நடிகை ஜெயமாலாவுக்கு கேரள நீதிமன்றம் நோட்டீஸ்!


பத்தனம் திட்டா: சபரிமலையில் அய்யப்பன் சிலையைத் தொட்ட விவகாரத்தில் வரும் அக்டோபர் மாதம் 18-ம் தேதி ஆஜராகுமாறு நடிகை ஜெயமாலாவுக்கு கேரள நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

சபரி மலை அய்யப்பன் கோயிலுக்குள் ஆண்கள் மட்டுமே செல்ல அனுமதி உண்டு. 10 வயதுக்கு கீழான சிறுமிகளும், 50 வயதுக்கு மேற்பட்ட பெண்களும் செல்லலாம்.

இந்த நிலையில் இந்த கோவிலுக்குள் இளம் வயதில் சென்று சாமி கும்பிட்டதாகவும், சாமி சிலையை தொட்டதாகவும் கன்னட நடிகை ஜெயமாலா முன்பு கூறி இருந்தார்.

இது பெரிய பிரச்சினையாகி, இது தொடர்பான வழக்கு கேரள நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இந்த வழக்கில் குற்றவாளிகளாக ஜோதிடர் உன்னிகிருஷ்ணன், அவரது உதவியாளர் ரகுபதி, நடிகை ஜெயமாலா ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு நீதிபதிகள், "ரன்னியில் உள்ள தலைமை ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் ஆகி இருப்பதால், அந்த கோர்ட்டில்தான் விசாரணை நடைபெற வேண்டும்'' என்று அறிவித்தனர்.

இந்த நிலையில் ரன்னி தலைமை ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நீதிபதி ரமேஷ் குமார் முன்னிலையில் இந்த வழக்கின் விசாரணை நேற்று நடைபெற்றது.

வழக்கை விசாரித்த நீதிபதி, "அக்டோபர் 18-ந் தேதி குற்றம் சாட்டப்பட்ட ஜெயமாலா உள்பட 3 பேரும் கோர்ட்டில் ஆஜர் ஆக வேண்டும்'' என்று நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.
 

ராம்கி - நிரோஷா வீடுகள் அடுத்த மாதம் ஏலம்!


சென்னை: ராம்கி - நிரோஷாவின் வீடுகள் ஆகஸ்ட் மாதம் ஏலத்துக்கு வருகின்றன. குறைந்தபட்ச ஏலத் தொகையாக ரூ 2 கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

செந்தூரப்பூவே படத்தில் ஜோடியாக நடித்தனர் ராம்கியும் நிரோஷாவும். தொடர்ந்து பல படங்களில் இவர்கள் ஜோடியாக நடித்தனர். அதில் இருவருக்கும் காதல் மலர்ந்தது. ஜெமினி மேம்பாலம் அருகில் உள்ள ஜெமினி பார்சன் அபார்ட்மெண்ட் குடியிருப்பில் கணவன்- மனைவியாக வசித்து வருகிறார்கள்.

இந்த அபார்ட் மெண்டில் இவர்களுக்கு இரண்டு வீடுகள் உள்ளன. இந்த வீடுகளை அடமானம் வைத்து இந்தியன் ஓவர்சீஸ் வங்கியிலும், கார்ப்பரேஷன் வங்கியிலும் பல லட்சம் ரூபாய் கடனாகப் பெற்றனர். ஆனால் அதற்கு வட்டி செலுத்தவில்லை. இதனால் பாங்கிக்கு கொடுக்க வேண்டிய கடன் தொகை கோடியை தாண்டியது.

இதையடுத்து வீடுகளை ஜப்தி செய்ய நடவடிக்கை எடுத்துள்ளன அந்த வங்கிகள். நிரோஷா-ராம்கி வீடுகள் அடுத்த மாதம் 18-ந்தேதி பகல் 1 மணிக்கு பகிரங்க ஏலத்தில் விடப்படும் என்று வங்கி நிர்வாகம் அறிவித்துள்ளது.

குறைந்தபட்ச ஏல கேட்பு தொகை ரூ.2 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
 

ஆஸ்திரியாவில் ஹனிமூன் கொண்டாடும் கார்த்தி!


கல்யாணம் முடிந்த கையோடு ஆஸ்திரியாவுக்கு ஹனிமூன் கொண்டாட பறந்துவிட்டார்கள் கார்த்தியும் அவர் மனைவி ரஞ்சனியும்.

ஐரோப்பியாவில் உள்ள ஆஸ்திரியா அழகிய மலைகள், கண்கவர் ஏரிகள், அதிவேக நதிகள், அடர்ந்த காடுகளுக்குப் பெயர் பெற்றது. ஆபத்தில்லாத அழகிய நாடு.

