தனுஷே எழுதிப் பாடிய '3' பாட்டு 'லீக்' ஆயிருச்சு!


தனுஷ், ஸ்ருதி ஹாசன் இணைந்து நடிக்க, ஐஸ்வர்யா தனுஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள 3 படத்தின் பாடல் இன்டர்நெட்டில் லீக் ஆகி விட்டதாம். அந்தப் பாடலை தனுஷே எழுதிப் பாடியதாம்.

அனிருத் என்ற புதுமுக இசையமைப்பாளர்தான் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். இந்தப் பாடல் தமிழ் மற்றும் ஆங்கில வரிகளைக் கொண்டது, இளைஞர்களைக் குறி வைத்து எழுதப்பட்ட பாடலாம்.

இந்தப் பாடல் இன்டர்நெட்டில் வெளியாகி விட்டதால், இந்தப் பாடலை மட்டும் தனி ஆடியோவாக வெளியிட தீர்மானித்துள்ளனராம். சமீப காலமாக இப்படி ஒரே ஒரு பாடலை மட்டும் சிங்கிள் டிராக் ஆக வெளியிடும் ஸ்டைல் அதிகரித்து வருகிறது. அஜீத்தின் மங்காத்தா சிங்கிள் பாடல் ஹிட் ஆன பின்னர் அதே பாணியை எல்லோரும் காப்பி அடிக்க ஆரம்பித்துள்ளனர்.

கமல் மகளும், ரஜினி மகளும் இணைந்து பணியாற்றும் படம் என்பதால் இந்தப் படத்திற்கு பெரும் கிராக்கியும், எதிர்பார்ப்பும் உள்ளது. இப்போது பாட்டு லீக் ஆகி விட்டதால் படம் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

அப்பாக்கள் பெயரை பிள்ளைகள் காப்பாற்றுவார்களா என்பது படம் வந்த பிறகு தெரியும்.
 

'கண்டாங்கி'ச் சேலையில் கலக்கப் போகும் நமீதா!


நமீதாவைப் பார்த்து பல நாட்களாகி விட்டதே என்று ஏங்கிக் கொண்டிருக்கும் ரசிகர்களுக்கு ஒரு நற்செய்தி. புதுப் படம் ஒன்றில் புக் ஆகியுள்ளார் நமீதா - ஆனால் தமிழில் அல்ல, தெலுங்கில்.

ரமணா மோகிலியின் இயக்கத்தில் ஸ்ரீனிவாஸ் தயாரிப்பில் உருவாகும் புதிய படத்தில் நமீதா நடிக்கிறார். இதற்கான பூஜையை சமீபத்தில் ஹைதராபாத்தில் போட்டனர். அதில் நமீதா வழக்கம் போல 'உடை பாதி, உடல் மீதி' என்ற ரேஞ்சுக்கு கவர்ச்சிகரமாக வந்திருந்தார்.

இப்படத்தில் கிராமத்து பெண் வேடத்தில் வருகிறாராம் நமீதா. இதன் மூலம் கிராமத்து சேலைக்கட்டில் ஜில்லென்று தோன்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நிகழ்ச்சியின்போது நமீதா பேசுகையில், எனக்கு இந்தக் கதையை இயக்குநர் சொன்னபோதே பிடித்துப் போய் விட்டது. இதுவரை கவர்ச்சி பாத்திரங்கள், போலீஸ் என்று நான் செய்துள்ளேன். ஆனால் இந்தப்படத்தில்தான் கிராமத்து பெண் வேடத்தில் வரப் போகிறேன். என்னைச் சுற்றி நடப்பது போல கதையை வைத்துள்ளனர். பெண்களுக்கான படம் இது. ஆக்ஷனும் படத்தில் உண்டு.

எனது திறமையை முழுமையாக வெளிக் கொணரும் வகையிலான கதை இது என்பதால் மிகவும் ஆர்வமாக இருக்கிறேன் என்றார்.

இந்தப் படத்தை தெலுங்கில் எடுத்தாலும் கூட தமிழிலும் டப் செய்து வெளியிடுவார்கள் என்று நம்புவோமாக...!
 

