விக்ரமின் புதிய படத்தில் ப்ரியா ஆனந்துக்கு "செகண்ட் ஹீரோயின்" வேடமா?

சென்னை: நடிகர் விக்ரமின் புதிய படம் ஒன்றில் அவருக்கு இரண்டாவது கதாநாயகியாக நடிக்க உள்ளார் நடிகை ப்ரியா ஆனந்த் என்று கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ப்ரியா ஆனந்த் நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் "ஒரு ஊர்ல ரெண்டு ராஜா". அதற்கு முன் இவரது நடிப்பில் வெளிவந்த இரும்பு குதிரை படமும் சரியாக போகாதால் பெரிய வருத்தத்தில் இருக்கிறார்.

விக்ரமின் புதிய படத்தில் ப்ரியா ஆனந்துக்கு   

இருப்பினும், தற்போது இவர் நடித்துள்ள "வை ராஜா வை" படம் தனக்குப் பெரிய வரவேற்பை கொடுக்கும் என்று எதிர்பார்த்து காத்திருக்கிறார்.

இந்நிலையில், "அரிமா நம்பி" படத்தை இயக்கிய ஆனந்த் சங்கர் அடுத்து விக்ரமை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கவிருக்கிறார். இப்படத்தில் நாயகியாக நடிக்க காஜல் அகர்வால் ஒப்பந்தமாகியிருந்தார்.

தற்போது, இப்படத்தில் இன்னொரு நாயகியாக ப்ரியா ஆனந்தும் ஒப்பந்தமாகியிருக்கிறாராம். ப்ரியா ஆனந்துக்கு இந்த படத்தில் விக்ரமுடன் இணைந்து டூயட் பாடும் காட்சிகளும் இருக்கிறதாம்.

ஆகையால் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ள, இரண்டாவது நாயகியாக இருந்தாலும் பரவாயில்லை என்று ஒப்புக் கொண்டாராம்.

இப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூன் மாதம் தொடங்கவுள்ளது. இந்த வருடத்தின் இறுதியில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளார்கள்.

மேலும், இப்படத்தில் நடிக்கும் பிற நடிகர், நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது. விரைவில் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

இவர்களில் பட்டு வேட்டி சட்டை யாருக்கு நச்சுன்னு இருக்கு?

சென்னை: விளம்பரம் ஒன்றுக்காக பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் பட்டு வேட்டி அணிந்து போஸ் கொடுத்துள்ளார்.

பிரபல நிறுவனம் ஒன்றின் விளம்பரப் படத்தில் நடிக்க அமிதாப் பச்சன், பிரபு, விக்ரம் பிரபு, நாகர்ஜுனா, சிவ ராஜ்குமார் மற்றும் நடிகை மஞ்சு வாரியர் ஆகியோர் ஒப்பந்தமாகியுள்ளனர்.

அந்த விளம்பரப் படத்திற்காக அமிதாப் உள்ளிட்ட நடிகர்கள் பட்டு வேட்டி சட்டை அணிந்தும், மஞ்சு வாரியர் பட்டுப் புடவை உடுத்தியும் போஸ் கொடுத்தனர். அந்த புகைப்படத்தை அமிதாப் பச்சன் தனது ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இவர்களில் பட்டு வேட்டி சட்டை யாருக்கு நச்சுன்னு இருக்கு?

இது குறித்து அமிதாப் ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக்கில் கூறியிருப்பதாவது,

தென்னிந்தியாவின் சிறந்த நடிகர்களுடன் நான். அனைவரும் நான் நடிக்க வந்த புதிதில் பெரிய ஜாம்பவான்களாக இருந்தவர்களின் மகன்கள்.

இவர்களில் பட்டு வேட்டி சட்டை யாருக்கு நச்சுன்னு இருக்கு?

பிரபு- தமிழ் சினிமாவின் ஜாம்பவானான சிவாஜி கணேசனின் மகன்.

விக்ரம்- பிரபுவின் மகன்

சிவா- கன்னட சினிமாவின் ஜாம்பவானான ராஜ்குமாரின் மகன்

நாகர்ஜுன் - தெலுங்கு சினிமாவின் ஜாம்பவானான அகினேனி நாகேஸ்வர ராவின் மகன்

மஞ்சு வாரியர் - மலையாள சினிமாவின் டார்லிங்

அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டதில் பெருமை என்று தெரிவித்துள்ளார்.