கல்யாணம் முடிந்ததுமே இங்குதான் ஹனிமூன் செல்ல வேண்டும் எனக் கூறிவிட்டாராம் கார்த்தி.

அடுத்த வாரம் வரை ஆஸ்திரியாவில் ஹனிமூன் கொண்டாடும் கார்த்தி தம்பதி, வரும் 20ம் தேதி சென்னை திரும்புகிறது.

அதன் பிறகு நேராக சகுனி படப்பிடிப்பில் பங்கேற்கவிருக்கிறார் கார்த்தி. இந்தப் படத்தை இயக்குபவர் சங்கர் தயாள். ஏற்கெனவே கணிசமாக படப்பிடிப்பு முடிந்துவிட்டது.

மனைவி வந்த நேரம், இந்தப் படம் பெரிய அளவுக்குப் பேசப்படும் என்ற நம்பிக்கையில் உள்ளார் கார்த்தி.
 

சாய்பாபா படத்தில் சச்சின்?


ஹைதராபாத்: ஸ்ரீசத்ய சாய்பாபா வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி எடுக்கப்படும் புதிய படத்தில் சச்சின் டெண்டுல்கரை நடிக்க வைக்க இயக்குநர் முயற்சி மேற்கொண்டுள்ளார்.

சமீபத்தில் மரணமடைந்த ஸ்ரீசத்ய சாய்பாபாவின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்கிறார் பிரபல தெலுங்கு இயக்குநர் கோடி ராமகிருஷ்ணா.

தெலுங்கில் உருவாகும் இப்படத்திற்கு 'பாபா சத்யசாயி' என்று பெயரிடப்பட்டுள்ளது.

இந்தப் படம் குறித்து இயக்குநர் கோடி ராமகிருஷ்ணா கூறுகையில், "சாய்பாபா படத்தில் தெண்டுல்கர், காவஸ்கர் ஆகியோரை நடிக்க வைக்க முயற்சி செய்து வருகிறோம். அவர்கள் இப்படத்தில் நடித்தால் இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளிலும் இப்படத்தை வெளியிடலாம். பட வசூலும் நன்றாக இருக்கும்.

இருவருமே பாபாவின் பெரிய பக்தர்கள் என்பதால், நடிப்பார்கள் என்று நம்புகிறேன்.

இப்படத்தில் நடிக்க நடிகை ஜமுனா ஒப்புக் கொண்டுள்ளார். வேறு நடிகர்-நடிகைகள் தேர்வு நடந்து வருகிறது," என்றார்.
 

ரஜினி தங்கியிருப்பது கேளம்பாக்கத்திலா, போயஸ் தோட்டத்திலா?


சென்னை: ரஜினி சிங்கப்பூரிலிருந்து வந்ததும், கேளம்பாக்கத்தில் பண்ணை வீட்டில் தங்குவார் என்று கூறப்பட்டது. இல்லையில்லை, போயஸ் கார்டனில்தான் தங்குவார் என சிலர் கூறிவந்தனர்.

ஆனால் உண்மையில் ரஜினி இப்போது தங்கியிருப்பது வீனஸ் காலனியில் உள்ள மூத்த மகள் ஐஸ்வர்யா வீட்டில்.போயஸ் கார்டனில் இன்னும் புதுப்பிப்புப் பணிகள் முடியவில்லையாம். வாஸ்து மற்றும் ரஜினியின் வசதிப்படி இன்னும் சில வேலைகள் நடந்து வருகின்றன.

ஆரம்பத்தில் கேளம்பாக்கம் பண்ணை வீட்டுக்கு போகத்தான் ரஜினி விரும்பினாராம். பண்ணை வீடும் பக்காவாக தயார் செய்யப்பட்டது. ரஜினி அங்கே தங்கப்போவதை அறிந்து போலீஸ் பாதுகாப்பையும் அந்தப் பகுதியில் பலப்படுத்தியிருந்தது தமிழக அரசு.

ஆனால் பேரக் குழந்தைகள் யாத்ரா, லிங்காவை பார்க்க முடியாது என்பதாலும், நகரை விட்டு தூரமாக இருப்பதாலும் பண்ணை வீட்டுக்கு போகும் யோசனையைக் கைவிட்டாராம் ரஜினி.

ஆழ்வார்பேட்டை வீனஸ் காலனியில் மூத்த மகள் ஐஸ்வர்யா வீடு இருக்கிறது. கணவர் தனுஷ் மற்றும் குழந்தைகளுடன் அவர் அந்த வீட்டில் வசிக்கிறார். அங்குதான் இப்போது ரஜினி தங்கியுள்ளார். அவர் தங்குவதற்காக அவ்வீட்டின் அறைகள் பிரத்யேகமாக புதுப்பிக்கப்பட்டு உள்ளன.