மயக்கம் என்ன ரிலீஸ் தேதியில் மாற்றமில்லை- தயாரிப்பாளர் அறிவிப்பு


மயக்கம் என்ன ரிலீஸ் தேதியில் மாற்றமில்லை என்றும், முன்பு அறிவித்தபடி நவம்பர் 25-ம் தேதியே வெளியாகும் என்றும் படத்தின் தயாரிப்பாளர் அறிவித்துள்ளார்.

தீபாவளிக்கு வெளியாவதாக அறிவிக்கப்பட்ட மயக்கம் என்ன படம், பல்வேறு காரணங்களால் தள்ளிப் போடப்பட்டது. இறுதியாக நவம்பர் 25-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.

பின்னர் வரும் டிசம்பர் 2-ம் தேதிக்கு தள்ளிப் போனதாக இயக்குநர் செல்வராகவன் ட்விட்டரில் கூறியிருந்த நிலையில், இப்போது மீண்டும் வெளியீட்டுத் தேதி நவம்பர் 25-தான் என தயாரிப்பாளர் அறிவித்துள்ளார்.

இப்படத்தில் தனுஷிற்கு ஜோடியாக தெலுங்கு நடிகை ரிச்சா கங்கோபாத்யாய் நடித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ் இசையில் அனைத்துப் பாடல்களையும் தனுஷ் மற்றும் செல்வராகவனும் இணைந்து எழுதியுள்ளனர்.
 

பாரதிராஜா - வைரமுத்து தொடங்கும் அல்லிநகர கல்வி அறக்கட்டளை!


இயக்குநர் பாரதிராஜாவும் கவிஞர் வைரமுத்துவும் தங்களின் சொந்த ஊர் மக்களின் கல்வி வளர்ச்சிக்காக புதிய கல்வி அறக்கட்டளை தொடங்குகிறார்கள்.

இந்தக் கட்டளைக்கு பாரதிராஜா - வைரமுத்து கல்வி அறக்கட்டளை என்று பெயர் சூட்டியுள்ளனர். தேனி மாவட்ட மக்களின் கல்வி வளர்ச்சிக்காக இந்த அறக்கட்டளை உதவும் என்று அறிவித்துள்ளனர்.

வியாழக்கிழமை அல்லி நகரம் வீரப்ப அய்யனார் கோயிலில் நடந்த பாரதி ராஜாவின் அன்னக்கொடியும் கொடிவீரனும் படத்தின் தொடக்க விழாவில் இந்த அறிவிப்பை இருவரும் வெளியிட்டனர்.

வைரமுத்து கூறுகையில், நாங்கள் பிறந்த இந்த மண்ணுக்கு ஏதாவது செய்தாக வேண்டும். அதற்காக பாரதிராஜா - வைரமுத்து கல்வி அறக்கட்டளையை ஆரம்பிக்க விரும்புகிறேன். இதற்கு ஆரம்ப நிதியாக நான் என் சொந்த பணத்திலிருந்து ரூ 5 லட்சம் தருகிறேன். மேலும் அன்னக்கொடியும் கொடிவீரனும் படத்துக்கு நான் பாடல் எழுத தரப்படும் சம்பளத்தையும் தருகிறேன்," என்றார்.

அடுத்துப் பேசிய பாரதிராஜா, தன் பங்குக்கு ரூ 10 லட்சத்தை இந்த அறக்கட்டளைக்கு தருவதாகக் கூறினார். ஆனால் வைரமுத்துவுக்கு சம்பளம் என எதுவும் தரமாட்டேன் என்றும், அவர் விலை மதிப்பில்லாதவர் என்பதால், அவர் பாடலுக்கு சம்பளமாக எதையும் நிர்ணயிக்க முடியாது என்றும் தெரிவித்தார்.

இந்த அறக்கட்டளைக்கு பாலு மகேந்திரா ரூ 10000-ஐ நன்கொடையாகத் தருவதாக அறிவித்தார்.
 

