எனக்காக நடிப்பையே தியாகம் செய்தவர் நயன்தாரா! - பிரபு தேவா திடீர் அறிக்கை


பொதுவாக தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து வெளியில் பேசுவதைத் தவிர்ப்பவர் பிரபுதேவா.

அவரையும் நயன்தாராவையும் இணைத்து கிசுகிசுக்கள் பரபரப்பாக வெளியானபோதும் அமைதி காத்தார்.

முதல்முறையாக இப்போது நயன்தாராவுடன் திருமணம் பற்றி வெளிப்படையாக பேசியுள்ளார்.

இதுகுறித்து பிரபுதேவா தனது பிஆர்ஓ நிகில் மூலம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

நான் என்னுடைய தனிப்பட்ட விஷங்களைப் பற்றி யாரிடமும் பகிர்ந்துக்கொள்ள விரும்பாதவன். ஆனால், எனக்கும் நயன்தாதாராவுக்கும் நடக்க இருக்கும் திருமணத்தைப் பற்றி பல தவறான செய்திகள் பரவி வருகின்றன.

இந்த நேரத்தில், இந்த நாளில் நயன்தாராவை திருமணம் செய்து கொள்ளப்போகிறேன் என்று நேரம் குறித்து பத்திரிக்கையில் செய்தி வெளியானதைப் படித்தேன். அதன் பின்னரே இந்த விஷயத்தைப் பற்றி வெளிப்படையாகப் பேச முன்வந்தேன்.

மறைப்பதற்கு எதுவுமில்லை...

எனக்கும் நயன்தாராவுக்கும் நடக்க இருக்கும் திருமணம், உலகுக்கு வெளிப்படையாக இந்த நேரத்தில், இந்த நாளில் என சொல்லப்பட்ட பின்பே நடக்கும். இனிமேல் இந்த விஷயத்தில் மறைப்பதற்கு எதுவும் இல்லை. எங்களுடைய திருமணத்திற்கு இருவீட்டாரின் பெற்றோர்களின் ஆசீர்வாதத்துடன் தான் நடக்கும்.

எனக்காக தியாகம் செய்தார் நயன்தாரா...

என் மேல் வைத்திருந்த காதலுக்காக திரையுலகில் நடிப்பதை தியாகம் செய்தவர் நயன்தாரா. அவர் சீதைப் படத்தில் நடித்திருக்கும் தெலுங்கு படமான ஸ்ரீராம ராஜ்யம் படத்தில் கிடைத்த வாய்ப்புகள் மாதிரி புனிதமான கதாபாத்திரங்கள் கிடைத்தால் திருமணத்திற்கு முன்பு நடித்துக் கொடுக்க இப்போதும் தயாராக இருக்கிறார்," என்று கூறியுள்ளார்.
 

வந்தான் வென்றானுக்கு 'யு'!


ஜீவாவின் அடுத்த படம் ரிலீஸுக்குத் தயாராகிவிட்டது. படத்தின் பெயர் வந்தான் வென்றான்.

ஆடுகளம் டாப்ஸிதான் இதில் ஜீவாவுக்கு ஜோடி. கேஎஸ் சீனிவாசன் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு, தமன் இசையமைத்துள்ளார்.

கண்ணன் இயக்கியுள்ள இந்தப் படம் வரும் செப்டம்பர் 16-ம் தேதி வெளியாகிறது. சமீபத்தில் வெளியான ஜீவாவின் படங்களில் கோ வெற்றிகரமாக ஓடியது. ஆனால் ரௌத்ரம் கவிழ்த்துவிட்டது.

எனவே வந்தான் வென்றான் வெற்றி மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

இந்தப் படம் நேற்று சென்சாருக்கு திரையிடப்பட்டது. படத்தைப் பார்த்த தணிக்கைக் குழு உறுப்பினர்கள் எந்த கட்டும் கொடுக்காமல், யு சான்றிதழ் அளித்துள்ளனர்.

வந்தான் வென்றான் நிச்சயம் பாக்ஸ் ஆபீஸில் வெற்றிபெறும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளதாக ஜீவா தெரிவித்துள்ளார்.

இந்தப் படம் சிறப்பாக வந்திருப்பதால், அடுத்த படத்துக்கும் கண்ணனுக்கு அவர் கால்ஷீட் கொடுத்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
 

ராணா கதையில் மாற்றமில்லை... மேலும் மெருகேற்றப்பட்ட திரைக்கதை... புதிய தகவல்கள்!


ரஜினியின் ராணா கதையிலோ காட்சி அமைப்பிலோ எந்த மாற்றமும் இல்லை என்றும், ஏற்கெனவே உருவாக்கப்பட்ட திரைக்கதையை மேலும் மெருகேற்றியுள்ளோம் என்றும் இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

உடல்நலக் குறைவு ஏற்பட்டு, சிங்கப்பூரில் சிகிச்சை முடிந்து திரும்பியுள்ள ரஜினி, நீண்ட ஓய்வுக்குப் பிறகு இந்தப் படத்தில் நடிக்கவிருக்கிறார்.

