"தூங்காவனம்" இரவுநேரக் கதையல்ல மனந்திறக்கும் ராஜேஷ் செல்வா

சென்னை: தூங்காவனம் இரவு நேரத்தில் நடக்கும் கதையல்ல என்று படத்தின் இயக்குநர் ராஜேஷ் செல்வா சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்திருக்கிறார்.

கமல் ஹாசன், த்ரிஷா, பிரகாஷ்ராஜ், கிஷோர் ஆகியோரின் நடிப்பில் விரைவில் திரைக்கு வரவிருக்கும் திரைப்படம் தூங்காவனம்.

Thoonga Vanam  Story is not Based on Nightlife - Says Rajesh Selva

பாபநாசம் திரைப்படத்திற்கு பின்பு கமலின் நடிப்பில் வெளிவரவிருக்கும் படமென்பதால் ரசிகர்கள் மத்தியில் படத்திற்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் தூங்காவனம் படத்தைப் பற்றி மனந்திறந்து பேசியிருக்கிறார் படத்தின் இயக்குநர் ராஜேஷ் எம்.செல்வா.

தூங்காவனம் இரவுநேரத்தில் நடைபெறும் கதையல்ல, மேலும் நிறையப்பேர் இதனை ஒரு மென்காதல் கதை என்று எண்ணுகிறார்கள். படத்தின் தலைப்பை பார்த்து எந்த ஒரு முடிவுக்கும் வரவேண்டாம்.

தூங்காவனம் முழுக்க முழுக்க ஒரு ஆக்க்ஷன் திரைப்படமாகும். சிலர் இதனை இரவில் நடைபெறும் கதை என்று எண்ணுகிறார்கள், நானே ஒருசில பதிவுகளை ஊடகங்களில் பார்த்திருக்கிறேன்.

தூங்காவனம் ஒருநாள் அதிகாலையில் ஆரம்பித்து மறுநாள் முடிவில் நடைபெறும் ஒரு கதை" என்று படத்தைப் பற்றி கூறியிருக்கிறார் ராஜேஷ் செல்வா.

மேலும் "நான் ஒரு நாத்திகனாக இருந்தாலும், கமல் சாரை என் கடவுளாகக் கருதுகிறேன். அவர் என்னை இயக்குநர் என்று அழைத்த தருணத்தை என்னால் என்றும் மறக்கவே முடியாது" என்று நெகிழ்ந்து போயிருக்கிறார் ராஜேஷ் செல்வா.

"தூங்காவனம்" திரைப்படம் தீபாவளி வெளியீடாக வரவிருப்பது குறிப்பிடத்தக்கது.

 

கணபதி பப்பா மோரியா: விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தில் ஆடிய சல்மான், ஷில்பா

மும்பை: பாலிவுட் நட்சத்திரங்கள் சல்மான் கான் மற்றும் ஷில்பா ஷெட்டி விநாயகர் சதுர்த்தி கொண்டாடத்தின்போது நடனம் ஆடி அசத்தியுள்ளனர்.

பாலிவுட் நடிகர் சல்மான் கான் ஆண்டுதோறும் தனது வீட்டில் விநாயகர் சதுர்த்தியை விமரிசையாக கொண்டாடுவது வழக்கம். அதே போன்று இந்த ஆண்டும் மும்பையில் உள்ள அவரது வீட்டில் விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

Salman, Shilpa Shetty dance at Ganapati Visarjan 2015

அவரது வீட்டு வாசலில் விநாயகர் சிலை வைக்கப்பட்டிருந்தது. அங்கு வரவழைக்கப்பட்ட கலைஞர்கள் மேளதாளம் முழங்க சல்மான் கான் தனது தம்பிகள் அர்பாஸ் கான், சொஹைல் கான், சகோதரிகள் ஆல்விரா மற்றும் அர்பிதா கான் ஆகியோருடன் சேர்ந்து நடனம் ஆடினார். அவர் நடனம் ஆடியதை பார்த்து அவரது உடன் பிறப்புகளின் குழந்தைகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

நிகழ்ச்சியில் அர்பிதாவின் கணவர் ஆயுஷ் சர்மாவும் கலந்து கொண்டார். இதே போன்று நடிகை ஷில்பா ஷெட்டியின் வீட்டிலும் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டது. மேள சப்தம் கேட்க கேட்க ஷில்பா மகிழ்ச்சி அடைந்து நடனம் ஆடத் துவங்கினார்.

சிறிது நேரத்தில் அவரது கணவர் ராஜ் குந்த்ராவும் தனது பங்கிற்கு நடனம் ஆடினார். இதே போன்று ஐஸ்வர்யா ராயும் தனது மகள் ஆராத்யாவுடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தில் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

"புலி" யின் 2 வது டிரெய்லர் ரிலீஸானது...

