வாக்கிங் போனபோது துணை நடிகருக்கு மாரடைப்பு... மரணம்

பல்வேறு படங்கள் மற்றும் டிவி தொடர்களில் நடித்துள்ள மனோகரன் என்பவர் வாக்கிங் போனபோது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்து மரணமடைந்தார்.

சகுனி உள்ளிட்ட படங்களில் போலீஸ்காரராக நடித்துள்ளார் மனோகரன். டிவி தொடர்களிலும் நடித்து வந்தார். இவருக்கு வயது 62. இவர் நேற்று காலை வாக்கிங் போனார். நந்தனம் பகுதியில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் வாக்கிங் போய்க் கொண்டிருந்தபோது திடீரென அவருக்கு நெஞ்சு வலித்துள்ளது. சம்பவ இடத்திலேயே அவர் மயங்கி விழுந்தார். இதைப் பார்த்தவர்கள் உடனடியாக 108 ஆம்புலன்ஸுக்குப் போன் செய்தனர். அவர்கள் வந்து ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

அங்கு அவரைப் பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே மனோகரன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். மறைந்த மனோகரனுக்கு மனைவி, 2 மகன்கள் உள்ளனர்.

மனோகரன் உடலுக்கு திரையுலகினர் அஞ்சலி செலுத்தினர். மனோகரனின் சொந்த ஊர் ராமநாதபுரம் ஆகும்.

 

'துப்பாக்கி'யால் சர்ச்சை.. விஜய் வீட்டுக்குப் பாதுகாப்பு!

Security Beefed Up Vijay S House

சென்னை: துப்பாக்கி படத்தில் முஸ்லீம்களை விமர்சித்திருப்பதாக சர்ச்சை வெடித்துள்ளது. இதையடுத்து நடிகர் விஜய்யின் வீட்டுக்குப் போலீஸ் பாதுகாப்புபோடப்பட்டுள்ளது.

விஜய் நடித்துள்ள துப்பாக்கி திரைப்படம் தீபாவளிக்கு திரைக்கு வந்தது. தமிழகம் முழுவதும் ஓடிக் கொண்டிருக்கிறது. படம் நன்றாக இருப்பதாக பாசிட்டிவான ரிசல்ட் வர ஆரம்பித்துள்ள நிலையில் புதிய சர்ச்சை வெடித்துள்ளது.

மும்பை தீவிரவாத சதிச் சம்பவப் பின்னணியில் இப்படத்தின் கதை அமைந்துள்ளது. இந்த நிலையில் முஸ்லீம்களை விமர்சிப்பது போல இப்படம் உள்ளதாக தேசிய லீக் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சர்ச்சைக்குரிய காட்சிகளை படத்திலிருந்து நீக்க வேண்டும் என்றும் அது கூறியுள்ளது. மேலும் பல்வேறு முஸ்லீம் அமைப்புகள் இணைந்து விஜய் வீட்டு முன்பு போராட்டம் நடத்தலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதையடுத்து விஜய் தனது மனைவி குழந்தைகளுடன் வசித்து வரும் நீலாங்கரை வீட்டுக்கும், அவரது பெற்றோர் வசித்து வரும் வீட்டிற்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

 

விஜய் எனக்கு தங்க மகன்தான் : ஷோபா சந்திரசேகர்

Thanga Magan Vijay Shoba Chandrasekar

விஜய் எனக்கு தங்கமகன்தான் என்று அவருடைய தாயார் ஷோபா சந்திரசேகர் பெருமிதத்துடன் குறிப்பிட்டார். தீபாவளி தினத்தில் ஒளிபரப்பான தங்கமகன் விஜய் சிறப்பு நிகழ்ச்சியில் விஜய் பற்றிய தன்னுடைய சொந்தக் கருத்துக்களை ரசிகர்களிடையே பகிர்ந்து கொண்டார் ஷோபா.

விஜய் ஒரு நடிகர் என்பது தெரியும். அவருடைய பெர்சனல் பக்கங்களை அவருடைய நண்பர்கள், அவரை இயக்கிய இயக்குநர்கள் கூறுவதை விட விஜய்யின் அம்மாவே சொன்னால் எப்படி இருக்கும் என்று விஜய் டிவி நிகழ்ச்சித் தயாரிப்பாளர்கள் யோசித்திருப்பார்கள் போல அதுதான் தங்க மகன் விஜய்' ஆக மாறியது. விஜய் சிறுவயதில் செய்த குறும்புகள். தங்கையின் மறைவிற்குப் பின்னர் அதற்கு நேர் எதிராக அமைதியாக மாறியது என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பகிர்ந்து கொண்டார்.

