நீங்க ரெடி தான்... ஆனா, ரிஸ்க்குக்கு நாங்க ரெடியில்லை... நடிகைக்கு ‘பேர்வெல்’ தரும் தயாரிப்பாளர்கள்!

சென்னை: பத்தாண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் நிலைத்து நின்று ஜெயித்துக் காட்டி வரும் நடிகை அவர். விரைவில் டும்... டும்... டும்... என மேளச்சத்தம் கேட்க தயாராக உள்ளார்.

மணாளனும் சினிமாவைச் சேர்ந்தவர் என்பதால், மூன்று முடிச்சுக்குப் பின்னரும் நடிப்பேன் என பிடிவாதமாக உள்ளாராம் நடிகை. ஆனால், சில நடிகைகளுக்கு திருமணம் என்றதுமே கொடுத்த அட்வான்சை திருப்பி வாங்கியவர்கள் நம்மவர்கள்.

நீங்க ரெடி தான்... ஆனா, ரிஸ்க்குக்கு நாங்க ரெடியில்லை... நடிகைக்கு ‘பேர்வெல்’ தரும் தயாரிப்பாளர்கள்!

ஓஹோ வென இருந்த காலத்தில் திருமணம் செய்து கொண்டு, பின்னர் திரும்பி நடிக்க வந்த பல முன்னணி நடிகைகளுக்கு அக்கா, அண்ணி, அம்மா வேடங்களே தரப்பட்டு வருவது நாமறிந்த செய்தி தான்.

அப்படியிருக்க இந்த நடிகைக்கு மட்டும் எப்படி திருமணத்திற்குப் பிறகும் நாயகி வேடமே தருவது என யோசிக்கிறதாம் தயாரிப்பு தரப்பு. எனவே, அவர் என்ன வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளட்டும், திருமணத்திற்குப் பிறகு நிச்சயம் அவருக்கு அக்கா, அண்ணி வேடம் தான், நமக்கு போட்டியில்லை என சிரித்துக் கொள்கிறார்களாம் விபரமறிந்தவர்கள்.

 

டூரிங் டாக்கீஸைத் தொடர்ந்து, இரண்டு புதிய படங்களில் நடிக்க ஒப்பந்தமான எஸ்ஏசி!

இனி படம் இயக்கப் போவதில்லை என்று அறிவித்துவிட்டு டூரிங் டாக்கீஸை வெளியிட்டார் எஸ் ஏ சந்திரசேகரன். படத்துக்கு நல்ல வரவேற்பு. விமர்சனங்களும் பாஸிடிவாக வந்தவண்ணம் உள்ளன.

இயக்குநராகத்தான் இது கடைசி படம். ஆனால் நடிகராக, தயாரிப்பாளராக திரையில் தொடர்வேன் என்று கூறியிருந்தார்.

டூரிங் டாக்கீஸைத் தொடர்ந்து, இரண்டு புதிய படங்களில் நடிக்க ஒப்பந்தமான எஸ்ஏசி!

போகிற போக்கைப் பார்த்தால் அவருக்கு படம் தயாரிக்க நேரம் இருக்குமா தெரியவில்லை. அந்த அளவுக்கு அவருக்கு நடிக்க வாய்ப்புகள் வர ஆரம்பித்துள்ளன.

டூரிங் டாக்கீஸைத் தொடர்ந்து மேலும் இரண்டு படங்களில் நடிக்க அவர் ஒப்பந்தமாகியுள்ளார்.

இயக்குனர் ஏ.வெங்கடேஷ், கூறிய ஒரு கதை மிகவும் பிடித்துப் போனதால், அப்படத்தில் ஹீரோவாக நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார் எஸ்.ஏ.சி. அப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஏப்ரல் மாதம் தொடங்க உள்ளது.

இது தவிர இரண்டு பிள்ளைகளுக்கு அப்பாவாக ஒரு படத்தில் நடிக்க உள்ளார் எஸ்.ஏ.சந்திரசேகர். இப்படம், இந்தி திரையுலகில் அமிதாப்பச்சன் நடித்து வெற்றி பெற்ற பாக்பான் எனும் படத்தின் கதையைத் தழுவியது என்கிறார்கள்.

இப்படத்தை விக்னேஷ், கிருஷ்ணா எனும் இரட்டை இயக்குனர்கள் இயக்க உள்ளனர். இந்த படத்திற்கு ‘வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்' என்று தலைப்பிட்டுள்ளனர்.

