சென்னை: சாதிப்பிரச்சினையை முன்வைத்து எடுக்கப்பட்டுள்ள ‘கௌரவம்' திரைப்படத்தை தமிழக அரசு தடை செய்ய வேண்டும் என கொங்கு வேளாளர் கவுண்டர்கள் பேரவையின் மாநில தலைவர் பொங்கலூர் ரா.மணிகண்டன் கோரிக்கை விடுத்துள்ளார்.
'கீதா ஆர்ட்ஸ்' என்ற தெலுங்குப் பட நிறுவனதுடன் இணைந்து பிரகாஷ் ராஜ் கௌரவம் படத்தை தயாரித்து வருகிறார். ராதாமோகன் இயக்கும் இந்த திரைப்படத்தில் சிரஞ்சிவியின் உறவினர் அல்லு சிரிஷ் கதாநாயகனாகவும் ‘விக்கி டோனர்' புகழ் யமி குப்தா கதாநாயகியாகவும் நடிக்கின்றனர்.
இப்படம் ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் தயாராகி வருகிறது. இந்தப் படம் தலித் அல்லாத சமுதாயங்களை இழிவுபடுத்தி எடுக்கப்பட்டிருப்பதாகக் கூறி அதை தடை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து கொங்கு வேளாளக் கவுண்டர்கள் பேரவையின் மாநில தலைவர் பொங்கலூர் ரா.மணிகண்டன் கூறியுள்ளதாவது:
நடிகர் பிரகாஷ்ராஜ் தயாரித்துள்ள "கெளரவம்' திரைப்படத்தின் டிரைலர் காட்சிகளைப் பார்த்தோம். இந்த திரைப்படத்தில், தலித் அல்லாத 60-க்கும் மேற்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள், கலப்புத் திருமணத்தால் கெளரவக் கொலைகள் போன்ற செயல்களில் ஈடுபடுவது போலவும், சாதி, மத நம்பிக்கைகளை இழிவுபடுத்தியும், தலித் அல்லாத சமுதாய மக்களுக்கு எதிரான வன்முறையைத் தூண்டி விடும் வகையிலும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.
தீண்டாமையை நாங்கள் ஒரு போதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம். எல்லா சமுதாயமும் அடிப்படை வசதி, பொருளாதாரத்தில் முன்னேற வேண்டும் என்பதில் நாங்கள் திட்டவட்டமாக இருக்கிறோம். ஆனால் இத்திரைப்படம் சாதி, மதங்களிடையே நிலவி வரும் அமைதியை சீர்குலைக்கும் என்றும் கூறியுள்ளார். எனவே இந்த படத்தினை தடை செய்யும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
கௌரவம் திரைப்படம் ஏப்ரல் 12ம் தேதி திரைக்கு வருகிறது. தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் ஒரே நேரத்தில் வெளியிட முடிவு செய்துள்ளனர்.
இந்த திரைப்படத்திற்கான பாடல் வெளியீட்டு விழா சமீபத்தில் விஜய் டிவியின் நீயா நானா நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டது நினைவிருக்கலாம்.