6 மாதங்களில் 105 தமிழ்ப் படங்கள்.. ஹிட்டடிச்சதோ 10 தான்.....

சென்னை: தமிழ் சினிமாவில் இன்றோடு அரையாண்டு முடிந்து விட்டது, இதுவரை இந்த அரையாண்டில் 105 நேரடித் தமிழ்ப் படங்கள் வெளியாகி உள்ளன. ஆனால் வெளியான 105 படங்களில் வெற்றி பெற்ற படங்களின் என்ணிக்கை வெறும் 10 தான்.

என்ன அதிர்ச்சியாக இருக்கிறதா , அதிர்ச்சியாக இருந்தாலும் இதுதான் உண்மை. பெரிய நடிகர்களின் படங்கள் கூட வசூலில் சொதப்பி தோல்வி அடைந்தது, ஆனால் அதே நேரத்தில் சிறிய நடிகர்களின் படங்கள் சற்றும் எதிர்பாராதவிதமாக நல்ல வசூலைக் குவித்தன.

இதுவரை வெளிவந்த படங்களில் வெற்றி பெற்ற படங்கள் மற்றும் வசூலைக் குவித்த படங்கள் எவை என்று பார்க்கலாம்.

Tamil Cinema Half- Year Completed

நஷ்டத்தைத் தவிர்த்த படங்கள்

இதுவரை வெளிவந்த 105 படங்களில் பெரிதாக லாபம் இல்லை, அதே நேரம் கையைக் கடிக்கும் அளவிற்கு நஷ்டமும் இல்லை என்று விநியோகஸ்தர்கள் கூறிய படங்களின் வரிசை இது.

கவுதம் கார்த்தியின் வை ராஜா வை, நான் கடவுள் ராஜேந்திரனின் தண்ணில கண்டம், நகுல்- தினேஷ் நடிப்பில் வெளிவந்த தமிழுக்கு எண் 1 ஐ அழுத்தவும், சந்தானத்தின் இனிமே இப்படித்தான், விஜய் ஆண்டனியின் இந்தியா- பாகிஸ்தான், கமலின் உத்தம வில்லன், ஆர்யா- விஜய் சேதுபதியின் புறம்போக்கு என்கின்ற பொதுவுடைமை, சூர்யாவின் மாசு மற்றும் ராஜ தந்திரம் ஆகிய படங்கள் இந்த வரிசையில் இணைந்துள்ளன.

ஏமாற்றிய படங்களின் வரிசை இது

பெரிய நடிகர்களின் படங்கள், நல்ல கதை உள்ள படங்கள் கண்டிப்பாக ஓடிவிடும் என்று மனக்கணக்கு போட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு மிகப் பெரிய அடியைக் கொடுத்த படங்கள் இவை.

எஸ்.ஜே.சூர்யாவின் இசை, சித்தார்த்தின் எனக்குள் ஒருவன், விஷாலின் ஆம்பள, ஜெய் நடிப்பில் வலியவன், விஜயகாந்தின் மகன் சண்முகப் பாண்டியன் நடித்த சகாப்தம், உதயநிதியின் நண்பன்டா, மற்றும் வைகைப் புயலின் எலி. போன்ற படங்கள் மிகுந்த நஷ்டத்தைக் கொடுத்த படங்கள் என்று கூறுகிறார்கள்.

பெரிய பட்ஜெட்டில் லாபம் ஈட்டிய படங்கள்

ஷங்கரின் ஐ மற்றும் ராகவா லாரன்சின் காஞ்சனா 2 ஆகிய படங்கள் பெரிய பட்ஜெட்களில் வெளிவந்து லாபம் ஈட்டிய படங்கள்.

ஐ பட்ஜெட் 150 கோடி, வசூல் ( தமிழ்,தெலுங்கு,இந்தி) 190 கோடி

காஞ்சனா 2 வசூல் விவரம் 100 கோடிகளுக்கும் அதிகமாக உள்ளது.

சிறிய பட்ஜெட் படங்கள்

அருள்நிதியின் டிமாண்டி காலனி மற்றும் தனுஷின் தயாரிப்பில் வெளிவந்த காக்கா முட்டை போன்ற படங்கள் சிறிய பட்ஜெட்டில் வெளிவந்து வெற்றி பெற்ற படங்கள் ஆகும்.

