பழங்குடி மக்களின் சோகம் சொல்ல வரும் மலைவேந்தன்!

பழங்குடி மக்களின் அடிமை வாழ்க்கையைப் படம் பிடித்துக் காட்ட வருகிறது மலைவேந்தன் என்ற படம்.

ஓஎஸ்டி குரூப் தயாரிக்கும் இந்தப் படத்தில் கதாநாயகனாக திருசங்கர், கதாநாயகியாக புதுமுகங்கள் அறிமுகமாகிறார்கள்.

செங்கல் சூளையிலும், கல்குவாரியிலும், அரிசி ஆலைகளிலும் அடிமையாக வாழ்ந்து கொண்டிருக்கும் பழங்குடி மக்களாகிய இருளர் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதே மலைவேந்தனின் கதை.

பழங்குடி மக்களின் சோகம் சொல்ல வரும் மலைவேந்தன்!

இத்திரைப்படத்தில் அம்மக்களின் கலாச்சாரமும், பாடல்களும், அவர்களின் விழாக்களும் ரசிகர்களுக்கு மிகவும் புதுமையான அனுபவத்தைத் தரும், என்கிறார் படத்துக்கு கதை-திரைக்கதை-வசனம் எழுதி இயக்கும் திருப்போரூர் ஜி திராவிடன்.

இப்படத்தின் படப்பிடிப்பு திருச்சி பச்சைமலை, கொடைக்கானல், அந்தமான் மற்றும் வயநாடு ஆகிய பகுதிகளில் நடைபெறவிருக்கிறது.

இப்படத்தில் ஐந்து பாடல்கள் மற்றும் மூன்று சண்டைக் காட்சிகள் இடம்பெறுகின்றன.

டிகே உதயன் ஒளிப்பதிவு செய்ய, குமார ராஜா இசையமைக்கிறார்.

படத்தின் தொடக்கவிழா இன்று வியாழக்கிழமை சென்னை ஏவிஎம் ஸ்டுடியோவில் நடந்தது.

 

தரமணி... காதல், செக்ஸ், ஐடி துறையை கையிலெடுக்கும் ராம்!

தரமணி... காதல், செக்ஸ், ஐடி துறையை கையிலெடுக்கும் ராம்!

தரமணி... இதுதான் ராம் இயக்கும் மூன்றாவது படத்தின் தலைப்பு என்பதை ஏற்கெனவே தெரிவித்திருந்தோம்.

இந்தப் படத்தின் தலைப்பே, படம் எதைப் பற்றியது என்பதை தெளிவாக்கிவிடும். ஆம்... மீண்டும் ஒரு முறை காதல், மோதல், செக்ஸ் போன்றவற்றில் சிக்கி அல்லாடும் ஐடி துறை இளைஞனை மையப்படுத்தி கதை அமைத்திருக்கிறார் ராம்.

இந்தப் படத்தின் ஹீரோவாக வசந்த் ரவி நடிக்கிறார். ஆன்ட்ரியா நாயகியாக நடிக்கிறார்.

இப்படத்தை ஜே.எஸ்.கே. பிலிம்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனம் தயாரிக்கிறது. தங்க மீன்கள் பட வெளியீட்டாளர் இந்த ஜேஎஸ்கேதான் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்திற்காக ஒரு பாடல் காட்சியை இயக்குனர் ராம் படமாக்கிவிட்டார். வரும் 2014-ஆம் ஆண்டு ஜனவரியில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர். இப்படத்தில் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியிடப்பட்டது.

இப்படம் குறித்து இயக்குனர் ராம் கூறுகையில், "ஒரு கமர்ஷியல் பொழுதுபோக்குப் படம் இது. உலகமயமாக்கலின் நடைபெறும் ஒரு நகர்ப்புறக் காதல் கதையாக இப்படத்தை சித்தரித்துள்ளேன். மோதல், செக்ஸ், காமம் மற்றும் பொருளாதார பிரச்சினைகளின் இடையே ஆண், பெண் இருவருக்கும் இடையே ஏற்படும் நிரந்தரமான காதல் குறித்து இதில் சொல்லவிருக்கிறேன். ஐடி துறை சார்ந்த கதை மாந்தர்கள் இதில் உண்டுதான்.