பொய் வழக்கு போட்டுட்டாங்க-நடிகர் ஜே.கே. ரித்தீஸ்


வேலூர்: அதிமுக ஆட்சியில் திமுகவினர் பொய் வழக்கு போடுவதாக நிலமோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட மக்களவை உறுப்பினர் ஜே.கே.ரித்திஸ் குமார் தெரிவித்துள்ளார். போலீசாரை கொண்டு பொய் வழக்கு போடுவதால் திமுகவினரை அடிபணிய வைக்க முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை அடுத்த மணக்குடி கிராமத்தை சேர்ந்தவர் ரித்தீஷ். சினிமா தயாரிப்பாளராகவும், நடிகராகவும் இருந்து வந்த அவர், கடந்த பாராளுமன்றத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதி மக்களவை உறுப்பினராக தேர்ந்து எடுக்கப்பட்டார். இந்த நிலையில் காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதுரை அடுத்த பாப்பாங்குழி கிராமத்தை சேர்ந்த சாமிக்கண்ணு என்ற விவசாயி ஜே.கே. ரித்தீஷ் மீது நிலம் அபகரிப்பு புகார் ஒன்றை கொடுத்துள்ளார்.

இதனையடுத்து காஞ்சீபுரம் மாவட்ட போலீசாரும், நில அபகரிப்பு விசாரணை பிரிவு போலீசாரும் புதன்கிழமை அதிகாலை 4.30 மணிக்கு சென்னை மைலாப்பூரில் உள்ள வீட்டில் இருந்த ரித்தீஷை கைது செய்தனர்.

சிறையில் அடைப்பு

ரித்தீஷ் எம்.பி. மீது இந்திய தண்டனை (சட்டம் 465 போலி ஆவணம் தயாரித்து ஏமாற்றுதல்), 467 போலி ஆவணம் தயாரித்தல்), 468 (போலி ஆவணத்தை உண்மை என்று காட்டுதல், 471 (நம்பிக்கை மோசடி) 420 (மோசடி), 109 (குற்றச்செயல் புரிதல்) ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

விசாரணைக்குப்பின் பகல் 12 மணி அளவில் ஸ்ரீ பெரும்புதூர் மாவட்ட மாஜிதிரேட்டு கோர்ட்டில் ரித்தீஷ் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை வருகிற 30ந் தேதி வரை 15 நாட்கள் வேலூர் ஜெயிலில் காவலில் வைக்கும்படி மாஜிஸ் திரேட்டு அப்துல் மாலிக் உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து வேலூர் ஜெயிலுக்கு ரித்தீஷ் கொண்டு செல்லப்பட்டார். வேலூர் சிறை வாசலில் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது :

அதிமுக அரசு ஆட்சிக்கு வந்த 6 மாதத்தில் திமுக நண்பர்கள் பலரை கைது செய்துள்ளது. போலீசாரை கொண்டு பொய் வழக்கு போடுவதால் திமுகவினரை அடிபணிய வைக்க முடியாது. பொய் வழக்குகள் போடப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளவர்களில் நானும் ஒருவன். சட்டத்தின் முன் நின்று பொய் வழக்கை உடைத்து வெளியே வருவேன். திமுக தலைவருக்காக உயிரை கொடுக்கவும் தயாராக இருக்கிறேன் என்றார். இதன் பின்னர் அவர் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.
 

அனுஷ்கா வீட்டில் ஐடி ரெய்ட்?


ஹைதராபாத்: முன்னணி நடிகை அனுஷ்கா ஷெட்டியின் வீட்டில் வருமானவரித் துறையினர் சோதனை நடத்தியதாகத் தெரிகிறது.

தெலுங்கிலும், தமிழிலும் கொடி கெட்டிப் பறக்கும் நடிகை அனுஷ்கா. அம்மணியின் சம்பளத்தைக் கேட்டாலே ஆ என்று வாயைப் பிளக்க வேண்டும். இந்நிலையில் ஹைதராபாத்தில் ஜுபிளி ஹில்ஸில் உள்ள அனுஷ்கா வீட்டிற்கு நேற்று மதியம் 2 மணிக்கு வருமானவரித் துறையினர் வந்தனர். அவர்கள் சுமார் ஒரு மணி நேரம் அந்த வீட்டையே புரட்டிப் போட்டு சோதனை நடத்தினர்.

இந்த சோதனை நடந்தபோது அனுஷ்காவும், அவரது பெற்றோரும் வீட்டில் இருந்தனர். இந்த சோதனையின் போது ரொக்கம், வங்கி பாஸ்புக்குள் மற்றும் சில முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த ஆண்டு அனுஷ்கா வீட்டில் நடந்த இரண்டாவது வருமானவரி சோதனை இது என்பது குறிப்பிடத்தக்கது.