சென்னை: விஜய் நடிப்பில் உருவான புலி திரைப்படம் அக்டோபர் 1 ம் தேதி உலகெங்கும் வெளியாகவிருக்கிறது. இந்நிலையில் படத்தின் 2 வது டிரெய்லர் சற்று முன்பு வெளியானது.

Paayum Puli (U): இப்போதே உங்கள் டிக்கெட்டை புக்செய்யுங்கள்!

விஜய், சுருதிஹசன், ஹன்சிகா நடிப்பில் உருவாகியுள்ள பேண்டசி திரைப்படம் ‘புலி'. இப்படத்தை சிம்புதேவன் இயக்கியுள்ளார். ஸ்ரீதேவி கபூர், சுதீப், பிரபு, வித்யுலேகா ராமன் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இப்படத்தின் டீசர், டிரைலர், பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், வருகிற அக்டோபர் 1-ந்தேதி இப்படம் உலகமெங்கும் வெளியாகவிருக்கிறது.


ஏற்கெனவே, வெளியான இப்படத்தின் முதல் டிரெய்லர் கடந்த மாதம் வெளியாகி பல்வேறு சாதனைகளை முறியடித்துள்ளது. புலி படத்தின் முதல் டிரெய்லரை விட புலி படத்தின் 2 வது டிரெய்லர் நன்றாக இருப்பதாக ரசிகர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

புலி படத்தின் புதிய (2வது) டிரெய்லர் இதுதான் என்று நடிகர் விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில் டிரெய்லரை வெளியிட்டிருக்கிறார்.

இப்படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். நட்டி நடராஜ் ஒளிப்பதிவு அமைத்துள்ளார். எஸ்.கே.டி.ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் பி.டி.செல்வகுமார், சிபு தமீன்ஸ் இருவரும் இணைந்து "புலி"யைத் தயாரித்திருக்கின்றனர்.

 

மாயா - விமர்சனம்

Rating:
3.0/5

எஸ் ஷங்கர்

Maya (U/A): இப்போதே உங்கள் டிக்கெட்டை புக்செய்யுங்கள்!

நடிகர்கள்: நயன்தாரா, ஆரி, மைம் கோபி, ரோபோ சங்கர், லட்சுமி பிரியா, ரேஷ்மி மேனன்

ஒளிப்பதிவு: சத்யன் சூரியன்

இசை: ரான் ஏதன் யோஹன்

தயாரிப்பு: ஸ்டுடியோ கிரீன்

இயக்கம்: அஸ்வின் சரவணன்

பேய்ப் படங்களில் சற்று வித்தியாசம் காட்ட முயற்சித்திருக்கிறார்கள் மாயாவில். ஆனால் அதற்காக நயன்தாராவை கோரமாகக் காட்டி ரசிகர்கள் மனசை 'நோகடிக்காமல்' துடைத்து வைத்த குத்துவிளக்கு மாதிரி காட்டி ஆறுதல் தருகிறார்கள்.

வித்தியாசமான கதைதான்.

நயன்தாராவும் அவர் கணவரும் நடிகர்கள். இருவருக்கும் ஒரு கட்டத்தில் கருத்து வேற்றுமை வர, கைக்குழந்தையுடன் போய் தோழியின் வீட்டில் தங்கிக் கொள்கிறார் நயன்தாரா. தோழி வீட்டில் அவ்வப்போது ஏதோ அமானுஷ்யமாக நடப்பதை உணர்கிறார். ஆனால் அதை மேற்கொண்டு ஆராயாமல், பிழைப்புக்கு வழி தேட ஆரம்பிக்கிறார். பணக்கஷ்டம் அதிகரிக்கிறது. இவரது தோழி ஒரு இயக்குநரிடம் உதவி இயக்குநராக வேலைப் பார்க்கிறார். இவர்கள் எடுத்த ஒரு பேய்ப் படத்தை தன்னந்தனியாகப் பார்த்தால் ரூ 5 லட்சம் பணம் கிடைக்கும் என்பதை அறிந்து, அந்தப் படத்தைப் பார்க்கப் போகிறார்.

Maaya Review

இதற்கு இணையாக இன்னொரு கதை... அதில் ஓவியராக வரும் ஆரி, ஒரு பத்திரிகை நிறுவனத்தில் வேலைப் பார்க்கிறார். அந்தப் பத்திரிகையில் மாயவனம் என்ற ஒரு மர்ம காட்டில் பல ஆண்டுகளுக்கு முன்பு மனநோயாளிகளுக்கென்று ஒரு மருத்துவமனை இருந்திருக்கிறது. அங்கு நோயாளிகளை ஆராய்ச்சி என்ற பெயரில் மிகக் கொடூரமாகக் கொன்று அங்கேயே புதைத்திருக்கிறார்கள். அங்கு வைத்து சிதைக்கப்பட்ட மாயா என்ற பெண், இவர்களது ஆராய்ச்சியால் பார்வையிழந்து, கைக் குழந்தையை அநாதையாக விட்டு இறக்கிறாள். அவள் கையில் போட்டிருந்த பல கோடி மதிப்புள்ள வைர மோதிரத்தோடு புதைக்கப்படுகிறாள்.