விஜய்யின் நடிக்கும் ஆர்வம், பாடும் ஆர்வம் ஒவ்வொன்றும் தானாக படிப்படியாக வளர்ந்து வந்ததாக கூறினார். நாளைய தீர்ப்பில் தொடங்கி துப்பாக்கி வரை ஒவ்வொரு திரைப்படத்திலும் தன்னுடைய நடிப்புத் திறனையும், பாடும் திறனையும் வளர்த்துக்கொண்டதாக கூறினார்.

விஜய் நடனமாடினால் அதில் நுணுக்கம் இருக்கும் என்று கூறிய ஷோபா, திருமலை படத்தில் நடன இயக்குநர் ராகவா லாரான்ஸ் உடன் இணைந்து அவருக்கு ஈடு கொடுத்து ஆட விஜய் முயற்சி செய்திருப்பார் என்றும் தெரிவித்தார்.

தங்கமகன் என்பது தலைப்புக்காக வைத்தது மட்டுமல்ல விஜய் நிஜமாகவே எனக்குத் தங்கமகன்தான் என்றும் பெருமிதத்தோடு கூறினார் ஷோபா சந்திரசேகர்.

 

எனக்கு பாய் பிரண்ட் ஜாஸ்தி, நான் எப்படி ஆண்களை கேவலமாகப் பேசுவேன்...சோனா

Sona Refutes Her Comment On Men

சென்னை: எனக்கு இருப்பதெல்லாம் ஆண் நண்பர்கள்தான். என்னைச் சுற்றிலும் 99 சதவீதம் பேர் ஆண்கள்தான். அப்படி இருக்கையில், நான் எப்படி ஆண்களைக் கேவலப்படுத்தி பேசுவேன் என்று கேட்டுள்ளார் கவர்ச்சி நடிகை சோனா.

கவர்ச்சி நடிகை சோனா அளித்த ஒரு பேட்டியில் ஆண்கள் எல்லாம் டிஷூ பேப்பர் போன்றவர்கள் என்றும் பல்வேறு விதமாக விமர்சித்தும் கூறியிருந்தார். இதற்கு தமிழ்நாடு ஆண்கள் நலச் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மேலும் போராட்ட அறிவிப்பையும் வெளியிட்டது. இதையடுத்து சோனாவின் ஆபீஸ், வீடு ஆகியவற்றுக்கு போலீஸ் பாதுகாப்பு போட்டு விட்டார்கள்.

இந்த நிலையில் தான் அப்படியெல்லாம் பேசவில்லை என்று சோனா மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், நான் ஆண்களைத் தவறாகப் பேசவில்லை. நான் சொல்லாததையெல்லாம் பேசியதாக கூறி தவறாக செய்தி போட்டுள்ளனர்.

எனக்கு 99 சதவீத நண்பர்கள் ஆண்கள்தான். அப்படி இருக்கும்போது நான் எப்படி ஆண்களைக் கேவலப்படுத்திப் பேச முடியும். எனக்கு ஆண்கள் மீது எப்போதும் தனி மரியாதை உண்டு.

அதேசமயம், நான் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்று சொல்லி வருவது உண்மைதான். அது எனது தனிப்பட்ட விஷயம், அதை யாரும் கேட்க முடியாது என்றார் சோனா.

பரவாயில்லை, எப்படிப் பேசினாலும் பப்ளிசிட்டிதானே...!

 

துப்பாக்கி - விமர்சனம்

-எஸ் ஷங்கர்

நடிப்பு: விஜய், காஜல் அகர்வால், சத்யன், ஜெய்ராம், வித்யூத் ஜம்வால்
ஒளிப்பதிவு: சந்தோஷ் சிவன்
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
தயாரிப்பு: கலைப்புலி தாணு

எழுத்து, இயக்கம்: ஏ ஆர் முருகதாஸ்

ஆக்ஷன் படங்கள் என்றால் லாஜிக் பார்க்கக் கூடாது என்பது கோடம்பாக்கத்தின் எழுதப்படாத விதி. துப்பாக்கியும் அதற்கு விலக்கில்லை. ஆனால் அதையெல்லாம் தாண்டி பார்க்கும்படி ஒரு பக்கா ஆக்ஷன் மசாலா தந்திருக்கிறார் இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ். அந்த வகையில் இந்த ஆண்டு பெரிய பட்ஜெட் படங்களின் தொடர் வீழ்ச்சிக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது துப்பாக்கி.

tuppakki review   
Close
 
படத்தின் கதையை விலாவாரியாக சொல்வது, படத்தை ரசிக்க முடியாமல் செய்துவிடும். ஆனாலும் ஒன்லைனை மட்டும் 'சில லைன்களில்' சொல்லிவிடுகிறோம்.

