ஜில்லாவில் போலீசா வர்றாராம் விஜய்!

ஜில்லாவில் போலீசா வர்றாராம் விஜய்!

துப்பாக்கியில் ராணுவ வீரர், தலைவாவில் 'அரசியல் புள்ளி' என நடித்த விஜய், அடுத்த படமான ஜில்லாவில் போலீஸ் வேடத்தில் நடிப்பதாக செய்திகள் கசிந்துள்ளன.

சமீபத்தில் சென்னை ஆவடியில் உள்ள காவலர் மைதானத்தில் விஜய்யும் மற்றவர்களும் பங்கேற்ற காட்சியைப் பார்த்த சிலர் வெளியிட்ட தகவலில் அடிப்படையில் இந்த செய்தி பரவி வருகிறது.

ஜில்லா படத்தை முருகா படம் இயக்கிய நேசன் இயக்குகிறார்.

விஜய்க்கு மீண்டும் இந்தப் படத்தில் ஜோடியாகியுள்ளார் காஜல் அகர்வால்.

முக்கிய வேடத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லால், பூர்ணிமா பாக்யராஜ் ஆகியோர் நடிக்கின்றனர். டி.இமான் இசையமைக்கிறார். சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிக்கிறது.

படம் மதுரையை பின்னணியாக கொண்டு உருவாகிறது. இந்தப் படத்தில் விஜய் முஸ்லிம் இளைஞராக நடிக்கிறார் என முதலில் செய்தி வெளியாகி, பலவிதமான கமெண்ட்கள் பறக்க காரணமானது நினைவிருக்கலாம்.

ஏற்கெனவே போக்கிரி படத்தில் போலீசாக சில காட்சிகளில் தோன்றினார் விஜய் என்பது நினைவிருக்கலாம்.

 

அர்ஜூன் மகளுக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள்!

அர்ஜூன் மகளுக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள்!

சென்னை: அர்ஜுன் மகள் ஐஸ்வர்யாவுக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் வரத் தொடங்கியுள்ளன.

அர்ஜூன் மகள் ஐஸ்வர்யா அறிமுகமாகும் படம் பட்டத்து யானை. இதில் அவர் விஷாலுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

இந்தப் படம் குறித்து பாஸிடிவான செய்திகள் பரவியிருப்பதால், முதல் படத்திலேயே எதிர்ப்பார்ப்புக்குரிய நாயகியாகிவிட்டார்.

படத்தின் ப்ளஸ்களுள் ஐஸ்வர்யாவின் அழகும் நடிப்பும் முக்கியமானவை என்று கூறப்படுவதால், அவரை ஒப்பந்தம் செய்ய இரு நிறுவனங்கள் முனைப்பு காட்டி வருகின்றன.

ஆனால் அர்ஜூனோ படம் வெளியான பிறகு புதிய படங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தலாம் என கூறி அனுப்பி வைத்துவிட்டாராம். இதற்கிடையே அர்ஜூனின் நெருக்கமான நண்பர்கள் நிறைய உள்ள தெலுங்குப் பட உலகிலும் ஐஸ்வர்யாவுக்கு ஆஃபர்கள் வந்துள்ளனவாம்.

ஐஸ்வர்யாவுக்கு கிடைத்துள்ள இந்த கூடுதல் முக்கியத்துவம் கோலிவுட்டின் மற்ற நாயகிகளுக்கு கொஞ்சம் கலக்கத்தை உண்டாக்கியுள்ளது.

ஐஸ்வர்யா நடித்துள்ள பட்டத்து யானை இந்த வெள்ளிக்கிழமை வெளியாகிறது.

 

ரஜினிக்கு மரியாதை செய்ய 'லுங்கி டான்ஸ்' ஆடும் ஷாரூக்- தீபிகா!

ரஜினிக்கு மரியாதை செய்ய 'லுங்கி டான்ஸ்' ஆடும் ஷாரூக்- தீபிகா!

'லுங்கி டான்ஸ் - தலைவருக்கு மரியாதை' ( Lungi Dance - Thalaivar Tribute) எனும் பெயரில் சூப்பர் ஸ்டார் ரஜினிக்காக ஒரு பாடலை உருவாக்கியுள்ளனர் பாலிவுட் கலைஞர்கள்.

