நண்பர்களுடன் போய் படப்பிடிப்பில் தொந்தரவு செய்தேனா? - கவுதம் கார்த்திக் விளக்கம்

சென்னை: என்னமோ ஏதோ படப்பிடிப்பில் நண்பர்களுடன் போய் தொந்தரவு செய்ததாக வந்த செய்திகளை மறுத்தார் நடிகர் கவுதம் கார்த்தி.

ரவிபிரசாத் தயாரிப்பில், ரவி தியாகராஜன் இயக்கத்தில் உருவாகும் படம் என்னமோ ஏதோ. இதில் நடிகர் கார்த்திக்கின் மகன் கவுதம் கார்த்திக் ஹீரோவாக நடிக்கிறார். ராகுல் ப்ரீத் சிங் மற்றும் நிகிஷா பட்டேல் நாயகிகளாக நடிக்கின்றனர். பிரபு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

நண்பர்களுடன் போய் படப்பிடிப்பில் தொந்தரவு செய்தேனா? - கவுதம் கார்த்திக் விளக்கம்

இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று ரவிபிரசாத் லேபில் நடந்தது.

படத்தின் இயக்குநர் ரவி தியாகராஜனிடம், தலைப்பு குறித்து விளக்கம் கேட்டனர். அதற்கு பதிலளித்த அவர், "படத்தில் என்னமோ ஏதோ இருக்கிறது என்று ரசிகர்கள் அர்த்தப்படுத்திக் கொள்ள வேண்டியதுதான். இளைஞர்கள் மனதில் உடனே பதிய வேண்டும் என்ற நினைப்பில் இந்தத் தலைப்பை வைத்தோம். மற்றபடி விசேச காரணங்கள் இல்லை," என்றார்.

ஹீரோ கவுதம் கார்த்திக்கிடம், இந்தப் படத்தின் ஷூட்டிங்கின்போது உங்கள் நண்பர்களையெல்லாம் வரவழைத்து, ஷூட்டிங்கைக் கெடுத்துவிட்டதாகவும், இதனால் தயாரிப்பாளர் உங்கள் மீது கோபப்பட்டதாகவும் கூறப்படுகிறதே...? என்று கேட்டனர்.

அதற்கு பதிலளித்த தயாரிப்பாளர் ரவிபிரசாத், "அப்படி எதுவும் நடக்கவில்லை. நானே இப்போதுதான் இந்த தகவலை கேள்விப்படுகிறேன், என்றார்.

பின்னர் ஹீரோ கவுதம் கார்த்திக் கூறுகையில், "இந்த மாதிரி எதுவும் நடக்கவில்லை. ஆனால் என் படப்பிடிப்புகளுக்கு எனது மிக நெருங்கிய நண்பன் - என் மேனேஜர்- ஒருவரை அழைத்துச் செல்வது வழக்கம். அவரிடம் ஏதாவது கேட்டு அவர் மறுத்த கோபத்தில் இப்படி தகவலைப் பரப்பியிருக்கலாம்," என்றார்.

 

இயக்குநர் விஜய் - அமலா பால்: ஜூன் 7-ல் நிச்சயதார்த்தம்... 12-ம் தேதி திருமணம்!

இயக்குநர் விஜய் - நடிகை அமலா பால் திருமணச் செய்தி அதிகாரப்பூர்வமாகவே அறிவிக்கப்பட்டுவிட்டது.

இருவருக்கும் வரும் ஜூன் 7-ம் தேதி கொச்சியில் நிச்சயதார்த்தமும், ஜூன் 12-ம் தேதி சென்னையில் திருமணமும் நடக்கிறது.

இயக்குநர் விஜய் - அமலா பால்: ஜூன் 7-ல் நிச்சயதார்த்தம்... 12-ம் தேதி திருமணம்!

வீரசேகரன் படத்தில் அறிமுகமான அமலா பால், விஜய்க்கு அறிமுகமானது தெய்வத் திருமகள் படத்தில். அந்தப் படத்திலிருந்தே இருவரும் தீவிரமாகக் காதலித்து வந்தனர்.

இந்த விஷயத்தை அப்போதே மோப்பம் பிடித்துவிட்ட மீடியா, தொடர்ந்து செய்திகள் வெளியிட்டது. ஆனால் இருவருமே அப்போது உறுதியாக மறுத்து வந்தனர்.

இந்த நிலையில் சமீபத்தில் நடந்த சைவம் இசை வெளியீட்டு விழாவில், கிட்டத்தட்ட விஜய்யின் மனைவியைப் போலவே நெருக்கமாக வளைய வந்தார் அமலா. விசாரித்ததில் இருவருக்கும் விரைவில் திருமணம் நடப்பது தெரிய வந்தது.