 

நடிகனாக நான் வளர வேண்டும்: சிவகார்த்திகேயன்

சென்னை: பெரிய திரைக்கு நடிக்க வந்து 3 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள சிவகார்த்திகேயன் நடிகராக தான் இன்னும் வளர வேண்டும் என்று ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

என்ஜினியரிங் படிப்பை முடித்த சிவகார்த்திகேயன் எம்.பி.ஏ. முடித்துவிட்டு சின்னத்திரையில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். சின்னத்திரையில் இருந்த அவர் பாண்டிராஜின் மெரினா படம் மூலம் பெரிய திரைக்கு வந்தார். 2012ம் ஆண்டு பெரிய திரைக்கு வந்த அவர் வந்த வேகத்தில் வளர்ந்தார் என்று தான் கூற வேண்டும்.

அரிதாரம் பூசி 3 வருஷமாச்சு, அனைவருக்கும் நன்றி: சிவகார்த்திகேயன்

வருத்தப்படாத வாலிபர் சங்கம் படம் அவருக்கு பெயர் வாங்கிக் கொடுத்தது. இந்நிலையில் அவர் முதல் முறையாக போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள காக்கிச் சட்டை படம் வரும் 27ம் தேதி ரிலீஸாகிறது.

சிவகார்த்திகேயன் பெரிய திரைக்கு வந்து மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டன. இது குறித்து அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

சினிமாவில் 3 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளேன். பல சவால்கள் காத்துள்ளன. ஒரு நடிகராக நான் வளர வேண்டும் என்பது எனக்கு தெரியும். உங்களால் தான் நான் இன்று இந்த நிலைக்கு வந்துள்ளேன். அனைவருக்கும் நன்றி என்று தெரிவித்துள்ளார்.

 

மோகன்லால் மீது தவறில்லை... அவரை நான் ஆதரிக்கிறேன்! - மம்முட்டி

தேசிய விளையாட்டு போட்டிகளின் துவக்க விழாவில் இசை நிகழ்ச்சி நடத்திய மோகன் லால் எந்தத் தவறும் செய்யவில்லை. அவரை அவமானப்படுத்துவது தவறு. அவருக்கு என் முழு ஆதரவும் உண்டு என்று நடிகர் மம்முட்டி கூறியுள்ளார்.

மோகன்லால் மீது தவறில்லை... அவரை நான் ஆதரிக்கிறேன்! - மம்முட்டி

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் 35 ஆவது தேசிய விளையாட்டு போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் தொடக்க விழா கடந்த சனிக்கிழமை கிரீன் பீல்ட் மைதானத்தில் பிரமாண்டமாக நடைபெற்றது.

தொடக்க விழா நிகழ்ச்சிகளில் ஒரு பகுதியாக பிரபல மலையாள நடிகர் மோகன்லாலின் 'லாலிசம்' என்ற இசைக் குழுவின் நிகழ்ச்சி ஒன்றும் நடந்தது.

ஆனால், இவர்களின் நிகழ்ச்சி மிகவும் மோசமாக இருந்ததாக சமூக வலை தளங்களில் விமர்சனம் எழுந்தது.

இந்த நிகழ்ச்சிக்காக கேரள அரசிடமிருந்து வாங்கிய தொகையை மோகன்லால் திரும்பக்கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி சமூக வலைதளம் மூலம் எதிர்ப்பு போராட்டமும் நடைபெற்றது. இந்த சம்பவங்களால் மனவேதனை அடைந்ததாக மோகன்லால் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், "நான் நிகழ்ச்சிக்காக வாங்கிய ஒரு கோடியே 63 லட்சத்து 77 ஆயிரத்து 600 ரூபாய் பணத்தையும் அரசிடம் திரும்ப கொடுக்க தயாராக இருக்கிறேன். இது அனைத்து சர்ச்சைகளையும் முடிவுக்கு கொண்டுவரும் என நம்புகிறேன்" என்று தெரிவித்து கேரள அரசுக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார்.

தேசிய விளையாட்டு துவக்க விழாவில் 'லாலிசம்' குழுவின் இசை நிகழ்ச்சியை நடத்த கடைசி நிமிடத்தில் அழைப்பு கிடைத்ததால் சில குறைகள் ஏற்பட்டதாக தனது ரசிகர்களுக்கு மோகன்லால் விளக்கம் அளித்திருந்தார். இருப்பினும், இந்த சர்ச்சை தொடர்கிறது.

இந்நிலையில், நடிகர் மோகன்லாலுக்கு ஆதரவாக நடிகர் மம்முட்டி தற்போது குரல் கொடுத்துள்ளார். கொச்சியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த மம்முட்டி, 'மோகன்லால் நமது கவுரவம். நல்ல நோக்கத்தின் அடிப்படையில் அந்த நிகழ்ச்சியை நடத்த மோகன்லால் முடிவு செய்தார்.

அவர் மீது எந்த அழுத்தத்தையும் திணிக்காதீர்கள். மன அமைதியுடன் அவரது பணிகளை தொடர வழிவிடுங்கள். அவரது நடிப்புத் திறனை மதியுங்கள்.

