திட்டமிட்டபடி மே 9-ம் தேதி வெளியாகிறது ரஜினியின் கோச்சடையான்!

சென்னை: ஏற்கெனவே அறிவித்தபடி வரும் மே 9-ம் தேதியன்று, ரஜினியின் கோச்சடையான் திரைப்படம் உலகமெங்கும் வெளியாகிறது. இதனை படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் நேற்று அறிவித்தனர்.

கோச்சடையான் படத்தின் தயாரிப்பாளர் டாக்டர் முரளி மனோகரின் நிதிப் பிரச்சினைகள் காரணமாக படம் வெளியாவது சந்தேகம் என்பது போன்ற தகவல்கள் கடந்த சில தினங்களாக மீடியாவில் அதிகம் வெளியாகிவந்தன.

திட்டமிட்டபடி மே 9-ம் தேதி வெளியாகிறது ரஜினியின் கோச்சடையான்!

இது படத்தை எதிர்ப்பார்த்துக் கிடந்த பல லட்சம் ரசிகர்களைத் தவிப்புக்குள்ளாக்கியது.

படம் வெளியாகுமா இல்லையா என்று தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தனர். இந்த நிலையில், திட்டமிட்டபடி கோச்சடையான் படம் மே 9-ம் தேதியே வெளியாகும் என தயாரிப்பாளர் முரளி மனோகர் நேற்று அறிவித்தார்.

இதனை படத்தின் இயக்குநர் சவுந்தர்யாவும் உறுதிப் படுத்தினார். படத்தின் பிஆர்ஓ ரியாஸ் அகமதுவும், கோச்சடையான் 9-ம் தேதி வெளியாவது நிச்சயம் என தகவல் வெளியிட்டுள்ளார்.

 

கோச்சடையானுக்கு சிக்கல் என்பது தவறான செய்தி.. ஏற்கெனவே வரிவிலக்கு பெற்ற படம் அது! - விநியோகஸ்தர்கள்

சென்னை: கோச்சடையான் படத்துக்கு சிக்கல் என்று வரும் செய்திகள் உண்மையில்லை. ஏற்கெனவே வரிவிலக்கு பெற்று, ரிலீசுக்கு தயாராகவே உள்ளது அந்தப் படம். திட்டமிட்டபடி மே 9-ம் தேதி வெளியாகும் என்று விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

கோச்சடையானுக்கு விநியோகஸ்தர்களால் சிக்கல், தயாரிப்பாளருக்கு பிரச்சினை, வியாபாரம் ஆவதில் தாமதம் என்றெல்லாம் கடந்த நான்கு தினங்களாக செய்திகள் இறக்கை கட்டிப் பறக்க ஆரம்பித்தன.

கோச்சடையானுக்கு சிக்கல் என்பது தவறான செய்தி.. ஏற்கெனவே வரிவிலக்கு பெற்ற படம் அது! - விநியோகஸ்தர்கள்

ஆனால் அவற்றில் உண்மையில்லை என்று விநியோகஸ்தர்கள் சங்கம் மறுத்துள்ளது.

இதுகுறித்து, தமிழ்நாடு விநியோகஸ்தர்கள் சங்கத்தின் செயலர் ஜெயக்குமார் கூறுகையில், "பொதுவாக கோச்சடையான் மாதிரி பெரிய படங்கள் வெளியாகும்போது, வருமானப் பகிர்வு, டிக்கெட் விலை, தியேட்டர் ஒதுக்குதல் போன்ற விஷயங்களைப் பற்றி நிறைய கலந்துரையாடல்கள் நடப்பது வழக்கம்.

கோச்சடையான் பட விஷயத்திலும் அதுதான் நடந்தது. இந்த மாதிரி பெரிய படம், அதுவும் ரஜினி படம்தான் தியேட்டர்களில் பெரிய கூட்டத்தை ஈர்க்கும். அந்த வாய்ப்பை யார் தவறவிடுவார்கள்.

கோச்சடையானுக்கு ஏற்கெனவே கேளிக்கை வரிச் சலுகையை தமிழக அரசு வழங்கிவிட்டது. படம் வெளியாகத் தேவையான அனைத்து விஷயங்களையும் பேசி முடித்துவிட்டோம். திட்டமிட்டபடி, மே 9-ம் தேதி கோச்சடையான் வெளியாகிறது," என்றார்.

