அடுத்தது 'அதிரடி' எல்லாம் இல்லீங்கணா: விஜய்

அடுத்தது 'அதிரடி' எல்லாம் இல்லீங்கணா: விஜய்

சென்னை: ஜில்லா படத்தை அடுத்து தான் நடிக்கும் படத்தின் பெயர் அதிரடி இல்லை என்று விஜய் தெரிவித்துள்ளார்.

விஜய்யின் தலைவா படம் பல பிரச்சனைகளைத் தாண்டி கடந்த 20ம் தேதி தமிழகத்தில் ரிலீஸ் ஆனது. விஜய் தற்போது நேசன் இயக்கத்தில் காஜல் அகர்வாலுடன் சேர்ந்து ஜில்லா படத்தில் நடித்து வருகிறார்.

படத்தில் விஜய் மதுரைக்கார தம்பியாக வருகிறார். இந்த படத்தை அடுத்து அவர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கிறார். இந்த படத்திற்கு அதிரடி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் இது குறித்து விஜய் கூறுகையில்,

நான் ஜில்லாவை முடித்துவிட்டு முருகதாஸ் படத்தில் நடிப்பது உண்மை. ஆனால் படத்தின் தலைப்பு அதிரடி இல்லை. அது வெறும் வதந்தி தான். படத் தலைப்பை இன்னும் முடிவு செய்யவில்லை என்றார்.

 

தொடரும் கற்பழிப்புகள்.. பேசுகிறோம்.. பேசுகிறோம்.. ஒன்னும் நடக்கலையே..: கொந்தளிக்கும் குஷ்பு!

சென்னை: இந்தியாவில் நாள்தோறும் பெண் பலாத்காரம் செய்யப்படுகிறாள்.. இதுபற்றி பேசுகிறோம்.. பேசுகிறோம்..பேசிக்கொண்டே இருக்கிறோம்..ஆனால் ஒன்றுமே நடக்கவில்லை என்று மும்பை பெண் போட்டோகிராபர் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் குறித்து நடிகை குஷ்பு ட்விட்டர் பக்கத்தில் கொந்தளிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

மும்பையில் பெண் போட்டோகிராபர் நேற்று பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து தமது ட்விட்டர் பக்கத்தில் கொந்தளிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் நடிகை குஷ்பு.

தொடரும் கற்பழிப்புகள்.. பேசுகிறோம்.. பேசுகிறோம்.. ஒன்னும் நடக்கலையே..: கொந்தளிக்கும் குஷ்பு!

நடிகை குஷ்பு இன்று தமது ட்விட்டர் பக்கத்தில், இதுபற்றி தேசிய அளவில் விவாதம் நடத்த அழைப்பு விடுப்போம். 2 நாட்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்துவோம், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஒரு புதிய பெயரை சூட்டுவோம்.. இந்த புதிய வழக்குக்காக நாமும் காத்திருப்போம்..

டெல்லியில் பலாத்காரம் செய்யப்பட்ட நிர்பயா ஒன்றும் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட முதல் பெண்ணும் அல்ல.. மும்பையில் பாதிக்கப்பட்ட பெண்ணும் கடைசியாகவும் இருக்கப் போவதில்லை.. இந்தியாவில் ஒவ்வொருநாளும் பெண்கள் பலாத்காரம் செய்யப்படுகின்றனர். இது பற்றி பேசுகிறோம்.. பேசுகிறோம்..பேசுகிறோம்.. ஆனால் ஒன்றுமே நடக்கவில்லையே...

என்னுடைய ஜனநாயக இந்தியாவில் ஏன் பெண்களால் அச்சமின்றி இருக்க முடிவதில்லை? என்று பதிவிட்டிருக்கிறார்.

 

தமிழ் மெட்ராஸ் கபேக்கு யுஏ சான்றிதழ்... ஆனால் திரையிட தியேட்டர்கள் மறுப்பு

சென்னை: சர்ச்சைக்குரிய மெட்ராஸ் கபே படத்தின் தமிழ்ப் பதிப்புக்கு தணிக்கை வாரியம், யுஏ சான்று அளித்துள்ளது. ஆனால் இந்தப் படத்தைப் போய் யார் திரையிடுவார்கள் என்று அத்தனை தியேட்டர் உரிமையாளர்களும் ஒதுங்கி விட்டதால் படத்தை திரையிட ஆளே இல்லை.

