"ரஜினிகாந்த் நலமாக இருக்கிறார்; வெளிநாடு போகவில்லை''-ஐஸ்வர்யா

Tags: quot


சென்னை: நடிகர் ரஜினிகாந்த் நலமாக உள்ளார். சிகிச்சைக்காகவோ ஓய்வெடுக்கவோ அவர் வெளிநாடு போகவில்லை, என்று ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா தெரிவித்தார்.

ரஜினிகாந்த் கடந்த 29-ந் தேதி 'ராணா' படப்பிடிப்பில் கலந்து கொண்டுவிட்டு வீடு திரும்பியபோது, அவருக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. உடனடியாக அவர் சென்னை இசபெல்லா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு அஜீரண கோளாறு இருப்பதாகவும், உடலில் நீர்ச்சத்து குறைந்திருப்பதாகவும் டாக்டர்கள் தெரிவித்தார்கள். சிகிச்சைக்குப்பின், அன்று மாலையே அவர் வீடு திரும்பினார்.

அதன்பிறகு அவர் வீட்டிலேயே ஓய்வு எடுத்து வந்தார். கடந்த 4-ந் தேதி அவர் காய்ச்சல் காரணமாக மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஒரு வார சிகிச்சைக்குப்பின், அவர் குணம் அடைந்தார்.

மருத்துவமனையிலிருந்து காளிகாம்பாள் கோவிலுக்கும், பாம்பன் சாமிகள் ஆசிரமத்துக்கும் சென்று, ரஜினிகாந்த் சாமி கும்பிட்டார். பின்னர் மாலை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு, 6.15 மணிக்கு வீடு திரும்பினார்.

வெளிநாடு போகவில்லை

இதற்கிடையே ஓய்வு எடுப்பதற்காக ரஜினிகாந்த் அமெரிக்கா வெளிநாட்டுக்கு போக முடிவு செய்திருப்பதாக தகவல்கள் பரவின. பிரபல அரசியல் விமர்சகர் இதுகுறித்து ட்விட்டரில் செய்தி வெளியிட்டிருந்தார். தனது வெளிநாட்டுப் பயணத்துக்கான ஆவணங்களையும் ரஜினி தரப்பிலிருந்து டெல்லிக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

ஆனால் இந்த தகவல்களை, அவருடைய மகள் ஐஸ்வர்யா ரஜினி மறுத்தார்.

"அப்பா நலமாக இருக்கிறார். அவர் எந்த வெளிநாட்டுக்கும் போகவில்லை. அதற்கான அவசியமும் இல்லை. வீட்டிலேயே ஓய்வெடுத்து வருகிறார்,'' என்று அவர் கூறினார்.
 

நான் நினைத்தது போல அதிமுக வென்றது மிக மிக மகிழ்ச்சி-நடிகர் விஜய்

Tags:


சென்னை : மக்கள் நினைத்தது போல,நான் நினைத்தது போல அதிமுக பெரும் வெற்றி பெற்றிருப்பது மகிழ்ச்சி தருகிறது என்று நடிகர் விஜய் கூறியுள்ளார்.

திமுகவுக்கு எதிராக மிகத் தீவிரமாக செயல்பட்டவர்களில் நடிகர் விஜய்யும் ஒருவர்.

அதிமுக பெற்ற வெற்றி குறித்து விஜய்யிடம் செய்தியாளர்கள் கருத்து கேட்டனர். அதற்கு அவர் பதிலளிக்கையில், ஆட்சி மாற வேண்டும், ஒரு மாற்றம் வர வேண்டும் என நான் நினைத்தேன். அதேபோல மக்களும் நினைத்துள்ளனர் என்பதை தேர்தல் முடிவுகள் நிரூபிக்கின்றன.

அதிமுக வெற்றி பெற்றிருப்பது மகிழ்ச்சி தருகிறது. மிக மிக மகிழ்ச்சியாக உள்ளது என்றார் விஜய்.
 