இப்படத்தின் நாயகியாக நடித்து வரும் ஆண்ட்ரியாவின் திறமைகள் திரைத்துறையில் குறைவாக பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த படம் ஆண்ட்ரியாவின் திறமையை வெளிப்படுத்தும் விதமாக அமையும்," என்றார்.

 

விஜய், ஷங்கரை அடுத்து 'ரோல்ஸ் ராய்ஸ்' கார் வாங்கும் சந்தானம்

சென்னை: சந்தானம் ரோல்ஸ் ராய்ஸ் கார் வாங்கவிருக்கிறாராம்.

இன்றைய தேதியில் அதிகம் கிராக்கி உள்ள காமெடி நடிகர் என்றால் அது சந்தானம் தான். சந்தானம் மீது கோலிவுட் ஹீரோக்கள் பலர் கடுப்பில் உள்ளார்களாம். நாம் ஒரு படத்தில் சில மாதங்கள் நடித்து வாங்கும் சம்பளத்தை மனிதர் 10 நாட்கள் நடித்து வாங்கிவிடுகிறாரே என்று ஹீரோக்கள் காட்டமாக உள்ளார்களாம்.

இப்பொழுது அவர்கள் வயிறு ரியும்படி சந்தானம் ஒன்றை செய்துள்ளார். வேறு ஒன்றும் இல்லை ரூ.2 கோடிக்கு ரோல்ஸ் ராய்ஸ் கார் வாங்குகிறாராம். தற்போது கோலிவுட்டில் விஜய் மற்றும் இயக்குனர் ஷங்கரிடம் மட்டுமே ரோல்ஸ் ராய்ஸ் உள்ளது.

விஜய், ஷங்கரை அடுத்து 'ரோல்ஸ் ராய்ஸ்' கார் வாங்கும் சந்தானம்

முன்பு பாலிவுட் கவர்ச்சி நடிகை மல்லிகா ஷெராவத் ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு ஆர்டர் கொடுத்தபோது அதை ஓட்ட உங்களுக்கு தகுதி இல்லை என்று அந்நிறுவனம் தெரிவித்துவிட்டது. ஆனால் சந்தானம் தமிழக மக்களை சிரிக்க வைக்கிறார் என்ற தகுதியை வைத்து அவருக்கு காரை விற்கிறதாம்.

தமிழகத்தில் ரூ.2 கோடிக்கு கார் வாங்கும் ஒரே காமெடி நடிகர் சந்தானம் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

 

விஜய்க்காக உதவி இயக்குநரின் கதையைச் சுட்டாரா ஏஆர் முருகதாஸ்?

விஜய்க்காக உதவி இயக்குநரின் கதையைச் சுட்டாரா ஏஆர் முருகதாஸ்?

விஜய்யை வைத்து ஏற்கெனவே இயக்கிய துப்பாக்கி மற்றும் அடுத்து இயக்கப் போகும் படத்துக்கான கதையை தன் உதவி இயக்குநரிடமிருந்தே சுட்டுவிட்டார் ஏ ஆர் முருகதாஸ் என்ற பரபர குற்றச்சாட்டு கோலிவுட்டில் உலாவருகிறது.

விஜய்யை வைத்து ஏ ஆர் முருகதாஸ் சமீபத்தில் எடுத்த துப்பாக்கி, அவரது உதவி இயக்குநர் ஒருவரின் கதையாம். தான் முதல் முறையாக இயக்கும் படத்தின் கதை இதுதான் என்று அந்த உதவி இயக்குநர் முருகதாசிடம் கூறியிருந்தாராம்.

ஆனால் அவரால் சொன்னபடி படம் இயக்க முடியாமல் போக, அந்தக் கதைத்தான் துப்பாக்கியாக சுட்டாராம் ஏஆர் முருகதாஸ்.

அடுத்து ஆஸ்கர் பிலிம்சுக்காக விஜய்யை வைத்து புதுப்படம் இயக்கப் போகிறார் முருகதாஸ். இந்தப் படத்துக்கு கதை தேடிக் கொண்டிருந்தபோது.. இன்னொரு உதவி இயக்குநர் வந்திருக்கிறார். 'அண்ணே இது நான் இயக்கும் முதல் படக் கதை' என முருகதாசிடம் சீன் வாரியாக சொல்ல, 'அடடே அருமையா இருக்கேப்பா' என சொல்லி அனுப்பி வைத்தாராம்.