இதுபற்றி தொடர்ந்து செய்திகள் வெளியாக வேறு வழியின்றி, காதலையும் திருமணத்தையும் ஒப்புத் கொண்டனர் இருவரும். அதை அதிகாரப்பூர்வமாக இன்று அறிவிப்பதாகவும் கூறியிருந்தனர்.

சொன்னபடியே இன்று அறிவித்துள்ளனர்.

அதன்படி, இருவருக்கும் கொச்சியில் நிச்சயதார்த்தம் பிரமாண்டமாக நடக்கிறது. மோகன்லால், மம்முட்டி உள்பட மலையாள திரையுலகினர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர்.

சென்னையில் மேயர் ராமநாதன் திருமண மண்டபத்தில் ஜூன் 12-ம் தேதி திருமணம் நடக்கிறது.

 

என்ன ரோல் கொடுத்தாலும் பண்ணுவேங்க.. ஹீரோவாத்தான் நடிப்பேன்னு அடம் பிடிக்கல! - நடிகர் உதயா

2000-ஆண்டில் திருநெல்வேலி என்று ஒரு படம் வந்தது நினைவிருக்கிறதா... அந்தப் படத்தில் ஹீரோவாக அறிமுகமானவர்தான் உதயா. பிரபல தயாரிப்பாளர் ஏஎல் அழகப்பனின் மகன். இயக்குநர் விஜய்யின் அண்ணன்.

இந்த பதினான்கு ஆண்டுகளில் அவரும் பத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துவிட்டார். ராரா என்ற படத்தைச் சொந்தமாகத் தயாரித்து நடித்தார். இப்போது ஆவிகுமார் படத்தில் ஹீரோவாக நடிக்கிறார்.

என்ன ரோல் கொடுத்தாலும் பண்ணுவேங்க.. ஹீரோவாத்தான் நடிப்பேன்னு அடம் பிடிக்கல! - நடிகர் உதயா

நாளை பிறந்த நாள் கொண்டாடும் உதயா, அதற்கு முன் செய்தியாளர்களைச் சந்தித்து, சினிமா கேரியரில் தான் எடுத்திருக்கும் புதிய முடிவைச் சொன்னார்.

அதாவது இனி ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என்று அடம் பிடிப்பதில்லை.. கிடைக்கிற நல்ல வேடங்களில் நடிப்பதுதான் அந்தப் புது முடிவாம்.

அவர் மேலும் கூறுகையில், "ஆவி குமார் ஒரு வித்தியாசமான கதை. என் வேடமும் இன்னும் வித்தியாசமாக இருக்கும்.

வெறும் பேய்ப்படம் என்று சொல்லிவிட முடியாது. அதைத் தாண்டி, நல்ல பொழுதுபோக்குப் படமாக இருக்கும்.

எனக்குன்னு ஒரு இடம் வேணும் சினிமாவில. அது ஹீரோன்னு இல்ல... எந்த நல்ல வேடமாக இருந்தாலும் ஓகே. வில்லனா கூட நடிக்க தயார்," என்றார்.

இயக்குநர் விஜய்யின் காதல் திருமணம் பற்றிக் கேட்டபோது, "தம்பி காதல் விவகாரம் எங்களுக்கு முன்னாலேயே தெரியும். எங்கள் வீட்டில் முதன் முதலில் காதல் திருமணம் செய்யப்போவது அவன்தான்," என்றார் உதயா.

 

மோடி சந்திப்பு எஃபெக்ட்: விளம்பரங்களில் விஜய் படத்தை மறைக்க உத்தரவிட்ட தேர்தல் கமிஷன்!

மோடி சந்திப்பு எஃபெக்ட்: விளம்பரங்களில் விஜய் படத்தை மறைக்க உத்தரவிட்ட தேர்தல் கமிஷன்!

கோவை: கோவையில் வைக்கப்பட்டிருந்த நகைக்கடை விளம்பரங்களில் இடம்பெற்ற நடிகர் விஜய்யின் படங்களை மறைக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடியை கடந்த வாரம் கோவைக்குப் போய்ச் சந்தித்துவிட்டு வந்தார் விஜய்.

இந்த சந்திப்பில் அரசியல் நோக்கம் இல்லை என்று விஜய் சொன்னாலும், தேர்தல் ஆணையம் இதனை அரசியல் சந்திப்பாகவே பார்க்கிறது.

விஜய் குறிப்பிட்ட கட்சிக்கு ஆதரவாக இருக்கிறார் எனத் தீர்மானித்து விட்டது.