Maaya Review

இவையெல்லாம் நடந்த பல ஆண்டுகளுக்குப் பிறகு, மாயவனம் காட்டுக்குள் அந்த மோதிரத்தைத் தேடி, புதைக்கப்பட்ட ஒவ்வொரு குழியையும் தோண்டுகிறது ஒரு கும்பல். அப்போது மாயாவின் சவக்குழியையும் தோண்டும்போது, அந்த ஆவி கிளம்புகிறது...

பேய்ப் படத்தைப் பார்க்கும் நயன்தாராவும், இந்த மாயவனம் காட்டுக்கு வந்துவிடுகிறார்... அது எப்படி என்பதை திரையில் பார்த்துக் கொள்ளுங்கள்.

Maaya Review

படம் முழுக்க நயன்தாராவின் ராஜ்ஜியம்தான். அலட்டலில்லாத நடிப்பு. ஒரு படத்தில் நாயகித் தேர்வுக்கு வரும் நயன்தாராவுக்கு இயக்குநர் டெஸ்ட் வைக்க, அதில் நயன்தாராவின் நடிப்பு... அடேங்கப்பா. நயன்தாரா எப்படி இத்தனை ஆண்டுகள் முன்னணி நாயகியாகத் திகழ்கிறார் என்பதற்கு இந்த ஒரு காட்சி போதும்... பானை சோற்றுக்குப் பதம்!

கொடுத்த வேலையை வரம்பு மீறாமல் இயல்பாகச் செய்திருக்கிறார் ஆரி.

Maaya Review

இயக்குநராக வரும் மைம் கோபி, அவரது உதவி இயக்குநராக வரும் லட்சுமி பிரியா, ஆரியின் காதலியாக வரும் ரேஷ்மி மேனன் என அனைவருமே மிகக் கச்சிதமான நடிப்பைத் தந்துள்ளனர். வெல்டன்!

பேய்ப் படங்களுக்கே உரிய த்ரில் காட்சிகள் அங்கங்கே வருகின்றன. ஆனால் அந்த த்ரில்லை சாதாரணமாக்கிவிடுகின்றன நீ...ளமான படமாக்கம். சின்னச் சின்ன விஷயங்களைக் கூட நீட்டி முழக்கி இருப்பது, படத்துக்குள் ரொம்ப நேரம் உட்கார்ந்த அலுப்பைத் தருகின்றன.

மாயவனம் காட்டை சென்னைக்குப் பக்கத்தில் 13 கிமீட்டரில் இருப்பதாகக் காட்டுகிறார்கள். குறைந்தது 50 கிலோமீட்டர் தூரத்துக்கு அந்த மாதிரி காடுகளே இல்லையே... கொஞ்சம் பொருத்தமாக பொய் சொல்லக் கூடாதா?

தலைநகருக்கு அத்தனை கிட்டத்தில் உள்ள மாயவனம் காட்டுக்குள் நடப்பதாக சொல்லப்படும் சம்பவங்களை அரசும் போலீசும் வேடிக்கையா பார்த்துக் கொண்டிருந்தன?

Maaya Review

அங்கு படமாக்கப்பட்டுள்ள காட்சிகளில் செயற்கை இருள் நிறைந்திருப்பதைப் பார்க்க முடிகிறது. எதற்காக பாதிப் படத்தை கறுப்பு வெள்ளையில் காட்டினார்களோ...

இப்படி குறைகளை அடுக்கலாம்.

ரான் ஏதன் யோஹனின் பின்னணி இசை த்ரில் காட்சிகளில் மிரட்டுகிறது. ஒளிப்பதிவாளரும் எடிட்டரும் இன்னும் கொஞ்சம் உழைத்திருக்கலாம்.

அஸ்வின் சரவணன் தன் முதல் படத்தையே, பாதுகாப்பான பேய்ப் படமாகக் கொடுத்து தப்பித்திருக்கிறார்.

 

தனி ஒருவன்...2 ம் பாகம் கண்டிப்பா வரும் பாஸ்... சொல்கிறார் ராஜா!

சென்னை: தனி ஒருவன் படத்தின் 2ம் பாகம் கண்டிப்பாக வரும், விரைவில் அதற்கான பணிகளை நான் தொடங்கவிருக்கிறேன் என்று இயக்குநர் மோகன் ராஜா அறிவித்திருக்கிறார்.

Thani Oruvan (U): இப்போதே உங்கள் டிக்கெட்டை புக்செய்யுங்கள்!

மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி, அரவிந்த் சாமி , நயன்தாரா ,கணேஷ் வெங்கட்ராமன், தம்பி ராமையா மற்றும் நாசர் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி பாக்ஸ் ஆபீஸ் மாபெரும் ஹிட்டடித்த படம் தனி ஒருவன்.

Director Mohan Raja to Make Thani Oruvan Part 2?

அரவிந்த் சாமியின் வித்தியாசமான வில்லத்தனங்கள், ஜெயம் ரவியின் போலீஸ் நடிப்பு ரசிகர்களை மிகவும் கவர்ந்தது. விளைவு இந்த வருடத்தில் பாக்ஸ் ஆபிசை சூறையாடிய படங்களின் வரிசையில் தனி ஒருவனும் இணைந்து கொண்டது.

படத்தின் ஒவ்வொரு காட்சிகளும், வசனங்களும் ரசிகர்களிடம் வெகுவாக தாக்கத்தை ஏற்படுத்தியது. மேலும் பாடல் வரிகள், ஹிப்ஹாப் தமிழாவின் இசை ஆகியவை படத்திற்கு துணை செய்ததில் இன்றும் கூட படம் பல திரையரங்குகளில் ஹவுஸ்புல் காட்சிகளுடன் படம் ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் மோகன் ராஜாவிடம் தனி ஒருவன் படத்தின் இரண்டாம் பாகம் எடுப்பீர்களா? எனக் கேட்கப்பட்டதற்கு ஏன் எடுக்கக்கூடாது கண்டிப்பாக எடுப்பேன்.

ஹாலிவுட்டில் மட்டும் தான் ஜேம்ஸ் பாண்ட், பேட் மேன் போன்ற படங்கள் வரவேண்டுமா, தமிழில் வரக்கூடாதா எனக் கேட்டிருக்கிறார். இதன் மூலம் தனி ஒருவன் பார்ட் 2 வருவது உறுதியாகியிருக்கிறது.

திரிஷ்யம் படத்தைத் தொடர்ந்து 5 மொழிகளில் தனி ஒருவன் ரீமேக் செய்யப்படவிருக்கிறது. தெலுங்கு ரீமேக்கில் ராம் சரண் நடிக்கவிருக்கிறார். ஹிந்தி ரீமேக்கில் சல்மான் கான் நடிக்கலாம் என்று உறுதியற்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நேரத்தில் மோகன்ராஜாவின் தனி ஒருவன் பார்ட் 2 அறிவிப்பு திரையுலகில் சற்று பரபரப்பையும், ரசிகர்களிடையே ஆர்வத்தையும் ஒருசேர ஏற்படுத்தி இருக்கிறது.

நல்ல படங்கள் கண்டிப்பாக ரசிகர்களின் மனதை வெல்லும்.

 

கபாலி படப்பிடிப்பு அனுபவம்: கபிலனை நெகிழ வைத்த ரஜினி!

முழு வேகத்தோடு களத்தில் இறங்கிவிட்டார் ரஜினி. தொன்னூறுகளில் பார்த்த உற்சாகத்துடன் கபாலியில் அவர் நடித்துக் கொண்டிருக்கிறார்.

சமீபத்தில் கபாலி படப்பிடிப்பின்போது அப்படத்தில் பாடல்கள் எழுதும் கபிலன் ரஜினியைச் சந்தித்துப் பேசியிருக்கிறார்.

Kabilan's experience with Rajini at Kabali shoot

அவரைச் சந்தித்த அனுபவத்தை கபிலன் இப்படிப் பகிர்ந்திருக்கிறார் விகடனில்...

"நீண்டஇடைவெளிக்குப் பிறகு அவரைச் சந்தித்தேன். பார்த்தவுடனே மிக சந்தோசமாய் வரவேற்றார்.

சந்திரமுகி படத்தில் நான் எழுதிய பாடல்வரிகளைப் பற்றிச் சொன்னபோது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. இந்தப்படத்தில் எழுதும் பாடல்களைப் பற்றிக் கேட்டார். அதன்பின்னர், பல விசயங்களைப் பேசிவிட்டு என்னுடைய குடும்பம் பற்றியும் பேச்சு வந்தது, என் பையன் பெயர் பௌத்தன் என்று சொன்னதும், பௌத்தம் பற்றிப் பேசத் தொடங்கிவிட்டார்.

Kabilan's experience with Rajini at Kabali shoot

பௌத்தம் பற்றி மிகவிரிவாகப் பேசத் தொடங்கி சித்தர் பாடல்கள் மற்றும் மகாபாரதக் கதைகள் பற்றியெல்லாம் அவர் பேசியதைக் கேட்டு வியந்து போனேன். செவிக்கு விருந்து கொடுத்தது போக சாப்பிட்டுவிட்டுப் போகலாம் என்றார்.