அடுத்த ஒரு மாதத்தில் விஜய் படத்தின் கதை, திரைக்கதையை தயார் செய்யும் வேலையில் மும்முரமாகிவிட்டார் முருகதாஸ். அதை தனது புதிய உதிவியாளர்களுடன் டிஸ்கஸ் செய்திருக்கிறார். அவர்களில் ஒரு பழைய உதவியாளருக்கு நெருங்கிய நண்பர். அவர் போய், "உன் கதையைத்தான் அடுத்து விஜய் படத்துக்கு சுட்டுவிட்டார் நம்ம டைரக்டர்," என்று போட்டுக் கொடுக்க, கடுப்பாகிப் போன பழைய உதவி, முருகதாஸிடம் நியாயம் கேட்டிக்கிறார்.

"அதுவாப்பா... நீ கதை சொல்லிட்டே. ஆனா படம் பண்ற மாதிரி தெரியல. அதான் நாம வச்சிக்கலாம், உன் பெயரைப் போட்டுடலாம்னு நெனச்சேன்," என சமாளித்து அனுப்பினாராம் முருகதாஸ்.

இப்போது புதுக் கதையை ரெடி பண்ணுவதில் பிஸியாக இருக்கிறாராம் முருகதாஸ், உதவியாளர்களை கடுமையாக திட்டியபடி!

 

விஜய், ஜெயம் ரவிக்கு போன் மேல் போன் போடும் ஜெனிலியா

விஜய், ஜெயம் ரவிக்கு போன் மேல் போன் போடும் ஜெனிலியா

சென்னை: திருமணத்திற்கு பிறகு மும்பையில் செட்டிலான ஜெனிலியா வாய்ப்பு கேட்டு தனக்கு பழக்கமான நடிகர்களுக்கு போன் போடுகிறாராம்.

ஷங்கரின் பாய்ஸ் படம் மூலம் கோலிவுட்டுக்கு வந்தவர் ஜெனிலியா. அடுத்த படத்திலேயே விஜய்யுடன் ஜோடி சேர்ந்தார். தமிழ் தவிர தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்தார். இந்தியில் இம்ரான் கானுடன் சேர்ந்து அவர் நடித்த ஜானே து யா ஜானே நா படம் சூப்பர் ஹிட்டானது.

அவர் ஜெயம் ரவியுடன் நடித்த சந்தோஷ் சுப்பிரமணியம் சூப்பர் ஹிட் படமானது. அதன் மூலம் அவருக்கு நல்ல பெயரும் கிடைத்தது. மறுபடியும் விஜய்யுடன் சேர்ந்து வேலாயுதம் படத்தில் நடித்தார். விஜய்க்கு ஜோடி இல்லை என்றாலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். இதற்கிடையே அவர் பாலிவுட் நடிகர் ரிதேஷ் தேஷ்முக்கை திருமணம் செய்து கொண்டு மும்பையில் செட்டிலாகிவிட்டார்.

திருமணத்திற்கு பிறகு அவருக்கு பட வாய்ப்புகள் இல்லை. இந்நிலையில் அவர் தெலுங்கு நடிகர்கள் வெங்கடேஷ், பவன் கல்யாண், கோலிவுட்டில் விஜய், ஜெயம் ரவி ஆகியோருக்கு போன் போட்டு வாய்ப்பு கேட்டு வருகிறாராம்.

 

இது, மைனாப் பொண்ணோட புது ஹேர்ஸ்டைல்....

இது, மைனாப் பொண்ணோட புது ஹேர்ஸ்டைல்....

சென்னை: மைனா படம் மூலம் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் அமலாபால். விஜய் ஜோடியாக அமலா பால் நடித்த தலைவா படம் சமீபத்தில் பல்வேறு தடைகளைத் தாண்டி திரைக்கு வந்தது. தற்போது, தனுஷ் ஜோடியாக ‘வேலையில்லாப் பட்டதாரி' படத்தில் நடித்து வருகிறார் அமலா.

இப்படத்தில் டாக்டராக நடிக்கிறாராம் அமலா பால். இப்படத்திற்காக தனது ஹேர்ஸ்டைலை வித்தியாசமாக மாற்றி அமைத்து இருக்கிறார். பொதுவாக இவரது ஹேர்ஸ்டைல்கள் அனைத்தும் சற்று சுருண்டு நெளிந்து அலைபாயும் கூந்தலாகவே இருக்கும்.