விஜய் பிரபலமான ஒரு நகைக்கடைக்கு விளம்பர தூதராக உள்ளார். அவர் அந்த கடைக்காக தோன்றிய விளம்பரங்கள் இடம்பெற்ற பலகைகள் கோவை நகர் முழுவதும் முக்கிய இடங்களில் வைக்கப்பட்டுள்ளன.

அந்த விளம்பரங்களில் உள்ள நடிகர் விஜய்யின் முகத்தை மறைத்து விடுமாறு கோவை மாநகர திட்ட அமைப்பு அதிகாரிக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

அடுத்த சில நிமிடங்களில் அந்த விளம் பரத்தின் ஏஜன்சியை தொடர்பு கொண்டு விளம்பரத்தில் உள்ள விஜய் படத்தை மறைக்குமாறு உத்தரவிட்டார் அதிகாரி.

இப்போது கோவை நகர் முழுவதும் வைக்கப் பட்டிருந்த நகைக்கடை விளம்பரத்தில் உள்ள நடிகர் விஜய் படங்களை மறைத்து விட்டனர்.

 

அஜீத் படத்தில் மீண்டும் விவேக்

அஜீத்துடன் இணைந்து நகைச்சுவை நடிகர் விவேக் நடிக்க இருக்கிறார்.

கெளதம் மேனன் இயக்கத்தில், ஏஎம் ரத்னம் தயாரிக்கும் புதிய படத்தில் அஜீத் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக அனுஷ்கா நடிக்கிறார்.

அஜீத் படத்தில் மீண்டும் விவேக்

இந்தப் படத்தில் அஜித்துடன் இணைந்து நகைச்சுவை நடிகர் விவேக் நடிக்கிறார்.

இதற்கு முன்பு கிரீடம் படத்தில் அஜித்-விவேக் இருவரும் இணைந்து நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

அதேபோல கிட்டதட்ட 13 வருடங்களுக்குப் பிறகு கௌதம் மேனன் இயக்கும் படத்தில் விவேக் நடிக்கிறார். 2001-ல் கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான ‘மின்னலே' படத்தில் விவேக்கும் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்திருந்தது நினைவிருக்கலாம்.

இப்போது ஒரு பெரிய இடைவெளிக்குப் பிறகு கவுதம் மேனன், அஜீத்துடன் கைகோர்க்கிறார் விவேக்.

 

விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாகிறார் ஸ்ரீதிவ்யா!

வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற ஒரே படத்தில் உச்சத்துக்குப் போன நடிகை ஸ்ரீதிவ்யா, அடுத்து விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக ஒப்பந்தமாகியுள்ளார்.

கிராமப் பிண்ணனியில் உருவாகும் இந்தப் படத்தை இயக்குகிறார் எஸ் எழில். தேசிங்கு ராஜாவுக்குப் பிறகு அவர் இயக்கும் படம் இது.

விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாகிறார் ஸ்ரீதிவ்யா!

இப்போது சிகரம் தொடு படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் விக்ரம் பிரபு, எழில் படத்துக்காக முற்றிலுமாக தன்னை மாற்றிக் கொள்ளவிருக்கிறாராம்.

விக்ரம் பிரபு நடித்த முதல் படம் கும்கியும் கிராமப் பின்னணியில் அமைந்ததுதான்.

இந்தப் படம் குறித்து இயக்குநர் எழில் கூறுகையில், "இது ஒரு உணர்ச்சிப்பூர்வமான காதல் படம். வழக்கமான கமர்ஷியல் விஷயங்களும் இந்தப் படத்தில் உண்டு. தஞ்சைக்குப் பக்கத்தில் உள்ள ஒரு கிராமத்தில் படமாக்குகிறோம். எம்எஸ் பாஸ்கரின் மகனாக நடிக்கிறார் விக்ரம் பிரபு.

மெல்லிசைக் கச்சேரி நடத்தும் எம்எஸ் பாஸ்கர் குழுவில் எதிர்பாராமல் பாடகராக நுழையும் விக்ரம் பிரபு, ஒரு பெண்ணில் காதலில் விழுகிறார்... ஆனால் அந்தப் பெண் ஒரு பெரிய பிரச்சினையில் இருக்கிறார்.. எனப் போகிறது கதை. அடுத்த மாதமே ஷூட்டிங் தொடங்கிவிடுவோம்," என்றார்.

 

கண்ணழகிக்கும் நடன இயக்குநருக்கும் தொடரும் நட்பு

விடாது கருப்பு என்பது போல... நடன இயக்குநருக்கும், கண்ணழகிக்கும் இடையேயான பல ஆண்டுகால நட்பு இன்னமும் நட்சத்திர ஓட்டல்களில் தொடர்கிறதாம்.