ஷாரூக்கான், தீபிகா படுகோன் இந்தப் பாடலுக்கு நடனமாடியுள்ளனர். ஷாரூக்கானின் சென்னை எக்ஸ்பிரஸ் பட வெளியீட்டை ஒட்டியே இந்தப் பாடல் உருவாக்கப்பட்டாலும், படத்துக்கும் பாட்டுக்கும் சம்பந்தமில்லை என அறிவித்துள்ளனர்.

ஹனி சிங் உருவாக்கியுள்ள இந்த லுங்கி டான்ஸ், டி சீரிஸ் நிறுவனத்தால் வெளியிடப்படுகிறது.

சில தினங்களுக்கு முன் டி சீரிஸ் நிறுவன தலைவர் பூஷன் குமார் இந்தப் பாடல் குறித்து ஷாரூக்கானிடம் கூறி, நடனமாடக் கேட்டபோது, "ரஜினியை யாருக்குத்தான் பிடிக்காது! அவரது தீவிர ரசிகர்களில் ஒருவன் என்ற முறையில் இந்தப் பாடலுக்கு நடனமாடுவது எனக்குப் பெருமை," என்றவர் தீபிகாவிடம் இதுகுறித்துப் பேசியபோது, மிக விருப்பத்துடன் ஒப்புக் கொண்டாராம் லுங்கி டான்ஸில் ஆட.

"ரஜினி சார் மிகப் பெரிய நடிகர், சாதனையாளர். அவரைக் கவுரவிக்க இந்தப் பாடல் மூலம் எங்களுக்கு வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி," என்றார் ஷாரூக்கான். இந்தப் பாடலுக்கு சின்னி பிரகாஷ் நடனம் அமைத்துள்ளார்.

தலைவருக்கு மரியாதை என்ற தலைப்புடன் விரைவில் இந்தப் பாடல் வெளியாகிறது.

 

'நான் அண்ணா... என் மகன் விஜய் எம்ஜிஆர்...!' - எஸ்ஏசி பேச்சு?

'நான் அண்ணா... என் மகன் விஜய் எம்ஜிஆர்...!' - எஸ்ஏசி பேச்சு?

சென்னை: தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, இனி வரும் அரசியலில் நான் அண்ணா... என் மகன் விஜய்தான் எம்ஜிஆர், என்று இயக்குநர் எஸ் ஏ சந்திரசேகரன் சொன்னதாக வெளியாகியுள்ள செய்திகள் இரு கழகங்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது விஜய்க்கு பெரும் நெருக்கடியாக அமையும் என்று திரையுலக வட்டாரத்தில் பேசப்படுகிறது.

சினிமாவில் நடிக்க ஆரம்பித்த போதே அரசியலை மனதில் வைத்து மகனுக்கு இளைய தளபதி என்று பட்டம் சூட்டிவிட்டவர் எஸ் ஏ சந்திரசேகரன். இத்தனைக்கும் அன்றைக்கு அவர் ஒரு நடிகராகவே யார் மனதிலும் இடம்பெறாத நேரம். காதலுக்கு மரியாதை வரை சுமாரான வெற்றிகள்தான். அதன் பிறகு வந்த வெற்றிகளை அரசியல் பிரவேசத்துக்கான முன்னோட்டமாகவே பார்த்தனர்.

அதன் பிறகு ரசிகர் மன்றத்தை மக்கள் இயக்கமாக மாற்றினர். அதற்கு தலைவராக எஸ்ஏ சந்திரசேகர்தான் இருக்கிறார்.

திமுக ஆட்சிக் காலத்தில் விஜய்யின் அரசியல் பிரவேச முஸ்தீபுகள் இரு தரப்பிலும் உரசலைத் தோற்றுவிக்க, சடாலென அதிமுகவுக்கு வெளிப்படையாக ஆதரவளித்தனர். அதிமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்ததும், அந்த வெற்றியில் தன் பங்கு ஒரு அணில் அளவுக்கு இருந்ததாக விஜய்யே அறிக்கை விடுத்தார்.

அதிமுக ஆட்சிக்கு வந்த முதல் ஒன்றரை ஆண்டுகளில் விஜய்க்கு பிரச்சினை ஏதுமில்லை. ஆனால் இரண்டாம் ஆண்டில் அவரால் வாய் திறந்து எதுவும் சொல்ல முடியாத நிலை.