வரும் அக்டோபரில் ராணா படப்பிடிப்பு நடக்கும் என்றும் இதில் ரஜினி பங்கேற்பார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரஜினி இப்படத்தில் மூன்று வேடங்களில் நடிக்கிறார். ஜோடியாக தீபிகா படுகோனே, இலியானா ஆகியோர் நடிக்கின்றனர்.

இரு நாயகிகளில் தாங்கள் நடித்துக் கொண்டிருக்கும் படங்களை சீக்கிரம் முடித்து விட்டு ராணா படத்துக்கு தயாராகுமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். அவர்களும் அதை ஏற்று படங்களை வேகமாக முடித்து விட்டு ராணா படப்பிடிப்புக்கு வர உள்ளனர்.

இப்படம் சரித்திர கதை என்பதால் அதற்கேற்ப பொருத்தமான ஆடைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், ரஜினியின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு ராணாவில் காட்சிகள் மாற்றப்பட்டுள்ளதாகவும், ரஜினிக்கான சண்டைக் காட்சிகள் குறைக்கப்பட்டுள்ளதாகவும் வெளியான செய்திகளை பலமாக மறுத்துள்ளது இயக்குநர் கே எஸ் ரவிக்குமார் தரப்பு.

இந்தப் படத்தின் கதையில் எந்த மாறுதலும் இருக்கக் கூடாது என ரஜினி கூறிவிட்டதாகவும், சண்டைக் காட்சிகள் தொழில்நுட்ப உதவியுடன் சிறப்பாக எடுக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் ரஜினியின் ஆலோசனையின் பேரில் திரைக்கதை மேலும் மெருகேற்றப்பட்டிருப்பதாகவும் இயக்குநர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.
 

சக்தி சிதம்பரம் ரூ 1.60 கோடி ஏமாற்றினார்! - தொழிலதிபர் பதில் புகார்


சென்னை: தயாரிப்பாளரும் இயக்குநருமான சக்தி சிதம்பரம் தனக்கு ரூ 1.60 கோடி தரவேண்டும் என்றும் அதை வசூலித்துத் தருமாறும் போலீசில் புகார் செய்துள்ளார் தொழிலதிபர் வி.எஸ்.ஜே.தினகரன்.

திரைப்பட இயக்குநரும் தயாரிப்பாளருமான சக்திசிதம்பரம் சமீபத்தில் போலீஸ் கமிஷனரை சந்தித்து புகார் மனு ஒன்றை கொடுத்தார்.

அந்த புகார் மனுவில், முன்னாள் எம்.எல்.ஏ. வி.எஸ்.பாபு மீதும், அவரது அண்ணன் மகன் தினகரன் மீதும் குற்றம் சாட்டியிருந்தார். 'எந்திரன்' படம் விநியோகத்தில் தினகரன் தன்னுடன் பங்குதாரராக செயல்பட்டதாகவும், ஆனால் அந்த படத்தின் கணக்குவழக்குகளை ஒப்படைக்காமல் மோசடி செய்துவிட்டார் என்றும், திருவள்ளூரில் ரூ.5 கோடி மதிப்புள்ள நிலத்தை வாங்கிவிட்டு பணம் தராமல் அபகரித்துவிட்டார் என்றும் அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

பதில் புகார்

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், தொழில் அதிபர் வி.எஸ்.ஜே.தினகரன் நேற்று போலீஸ் கமிஷனரை சந்தித்து புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த புகார் மனுவில், 'எந்திரன்' படம் வெளியிட்டதில் படஅதிபர் சக்திசிதம்பரம்தான், எனக்கு ரூ.1 கோடியே 60 லட்சம் தரவேண்டும் என்றும், அதற்காக 'காவலன்' படம் விநியோக உரிமையை தருவதாக கூறினார் என்றும், பின்னர் `காவலன்' படம் விநியோக உரிமையை தரவில்லை என்றும், சக்திசிதம்பரத்திடமிருந்து ரூ.1 கோடியே 60 லட்சத்தை வசூலித்து தரவேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், திருவள்ளூரில் நிலம் வாங்கியதில் எனக்கு சம்பந்தமும் இல்லை என்றும், எனது புகழை கெடுக்க பொய்யான புகார் கொடுத்துள்ளார் என்றும் மனுவில் தினகரன் தெரிவித்துள்ளார்.
 

கோடம்பாக்கத்தில் ஓணம்!


தமிழ் சினிமா என்பது பெயருக்குத்தானே தவிர, கோடம்பாக்கத்தில் கொடி நாட்டிக் கொண்டிருக்கும் பெரும்பான்மை கலைஞர்கள் கேரளத்தைச் சேர்ந்தவர்களே.

முன்னணி ஹீரோக்களே கூட பாதி மலையாளிகளாகவே உள்ளனர்.

நடிகைகள் பற்றிக் கேட்கவே வேண்டாம். 90 சதவீதம் கேரளத்து வரவுகள்தான் தமிழ் சினிமாவில் நிறைந்துள்ளனர்.