Kabilan's experience with Rajini at Kabali shoot

அவருடன் அமர்ந்து சாப்பிடத் தயங்கி, நான் இயக்குநருடன் சாப்பிடுகிறேன் என்றேன். உடனே என்னையும் அழைத்துக்கொண்டு இயக்குநர் ரஞ்சித்திடம் போய், 'கபிலன் என்று என்னுடன் சாப்பிடட்டும்' என்றார், நான் நெகிழ்ந்து போனேன்.

எனக்கு என்ன பிடிக்கும் என்று கேட்டு அவற்றைச் சாப்பிடக் கொடுத்தார். என் வாழ்க்கையில் அவரைச் சந்தித்த அந்த நாள் மறக்கமுடியாத நாளாக அமைந்துவிட்டது!"

 

மேக்கப் போடாத "அமலாபால்" அவ்ளோ அழகு - ஒளிப்பதிவாளர் சுகுமார்

சென்னை: "மேக்கப் இல்லாத அமலாபாலை மிகவும் பிடிக்கும்" என்று முன்னணி ஒளிப்பதிவாளர்களில் ஒருவராகத் திகழும் சுகுமார் கூறியிருக்கிறார்.

'லாடம் படத்தில் தொடங்கி 'மைனா' ,'கும்கி,'மான் கராத்தே மற்றும் சமீபத்தில் வெளியான காக்கிசட்டை' படம் வரையில் அழகான ஒளிப்பதிவில் கவனம் ஈர்த்து வருபவர் ஒளிப்பதிவாளர் சுகுமார்.

தற்போது கெத்து மற்றும் விக்ரம் பிரபுவின் அடுத்த படம் என்று தொடர்ச்சியாகப் பணிபுரிந்து வருகிறார். போட்டோகிராஃபராக தனது பயணத்தை தொடங்கியவர் தனது கடின உழைப்பின் மூலம் இன்று முன்னணி ஒளிப்பதிவாளர்களில் ஒருவராகத் திகழ்கிறார்.

அவரிடம் ஒளிப்பதிவு மற்றும் படங்களில் பணிபுரியும் அனுபவங்கள் பற்றிக் கேட்டபோது, மனந்திறந்து பேசினார். ஒளிப்பதிவைப் போலவே அவரது பேச்சும் கொள்ளை அழகாகவே இருந்தது, ஒளிப்பதிவு குறித்த அவரின் அனுபவத்தை இங்கே தொகுத்துக் கொடுத்திருக்கிறோம்.

I like Amala Paul who do not ought to make-up - Cinematographer M.Sukumar

கும்கி படம் உங்களுக்கு நல்ல அடையாளம் தானே? அந்த அனுபவம் பற்றி சொல்ல முடியுமா?

''என்னை 'லாடம்' படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக்கியவர் பிரபுசாலமன் சார்தான். ​ அவருடன் பிறகு 'மைனா' ,'கும்கி' செய்தேன். மைனாவில், கும்கியில் கால் தேய காடுமலை என்று சுற்றினேன். கடுமையான உழைப்பு அது. காமெராவை கல்லிலும் மலையிலும் மழையிலும் வெயிலிலும் தூக்கிக்கொண்டு வேலை செய்தோம். அதற்கான பலன்தான் இன்றைய சுகுமார் .

இப்போது காடுமலையை கொஞ்சம் தள்ளி வைத்துவிட்டு நகரம் சம்பந்தமான படங்களிலும், ஆக்சன் படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறேன் . என்னைப் பார்ப்பவர்கள் என்னிடம் பேசுகிறவர்கள் கும்கி பற்றியே கேட்கிறார்கள். அந்தப்படம் அந்த அளவுக்குச் சென்றடைந்திருக்கிறது என்று ஒரு பக்கம் மகிழ்ச்சி. இன்னொரு பக்கம் இன்னும் அதைவிட்டு வேறு என் படத்தைப் பற்றிப் பேசுவதில்லையே என்று ​ சின்னதாக ஒரு வருத்தமு​ம் ​ உண்டு​ .

என் வாழ்க்கையை 'கு.மு 'மற்றும் 'கு.பி; என இரண்டாகப் பிரிக்கலாம். கும்கிக்கு முன், கும்கிக்குப் பின். அந்த அளவுக்கு எனக்கு திருப்தி தந்து திருப்புமுனை தந்த படம் கும்கி.

I like Amala Paul who do not ought to make-up - Cinematographer M.Sukumar

ஒருவரிடமே நீங்கள் அடுத்தடுத்த படங்களில் தொடர்ந்து ஒளிப்பதிவு செய்கிறீர்களே?