அவரை விமர்சிப்பதை விட்டுவிட்டு, ஆதரவு தாருங்கள். சக கலைஞன் என்ற வகையில் மோகன்லாலுக்கு எனது ஆதரவை வெளிப்படுத்துகிறேன்', என்றார்.

 

சினிமாக்காரன் சாலை- 5 ‘பட்டு வேஷ்டியிலிருந்து பழைய கோவணத்துக்கு…'

-முத்துராமலிங்கன்

Muthuramalingan

கடந்த கட்டுரைக்கு வந்தவைகளில் ‘இப்படி வாரா வாரம் ஒரு கிறுக்கன் எழுதி நம்மள கொல்றானே' என்ற ராஜியின் கமெண்ட்தான் நான் மிகவும் ரசித்தது.

ஒரு திருத்தம். வாரா வாரம் இல்லை. வாரத்துக்கு ரெண்டு வாட்டி இந்த கொலைகார சம்பவம் நடக்கும். இதை எதிர்த்து கோர்ட்டுக்குப் போனாலோ அல்லது ஆலமரத்தடி பஞ்சாயத்துகளுக்கு அழைத்தாலோ நான் ஆஜராகத் தயாராக இருக்கிறேன்.

முதல் படம் எடுக்க வருபவர்கள் தயாரிப்பாளர் கவுன்சில் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லவேண்டியதில்லை' என்று சொன்னேனே அந்த தகவலை கேள்விப்பட்டால் மெம்பர்களில் பாதிப் பேராவது அறச்சீற்றம் கொள்வார்கள். மீதிப் பேர் 'சர்தாண்டா ராசா, மேல பாடு' என்று மனசார வாழ்த்துவார்கள்.

சினிமாக்காரன் சாலை- 5  ‘பட்டு வேஷ்டியிலிருந்து பழைய கோவணத்துக்கு…'

புதுப் படம் எடுக்கும் புண்ணியவான்கள் சில நூறு கோடிகளைத் தொடர்ந்து இழந்து வருந்துவது குறித்து கடந்த பதிவில் எழுதியிருந்தேன். அதில் 'உண்ணாம திண்ணாம அண்ணாமலைக்கு அரோகரா' என்பார்களே அப்படிப்பட்ட ‘வெட்டிச் செலவு' என்பது கண்டிப்பாக பாதிக்கு மேல் இருக்கும்.

படம் முடிந்து, கதை முடிந்து, வேலவெட்டி எதுவுமில்லாமல் ஆபிஸில் மோட்டுவளையத்தை வெறித்துக் கொண்டிருப்போமே, அந்தப் பார்வையை கொஞ்சம் டவுன் பண்ணி, அதற்குப் பதில் படத்திற்காக, என்னவெல்லாம் செலவழித்தோம் என்று கணக்குப் பாருங்கள் அப்போது தெரியும், எவ்வளவு வெட்டிச் செலவுகள் நடந்து முடிந்தன என்று. கேரவனுக்கு செலவழித்த எட்டு லட்சத்தை வேறெவனோ சாப்பிட்டிருப்பான். ஸ்டார் ஹோட்டல்களுக்கு செலுத்திய பில் அமவுண்டுக்கு சொந்த ஊரில் ஹோட்டல் கட்டியிருக்கலாம். இப்படி எத்தனையோ.

நானும் கூட, இன்றுவரை பேட்டா வாங்குகிற தொழிலாளிதான் என்றாலும், நீண்ட நெடுங்கால பிரச்சினையான இதைப்பேசித்தான் ஆகவேண்டும். பெப்ஸி மெம்பர்களுக்கு, ஸ்லீப்பிங் பேட்டா, ட்ராவல்லிங் பேட்டா, டபுள் பேட்டா, ட்ரிபிள் பேட்டா, சிறு பிரச்சினையானாலும் ஷூட்டிங்கை நிப்பாட்டட்டா' என்று விதவிதமான பேட்டா கொடுத்தே படம் ரிலீஸானவுடன் சொந்தமாக ஒரு பேட்டா செருப்பு கூட இல்லாமல் வீதியில் அலையும் முன்னாள் தயாரிப்பாளர்கள் இங்கே பல்லாயிரம் பேர் இருக்கிறார்கள்.