மிலிட்டரியிலிருந்து 40 நாட்கள் லீவில், யூனிபார்மைக் கூட கழட்டாமலேயே வருகிறார் மும்பைத் தமிழன் விஜய். அதே யூனிபார்முடன் காஜலை பெண்பார்க்கப் போகிறார். ஒரு பஸ்ஸில் குண்டு வெடிக்கிறது. அப்போது பிக்பாக்கெட் ஒருவனைப் பிடிக்கிறார் விஜய். அந்த நேரத்தில் இன்னொருவன் சம்பந்தமே இல்லாமல் ஓட, விஜய் அவனைத் துரத்திப் பிடித்து விசாரிக்கும்போதுதான் மிகப் பெரிய தீவிரவாத நெட்வொர்க் தெரிகிறது.

தீவிரவாதிகள் 12 இடங்களில் குண்டு வைக்கத் திட்டமிட்டிருப்பது தெரிந்த விஜய், கையில் கிடைத்த தீவிரவாதியை தப்பிக்க விட்டு, தீவிரவாதிகளின் தலைமையை அழிக்க முயல்வதும், அந்த தலைமை விஜய்யை அழிக்க முயல்வதும், இதில் யார் ஜெயிக்கிறார்கள் என்பதும்தான் கதை.

பழைய எம்ஜிஆர் பாணி கதைதான் என்றாலும் அதை முருகதாஸ் கையாண்ட விதம் ரசிகர்கள் தன்னை மறந்து பல காட்சிகளில் கைத்தட்ட வைக்கிறது.

போலீஸ் வேடமே விஜய்க்குப் பொருந்தவில்லை... இதில் மிலிட்டரி ஆபீசர் கெட்டப் எப்படியோ.. என்ற யோசனையோடு உட்கார்ந்தால்.. அட.. அசத்தலாகப் பொருந்துகிறது!

பஞ்ச் வசனங்கள் குறைத்து, லொட லொட சவால் பேச்சுக்களைத் தவிர்த்து அடக்கி வாசிக்கிறார் விஜய். பார்க்கவே ரொம்ப நல்லாருக்கு... துப்பாக்கி வெற்றிக்குப் பிறகும் இந்த அடக்கம் தொடர்ந்தால் இன்னும் நல்லாருக்கும்!

காஜல் அகர்வால் கண்ணுக்கு லட்சணமாக வந்து போகிறார். அவர் வேலை பாட்டுக்கு டான்ஸ் ஆடுவதும், தீவிரவாதம் போரடிக்கும் போது விஜய்யுடன் ரொமான்ஸ் பண்ணுவதும்தான். அதை பக்காவாக செய்கிறார்.

சத்யன், ஜெய்ராம் காட்சிகள் சமயத்தில் ஜோர்... கொஞ்சம் போர்!

வில்லன் வித்யூத் ஜம்வாலுக்கு கொடுத்த முக்கியத்துவம் ஹீரோவை இன்னும் ஒருபடி உயர்த்திப் பிடிக்கிறது.

ஆக்ஷன் காட்சிகளை எப்படி எடுக்க வேண்டும் என்பதற்கு ஒரு நல்ல உதாரணம், தீவிரவாதிகளால் விஜய் அண்ட் கோவின் தங்கைகள் கடத்தப்பட அதை விஜய் கண்டுபிடிக்கும் காட்சிகள்!

12 தீவிரவாதிகளையும் தீர்த்துக்கட்ட விஜய் போடும் பிளான்.. அக்மார்க் மாஸ்டர் ப்ளான்...

படத்தில் லாஜிக் மிஸ்டேக் என்று பார்த்தால் ஏகப்பட்டதைச் சொல்லமுடியும். ஆனால் அதை மட்டுமே மனதில் வைத்துக்கொண்டு தியேட்டருக்குப் போனால் எந்தப் படத்தையும் ரசிக்க முடியாதுதான். முக்கியமாக துப்பாக்கியின் வேகம், விறுவிறுப்பு, சுவாரஸ்யத்துக்காக... குறைகளை மன்னிக்கலாம்!

ஆனால் ஒருவருக்கு மட்டும் மன்னிப்பே கிடையாது. அவர் ஹார்ரிபிள் ஹாரிஸ் ஜெயராஜ். தன்னிடம் உள்ள ஒரு டடஜன் ட்யூன்களையே இன்னும் எத்தனைப் படங்களுக்கு உல்டா பண்ணிக் கொண்டிருப்பாரோ...

சந்தோஷ் சிவனுக்கு சவால்கள் ஏதுமில்லை.

கஜினியில் விஸ்வரூபமெடுத்து, ஏழாம் அறிவில் சிறுத்துப் போன முருகதாஸ்... மீண்டும் தன்னை நிரூபித்திருக்கிறார். இந்த வெற்றி அவரையும் ஹீரோ விஜய்யையும் அதிகம் பேச வைக்காமல் இருக்கக் கடவது!

துப்பாக்கி.. அதிர்வெடி!