இவர்கள் அனைவரும் இன்று ஓணம் பண்டிகையை கோலாகலமாகக் கொண்டாடினர். சிலர் வெளியூர் படப்பிடிப்புகளை ரத்து செய்துவிட்டு கேரளா சென்றுவிட்டனர். குறிப்பாக முன்னணி நடிகர்-நடிகைகள் அனைவரும் இன்று கேரளாவில் இருக்கும்படி பார்த்துக் கொண்டனர்.

இன்னும் சிலர் கோடம்பாக்கத்திலேயே ஓணம் கொண்டாடி வருகின்றனர்.

தனது ஓணம் கொண்டாட்டம் பற்றி அசின் கூறுகையில், "ஓணத்தை ஓணம் பண்டிகையை கொண்டாட ஜெய்ப்பூரில் நடந்த போல்பச்சன் படப்பிடிப்பில் இருந்து இரண்டு நாள் விடுமுறை எடுத்துக் கொண்டு வந்தேன். இந்த பண்டிகையை பெற்றோருடன் சேர்ந்து கொண்டாடுவதுதான் எனக்கு இஷ்டம். உறவினர்கள், நண்பர்களை வீட்டுக்கு அழைத்துள்ளேன். ஓணத்துக்காக பட்டு பாவாடை, சட்டை வாங்கி அணிந்தேன்.

வண்ணமயமான பூக்கோலங்கள் வாசலில் இடுவது இப்பண்டிகையின் ஸ்பெஷல். என் அம்மா ஓணம் பண்டிகையையொட்டி செய்யும் பாயாசம் ரொம்பவும் ருசியாக இருக்கும். வாழை இலையில் விதவிதமான உணவுகள், மற்றும் பாயாசம் வைத்து கடவுளுக்கு படையலிட்டு விட்டு சாப்பிடும் இந்த நாள் மறக்க முடியாதது," என்றார்.

அமலா பால்:

ஓணம் பண்டிகையின் போது புதுவிதமான பூக்கோலம் போடுவது எனக்கு பிடித்த விஷயம். சிறுவயதில் இருந்தே இதை செய்கிறேன். கல்லூரியில் படித்த போது ஓணத்துக்கு பூக்கோலம் போடுவதில் தோழிகளுக்குள் போட்டியே நடக்கும். அது மறக்க முடியாத நினைவுகள். பெற்றோருடன் ஓணத்தை கொண்டாடுகிறேன் என்றார்.

பாவனா கூறும்போது, கன்னட படப்பிடிப்புக்காக கொழும்பில் இருப்பதால் ஊருக்கு போக முடியவில்லை. ஆனாலும் இங்கு படக்குழுவினருடன் அப்பண்டிகையை கொண்டாடினேன்," என்றார்.

நடிகை ஓவியா:

ஓணம் கொண்டாட்டம் இல்லாமல் எந்த ஆண்டும் பூர்த்தியாகாது. நான் பெற்றோருடன் இந்த ஆண்டு ஓணத்தை மகிழ்ச்சியுடன் கொண்டாடுகிறேன். நண்பர்கள், உறவினர்களுடன் இணைந்து இந்தப் பண்டிகையைக் கொண்டாடுவதில் உள்ள இனிமையே தனி.

அஜீத் - ஷாலினி

பிரபல நடிகர் அஜீத் தன் மனைவி ஷாலினி, குழந்தை மற்றும் உறவினர்களுடன் இன்று ஓணம் கொண்டாடினார்.

நடிகர்கள் மம்முட்டி, மோகன்லால், பிருதிவிராஜ் ஆகியோரும் குடும்பத்தினருடன் ஓணம் பண்டிகை கொண்டாடினார்கள்.
 

கை நிறைய வேறு மொழிப் படங்கள்-தமிழுக்கு லக்ஷ்மி ராய் 'குட்டி' பிரேக்!


நடிகை லஷ்மி ராய் தமிழ் படங்களுக்கு சிறிது காலம் பிரேக் விட முடிவு செய்துள்ளார்.

காஞ்சனா, மங்காத்தா என்று அடுத்தடுத்து அவர் நடித்த படங்கள் ஹிட்டாகியுள்ளன. இதனால் லக்ஷ்மி ராய் குஷியாகியுள்ளார். அதிலும் குறிப்பாக மங்காத்தாவில் கவர்ச்சி மற்றும் வில்லித்தனமான கதாபாத்திரத்தில் கலக்கியிருக்கிறார்.

இதைப் பார்த்த இயக்குனர்கள் அட லக்ஷ்மி ராயா இது, அருமையா நடித்திருக்கிறாரே, நம்ம படத்துக்கு ஒப்பந்தம் செய்வோம் என்று அவர் வீட்டுக்கு சென்றுள்ளனர். ஆனால் லக்ஷ்மி ராயோ ஸரி, ஏற்கனவே கை நிறைய மலையாளம், கன்னடம் மற்றும் தெலுங்கு படங்கள் உள்ளது. அதனால் இப்போதைக்கு தமிழ் படங்களில் நடிக்க முடியாது என்று கூறிவிட்டாராம்.

இந்த இடைவேளை ரசிகர்களை தன்னைத் தேட வைக்கும் என்றும் அவர் நம்புகிறார். என்னடா லக்ஷ்மி ராயை காணோமே என்று ரசிகர்கள் ஏங்குவார்கள் என்று நினைக்கிறார்.