இதனால் படத் தயாரிப்பாளர்கள், குறிப்பாக இப்படத்தில் ரா அதிகாரியாக நடித்துள்ள ஜான் ஆப்ரகாம் குழம்பிப் போயுள்ளனராம்.

வெள்ளிக்கிழமை படம் தமிழகத்தில் ரிலீஸாகும் என்று படத் தயாரிப்புக் குழு சார்பில் தெரிவிக்கப்பட்டாலும் கூட ஒரு தியேட்டர் கூட கிடைக்காததால், இப்படத்தை திரையிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

 

மக்கள் டிவியில் மன நோய் பிரச்சினை தீர்க்கும் நிகழ்ச்சி

மக்கள் டிவியில் மன நோய் பிரச்சினை தீர்க்கும் நிகழ்ச்சி

மக்கள் டிவியில் கொட்டித் தீர்த்து விடு தோழி என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. மனநோய் பிரச்சினைகளை உளவியல்நிபுணர் மூலம் தீர்வு காண்கின்றனர்.

ஏராளமான மனநோய்களால் ஆட்கொள்ளப்படுகின்றனர். அலுவலகத்தில் பிரச்னை, வீட்டில் சண்டை, சச்சரவு, நண்பர்களுடன் இயல்பாக பேச இயலாமை என எதுவாக இருந்தாலும், பெண்களுக்கு உற்ற தோழியாய் இருந்து, தகுந்த ஆலோசனைகளை உரிய உளவியல் வல்லுனர் மூலமாக கொட்டித் தீர்த்துவிடு தோழி என்று நிகழ்ச்சியின் வாயிலாக தருகிறது, மக்கள் தொலைக்காட்சி.

மனிதர்களில் அனைவருமே ஏதோ ஒரு வகையில் பிரச்னைகளில் சிக்கிக் கொள்வது இயல்பு தான். என்றாலும் அவைகளிலிருந்து எத்தனை பேர் வெளியே வந்துள்ளனர் என்றால் மூன்றில் ஒரு பங்கு கூட இருக்காது எனலாம்.

காரணம், எதையும் பகிர்ந்து கொள்ள இயலாத நிலை, கருத்துகளையும் ஆலோசனைகளையும் அறிய முடியாத நிலை என சூழ்நிலைக் கைதியாக அடைப்பட்டுக் கிடக்கின்றான் மனிதன்.

இவர்களின் பிரச்சினையை தீர்ப்பதற்காகவே மக்கள் தொலைக்காட்சி வாரந்தோறும் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் இரவு 10.30 மணிக்கு கொட்டித்தீர்த்துவிடு தோழி நிகழ்ச்சியை ஒளிபரப்புகிறது. இந்த நிகழ்ச்சியின் மூலமாக பெண்களுக்குரிய பிரச்னைகள் குறித்து மருத்துவர் ஷாலினி ஆலோசனைகளை வழங்குகிறார். தொகுப்பாளினி ப்ரியா நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்.

 

ஆதலால் காதல் செய்வீர்- விமர்சனம்

-எஸ் ஷங்கர்

Rating:
3.0/5

நடிகர்கள்: சந்தோஷ், மணீஷா யாதவ், ஜெயப்பிரகாஷ், துளசி, பூர்ணிமா பாக்யராஜ்
ஒளிப்பதிவு: ஏஆர் சூர்யா
இசை: யுவன் சங்கர் ராஜா
தயாரிப்பு: ரெட்ஜெயன்ட் மூவீஸ் உதயநிதி ஸ்டாலின்
எழுத்து - இயக்கம்: சுசீந்திரன்

கல்லூரியில் ஒரே வகுப்பில் படிக்கும் சந்தோஷுக்கும் மனீஷாவுக்கும் காதல். மிடில் க்ளாசுக்கும் கொஞ்சம் மேம்பட்ட பெற்றவர்களை ஏமாற்றிவிட்டு, ஏக பொய் சொல்லி அந்தக் காதலை வளர்க்கிறார்கள். ஒரு நாள் மாமல்லபுரத்தில் ரூம் போட்டு எல்லை மீறுகிறார்கள். கர்ப்பமாகிறார் மனீஷா. பெற்றவர்களுக்குத் தெரியாமல் கருவைக் கலைக்க முயல, மாட்டிக் கொள்கிறார்கள். இருதரப்பு பெற்றோருக்கும் பேச்சுவார்த்தை நடக்கிறது. பெண் தரப்பு எப்படியாவது திருமணம் நடத்தி மானத்தைக் காத்துக் கொள்ளப் போராடுகிறது. பையன் தரப்போ எதையாவது சாக்குப்போக்குச் சொல்லி இந்தக் காதலை வெட்டிவிடப் பார்க்கிறது. கடைசியில் கருவைக் கலைத்தால் திருமணம் என்பதை நிபந்தனையாக வைக்கிறார்கள் பையன் வீட்டார். ஆனால் பெண் தரப்பில் மறுக்கிறார்கள்.