ஆனால், இந்த புதிய ஹேர்ஸ்டைலோ சற்று வித்தியாசமாக உள்ளது. புதிய ஹேர்ஸ்டைலுடன் அழகாக, குறும்புத்தனமாக உள்ள தனது புகைப்படங்களை ட்விட்டரில் வெளியிட்டிருக்கிறார் அமலாபால்.

அத்தோடு சேர்த்து பின்வரும் கருத்துக்களையும் வெளியிட்டுள்ளார். அதில், ‘ புதிய ஹேர்ஸ்டைல். புது லுக்குடன், தயாராகிவரும் புதிய படத்திற்குத் தயாராகி விட்டேன். இந்த ஹேர்கட் மூலம் என்னை நானே புதுப்பித்துக் கொண்டது போன்று புத்துணர்ச்சியோடு உணர்கிறேன். எனக்குள் இருக்கும் மழலைத்தன்னைமையை இந்த ஹேர்ஸ்டைல் வெளிக்காட்டுவதாக அமைந்துள்ளது' எனத் தெரிவித்துள்ளார் அமலாபால்.

 

நலமாக உள்ளேன், மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை: விஷால் அவசர அறிக்கை

நலமாக உள்ளேன், மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை: விஷால் அவசர அறிக்கை

சென்னை: தான் நலமுடன் இருப்பதாக நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.

நடிகர் விஷாலுக்கு திடீர் என்று ரத்த அழுத்தம் குறைந்ததையடுத்து அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று செய்திகள் வந்தன. ஆனால் அதை அவர் மறுத்துள்ளார்.

இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

என்னுடைய தயாரிப்பில் நான் ஹீரோவாக நடித்து வரும் ‘பாண்டியநாடு' படத்துக்காக கடந்த 10 நாட்கள் தொடர்ச்சியாக படப்பிடிப்பில் கலந்து கொண்டேன். அதேபோல், நாளை ரிலீஸாக உள்ள ‘மதகஜராஜா' படத்துக்காகவும், புரமோஷன் வேலைகளுக்காக பல்வேறு மீடியாக்களுக்கு சென்று வந்தேன்.

இதனால் மனஉளைச்சல் ஏற்பட்டு என் உடலுக்கும், மனதுக்கும் ஓய்வு கிடைக்கவில்லை. ஆகையால் உடல் பரிசோதனைக்காக ஒரு தனியார் மருத்துவமனைக்கு சென்றேன். என்னை பரிசோதித்த டாக்டர்கள் எனக்கு முழுமையான ஓய்வு தேவை என்று சொன்னார்கள். அவர்கள் அறிவுரைப்படி தற்போது நான் முழு ஓய்வில் இருக்கிறேன். மற்றபடி என் உடம்புக்கு எந்த பிரச்சினையும் இல்லை. நல்ல உடல் ஆரோக்கியத்துடன்தான் இருக்கிறேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

 

கொழுப்பு குறைய மாட்டேங்குதே: கவலையில் நடிகை

சென்னை: நாயகியாக அறிமுகமாகி கவர்ச்சி நடிகையாக ஆன ஒருவர் கொழுப்பை குறைக்க திண்டாடுகிறாராம்.

நல்ல உயரம், உயரத்திற்கேற்ற உடல்வாகுடன் வெளிமாநிலத்தில் இருந்து நடிகை ஒருவர் கோலிவுட் வந்தார். நாயகியாக அறிமுகமான அவர் ஒரு சில படங்களில் மட்டுமே ஹீரோயினாக நடித்தார். அதன் பிறகு அவர் கவர்ச்சி நடிகையாக மட்டுமே உள்ளார். இந்நிலையில் அம்மணி தமிழ் தவிர கன்னடம், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி படங்களில் நடித்துள்ளார்.

ஏற்கனவே ஆஜானுபாகுவாய் இருந்த அவர் தற்போது ஓவராரக ஊதிவிட்டார். அழகிப் பட்டம் வென்ற அவர் தற்போது குண்டாக இருப்பதால் பட வாய்ப்புகள் வருவதில்லை. இதையடுத்து அவர் உடல் எடையைக் குறைக்க முட்டி மோதியும் ஒன்றும் நடக்கவில்லை. எனவே அவர் கொழுப்பை குறைத்து சிக்கென்று ஆக அமெரிக்காவுக்கு செல்கிறாராம்.