இது திமுகவுக்கு தோல்வி அல்ல, மக்களுக்கேத் தோல்வி-குஷ்பு பேச்சு

Tags:


சென்னை: திமுக அடைந்ததோல்வியை மக்கள் பெற்ற தோல்வி என்று கூறியுள்ளார் 'கருத்து' புகழ் நடிகை குஷ்பு.

திமுகவுக்காக தீவிரப் பிரசாரம் செய்த முக்கியப் பீரங்கிகளில் நடிகை குஷ்புவும் ஒருவர். தட்டுத் தடுமாறி தமிழில் பேசி பிரசாரம் செய்த இவர் திமுக பெற்ற பெரும் தோல்வியைத் தொடர்ந்து இன்று காலை கோபாலபுரம் வந்து திமுக தலைவர் கருணாநிதியைச் சந்தித்தார்.

பின்னர் செய்தியாளர்கள் அவரிடம் திமுகவின் தோல்வி குறித்து கருத்து கேட்டபோது, இது திமுகவுக்கு தோல்வியே அல்ல. மாறாக மக்கள்தான் தோல்வி அடைந்துள்ளனர்.

2ஜி வழக்கு குறித்து மீடியாக்கள் தவறான செய்திகளை வெளியிட்டன. இதனால்தான் திமுகவுக்கு பெரும் தோல்வி ஏற்பட்டு விட்டது. இருந்தாலும் அவை பொய் என்பதை நாங்கள் சட்டப்பூர்வமாக நிரூபிப்போம் என்றார் குஷ்பு.
 

அதிமுக வெற்றிச் செய்தி கிடைத்த வேகத்தில் ஜெயா டிவிக்கு மாறிய வேலாயுதம்!!

Tags:


அதிகாரம், தேர்தல் வெற்றி இவற்றை வைத்துதான் கோடம்பாக்கத்தில் எதுவுமே தீர்மானிக்கப்படுகிறது.

நடிகர் விஜய் ஆரம்பத்தில் திமுக அபிமானியாக இருந்தார். ஆனால் கருணாநிதியின் பேரன்கள் எடுத்த படங்களில் நடித்து, தோல்வி கண்டு, அதனால் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக, அதிமுக முகாம் பக்கம் போனார். ஆனாலும் வெளிப்படையாக தனது ஆதரவைக் காட்டவில்லை.

இந்த நிலையில் தேர்தல் வந்தது. அவரும் வேலாயுதம் படம் நடித்துக் கொண்டிருந்தார் அந்த தருணத்தில். இந்தப் படத்தின் தயாரிப்பாளர் ஆஸ்கர் வி ரவிச்சந்திரன் படத்தை யாருக்கு விற்பது என்பதில் தெளிவற்ற நிலையில் இருந்தார். சன் டிவி தரப்பு அவரிடம் பேசி வந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் தன் படம் சன் னுக்கு போகக் கூடாது என்பதில் குறியாக இருந்தார் விஜய்.

எனவே மே13-ம் தேதிக்குப் பிறகு இதுபற்றி முடிவெடுக்கலாம் என்று ஒத்திப் போட்டார் ரவிசந்திரன்.

இப்போது அதிமுக ஜெயித்துவிட்டது தேர்தலில். இன்று காலை அதிமுக முன்னிலை குறித்த செய்திகள் வரத் துவங்கிய அடுத்த கணமே, வேலாயுதம் படத்தின் டிரைலர் ஜெயா டிவியில் ஒளிபரப்பாக ஆரம்பித்துவிட்டது!

அம்மா வருவாரா? சிடியை வெளியிடுவாரா?

இதற்கிடையே நாளை நடக்கும் விஜய்யின் வேலாயுதம் படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு அம்மா வருவாரா என்பது கேள்விக்குறியாகியுள்ளது.

ஆஸ்கர் பிலிம்ஸ் சார்பில் ரவிச்சந்திரன் தயாரிப்பில், ஜெயம் ராஜா இயக்கத்தில் விஜய் நடிக்கும் 52வது படம் வேலாயுதம். விஜய் பிறந்த நாளான ஜூன் 22-ம் தேதி இப்படம் வெளியாகிறது.

இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை( மே 14ம் தேதி) சென்னை நேரு ஸ்டேடியத்தில் பிரமாண்டமாக நடக்கவிருக்கிறது.

விழாவில் சிறப்பு விருந்தினராக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா பங்கேற்று, ஆடியோவை ரிலீஸ் செய்வார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் அதிமுக தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் அமோக வெற்றி பெற்றுள்ளது. எனவே, ஜெயலலிதாதான் அடுத்த முதல்வர்.

புதிய அமைச்சரவைப் பணியைத் துவங்கி மும்முரமாக இருக்கப்போகும் ஜெயலலிதா நாளை நடக்கும் இசை வெளியீட்டு நிகழ்ச்சிக்கு வருவது சந்தேகம் தான் என்று கூறியுள்ளனர்.

விஜய்க்கு விருப்பமான அதிமுக அரசு அமைந்தும், முதல் ஏமாற்றம் அவருக்கே கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
 

ரஜினி உடல்நிலை பற்றி திடீர் பரபரப்பு... ரசிகர்கள் பதட்டம்!

Tags:


தேர்தல் முடிவுகள் மிகப் பரபரப்பாக வந்து கொண்டிருந்த நேரத்தில், ரஜினியின் உடல்நிலையை மையப்படுத்தி அதற்கு இணையான பரபரப்பைக் கிளப்பிவிட்டனர் சிலர்.

ரஜினி மிகவும் சீரியஸான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பதுதான் அந்த வதந்தி.

இதனால் ஏராளமான ரசிகர்கள் பதட்டத்துடன் போயஸ் கார்டனில் உள்ள ரஜினியின் வீடுநோக்கிச் செல்ல ஆரம்பித்தனர். தொலைபேசியில் விசாரித்த வண்ணமிருந்தனர். பத்திரிகை அலுவலகங்களுக்கும் போன் செய்து கேட்டனர்.

உடனடியாக இதுகுறித்து, ரஜினியின் இல்லத்தில் தொடர்பு கொண்டு விசாரித்தோம்.

"ரஜினி சார் இப்போது பூரண நலத்துடன் வீட்டில் தேர்தல் முடிவுகளை ஆர்வமாக பார்த்துக் கொண்டிருக்கிறார். சில நாட்கள் ஓய்வுக்குப் பிறகு மீண்டும் பழையபடி படப்பிடிப்புக்குச் செல்வார். வதந்திகளை நம்ப வேண்டாம்", என்றனர்.

ரஜினியின் பிஆர்ஓ ரியாஸ் அகமது கூறுகையில், "ரஜினி சார் நலமுடன் உள்ளார். தேவையின்றி இதுபோன்ற வதந்திகளைப் பரப்பி ரசிகர்களை பதட்டத்துக்குள்ளாக்குகின்றனர் சிலர். இந்த விஷமத்தனத்தை நம்ப வேண்டாம்", என்று கேட்டுக் கொண்டார்.

ஒரே வாரத்தில் ரஜினி இரு முறை மருத்துவமனையில் தங்கி சிகிச்சை மேற்கொண்டதாலேயே, இந்த மாதிரி வதந்திகள் பரவத் தொடங்கியுள்ளன.
 

வடிவேலு வீட்டு முன் போலீஸ் குவிப்பு... பெரும் பதட்டம்!

Tags:


சென்னை: இந்தத் தேர்தலில் திமுகவின் பிரச்சார பீரங்கியாகக் கருதப்பட்ட வடிவேலு, அதிமுக வெற்றி பெற்றதால் பெரும் சிக்கலுக்குள்ளாகியுள்ளார்.

அவரது வீட்டு முன் பெரும் போலீ்ஸ் படையே குவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் பிரச்சாரத்தில் அதிமுக கூட்டணிக்கு குறிப்பாக விஜயகாந்துக்கு எதிராக கடுமையான பிரச்சாரத்தை மேற்கொண்டார் வடிவேலு. விஜயகாந்த் கட்சி இந்தத் தேர்தலோடு காணாமல் போகும் என்றார். விஜயகாந்த் குடித்துவிட்டு உளறுவதாக கடுமையாக சாடினார். ஆனால் ஜெயலலிதாவை மட்டும் அவர் திட்டவில்லை.