வருங்கால முதல்வரே, ஜனாதிபதியே என்கிற ரேஞ்சுக்கு பிறந்த நாளுக்கு போஸ்டரெல்லாம் அடித்து, பிரமாண்ட பந்தல் போட்டும், அதைக் கொண்டாட முடியாமல் கமுக்கமாகப் பிரிக்க வேண்டிய நிலை.

இந்த நிலையில் இனி வெளிப்படையாக தங்கள் இயக்கம் சார்பில் நிகழ்ச்சி நடத்த முடிவு செய்துள்ளார்களாம்.

"தமிழகத்தின் முதல்வராகும் தகுதி விஜய்க்கு இருப்பதாகவே நினைக்கிறார் எஸ்ஏசி. அவரைப் பொறுத்தவரை, திராவிட கட்சிகளில் அண்ணாவும் எம்.ஜி.ஆரும்தான் தலைவர்கள். அதேபோல இப்போது அண்ணா ரேஞ்சுக்கு தன்னையும், எம்.ஜி. ஆருக்கு நிகராக தன் மகனையும் ஒப்பிட்டு பல இடங்களிலும் பேசி இருக்கிறார். இது ஆட்சி மேலிடத்துக்கும் தெரியும். எதிர் தரப்புக்கும் தெரியும். இந்தப் பேச்சுதான் அவர்கள் இருவருக்கும் பெரும் பிரச்சினையைத் தரப் போகிறது. ஒருவேளை அதை வைத்தே அரசியலைத் தொடங்கிவிடலாம் என எஸ் ஏ சி தரப்பு நினைத்திருக்கிறதோ என்னமோ?" என்கிறார்கள் உளவுத் துறை வட்டாரங்களில்.

ஆனால் எஸ்ஏசி தரப்பிலோ, யாரிடமும் அப்படியெல்லாம் சொல்லவில்லை என்ற ஒற்றை வரி மறுப்போடு அமைதி காக்கிறார்கள்.

 

வேண்டாம் அருள்நிதி - தன்ஷிகா

அருள்நிதி ஜோடியாக நடிக்க மாட்டேன் என்று கறாராகக் கூறி கடுப்பேற்றியுள்ளார் நடிகை தன்ஷிகா.

பேராண்மையில் அறிமுகமாகி, வசந்த பாலனின் அரவான் படத்தில் நடித்து பிரபலமானவர் தன்ஷிகா.

பாலா இயக்கத்தில் பரதேசி படத்திலும் இரு நாயகிகளில் ஒருவராக நடித்தார்.

இப்போது யா யா படத்தில் மிர்ச்சி சிவாவுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

வேண்டாம் அருள்நிதி - தன்ஷிகா

இந்த நிலையில் சிம்புதேவன் இயக்கும் ஒரு கன்னியும் மூன்று களவாணிகளும் படத்தில் நடிக்க தன்ஷிகாவைக் கேட்டுள்ளனர்.

ஆனால் தன்ஷிகாவோ, அட்வான்ஸுடன் வந்தவர்களை அற்பமாகப் பார்த்ததோடு, "ஜனநாதன், வசந்த பாலன், பாலா போன்ற பெரிய இயக்குநர்களின் படங்களில் நாயகியாக நடித்துள்ள நான், அருள்நிதி போன்ற வளரும் நடிகருடன் நடிக்க முடியாது," என்று கூறிவிட்டாராம்.

தன்ஷிகா நடிக்க மறுத்த வேடத்தில்தான் இப்போது பிந்து மாதவி நடிக்கிறாராம்.

 

மசாலா சாதத்தை ரம்ஜானுக்கு பரிமாற விரும்பும் தயாரிப்பு, மறுக்கும் இயக்கம்

சென்னை: பாசத்திற்குரிய தம்பி நடித்து திரைக்கு வர தயாராக இருக்கும் படம் ‘வாசனை சாதம்'. படத்தின் பெயருக்கு ஏற்றார் போல், வரும் ரம்ஜானுக்கு ரசிகர்களுக்கு விருந்தாக்கினால் சுவையாகவும், வாசனையாகவும் இருக்கும் என தயாரிப்பு தரப்பு சொல்கிறதாம்.

ஆனால், சென்னை கிரிக்கெட் இயக்குநரோ மெத்தனமாக செயல் படுகிறாராம். விளக்கம் கேட்டால், ‘பொறுமை கடலினும் பெரிது' என குரல்வளை தெறிக்க குறள் சொல்கிறாராம். இதனால், தயாரிப்பு தரப்பில் இயக்குநர் மீது கொஞ்சம் அதிகமாகவே ஆவேசத்தில் உள்ளனராம்.

