பாலிமர் டிவியில் நெஞ்சம் பேசுதே!

நெஞ்சம் பேசுதே என்ற புதிய மெகா தொடர் பாலிமர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது.

கணவனை இழந்த மீனா தனது 2 குழந்தைகளுடன் வாழ்க்கை போராட்டதை படம் பிடித்துக் காட்டுகிறது இந்த தொடர். அவளது வாழ்க்கையில் வீசும் வசந்தமாக பத்திரிக்கையாளர் மோகன் வந்து சேர்கிறார். மீனாவின் குடும்பத்துடன் மோகன் பகிர்ந்துகொள்ளும் நெகிழ்ச்சியான தருணங்களை கண் முன் நிறுத்துகிறது நெஞ்சம் பேசுதே...

பாலிமர் டிவியில் நெஞ்சம் பேசுதே!

மோகனுக்கும் மீனாவுக்கும் இடையே உள்ள உணர்வுப்பூர்வமான உறவை சித்தரிக்கும் ஆழமான தொடர் நெஞ்சம் பேசுதே.. செப்டம்பர் 19 முதல் திங்கள் முதல் வெள்ளிக் கிழமை வரை இரவு 9.00 முதல் 9.30 மணி வரை ஒளிபரப்பாக உள்ளது.

பாலிமர் டிவியில் நெஞ்சம் பேசுதே!

பாலிமர் தொலைக்காட்சியில் தற்போது ஒளிபரப்பாகி வரும் "உள்ளம் கொள்ளை போகுதே", "மதுபாலா", "மூன்று முடிச்சு" போன்ற வெற்றி தொடர் வரிசையில் தற்போது "நெஞ்சம் பேசுதே". இத்தொடர் ரசிகர்களிடையே மிகப் பெரிய வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

மாப்பிள்ளைக்கு எப்படி விருது கொடுக்கலாம்?: ட்விட்டரில் கொந்தளித்த லீடரின் ரசிகர்கள்

சென்னை: அண்மையில் துபாயில் நடந்த தென்னிந்திய திரைப்படங்களுக்கான விருது வழங்கும் விழாவில் சிறந்த நடிகர் விருது தங்கள் லீடர் நடிகருக்குத் தான் கிடைத்திருக்க வேண்டும் என்று அவரின் ரசிகர்கள் ட்விட்டரில் கொந்தளித்துள்ளனர்.

தென்னிந்திய திரைப்படங்களுக்கான விருது வழங்கும் விழா அண்மையில் துபாயில் நடந்தது. இந்த விழாவில் சிறந்த நடிகர், நடிகைகள் ஆன்லைனில் ரசிகர்கள் வாக்களித்ததன் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து ரசிகர்கள் தங்களுக்கு பிடித்த நடிகர்களுக்கு ஆன்லைனில் வாக்களித்தனர்.

அப்படி வாக்களித்ததில் லீடர் நடிகருக்கு 90 சதவீத வாக்குகள் கிடைத்ததாகவும், மாப்பிள்ளை நடிகருக்கு வெறும் 4 சதவீத வாக்குகள் மட்டுமே கிடைத்ததாகவும் கூறப்படுகிறது. 90 சதவீத வாக்குகள் பெற்ற லீடருக்கு சிறந்த நடிகருக்கான விருதை வழங்காமல் மாப்பிள்ளைக்கு எப்படி கொடுக்கலாம், அப்படி என்றால் இந்த வாக்கெடுப்பு போலி என்று லீடரின் ரசிகர்கள் ட்விட்டரில் கொந்தளித்துள்ளனர்.

மேலும் மாப்பிள்ளைக்கு இப்படித் தான் ஒவ்வொறு முறையும் விருது கிடைக்கிறதா என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

 

தமிழ் சினிமாவுக்கென்று சங்கங்கள் வேண்டும் - பாரதிராஜா

தமிழ் சினிமாவுக்கென்று சங்கங்கள் வேண்டும் - பாரதிராஜா

சென்னை: தமிழ் சினிமாவுக்கென்று இனி சங்கங்கள் வேண்டும் என்று இயக்குநர் பாரதிராஜா கூறினார்.