அது நல்ல விஷயம்தானே? முதலில் பிரபுசாலமன்சார் இயக்கத்தில் 3 படங்கள் தொடர்ந்து செய்தேன். அடுத்து நடிகர் சிவகார்த்திகேயனுடன் 'மான்கராத்தே'யில் பணிபுரிந்தேன். 'காக்கி சட்டை'படத்திற்கு அவரே சிபாரிசு செ​ய்தார். கும்கி நாயகன் விக்ரம் பிரபுவுடன் மீண்டும் பணியாற்றப் போகிறேன். 'கெத்து' முடிந்ததும் அந்தப் படம் தொடங்கும். இது நல்ல விஷயம்தானே?

​ ''என் ​வேலையை முழுமையாக, சரியாகச் செய்யவேண்டும் என கடினமாக உழைக்கிறேன். அது அடுத்த வேலையை எனக்கு தானாக தேடிக் கொடுக்கும் என்பது என் நம்பிக்கை" இப்படித்தான் எனது ஒளிப்பதிவு வாழ்க்கை தொடர்ச்சியாகப் போய்க் கொண்டு இருக்கிறது.

பிரபு சாலமனுடன் அடுத்த 'கயல்' இப்போதைய தனுஷ் ​ ​ படம் இதில் எல்லாம் ஏன் நீங்கள் பணியாற்றவில்லை?

கயல் சமயத்தில் 'நிமிர்ந்துநில்' பணியில் இருந்தேன். தனுஷ் ​படத்தின் போது 'கெத்து' வில் இருந்தேன். ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் பணிபுரிவதில் எனக்கு விருப்பமில்லை. எனவே அவரது படங்களில் வேலை பார்க்க முடியவில்லை. அவர் என் நண்பர் மட்டுமல்ல நலம் விரும்பியும் கூட! வாய்ப்பு வரும்போது மீண்டும் அழைப்பார் ​இணைவோம்.

I like Amala Paul who do not ought to make-up - Cinematographer M.Sukumar

சிவகார்த்திகேயன் உங்களுக்கு சிபாரிசு செய்கிறாரா?

ஒரு படத்தில் பணியாற்றிவிட்டு நட்பும் புரிதலும் ஏற்பட்டுவிட்டால் அடுத்த படத்திலும் பணிபுரிவது எளிதானது, மகிழ்ச்சியானது . அப்படி எங்களுக்குள் நல்ல நட்பு வரவே, என் உழைப்பு பிடித்துப் போகவே அவரே 'காக்கிசட்டை'க்கு பரிந்துரை செய்தார். அது நட்பை விட உழைப்புக்கு கிடைத்த வாய்ப்பு என்பேன். அதேசமயம் நட்பு இருக்குன்னு வேலையில கோட்டை விட்டா அடுத்த முறை கூப்பிடமாட்டாங்க பாஸ். இங்கே நட்போடு சேர்ந்த திறமை ரொம்ப முக்கியம்.

'கெத்து' எப்படி?

இதுவரை பார்த்த உதயநிதி என்கிற நடிகரை இதில் பார்க்க முடியாது .வித்தியாசமான உருவில் வருவார். அவரது தோற்றம், நடை, உடை, பாவணையே வேறுமாதிரி இருக்கும்.

ஒளிப்பதிவாளருக்கு எது தேவை? யதார்த்தமா? அழகுணர்ச்சியா?

இரண்டுமே தேவைதான். ஆனால் எது தேவை என்பதை தீர்மானிப்பது கதையும், சூழலும், எண்ண ​ஓட்டம் என்கிற அடிப்படையும்தான். கதை அனுமதிப்பதை, ஏற்பதை இயக்குநர் பேசுகிற மொழியில் காட்சிப் படுத்துவதே ஒளிப்பதிவாளரின் வேலை.

அப்போது உங்களின் தனிப்பட்ட படைப்புத் திறன் எது?

அந்த எல்லைக்குள்தான் நாம் விளையாட வேண்டும்.அதை மீறி வெளிப்பட நினைக்கக் கூடாது. அப்படிஅந்த எல்லைக்குள் செய்துதான் எல்லா பெரிய ஒளிப்பதிவாளர்களும் பெயர் பெற்று இருக்கிறார்கள்.

இயற்கை ஒளி, வடிவமைக்கப்பட்ட ஒளி எது சவால்.?

இயற்கை ஒளியில் ஒளிப்பதிவு செய்வது சுலபம். நாமாக ஒளியமைப்பு செய்வது சிரமம்,சவாலானதும் கூட!

நான் காடு, மலை ​சம்பந்தப்பட்ட காட்சிகளுக்கு ​ நிறைய ஒளிப்பதிவு செய்திருக்கிறேன், காதல் சார்ந்த காட்சிகளுக்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறேன். அதீத கற்பனை சார்ந்த காட்சிகளுக்கும் ஒளிப்பதிவு செய்திருக்கிறேன்.ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகம்,ஒவ்வொன்றும் ஒவ்வொரு அனுபவம்.