உதாரணத்திற்கு 70 கோடி செலவில் எடுக்கப்படும் அஜீத் படத்துக்கு, சாப்பாடு பரிமாறும் புரடக்‌ஷன் ஆட்கள் ஒரு நாளைக்கு 4 பேருக்கு பத்தாயிரம் ரூபாய் பேட்டா எழுதுவார்கள் என்றால், 60 லட்ச ரூபாய்க்கு தயாரிக்கப்படும் படத்துக்கும் அதே 4 பேர் வந்து அதே பத்தாயிரம் ரூபாய் பேட்டா எழுதுவார்கள். 4 பேருக்குப் பதில் மூன்று பேர் போதும் என்றால் யூனியன் ஒத்துக்கொள்ளாது. ஷூட்டிங்கை நிறுத்துவார்கள். ஆர்ட் டிபார்ட்மெண்டிலும் இதே பஞ்சாயத்துதான். ‘இன்னைக்கு ஆர்ட் டிபார்ட்மெண்டுக்கு வேலையே இல்லை. பறவைகள் ஆகாயத்துல பறக்குற ஷாட்ஸ் மட்டுமே எடுக்கப்போகிறோம்' என்றாலும் பறந்து வந்து 2 செட் அசிஸ்டெண்ட், 2 ஆர்ட் அசிஸ்டெண்ட் என்று 4 பேர் வந்து சும்மா உட்கார்ந்திருந்து மத்தியானம் லஞ்ச் முடிந்தவுடன் பேட்டா நோட்டை எடுத்து தயாரிப்பாளரின் கணக்கை முடிப்பார்கள். ஸ்டண்ட் யூனியனும், டான்ஸர் யூனியனும் எல்லா நாளும் நான்வெஜ் இல்லாமல் சாப்பிடமாட்டார்கள்.

இந்த சட்டதிட்டங்களை சின்னப் படம், பெரிய படம் என்று பிரிக்க நினைக்கும் போதெல்லாம் அந்த முயற்சிகள் படுதோல்வியில் தான் முடிந்திருக்கின்றன.

சினிமாக்காரன் சாலை- 5  ‘பட்டு வேஷ்டியிலிருந்து பழைய கோவணத்துக்கு…'

அதனால் இப்படி வீணாகும் பெரும் பணத்தை சிக்கனம் செய்ய, இனி புதிதாய் படம் எடுக்க விரும்புபவர்களுக்கு ஒரு சின்ன யோசனை. இதை புத்திக் கொள்முதல் என்று கூட எடுத்துக் கொள்ளலாம். இந்த திட்டத்திற்கு ‘சு'தந்திர சினிமா என்று இப்போதைக்கு டம்மியாய் ஒரு பெயர் வைத்துக்கொள்வோம்.

ஊர்ப் பக்கம் எடுப்பவர்கள் என்றில்லாமல், ரெகுலர் சினிமாவில் இருப்பவர்களில் ஒரு சிலரும் கூட, டிஜிடல் என்று ஆனபிறகு பெப்ஸியின் கெடுபிடி சட்டதிட்டங்கள் எதையும் பின்பற்றாமல் கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாக படங்கள் எடுத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். குறும்பட போர்வையில் பெரும்படம் எடுக்கும் தந்திரங்களும் நடந்துகொண்டுதான் இருக்கின்றன.

தகவல் தெரியாமல் இருப்பதாலும், படங்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருப்பதால் வேலை பிஸியாக இருப்பதாலும் பெப்ஸியின் பார்வையில் படாமல் இப்படி சில படங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. ரெகுலர் சினிமா எடுக்க விரும்புபவர்கள், தங்களது முதல் முயற்சியை இப்படி சிக்கனமாக அமைத்துக்கொண்டால் பட்டுச் சட்டையும் வேஷ்டியுமாய் படமெடுக்க வந்துவிட்டு பழைய கோவணத்தோடு திரும்பும் அவலத்தை தவிர்க்கலாம்.

ஹோட்டல்களில் ரூம் போடாமல் ஊரில் சொந்த இடங்களில் இருந்துகொண்டே கதையைத் தயார் செய்யுங்கள். அது நல்ல கதையாக மாற ஏழெட்டு மாதங்கள் ஆனாலும் தப்பில்லை. பணம் பிடுங்கும் நடிகர்கள் வேண்டாம். அவர்களை விட எவ்வளவோ திறமையான நடிகர்கள் உங்கள் ஊரிலேயே இருக்கிறார்கள். லொகேஷன்களும் உங்க ஊர், பக்கத்து ஊர், நண்பர்களின் வீடு என்று இருக்கட்டும். இப்படியே பல விஷயங்களைச் சும்மாவே சாதித்துக் கொள்ளமுடியும். அதன் பின்னரே படப்பிடிப்புக்கு கிளம்புவது பற்றி யோசிக்கலாம். படப்பிடிப்பு என்றால் ஒரு பெருங்கூட்டம் இருந்துதான் ஆகவேண்டுமென்ற அவசியம் இல்லை.