 

தமிழ் சினிமாவின் டாப் நடிகைகளுக்கு தமிழ்நாட்டிலும் வாக்கில்லை.. வாக்களிக்க சொந்த ஊருக்கும் போகவில்லை

சென்னை: தமிழ் சினிமாவில் உச்சத்திலிருக்கும் பெரும்பாலான நடிகைகளுக்கு சென்னையிலோ அல்லது தமிழகத்தின் பிற பகுதியிலோ வாக்குரிமையே இல்லை.

பொதுவாக தமிழ் சினிமாவில் முன்னணியிலிருக்கும் நடிகைகள் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர்கள் இல்லை.

வட மாநிலங்கள், ஆந்திரா அல்லது கேரளாவைச் சேர்ந்தவர்கள்தான் தமிழின் பெரும்பாலான நடிகைகள்.

டாப் நடிகைகளுக்கு தமிழ்நாட்டிலும் வாக்கில்லை.. வாக்களிக்க சொந்த ஊருக்கும் போகவில்லை!

இவர்களுக்கு சொந்த ஊரில் வாக்குரிமை இருக்குமா என்பதும் சந்தேகம்தான். காரணம் 16 வயதிலேயே பெரும்பாலானோர் நடிக்க வந்துவிடுகிறார்கள். நடிக்க வந்த பிறகு சென்னையில் இருந்தாலும், வாக்களிப்பது குறித்த ஆர்வம் இவர்களில் பெரும்பாலானோர்க்கு இல்லை.

வாக்களிக்கச் சென்றால் ரசிகர்கள் மொய்த்துக் கொள்வார்கள், பாதுகாப்புப் பிரச்சினை என்றெல்லாம் இருப்பதால் பொதுவாகவே நடிகைகள் வாக்களிக்க வருவதில்லை. ரிடையர் ஆன பிறகு, வாக்குக் கேட்க அல்லது தேர்தலில் நிற்க மட்டும் தயாராக வந்துவிடுவார்கள்!

இந்த தேர்தலிலும் இதே நிலைதான்.

முன்னணி நடிகைகளான ஹன்சிகா, தமன்னா, நயன்தாரா, காஜல் அகர்வால், தமிழ்நாட்டு மருமகளாகப் போகும் அமலா பால், ப்ரியா ஆனந்த், ஸ்ரீதிவ்யா... இவர்களில் யாருக்குமே வாக்குரிமை இல்லை. இவர்களுக்கு ஒருவேளை அவரவர் மாநிலங்களில் வாக்குரிமை இருந்தாலும் அதைச் செலுத்த மெனக்கெட்டுப் போகவில்லை.

தமிழ் சினிமாவின் நிஜமான டாப் நடிகை லட்சுமி மேனனுக்கோ இன்னும் வாக்களிக்கும் வயசே வரவில்லையாம்!

நடிகை த்ரிஷாவுக்கு சென்னையில் வாக்குரிமை உள்ளது. ஆனால் அவர் ஊரில் இல்லாததால் வாக்களிக்கவில்லையாம்!

 

மனைவி ஷாலினியுடன் வரிசையில் நின்று வாக்களித்த அஜீத்

சென்னை: நடிகர் அஜீத் தனது மனைவி ஷாலினியுடன் திருவான்மியூரில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.

மனைவி ஷாலினியுடன் வரிசையில் நின்று வாக்களித்த அஜீத்

தமிழகம் மற்றும் புதுவையில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு துவங்கியது. ஒரு சில இடங்களில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பழுதானதால் வாக்குப்பதிவு தாமதமாக துவங்கியது. மற்றபடி வாக்குப்பதிவு அமைதியாக நடந்தது.

பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் காலையிலேயே வாக்களித்தனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாக்குப்பதிவு துவங்கியவுடன் வாக்களித்தார்.

மனைவி ஷாலினியுடன் வரிசையில் நின்று வாக்களித்த அஜீத்

இந்நிலையில் அஜீத் குமார் தனது மனைவி ஷாலினியுடன் திருவான்மியூரில் உள்ள வாக்குச்சாவடிக்கு சென்றார். அங்கு அவர்கள் வரிசையில் நின்று வாக்களித்துவிட்டு சென்றனர்.

 

தேர்தலுக்காக தியேட்டர்கள் லீவு... ஆனா 'பிரண்ட்ஸ்', சன் டிவி வீட்டுக்கே வந்து படம் காட்டுது!