எந்தமாதிரி காட்சிகளில் ஒளிப்பதிவாளரின் கொடி உயரே ​பறக்கும்?

படத்தில் கதையை விட்டு ஒளிப்பதிவு தடம் மாறக் கூடாது.பாடல் காட்சிகளில் சண்டைக் காட்சிகளில் நாங்கள் கொஞ்சம் வெளியே தெரிய வாய்ப்பு உண்டு. எங்கள் சுதந்திர எல்லை இதில் சற்று அதிகம். படங்களில் பாடல் காட்சிகளில் சண்டைக் காட்சிகளில்தான் எனக்கு நல்ல பெயர் கிடைத்தது ​ .​ எல்லோருடனும் புரிதலோடு இயங்கினால் எல்லா காட்சிகளிலும் மனம் கவரலாம். மொத்தத்தில் இங்கே புரிதல் மிக அவசியம்.

உங்களுக்கு யாருக்கும் நல்ல புரிதல் இருக்கவேண்டும்?

முதலில் இயக்குநருக்கும்,ஒளிப்பதிவாளருக்கும் நல்ல ஒரு புரிதல் இருக்கவேண்டும்.அடுத்து கலை இயக்குநருக்கும், ஒளிப்பதிவாளருக்கும் நல்லதொரு புரிதல்வேண்டும். பிறகு தான் மற்றதெல்லாம்.

உங்களுக்கான ஹோம் ஒர்க் எது?

ஒளிப்பதிவாளர் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நகர்விலும் கற்றுக் கொண்டே இருக்க வேண்டும். பார்ப்பதில், சந்திப்பதில், கண்ணில் படுவதில் எல்லாம் விஷூவலாக காட்சிகளைப் பார்க்க வேண்டும்.தொழில்நுட்ப ரீதியாகவும் தினமும்​ கற்றுக் கொள்ள வேண்டும்.

பாலுமகேந்திரா சார் மாதிரி மாணவனாகவே இருக்கவேண்டும். அவர் தனது நிறைவு காலம் வரை எல்லாம் தெரியும் என்று சொல்லாமல் கற்றுக்கொண்டே இருந்தார். ஒளிப்பதிவின் ஜீனியஸ் அவர். அவரே எல்லா காலகட்டத்திலும் மாணவனாக பயணிக்க தயாராக இருந்தார். அவர்போல் நானும் மாணவனாகவே இறுதிவரை பயணிக்க வேண்டும் என நினைக்கிறேன்.

டிஜிட்டல் ​யுகத்தில் ஒளிப்பதிவு இன்று மிகவும் சுலபமாகிவிட்டதே?

டிஜிட்டல் சுலபம்தான் ஆனால் அதை இயக்கத் திறமையுள்ள ஒளிப்பதிவாளர் வேண்டுமல்லவா? அன்று ​ஃ​பிலிமில் எடுத்த போது இருந்த அர்ப்பணிப்பு, கவனம், டிஜிட்டலில் போய்விட்டது. டிஜிட்டல் ​யுகத்தில் கொஞ்சம் அலட்சியம் வந்துவிட்டது வேதனைக்குறிய ஒன்று.

மறக்க முடியாத பாராட்டு ?

முதலில் நான் 'லாடம் 'செய்தபோது கேவி ஆனந்த்சார் , ரத்னவேலுசார், என் ​குரு பாலசுப்ரமணியம்சார் ஆகியோர் பாராட்டியது மறக்க முடியாதது.'காக்கிசட்டை' யில் டான்ஸ் மாஸ்டர் ராஜுசுந்தரம் என் ஒரு ஷா​ட்டைப் பார்த்து எங்கே ஜீவாவைக் காணோம் என்றார். நான் மானசீக குருவாக கருதும் ஜீவாவுடன் என்னை ஒப்பிட்டது என்னால் மறக்கவே முடியாதது.

நட்சத்திரங்களுடன் நீங்கள் எப்படி நட்பாக இருக்கிறீர்கள்?

பலரும் நட்பாக இருக்கிறார்கள். பெரிய நட்சத்திரக் குடும்பத்திலிருந்து வந்த விக்ரம்பிரபு எப்படி பழகுவாரோ என்று முதலில் தயங்கினேன். அவரோ ஒரு சகோதரர் போல சுலபமாக பழகி, அவ்வப்போது வீட்டுக்கு அழைத்து சாப்பாடு போடுமளவுக்கு சகஜமாகிவிட்டார்.

உதயநிதி ஸ்டாலின் அரசியல் வாரிசு என்கிற எந்த எண்ணமும் இல்லாமல் எளிமையாகப் பழகினார். இன்றும் பழகுகிறார். இப்படி நிறைய பேரைச் சொல்லலாம்.