அந்த நடிகை கோலிவுட் ரசிகர்களை அன்பாக 'ம' என்ற எழுத்தில் துவங்கும் நான்கு எழுத்து வார்த்தையை வைத்து தான் அழைப்பார்.

 

வாகை சூட வா படத்துக்கு புதுவை அரசின் விருது!

புதுச்சேரி: சற்குணம் இயக்கத்தில் வெளியான வாகை சூட வா படத்துக்கு 2012-ம் ஆண்டிற்கான புதுவை அரசின் சிறந்த படத்துக்கான விருது வழங்கப்படுகிறது,

நாளை புதுவையில் நடக்கும் விழாவில் வெள்ளி நினைவுப் பரிசும் ரூ 1 லட்சம் ரொக்கமும் வழங்கப்படுகிறது.

வாகை சூட வா படத்துக்கு புதுவை அரசின் விருது!

மத்திய அரசின் தகவல் ஒலிபரப்பு அமைச்சகமும், புதுவை மாநில அரசும், அல்லயன்ஸ் பிரான்சேஸும் இணைந்து நடத்தும் இந்தியத் திரைப்பட விழா 2013 நாளை புதுச்சேரி தட்டாஞ்சாவடியில் நடக்கிறது.

முருகா திரையரங்கில் நடக்கும் இந்த நிகழ்ச்சிக்கு மாநில முதல்வர் என் ரங்கசாமி தலைமை ஏற்றுத் தொடங்கி வைக்கிறார்.

இந்த விழாவில் சிறந்த தமிழ் திரைப்படத்துக்கான விருது சற்குணம் இயக்கிய வாகை சூட வா படத்துக்குத்து தரப்படுகிறது.

வாகை சூட வா படத்துக்கு புதுவை அரசின் விருது!

ஒரு வெள்ளி நினைவுப் பரிசும், ரூ 1 லட்சம் ரொக்கப் பரிசும் இந்தப் படத்துக்கு தரப்படுகிறது. விழாவில் இயக்குநர் சற்குணம் கலந்து கொண்டு விருதினைப் பெறுகிறார்.

ஏற்கெனவே மத்திய அரசு, தமிழக அரசு மற்றும் பல்வேறு சர்வதேச திரைப்பட விழா விருதுகளை வாகை சூட வா வென்றுள்ளது.

 

சோதனை மேல் சோதனை... ரிசர்வேஷன் ரத்து... நாளை வெளிவருமா மதகஜராஜா?

தொடர் பிரச்சினைகள் காரணமாக விஷால் நடிப்பில் நாளை வரவிருந்த மதகஜராஜா மேலும் தள்ளிப் போகும் சூழல் உருவாகியுள்ளது. மல்டிப்ளெக்ஸ் அரங்குகள் டிக்கெட் முன்பதிவையும் ரத்து செய்வதாக அறிவித்துள்ளன.

விஷால் - அஞ்சலி - வரலட்சுமி - சந்தானம் நடிப்பில், சுந்தர் சி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் மதஜகராஜா.

இந்தப் படத்தை ஜெமினி பிலிம் சர்க்யூட் நிறுவனம் தயாரித்தது. படம் முடிந்து பல மாதங்களாகியும் வெளியிட முடியாத நிலை. காரணம், ஜெமினி நிறுவனம் இதற்கு முன் வெளியிட்ட படங்களில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக இந்தப் படத்தை வெளியிட முடியாது என விநியோகஸ்தர்களும் தியேட்டர் உரிமையாளர்களும் கூறிவிட்டனர்.

சோதனை மேல் சோதனை... ரிசர்வேஷன் ரத்து... நாளை வெளிவருமா மதகஜராஜா?

இந்த நிலையில் படத்தை நடிகர் விஷாலே வாங்கி வெளியிடத் தயாரானார். நாளை உலகம் முழுவதும் 800 பிரிண்டுகள் வரை படத்தை வெளியிடப் போவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், மதகஜராஜாவுக்கு பைனான்ஸ் செய்தவர்கள், உடனே பணத்தை செட்டில் செய்யுமாறு விஷாலை நிர்பந்திக்க ஆரம்பித்துள்ளனர். பணம் தராவிட்டால் படத்தை வெளியிட விட மாட்டோம் என்று உறுதியாகக் கூறிவிட்டதால், படம் நாளை வெளியாகுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

மேலும் இந்தப் படம் வெளியாகவிருந்த திரையரங்குகளில் முன்பதிவையும் நேற்று மாலை நிறுத்திவிட்டனர்.