'குட்டி' பிரேக்காக இருக்கட்டும், இல்லையெனில் ரசிகர்கள் மறந்துவிடப்போகிறார்கள்....!
 

ரஜினிக்கு கிடைக்கவேண்டிய தேசிய விருது தனுஷுக்கு கிடைத்துள்ளது - கே பாலச்சந்தர்


டெல்லி: ரஜினிக்கு கிடைக்க வேண்டிய தேசிய விருது தனுஷுக்குக் கிடைத்திருப்பதாகவே நான் கருதுகிறேன், என்றார் இயக்குநர் கே பாலச்சந்தர்.

இந்தியத் திரையுலகின் உயரிய விருதான பால்கே விருது பெறும் இயக்குநர் கே.பாலசந்தர் மற்றும் தேசிய விருது பெறும் திரைக் கலைஞர்கள் ஆகியோருக்கு தினமணி நாளிதழும் டெல்லித் தமிழ்ச் சங்கமும் இணைந்து தலைநகரில் வியாழக்கிழமை பாராட்டு விழா எடுத்தன.

இந்த நிகழ்ச்சியில் கே.பாலசந்தர் பேசுகையில், "தமிழர்கள் பொதுவாக புத்திசாலிகள்; டெல்லித் தமிழர்கள் அதிபுத்திசாலிகள். அரசு எங்களுக்கு விருதும் பாராட்டும் வழங்குவதற்கு ஒரு நாள் முன்னதாகவே எங்களைக் கௌரவித்துப் பாராட்டு விழா நடத்துவதுதான் அதற்குச் சாட்சி.

இங்கு பேசியவர்கள் அனைவரும் என்னைப் பாராட்டியே பேசிக்கொண்டிருந்தார்கள். நான் மட்டுமா விருது வாங்கியிருக்கிறேன். பல இளம் கலைஞர்களும் விருதுகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். அதிலும் இந்த முறை தமிழ்க் கலைஞர்களுக்கு மிக அதிக எண்ணிக்கையிலான விருதுகள் கிடைத்திருப்பது, தமிழ் சினிமாவின் வீச்சு அதிகரித்திருப்பதைக் காட்டியுள்ளது.

நல்ல படைப்புகளுக்காக இளம் கலைஞர்கள் விருது பெறும்போது அவர்கள் மீது எனக்கு உண்மையிலேயே பொறாமை ஏற்படுகிறது. இதைச் சொல்வதில் எனக்கு தயக்கமில்லை. ஏனென்றால் அவர்களைப் போல நல்ல படைப்பை நாமும் தரவேண்டுமே என்ற நல்ல எண்ணம்தான் காரணம். இளம் திரைக்கலைஞர்களின் சாதனை என்னை மேலும் மேலும் சாதிக்கத் தூண்டுகிறது என்பதுதான் உண்மை.

தனுஷுக்கு தேசிய விருது கிடைத்துள்ளது. அது சாதாரண விஷயமல்ல.

'உனக்கு தேசிய விருது வாங்கும் எண்ணமே இல்லையா' என நான், ரஜினியிடம் அடிக்கடி கேட்டிருக்கிறேன். அதற்கு அவர் 'ஜனங்களின் விருது போதும்' எனக் கூறிவிட்டார். ரஜினிக்குக் கிடைக்க வேண்டிய தேசிய விருது தனுஷுக்குக் கிடைத்ததாகவே நான் கருதுகிறேன்.

இங்கு எல்லோருக்கும் நடைபெற்ற இந்த சிறப்பான பாராட்டு விழாவில் ஒரு விஷயத்தைக் குறிப்பிட விரும்புகிறேன். என்னை விட்டுவிடுங்கள்... இளைய தலைமுறையினரின் திறமையை அங்கீகரித்து அவர்களை வாழ்த்துங்கள். அவர்கள் உயர்ந்தால் தமிழ் சினிமா உயரும்," என்றார்.

வைரமுத்து

நிகழ்ச்சியில் பேசிய வைரமுத்து, "கே.பி. க்கு கிடைத்த தாதா சாகேப் பால்கே விருது தமிழ்த் திரையுலகுக்குக் கிடைத்த விருது ஆகும். அவர் இந்திப் படத்தை விட்டது, தமிழர்களைப் பட்டினி போடக்கூடாது என்பதற்காகத்தான்," என்றார்.

நிகழ்ச்சியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலர் டி ராஜா பங்கேற்று விருது பெற்றவர்களை வாழ்த்திப் பேசினார்.

நடிகர் தனுஷ் (சிறந்த நடிகர்), நடிகை சரண்யா பொன்வண்ணன் (சிறந்த நடிகை), இயக்குநர் வெற்றிமாறன் (சிறந்த இயக்குநர்-ஆடுகளம்), தயாரிப்பாளர் ஷிபு ஐசக் (சிறந்த தயாரிப்பாளர்-தென் மேற்கு பருவக்காற்று), சீனு ராமசாமி (சிறந்த மாநில மொழித் திரைப்படத்துக்கான விருது-தென் மேற்கு பருவக் காற்று), நடிகர் ஜே.தம்பி ராமையா (சிறந்த துணை நடிகர்- மைனா), டி.இ.கிஷோர் (சிறந்த படத் தொகுப்பு-ஆடுகளம்), தினேஷ் குமார் (சிறந்த நடன இயக்கம்- ஆடுகளம்), சீனிவாஸ் எம்.மோகன் (ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ்-எந்திரன்), வில்லன் நடிகர் வ.ஐ.செ.ஜெயபாலன் (சிறப்புப் பரிசு-சான்றிதழ்) உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கு பெற்றனர்.
 