I like Amala Paul who do not ought to make-up - Cinematographer M.Sukumar

அமலா பால்

மேக்கப் போடாத அமலாபாலைத்தான் எனக்கு மிகவும் பிடிக்கும். "மைனா"வுக்குப் பிறகு எவ்வளவோ உயரத்துக்கு போனாலும் எப்போதும் அதே குணத்துடன் பழகும், மனதுக்கு மேக்கப் போட்டுக்கொள்ளாத அமலாபாலையும் பிடிக்கும். தற்போது கெத்து படப்பிடிப்பில் எமிஜாக்சன் ​கூட வெள்ளந்தியாகத்தான் பழகுகிறார். எமிஜாக்சன் அழகு என்றால் அவர் பேச முயல்கிற தமிழ் கொள்ளை அழகு.

கெத்து பண்றீங்க சார்...

 

விஜய்யின் புலியுடன் மோதுகிறது புது இயக்குநரின் கத்துக்குட்டி!

அக்டோபர் முதல் தேதி விஜய்யின் புலி படம் ஸோலோவாக வரும் என்று பலரும் எதிர்ப்பார்க்க, அந்தப் படத்தோடு மல்லுக் கட்டத் தயாராகிறது கத்துக்குட்டி.

இயக்குநர் இரா சரவணன் புதியவர் என்றாலும், தன் கதை மீது கொண்டுள்ள அழுத்தமான நம்பிக்கை காரணமாக புலியுடன் மோதுகிறார்.

அதுவும் 240 அரங்குகளில் கத்துக்குட்டியை கெத்தாக வெளியிடுகிறார்.

Kathukutty to clash with Puli

நரேன் - சூரி நடித்துள்ள கத்துக்குட்டி, பக்கா கிராமத்துப் படம். அதுவும் இன்றைய கிராமத்தைச் சொல்லும் படம். யு சான்றிதழ், வரி விலக்கு என எல்லா சாதகமான அம்சங்களோடும் வெளிவரவிருக்கிறது.

"விவசாயிகளுக்கான படம் இது. அதை காந்தி பிறந்த நாளையொட்டி வெளியிடுவது பொருத்தமாக இருக்கும் என்பதால் அக்டோபர் முதல் தேதி வெளியிடுகிறோம். அந்தத் தேதியில் வேறு யார் படம் வெளியாகிறது என்றெல்லாம் நான் பார்க்கவில்லை," என்கிறார் இரா சரவணன்.

 

ட்விட்டரிலிருந்து விலகினார் சிம்பு!

ட்விட்டரிலிருந்து விலகிக் கொள்வதாக நடிகர் சிம்பு இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

வாலு திரைப்படம் பெரும் இழுத்தடிப்புக்குப் பிறகு வெளியாகி, சிம்புவை மீண்டும் மார்க்கெட்டுக்குக் கொண்டு வந்தது.

Simbu quits from Twitter

இனி ஆண்டுக்கு இரண்டு படங்களாவது வெளியிடுவது உறுதி என சிம்புவும் கற்பூரம் அடிக்காத குறையாக மேடைகளில் கூறி வருகிறார். அதற்கேற்ப இப்போது இடைவிடாமல் படப்பிடிப்பில் கலந்துக் கொண்டு வருகிறாராம்.

தமிழ் நடிகர்களில் ட்விட்டரில் பிஸியாக இருந்தவர்களில் சிம்புவும் ஒருவர். எஸ் டி ஆர் என்ற பெயரில் அவர் ட்வீட்கள் போட்டு வந்தார்.

ஆனால் இனிமேல் ட்விட்டரில் தொடரப் போவதில்லை என இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று விடுத்துள்ள அறிக்கை:

'இதுவரை என் ரசிகர்களும், என் நண்பர்களும் என்னை ட்விட்டரில் தொடர்ந்தவாறு இருந்தமைக்கு நன்றி. இன்று முதல் எனது ட்விட்டர் எனது ரசிக மன்ற நிர்வாகிகளால் நிர்வாகிக்கப்படும் . தேவைப்பட்டால் மட்டுமே நான் என் கருத்தை பதிப்பேன். ஒரு நடிகனாக என்னுடைய கடமை என் ரசிகனுக்கு நல்ல தரமான படம் கொடுக்க வேண்டும் என்பது தான். அவர்களுடனான என்னுடைய தொடர்ந்து வெற்றிப் படங்கள் தருவதில்தானே தவிர, இதைப் போன்ற சமூக வலைத் தளங்களில் இல்லை என்பதையும் நான் உணர்ந்துக் கொண்டேன். என்னுடைய இந்த முடிவை என் ரசிகர்கள் ஏற்று கொள்வார்கள் என்பதில் ஐயமில்லை," என்று கூறியுள்ளார்.