சினிமாக்காரன் சாலை- 5  ‘பட்டு வேஷ்டியிலிருந்து பழைய கோவணத்துக்கு…'

இன்றைக்கு இருக்கிற டிஜிடல் சவுர்யங்களால் சுமார் இருபது முதல் நாற்பது லட்ச ரூபாய்க்குள் ‘களவாணி', 'கோலிசோடா' ‘மூடர்கூடம்' மாதிரியான படங்களை எடுத்துவிட முடியும்.

படம் எப்படி இருக்கிறது என்று சரியாக விமர்சிக்கும் நண்பர்கள் பத்துப் பேருக்கு படம் ஓட்டிக் காட்டுங்கள். அவர்கள் ‘ஓகே' சொன்னால், அடுத்து வேட்டிய மடிச்சிக்கட்டி முழுமூச்சாக சினிமா செய்ய இறங்கலாம்.

'ஓடுகிற சினிமா எடுக்க இப்படி காத்திருந்து வருவதுதான் நல்லது... அதற்குள் சினிமா எங்கும் ஓடிவிடாது!

(தொடர்வேன்..)

தொடர்புக்கு: muthuramalingam30@gmail.com

 

மீண்டும் தமிழில் நடிக்க ஆரம்பித்தார் அமலா பால்.. சூர்யாவுடன் ஜோடி சேர்கிறார்!

திருமணமான சில மாதங்களில் மீண்டும் நாயகியாக நடிக்கப் போகிறார் அமலா பால். முதல் படத்திலேயே சூர்யாவுடன் ஜோடி சேர்கிறார்.

இயக்குநர் விஜய்யை காதலித்து திருமணம் செய்தார் அமலா பால். கடந்த ஆண்டு ஜூன் மாதம் இவர்களின் திருமணம் நடந்தது.

மீண்டும் தமிழில் நடிக்க ஆரம்பித்தார் அமலா பால்.. சூர்யாவுடன் ஜோடி சேர்கிறார்!

அதன் பிறகு தமிழில் புதிய படங்களில் ஒப்பந்தமாகவில்லை அமலா. அதே நேரம் சினிமாவிலிருந்து விலகுவதாகவும் அறிவிக்கவில்லை.

ஒரு விளம்பரப் படத்தில் மட்டும் நடித்தார். மலையாளத்தில் மிலி என்ற படத்திலும் லைலா ஓ லைலா என்ற படத்திலும் நடித்தார்.

கடந்த வாரம் வெளியான மிலி பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது.

இந்த நிலையில் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா தயாரித்து நடிக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க அமலா ஒப்பந்தமாகியுள்ளார். இந்த வேடத்தில் முதலில் ஜோதிகா நடிப்பார் என்று கூறப்பட்டது. பின்னர் மஞ்சு வாரியர் நடிக்கிறார் என்று செய்தி வெளியானது.

சூர்யாவின் 2 டி நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்கிறது.

 

தாரை தப்பட்டை... படப்பிடிப்பை நேரில் பார்க்கிறார் இளையராஜா!

தான் இசையமைக்கும் 1000வது படமான தாரை தப்பட்டை படப்பிடிப்பை நேரில் சென்று பார்க்கிறார் இளையராஜா.

பாலா இயக்கத்தில் உருவாகி வரும் தாரை தப்பட்டை படத்தில் சசிகுமார், வரலட்சுமி நடிக்கிறார்கள். நாட்டுப்புறக் கலையை மையப்படுத்தி உருவாகும் இந்தப் படத்தை தஞ்சை மற்றும் கும்பகோணத்தில் படமாக்கி வருகிறார் பாலா.

தாரை தப்பட்டை... படப்பிடிப்பை நேரில் பார்க்கிறார் இளையராஜா!

கடந்த இரண்டு மாதங்களாக அந்தப் பகுதியில் முகாமிட்டுள்ளது பாலாவின் குழு.

இப்போது தஞ்சை - கும்பகோணம் சாலையில் உள்ள கரந்தை என்ற கிராமத்தில் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

இந்த நிலையில் படப்பிடிப்பை இன்று நேரில் பார்க்கிறார் இளையராஜா.

இந்தப் படத்துக்காக 12 பாடல்களை உருவாக்கிக் கொடுத்துள்ளார் இளையராஜா.

 

'லவ் யூ மருமகனே..' இப்படி ஒரு தலைப்பை வைத்து மாமியார்களிடம் வாங்கிக் கட்டும் முன்னணி இயக்குநர்!

பெங்களூரு: கன்னடத்தின் முன்னணி இயக்குநர் இந்திரஜித் லங்கேஷ் இயக்கத்தில் வெளியாக இருந்த திரைப்படத்தின் பெயரால் பெரும் சர்ச்சை வெடித்தது. எனவே டைட்டிலை மாற்றியுள்ளார் இயக்குநர்.. ஆனால் அதைவிட மோசமாக.