பேரக்குழந்தைகளுடன் விளையாடுவது ரஜினிக்கு புத்துணர்ச்சி ஏற்படுத்தும் என்பதாலும், குடும்பத்தினர் அனைவரும் அவர் உடனிருந்து நன்கு கவனித்துக் கொள்ள முடியும் என்பதாலும் ரஜினியின் இந்த புதிய முடிவை அனைவரும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டனர்.

அவ்வப்போது படவேலைகள் தொடர்பான கலந்துரையாடலை மட்டும் கேளம்பாக்கத்தில் வைத்துக்கொள்ள அவர் முடிவு செய்துள்ளார்.
 

மும்பை குண்டுவெடிப்பில் தப்பிய ஹன்ஸிகா!


மும்பை குண்டுவெடிப்பிலிருந்து அதிர்ஷ்டவசமாக தப்பியுள்ளார் நடிகை ஹன்ஸிகா.

மும்பையில் தொடர் குண்டுகள் வெடித்தபோது அவர் உதயநிதியுடன் 'ஒரு கல் ஒரு கண்ணாடி' பட ஷூட்டிங்கில் இருந்துள்ளார். இந்த ஷூட்டிங் நடந்த இடத்துக்குப் பக்கத்தில்தான் குண்டு வெடித்துள்ளது.

படப்பிடிப்பை முடித்து விட்டு ஹன்சிகா காரில் ஏறிப் புறப்பட்ட சில வினாடிகளில், அந்தப் பகுதியில் சக்திவாய்ந்த குண்டு வெடித்துள்ளது. இதனால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். உடனடியாக உறவினர்களையும் நண்பர்களையும் டெலிபோனில் தொடர்பு கொண்டு பேசினார்.

தான் பாதுகாப்பாக இருப்பதாக தெரிவித்தார். கடவுள் அருளால் தப்பினேன் என்று அவர் தெரிவித்தார்.

குண்டுவெடிப்பு குறித்து இயக்குநர் ராஜேஷ் கூறுகையில், "படப்பிடிப்பை முடித்து விட்டு ஹன்சிகா வீடு சென்ற வழியில்தான் குண்டு வெடிப்பு நடந்துள்ளது. நாங்கள் அனைவரும் படப்பிடிப்பு நடந்த இடத்திலேயே இருந்ததால் ஆபத்திலிருந்து தப்பினோம்," என்றார்.
 

நாக சைதன்யாவை அடிக்கப் பாய்ந்த காஜல்!


தொடர்ந்து கடும் சிக்கல்களில் சிக்கிக் கொள்வது காஜல் அகர்வாலின் வாடிக்கையாகிவிட்டது.

சமீபத்தில் தென்னிந்திய நடிகர்களை காஜல் அகர்வால் இழிவுபடுத்தி பேசி கண்டனத்துக்குள்ளானார். இப்போது தன்னுடைய ஹீரோவையே அடிக்கப் பாய்ந்து அதிர்ச்சி தந்துள்ளார்.

தெலுங்கில் தயாராகும் 'தாதா' படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து வருகிறது. படப்பிடிப்பில் காஜல் அகர்வாலுக்கும், நாக சைதன்யாவுக்கும் திடீர் வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில் காஜல் கோபமாகி நாக சைதன்யாவை அடிக்கப் பாய்ந்ததாக செய்தி வெளியாகியுள்ளது.

படப்பிடிப்பு குழுவினர் தடுத்திருக்காவிட்டால் இருவரும் அடித்துக் கொண்டிருப்பார்களாம். இந்த சண்டையை விலக்க வந்த படக்குழுவினரையும் கோபமாக திட்டிப் பேசினாராம் காஜல்.

காஜல் கோபத்துக்கு காரணம் தெரியவில்லை. இயக்குநர் தலையிட்டதால் மேற்கொண்டு பிரச்சினையை வளர்க்காமல் நடித்துக் கொடுத்தாராம் நாக சைதன்யா.

காஜல் அகர்வாலுக்கு சரியான பாடம் கற்பிக்க வேண்டும் என தெலுங்கு படவுலகில் முன்னணி இயக்குநர்களும் ஹீரோக்களும் குரல் எழுப்பி வருகின்றனர்.
 

கலாநிதி மாறன் மீது புகார் கொடுக்கிறார் விஜய்?


சென்னை: காவலன் பட விவகாரம் தொடர்பாக சன் குழும தலைவர் கலாநிதி மாறன், சன் பிக்சர்ஸ் சிஓஓ ஹன்ஸ்ராஜ் சக்சேனா, அய்யப்பன் ஆகியோரின் மீது புகார் தர தயாராகிறார் நடிகர் விஜய் என செய்திகள் வெளியாகியுள்ளன.