100 படங்களுக்குப் பிறகுதான் இளையராஜா ஒரு லட்சம் சம்பளம் வாங்கினார்!- பஞ்சு அருணாச்சலம்


தமிழ் சினிமா வளர்ச்சியடைந்துள்ளதாக சில சொல்லிக் கொள்கிறார்கள். ஆனால் இது போலித்தனமானது. சினிமாவுக்கு நல்லதல்ல, என்றார் தமிழ் சினிமா ஜாம்பவான்களில் ஒருவரான பஞ்சு அருணாச்சலம்.

சூப்பர் டீம் சினிமாஸ் தயாரிக்கும் 'நந்தா நந்திதா' படத்தின் இசை வெளியீட்டு விழா, சென்னை பிரசாத் லேபில் நடந்தது. முதல் இசைத் தட்டை பஞ்சு அருணாசலம் வெளியிட, தயாரிப்பாளரும் இயக்குநருமான கேயார் பெற்றுக்கொண்டார்.

விழாவில், பஞ்சு அருணாசலம் பேச்சு, திரையுலகினருக்கே ஒரு புதிய சிந்தனையை ஏற்படுத்துவதாக அமைந்தது.

அவர் பேசுகையில், "முன்பெல்லாம் வருடத்துக்கு 60 படங்கள்தான் திரைக்கு வரும். அதில், 30 படங்கள் நஷ்டம் அடையாது. 20 படங்கள் நூறு நாட்கள் ஓடும். 5 படங்கள் வெள்ளிவிழா ஓடும். 5 படங்கள் மட்டும் நஷ்டம் அடையும். ஒரு படம் தயாரிக்க முப்பதாயிரத்தில் இருந்து நாற்பதாயிரம் அல்லது சில லட்ச ரூபாய்தான் ஆகும். முப்பது அல்லது நாற்பது நாட்களில் படம் தயாராகி விடும்.

ஆனால் இப்போது, வருடத்துக்கு 160 படங்கள் திரைக்கு வருகின்றன. அதில், மூன்று அல்லது நான்கு படங்கள்தான் ஓடுகின்றன. ஒரு படம் தயாரிக்க 80-ல் இருந்து 200 நாட்கள் வரை ஆகிறது. முன்பு திறமைக்கு மதிப்பு இருந்தது. இப்போது பணத்துக்குத்தான் மதிப்பு இருக்கிறது. பணத்தை வைத்துதான் வெற்றி நிர்ணயம் செய்யப்படுகிறது. போலித்தனமான வெற்றிகள் அதிகமாகி விட்டன. இந்த போலித்தனமான வெற்றியும் வளர்ச்சியும் சினிமாவுக்கு உதவுமா?

இளையராஜா சம்பளம்

'அன்னக்கிளி' படத்துக்கு இசையமைக்க இளையராஜாவுக்கு நான் கொடுத்த சம்பளம் வெறும் மூவாயிரத்து ஒன்றுதான். அவர், 100 படங்களுக்கு இசையமைத்த பின்புதான் ஒரு லட்சம் சம்பளம் வாங்கினார். அதுவரை ரூ 25 ஆயிரம் பெற்றுக் கொண்டார். சம்பளத்தை விட சாதனையைத்தான் அவர் பெரிதாக நினைத்தார்.

ஆனால் இப்போது, படம் இரண்டு வாரம் ஓடி கொஞ்சம் வசூல் செய்தால் போதும். அந்த படத்தின் கதாநாயகன், கதாநாயகி, டைரக்டர் தங்களின் அடுத்த படத்துக்கு 75 லட்சத்தில் இருந்து 80 லட்சம் வரை சம்பளம் கேட்கிறார்கள். இசையமைப்பாளர்கள் கோடிகளில் சம்பளம் பேசுகிறார்கள்.

யார் திறமைசாலி என்பதில் போட்டி இல்லை. யார் அதிக சம்பளம் வாங்குவது? என்பதில்தான் இப்போது போட்டி இருக்கிறது. இது நல்லதா... சினிமா எப்படி வளரும்?," என்றார்.

தயாரிப்பாளர்களை கரை சேர்ப்பேன்

படத்தின் இயக்குநர் ராம் ஷிவா பேசுகையில், "நான் சினிமாவில் மிகுந்த கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தேன். கதை, திறமை எல்லாம் இருந்தும் அதைக் காட்ட வழியின்றி தவித்தபோது, என் நண்பர்கள் எம்.கோவிந்தராஜ், எம்.நாகராஜ், ஜி.பூபால் ஆகிய மூவரும் படம் தயாரிக்க முன்வந்தார்கள்.