 

ஹீரோ என்னை ஜீரோவாக்கிட்டாங்களே: புலம்பும் நடிகர்

சென்னை: நான் ஹீரோவாக இருந்தும் அந்த மொட்டை பாஸ் வில்லனை தான் முன்னிலைப்படுத்தி விளம்பரம் செய்கிறார்களே என்று சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு வந்துள்ள நடிகர் புலம்பிக் கொண்டிருக்கிறாராம்.

சின்னத்திரையில் நாடகங்களில் நடிப்பதுடன், நிகழ்ச்சிகளை தொகுத்தும் வழங்கி வருகிறார் அந்த தீபமான நடிகர். அவர் சின்னத்திரையில் இருந்து அவ்வப்போது பெரிய திரைக்கு வந்து சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்துக் கொண்டிருந்தார்.

இந்நிலையில் தான் அவருக்கு ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஏற்கனவே சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு சென்ற அந்த சிவமான நடிகரை போன்று நாமும் வர வேண்டும் என நினைத்து அவர் சந்தோஷமாக படத்தில் நடித்து முடித்தார்.

படத்தை வாங்கிய வினியோகஸ்தர்களோ ஹீரோவும் புதுசு, ஹீரோயினும் புதுசு அதனால் விளம்பரங்களில் தெரிந்த முகமாக போடுங்கள், மக்கள் படம் பார்க்க வர வேண்டாமா என்று தெரிவித்துள்ளனர். இதையடுத்து படத்தில் வரும் மொட்டை பாஸ் வில்லனை முன்னிலைப்படுத்தி விளம்பரம் செய்யப்படுகிறது.

மேலும் படத்தில் சில திருத்தங்கள் செய்து வில்லனுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. இதை பார்த்த நடிகர் அடப்பாவமே ஹீரோ என்னை ஜீரோவாக்கிவிட்டு வில்லனை தலையில் வைத்து கொண்டாடுகிறார்களே என்று புலம்பித் தள்ளுகிறாராம்.

 

உத்தம வில்லன் தெலுங்கை வாங்கினார் தயாரிப்பாளர் கல்யாண்!

கமலின் அடுத்த படமான உத்தம வில்லனின் தெலுங்கு உரிமையை பிரபல தெலுங்குப் படத் தயாரிப்பாளர் சி கல்யாண் பெற்றுள்ளார்.

மகேஷ்பாபு நடித்த காலேஜா, கவுதம் மேனனின் ஏதோ வெளிப்போயிந்தி மனசு உள்ளிட்ட படங்களைைத் தயாரித்தவர் கல்யாண். தென்னிந்திய பிலிம்சேம்பரின் முன்னாள் தலைவர்.

உத்தம வில்லன் தெலுங்கை வாங்கினார் தயாரிப்பாளர் கல்யாண்!

வரும் ஏப்ரல் 10-ம் தேதி வெளியாகும் கமல் ஹாஸனின் உத்தம வில்லன் படத்தின் தெலுங்கு வெளியீட்டு உரிமையை கல்யாண்தான் பெற்றுள்ளார்.

தெலுங்கிலும் கமலின் நேரடி படங்களுக்கு நல்ல வரவேற்பு இருப்பதால், கணிசமான தொகை கொடுத்து இந்தப் படத்தினை வாங்கியுள்ளார் கல்யாண்.

இந்தப் படத்தின் உகளாவிய உரிமையை ஈராஸ் வாங்கியுள்ளது. தமிழகத்திலும் அந்த நிறுவனமே நேரடியாக விநியோேகிக்கிறது.

 

சித்திக் படத்தில் நடிக்க சம்பளத்தை ஒரேயடியாக குறைத்து நயன் போட்ட கன்டிஷன்

சென்னை: பாஸ்கர் தி ராஸ்கல் படத்தில் நடிக்க நயன்தரா இயக்குனர் சித்திக்கிற்கு ஒரேயொரு நிபந்தனை விதித்துள்ளாராம்.

