ஹாரிஸ் வேண்டாம்... அடுத்த படத்துக்கு அனிருத்! - இயக்குநர் முருகதாஸ் முடிவு!

Anirudh Compose Ar Murugadass Vijay Movie

துப்பாக்கி படத்துக்குப் பிறகு முருகதாஸும் விஜய்யும் இணையும் புதிய படத்துக்கு 3, எதிர்நீச்சல் புகழ் அனிருத் இசையமைக்கிறார்.

இரண்டு படங்கள்தான் வந்துள்ளன அனிருத் இசையில். இரண்டிலுமே சூப்பர் ஹிட் பாடல்கள். அதிலும் 3 படத்தின் அனைத்துப் பாடல்களும் சிறப்பாக அமைந்தன. அதில் இடம்பெற்ற கொலவெறி பாடல், சர்வதேச அளவில் புகழ்பெற்றது.

அடுத்து தனுஷ் இசையில் வெளியான எதிர்நீச்சல் படத்திலும் அனைத்துப் பாடல்களும் இளைஞர்களின் மனம் கவர்ந்த மெட்டுக்களாகின.

இப்போது இயக்குநர்களின் விருப்பத்துக்குரிய இசையமைப்பாளர்களில் ஒருவராக மாறியுள்ளார் அனிருத்.

விஜய் - ஏஆர் முருகதாஸ் கூட்டணியில் உருவாகும் புதிய படம் வரும் ஜனவரி மாதம் தொடங்குகிறது.

இதுவரை முருகதாஸ் படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ்தான் இசையமைத்து வந்தார். இவர்கள் கூட்டணியில் வெளியான படங்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்.

இந்நிலையில் முருகதாஸ் விஜய்யை வைத்து இயக்கும் புதிய படத்துக்கு அனிருத் இசையமைக்கலாம் என்கிற தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஏற்கெனவே கவுதம் மேனன் தயாரிக்கும் படம், தனுஷ் படம் உள்பட ஏராளமான படங்களுக்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.

 

'நேரம்'- அட.. நல்லாருக்கே!

Rating:
3.5/5

எஸ் ஷங்கர்

நடிகர்கள்: நிவின், நஸ்ரியா நஸீம், தம்பி ராமையா, நாசர், ஜான் விஜய்
இசை: ராஜேஷ் முருகேசன்
காமிரா: ஆனந்த் சந்திரன்
பிஆர்ஓ: நிகில்
தயாரிப்பு: கோரல் விஸ்வநாதன்
வெளியீடு: ரெட்ஜெயன்ட் மூவீஸ்
எழுத்து - எடிட்டிங் - இயக்கம்: அல்போன்ஸ் புத்ரன்

முன்பெல்லாம் ஒவ்வொரு படத்தின் பிரஸ்மீட் அல்லது பாடல் வெளியீட்டின் போதும் அந்தப் பட இயக்குநர்கள் அதிகம் உச்சரிக்கும் வார்த்தை வித்தியாசம். ஆனால் படம் வெளியான பிறகு பார்த்தால் அப்படி ஏதாவது இருந்ததா என யோசிக்க வேண்டியிருக்கும். பெரிய ஹீரோ, டாப் இயக்குநர் படங்களே கூட இதற்கு விலக்கில்லை.

ஆனால் இப்போது அந்த வித்தியாசம் பிடிபட ஆரம்பித்துள்ளது. காரணம் புதிய களம், புதிய காட்சியமைப்புகளை மனதில் பதித்து, அதை அப்படியே பிடிவாதமாக திரையில் வார்த்தெடுக்கும் அபார கற்பனை வளத்துடன் வரும் புதிய இயக்குநர்கள்.

அந்தப் பட்டியலில் மிக சமீபமாக இடம்பிடித்துள்ளவர் அல்போன்ஸ் புத்திரன். இவரது படைப்பு - நேரம்!

neram review   

நல்லதோ கெட்டதோ... எது நடந்தாலும் நாம் பழியைத் தூக்கிப் போடுவது... நேரத்தின் மீதுதான். நக்கலடிக்கக் கூட 'எல்லாம் நேரம்' என்ற பதத்தையே பிரயோகிக்கிறோம்.

ஆனால் இந்த நேரம் எப்போ நல்லாருக்கு... எப்போ டல்லாருக்கு.. எப்போ மோசமாயிருக்கு? - இந்த கேள்விக்கு விடை காணத்தால் ஒவ்வொருவரும் ஆயிரக்கணக்கில் ஜோசியருக்கு அழுகிறார்கள்.

