துள்ளிவிளையாடு படம் பார்த்து வின்செண்ட் செல்வாவைப் பாராட்டிய விஜய்!

Vijay Praised Director Vincent Selva

துள்ளி விளையாடு படம் பார்த்துவிட்டு, அதன் இயக்குநர் வின்சென்ட் செல்வாவைப் பாராட்டினார் விஜய்.

விஜய்யை வைத்து ப்ரியமுடன், யூத் போன்ற படங்களைத் தந்தவர் வின்செண்ட் செல்வா.

ஜித்தன், வாட்டாக்குடி இரண்யன் போன்ற படங்களையும் இயக்கியுள்ளார்.

இப்போது அவர் இயக்கத்தில் வெளிவரத் தயாராக இருக்கும் படம் துள்ளி விளையாடு.

ஆர்.பி. ஸ்டூடியோஸ் தயாரிக்க யுவராஜ் -தீப்தி, பிரகாஷ்ராஜ், ஜெயபிரகாஷ், சென்றாயன், பரோட்டா சூரி ஆகியோர் நடித்துள்ள இந்தப் படம் நடிகர் விஜய்க்கு பிரத்யேகமாகப் போட்டுக் காட்டப்பட்டது.

படத்தைப் பார்த்த விஜய், வின்செண்ட் செல்வாவை மிகவும் பாராட்டியிருக்கிறார்.

"கதாநாயகன் யுவராஜ் உள்ளிட்டோர் புதுமுகங்களாக இருந்தாலும், எனக்கு இந்தப் படம் புதியவர்கள் நடித்ததாகவே தெரியவில்லை... நல்ல பொழுதுபோக்கு அம்சங்களுடன் பிரகாஷ்ராஜுக்கும் அந்த மூன்று பேருக்கும் இடையே நடக்கும் போட்டியை ரசிகர்கள் நிச்சயம் மிகவும் விரும்புவார்கள்..," என்றார். படத்தின் பாடல்களை வெளியிட்டவரும் விஜய்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

யு சான்றிதழ் பெற்றிருக்கும் துள்ளி விளையாடு விரைவில் வெளியாகவிருக்கிறது.

 

தொழிலதிபரை மணந்த நடிகை நீபா!

Actress Neepa Marries Industrialist

சென்னை: நடிகை நீபாவுக்கும் தொழிலதிபர் சிவகுமாருக்கும் இன்று திருமணம் நடந்தது.

‘காவலன்', ‘பெருசு', ‘பள்ளிக்கூடம்', ‘தோட்டா', ‘கண்ணும் கண்ணும்', ‘அம்முவாகிய நான்' உள்பட பல படங்களில் நடித்தவர் நீபா. சின்னத்திரை தொடர்களிலும் ‘மானாட மயிலாட' நிகழ்ச்சியிலும் பங்கேற்றவர்.

இவரது அம்மா மாலினி அப்பா வாமனும் நடன அமைப்பாளர்களாக உள்ளனர். மாலினி பல படங்களில் நடித்துள்ளார்.

நீபாவுக்கும் வேலூரைச் சேர்ந்த கட்டுமான தொழில் அதிபர் சிவக்குமாருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

நீபா-சிவக்குமார் திருமணம் சென்னையை அடுத்த காட்டுப்பாக்கம் ஸ்ரீலட்சுமி பிரசன்னா மகாலில் இன்று (புதன்கிழமை) காலை நடந்தது. திரையுலகினர் ஏராளமாகக் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

மணமக்களுக்கு வரவேற்பு நிகழ்ச்சி இன்று மாலை 6.30 மணிக்கு அதே மண்டபத்தில் நடக்கிறது.

 

மடிசார் மாமி படத்துக்கு தடை.. தணிக்கைக் குழுவுக்கு உயர்நீதிமன்றம் குட்டு!

சென்னை: "மடிசார் மாமி' திரைப்படத்தை வெளியிட சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

மேலும், 'இப்போது வெளியாகும் திரைப்படங்களைப் பார்த்தால் திரைப்பட தணிக்கை வாரியம் என்ற அமைப்பு செயல்படுகிறதா என்பதே சந்தேகமாக உள்ளது' என்றும் சென்னை உயர் நீதிமன்றம் விமர்சித்துளற்ளது.

"மடிசார் மாமி' என்ற பெயரில் தயாரிக்கப்பட்டுள்ள திரைப்படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரி தமிழ்நாடு பிராமணர்கள் சங்கத்தின் சென்னை மாவட்டத் தலைவர் கே.ஆர்.சீனிவாசன் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அதில், "பிராமண சமுதாய மக்களை இழிவுபடுத்தும் வகையிலும், அம்மக்களின் கலாசார, பழக்க வழக்கங்களை கேலி செய்யும் விதத்திலும் "மடிசார் மாமி' என்ற திரைப்படத்தை 'ஷில்பா மோசன் ஒர்க்ஸ்' என்ற நிறுவனம் தயாரித்துள்ளது.