கோலிவுட்டின் முன்னணி நடிகையாக உள்ளவர் நயன்தாரா. கை நிறைய படங்கள் வைத்துள்ளார். மேலும் வாய்ப்புகள் வந்து குவிகின்றது. அவர் ஒரு படத்திற்கு ரூ.2 கோடி சம்பளம் வாங்குகிறார். நானும் ரவுடி தான் படத்திற்கு ரூ.3 கோடி சம்பளம் வாங்கியுள்ளாராம்.

சித்திக் படத்தில் நடிக்க நயன் போட்ட அந்த ஒரு கன்டிஷன்

நயன்தாரா தனது தாய் மொழியான மலையாளப் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டுவது இல்லை. காரணம் அங்கு சம்பளம் மிகக் குறைவு. இந்நிலையில் தான் சித்திக் தான் இயக்கும் பாஸ்கர் தி ராஸ்கல் மலையாள படத்தில் நடிக்குமாறு நயன்தாராவை கேட்டார். அந்த படத்தில் நடிக்க நயன்தாராவுக்கு ரூ.40 லட்சம் தான் சம்பளம். இருப்பினும் அவர் நடிக்க ஒப்புக் கொண்டார்.

இயக்குனர் சித்திக்கின் படம் என்ற காரணத்திற்காக அதில் நடிக்க ஒப்புக் கொண்டார். மேலும் சித்திக்கிற்கு நயன்தாரா ஒரேயொரு நிபந்தனை விதித்துள்ளாராம். அதாவது பாஸ்கர் தி ராஸ்கல் படத்தை பிற மொழிகளில் ரீமேக் செய்யும்போது அதிலும் தன்னையே ஹீரோயினாக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்துள்ளாராம்.

சித்திக் இயக்கிய பாடிகார்ட் படம் இந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு வெற்றி கண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

 

நீங்க நிறுத்தினா.. நானும் நிறுத்துவேன்! - 'குப்குப்' பிரியர்களை கெஞ்சிக் கேட்கும் லட்சுமி மேனன்

தமிழ் சினிமாவின் அதிர்ஷ்டலட்சுமியாகத் திகழும் லட்சுமி மேனன் ஒரு பக்கம் படிப்பில் கவனம் செலுத்திக் கொண்டே, சத்தமில்லாமல் ஒரு நல்ல காரியத்தில் இறங்கியிருக்கிறார்.

அது... வீட்டில், தெருவில், கடை வாசலில், பொதுவெளியில் என பேதமின்றி பீடி, சிகரெட், சுருட்டு என புகைத்துத் தள்ளுவோருக்கு எதிரான பிரச்சாரம்தான்.

நீங்க நிறுத்தினா.. நானும் நிறுத்துவேன்! - 'குப்குப்' பிரியர்களை கெஞ்சிக் கேட்கும் லட்சுமி மேனன்

'நீங்க நிறுத்தினா... நானும் நிறுத்துவேன்' என்ற வாசகத்துடன் இந்த பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளார் லட்சுமி. அப்படின்னா.. புகைப்பிடிப்பவர்கள் அந்தப் பழக்கத்தை நிறுத்தினால், லட்சுமி மேனன் தன்னிடமுள்ள கெட்ட பழக்கம் எதையாவது விட்டுவிடுவாராம்.

லட்சுமி மேனன் சொல்வதைப் போலவே, ஒவ்வொருவரும் தங்களின் அன்புக்குரியவர்களிடம், 'எனக்காக புகைப்பழக்கத்தை விடுங்கள்.. உங்களுக்காக எனது கெட்ட பழக்கம் எதையாவது கைவிடுகிறேன்,' என்று சொல்ல வேண்டும்.

இந்தப் பிரச்சாரத்தின் மூலம் ஒவ்வொருவரும் தங்கள் அன்புக்குரிய அப்பா, சகோதரன், கணவன், காதலனின் புகைப்பழக்கத்தை அடியோடு ஒழிக்க முடியும். இது உண்மையிலேயே ஒரு நல்ல பிரச்சாரம் என்று கூறியுள்ளார் லட்சுமி மேனன்.

பத்து சதவீதம் பலன் தந்தால் கூட இது நல்ல பிரச்சாரம்தான்!