சேரன் இயக்கி தயாரிக்கும் புதிய படம் ‘ஜே.கே.எனும் நண்பனின் வாழ்க்கை'. சர்வானந்த் - நித்யா மேனன் நடிக்கும் இந்தப் படத்தின் இசைத் தகடு வெளியீட்டு விழா சத்யம் தியேட்டரில் ஞாயிற்றுக் கிழமை நடந்தது.

இயக்குநர்கள் பாரதிராஜா, பாலுமகேந்திரா, ஆர்.பார்த்திபன், ஷங்கர், சீமான், அமீர், கேயார், சமுத்திரக்கனி, சசி, பாண்டியராஜன், உட்பட பல இயக்குநர்கள் இவ்விழாவில் பங்கேற்றனர். நடிகர்கள் சரத்குமார், சூர்யா, சர்வானந்த், நடிகைகள் சினேகா, ரோகிணி, நித்யாமேனன் மற்றும் தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோர் விழாவில் பங்கேற்றனர்.

இவ்விழாவில் பாரதிராஜா பேசியபோது, "சினிமா நூற்றாண்டு விழா கொண்டாடப்படுகிறது. தெலுங்கானா பிரச்சனையில் தத்தளித்துக் கொண்டு இருக்கும்போது இந்த விழாவில் எப்படி பங்கேற்போம் என்று ஆந்திராக்காரர்கள் சொல்கிறார்கள். நமக்கும் பிரச்சனைகள் உள்ளன.

ஈழத் தமிழர்கள் குண்டு வீசி கொல்லப்பட்டுள்ளனர். காவிரிக்காக முல்லை பெரியாறுக்காக, கச்சத் தீவுக்காக போராடுகிறோம். நாங்களும் தத்தளித்துக் கொண்டு இருப்பதால் நூற்றாண்டு விழாவில் பங்கேற்க முடியாது என்று சொல்ல முடியுமா?

இதற்காகத்தான் தமிழ் சினிமாவுக்கு தனி சங்கங்கள் வேண்டும் என்கிறோம். தென் இந்திய திரைப்பட வர்த்தக சபை, தென் இந்திய நடிகர் சங்கம் என்பதை விட்டு விட்டு தமிழ் நடிகர் சங்கம், தமிழ் வர்த்தகர் சபை தமிழ் திரைப்பட தொழிலாளர் சங்கம் என்று வரவேண்டும். அப்போது தான் நம் உரிமைகள் காக்கப்படும்,''என்றார்.

 

மோகன்லாலுக்கு உடல் நலக்குறைவு - விஜய்யின் ஜில்லா படப்பிடிப்பு நிறுத்தம்

மோகன்லாலுக்கு உடல் நலக்குறைவு - விஜய்யின் ஜில்லா படப்பிடிப்பு நிறுத்தம்

சென்னை: நடிகர் மோகன்லாலுக்கு திடீரென உடல்நிலை சரியில்லாமல் போனதால், விஜய் நடித்த ஜில்லா படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

'தலைவா' சர்ச்சைகளைத் தாண்டி விஜய் தற்போது ‘ஜில்லா' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். அறிமுக இயக்குனர் நேசன் இயக்கும் இப்படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்.பி.சௌத்ரி தயாரிக்கிறார். டி.இமான் இசையமைக்கிறார்.

இப்படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும், ரவி மரியா, பூர்ணிமா பாக்யராஜ் மற்றும் பலர் நடித்து வருகின்றனர்.

இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து அடுத்தக்கட்ட படப்பிடிப்பு திருநெல்வேலியில் நடத்த முடிவெடுத்தனர். இங்கு மோகன்லாலும், ரவி மரியாவும் மோதும் காட்சியை படமாக்க திட்டமிட்டிருந்தார்கள்.

