பு
கிளாமராக நடித்தால் வாய்ப்பு கிடைக்கிறது என்று ஷார்மிளா கூறினார். அவர் மேலும் கூறியதாவது: 'கிழக்கே வரும் பாட்டு' படத்தில் அறிமுகமாகி பல்வேறு படங்களில் ஹீரோயினாக நடித்தேன். பிறகு திருமணம், குழந்தை என்று சினிமாவை விட்டு விலகி இருந்தேன். இப்போது குணசித்திர வேடங்களில் நடிக்கிறேன். 'ஒரு மழை நான்கு சாரல்', 'காதலித்துபார்', 'காதலுக்குள் காதல்' உட்பட பல படங்களில் நடித்து வருகிறேன். 'மகான் கணக்கு' படத்தில் என் நடிப்பை எல்லோரும் பாராட்டினார்கள். பெரும்பாலான இயக்குனர்கள் கிளாமரைத்தான் எதிர்பார்க்கிறார்கள். அவற்றைத் தவிர்த்து, சிறந்த கேரக்டர்களில் நடித்து வருகிறேன்.
கொண்டான் கொடுத்தானில் அண்ணன், தங்கை பாசம்
பி.பாரதி, மாஸ்டர் ஸ்ரீராம் வழங்கும் ஐயப்பா ஆர்ட் பிலிம்ஸ் சார்பில் பி.ஐயப்பா தயாரிக்கும் படம், 'கொண்டான் கொடுத்தான்'. கதிர்காமன், அத்வைதா ஜோடி. இளவரசு, கஞ்சா கருப்பு உட்பட பலர் நடிக்கின்றனர். இசை, தேவா. எழுதி, ஒளிப்பதிவு செய்து ஜி.ராஜேந்திரன் இயக்குகிறார். படம் பற்றி நிருபர்களிடம் ஜி.ராஜேந்திரன் கூறியதாவது: நான்கு அண்ணன், தங்கைகளின் பாசத்தைச் சொல்லும் கதை. நம்மைச் சார்ந்தவர்களின் சந்தோஷத்துக்காக, நமது சந்தோஷத்தில் சிறிதளவு விட்டுக்கொடுத்தால், மற்றவர்கள் நமக்கு மிகப்பெரிய சந்தோஷத்தை அளிப்பார்கள் என்பதை உணர வைக்கும். 25 நாட்கள் ஷூட்டிங் நடந்தது. இது யதார்த்தமான கிராமத்து குடும்பக்கதை. வி.சேகர் இயக்கிய படங்களுக்கு ஒளிப்பதிவு செய்ததாலும், கே.பாக்யராஜிடம் உதவியாளராக இருந்ததாலும், என் படத்தில் இருவரது சாயலும் இருக்கும். பெண்கள் குடும்பமாக பார்க்கும் வகையில் படம் உருவாகியுள்ளது.
எந்த நடிகையும் காதலிக்கவில்லை
பிரசாத் சினி ஆர்ட்ஸ் சார்பில் கே.வி.பிரசாத் தயாரித்துள்ள படம், 'கொள்ளைக்காரன்'. 13ம் தேதி ரிலீசாகிறது. விதார்த், சஞ்சிதா ஷெட்டி ஜோடி. தமிழ்ச்செல்வன் இயக்குகிறார். படம் பற்றி நிருபர்களிடம் விதார்த் கூறியதாவது: ஒருவன் தன் வாழ்க்கையில் செய்யும் சின்னச்சின்ன தவறுகள் கண்டுகொள்ளாமல் விடப்படும்போது, ஒருநாள் அது எவ்வளவு பெரிய பூகம்பத்தை ஏற்படுத்துகிறது என்பது கதை. 'மைனா'வுக்குப் பிறகு எனக்குக் கிடைத்த முழுமையான படம் என்றும் சொல்லலாம். இதில் அக்கா-தம்பி பாசமும், அண்ணன்-தங்கை பாசமும் உருக வைக்கும் விதத்தில் சொல்லப்பட்டு இருக்கிறது. திருமணம் குறித்து முடிவு செய்யவில்லை. வரப்போகும் மனைவி நடிகையாக இருந்தாலும் சரிதான். ஒரே துறையில் இருப்பதால், புரிந்துகொண்டு வாழ முடியும். ஆனால், இதுவரை என்னை எந்த நடிகையும் காதலிக்கவில்லை. இவ்வாறு விதார்த் கூறினார்.
மாரீசனில் வடிவேலா? : சிம்புதேவன் மறுப்பு!
சிம்புதேவன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படம், 'மாரீசன்'. இந்தப் படத்தில் தனுஷுடன் வடிவேலு நடிக்க இருப்பதாகவும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்தப் படம் மூலம் அவர் ரீ என்ட்ரி ஆவதாகவும் இணையதளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. இதுபற்றி சிம்புதேவனிடம் கேட்டபோது, ''இது தவறான தகவல். அப்படியொரு விஷயம் நடக்கவே இல்லை. வடிவேலு மிகப்பெரிய நடிகர். அவருக்கு நான் எப்படி ரீ என்ட்ரி கொடுக்க முடியும்? 'மாரீசன்' பட வேலைகள் போய்க்கொண்டிருக்கிறது. விரைவில் அது பற்றிய அறிவிப்பு வரும்'' என்றார்.