ஆதலால் காதல் செய்வீர்- விமர்சனம்

இந்தக் காதலின் முடிவு என்ன என்பதை நிச்சயம் திரையில் பாருங்கள்.

நாட்டு நடப்பைப் பார்த்து டைமிங்காக இந்தப் படத்தை எடுத்திருக்கிறார் சுசீந்திரன். நான்கு வரிக் கதை. வெகு சாதாரண சம்பவங்கள்தான். ஆனால் மனம் பதறுகிறது. அதுவும் அந்த க்ளைமாக்ஸும் யுவனின் பாடலும் மனசை அறுக்கிறது. யாரப்பா அந்த குழந்தை... கண்ணிலேயே நிற்கிறது இன்னும்!

படத்தின் பாராட்டப்பட வேண்டிய இன்னொரு விஷயம், சொல்ல நினைத்ததை ஜவ்வாய் இழுத்துக் கொண்டிருக்காமல் சுருக்கென்று சொல்லி முடித்தது.

கதாநாயகன் சந்தோஷ் பற்றி விசேஷமாய் சொல்ல ஒன்றுமில்லை. ஆனால் அந்தப் பையனை ஆரம்பத்தில் வழக்கமான விடலைக் காதலனாகக் காட்டி, காட்சிகள் நகர நகர க்ளைமாக்ஸ் நெருங்கும்போது வில்லக் காதலனாக மனதில் பதிய வைக்கிறார் பாருங்கள்... அங்கே நிற்கிறார் சுசீந்திரன்!

நாயகி மனீஷா... பெரிய உதடுகள், பெரிய பெரிய கண்கள்...என ஆரம்பத்தில் கொஞ்சம் உறுத்தல். ஆனால் அதுவே போகப் போக அவருக்குப் ப்ளஸ்ஸாகிவிடுகிறது. கர்ப்பத்தை அம்மாவுக்குத் தெரியாமல் மறைக்க அவர் போராடும் காட்சிகள் அசல்... அசத்தல்!

அந்தக் கர்ப்பத்தைக் கண்டுபிடிக்கும் காட்சியிலும், எல்லா வகையிலும் தங்களை ஏமாற்றிவிட்ட பையனின் வீட்டாரிடம் சண்டை போடும் காட்சியிலும் துளசியின் கோபமும் கண்ணீரும் பெண்ணைப் பெற்ற அத்தனை பேர் கண்களையும் குளமாக்குவது நிஜம்.

ஆதலால் காதல் செய்வீர்- விமர்சனம்

பெண் காதலித்து கர்ப்பமாகி நிற்கிறாள். பையன் வீட்டாரிடம் சமரசமாகப் போவதா, போலீசுக்குப் போவதா, நீதிமன்றமா... ஒன்றும் புரியாமல் தடுமாறும் ஜெயப்பிரகாஷ், ஒரு கட்டத்தில் கெட்டுப் போன தன் பெண்ணுக்கு பையன் வீட்டார் விலை பேசும்போது, அவமானமும் துக்கமும் தாளாமல் முகத்தைப் பொத்திக் கொண்டு வெளியில் ஓடும்போது, ஒரு தந்தையின் மனசில் விழுந்த அடியின் வலி புரிகிறது.

அர்ஜூன், மனீஷாவின் தோழியாக வரும் அந்தப் பெண், சந்தோஷின் தந்தையாக வருபவர், அப்புறம் பூர்ணிமா... எல்லோருமே அளவாக நடித்திருக்கிறார்கள்.

ஆதலால் காதல் செய்வீர்- விமர்சனம்

ஆனால் அதற்காக இதுதான் காதல் என்பதை ஏற்க முடியாது. இப்படியும் காதலிக்கிறார்கள் என்று வேண்டுமானால் சொல்ல முடியுமே தவிர, காதலித்தாலே இதுதான் கதி என்ற பொதுக் கருத்தை இந்தப் படம் உருவாக்கும் ஆபத்துமிருக்கிறது.