இந்நிலையில், மோகன்லாலுக்கு திடீரென உடல்நிலை சரியில்லாமல் போனதால் இப் படப்பிடிப்பை சற்று தள்ளி வைத்துள்ளனர். அவர் குணமாகி வந்ததும் படப்பிடிப்பை நடத்த முடிவு செய்துள்ளனர்.

ஆனால், இயக்குனரோ கிடைத்த கால்ஷீட்டுகளை சும்மா விடக் கூடாது என்பதற்காக, இந்த நேரத்தில் சென்னையில் விஜய் சம்பந்தப்பட்ட ஆக்ஷன் காட்சிகளை எடுத்து தயாரிப்பாளரிடம் நல்ல பெயர் வாங்கும் திட்டத்தில் இருக்கிறாராம்.

குட்... அடுத்த படம் கிடைக்கணுமில்லை... !

 

மகள்களுக்கு சேரன் கொடுத்த முக்கியத்துவம்!

சென்னை: ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தன் மகள்களை மேடையேற்றி, வந்திருந்த விருந்தினர்களுக்கு மலர்கொத்து வழங்கச் செய்தார்.

தன் படங்கள் அல்லது பட விழாக்கள் எதிலுமே தன் குடும்பத்தை முன்நிறுத்தியதில்லை இயக்குநர் சேரன்.

மகள்களுக்கு சேரன் கொடுத்த முக்கியத்துவம்!

முதல் முறையாக நேற்று தனது ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு மகள்கள் நிவேதா, தாமினி இருவரையும் அழைத்து வந்திருந்தார் சேரன்.

விழாவுக்கு வந்த சேரனின் நண்பர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் அனைவருக்கும் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர் நிவேதிதாவும் தாமினியும். இருவருமே மகிழ்ச்சியுடன் விழாவில் கலந்து கொண்டு, தந்தைக்கு உதவியாக இருந்தனர்.

மகள்களுக்கு சேரன் கொடுத்த முக்கியத்துவம்!

இயக்குநர் பாரதிராஜா, நடிகர் சூர்யா உள்பட அனைவருமே சேரனின் மகள்களை வாழ்த்தினர். அப்போது கண்கள் கலங்க அருகில் நின்று கொண்டிருந்தார் சேரன்.

 

ரஜினிக்கு அம்மாவாக நடிக்க ரெடி: மீனா

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு அம்மாவாக நடிக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்று மீனா தெரிவித்துள்ளார்.

குழந்தை பெற்ற பிறகு சில காலம் படங்களில் நடிக்காமல் இருந்த மீனா தற்போது முழுவீச்சில் நடித்து வருகிறார். மலையாளப் படம் ஒன்றில் மம்மூட்டிக்கு அம்மாவாக நடிக்கிறார். இது தவிர மேலும் பல பட வாய்ப்புகளை தேடி வருகிறார்.

ரஜினிக்கு அம்மாவாக நடிக்க ரெடி: மீனா

அப்படி அவர் தனது அபிமான இயக்குனர் ஒருவரிடம் வாய்ப்பு கேட்டபோது அவர், மீனா எனக்கே அம்மாவாக நடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்று ஒரு மேடையில் ரஜினிகாந்த் கூறியதை நினைவுபடுத்தியுள்ளார். அதை கேட்ட மீனா விழுந்து விழுந்து சிரித்துள்ளார். ரஜினிக்கு அம்மாவாக நடிக்க வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் நடிப்பேன்.

அவருக்கு அம்மாவாக நடிக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். அன்புள்ள ரஜினிகாந்த் படத்தில் ரஜினியுடன் குழந்தை நட்சத்திரமாக நடித்தார் மீனா. பின்னர் அதே ரஜினிக்கு ஜோடியாக நடித்தார். தற்போது அம்மாவாக நடிக்கவும் ரெடியாக இருக்கிறார்.