ஆனால் அல்போன்ஸ் புத்ரன் எளிமையாக ஒரு கணக்கு சொல்கிறார்... அண்ணாமலை ரஜினி மாதிரி!

ஒருத்தனுக்கு நல்ல விஷயங்களே தொடர்ந்து நடந்தால் அது நல்ல நேரம்... கெட்டவைகள் தொடர்ந்தால் அது கெட்ட நேரம். இதைப் புரிந்து கொள்ள ஜோசியம் தேவையில்லை.. வாழ்க்கையைப் புரிந்து கொண்டால் போதும் என்கிறது படம்!

அமெரிக்காவில் தேள்கொட்டியதால் இளைஞன் வெற்றிக்கு சென்னையில் நெறி கட்டுகிறது. வேறொன்றுமில்லை.. அங்கு நடக்கும் குண்டு வெடிப்பால் சர்வதேச நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் நாயகன் வெற்றி திடீரென வேலையை இழக்கிறான்.

தங்கையின் திருமணம்... வட்டி ராஜாவிடம் போய் கடன் வாங்குகிறான். அதே நேரத்தில் வெற்றியின் காதலி வேணி ஒரு நிர்ப்பந்தத்தில் அவனுடன் வாழ வீட்டை விட்டு வெளியேறுகிறாள். வழியில் அவள் தன் தங்கச் சங்கிலியைப் பறிகொடுக்க, இங்கே ஹீரோ தான் வட்டிக்கு வாங்கிய பணத்தைப் பறி கொடுக்க... சோதனை மேல் சோதனை. இந்த கெட்ட நேரத்திலிருந்து அதே நாளில் எப்படி மீள்கிறான் ஹீரோ... எப்படி நல்ல நேரம் ஆரம்பிக்கிறது என்பதை மகா சுவாரஸ்யத்துடன் சொல்லியிருக்கிறார் அல்போன்ஸ் புத்ரன்.

ஒரு படத்தின் பாத்திரத் தேர்வு மட்டும் சரியாக அமைந்தாலே பாதி வெற்றி கிடைத்த மாதிரிதான் என்பார் திரைக்கதை மன்னன் கே பாக்யராஜ். அதை இந்தப் படம் மெய்ப்பித்திருக்கிறது.

ஹீரோவாக வரும் நிவின், ஹீரோயின் நஸ்ரியா நஸீம் இருவருக்குமே இது முதல் படம். ஆனால் அத்தனை அம்சமாக இருக்கிறார்கள். நடிப்பில் வாழ்ந்திருக்கிறார்கள்.

இவர்கள் மட்டுமல்ல, அந்த வட்டி ராஜாவாக வரும் சிம்ஹா, ஹீரோயின் அப்பா தம்பி ராமையா, எஸ்ஐயாக வரும் ஜான் விஜய், நாசர் உள்ளிட்ட அத்தனை பாத்திரங்களும் மிக இயல்பாக இந்தக் கதையில் பொருந்திப் போகிறார்கள்.

இயக்குநர் மலையாளி என்பதால் இந்தப் படத்தை மலையாளத்திலும் விட்டிருக்கிறார்கள். கதையும் எடுக்கப்பட்ட விதமும் நன்றாக இருந்தால் எந்த மொழியிலும் ரசிப்பார்கள் என்பது நேரம் தரும் பாடம்.

முதல் பாதியில் நேரத்தைக் கொல்ல வேண்டியிருப்பதுதான் இந்தப் படத்தின் ஒரே குறை. இன்னொன்று.. குறையென்று சொல்ல முடியாது... இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம் என சொல்ல வைப்பது இசை.

படத்தின் இயக்குநர்தான் எடிட்டர். இரண்டாம் பாதியில் கொடுத்த வேகத்தை, முதல் பாதியிலிருந்தே தொடர்ந்திருக்கலாம்.

ஆனந்த் சந்திரன் காமிரா படத்துக்கு இன்னொரு சிறப்பு:

தமிழ் சினிமாவின் காலை அவ்வப்போது சிலர் குழிக்குள் இழுக்கப் பார்த்தாலும்... இதோ நாங்கள் இருக்கிறோம் என சொல்லிக் கொண்டு கெத்தாக முன் நிற்கிறார்கள் அல்போன்ஸ் புத்ரன் மாதிரி இயக்குநர்கள். ரியல் ஹீரோக்கள் இவர்கள்தான். வாழ்த்துகள்!

 

மத்தாப்பு பட நாயகன் மீது சொந்த ஊரில் போலீஸ் தாக்குதல்!

