சென்னை: வாங்கும் பொருளின் தரம் குறைவாக இருந்தால் அந்த பொருளுக்கான விளம்பரப் படத்தில் நடிகர், நடிகையர்கள் மீது வழக்குப் போடலாம் என்று நுகர்வோர் தீர்பாயத்தலைவர் ரகுபதி கூறியுள்ளார்.
ஊசி முதல் வீடு வரை எந்தப் பொருளாக இருந்தாலும் நடிகையோ, நடிகரோ, கிரிக்கெட் வீரரோ வந்து சொன்னால் கண்ணை மூடிக்கொண்டு வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம். வாங்கியப் பின்னர்தான் தெரியும் அந்தப் பொருளின் தரம். ஈமு கோழியில் லட்சக்கணக்கான பணத்தை முதலீடு செய்த விவசாயிகள் கூட ஏமாந்த பின்னர் நடிகர்கள் சொன்னதால்தான் ஈமு கோழியில் பணத்தை முதலீடு செய்ததாக கூறினர்.
அந்த அளவிற்கு நடிகர், நடிகையர்கள், விளையாட்டு வீரர்கள் சொல்வதை நம்பி பொருட்களை வாங்குகின்றனர். அவ்வாறு நம்பி வாங்கப்படும் பொருளின் தரம் குறைவாக இருந்தால் விளம்பரத்தில் நடித்த நடிகர், நடிகையர்கள் மீது வழக்குத் தொடரலாம் என்று நீதிபதி ஆர். ரகுபதி கூறியுள்ளார்.
தமிழ்நாடு மாநில நுகர்வோர் குறைதீர்வு தீர்ப்பாயத்தில் சனிக்கிழமையன்று `நுகர்வோர் சட்டத்தை தீவிரமாக அமல்படுத்துவது' என்ற தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற நீதிபதி ஆர்.ரகுபதி பேசியதாவது:-
சினிமா நடிகர், நடிகைகள், விளையாட்டு வீரர்கள், தனியார் நிறுவனங்களின் விளம்பரங்களில் இடம் பெறுகின்றனர். அந்த விளம்பரங்களில், அந்த நிறுவனம் உற்பத்தி செய்யும் பொருட்கள் தரமானது, அந்த நிறுவனத்தின் சேவை தரமானது என்று உத்தரவாதம் அளித்து பேசுகின்றனர்.
இப்படி விளம்பரம் செய்து, பொருட்களை விற்பனை செய்யும் அந்த நிறுவனங்கள், தரமற்ற பொருட்கள், குறைபாடுள்ள சேவைகள் வழங்கும்பட்சத்தில், அந்த நிறுவனத்தின் மீது பொதுமக்கள் வழக்கு தொடரும்போது, விளம்பரத்தில் வந்த நடிகர், நடிகைகள், கிரிக்கெட் வீரர்கள் ஆகியோரை எதிர் மனுதாரர்களாக சேர்த்து வழக்கு தொடரலாம் இவ்வாறு நீதிபதி ரகுபதி கூறினார்.
நடிகர், நடிகையர்கள் விளம்பரத்திற்காக பணத்தை வாங்கிக் கொண்டு நடிக்கும் முன் ஒருமுறைக்கு இருமுறை யோசித்துக்கொள்வது நல்லது.