அனுஷ்காவின் மேனேஜர் ரகுவைத் தொடர்பு கொண்டு என்னப்பா வீட்டில் ரெய்டாமே என்று கேட்டதற்கு, அப்படி எல்லாம் ஒன்றும் நடக்கவில்லை. அனுஷ்கா பக்கத்து வீட்டில் கிரானைட் தொழில் அதிபர் உள்ளார். அவர் வீட்டில் தான் ரெய்டு நடந்தது என்று கூறினார்.
 

'போதிதர்மரை'க் குறி வைக்கும் ஆமீர்கான், சல்மான் கான்


ஏ.ஆர். முருகதாஸ் இயக்கிய ஏழாம் அறிவு படத்தை இந்தியில் ரீமேக் செய்ய ஆமீர் கானும், சல்மான் கானும் போட்டிப் போட்டுக் கொண்டிருக்கின்றனர்.

பாலிவுட்டில் பிரபலமாக உள்ள 3 கான்கள் அதாவது ஆமீர், சல்மான், ஷாருக்கிற்கு மத்தியில் எப்பொழுதும் போட்டி தான். அவர்கள் 3 பேருக்கும் தென்னிந்திய படங்கள் மீது புது ஆர்வம் வந்துள்ளது. ஏ.ஆர். முருகதாஸ் எடுத்த கஜினி படம் இந்திக்குப் போனது. அங்கு ஆமீர் கான் நடித்தார். அது சூப்பர், டூப்பர் ஹிட்டானது.

மலையாளம், தமிழில் வெற்றி பெற்ற பாடிகார்ட் படம் இந்தியில் சல்மான் நடிப்பில் ரீமேக்காகி பெரும் வெற்றி பெற்றது. அதேபோல சல்மான் நடிப்பில், டான்ஸ் மாஸ்டர், இயக்குனர் பிரபுதேவாவின் போக்கிரி இந்தியில் வாண்டட் என்ற பெயரில் எடுத்து வெற்றி கண்டார். தொய்ந்து போய்க் கிடந்த சல்மானுக்கு இந்த படம் புத்துயிர் அளித்தது என்று கூட சொல்லலாம்.

இப்படி தென்னிந்திய படங்கள் அதிலும் தமிழ் படங்களை இந்தியில் எடுக்க கான்கள் ஆர்வம் காட்டுகின்றனர். ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா, ஸ்ருதி நடித்த ஏழாம் அறிவைப் பார்த்த ஆமீரும், சல்மானும் அந்த படத்தின் உரிமையை எப்படியாவது வாங்கி நடித்துவிட வேண்டும் என்று நினைக்கின்றனர். யார் வாங்குகிறார்கள் என்று பார்ப்போம் என்பது போன்று இருவரும் போட்டி போடுகின்றனர்.

யார் போதி தர்மராகப் போவது என்று பொறுத்திருந்து பார்ப்போம்...!
 

3 படத்திலிருந்து அமலா பால் வெளியேறினாரா, வெளியேற்றப்பட்டாரா?


ஐஸ்வர்யா தனுஷ் இயக்கி வரும் 3 படத்தில் இருந்து அமலா பால் விலகியதற்கு காரணம் கால்ஷீட் பிரச்சனை என்று கூறப்பட்டது. ஆனால் அதை அமலா மறுத்துள்ளார்.

ஐஸ்வர்யா தனுஷ் இயக்கும் முதல் படமான 3ல் தனுஷ் ஜோடியாக ஸ்ருதி ஹாசன் நடிப்பார் என்று முதலில் அறிவிக்கப்பட்டது. ஆனால் ஸருதி பிற படங்களில் பிசியாக இருப்பதால் நடிக்க முடியவில்லை என்று கூறினார்கள். அதன் பிறகு ஸ்ருதிக்கு பதில் அமலா பால் நடிக்கிறார் என்று அறிவிப்பு வெளியானது. அமலா பாலும் கால்ஷீட் பிரச்சனையால் விலகினார் என்று செய்தி வந்தது.

பிறகு ஸ்ருதியே மீண்டும் நாயகியாக அறிவிக்கப்பட்டு படப்பிடிப்பும் நடந்து வருகிறது. மேலும் ஐஸ்வர்யா தனுஷ் டுவிட்டரில் ஸ்ருதியை வரவேற்று மெசேஜும் போட்டார்.