உண்மையான காதல், எதிர்ப்பார்ப்புகள் அற்றது, உடல் சுகம் பார்த்ததும் அலுத்துப் போகாதது, பெற்றோர்களின் பேரங்களை எதிர்ப்பார்க்காதது, எதற்காகவும் காத்திருக்காதது. காதலின் எதிர் விளைவுகளைச் சொன்ன சுசீந்திரன் இதையும் கொஞ்சம் மனசில் தைக்கும்படி பதிவு செய்திருக்கலாம்.

ஆதலால் காதல் செய்வீர்- விமர்சனம்

காதலின் பெயரில் காதலுக்கு எதிராக வந்திருக்கிற படம்தான்.... ஆனால் இதையும் பார்ப்பீர் காதலர்களே!

 

தம்பி சத்யாவுக்காக தயாரிப்பாளராக மாறும் ஆர்யா!

தம்பி சத்யாவுக்காக தயாரிப்பாளராக மாறும் ஆர்யா!

தன் தம்பி சத்யாவையும் ஒரு ஹீரோவாக நிலைக்க வைக்க படாத பாடு படுகிறார் ஆர்யா. இப்போது தம்பியை ஹீரோவாக வைத்து புதிய படம் எடுக்கவும் முடிவு செய்துள்ளார்.

‘தி ஷோ பீப்பிள்' என்ற பேனரில் ஏற்கெனவே ‘படித்துறை' என்ற படத்தை தயாரித்து வருகிறார் ஆர்யா. இளையராஜா இசையமைக்கும் படம் இது. இரு ஆண்டுகளாக தயாரிப்பில் உள்ள படம் இது.

இந்நிலையில், தன்னுடைய தயாரிப்பு நிறுவனம் மூலம் ‘அமர காவியம்' என்ற புதிய படத்தை தயாரிக்கிறார் ஆர்யா. இப்படத்தில் அவருடைய தம்பி சத்யா ஹீரோவாக நடிக்கிறார்.

ஏற்கெனவே ‘புத்தகம்' என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானாவர் சத்யா. தற்போது ‘காதல் டு கல்யாணம்', எட்டுத் திக்கும் மதயானை' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். ‘அமர காவியம்' படத்தை ‘நான்' படத்தை இயக்கிய ஜீவா ஷங்கர் இயக்குகிறார்.

விரைவில் படம் குறித்து அறிவிக்கப் போகிறார் ஆர்யா.

 

பெரிய ஆளா வருவார்- நடிகர் ஜெய்யைப் பாராட்டிய முருகதாஸ்!

பெரிய ஆளா வருவார்- நடிகர் ஜெய்யைப் பாராட்டிய முருகதாஸ்!

சென்னை: எங்கு பார்த்தாலும் ராஜா ராணி பட செய்தியாக இருப்பது போல பார்த்துக் கொள்கிறார்கள் அந்தப் படத்தின் குழுவும் பிஆர்ஓ சுரேஷ் சந்திராவும்!

அடுத்து இன்னொரு ராஜா ராணி செய்தி. இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ள ஜெய்யை, படத்தின் தயாரிப்பாளரான இயக்குநர் முருகதாஸ் வெகுவாகப் பாராட்டியுள்ளார்.

படத்தின் பிரத்யேக காட்சியைப் பார்த்த பின்னர் ஜெய் பற்றி முருகதாஸ் கூறியதாவது:

என்னுடைய தயாரிப்பில் வெளியான ‘எங்கேயும் எப்போதும்' படத்திலேயே ஜெய்-ன் நடிப்பு என்னை மிகவும் கவர்ந்தது. மிகவும் தொழில் பக்தி உள்ள, நேர்மையான, திறமையான நடிகர் அவர்.

என்னுடைய கணிப்பின்படி அவர் பெரிய அளவில் பிரகாசிக்க வேண்டிய நடிகர். நிச்சயம் பிரகாசிப்பார். ‘ராஜா ராணி' படத்தில் அவருடைய கதாபாத்திரம் அவருக்கென உருவாக்கப்பட்டதுபோல் பொருத்தமாக உள்ளது," என்றார்.

‘ராஜா ராணி' படத்தில் ஆர்யா, நயன்தாரா, நஸ்ரியா நஸீம், சத்யராஜ் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். ஜெய்க்கு சிறப்பு வேடம். மவுன ராகம் கார்த்திக் மாதிரி என்கிறார்கள்.

ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இப்படத்தை தொடர்ந்து ‘திருமணம் என்னும் நிக்காஹ்' என்ற படத்திலும் நடித்துள்ளார் ஜெய்.