சென்னை: நவரச நாயகன் கார்த்திக் இன்று தனது 55 வது பிறந்த நாளில் அடியெடுத்து வைக்கிறார். அலைகள் ஓய்வதில்லை படத்தின் மூலம் 1981 ம் ஆண்டு தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமான கார்த்திக், தனது நடிப்பால் விரைவிலேயே "நவரச நாயகன்" என்ற பட்டத்தைப் பெற்றார்.
20 வயதில் நாயகனாக அறிமுகமான கார்த்திக் சுமார் 35 ஆண்டுகளாக திரையுலகில் தனக்கொரு இடத்தைத் தக்க வைத்துக் கொண்டிருக்கிறார். இதுவரை தமிழ் மற்றும் தெலுங்கு 2 மொழிகளிலும் 130 படங்களில் கார்த்திக் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது இளம் நாயகர்களுடன் இணைந்து கார்த்திக் நடித்து வருகிறார். சமீபத்தில் தனுஷுடன் இணைந்து கார்த்திக் நடித்த அனேகன் திரைப்படம் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது.
தொடர்ந்து அமரன் 2 திரைப்படத்தில் நாயகனாகவும், இளம்நடிகர் வைபவுடன் இணைந்து ஜிந்தா திரைப்படத்திலும் தற்போது நடித்து வருகிறார். கார்த்திக்கின் மகன் கவுதம் கார்த்திக் தற்போது தமிழ் சினிமாவில் நாயகனாக நடித்து வருகிறார்.
பிறந்தநாள் வாழ்த்துக்கள் கார்த்திக்...