இந்நிலையில் தான் ஒன்றும் கால்ஷீட் பிரச்சனையால் 3 படத்தில் இருந்து வெளியேறவில்லை என்று அமலா பால் தெரிவித்துள்ளார். நான் ஒரே நேரத்தில் பல படங்களில் நடிப்பதில்லை. வேட்டை படத்திற்குப் பிறகு நான் வேறு எந்த படத்திற்கும் ஒப்புதல் அளிக்கவில்லை என்றார் அமலா.

3 படத்தை விட்டு வெளியேறியதை அமலா பால் மறுக்கிறார். அதே நேரத்தில் உண்மையான காரணத்தையும் அவர் சொல்ல மாட்டேன் என்கிறார். முடிந்து போன விஷயத்தைப் பற்றி பேசவிரும்பவில்லை என்று மழுப்புகிறார்.

வெளியேறவில்லை என்றால், வெளியேற்றப்பட்டாரா அமலா?
 

துபாய் போகும் ஆர்யா - அமலா பால்!


மாதவன், ஆர்யா, சமீரா ரெட்டி, அமலா பால் நடிக்கும் வேட்டை படத்தின் படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளது.

லிங்குசாமி இயக்க, அவரது சகோதரர் பொறுப்பில் உள்ள திருப்பதி பிரதர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தை யுடிவி நிறுவனம் வாங்கியுள்ளது.

தூத்துக்குடி, சாலக்குடி உள்ளிட்ட பகுதிகள் தொடர்ந்து 40 நாட்கள் படத்தின் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டன. இப்போது அடுத்த கட்ட படப்பிடிப்பை துபாயில் நடத்துகிறார் இயக்குநர் லிங்குசாமி. இங்கு ஆர்யா - அமலா நடிக்கும் பாடல் காட்சி ஒன்று படமாகிறது.

இன்னொரு பாடலுக்காக ரூ 60 லட்சம் செலவில் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் செட் போடப்பட்டு படமாக்கப்படுகிறது.

யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படத்தின் இசைவெளியீட்டு விழாவை வரும் டிசம்பர் 2-ம் வாரத்தில் நடத்த திட்டமிட்டுள்ளனர்.
 

அல்லி நகரம் அய்யனார் கோயிலில் இன்று அன்னக்கொடியும் கொடிவீரனும் துவக்கம்!


பாரதிராஜாவின் கனவுப் படம் என வர்ணிக்கப்படும் அன்னக்கொடியும் கொடிவீரனும் இன்று தேனி அல்லி நகரத்தில் தொடங்குகிறது.

பாரதிராஜாவின் குலதெய்வமான அய்யனார் கோயிலில் கிடாவெட்டி பொங்கல் வைத்து இந்த படத்தின் தொடக்கவிழாவை நடத்துகிறார் பாரதிராஜா.

பொம்மலாட்டம் படத்துக்குப் பிறகு பாரதிராஜா இயக்கும் இந்தப் படத்தில், இயக்குநர் அமீர் நாயகனாக நடிக்கிறார். இனியா, கார்த்திகா இருவரும் நாயகிகளாக நடிக்கின்றனர்.

ஜீவி பிரகாஷ்குமார் இசையமைக்க, வைரமுத்து பாடல்களை எழுதுகிறார்.

தொடக்கவிழாவுக்கு, இயக்குநர்கள் கே பாலச்சந்தர், பாலுமகேந்திரா, மணிரத்னம், நடிகரும் மத்திய அமைச்சருமான நெப்போலியன், நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார், தமிழ்திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் எஸ்ஏ சந்திரசேகரன் உள்பட பலரும் பங்கேற்கின்றனர்.

படத் தொடக்கவிழாவையொட்டி, அல்லி நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.
 

ஐஸ்வர்யா மகளுக்கு அப்படியே அம்மாவோட கண்கள்!


ஐஸ்வர்யா ராயின் பிரசவம் குறித்த செய்திகள் இப்போது அடங்கி, அவரது மகள் குறித்த செய்திகள் கச்சை கட்டிக் கொண்டு பறக்க ஆரம்பித்துள்ளன. ஐஸ்வர்யாவின் மகள் எப்படி இருக்கிறாள் என்ற பேச்சுக்கள்தான் இப்போது படு சூடா கிளம்பியுள்ளன.