Police Attacks On Mathaappu Hero Jayan

திசையன்விளை: மத்தாப்பு தமிழ் படத்தில் ஹீரோவாக நடிக்கும் புது நடிகர் ஜெயனை, அவரது சொந்த ஊரில் காவல்துறை அதிகாரிகள் தாக்கினர். இது பரபரப்பை ஏற்படுத்தியது.

நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள நாலந்துலாகிராமத்தை சேர்ந்தவர் ஜெயன். இவர் தினந்தோறும் நாகராஜன் இயக்கும் மத்தாப்பு என்ற தமிழ் படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.

நாலந்துலாகிராமத்தில் நடக்கும் கோவில் திருவிழாவில் கலந்து கொள்ள அவர் சொந்த ஊருக்கு வந்திருந்தார்.

தனது நண்பர்களை காரில் அழைத்து செல்வதற்காக திசையன்விளை பேருந்து நிலையத்திற்கு வந்து நின்றார். அப்போது அங்கு ரோந்து வந்த திசையன்விளை காவல்துறையினர் காரை அங்கிருந்து எடுக்குமாறு கூறியுள்ளனர்.

இது தொடர்பாக ஜெயனுக்கும், காவல்துறை அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து காவல்துறையினர் ஜெயனை சரமாரி தாக்கி அவரது காரை காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று விட்டனராம்.

இந்நிலையில் நேற்று ஜெயன் தன்னை காவல்துறை அதிகாரி தாக்கியதாக கூறி பாளை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தார். மேலும் ஜெயனின் தந்தை சுடலைக்கண்ராஜா தனது உறவினர்களுடன் இன்று நெல்லை மாவட்ட எஸ்.பி. அலுவலகத்திற்கு திரண்டு வந்து எஸ்.பி.யிடம் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில் திசையன்விளை ஏ.எஸ்.பி. வருண்குமார் எனது மகனை எந்தவித காரணமும் இல்லாமல் தாக்கியுள்ளார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

ஏ.எஸ்.பி. வருண்குமார் மீது ஏற்கெனவே பலதரப்பினரும் அதிருப்தியில் உள்ளனர். அப்பகு வியாபாரிகள் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்துள்ளனர். இப்போது நடிகரைத் தாக்கிய வழக்கு மூலம் ஏஎஸ்பி சிக்கலுக்குள்ளாகியுள்ளார்.

 

ஆறு மாதங்களுக்குள் செஞ்சுரி போட்ட தமிழ் சினிமா!

2013-ம் ஆண்டு ஆரம்பித்து ஆறு மாதங்கள் கூட ஆகவில்லை... அதற்கு தமிழ் சினிமாவில் 100-க்கும் மேற்பட்ட படங்கள் வெளியாகியுள்ளன.

இந்த வேகத்தில் படங்கள் வெளியானால் தமிழ் சினிமா இந்த ஆண்டு முடிவுக்குள் 250 படங்களைத் தொட்டுவிடும் என்று கணிக்கப்படுகிறது.

கடந்த ஆண்டு தமிழில் வெளியான படங்களின் எண்ணிக்கை 197. இதில் டப்பிங் படங்களும் அடங்கும்.

tamil cinema cross double century this year
இந்த ஆண்டு அந்த எண்ணிக்கையை மூன்றாவது காலாண்டிலேயே தொட்டுவிடும் அளவுக்கு படங்கள் தயாரிப்பது அதிகரித்து வருகிறகது.

இந்த ஆண்டு கடந்த மே மாதம் முடிவதற்குள்ளாகவே 90 படங்களுக்குமேல் வந்துள்ளன. இவற்றில் 21 டப்பிங் படங்கள்.

இந்த மாதம் முடிய இன்னும் இரு வெள்ளிக்கிழமைகள் உள்ளன. கிட்டத்தட்ட பத்துப் படங்கள் வெளியாகும் எனத் தெரிகிறது.

இதையெல்லாம் சேர்த்தால் ஆறுமாதங்களுக்குள் செஞ்சுரி அடிக்கப் போகிறது தமிழ் சினிமா.

இன்றைய நிலையில் கிட்டத்தட்ட 60 புதிய படங்கள் பூஜைபோடப்பட்டுள்ளன. 200 படங்கள் தயாரிப்பில் உள்ளன. இவற்றில் பாதி வெளியானால் கூட 2013-ல் தமிழ் சினிமாக்கள் எண்ணிக்கை 250 தாராளமாகத் தாண்டிவிடும் என்கிறார்கள்.

இதுமட்டும் நடந்தால், தமிழ் சினிமா வரலாற்றில் அதிகப் படங்கள் தயாரான ஆண்டு என்ற பெருமை கிட்டும்.