கடந்த 5 ஆண்டுகளாக சன் டிவி மற்றும் சன் பிக்சர்ஸுக்கு நெருக்கமாக காட்டிக் கொண்ட பெரும்பாலான சினிமா தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், தியேட்டர்காரர்கள் இப்போது அப்படியே நேர் எதிராகத் திரும்பியுள்ளனர்.

சன் பிக்சர்ஸ் வெளியிட்ட வேட்டைக்காரன், சுறா போன்ற படங்களில் நடித்த விஜய், காவலன் படத்தின் போது அதே சன் பிக்சர்ஸுக்கு எதிராக மாறினார்.

இந்த காவலன் படத்தை வெளியிட தொடர்ந்து சன் பிக்சர்ஸ் சக்சேனா, அய்யப்பன் ஆகியோர் தடைகளை ஏற்படுத்தியதால் உரிய தேதியில் வெளியாகாமல் 3 நாள் கழித்து படம் வெளியானதாம்.

இதனால் பல கோடி வசூல் இழப்பு ஏற்பட்டதாகவும் இதற்கு சன் பிக்சர்ஸ்தான் காரணம் என்றும் கூறி விஜய்யே நேரடியாக கலாநிதி மாறன், சக்சேனா, அய்யப்பன் மீது புகார் கொடுப்பார் என்று கூறப்படுகிறது.

ஏற்கெனவே 4 வழக்குகளில் சக்சேனா, அய்யப்பன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். கலாநிதி மாறன் மீது 2 மோசடி, மிரட்டல் புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் வரும் ஜூலை 26-ம் தேதி போலீசார் முன் விசாரணைக்கு ஆஜராகிறார்.

இந்த நிலையில் விஜய்யும் புகார் தரவிருப்பது, சன் குழுமத்துக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

அதேநேரம் சுறா பட நஷ்டத்தை ஈடுகட்டுமாறு விஜய்க்கு எதிராக முன்பு போர்க்கொடி தூக்கிய அனைத்து விநியோகஸ்தர்கள் மற்றும் தியேட்டர்காரர்கள் இப்போது அமைதியாகிவிட்டது குறிப்பிடத்தக்கது.
 

சக்சேனா, அய்யப்பன் மீது வல்லக்கோட்டை தயாரிப்பாளரும் புகார்


சென்னை: சன் பிக்சர்ஸ் சக்சேனா மீது மேலும் ஒரு வழக்கு பாய்ந்துள்ளது.

இந்த வழக்குக்கு காரணமான புகாரைக் கொடுத்திருப்பவர் வல்லக்கோட்டை படத் தயாரிப்பாளர். இந்த வழக்கிலும் சக்சேனா நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

திரைப்பட தயாரிப்பாளர்கள் மற்றும் வினியோகஸ்தர்களான செல்வராஜ், சண்முகவேல், ஹித்தேஷ் ஜபக் ஆகியோர் கொடுத்த புகாரின் அடிப்படையில், சன் பிக்சர்ஸ்' தலைமை நிர்வாகி ஹன்ஸ்ராஜ் சக்சேனா, அவரது கூட்டாளி அய்யப்பனை, போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்துள்ளனர்.

சில வழக்குளில் சக்சேனாவையும், அவரது கூட்டாளி ஐயப்பனையும், போலீஸ் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.

15ம் தேதி வெள்ளிக்கிழமை, சக்சேனா மீது மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ரூ 50 லட்சம் மோசடி

சென்னை, சாலிகிராமத்தை சேர்ந்தவர் ராஜா, வல்லக்கோட்டை என்ற படத்தை தயாரித்தார். இப்படத்தின் வினியோகம் தொடர்பான விவகாரத்தில், 50 லட்சம் ரூபாயை சக்சேனா மோசடி செய்து விட்டதாக, ராஜா, விருகம்பாக்கம் போலீசில் புகார் அளித்தார்.

அப்புகாரின் பேரில், சக்சேனா மற்றும் அவரது கூட்டாளி அய்யப்பன் ஆகியோரை கைது செய்ய அனுமதி அளிக்க வேண்டும் என்ற மனுவை அரசு வக்கீல்கள் கோபிநாத், மேரி ஜெயந்தி ஆகியோர், சைதாப்பேட்டை 23வது கோர்ட்டில் நேற்று தாக்கல் செய்தனர்.

அம்மனுவை ஏற்றுக்கொண்டு, வரும் 29ம் தேதி வரை சிறைக் காவலில் வைக்க மாஜிஸ்திரேட் அகிலா ஷாலினி உத்தரவிட்டார்.