அந்த நடிகை ஹீரோயினாக நடித்த போது நடனம் அமைத்த அவர், பின்னர் கதாநாயகனாகி நடிகையுடன் ஜோடி சேர்ந்தார்.

நடன இயக்குநருக்கு காதல் மனைவி இருந்தாலும், நடிகையுடனான நட்பு தொடர்ந்தது.

இருவரின் நட்பும் கிசுகிசுவாக பரவி ரகசிய திருமணம் என்கிற ரீதியில் உலா வந்தது.

ஆனால் நடிகை வேறு ஒருவரை திருமணம் செய்து செட்டிலாகிவிட்டார்.

ஆனால் நடன இயக்குநருக்கு மற்றொரு நடிகையுடனான காதல் திருமணம் வரை போய் முறிந்து விட்டது. தொடர்ந்து நடனமோ பாலிவுட்டில் செட்டில் ஆகிவிட்டார்.

சமீபத்தில் பழைய நட்புக்களை புதுப்பிக்க பிரமாண்ட பார்ட்டி வைத்துள்ளார் நடன இயக்குநர். அதில் பழைய இயக்குநர்கள், நடிகர்கள், நடிகைகள் என அனைவரும் கூடி ஆடியுள்ளனர். அதில் கண்ணழகி நடிகையும் அடக்கம்.

இந்த புதுப்பிக்கப் பட்ட நட்பு மீண்டும் தொடர்கிறது என்று கிசுகிசுக்கின்றனர் கோலிவுட் வட்டாரங்களில்.

 

கடவுள் நடிகருடன் பார்ட்டி கொண்டாடிய வெஜிடேரியன் பட விழா நாயகி...

சென்னை: சமீபத்தில் நடந்த சாப்பாடு சம்பந்தமான பட விழாவிற்கு வந்திருந்தார் வளர்ந்த நடிகை. விழாவில் கலந்து கொண்டதோடு, தனது பிரியமான கடவுள் நடிகருடன் ஹோட்டல் ஒன்றிற்கு சென்று விட்டாராம்.

விடிய விடிய சிரிப்பும், கூச்சலுமாக ஹோட்டல் அறையில் பார்ட்டி கொண்டாடினார்களாம் இருவரும். அறையைக் காலி செய்து விட்டு அவர்கள் சென்ற பிறகும் அறை முழுவதும் அவர்களது ரொமான்ஸ் வாசனை வீசியதாம்.

ஏற்கனவே கடவுள் நடிகரும், குதிரை நடிகையும் பல வருடங்களாக தயாரான உலகம் சம்பந்தப்பட்ட படத்தில் சேர்ந்து நடித்திருந்தனர். அப்போது இருவரும் வெளிநாட்டில் ஜோடியாக சுற்றியதாக செய்திகளில் வலம் வந்தார்கள்.

ஆனால், அப்படம் பிளாப் ஆனது. இருவரும் தங்களது மற்ற படங்களில் பிசியாகி விட்டனர். ஆனபோதும், இப்படி விழா உள்ளிட்ட காரணங்களுக்காக சந்தித்துக் கொள்ளும் போது, மீண்டும் தங்களது நட்பை புதுப்பித்துக் கொள்கிறார்களாம்.

 

'பெரிய' படத் தயாரிப்பாளருக்கு வந்த பெரும் சிக்கல்!

ரசிகர்கள் ரொம்ப ஆவலாக எதிர்ப்பார்த்துக் காத்திருக்கும் டாப் நடிகரின் 'பெரிய' படத்தின் தயாரிப்பாளருக்கு திடீர் சிக்கல்.

அவர் ஏற்கெனவே வெளியிட்ட சில படங்களால் ஏற்பட்ட பெரும் நஷ்டத்தை மொத்தமாக செட்டில் பண்ணச் சொல்லி கார்னர் பண்ணியுள்ளார்களாம் விநியோகஸ்தர்கள்.

இந்த நஷ்டத்தொகை சில கோடிகள் என்றால் உடனே செட்டில் செய்திருப்பார் தயாரிப்பாளர். இது கிட்டத்தட்ட படத்தின் பட்ஜெட்டுக்கு நிகரானதாம்.

எனவே கூடிப் பேசிய விநியோகஸ்தர்கள், பாதித் தொகையை ஒரு வாரத்துக்குள் தரச் சொன்னார்களாம்.

ஆனால் தயாரிப்பாளரோ விநியோகஸ்தர்கள் சொன்ன பாதித் தொகையில் பாதியைத் தருவதாக ஒப்புக் கொண்டுள்ளாராம்.

இல்லாவிட்டால் படம் வெளியாவது சிக்கலாகிவிடும் என்பதால், சொன்னபடி பணத்துக்கு ஏற்பாடு செய்து வருகிறாராம்.