சென்னை: ஆட்டோகிராப் படத்தில் நடித்த மல்லிகா இயக்கும் மலையாளப் படத்தில் தான் ஹீரோயினாக நடிக்கவில்லை என நடிகை பாவனா தெரிவித்துள்ளார்.
ஆட்டோகிராப், திருப்பாச்சி, சென்னையில் ஒரு நாள் உட்பட பல தமிழ் படங்களில் நடித்தவர், மலையாள நடிகை மல்லிகா. இவர் முதல்முறையாக ‘பழனியிலே கனகம்' என்ற பெயரில் முதன்முறையாக மலையாளப் படம் ஒன்றை இயக்குகிறார்.
சினிமாவில் துணை நடிகைகள் சந்திக்கும் பிரச்னைகளை யதார்த்தமாக அலசும் கதைக்களம். இப்படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்க உள்ளது. இப்படம் தொடர்பாக சமீபத்தில் விளம்பரம் ஒன்று வெளியானது. அதில், இப்படத்தில் ஹீரோயினாக பாவனா நடிப்பதாக அறிவிக்கப் பட்டிருந்தது.
இந்த விளம்பரத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்த பாவனா, இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
நட்பு அடிப்படையில் மல்லிகா கேட்டதால், அவர் இயக்கும் முதல் படத்தில் நடிக்க சம்மதித்தேன். ஆனால், நான் ஹீரோயினாக நடிப்பதாக விளம்பரம் செய்யப்படுகிறது. எனக்கு இரண்டு நாட்கள் மட்டும்தான் ஷூட்டிங். நான் ஏற்பது கவுரவ வேடம். ஹீரோயின் அல்ல. இப்போது மலையாளத்தில் நடிக்கிறேன். தமிழில் விஜய்யுடன் ‘புலி' படத்தில் கேட்டுள்ளனர். நடிப்பது பற்றி முடிவு செய்யவில்லை' எனத் தெரிவித்துள்ளார்.