பிராமண சமுதாய மக்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில் காட்சிகள் நிறைந்துள்ள அந்தப் படத்தை வெளியிட நீதிமன்றம் தடை விதிக்க வேண்டும்,' என்று கோரியுள்ளார்.

இந்த மனு மீது விசாரணை நடத்திய நீதிபதி என்.கிருபாகரன், 'மடிசார் மாமி' என்ற பெயரில் தயாரிக்கப்பட்டுள்ள திரைப்படத்தை வெளியிட இடைக்காலத் தடை விதித்து திங்கள்கிழமை (மே 27) உத்தரவு பிறப்பித்தார்.

அந்த உத்தரவில், "நமது பழைய திரைப்படங்களில் உன்னதமான மனித உறவுகள், குடும்ப மதிப்பீடுகள், பெரியவர்களை மதித்து நடத்தல் போன்ற உயரிய கருத்துகளை தூக்கிப் பிடிக்கும் காட்சிகள் நிறைய இருந்தன. பழைய திரைப்படப் பாடல்கள் மனித வாழ்வின் மகத்துவத்தைப் போற்றுவதாக, தேச பக்தியை வளர்ப்பதாக, சகோதரத்துவத்தை வளர்ப்பதாக இருந்தன.

அந்தப் படங்களில் நடித்த கதாநாயகர்கள் நல்ல குணங்கள் நிறைந்தவர்களாக, தங்கள் ரசிகர்கள் மனதில் நல்ல கருத்துகளைப் பதியச் செய்யும் சிறந்த முன்மாதிரிகளாக நடித்தார்கள். தமிழ்த் திரையுலகம் தமிழ்நாட்டுக்கு 5 முதல்வர்களை தரும் அளவுக்கு சமுதாயத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் வலிமை மிக்க ஊடகமாக திரைப்படங்கள் உள்ளன.

ஆனால், தற்போது வெளிவரும் திரைப்படங்கள் சமுதாயத்தில் மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடியவைகளாக உள்ளன. நாம் விரும்பியதை அடைவதற்காக சட்ட விரோதமான, வன்முறைகள் நிறைந்த, ஒழுக்கக் கேடான பாதையில் சென்றாலும்கூட அதில் தவறில்லை என்ற கருத்தை முன்னிறுத்துவதாக இன்றைய பல திரைப்படங்கள் உள்ளன. படத்தின் தலைப்புகள்கூட மோசமாக உள்ளன.

திரைப்படம் என்பது வியாபாரமாக இருந்தாலும்கூட, திரைப்படங்களைத் தயாரிப்பவர்கள், அந்தத் திரைப்படங்களில் நடிப்பவர்கள், படத்தை தணிக்கை செய்யும் தணிக்கைக் குழுவினர் போன்றவர்களுக்கு மிகப் பெரும் சமூகப் பொறுப்புணர்வு உண்டு என்பதை மறந்து விடக் கூடாது.

இந்த வழக்கில் 'மடிசார் மாமி' என்ற திரைப்படத்தில் பிராமணர் சமுதாய மக்களை இழிவுபடுத்தும் காட்சிகள் நிறைந்துள்ளதாகவும், எனினும் படத்துக்கு தணிக்கை வாரியம் தணிக்கைச் சான்றிதழ் வழங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

சகிப்புத் தன்மை என்பது நாளுக்கு நாள் குறைந்து, ஒவ்வொரு பிரிவினரும் உணர்ச்சிகளுக்கு எளிதில் வயப்படுவர்களாக மாறி வரும் சூழலில், திரைப்படங்களுக்கு சான்றிதழ் அளிக்கும் தணிக்கை வாரியத்தின் பொறுப்புணர்வு அதிகரித்துள்ளது. ஆனால் தற்போது வெளியாகும் திரைப்படங்களைப் பார்த்தால் தணிக்கை வாரியம் என்ற ஒரு அமைப்பு செயல்படுகிறதா என்பதே சந்தேகமாக உள்ளது.

ஒரு திரைப்படத்தை எவ்வாறு தணிக்கை செய்ய வேண்டும் என்பதற்கு சினிமா சட்டத்தில் ஏராளமான விதிமுறைகளும், வழிகாட்டு நெறிமுறைகளும் கூறப்பட்டுள்ளன. அவ்வாறு இருந்தும்கூட வன்முறை, ஆபாசம் நிறைந்த காட்சிகளோடு வெளியாகும் திரைப்படங்களால் தணிக்கை வாரியத்தின் செயல்பாடு பற்றி சந்தேகம் எழுகிறது.

ஆகவே, இன்றைய நவீன திரைப்படங்களை ஒழுங்குபடுத்தும் விதத்தில் சினிமா சட்ட விதிகளில் போதுமான திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்று இந்த நீதிமன்றம் பரிந்துரை செய்கிறது. மேலும், அரசியல் சார்பு இல்லாத, தகுதியான மற்றும் பொறுப்புணர்வு மிக்கவர்களையே தணிக்கை வாரியத்தில் உறுப்பினர்களாக நியமிக்க வேண்டும்.