ஐஸ்வர்யா ராய்க்கு மும்பை மருத்துவமனையில் அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. தாயும், சேயும் நலமாக உள்ளனர். இது சுகப் பிரசவம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தனது பேத்தி குறித்து தாத்தா அமிதாப் பச்சன் தனது பிளாக்கில் விலாவாரியாக எழுதியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், எப்போதாவது தனது கண்களை லோசாக திறந்து பார்க்கிறாள் எனது பேத்தி. அப்படியே அவளுடைய தாயாரின் கண்களைப் போலவே எனது பேத்தியின் கண்களும் உள்ளன. மிகப் பிரகாசமான கண்களாக அவை வரும் என்று நினைக்கிறேன் என்று கூறியுள்ளார் அமிதாப்.

ஐஸ்வர்யாவின் ஸ்பெஷாலிட்டியே அந்தக் கண்கள்தான். அவருடைய தாயார் விருந்தா ராய்க்கும் கூட அதேபோன்ற கண்கள்தான். தற்போது ஐஸ்வர்யாவின் மகளுக்கும் அதே கண்கள் வந்துள்ளது ஐஸ்வர்யா குடும்பத்தினரை குதூகலத்தில் ஆழ்த்தியுள்ளது.

அமிதாப்பச்சன் மேலும் கூறுகையில், எனது பேத்தியை நான் கையில் வாங்கிக் கொண்டு வந்தபோது எனக்கு எனது மகன் அபிஷேக்கின் நினைவு வந்தது. அப்போதும் அப்படித்தான் அபிஷேக் பிறந்தபோது அவனை எனது தந்தையின் கைகளில் கொடுத்தேன். இப்போது எனது கையில் அபிஷேக்கின் மகள். பெருமையாக இருக்கிறது.

எனது மருமகள் மிகவும் தைரியசாலி. பிரசவத்திற்குப் முன்னரும் சரி, பின்னரும் சரி மிகவும் தைரியமாக, பயப்படாமல் இருந்தார். மன தைரியம் அவருக்கு மிக அதிகம். மிகுந்த மகிழ்ச்சியில் அவர் இருக்கிறார்.

இப்ப, எங்க குடும்பத்தில் நடந்து வரும் பெரிய விவாதமே, குட்டிப் பெண் யாருடைய சாயலில் இருக்கிறாள் என்பதுதான் என்று தனது ஸ்டைலில் முடித்துள்ளார் பச்சன்.
 

தன்னைவிட சின்னவயசு பையனுடன் கஸ்தூரியின் ரொமான்ஸ்!


'நாங்க' என்ற படத்தில் தன்னை விட வயது குறைந்த இளைஞனுடன் ரொமான்ஸ் பண்ணும் கேரக்டரில் நடித்துள்ளார் கஸ்தூரி.

செல்வா இயக்க, சினிமா கொட்டகை நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் மொத்தம் 5 காதல் கதைகள் இடம்பெறுகின்றன.

இதில் ஒரு காதல்தான் சின்ன வயசு இளைஞன் உதய்க்கும், கல்யாணத்துக்கு காத்திருக்கும் கஸ்தூரிக்கும் இடையில் வரும் பொருந்தாக் காதல்.

கதைப்படி உதய் குடியிருக்கும் வீட்டு உரிமையாளர் பெண் கஸ்தூரி. உதய்யைவிட மூத்தவர். ரொம்ப அன்னியோன்னியமாக பழகும் கஸ்தூரியிடம் ஒரு கட்டத்தில் தன் காதலைச் சொல்ல, அதை அவர் மறுத்துவிடுகிறார். இதனால் ஆத்திரமடைந்த உதய், கஸ்தூரியை கற்பழிக்க முயற்சிக்கிறார்... என்று போகிறது இந்தக் காதல் கதை.

இடையில் கஸ்தூரிக்கும் உதய்க்கும் மகா கவர்ச்சியான கனவுக் காட்சி வேறு வருகிறதாம். இதில் கஸ்தூரி ஏக கவர்ச்சி காட்டியுள்ளாராம்.

இதுகுறித்துக் கேட்டபோது, கதைக்குத் தேவை என்பதால் இந்தக் காட்சிகளில் அதிகபட்ச கவர்ச்சி காட்டி நடித்ததாக தெரிவித்தார் கஸ்தூரி.

பாலமுருகன் ஒளிப்பதிவு செய்ய, பாலபாரதி இசையமைத்துள்ளார்.