சாருக்கு, ஹீரோவின் அடுத்த படமும் தயார் என்பது மறந்து விட்டது போல என முணுமுணுக்கிறார்களாம் தயாரிப்பில்...

 

என்னது... கோச்சடையான் கைவிடப்பட்டதா? - தயாரிப்பாளர் விளக்கம்

கடந்த சில தினங்களாக ரசிகர்கள் மத்தியில் உலாவரும் பரபரப்பு கேள்வி கோச்சடையான் படத்தை கைவிட்டுவிட்டார்களாமே என்பதுதான்.

ஆரம்பத்தில் இந்தக் கேள்வியை யாரும் பொருட்படுத்தவில்லை. ஆனால் நாளாக ஆக, இந்த கேள்விகள் ஒரு செய்தியாகவே மாறும் அளவுக்கு பெரிதாகிவிட்டன.

சில இணையதளங்களும் அதேபோல செய்தியை வெளியிட்டு வருகின்றன. ஆனால் ரஜினி தரப்பிலோ, படத்தின் இயக்குநர் சௌந்தர்யா தரப்பிலோ எந்த விளக்கமும் இல்லை.

என்னது... கோச்சடையான் கைவிடப்பட்டதா? - தயாரிப்பாளர் விளக்கம்

இந்த நிலையில் படத்தின் தயாரிப்பாளர்களிடம் தொடர்பு கொண்டு நாம் விசாரித்தோம். இதுகுறித்து தயாரிப்பாளர்களில் ஒருவரான டாக்டர் முரளி மனோகர் கூறுகையில், "இதெல்லாம் மிகத் தவறான செய்திகள். இந்தப் படத்தின் ப்ரமோஷனை மனதில் வைத்து நாங்கள் திட்டமிட்ட ஓரிரு நிகழ்ச்சிகளை தவிர்க்க முடியாத காரணங்களால் மேற்கொள்ள முடியவில்லை.

ஆனால் எந்த குழப்பமும் இல்லாமல் மிக நம்பிக்கையுடன் இந்தப் படத்தை உருவாக்கியுள்ளனர். படத்தின் பிரமாண்டம் பார்த்தவர்களை பிரமிக்க வைத்துள்ளது. ரஜினி சார் டப்பிங்கைக் கூட முடித்துவிட்டார்.

இன்னும் கொஞ்சம் வேலைகள் முடிந்த பிறகு இசை மற்றும் பாடல்களை வெளியிடவிருக்கிறோம். ஆனால் அது கொஞ்சம் வித்தியாசமாக இருக்க வேண்டும் என்பதால், பொறுமை காக்கிறோம். ரஜினி சார் ரசிகர்கள் புரிந்து கொண்டு ஒரு நல்ல படத்துக்காக காத்திருப்பார்கள் என நம்புகிறேன்," என்றார்.

 

ட்வீட்டர், பேஸ்புக்கில் டயலாக்குகளைச் ‘சுடும்’ காமெடி ஸ்டார்

சென்னை: இப்போதைக்கு வரும் படங்களில் இவரது நகைச்சுவை காட்சிகளே இல்லை என்ற அளவிற்கு இந்த நடிகர் மிக வேகமாக வளர்ந்தவர். தனக்கென்று காமெடியில் தனி இடத்தைப் பிடித்த இவர், விரைவில் ஹீரோவாகவும் அறிமுகமாகிறார்.

ஆரம்பத்தில் இரட்டை அர்த்த வசனங்களுக்கு பேர் போனது இவரது காமெடி. ஆனால், தற்போது தாய் மீது ஆணையிட்டு ‘அந்த' மாதிரி பேசப்போவதில்லை என சத்தியம் செய்து கொடுத்திருக்கிறாராம் இவர்.

விதவிதமாக வித்தியாசமான அதேசமயம் தரமான காமெடியைத் தர வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் காமெடி சூப்பர்ஸ்டார், தற்போது தன் அடிபொடியை நம்புவதில்லையாம். ட்வீட்டரிலும், பேஸ்புக்கிலும் இலவசமாகக் கிடைக்கும் காமெடி டயலாக்குகளை தன் படத்தில் நச்சென்று பயன் படுத்திக் கொள்கிறாராம்.

வேலை இல்லாத கஷ்டத்தில் அல்லாடுகிறார்களாம் அடிபொடிகள்.