சென்னை: ஒரு தயாரிப்பாளராக லிங்கா படத்தால் எனக்கு எந்த நஷ்டமும் இல்லை. ஆனால் இந்தப் படத்தை வெளியான நான்காம் நாளிலிருந்து ஓடவிடாமல் கொன்று விட்டார்கள் சிங்கார வேலன் போன்ற நபர்கள், என்று கூறினார் தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ்.
நான்கு ஆண்டு இடைவெளிக்குப் பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த லிங்கா படம் கடந்த ஜனவரி 12-ம் தேதி அவர் பிறந்த நாளன்று வெளியானது.
படத்துக்கு ரசிகர்களிடம் ஏகோபித்த வரவேற்பு கிடைத்தது. முதல் மூன்று நாட்களில் ரூ 104 கோடி ரூபாயை வசூலித்தது இந்தப் படம்.
ஆனால் அடுத்த நாளே, இந்தப் படம் சரியில்லை.. படத்துக்கு கூட்டமில்லை.. படத்தால் எங்களுக்கு நஷ்டம்.... பணத்தைத் திருப்பித் தரவேண்டும் என்றெல்லாம் தொடர்ந்து எதிர்மறைப் பிரச்சாரத்தில் இறங்கினார் சிங்கார வேலன் என்ற மீடியேட்டர்.
இது படத்தை வெகுவாகப் பாதித்தது. உலகெங்கும் மூன்றாயிரம் அரங்குகளில் படம் ஓடிக் கொண்டிருந்த போதே இப்படி பிரச்சாரம் செய்தது தமிழ் சினிமா இது வரை பார்த்திராதது. தாங்கள் பணம் கொடுத்து வாங்கி வெளியிட்டுள்ள லிங்கா படம் ஓட வேண்டும் என்ற நோக்கம் இவர்களுக்கு இல்லை. வேறு உள்நோக்கத்துடன் படத்தை ஓட விடாமல் செய்ய மேற்கொண்ட திட்டமிட்ட சதி என்று ரசிகர்களும் மீடியாக்களும் சொல்லும் அளவுக்கு மிக மோசமாகப் போனது இந்த பிரச்சாரம்.
குறிப்பாக இந்த சிங்கார வேலன் ரஜினியை மிகத் தரக்குறைவான வார்த்தைகளில் திட்டினார் என்பதே உண்மை. அதற்கான ஆடியோ, வீடியோ ஆதாரங்களை பெரும்பாலான செய்தியாளர்கள் வைத்துள்ளனர்.
ஒரு கட்டத்தில் இந்தப் பிரச்சினைையை அரசியல் ஆக்கி, அதில் சீமான், வேல் முருகன் போன்றவர்களை கொண்டு வந்தனர். நேற்று உண்ணாவிரதம் என்ற பெயரில் லிங்கா மற்றும் ரஜினிக்கு எதிரான அரசியலையும் அரங்கேற்றினர் சிங்கார வேலன் அன்ட் கோ.
இதுவரை எந்த பதிலையும் சொல்லாமல் அமைதியாக இருந்த லிங்கா தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் மற்றும் விநியோகஸ்தர் வேந்தர் மூவீஸ் டி சிவா இருவரும் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது ராக்லைன் வெங்கடேஷ் கூறுகையில், "நான் 30 வருடமாக சினிமா துறையில் இருக்கிறேன். நான் சிறு வயதில் இருந்தே ரஜினியின் ரசிகன். 12 வருடங்களுக்கு முன் ரஜினி எனக்கு நண்பரானார். அவர் கடவுளின் அம்சம். அவரை நான் கடவுளாகத்தான் அவரைப் பார்க்கிறேன். அத்தனை சிறந்த மனிதர் அவர். அவர்தான் எனக்கு இந்தப் படத்தைத் தயாரிக்கும் வாய்ப்பைக் கொடுத்தார்.
கடவுள்தான் அவர் மூலம் இந்த பாக்கியத்தை கொடுத்தாக கருதினேன். படம் பூஜை போடும்போதே ரஜினி பிறந்தநாளான டிசம்பர் 12-ம்தேதி வெளியிட வேண்டும் என்று முடிவு செய்து கஷ்டப்பட்டு உழைத்தோம். பணத்தில் எந்தப் பிரச்சனையும் வரக்கூடாது என்பதற்காக யாரிடமும் ஒரு பைசா கடன் வாங்காமல் என் முழு பணத்தையும் முதலீடு செய்தேன்.