சென்னை: சன் டிவியில் இன்று காலை 10 மணிக்கு விஜய், சூர்யா நடித்த 'ப்ரண்ட்ஸ்' திரைப்படம் ஒளிபரப்பாகிறது.

இன்று தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 லோக்சபா தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறுவதையொட்டி, இன்று மாலை 6 மணி வரை திரையரங்குகளை மூட தியேட்டர்கள் உரிமையாளர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது.

ஏற்கனவெ கடந்த முறையைக் காட்டிலும் இம்முறை வாக்காளர்கள் எண்ணிக்கை அதிகம். எனவே, இத்தேர்தலில் வாக்குப்பதிவு அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது. இந்நிலையில் வாக்காளர்கள் அனைவரையும் வாக்களிக்கச் செய்ய தேர்தல் ஆணையமும் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

தேர்தலுக்காக தியேட்டர்கள் லீவு... ஆனா 'பிரண்ட்ஸ்', சன் டிவி வீட்டுக்கே வந்து படம் காட்டுது!

அதன்படி, இன்று பொது விடுமுறை அறிவிக்கப் பட்டுள்ளது. ஆனால், விடுமுறை தினமான இன்று வாக்காளர்கள் சினிமா பார்க்க தியேட்டர் சென்று விடாதபடி இருக்க இன்று மாலை வாக்களிக்கும் நேரம் முடியும் வரை தியேட்டர்களை மூட தியேட்டர்கள் உரிமையாளர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது

ஆனால், தியேட்டர்களுக்கு லீவு விட்டால் என்ன நாங்கள் இருக்கிறோம் என சேனல்கள் சிறப்புத் திரைப்படங்களை ஒளிபரப்புகிறது.

சீரியல்களின் ஆக்கிரமிப்பு...

சன்டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை ஒளிபரப்பாகி வந்த சீரியல்கள் சமீபத்தில் சனிக்கிழமை வரை நீட்டிக்கப் பட்டுள்ளன. இவை விரைவில் ஞாயிற்றுக்கிழமைகளை ஆக்கிரமித்தாலும் ஆச்சர்யப் படுவதற்கில்லை.

சிறப்புத் திரைப்படம்....

ஆனால், தேர்தல் நாளான இன்று மற்ற அரசு விடுமுறை நாட்களைப் போல் காலையில் திரைப்படம் ஒளிபரப்புகிறது சன் டிவி.

ப்ரண்ட்ஸ்...

இன்று காலை 10 மணிக்கு விஜய், சூர்யா நடிப்பில் வெளியான சூப்பர்ஹிட் படம் ‘ப்ரண்ட்ஸ்' ஒளிபரப்பாகிறது.

அப்புறம் சீரியல் தான்....

படத்தைத் தொடர்ந்து மீதமுள்ள சீரியல்கள் வழக்கம் போல ஒளிபரப்பாகும் என எதிர்பார்க்கப் படுகிறது. மீண்டும் வழக்கம் போல 3 மணி சுமாருக்கு மற்றொரு படம் ஒளிபரப்பாகும் எனத் தெரிகிறது.

பெண்கள் எண்ணிக்கை...

காலையில் சீரியல் கட்டாவதால் வாக்குச்சாவடியில் பெண்கள் அதிகளவில் ஆர்வத்துடன் வந்து வாக்களிப்பார்கள் என எதிர்பார்க்கப் படுகிறது.

தியேட்டர் வரலாற்றில் முதல்முறையாக...

தமிழ்நாட்டில் தேர்தலுக்காக தியேட்டர்கள் மூடப்படுவது இதுவே முதன்முறையாகும். தேர்தல் ஆணையத்தின் கோரிக்கையினை ஏற்று இந்த நடவடிக்கை மேற்கொள்வதாக தியேட்டர்கள் உரிமையாளர் சங்கத்தினர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

ஆழ்வார்பேட்டையில் கௌதமியுடன் சென்று வாக்களித்தார் கமல் ஹாஸன்

சென்னை: உலக நாயகன் கமல் ஹாஸன் ஆழ்வார்பேட்டையில் உள்ள வாக்குச்சாவடியில் இன்று காலை வாக்களித்தார். அதன் பிறகு அவர் விமானம் மூலம் பெங்களூர் சென்றார்.