 

சுட்டுக் கொன்றுவிடுவேன்: ஸ்ரீதேவியின் கணவருக்கு மிரட்டல்

மும்பை: பாலிவுட் தயாரிப்பாளரும், நடிகை ஸ்ரீதேவியின் கணவருமான போனி கபூருக்கு போன் மூலம் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

மும்பையில் உள்ள பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூரின் வீட்டில் கடந்த ஆண்டு ரூ.6 லட்சம் மதிப்புள்ள விலை உயர்ந்த பொருட்கள் திருடு போனது. இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் 2 பேரை கைது செய்தனர்.

சுட்டுக் கொன்றுவிடுவேன்: ஸ்ரீதேவியின் கணவருக்கு மிரட்டல்

இந்நிலையில் போனி கபூருக்கு யாரோ போன் செய்து கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். அந்த மர்ம நபர் போனில் கூறுகையில், நீ என் ஆட்களை கைது செய்ய வைத்துவிட்டாய். அதற்கான பின்விளைவுகளை நீ சந்திக்க வேண்டும். உன்னை உன் வீட்டில் வைத்தே சுடுவேன் என்று தெரிவித்துள்ளார்.

இது குறித்து மும்பை ஓஷிவாரா காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் ரவுடி ரவி பூஜாரியின் கும்பலைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும் என்று போலீசார் தெரிவித்தனர். மேலும் போனி கபூருக்கு கொலை மிரட்டல் விடுத்து வந்த அழைப்புகளில் பேசிய நபரின் குரல் ரவியுடையது போன்று உள்ளது என்று அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

இந்நிலையில் போனி கபூர் வீடு உள்ள பகுதியில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

 

தங்க மீன்கள் - விமர்சனம்

Rating:
2.5/5

எஸ் ஷங்கர்

நடிப்பு: ராம், பேபி சாதனா, பூ ராம், ஷெல்லி கிஷோர், ரோகிணி
ஒளிப்பதிவு: அர்பிந்து சாரா
இசை: யுவன் சங்கர் ராஜா
மக்கள் தொடர்பு: நிகில்
தயாரிப்பு: போட்டான் கதாஸ்
எழுத்து - இயக்கம்: ராம்

வாழ்க்கையில் சில விஷயங்களைக் கொண்டாடிக் கொண்டிருப்பதில்லை மனித இனம். பூவின் வாசம், மழையின் மகத்துவம் மாதிரிதான் சில மனித உறவுகளும். அவை இயற்கையானவை. அதை ரொம்பவே மிகைப்படுத்தி முக்கியத்துவம் தரும்போது செயற்கைத்தனம் எட்டிப் பார்ப்பதை உணரலாம்!

தங்க மீன்களுக்கு வந்த பிரச்சினை இதுதான். இது நல்ல படமா... மகள் மீது பாசம் என்ற பெயரில் இப்படி கண்மூடித்தனமாக நடந்து கொள்வாரா ஒரு ஏழை அப்பா? 'மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டுமே தெரியும் முத்தம் காமத்தில் சேர்ந்ததில்லை என்பது' என்ற அபத்த வசனத்துக்கும் இந்தப் படத்துக்கும் என்ன தொடர்பு..? இந்த வார்த்தைகளை வலிந்து திணிக்க வேண்டிய அவசியம், பார்வையாளர்களுக்கு ஒரு அதிர்ச்சி விளம்பரம் வேண்டும் என்பதற்காகவா? முத்தம் என்பது ஒரு உணர்வு.. மகளே பெறாத தந்தையாக இருந்தாலும், அடுத்தவர் பெண் குழந்தையை தான் பெற்ற குழந்தையாகவே பாவித்துக் கொஞ்சுவதும் முத்தமிடுவதும் இயல்பு. இதற்கு ஏன் இத்தனை வன்மம் தொனிக்கும் வசனம்?

தங்க மீன்கள் - விமர்சனம்

மகள் மீது ஏகத்துக்கும் பாசம் கொண்ட, மகளை அருகிலிருந்து பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே உள்ளூரில் கிடைத்த ஈயம் பூசும் வேலையை கம்மியான சம்பளத்துக்குப் பார்க்கும் அப்பா கல்யாணி (ராம்), தந்தை மீது அளவற்ற பாசம் வைத்த, தந்தையின் பணப் பிரச்சினைகளுக்கு தானே காரணம் எனப் புரிந்து குளத்தில் மூழ்கி தங்கமீனாய்ப் போகவும் தயாராகும் மகள் செல்லம்மா... இந்த இருவரின் வாழ்க்கைச் சம்பவங்கள்தான் தங்க மீன்கள்.