 

உரிமம் இல்லாத பாடல் சி.டி.க்கள் விற்பனை: சி.பி.சி.ஐ.டி.யில் இளையராஜா புகார்

சென்னை: தான் இசையமைத்த பாடல்களின் சி.டி.க்கள் உரிமம் இன்றி சென்னை பர்மா பஜாரில் விற்பனை செய்யப்படுவதாக சி.பி.சி.ஐ.டி.யில் இசையமைப்பாளர் இளையராஜா புகார் செய்தார்.

சென்னை எழும்பூரில் உள்ள சி.பி.சி.ஐ.டி. தலைமை அலுவலகத்தில் இளையராஜா சார்பில், அவரது வக்கீல் புதன்கிழமை அளித்த புகார் மனுவில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

உரிமம் இல்லாத பாடல் சி.டி.க்கள் விற்பனை: சி.பி.சி.ஐ.டி.யில் இளையராஜா புகார்

"நான் இசையமைத்த பாடல்களை சில நிறுவனங்களுக்கு மட்டும் சி.டி.யாக குறிப்பிட்ட காலத்துக்கு விற்பனை செய்ய அனுமதி வழங்கியிருந்தேன். இதற்காக அவர்களிடம் ஒப்பந்தம் செய்திருந்தேன். இந்நிலையில், ஒப்பந்த காலம் முடிந்த பின்னரும் சிலர், எனது பாடல்களை எவ்வித உரிமமும், அனுமதியும் இன்றி விற்பனை செய்து வருகின்றனர். குறிப்பாக பர்மா பஜாரில் உள்ள சில கடைகளில் உரிமம் இல்லாத எனது பாடல் சி.டி.க்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

இதன் விளைவாக பல்வேறு வகைகளில் எனக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே நான் இசையமைத்த பாடல்களை எவ்வித உரிமமோ, அனுமதியோ இன்றி விற்பவர்கள் மீது காப்புரிமைச் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

தயாரிப்பாளர் சங்கம் சார்பில்...

இதேபோல தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் அதன் தலைவர் எஸ்.தாணு, துணைத் தலைவர் எஸ்.கதிரேசன், நிர்வாகிகள் டி.ஜி. தியாகராஜன் ஆகியோர் சி.பி.சி.ஐ.டி. தலைமை அலுவலகத்தில் ஒரு மனு கொடுத்தனர்.

இந்த மனுவில், தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளர்கள் இசையமைத்த பாடல்களின் சி.டி.க்களை உரிய அனுமதியின்றி தயாரிப்பவர்கள் மீதும், விற்பனை செய்பவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த இரு மனுக்களையும் சி.பி.சி.ஐ.டி. திருட்டு சி.டி. ஒழிப்புப் பிரிவு எஸ்.பி. ஜெயலட்சுமி பெற்றுக் கொண்டார்.

 

சென்சாரில் சிக்கி சின்னாபின்னமாகின்றன படங்கள்! - ஒரு இயக்குநரின் குமுறல்

தமிழ் சினிமாக்கள் சென்சாரில் சிக்கி சின்னா பின்னமாகின்றன என்று குமுறியுள்ளார் ஒரு புதிய இயக்குநர்.

அவர் பெயர் பெருமாள் பிள்ளை. எடுத்துள்ள படம் திலகர். பிங்கர் பிரிண்ட் பிக்சர்ஸ் என்கிற புதிய நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தை கலைப்புலி இண்டர் நேஷனல் வெளியிடுகிறது என்றதும் படம் பற்றிய எதிர்பார்ப்பு கூடியுள்ளது.

படம்பற்றிய அனுபவங்களை இயக்குநர் பெருமாள்பிள்ளை நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார்...

சென்சாரில் சிக்கி சின்னாபின்னமாகின்றன படங்கள்! - ஒரு இயக்குநரின் குமுறல்

திலகர் எதைப் பற்றிய படம்?

இது 1990ல் திருநெல்வேலி மாவட்டத்தில் வாழ்ந்த ஒருவர் பற்றிய கதைதான். அவருடைய கதையில் கொஞ்சம் கற்பனையும் கலந்து உருவாகியுள்ள படம். இப்படக்கதை தனியொருவரின் கதை என்றில்லாமல் கிராமம், மண், மக்கள், கலாச்சாரம் பற்றி யதார்த்தமாக கூறும் படமாகவும் இருக்கும்.