"லவ் யூ மருமகனே" என்று ஒரு படத்தின் போஸ்டரை பார்த்தால் உங்களுக்கு என்ன தோன்றும்? 'மாமனாரின் இன்ப வெறி' க்கு போட்டி படம் போலும் என்றுதானே எண்ணம் ஓடும்.

ஆனால் இப்படி ஒரு படத்தை எடுப்பது முன்னணி இயக்குநர் என்று தெரியவந்தால்... ஐயஹோ..., நல்லா இருந்தவராச்சே, இப்படி 11 மணி காட்சி படங்கள் எடுக்கும் நிலைக்கு போயிட்டாரே என்று பச்சாதாபமும் சேர்ந்து தோன்றும்.

'லவ் யூ மருமகனே..' இப்படி ஒரு தலைப்பை வைத்து மாமியார்களிடம் வாங்கிக் கட்டும் முன்னணி இயக்குநர்!

சிலருக்கோ, படம் பெயரை பார்.. கலாச்சாரத்தை சீரழித்துவிடுவார்கள் போல இருக்கிறது.. என்று அறச்சீற்றமும் எழும். இப்படி ஒரு நெருக்கடியைத்தான் சந்தித்துள்ளார் கன்னட முன்னணி இயக்குநர் இந்திரஜித் லங்கேஷ்.

முன்னணி நடிகர் ரவிச்சந்திரன், பூமிகா நடிக்க, லங்கேஷ் எடுத்துவரும் படத்துக்கு வைத்திருந்த பெயர் 'லவ் யூ ஆலியா' (Love You Alia). இதில் எங்கு மருமகன் வருகிறது என்று கேட்கிறீர்களா. ஆலியா என்பதை அலியா என்று படித்தால், கண்டிப்பாக வரும். ஆம்.. கன்னடத்தில் 'அலியா' என்றால் மருமகன் என்பது பொருளாகும். லங்கேஷின் துரதிருஷ்டம், படத்தின் போஸ்டரை பார்த்த பலரும் ஆலியா என்று வாசிப்பதற்கு பதிலாக அலியா என்றுதான் வாசித்துள்ளனர்.

நண்பர்களும், நலம் விரும்பிகளும் போன் போட்டு, திட்டாத குறையாக குமுறியுள்ளனர் லங்கேஷிடம். மனிதருக்கு முதலில் ஒன்றுமே புரியவில்லையாம். அதன்பிறகுதான், அவுச்.. என்று நாக்கை கடித்துள்ளார் லங்கேஷ். எடுத்தார் பார்க்கலாம் ஒரு ஓட்டம்... நேரே கர்நாடகா ஃபிலிம் சேம்பரில் சென்றுதான் ஓட்டத்தை நிறுத்தியுள்ளார்.

படத்தின் பெயரை மாற்றத்தான் அவர் அப்படி ஓடினார். ஆனால் பெயரை மாற்றவில்லை. என்ன குழப்பமாக இருக்கிறதா... ஆம், எதை எல்லோரும் கிண்டல் செய்தார்களோ அதையே படத்தின் தலைப்பாக மாறிவிட்டார்.

இப்போது படத்தின் பெயர் Love You Aliya. ஒரு ஒய் மட்டும் எக்ஸ்ட்ரா சேர்த்துள்ளார். இப்போது யாரும் தப்பாக புரிந்துகொள்ள முடியாது. ஏனெனில் படத் தலைப்பே தப்பான அர்த்தத்தில்தான் உள்ளது. ஆலியா என்றால்தானே ஆளுக்கொரு அர்த்தம் சொல்கிறார்கள், எனவே, அலியா (மருமகன்) என்றே மாற்றிவிட்டாராம் லங்கேஷ்.

இதுகுறித்து அவர் கூறுகையில், "திரைப்படத்தில் மாமனார்-மருமகன் இடையேயான உறவு முக்கியத்துவம் தந்து காட்டப்பட்டுள்ளது. எனவே 'லவ் யூ மருமகனே (அலியா)' என்ற வார்த்தை படத்தோடு பொருந்தி போய்விடும். எதேர்ச்சையாக அமைந்த சர்ச்சை எனது படத்திற்கு நல்ல தலைப்பை பெற்றுக் கொடுத்துவிட்டது" என்றாரே பார்க்கலாம். ஏற்கனவே முத்தேகவுடா என்று ஒரு படத்திற்கு பெயரை சூட்டப்போக, மாஜி பிரதமர் தேவகவுடாவை கிண்டல் செய்கிறார் என்று மஜதவினர் கொதித்த கதையெல்லாம் லங்கேஷ் திரையுலக வரலாற்றின் மைல் கல்லாகும்.