நீதிமன்றத்தின் இந்த பரிந்துரைகள் தொடர்பாக மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் தமது தரப்பு கருத்தை தெரிவிக்க வேண்டும்.

மடிசார் மாமி திரைப்படத்தை வெளியிட இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது. எனினும் படத்தை தயாரித்தவர்கள் படத்தின் தலைப்பை மாற்றிவிட்டு வெளியிடலாம். வழக்கின் விசாரணை ஜூன் 12-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது," என்று கூறியுள்ளார்.

 

விஸ்வரூபம் 2 அக்டோபரில் ரிலீஸ்!

Kamal S Viswarooam 2 Release October

கமல் ஹாஸன் இயக்கி நடித்து வரும் விஸ்வரூபம் 2 படம் இந்த ஆண்டு இறுதியில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

படத்தின் இரண்டாம் பாகம் இந்தியாவில் என்று அறிவிப்போடு 'விஸ்வரூபம்' படத்தை முடித்திருந்தார் கமல். ஏற்கெனவே கணிசமான காட்சிகளை படமாக்கியும் வைத்திருந்தார். மீதிக் காட்சிகளை தாய்லாந்தில் படமாக்கி வருகிறார்.

மேலும் சில நாடுகளிலும் ஷூட்டிங் நடத்தத் திட்டமிட்டுள்ளார் கமல்.

ஆண்ட்ரியா, பூஜாகுமார், ராகுல் போஸ், சேகர் கபூர் உள்ளிட்டோர் நடிக்கும் இந்த இரண்டாம் பாகத்தை இந்த ஆண்டே வெளியிடத் திட்டமிட்டுள்ளார் கமல்.

தாய்லாந்து படப்பிடிப்பில் கமலுடன் ஆண்ட்ரியா நடிக்கும் ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது.

இறுதிக்கட்ட படப்பிடிப்பை டெல்லியில் நடத்த திட்டமிட்டுள்ளனர். 'விஸ்வரூபம் 2' படத்தினை கமல் தயாரிக்கவில்லை, ஆஸ்கர் பிலிம்ஸ் தயாரித்து வருகிறது.

இப்படத்தினை அக்டோபரில் வெளியிடத் திட்டமிட்டுள்ளனர். பெரிய படங்கள் எதுவும் வரவில்லை என்றால் தீபாவளிக்கு வெளியாகக் கூடும்.

 

ரூ 19 கோடி மோசடி: பிரபல மலையாள நடிகை லீனா மரியா காதலனுடன் பண்ணை வீட்டில் கைது!

டெல்லி: சென்னையில் பல்வேறு மோசடியில் ஈடுபட்டதாகக் கூறி பிரபல நடிகை லீனா மரியா பால் மற்றும் அவரது காதலனை டெல்லி மற்றும் சென்னை போலீசார் நேற்று கைது செய்தனர்.

டெல்லி பண்ணை வீட்டில் பதுங்கியிருந்த அவர்களிடமிருந்து ஆயுதங்கள், சொகுசு கார்கள் மற்றும் 81 விலையுயர்ந்த கடிகாரங்களை பறிமுதல் செய்தனர்.

தேசிய விருது பெற்ற ரெட் சில்லிஸ் மலையாளப் படத்தில் மோகன்லாலுடன் நடித்தவர் லீனா மரியா பால். மெட்ராஸ் கேப், ஹஸ்பன்ட்ஸ் இன் கோவா, கோப்ரா போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.

cheating case starlet leena maria paul held

இவரது காதலன் பெயர் பாலாஜி. பல்வேறு மோசடிப் புகார்களில் இவர் ஈடுபட்டதாக வழக்குகள் உள்ளன. இவருடன் சேர்ந்து லீனாவும் மோசடியில் ஈடுபட்டதாக பிரிவு 420, 120பி, 406 ன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த சில தினங்களாக போலீசார் இருவரையும் தேடி வந்தனர். அப்போதுதான் இருவரும் டெல்லி அருகே பண்ணை வீட்டில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது.

6 பேர் கொண்ட போலீஸ் குழு டெல்லி பண்ணை வீட்டை முற்றுகையிட்டு, லீனா - பாலாஜியை கைது செய்தது.

அப்போது அவர்களிடம் 4 துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டன. 9 சொகுசு கார்கள் மற்றும் 81 விலையுயர்ந்த கைகடிகாரங்களை கைப்பற்றினர்.

சென்னையில் ரூ 19 கோடியை மோசடி செய்ததாக பாலாஜி - லீனா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ரூ 76 லட்சம் மோசடி செய்ததாக மற்றொரு வழக்கும் இவர்கள் இருவர் மீதும் உள்ளது.