புதுமுகங்களை வைத்து இயக்கியது ஏன்?

இதில் பிரபலங்களை வைத்து எடுத்தால் அவர்களது முகம்தான் தெரியும். அந்தப் பாத்திரம் தெரியாது. எனவே நிறையபேரை புதுமுகங்களையே வைத்து எடுத்தேன். அறிமுகம் துருவாதான் நாயகன். பிரபல நடிகர் என்றால் கிஷோர் இருக்கிறார். பணத்துக்காக படங்கள் பண்ணாத நடிகர் அவர். இந்தக் கதையைக் கேட்டு பிடித்துப் போய் உடனே சம்மதித்தார். மிருதுளா பாஸ்கர், அனுமோல் நாயகிகளாக நடிக்கின்றனர்.

படத்தில் குறிப்பிட்டுச் சொல்லும்படி உள்ள விஷயங்கள்...

நெல்லை மாவட்டத்தில் மைசூரைப்போலவே குலசேகரப் பட்டினத்தில் நடக்கும் தசராவிழா மிகவும் பிரபலம். இருபது லட்சம் பேர் கூடுகிற திருவிழா அது. அதை இந்தப் படத்தில் முழுமையாகக் காட்டியிருக்கிறோம்.

படத்தில் ஒரு வாழைத்தோப்பு வரவேண்டும் அதில்தான் பிரச்சினை ஆரம்பமாகும். அந்தத் தகராறில் அந்த வாழைத் தோப்பையே வெட்டி நாசம் செய்து அழிக்க வேண்டும். ஆனால் யாரும் அப்படி எடுக்க தோப்பு தர தயாராக இல்லை. காய்த்த பிறகு வேண்டுமானால் முழு தோப்பாக தருகிறோம். இப்படி நாசம் செய்ய நாங்க எந்த விலை கொடுத்தாலும் தர மாட்டோம். வெட்டி அழிக்க விடமாட்டோம்
என்றார்கள். அதனால் நாங்களே ஒரு ஏக்கரில் ஒரு தோப்பு போட்டு, வளர்த்து அதில்தான் இந்தப் படக் காட்சிகளை எடுத்தோம்.

படத்தை 63 நாட்களில் எடுத்து முடித்து விட்டோம். ஆனால் அதற்கான முன் தயாரிப்புக்குப் பல மாதங்கள் எடுத்துக் கொண்டோம்

படக்குழுவினர் பற்றி..?

'தமிழ்ப் படம்' கண்ணன்தான் இசை. இனி அவர் 'திலகர்' கண்ணன் என்று பேசப்படுவார். அந்த அளவுக்கு உழைத்திருக்கிறார். இப்படத்தை அவர் பெரிதும் எதிர்பார்த்துள்ளார். ஒளிப்பதிவு ராஜேஷ் யாதவ். இவர் 'பொக்கிஷம்' ,'மழை', 'ராமன்தேடிய சீதை' படங்களின் ஒளிப்பதிவாளர். அவருக்கும் இது முக்கியமான படமாக இருக்கும். எடிட்டர் கோலா பாஸ்கர், இவர் செய்த உதவியும் கொடுத்த ஒத்துழைப்பும் மறக்க முடியாதது.

உண்மைச் சம்பவம் என்றால் பிரச்சினை வர வாய்ப்பு உள்ளதே..?

எல்லாமே உண்மையான நிகழ்வுகள் அல்ல.. கற்பனைக் காட்சிகளும் கலந்துதான் இருக்கின்றன. பிரச்சினை ஏதுமில்லை. தங்கள் ஊர் சம்பந்தப்பட்ட கதை என்றதும் மகிழ்ச்சி அடைந்த நெல்லை மக்கள் எங்களுக்கு நல்ல ஒத்துழைப்பு கொடுத்தார்கள்.

சென்சார் முடிந்ததா?

அதை ஏன் கேட்கிறீர்கள்... படத்தில் ஒரு ஆபாசம் இல்லை. தொப்புள் தெரியும் காட்சி இல்லை. ஆபாச வசனம் இல்லை. ஆனால் 'ஏ' சான்றிதழ் கொடுத்திருக்கிறார்கள். கேட்டால் வன்முறை என்கிறார்கள்.