அவர்கள் என்னிடம் இரண்டு வாய்ப்புகளை முன் வைத்தனர். ரூ 25 லட்சம் தருகிறோம். மனைவி மக்களோடு ஊருக்குப்போ. பணத்தை திருப்பிக் கூட தர வேண்டாம். அல்லது ரூ 40 லட்சம் தருகிறோம், படம் பண்ணு என்றனர். அவர்களிடம், இன்னும் கொஞ்சம் மேலே பணம் போட்டு, நீங்களே தயாரிப்பாளராக இருங்கள். நான் ஒரு படம் செய்கிறேன். நிச்சயம் ஜெயித்துக் காட்டுகிறேன், என்றேன். நம்பி வந்தனர். நான் நேராக கேயாரிடம் அழைத்துப் போய் வழிகாட்டச் சொன்னேன். அவரது வழிகாட்டுதலில் படம் நல்லபடியாக முடிந்துவிட்டது.

என்னை நம்பி வந்த அந்த மூன்று தயாரிப்பாளர்களையும் நஷ்டமில்லாமல் கரை சேர்த்துவிடுவேன் என்ற நம்பிக்கை வந்துவிட்டது," என்றார்.

நடிகர் நாசர், கேயார், இயக்குநர் ஜனநாதன், இசையமைப்பாளர் எமில், ஒளிப்பதிவாளர் சீனிவாசரெட்டி, படத்தின் கதாநாயகன் ஹேமச்சந்திரன் ஆகியோரும் விழாவில் பேசினார்கள்.

பட அதிபர்கள் எம்.கோவிந்தராஜ், எம்.நாகராஜ், ஜி.பூபால் ஆகிய மூவரும் வரவேற்றார்கள்.
 

நண்பன் ஷூட்டிங்கில் இலியானா கால் முறிந்தது!!


ஷங்கர் இயக்கும் நண்பன் படப்பிடிப்பின் போது நடந்த நடன ஒத்திகையில் கால் தடுமாறி விழுந்ததில் கதாநாயகி இலியானாவின் கால் முறிந்தது.

பிரபல தெலுங்கு நடிகை இலியானா. இவர் விஜய் ஜோடியாக நண்பன் படத்தில் நடிக்கிறார்.

ஸ்ரீகாந்த், ஜீவா ஆகியோரும் இதில் நடிக்கின்றனர். நண்பன் படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை எட்டிவிட்டது.

இதில் இலியானா பங்கேற்கும் பாடல் காட்சி ஒன்றுக்காக அவருக்கு நடன பயிற்சி அளிக்கப்பட்டது. பாலிவுட்டின் பிரபல டான்ஸ் மாஸ்டர் பராஹான் இப் பயிற்சியை அளித்தார். அப்போது இலியானா நிலை தடுமாறி கீழே விழுந்தார்.

இதில் அவரது காலில் பலத்த அடிபட்டது. வலியால் துடித்தச அவரை டாக்டர்கள் பரிசோதித்தனர். காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு உள்ளதைக் கண்டறிந்து சிகிச்சை அளித்தனர்.

கால் சரியாக மூன்றுவாரங்கள் வரை அவர் ஓய்வு எடுக்க வேண்டும் என்றும் டாக்டர்கள் அறிவுறுத்தினர். இதையடுத்து அவர் ஹைதராபாத் புறப்பட்டுச் சென்றார். இலியானா தவிர்த்த காட்சிகள் மற்றும் பேட்ச் ஒர்க்கை மட்டும் இப்போது ஷங்கர் மேற்கொண்டுள்ளார்.
 

மனைவியைக் கத்தியால் குத்திக் கொல்ல முயன்றதாக பிரபல கன்னட நடிகர் தர்ஷன் கைது


பெங்களூர்: மனைவியைக் கத்தியால் குத்திப் படுகாயமடையச் செய்த பிரபல கன்னட நடிகர் தர்ஷன் கைது செய்யப்பட்டார். பிரபல நடிகர் ஒருவர் இவ்வாறு நடந்து கொண்ட செயல் கர்நாடகத்தில் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.

கன்னடத்தில் பிரபலமான இளம் நடிகர் தர்ஷன். இவர் பழம்பெரும் நடிகர் தூகுதீபா ஸ்ரீனிவாஸின் மகன் ஆவார். பல ஹிட் படங்களில் நடித்துள்ளார். இவரது மனைவி பெயர் விஜயலட்சுமி. இவர்களுக்கு வினீஷ் என்ற 3 வயது மகன் உள்ளான்.

குடும்பச் சண்டை காரணமாக கணவனும், மனைவியும் சில மாதங்களுக்கு முன்பு பிரிந்தனர். தர்ஷன் தனியாகவும், அவரது மனைவி தனது குழந்தையுடனும் வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று அதிகாலையில் விஜயலட்சுமி தங்கியிருந்த அவரது நண்பரின் வீட்டுக்கு தர்ஷன் ஆவேசமாகப் போயுள்ளார். அங்கு விஜயலட்சுமியுடன் கடும் வாக்குவாதம் புரிந்துள்ளார். பின்னர் அவரை சரமாரியாக தாக்கி குத்தியுள்ளார். பின்னர் தனது ரிவால்வரை எடுத்து மனைவியையும், மகனையும் கொன்று விடுவதாக மிரட்டினார்.