 

'விடியும் முன்'... மீண்டும் வந்தார் பூஜா!

நான் கடவுள் படத்துக்குப் பிறகு கிட்டத்தட்ட காணாமல் போன பட்டியலில் இடம்பிடித்த பூஜா, மீண்டும் நடிக்க வந்துள்ளார்.

விடியும் முன் என்ற த்ரில்லர் படத்தில் அவர் நாயகியாக நடிக்கிறார்.

புதிய இயக்குநர் பாலாஜி கே மோகன் இயக்கும் இந்தப் படத்தின் கதையைக் கேட்டதும் நடிக்க வருவதாக ஒப்புக் கொண்டாராம் பூஜா.

pooja s comeback movie

இயக்குநர் பாலாஜி குமார் ஹாலிவுட்டில் உதவி இயக்குநராகப் பணியாற்றியவராம். நைன் லைவ்ஸ் ஆப் மாறா என்ற படத்தையும் எடுத்துள்ளார்.

மாளவிகா குட்டன், லட்சுமி ராமகிருஷ்ணன் உள்பட பலரும் இதில் நடிக்கின்றனர்.

இத்தனை காலம் சினிமாவை விட்டு ஒதுங்கியிருந்தது குறித்து பூஜா கூறுகையில், "சில தனிப்பட்ட காரணங்களுக்காக அப்படி இருக்க வேண்டி வந்தது. பின்னர் நல்ல கதை கிடைத்தால் நடிக்கலாம் என்று காத்திருந்தேன். நான் எதிர்ப்பார்த்த மாதிரி கதையாக விடியும் முன் அமைந்தது, என்றார்.

இனி புதிய படங்களில் தீவிரமாக நடிக்க முடிவெடுத்துள்ளாராம்.

 

தெனாலிராமனில் வடிவேலு ஜோடியான விஜயகாந்த் நாயகி!!

Meenakshi Dixit Is Vadivelu S Lead

சென்னை: இரண்டாண்டு இடைவெளிக்குப் பிறகு வடிவேலு நடிக்கும் தெனாலிராமனும் கிருஷ்ணதேவராயரும் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார் மீனாட்சி தீக்ஷித்.

ஏற்கெனவே பேசப்பட்ட ஹீரோயினான பார்வதி ஓமணக்குட்டன் அதிக சம்பளம் கேட்டதால், அவருக்குப் பதில் மீனாட்சியை ஒப்பந்தம் செய்துள்ளனர்.

கிருஷ்ணதேவராயர் அரசவையில் இருந்த மதியூகியும் மந்திரியுமான தெனாலி ராமனின் கதையை மையமாக வைத்து எடுக்கப்படும் படம் இது. தலைப்பு மகா நீளம். கஜபுஜ புஜகஜ தெனாலிராமனும் கிருஷ்ணதேவராயரும் என தலைப்பு வைத்துள்ளனர்.

இதற்காக வடபழனி ஸ்டூடியோக்களில் பல லட்சம் செலவில் மன்னர் காலத்து அரண்மனை அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இப்படத்தை யுவராஜ் இயக்குகிறார். இவர் ஏற்கனவே 'போட்டா போட்டி' படத்தை டைரக்டு செய்தவர்.

வடிவேலுவுக்கு ஜோடியாக நடிக்க முதலில் பார்வதி ஓமன குட்டனிடம் பேசினார்கள். அவருக்கு ரூ.70 லட்சம் வரை சம்பளம் தர முன்வந்ததாக கூறப்பட்டது. ஆனால் வடிவேலு ஜோடியாக நடிக்க விருப்பமில்லை என்று முதலில் கூறிய பார்வதி, பின்னர் 1.5 கோடி வரை சம்பம் கேட்டாராம்.

இவர் ஏற்கனவே அஜீத்துடன் 'பில்லா 2' என்ற ப்ளாப் படத்தில் நடித்து காணாமல் போனவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து தெலுங்கு, இந்திப் படங்களில் நடித்துள்ள சினேகா உல்லலை அணுகினர். அவரும் வடிவேலுவுடன் நடிக்க விரும்பவில்லை.

இறுதியாக நடிகை மீனாட்சி தீட்சித் தேர்வாகி உள்ளார். இவர் தெலுங்கு படங்களில் குத்தாட்டம் ஆடியுள்ளார். தமிழில் விஜயகாந்த் கடைசியாக இயக்கி நடித்த விருத்தகிரி படத்தில் நடித்துள்ளார்.

ஒருவழியாக விஜயகாந்த் நாயகிதான் வடிவேலுவுக்கு செட்டாகியுள்ளார்!!