இப்போ பிரச்சினை என்னன்னா... மருமகன், மகளோடு படத்துக்கு செல்லும் மாமியார்கள், எந்த படத்துக்கு போறீங்கன்னா 'லவ் யூ மருமகனுக்கு' போறேன் என்று சொல்ல வேண்டிவந்துள்ளதே என்பதுதான். இதற்காகவே களத்தில் குதிக்க காத்திருக்கின்றனர், கர்நாடக கலாச்சார காவலர்கள். இனி ஒரே சரவெடிதான் போங்க..

 

மலையாளத்தில் ஹீரோவாக அறிமுகமாகும் 'சுந்தர பாண்டியன்' சௌந்தராராஜா!

சுந்தரபாண்டியன், வருத்தப்படாத வாலிபர் சங்கம், ஜிகர்தண்டா படங்களின் மூலம் ரசிகர்களால் பரவலாக அறியப்பட்டவர் நடிகர் சௌந்தரராஜா.

மலையாளத்தில் ஹீரோவாக அறிமுகமாகும் 'சுந்தர பாண்டியன்' சௌந்தராராஜா!

தமிழில் இரண்டு கதாநாயகர்களில் ஒருவராக ராமகிருஷ்ணனுடன் இணைந்து சௌந்தரராஜா நடிக்கும் "ஒரு கனவு போல" திரைப்படம், மற்றும் தமிழில் சௌந்தரராஜா கதாநாயகனாக அறிமுகமாகும் திரைப்படம் பற்றிய அறிவிப்புகள் விரைவில் வெளியாக உள்ளன.

மலையாளத்தில் ஹீரோவாக அறிமுகமாகும் 'சுந்தர பாண்டியன்' சௌந்தராராஜா!

அந்த சந்தோசம் ஒரு பக்கம் இருக்க, கூடவே புத்தாண்டுப் பரிசாக மலையாளப் பட உலகிலும் சௌந்தரராஜா கதாநாயகனாக அறிமுகமாகிறார். அந்தப் படத்தைப் பற்றிய செய்திகளும் அறிவிப்பும் விரைவில் வெளியாக உள்ளது.

 

இது வதந்தியா, நிஜமான்னு தெரியலையே...??

இப்படி ஒரு செய்தி கோலிவுட்டில் ஹாட்டாக கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. நிஜம்தாங்க என்று சிலர் உறுதிபடக் கூறுகிறார்கள். பலரோ இருக்க வாய்ப்புண்டு என்று பட்டும் படாமலும் சொல்கிறார்கள். சிலர் இதைத் தெரிஞ்சு நமக்கு என்ன ஆகப் போகிறது என்கிறார்கள்.

செய்தி இதுதான் - 3 நடிகர்களின் நட்புக் கரங்களுக்குள் தவழ்ந்து வந்த நடிகை இப்போது 4வது நட்புக் கைக்கு மாறியுள்ளார் என்பதுதான் அந்த செய்தி.

"ஐயோ"வென்று காணப்பட்ட நடிகைகளுக்கு மத்தியில் "ஹய்யா" என்று சொல்லும் அளவுக்கு அழகாக, பாந்தமான முகத்துடன் நடிக்க வந்தவர் இந்த கேரளத்து நடிகை. வந்த வேகத்தில் தமிழ் மனங்களில் கப்பென்று அமர்ந்து கொண்டு வேகமாக உயர்ந்தார்.

இந்த வேகத்துக்கு மத்தியில் முதல் காதல் வந்தது. வம்பு பேசிய வாய்களுக்கு அவல் கொடுப்பதைப் போல இந்த காதல் படு வேகமாக வளர்ந்தது. ஆனால் அதே வேகத்தில் சரிந்தும் போனது.

ஆனால் சரிந்து போய் விடாமல் சுதாரித்து எழுந்த அந்த நடிகை, கீழே விழுந்து சுதாரித்து எழும் "டான்ஸர்" போல அடுத்த காதலுக்குள் புகுந்தார். இந்த காதல் டான்ஸும் கூட நன்றாகவே போனது... ஏன், கல்யாணம் வரைக்கும் கூட போய் விட்டது. இடையில் நடந்த சில பல சமாச்சாரங்களால் இந்தக் காதல் நடனம் பாதியிலேயே அலங்கோலமாகிப் போனது.

ஆனாலும் அவுட்டாகி விடாமல், கோடம்பாக்கம் ஏரியாவில் புதுக் காதலை வளர்க்க ஆரம்பித்தார் இந்த நடிகை. சூப்பர்யா என்று என்று சக நடிகர்களே பொறாமைப்படும் அளவுக்கு அந்த நடிகரும், நடிகையை நன்றாகத்தான் பார்த்துக் கொண்டிருந்தார். ஆனாலும் இந்தக் காதலும் கூட "பாஸ்" ஆகாமல் பெயிலாகிப் போனது.