தாக்குதலில் விஜயலட்சுமி படுகாயமடைந்து வீழ்ந்தார். அதன் பின்னர் அங்கிருந்து தர்ஷன் போய் விட்டார். உடனடியாக விஜயலட்சுமியை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். படுகாயமைடந்துள்ள அவர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

தகவல் அறிந்து விரைந்து வந்த விஜயநகர் போலீஸார் தர்ஷனைக் கைது செய்தனர்.

நீண்ட காலமாக சினிமாவில் நடித்து வரும் தர்ஷன் அனைவரிடமும் நல்ல பெயர் எடுத்து வைத்துள்ள ஒரு கலைஞர் ஆவார். எந்தவிதமான கிசுகிசுவிலும் சிக்காதவர். இந்த நிலையில் அவர் இப்படி நடந்து கொண்டது அவரது ரசிகர்களுக்கும், கர்நாடக மக்களுக்கும் அதிர்சி அளித்துள்ளது.
 

'ஜெய் வைக்கும் கோழிக் குழம்பு நல்லா இருக்கும்...!' - ருசி பார்த்த அஞ்சலி


இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ் - பாக்ஸ் ஸ்டார் நிறுவனத்துடன் இணைந்து முதல்முறையாகத் தயாரிக்கும் எங்கேயும் எப்போதும் படத்தின் குழுவினருடன் ஒரு சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள், வியாழக்கிழமை.

இதுவரை இப்படியொரு அடக்கமான, நன்கு திட்டமிடப்பட்ட, சுவாரஸ்யமான பிரஸ்மீட் நடந்திருக்குமா என்று கேட்கும் அளவுக்கு கச்சிதமாக அமைந்துவிட்டது நிகழ்ச்சி.

படத்தின் மூன்று பாடல்களைத் திரையிட்டார்கள். மூன்றுமே முத்துக்கள் எனும் அளவு இசை, காட்சியமைப்பில் அசத்தியிருந்தார்கள் புதிய இசையமைப்பாளர் சத்யாவும் இயக்குநர் சரவணனும்.

இந்தப் படம் குறித்த தனது அறிமுக உரையில் இப்படிச் சொன்னார் ஏ ஆர் முருகதாஸ்:

"வாழ்க்கையில் சில நொடி நேர எச்சரிக்கையின்மை ஒரு குடும்பத்தில் எத்தனை பெரிய தீராத துயரத்தை ஏற்படுத்திவிடுகிறது என்பதைச் சொல்லும் படம் இந்த எங்கேயும் எப்போதும். என் நண்பன் இயக்குநர் திருப்பதிசாமி, மிக இளம் வயதில் ஒரு கார் விபத்தில் பலியாகிப் போனான். அந்த சம்பவம் என்னை அதிகமாகப் பாதித்துவிட்டது. அந்த பாதிப்புதான் இந்தப் படத்தின் திரைக்கதை என்றுகூட சொல்லலாம். ஆனால் இந்தப் படம் வெறும் மெசேஜ் அல்ல... சுவாரஸ்யமான ஒரு சினிமாவாக உருவாகியிருக்கிறது" என்றார்.

பின்னர் கேள்வி பதில் பகுதி ஆரம்பமானது.

ஒவ்வொரு கேள்விக்கும் அநாவசியமாக ஒரு வார்த்தையைக் கூட விரயம் செய்யாமல் நச்சென்று பதிலளித்தனர் முருகதாஸ் உள்ளிட்ட படக்குழுவினர்.

படத்தின் ஒரு ஜோடியான ஜெய்-அஞ்சலியிடம்தான் அதிக கேள்விகளைக் கேட்டனர் நிருபர்கள். எப்படியாவது இருவரின் வாயையும் பிடுங்கி, அவர்களைப் பற்றிய நீண்ட நாள் கிசுகிசுவை உறுதிப்படுத்த முயன்றும், இருவரும் நழுவும் மீன்களாக சாமர்த்தியம் காட்டியது சுவாரஸ்யம்.

அஞ்சலிக்கும் உங்களுக்கும் காதல் என்று செய்தி வருகிறதே என்று ஜெய்யிடம் கேட்டனர். அதற்கு அவர், "இந்த கேள்வி பிடித்து இருக்கிறது. ஆனால், எனக்கு காதல் வரவில்லை. அஞ்சலியுடன் காதல் காட்சியில் நடித்து இருக்கிறேன். அதுதான் உண்மை. அவருடன் எனக்கு காதல் இல்லை..." என்றவரிடம், "சரி அஞ்சலியிடம் உங்களுக்குப் பிடிச்சது என்ன என்றாவது சொல்லுங்கள்" என்றார் ஒரு நிருபர்.

"அஞ்சலியிடம் எனக்கு பிடித்தது, அவருடைய நடிப்புதான்,'' என்று எஸ்கேப்பானார் ஜெய்.