நான் தயாரித்த படத்தை ஈராஸ் நிறுவனத்திடம் விற்றோம். அவர்கள் அம்மா கிரியேஷன்ஸ் மூலமாக வெளியிட்டனர். அம்மா கிரியேஷன்ஸ்தான் இந்த விநியோகஸ்தர்களுக்கு படத்தை விற்றார்கள்.
ஆனால் படம் வெளியான உடனேயே படம் சரியில்லை, எந்த ஷோவும் ஃபுல்லாகவில்லை என்று விநியோகஸ்தர்கள் மீடியாவில் பிரச்சாரம் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். உலகிலேயே இதுபோன்ற ஒரு செயலை நான் எங்கும் பார்த்ததில்லை.
இது படத்துக்கு வரவேண்டிய கூட்டத்தை பாதித்தது. இதனை ரஜினி சார் கவனத்துக்குக் கொண்டு சென்றோம். அவர், 'நானும் பார்த்தேன் வெங்கடேஷ்.. அதிக பணம் கொடுத்த அழுத்தத்தில் ஏதோ பேசியிருக்கிறார்... மனசில் வச்சிக்காதீங்க. நான்கைந்து வாரம் போகட்டும்.. கணக்கு வழக்கு பார்த்து, அவர்கள் சந்தோஷப்படும் அளவுக்கு ஒரு முடிவு எடுக்கலாம்,' என்றார். தன்னால் யாரும் நஷ்டமடைந்துவிடக் கூடாது என்பதில் அத்தனை தெளிவாக இருக்கும் மனிதர் அவர்.
டி சிவாவிடம் சொன்னபோது, சிங்கார வேலனிடம் சொல்லிவிட்டேன். இனிமேல் பேச மாட்டார் என்றார்.
ஆனால் இந்த சிங்கார வேலன் தன் பிரச்சாரத்தை நிறுத்தவில்லை. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நாடகம் போட்டார். ஆங்காங்க நின்று இஷ்டத்துக்கும் பேசினார்.
படம் ஓடக் கூடாது என்பதுதான் அவர் நோக்கமாக இருந்தது. படத்துக்கு கூட்டம் குறைந்துவிட்டது.. புரமோஷன் செய்யுங்கள் என்று என்னிடம் கூறியிருந்தால் நான் ரஜினியிடம் பேசி அதற்கான வேலைகளில் ஈடுபட்டிருப்போம். ஒரு நியாயமான விநியோகஸ்தர் அதைத்தான் செய்திருப்பார். மற்ற படங்களுக்கும் அப்படித்தான் செய்கிறார்கள். ஆனால் இவர்கள் நோக்கம் அதுவல்ல.
சிறிது நாட்களிலேயே படம் ஓடவில்லை என்று கூறி உண்ணாவிரதம் அளவிற்கு கொண்டு வந்துவிட்டார். அவர் பப்ளிசிட்டி, பாலிடிக்ஸுக்காக இதுபோன்ற காரியங்களில் ஈடுபட்டு வருகிறார். உங்க பாலிடிக்ஸுக்கு ஆயிரம் வழிகள் இருக்கு. இந்த சினிமா வேணாங்க..
45 கோடியில் படத்தை தயாரித்து ரூ. 200 கோடிக்குமேல் லிங்கா படத்தை வியாபாரம் செய்திருப்பதாக சொல்லியிருக்கிறார்கள். நான் செய்த செலவுகளையும் படத்தை விற்றதற்கான ஆதாரத்தையும் நான் காண்பிக்கிறேன். ஆனால் ரூ. 200 கோடிக்கு மேல் விற்கப்பட்டதற்கான ஆதாரத்தை காண்பித்து நிரூபித்தால், அவர்கள் என்ன செய்ய சொல்கிறார்களோ அதை அங்கேயே நான் செய்கிறேன். அப்படி இல்லையெனில் இந்த சிங்கார வேலன் பகிரங்கமாக எங்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்...," என்றார்.
சரி, ஒரு தயாரிப்பாளராக சொல்லுங்கள்.. லிங்கா படம் லாபமா நஷ்டமா?
"ஒரு தயாரிப்பாளராக லிங்கா லாபம்தான். எனக்கு நஷ்டமில்லை. ஆனால் பெரிய அளவில் வெற்றியைப் பெற்றிருக்க வேண்டிய படத்தை இந்த சிங்கார வேலன் தன் விஷமப் பிரச்சாரத்தால் கொலை செய்தார் என்பதுதான் உண்மை. இது ஒரு பெரிய சதி. திட்டமிட்டே செய்திருக்கிறார்கள். இதனை அவர் எந்த உள்நோக்கத்தோடு செய்தார் என்பது சீக்கிரமே வெட்ட வெளிச்சமாகிவிடும்," என்றார்.