மீடியம் பட்ஜெட் மற்றும் பெரிய நடிகர்களின் வெற்றிப் படங்கள்

அஜீத்தின் என்னை அறிந்தால், தனுஷின் அநேகன், கார்த்தியின் கொம்பன், சிவகார்த்திகேயனின் காக்கிச்சட்டை, மணிரத்னத்தின் ஓ காதல் கண்மணி, ஜோதிகாவின் 36 வயதினிலே, ஜிவி பிரகாஷின் டார்லிங் மற்றும் விஷ்ணு விஷாலின் இன்று நேற்று நாளை போன்ற படங்கள் பெரிய நடிகர்களின் நடிப்பில் வெளிவந்து வெற்றியை சந்தித்து இருக்கின்றன.

இதில் அறிமுக நடிகர் ஜிவி பிரகாஷின் வெற்றி படமாக டார்லிங் படம் அமைந்தது.

படங்கள் 105 பட்ஜெட் 1100 கோடி

இதுவரை இந்த அரையாண்டில் மொத்தம் 105 தமிழ்ப் படங்கள் வெளிவந்து இருக்கின்றன, அவற்றின் மொத்த பட்ஜெட் 1100 கோடிகளைத் தாண்டி இருக்கிறது. ஆனால் அவ்வளவு படங்களும் வெற்றி பெறவில்லை எப்படிப் பார்த்தாலும் தமிழ் சினிமா பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளது தெளிவாகத் தெரிகிறது, அடுத்த அரையாண்டாவது வெற்றி ஆண்டாக மாறட்டும்.

 

அஜீத்தே சொல்லிட்டார்... இனி என் பெயர் சிவபாலன்! - அப்புக்குட்டி

தேசிய விருது பெற்ற அப்பு குட்டி சமீபத்தில் அவர் இது வரை சினிமாவில் கூட ஏற்றிராத நவ நாகரீக உடைகள் அணிந்து புகை படம் எடுத்துக் கொண்டார். அவரது உடைகளோ, நவ நாகரீக தோற்றமோ அவரை உற்சாகமூட்டியதைவிட அந்த புகைப் படங்களை எடுத்தவர்தான் ஆச்சரியப்படுத்தினார்.

ஆமாம் , நடிகர் அஜீத் குமார்தான் அவரை விதவிதமாய் படம் எடுத்த புகை பட நிபுணர்.

இனி அப்புக்குட்டி பேசுகிறார்...

"வீரம்' படப்பிடிப்பின் போது அஜீத் சார் என்னிடம், தம்பி எல்லா படங்களிலும் ஒரே வித தோற்றத்தில் வருவது உங்களது வளர்ச்சிக்கு தடையாக இருக்கும். முடிந்த வரை படத்துக்கு படம் தோற்றத்தை மாற்ற பாருங்கள். கிராமிய படங்களைத் தவிர நகரத்தில் நடக்கும் கதைகளிலும் நடிக்கும் வகையில் தோற்றத்தில் மாற்றம் வேண்டும் என வலியுறுத்தினார்.

Appukkutty changes his name after Ajith's advice

என்னை யார் சார் இப்படி எல்லாம் மாத்துவாங்க , யார் சார் படம் பிடிப்பாங்க என்று நானும் கேட்டேன். புன்னகையோடு விடைப் பெற்றவர் சில நாட்களுக்கு முன்னர் என்னை அழைத்து 29 ஆம் தேதி நீங்க ப்ரீயா இருந்தா சொல்லுங்க என்றார். நானும் வரேன்னு சொன்னேன்.

எங்கே , என்ன , எதுன்னு கூடக் கேட்காமல், அவர் சொன்ன இடத்துக்கு வந்ததுக்கப்புறம்தான் தெரிஞ்சிது , அவர் என்னை வைத்து புகைப்படம் எடுக்க போறார்னு. அதை விட ஆச்சரியம் என்னனா , என் உருவ அமைப்புக்கு ஏற்ப கச்சிதமாக தைக்க பட்ட உடைகள், உயர்தரமான அணிகலன்கள், சிறந்த ஒப்பனை சாதனங்கள், எனக்காகவே வரவழைக்க பட்ட பிரத்தியேக ஒப்பனையாளர்கள் என பிரமாதப் படுத்தி இருந்தார். ஆச்சரியத்தில் வாயை பிளந்தவன் இன்னும் மூடவே இல்லை.