இதில் அப்படி ஒன்றும் வன்முறைக் காட்சி இல்லை. பல படங்களில் வருவதைப்போல ரத்தம் சொட்ட சொட்ட வன்முறைக் காட்சி கூட நான் வைக்கவில்லை.

இவர்கள் 'யூ' சான்றிதழ் கொடுத்து இருக்கிற படங்களை ஒப்பிட்டால் இதில் ஒன்றுமே இல்லை. வன்முறை கூடாது என்று பேசுகிற படம் இது.

பருத்திவீரனுக்கே யு கொடுத்தார்களே...

வன்முறை, குழுவாக கற்பழித்த கொடூரக் காட்சிகள் கொண்ட 'பருத்திவீரன்' படத்துக்கே அனுமதி கொடுத்திருக்கிறார்கள்.

நிறைய படங்கள் ஆபாசம், வன்முறை, அருவருப்பு.. கொலைசெய்து கழுத்தை அறுத்து ரத்தம் வருவதைப் பார்த்து ஆனந்தம் அடைவது போல் காட்சிகள்.. அதற்கெல்லாம் 'யூ' சான்றிதழ் கிடைக்கிறது . நாலைந்து தலைகளை துண்டாக்கிப் போடுகிற படங்களுக்குக்கூட' ஏ' இல்லை. இதற்கு மட்டும் பிடிவாதமாக அடம் பிடித்தார்கள்.

சிக்கன் பிரியாணி சாப்பிட்ட பிறகுதானே தணிக்கை...

தெருவெங்கும். சிக்கன் கடைகள், மட்டன் கடைகள் இருக்கின்றன. தினமும் ஆயிரக்கணக்கான கோழிகள், ஆடுகள் வெட்டிக் கொல்லப் படுகின்றன.

ஆனால் படங்களில் ஆடு, கோழி, காட்டக் கூடாது. காட்டினால் துன்புறுத்தப் படுகிறதாம். ஏன்.. சென்சார் போர்டில் படம் பார்க்கிற போதே சிக்கன் பிரியாணி சாப்பிட்டு விட்டுதான் வந்து உட்கார்கிறார்கள்.

வந்து உட்கார்ந்ததும் ஆடு கோழி, காட்சி இருக்கிறதா என்றுதான் பார்க்கிறார்கள். ஆனால் படங்களில் ஆடு, கோழி, காட்டக் கூடாது. வந்தால் விலங்குகள் துன்புறுத்தப் படுகிறதாம். ஏனிந்த முரண்பாடு?

முரண்பாடுகள்

நம் சென்சார் போர்டில் நிறைய சிக்கல்கள், பாகுபாடுகள் முரண்பாடுகள் உள்ளன. நம் தணிக்கை துறை இந்திய அரசின் தணிக்கை துறைதான். மத்திய அரசின் தணிக்கை துறைதான். ஆனால் மாநிலத்துக்கு மாநிலம் வெவ்வேறு அளவுகோல் உள்ளது. வெவ்வேறு பார்வை உள்ளது. இது தமிழ்நாட்டுக்கு மட்டும் உள்ள தணிக்கைத் துறை அல்ல. கேரளாவில், ஆந்திரவில், கர்நாடகத்தில் அனுமதிப்பதை இங்கு விடுவதில்லை. இங்கே கூட ஒருவர் எடுக்கும் படத்தில் உள்ளதை விடுவார்கள். மற்றொருவர் படத்தில் வெட்டுவார்கள்.

நான் இவர்களுடன் போராடி சோர்வு அடைந்து விட்டேன். சென்சார் போர்டில் இங்கு படம் பார்ப்பவர்களுக்கு வட்டார மொழி தெரிவதில்லை. நல்ல வார்த்தைகள் எவை என்று தெரிவதில்லை.கெட்ட வார்த்தைகள் எவை என்று புரிவதில்லை.

ஒரு படைப்பாளி இவர்களிடம் படும்பாடு பெரிய போராட்டம். அவர்களுக்கு சினிமாவும் தெரியவில்லை. மக்கள் வாழ்க்கையும் தெரிய வில்லை. யதார்த்தமும் தெரிவதில்லை. படாதபாடு படுத்துகிறார்கள்.