சம்விருதா திடீர் திருமணம்
ஸ்ரீகாந்த் ஜோடியாக 'உயிர்' படத்தில் நடித்தவர், சம்விருதா. மலையாளப் படங்களில் நடித்து வரும் இவருக்கும், கோழிக்கோட்டைச் சேர்ந்த அகில் என்பவருக்கும் திடீரென்று திருமண ஏற்பாடுகள் நடந்து வருகிறது. தற்போது அகில், கலிபோர்னியாவில் என்ஜினீயராகப் பணியாற்றுகிறார். 'இது, இருவீட்டு பெற்றோர் சம்மதத்துடன் நடக்கும் திருமணம். நிச்சயதார்த்தம் ஓரிரு மாதங்களில் நடக்கிறது. இவ்வருட இறுதியில் திருமணம் நடைபெறும். திருமணத்துக்குப் பிறகு சம்விருதா தொடர்ந்து நடிப்பது பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை' என்றார், அவரது தாயார்.
படங்களை வெளியிட கட்டுப்பாடு தயாரிப்பாளர் சங்கம் முடிவு
திரைப்படங்களை வெளியிடுவதில் புதிய கட்டுப்பாடுகளை தயாரிப்பாளர் சங்கம் கொண்டு வந்துள்ளது. இதுபற்றி தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் எஸ்.ஏ.சந்திரசேகரன் நிருபர்களிடம் கூறியதாவது: இப்போது சிறு பட்ஜெட் படங்கள் அதிகளவில் தயாரிக்கப்படுவதால், பெரிய பட்ஜெட் படங்களை, பொங்கல், தமிழ்ப் புத்தாண்டு, மே 1, ஆகஸ்ட் 15, தீபாவளி ஆகிய நாட்களில் மட்டுமே ரிலீஸ் செய்ய வேண்டும். மற்ற நாட்களில் சிறு பட்ஜெட் படங்களை ரிலீஸ் செய்ய வேண்டும் என்று தயாரிப்பாளர்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. சினிமா தொழிலாளர்களின் சம்பள உயர்வு குறித்து, கேயார், ஹென்றி உட்பட 15 பேர் அடங்கிய குழு நியமித்து, பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது. சுமூகமான முடிவு ஏற்படும்வரை, எந்த தயாரிப்பாளரும் இப்போதுள்ள சம்பளம் தவிர உயர்த்தி கொடுக்கக் கூடாது. 'தானே' புயல் நிவாரண நிதியாக, தயாரிப்பாளர் சங்கம் சார்பில் 25 லட்ச ரூபாய் முதல்வரிடம் வழங்கப்பட உள்ளது. மேலும், படத் தயாரிப்பு செலவுகளைக் குறைக்க சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர்கள் உடனே முன்வர வேண்டும். 10 லட்ச ரூபாய்க்கு மேல் சம்பளம் வாங்கும் கலைஞர்கள், அவர்களாகவே சம்பளத்தைக் குறைத்துக்கொண்டால், தயாரிப்பு செலவு குறையும். ஷூட்டிங் நாட்களையும் குறைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. இவ்வாறு எஸ்.ஏ.சந்திரசேகரன் கூறினார். துணைத் தலைவர்கள் சத்யஜோதி தியாகராஜன், டி.சிவா, செயலாளர்கள் கே.முரளிதரன், பி.எல்.தேனப்பன், பொருளாளர் கலைப்புலி எஸ்.தாணு உட்பட பலர் உடனிருந்தனர்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஜோடியாக நடிக்கிறார் கேத்ரினா கைஃப்!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் 'கோச்சடையான்' படத்தில் அவர் ஜோடியாக கேத்ரினா கைஃப் நடிக்கிறார். ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யா இயக்கும் படம், 'கோச்சடையான்'. கதை, திரைக்கதை, இயக்கம் மேற்பார்வையை கே.எஸ்.ரவிக்குமார் கவனிக்கிறார். ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்கிறார். இதில் ரஜினிகாந்த் ஜோடியாக நடிக்க அசின், அனுஷ்கா உட்பட பல்வேறு நடிகைகளிடம் பேசி வந்தனர். இப்போது இந்தி நடிகை கேத்ரினா கைஃப் நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுபற்றி, 'கோச்சடையான்' படக் குழுவிடம் கேட்டபோது, ''உண்மைதான். கேத்ரினா, யாஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரிப்பில் சல்மான் கான், ஷாரூக் கான் நடிக்கும் படங்களில் பிசியாக இருக்கிறார். இருந்தாலும் இந்தப் படத்துக்கு கால்ஷீட் ஒதுக்கி தருவதாகக் கூறியிருக்கிறார். ஏனென்றால் ரஜினியுடன் நடிக்கும் ஆவலில் கேத்ரினா இருக்கிறார். இதுபற்றி எங்கள் யூனிட்டே விரைவில் அறிவிக்கும்'' என்று தெரிவித்தனர். இந்தப் படத்தில் ரஜினி, சிவபக்தராக நடிக்கிறார். படத்தின் பின்னணி இசைக்காக, 130 ஜெர்மனி இசைக் கலைஞர்களை ஏ.ஆர்.ரகுமான் பயன்படுத்த இருக்கிறார் என்று படக்குழு தெரிவித்தது.