பொதுவாக ஒரு இசை வெளியீட்டு விழா என்றால் நாற்பது ஐம்பது பேரை மேடை ஏற்றுவார்கள். படத்தின் நாயகன் நாயகி இயக்குநர் இசையமைப்பாளர் என அத்தனைப் பேரைப் பற்றியும் ஆஹா ஓஹோ எனப் பேசுவார்கள்.
நான்கைந்து மணி நேரங்களுக்குப் பிறகு விட்டால் போதுமென தலைதெறிக்க ஓட வேண்டியிருக்கும்.
ஆனால் நேற்று நடந்த ராமின் தரமணி விளம்பர வீடியோ பாடல் வெளியீட்டு நிகழ்ச்சி கொஞ்சம் வித்தியாசமாக அமைந்தது.
மேடையில் இரண்டு நாற்காலிகள்தான். ஒன்றில் இயக்குநர் பாரதிராஜா. மற்றொன்றில் கமல் ஹாஸன்.
அந்த இருவரும் பேசத் தொடங்கும் முன் தயாரிப்பாளர் ஜே சதீஷ்குமாரும், இயக்குநர் ராமும் வரவேற்புரை, அறிமுகவுரை நிகழ்த்தினர். அடுத்து ஆன்ட்ரியாவே இசையமைத்து எழுதி பாடிய ஆங்கிலப் பாடல் வெளியிடப்பட்டது.
முதலில் மைக் பிடித்தவர் பாரதிராஜா. கமலை அவர் எந்த அளவு நேசிக்கிறார் என்பதைப் பற்றி அழுத்தம் திருத்தமாகப் பேச ஆரம்பித்தார்.
"காலங்களை.. ஆண்டுகளைக் கடந்தது எங்கள் நட்பு. ஒரு 35... அல்ல 40 ஆண்டுகளுக்கும் மேல் (உடனே கமல், 'இதையெல்லாம் அவங்க கேட்டாங்களா..') தமிழ் சமூகத்தின் உலக அடையாளம் நம்ம கமல். அற்புதமான கலைஞன் மட்டுமல்ல, மிகச் சிறந்த மனிதன். கமலை நான் காதலிக்கிறேன். புதியவர்களை ஊக்கப்படுத்துவதில் கமலுக்கு நிகரில்லை...' என்றெல்லாம் பேசினார்.
அடுத்து கமல் பேச வந்தார்.
எடுத்ததுமே, 'பாரதிராஜாவுக்கு பரவால்ல... அவரு டைரக்டர்.. ஆனா நமக்கு அப்படியா... இன்னும் ஆன்ட்ரியா கூட டூயட் பாட வேண்டியிருக்கு. இங்க போயி வயசையெல்லாம் சொல்லிக்கிட்டு... அதுவும் நடிகைங்க முன்னாடி.. அப்படியே கண்டுக்காம போயிடணும்," என்று கலகலக்க வைத்தார்.
பின்னர் தனக்கும் பாரதிராஜாவுக்குமான நட்பு பற்றி அவர் கூறுகையில், "நான் இன்று இந்த அளவுக்கு உருவாகக் காரணமானவர்களில் ஒருவர் அவர். இவன்லாம் நடிப்பானா என பலரும் யோசித்தபோது, என்னை நம்பி ஒரு பெரிய பொறுப்பைக் கொடுத்து ஜெயிக்க வைத்தவர். அளவுக்கதிகமான நடிப்பு, அலைச்சல் காரணமாக நான் மருத்துவமனையில் படுத்த படுக்கையாகக் கிடந்தேன். அப்போது மருத்துவர்களிடம், 'இந்தாளை சீக்கிரம் குணமாக்கி அனுப்புங்கய்யா.. என் படத்துக்கு ஹீரோ இவன்தான்' என மருத்துவர்களிடம் சொல்லிவிட்டு, என்னிடம் கதை சொன்னார். அந்தக் கதைதான் பின்னர் பதினாறு வயதினிலே ஆக வந்தது.
அந்தப் படத்தைப் பார்த்துட்டு குருநாதர் பாலச்சந்தர், இவன் இப்படியெல்லாம் கூட நடிப்பான்னு எனக்குத் தெரியல... என்று மேடையில் பாராட்டினார். அந்த கவுரவத்துக் காரணம் இந்த பாரதிராஜாதான்.. அவர் என்னைக் காதலிப்பதாகச் சொன்னார். கற்றோரை கற்றாரே காமுறுவர் என்ற வகைக் காதல் இது,' என்றார்.