Appukkutty changes his name after Ajith's advice

தவிர எனது இயற் பெயரைக் கேட்டுத் தெரிந்துக் கொண்ட அவர் அந்த பெயரான சிவ பாலன் என்றே என்னை அழைத்தார். மற்றவர்களையும் அவ்வாறே அழைக்குமாறு கூறினார். இனிமேல் நானும் எனது பெயரை சிவபாலன் என்கிற அப்புக்குட்டி என்றே அழைக்கபடுவதை விரும்புகிறேன். ஒரு கைத் தேர்ந்த புகைப்பட நிபுணர் போல் அவர் காட்டிய ஈடுபாடும், தொழில் நேர்த்தியும் என்னைப் பரவசப்படுத்தியது.

Appukkutty changes his name after Ajith's advice

புகைப்படங்கள் எடுக்கப்பட்ட பிறகு அதைப் பார்த்த எனக்கு பேச்சே வரவில்லை. இது எனக்கு கிடைத்த மிக பெரிய பாக்கியம். இது என்னால் மறக்க முடியாத ஒரு நாளாகும்," என தெரிவித்தார் சிவபாலன் என்கிற அப்பு குட்டி.

 

அப்புக்குட்டியை ஒரு போட்டோதான் எடுத்தார் அஜீத்.. அதுக்கே இவ்ளோ அக்கப்போறா?

கடந்த சில தினங்களாக இணையதளங்களில், சமூக வலைத் தளங்களில் ஒரு செய்தி.. அதுவும் கிட்டத்தட்ட அஃபிஷியல் அறிவிப்பு போலவே!

அஜீத் ஒரு புதிய படம் இயக்குகிறார்!

-இதுதான் அந்த செய்தி. அவ்வளவுதான் அவரது ரசிகர்கள் ஒரு பக்கம் குதியாலம் போட, அஜீத் என்ன படமெடுக்கிறார்.. அவருக்கு இயக்கத் தெரியுமா? என்றெல்லாம் கேள்விகள்.

Ajith hasn't any plan to direct anyone, says Manager

இன்று அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைத்துவிட்டார் அஜீத் மேனேஜர் சுரேஷ் சந்திரா.

அதாவது அஜீத் பெரும் படமும் இயக்கவில்லை, குறும்படமும் இயக்கவில்லை. அவர் செய்ததெல்லாம், வீரம் படத்தில் தன்னுடன் நடித்த அப்புக்குட்டியை ஒரு புகைப்படம் எடுத்தார். அவ்வளவுதான். அதற்குள் இத்தனை செய்திகள். இவை அனைத்துமே பொய்யானவை. அஜீத் படம் இயக்கினால் அதை நாங்களே முறைப்படி அறிவிக்க மாட்டோமா? என்ற கேள்வியோடு முடித்திருக்கிறார் தன் விளக்கத்தை.

நிற்க...

அஜீத்துக்கு திரைப்பட உருவாக்கம், திரைக்கதை எழுதுவதில் எக்கச்சக்க ஆர்வம் உண்டு. காதல் மன்னன் தொடங்கி அசல் வரை கிட்டத்தட்ட ஒரு இணை இயக்குநர் ரேஞ்சுக்கு களத்தில் இறங்கி வேலைப் பார்த்தவர் அஜீத். உண்மையிலேயே படம் இயக்கும் முழு தகுதியும் படைத்தவர் தல என்பது கூடுதல் தகவல்.

 

சக நடிகரை அடித்துத் துவைத்த பிரியங்கா சோப்ரா

மும்பை: இந்தி இயக்குநர் பிரகாஷ் ஜஹா இயக்கத்தில் பிரியங்கா போலீஸ் யூனிபார்ம் அணிந்து நடித்து வரும் படம் கங்கஜால் 2. இந்தப் படத்தில் அதிரடி ஆக்க்ஷன் ஹீரோயினாக நடித்து வருகிறார் பிரியங்கா சோப்ரா.