ஏழைத் தந்தையின் பொருளாதார நெருக்கடி, தனியார் பள்ளிகளின் கொடுமை, அரசுப் பள்ளிகளின் மகத்துவம், மகள் மீது அப்பாவுக்கு மட்டுமே உள்ள அளவில்லாத பாசம் என அங்கேயும் இங்கேயுமாக அலைகிறது ராமின் திரைக்கதை. பல காட்சிகளில் செயற்கைத் தனமும், வேண்டுமென்றே திணிக்கப்பட்ட உணர்வும் மேலோங்குகிறது. சாப்ட்வேர் நிறுவனங்களைச் சாடும் காட்சி, கற்றது தமிழின் நீட்சி.

தங்க மீன்கள் - விமர்சனம்

உதாரணத்துக்கு அந்த வோடபோன் நாய்க்குட்டிக்காக ராம் படும் பாடு. 'அய்யோ போதும்யா.. சீக்கிரம் நாயை வாங்கிக் குடுத்துத் தொலை' என்று சவுண்ட் விடும் அளவுக்கு மகா செயற்கை. அதுவும் அந்த லேப்டாப்பை பிடுங்கிக் கொண்டு அடிவாங்கும் ராமின் செயலை என்னவென்று நியாயப்படுத்துவது? அங்கே அவர் தந்தையாக இல்லை. ஒரு வித மனநிலை பிறழ்ச்சியுள்ள கிறுக்கனாகவே தெரிகிறார்!

தந்தைக்கும் மகனுக்கும் அப்படி என்ன ஈகோ? பள்ளிக் கட்டணம் கட்ட எவரெவரிடமோ கையேந்தும் ராம், வசதியான சொந்தத் தந்தை தர முன்வரும் பணத்தைப் பெற மறுப்பது ஏன் என்பதற்கான விளக்கம் படத்தில் கடைசி வரை சொல்லப்படவில்லை.

தங்க மீன்கள் - விமர்சனம்

அதனால்தான், 'கல்யாணி, அதான் உன் பெண்ணுக்குத்தான் ஒரு அம்மா இருக்காளேடா.. நீ வேற எதுக்கு இன்னொரு அம்மா மாதிரி உன் பொண்ணு பின்னாலயே சுத்தற... போய் வேல வெட்டி பார்த்து நாலு காசு சம்பாதிச்சு எல்லோரும் மதிக்கிற மாதிரி நடந்துக்க," என ராமின் அப்பா திட்டும்போது கைத்தட்டல்களைக் கேட்க முடிகிறது.

இயக்குநர் ராம் படமெடுத்திருப்பது 2013-ல். ஆனால் படத்தில் அவர் பெறும் சம்பளம் எண்பதுகளின் ஆரம்பத்தில் வந்த வறுமையின் நிறம் சிவப்பை நினைவுபடுத்துகிறது. கேரளாவுக்கு சம்பாதிக்கப் போகிறார். அட அங்கும் நான்காயிரத்தைத் தாண்டவில்லை சம்பளம்!

மக்கள் நடமாட்டம் உள்ள தெரு அல்லது சாலைகளிலேயே குழந்தைகளை தனியாக அனுப்ப ஆயிரம் யோசனை செய்கிறார்கள். ஆனால் மகளைப் பார்த்துப் பார்த்து வளர்க்கும் ராமும் அவர் குடும்பமும் அவளை இஷ்டத்துக்கு விடுகிறார்கள். அவளோ தங்க மீன்கள் பார்க்கப் போறேன் என ஆபத்தான குளத்தில் இறங்கிவிடுகிறாள். இவர்களோ அடிக்கடி செல்லம்மாவைக் காணோம் என்கிறார்கள், க்ளைமாக்ஸ் வரை!

தங்க மீன்கள் - விமர்சனம்

மகளை இப்படி நேசிக்கிறார்.. முகத்தோடு முகம் வைத்து கொஞ்சுகிறார்... குறைந்தபட்சம் அந்த 'தம்'மையாவது விட்டுத் தொலைத்திருக்கலாம்.