அடுத்து அஞ்சலியிடம் இதே கேள்வியைக் கேட்டபோது, "ஜெய் நன்றாக நடிப்பார். அதேபோல் நன்றாக சமைப்பார். அவர் சமைக்கிற கோழிக் குழம்பு ருசியாக இருக்கும். அவ்வளவுதான். எங்கள் இடையே இருப்பது நட்புதான். காதல் அல்ல.

எனக்கு ரொம்ப சின்ன வயதுதான். இப்போதுதான் வளர ஆரம்பித்து இருக்கிறேன். காதல், திருமணம் பற்றியெல்லாம் நான் யோசிக்கவே இல்லை,'' என்றார்.

செப்டம்பர் 16-ம் தேதி திரைக்கு வருகிறது எங்கேயும் எப்போதும்!
 

தயாரிப்பாளர்களுடன்தான் பேசுவேம்... பிலிம்சேம்பர் முடிவு கட்டுப்படுத்தாது! - ஃபெப்சி


சென்னை: சினிமா தொழிலாளர்கள் சம்பளப் பிரச்சினையில் இனி தயாரிப்பாளர்களுடன் மட்டும்தான் பேசுவோம். பிலிம்சேம்பர் முடிவு எங்களைக் கட்டுப்படுத்தாது, என ஃபெப்சி அமைப்பினர் கூறியுள்ளனர்.

தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளன (ஃபெப்சி) த்தின் சார்பில் அதன் தலைவர் எம்.ஏ.ராமதுரை, பொதுச்செயலாளர் ஜி.சிவா, பொருளாளர் அ.சண்முகம் ஆகியோர் விடுத்துள்ள அறிக்கை:

"தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்களுக்கான சம்பள ஒப்பந்தம் இதுவரை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில்தான் போடப்பட்டு வருகிறது.

அப்போதெல்லாம் எதிர்ப்போ, மறுப்போ தெரிவிக்காத பிலிம்சேம்பர் திடீரென்று இப்போது ஒரு கூட்டத்தை போட்டு அறிக்கை வெளியிட்டுள்ளது ஆச்சரியமாக உள்ளது.

தற்போது பிலிம்சேம்பர் எடுத்துள்ள முடிவு எந்தவகையிலும் சம்மேளனத்தை கட்டுப்படுத்தாது. மற்ற மாநில தொழிலையும், தொழிலாளர்களையும், பெப்சியையும் பாதிக்கும் வகையில் அறிக்கை விட்டிருப்பது ஏதோ ஒரு உள்நோக்கத்துடனும், தற்போது படம் எடுத்துக்கொண்டிருக்கும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களுக்கும், தொழிலாளர்களுக்கும் பாதிப்பை உண்டாக்கும் நோக்கத்துடனும் உள்ளது.

நாங்கள் எந்தவித பிரச்சினையும் இல்லாமல் தொழில் ஒத்துழைப்பு வழங்கி பணியாற்றி வருகிறோம். மீதம் உள்ள சங்கங்களின் சம்பளத்தை பற்றி எப்போது வேண்டுமானாலும் தயாரிப்பாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருக்கிறோம்.''

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
 

பழம்பெரும் நடிகை காந்திமதி மரணம்


சென்னை: பழம்பெரும் குணச்சித்திர மற்றும் நகைச்சுவை நடிகை காந்திமதி உடல் நலக்குறைவால் மரணமடைந்தார்.

300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள காந்திமதி உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இன்று சிகிச்சை பலனில்லாமல் அவர் உயிரிழந்தார்.

எம்.ஜி.ஆர்.,சிவாஜி, ஜெமினி கணேசன் உள்ளிட்ட அந்தக் கால சூப்பர் ஸ்டார்கள் முதல் ரஜினி, கமல், விஜயகாந்த் உள்ளிட்ட இந்தக் கால நடிகர்கள் வரை அனைவருடனும் நடித்த பெருமைக்குரியவர் காந்திமதி.

இவரது வசன உச்சரிப்பு வெகு பிரபலமானது. 16 வயதினிலே படத்தில் ஸ்ரீதேவியின் அம்மா வேடத்தில் இவர் நடித்து மிகவும் பிரபலமானார். அதன் பின்னர் பாரதிராஜாவின் படங்களில் தவறாமல் நடித்து வந்தார். நகைச்சுவை, வில்லத்தனம், குணச்சித்திரம் என எந்தக் கேரக்டர் கொடுத்தாலும் அசத்தியவர் காந்திமதி.

கரகாட்டக்காரன் படத்திலும் இவரது வேடம் வெகுவாகப் பேசப்பட்டது. கடந்த 2000மாவது ஆண்டு இதய நோய் காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது. அதன் பின்னர் தேறினார். பின்னர் தீவிர சினிமாவில் நடிக்காமல் ஒதுங்கியிருந்தார். டிவியில் நடித்து வந்தார்.

காந்திமதி, சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவர். சென்னை வடபழனியில் வசித்து வந்தார். அவரது இறுதிச் சடங்குகள் இன்று மாலை நடைபெறும் என அவரது மகன் தீனதயாளன் அறிவித்துள்ளார்.

காந்திமதியின் உடலுக்கு திரையுலகைச் சேர்ந்த பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.