ஒரு படத்துக்கு ' யூ' சான்றிதழ் என்பது வரி விலக்கிற்கு உதவி செய்வது. எங்கள் படத்துக்கு ' ஏ' சான்றிதழ் கொடுத்துள்ளார்கள். போராடி பார்த்துவிட்டு வேறுவழி இல்லாமல் வாங்கிவிட்டோம். இவர்களிடம் சிக்கி சின்னா பின்னமாகிக் கொண்டிருக்கிறது தமிழ் சினிமா.

-இவ்வாறு பெருமாள் பிள்ளை கூறினார்.

 

அட.. சிம்புவின் வாலு படத்துக்கு க்ளீன் யு!

சிம்பு - ஹன்சிகா நடித்த வாலு படத்துக்கு சென்னை தணிக்கை குழு எந்த வெட்டுமின்றி யு சான்று வழங்கியது.

பொதுவாக சிம்பு படங்களுக்கு கொஞ்சம் அசைவ இமேஜ் உண்டு. இரட்டை அர்த்தம், நெருக்கமான காதல் காட்சிகள் என்று இருக்கும். எனவே சென்சாருக்கும் கொஞ்சம் வேலைகள் இருக்கும்.

அட.. சிம்புவின் வாலு படத்துக்கு க்ளீன் யு!

ஆனால் வாலு படத்தில் சென்சாருக்கு வேலையே வைக்கவில்லையாம் இயக்குநர் விஜய் சந்தர். 154 நிமிடங்கள் ஓடும் வாலு படத்தை நேற்று தணிக்கை செய்த அதிகாரிகள் படத்தில் எந்தக் காட்சியையும் வெட்டாமல் யு சான்று அளித்துள்ளனர்.

இதனை ட்விட்டரில் தெரிவித்துள்ள சிம்பு, "வாலு படம் க்ளீன் யு சான்று பெற்றுள்ளது. மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. ரசிகர்களுக்கு ஸ்பெஷல் நன்றி," என்று குறிப்பிட்டுள்ளார்.

 

நீங்க விட்டுடுங்க, நானும் விட்டுடுறேன்: லக்ஷ்மி மேனன்

திருவனந்தபுரம்: மக்கள் புகைப்பிடிக்கும் பழக்கத்தை விட்டுவிட நடிகை லக்ஷ்மி மேனன் புதிய இயக்கத்தை துவங்கியுள்ளார்.

பேரழகி என்று கூற முடியாது. ஆனால் பக்கத்து வீட்டு பெண் போன்று இருக்கும் லக்ஷ்மி மேனன் கோலிவுட் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துவிட்டார்.

நீங்க விட்டுடுங்க, நானும் விட்டுடுறேன்: லக்ஷ்மி மேனன்

அவர் ப்ளஸ் டூ தேர்வு எழுத கேரளா சென்றுள்ளார். இந்நிலையில் அவர் நடிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டதாக செய்தி பரவியது. ஆனால் அவரோ தேர்வுக்கு மத்தியில் பொதுநலனில் அக்கறை காட்டியுள்ளார்.

இது குறித்து லக்ஷ்மி மேனன் ஃபேஸ்புக்கில் கூறியிருப்பதாவது,

புகைப்பிடிக்கும் பழக்கத்திற்கு எதிராக ஒரு இயக்கம் துவங்கப்பட்டுள்ளது. உங்களின் அன்பானவர்கள் புகைப்பிடிக்கும் பழக்கத்தை கைவிட நீங்கள் உங்களிடம் உள்ள ஏதாவது கெட்ட பழக்கத்தை விட்டுவிடுங்கள். நீங்கள் புகைப்பிடிக்கும் பழக்கத்தை விட நான் என் கெட்ட பழக்கங்கள் சிலவற்றை விடுகிறேன். இந்த தகவலை அதிகமாக பகிருங்கள் என்று கூறி நீங்கள் விட்டுவிடுங்கள், நானும் விட்டுவிடுகிறேன்(U quit, I quit) என்று வாசகம் அடங்கிய பேப்பருடன் தான் போஸ் கொடுத்துள்ள புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.