பெரும்பாலான தனியார் பள்ளிகளில் இந்தப் படத்தில் காட்டப்பட்டுள்ளதுதான் உண்மை நிலை என்பதை மறுப்பதற்கில்லை. ராம் மாதிரியான பெற்றோர்கள் அரசுப் பள்ளிகள் பக்கம் பார்வையைத் திருப்பினால், மீண்டும் எழுபது, எண்பதுகளில் இருந்த தரம் அரசுப் பள்ளிகளுக்குத் திரும்பும்.

திரைக்கதையில் இத்தனை சொதப்பல்கள் இருந்தாலும் சில காட்சிகள் உண்மையிலேயே நெகிழ வைக்கின்றன. உதாரணம், அந்த டபியுள்யூ கற்றுத் தரும் காட்சி. எத்தனை எளிமையான விளக்கம் அது. ஆனால் அதை இரண்டாம் வகுப்புப் பெண்ணுக்குக் கற்றுத் தருவதாக வருவதுதான் உறுத்தல். அதற்கு முன் ப்ரீ கேஜி, எல்கேஜி, யூகேஜி, முதல் வகுப்பு என நான்கு ஆண்டுகள் படித்திருப்பாளே... அப்போது கற்கவில்லையா இந்த டபிள்யூவை?

மனதில் சுற்றிச் சுழன்றடிக்கும் அருமையான இசை... அதுவும் அந்த ஆனந்த யாழை.. பாடல், கண்களை விட்டு அகல மறுக்கும் ஒளிப்பதிவு நேர்த்தி போன்றவற்றவற்றுக்குச் சொந்தக்காரர்களான யுவனையும் அரபிந்து சாராவையும் எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம்.

கல்யாணியாக வரும் ராமும், செல்லம்மாவாக வரும் பேபி சாதனாவும் நன்றாகத்தான் நடித்திருக்கிறார்கள். ஆனால் சில காட்சிகளில் இருவருமே செயற்கைத்தனம் அல்லது மிகை நடிப்பைக் காட்டியிருப்பதால் மனதில் ஒட்ட மறுக்கிறார்கள். குழந்தைத்தனத்தைக் காட்டுவதாகக் கூறி எரிச்சல்படுத்துகிறார்கள் (குழந்தைகளின் எல்லா குழந்தைத்தனங்களையும் பெற்றோரால் ரசிக்க முடிவதில்லை என்பதும் உண்மைதானே!).

தங்க மீன்கள் - விமர்சனம்

ராமின் மனைவியாக வரும் ஷெல்லி கிஷோருக்கு வெகு இயல்பான வேடம். அவரும் உணர்ந்து நடித்திருக்கிறார். தந்தையாக வரும் பூ ராம் இன்னொரு சிறப்பான தேர்வு. படத்தில் மருந்துக்கும் நகைச்சுவை இல்லாமல் பார்த்துக் கொண்டிருக்கிறார் இயக்குநர்.

தங்க மீன்களை நிச்சயம் ஒரு முறை பார்க்கத்தான் வேண்டும், ஒரு தந்தை தன் மகளை எப்படி வளர்க்கக் கூடாது என்பதை உணர்ந்து கொள்ள!

 

'மதகஜராஜா' விஷால் மருத்துவமனையில் அனுமதி

'மதகஜராஜா' விஷால் மருத்துவமனையில் அனுமதி

சென்னை: உடல் நலக்குறைவு காரணமாக நடிகர் விஷால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சுந்தர் சி இயக்கத்தில் விஷால் நடித்துள்ள மதகஜராஜா படம் நாளை ரிலீஸாகவிருக்கிறது. இந்த படத்தை தமிழகத்தில் விஷாலே வெளியிடுகிறார். இந்த படத்தில் வரலட்சுமி சரத்குமார், அஞ்சலி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

விஷால் பிலிம் பேக்டரி படத்தை வெளியிடுகிறது. இதையடுத்து படத்தை வெளியிடும் வேலைகளில் விஷால் ஈடுபட்டிருந்தார். இந்நிலையில் அவருக்கு திடீர் என்று ரத்த அழுத்தம் குறைந்துவிட்டது. இதையடுத்து அவர் அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

மதகஜராஜா படத்தின் இடையே விஷால் நடிக்கும் பாண்டிய நாடு படத்தின் டீஸரை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.