தேர்தல் முடிந்த பிறகும் வடிவேலுவின் வாய்த்துடுக்கு அடங்கவில்லை. அதிமுகவுக்கு வாக்களித்த ரஜினியை சீண்டும் வகையில் பேட்டி கொடுத்தார்.

'ரிசல்டுக்குப் பிறகு எல்லாமே மாறும், அப்போது பேசிக்கிறேன்' என்று கூறினார், ராணா படத்தில் தன்னை நீக்கியதற்கு பதிலடியாக.

தேர்தல் முடிவுகள் வெளியாகிவிட்டன. அதிமுக அபார மெஜாரிட்டியுடன் ஆட்சியப்பிடிக்கப் போகிறது. வடிவேலுவால் விமரிசிக்கப்பட்ட விஜயகாந்த் 25 தொகுதிகளுக்கும் மேல் முன்னணியில் இருக்கிறார். அடுத்த எதிர்க்கட்சித் தலைவர் என்று கூறப்படும் அளவுக்கு அவரது நிலை உயர்ந்துள்ளது.

இந்த நிலையில், ஏற்கெனவே பகையாளிகளாக இருந்த வடிவேலுவுக்கும் விஜயகாந்துக்கும் மோதல் முற்றும் நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே வடிவேலுவை சினிமா உலகம் ஒதுக்க ஆரம்பித்துள்ள நிலையில், அவர் எதிர்த்துப் பிரச்சாரம் அதிமுக ஆட்சிக்கு வந்திருப்பதால், வடிவேலுவின் சினிமா வாழ்க்கையே அஸ்தமித்துவிட்டதாக பலரும் பேசிக் கொள்கின்றனர்.

இன்னொரு பக்கம், வடிவேலு மீது விஜயகாந்த் ரசிகர்கள், சிங்கமுத்து ரசிகர்களும் கோபமாக உள்ளார்களாம். எனவே அவரது வீட்டுக்கு முழு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. விருகம்பாக்கத்தில் உள்ள வடிவேலு வீடடைச் சுற்றிலும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

அருகில் உள்ள விஜயகாந்த் வீட்டுக்கும் போலீஸ் காவல் பலப்படுத்தப்பட்டுள்ளது.

வீண் கலாட்டாவைத் தவிர்க்க வடிவேலுவை கொஞ்ச நாள் வெளியூரில் இருக்குமாறும் போலீசார் அறிவுறுத்தியுள்ளதாகத் தெரிகிறது.
 

ரஜினி நலமுடன் உள்ளார்... ரசிகர்கள் பதட்டப்பட வேண்டாம் - லதா ரஜினி

Tags:


சென்னை: ரஜினி நல்ல ஆரோக்கியத்துடனும் நலமாகவும் உள்ளார். ரசிகர்கள் பதட்டமடைய வேண்டாம், என லதா ரஜினி அறிவித்துள்ளார்.

ரஜினி மனைவி லதா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இன்று எனது கணவர் உடல் நிலை குறித்து தவறான செய்தி பரவி உள்ளது. அன்பான உங்கள் எல்லோருடைய பிராத்தனையாலும் என் கணவர் ரஜினி நலமாக உள்ளார். ரஜினி ரசிகர்களுக்கும் தமிழக மக்களுக்கும் உலகமெங்கும் இருக்கும் அன்பு உள்ளங்களுக்கும் நான் தெரிவிப்பது என்னவென்றால் ரஜினி நலமாக உள்ளார். அன்பிற்கு நன்றி. ரசிகர்கள் வீணாக பதட்டமடைய வேண்டாம். உங்கள் அன்பு இருக்கும் வரை அவருக்கு எதுவும் நேராது.

இவ்வாறு லதா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.