இப்படி அடுத்தடுத்து மூன்று முறை கீழே விழுந்தும் கூட நடிகையின் காதல் வேட்டையில் சற்றும் தொய்வில்லை என்று கூறுகிறார்கள். காரணம், தற்போது நான்காவது நட்புக் கரங்களுக்குள் நடிகை விழுந்துள்ளாராம். அவர் ஒரு மார்க்கெட் இல்லாத நடிகர்.. ஆனால் நல்ல உடல்கட்டுடன் கூடியவர். இரு பெயர் அவரது ஒரு பெயரில் அடக்கம். நடித்தது சில படங்கள்தான்.. ஆனால் அவரது நட்பு வட்டமோ பல இடங்களில் பரவி வியாபித்துள்ளதாம். சத்யராஜ் உயரம், சத்தாய்க்கும் தோற்றம்... இவர்தான் தற்போது நடிகையுடன் நட்பாகப் பழகி வருகிறாராம்.

இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை... எல்லாம் அந்த "ஏழுகொண்டலவாடா கோவிந்தா கோவிந்தாவுக்கே" வெளிச்சம்!

 

'குட்டி' ரசிகைக்காக லுங்கி டான்ஸ் ஆடிய ஷாருக்கான், தீபிகா

துபாய்: துபாயில் சிறுமி ஒருவர் கேட்டுக் கொண்டதையடுத்து ஷாருக்கானும், தீபிகா படுகோனேவும் லுங்கி டான்ஸ் ஆடியுள்ளனர்.

சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் ஷாருக்கானும், தீபிகா படுகோனேவும் லுங்கியைக் கட்டிக்கு கொண்டு டான்ஸ் ஆடினர். அந்த லுங்கி டான்ஸை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு அர்ப்பணிப்பதாக தெரிவித்தார் ஷாருக்கான்.

'குட்டி' ரசிகைக்காக லுங்கி டான்ஸ் ஆடிய ஷாருக்கான், தீபிகா

இந்நிலையில் ஷாருக்கானும், தீபிகாவும் துபாயில் நடந்த ஹேப்பி நியூ இயர் படப்பிடிப்பில் கலந்து கொண்டனர். துபாயில் உள்ள மால் ஒன்றில் படப்பிடிப்பு நடந்தபோது சிறுமி ஒருவர் ஷாருக்கானை அழைத்து லுங்கி டான்ஸ் ஆடுமாறு கூறினார்.

இதை பார்த்த தீபிகா லுங்கி டான்ஸ் வேண்டுமா, வாங்கள் ஆடலாம் என்று ஷாருக்குடன் ஆடினார். இதை பார்த்த சிறுமி மகிழ்ச்சியில் துள்ளி குத்திதார். இந்த வீடியோ கடந்த 31ம் தேதி யூடியூப்பில் வெளியாகியுள்ளது.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ரிலீஸான ஹேப்பி நியூ இயர் படம் சூப்பர் ஹிட்டானது என்பது குறிப்பிடத்தக்கது.

 

பிரபு சாலமன் - தனுஷ் படம்... சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கிறது

பிரபு சாலமன் - தனுஷ் இணையும் புதிய படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

‘மூன்றாம் பிறை', ‘கிழக்குவாசல்', ‘இதயம்', ‘பார்த்திபன் கனவு', ‘எம் மகன்' போன்ற குறிப்பிடத்தக்க படங்களைத் தயாரித்த சத்யஜோதி பிலிம்ஸ், ஒரு இடைவெளிக்குப் பிறகு படத்தயாரிப்பில் இறங்கியுள்ளது.

பிரபு சாலமன் - தனுஷ் படம்... சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கிறது

டிஜி தியாகராஜனின் மகன்கள் செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜூன் தியாகராஜன் ஆகியோர் இந்தப் படம் மூலம் தயாரிப்பாளராகிறார்கள். டி.ஜி.தியாகராஜன் வழங்கும் இந்தப் படத்தில் ஜி.சரவணன் மற்றும் செல்வி தியாகராஜன் இணைத் தயாரிப்பாளர்களாக பணியாற்றுகின்றனர்.

பிரபு சாலமன் - இசையமைப்பாளர் டி.இமான் கூட்டணி இதிலும் தொடர்கிறது.

பிரபு சாலமன் - தனுஷ் படம்... சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கிறது

இன்னமும் பெயரிடப்படாத இந்த படத்துக்கு ஒளிப்பதிவு - வி.மகேந்திரன், படத்தொகுப்பு - தாஸ் (டான் மேக்ஸ்).

படப்பிடிப்பு விரைவில் தொடங்குகிறது. இப்படத்தின் கதாநாயகி மற்றும் இதர நடிகர் - நடிகைகளின் தேர்வு நடைபெற்று வருகிறது.