வட இந்தியாவின் நெருக்கடி மிகுந்த போபால் தெருக்களில் இந்தப் படத்தின் கட்சிகளைப் படம் பிடித்து வருகிறார் இயக்குநர் பிரகாஷ் ஜஹா. சமீபத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் சுற்றி நிற்க ஒரு ஆக்க்ஷன் காட்சியில் நடித்தார் பிரியங்கா.

Priyanka Chopra beats co-worker

போலீஸ் உடையில் மிடுக்காக வரும் பிரியங்கா ரவுடி ஒருவரை அடித்து நொறுக்குவது போன்ற காட்சியில், நிஜமாகவே சக நடிகர் ஒருவரை லத்தியால் நொறுக்கி எடுத்திருக்கிறார் பிரியங்கா.

தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வரும் இந்த வீடியோ, இணையதளங்களில் ரகசியமாக கசிந்து விட்டது என்று கூறுகின்றனர் படப்பிடிப்புக் குழுவினர்.

காவல்துறையினருக்கும், பொதுமக்களுக்கும் உள்ள உறவைப் பற்றிக் கூறும் விதமாக இந்தப் படத்தின், கதையை எடுத்து வருகிறாராம் இயக்குநரும் படத்தின் தயாரிப்பாளருமான பிரகாஷ் ஜஹா.

 

ஹாலிவுட்டின் புதிய ஸ்பைடர்மேன் ரெடி

லாஸ் ஏஞ்செல்ஸ்: ஹாலிவுட் படங்களில் மிகவும் பிரபலமானவை ஸ்பைடர்மேன், சூப்பர்மேன், அயன் மேன் மற்றும் ஜேம்ஸ்பாண்ட் படங்கள். இந்தப் படங்களில் நடிப்பது ஹாலிவுட் நடிகர்களின் லட்சியங்களில் ஒன்றாக இருக்கும்.

அதிலும் உலகம் முழுவதும் மாபெரும் வரவேற்பைப் பெற்ற ஸ்பைடர்மேன் படங்களில் நடிப்பது என்றால் கேட்கவா வேண்டும், இதுவரை ஸ்பைடர்மேன் படங்களில் 3 பாகங்கள் முறையே வந்து வெற்றி பெற்று உள்ளன.

New Spider Man – Tom Holland

முதல் பாகத்தில் டோபி மகியூரும் இரண்டாவது மற்றும் மூன்றாவது பாகத்தில் ஆண்ட்ரூ கார்பீல்டும், ஸ்பைடர்மேன்களாக நடித்து இருந்தனர். தற்போது ஸ்பைடர்மேனின் நான்காவது பாகத்திற்கான கதை தயாராகி விட்டது.

நான்காம் பாகத்தில் நடிப்பதற்கு சில மாதங்களாகவே நடிகர்கள் தேர்வு நடந்து வந்தது, இதிலிருந்து தற்போது நான்காவது ஸ்பைடர்மேனைத் தேர்ந்தெடுத்து உள்ளனர். புதிய ஸ்பைடர்மேனின் பெயர் டாம் ஹாலண்ட், 19 வயதான இவர் ஏற்கனவே தி இம்பாசிபிள் மற்றும் சிவில் வார் போன்ற படங்களில் சிறிய வேடங்களில் தோன்றி நடித்து இருக்கிறார்.

மார்வேல் ஸ்டுடியோ மற்றும் படத்தைத் தயாரிக்கும் சோனி பிக்சர்ஸ் இரு நிறுவனங்களும்,நான்காவது ஸ்பைடர்மேன் பற்றிய அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

நான்காம் பாகத்தை இயக்குகிறார் ஹாலிவுட் இயக்குநர் ஜான் வாட்ஸ், ஸ்பைடர்மேன் பார்ட் 4 படப்பிடிப்பை விரைவில் தொடங்க உள்ளனர் 2017 ம் ஆண்டில் படம் வெளியாகிறது.