சென்னை: பழம்பெரும் நடிகரும், முன்னாள் எம்.எல்.ஏவுமான இலட்சிய நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு வயது 87.
உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் மயிலாப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் எஸ்.எஸ்.ராஜேந்திரன் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
எஸ்.எஸ்.ஆர் என்று சுருக்கமாக அழைக்கப்படும் ராஜேந்திரனின் முழுப் பெயர் சேடப்பட்டி சூரியநாராயணத் தேவர் ராஜேந்திரன் என்பதாகும்.
சிவாஜி கணேசனின் முதல் படமான பராசக்திதான் எஸ்.எஸ்.ஆருக்கும் முதல் படமாகும். ஆரம்பத்தில் திமுகவில் இணைந்து தீவிரமாக செயல்பட்டு வந்தவர்.
திமுகவுக்காக ஊர் ஊராகப் போய் நிதி சேகரித்துக் கொடுத்தவர். 1962ம் ஆண்டு தேனி சட்டசபைத் தொகுதியிலிருந்து திமுக சார்பில் சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். இவர்தான் நாட்டிலேயே எம்.எல்.ஏவாக வெற்றி பெற்ற முதல் நடிகர் ஆவார்.
அதைத் தொடர்ந்து ராஜ்யசபா எம்.பியாகவும் இருந்தார் எஸ்.எஸ்.ஆர். 1981ம் ஆண்டு இவர் அதிமுகவில் இணைந்தார். எம்.ஜி.ஆர். இவரை ஆண்டிப்பட்டி தொகுதியில் நிற்க வைத்து ஜெயிக்க வைத்தார்.
1950கள், 60களில் தமிழ்த் திரையுலகில் புகழ்பெற்று விளங்கினார். இவர் நடித்த பூம்புகார், மறக்க முடியுமா போன்ற திரைப்படங்கள் காலத்தால் அழியாதவையாகும்.
வசன உச்சரிப்பிலும், நடிப்பிலும் பிரபலமானவர் எஸ்.எஸ்.ஆர். இவருக்கு நடிகை விஜயக்குமாரி உள்பட 3 மனைவியர். மொத்தம் 9 பிள்ளைகள் உள்ளனர்.