ஆழ்வார்பேட்டையில் கௌதமியுடன் சென்று வாக்களித்தார் கமல் ஹாஸன்

நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 தொகுதிகளிலும் இன்று காலை 7 மணிக்கு துவங்கியது. உலக நாயகன் கமல் ஹாஸன் உத்தமவில்லன் படப்பிடிப்பில் பெங்களூரில் பிசியாக இருந்தார். வாக்களிப்பதற்காக அவர் படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு விமானம் மூலம் சென்னை வந்தார்.

ஆழ்வார்பேட்டையில் கௌதமியுடன் சென்று வாக்களித்தார் கமல் ஹாஸன்

அவர் ஆழ்வார்பேட்டையில் தனது அலுவலகத்திற்கு எதிரே உள்ள பள்ளியில் அமைக்கப்பட்டிருக்கும் வாக்குச்சாவடியில் இன்று காலை வாக்களித்தார். அவருடன் நடிகை கௌதமியும் வந்து வாக்களித்தார்.

வாக்களித்த உடன் அவர் விமானம் மூலம் பெங்களூருக்கு கிளம்பிச் சென்றார். பெங்களூரை அடைந்த அவர் உத்தம வில்லன் படப்பிடிப்பில் இன்று கலந்து கொள்கிறார்.

 

24 வயதில் முதல்முறையாக வாக்களித்த நடிகர் கௌதம் கார்த்திக்

சென்னை: நடிகர் கார்த்திக்கின் மகன் கௌதம் முதன்முறையாக இன்று வாக்களித்துள்ளார்.

மணிரத்னத்தின் கடல் படம் மூலம் ஹீரோவானவர் நடிகர் கார்த்திக்கின் மகன் கௌதம். கடல் படம் ஓடாவிட்டாலும் அவருக்கு வாய்ப்புகள் வந்து குவிகிறது.

24 வயதில் முதல்முறையாக வாக்களித்த நடிகர் கௌதம் கார்த்திக்

அவர் தற்போது சிப்பாய், வை ராஜா வை மற்றும் இந்திரஜித் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் இன்று சென்னையில் வாக்களித்துள்ளார்.

இது குறித்து அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

என் கடமையை தற்போது தான் நிறைவேற்றினேன். முதல் முறை வாக்களித்துள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.

24 வயதாகும் கௌதம் தற்போது தான் முதல்முறையாக வாக்களித்துள்ளாராம்.

 

அஜீத் ஸ்டைலில் பிரியாணி சமைத்து படக்குழுவுக்கு பரிமாறிய மம்மூட்டி

திருவனந்தபுரம்: அஜீத் குமார் ஸ்டைலில் மம்மூட்டி தான் நடிக்கும் படக்குழுவினருக்கு பிரியாணி சமைத்து பரிமாறியுள்ளார்.

மம்மூட்டி மங்களிஷ் என்ற மலையாள படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவர் மீன்களை மொத்த விலைக்கு விற்கும் வியாபாரியாக நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பில் மம்மூட்டி தன் கையாலேயே தலச்சேரி மட்டன் பிரியாணியை சமைத்துள்ளார்.

அஜீத் ஸ்டைலில் பிரியாணி சமைத்து படக்குழுவுக்கு பரிமாறிய மம்மூட்டி

சமைத்ததோடு மட்டும் அல்லாமல் படக்குழுவினருக்கு தானே பிரியாணியை பரிமாறி மகிழ்ந்துள்ளார். அவ்வளவு பெரிய நடிகர் பிரியாணி சமைத்து கொடுத்ததை பார்த்து படக்குழுவினர் நெகிழ்ந்துவிட்டனர்.

'தல' அஜீத் தான் பணியாற்றும் படக்குழுக்களுக்கு தன் கையாலேயே பிரியாணி சமைத்து பரிமாறுவதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்நிலையில் அஜீத் பாணியில் மம்மூட்டியும் பிரியாணி சமைத்து படக்குழுவுக்கு கொடுத்துள்ளார்.

 

யாரையும் நான் ஆதரிக்கவில்லை.. அனைவரும் வாக்களியுங்கள்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் பேட்டி

சென்னை: லோக்சபா தேர்தலில் தாம் யாரையும் ஆதரிக்கவில்லை என்று நடிகர் ரஜினிகாந்த் கூறினார்.

லோக்சபா தேர்தலில் சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் இன்று காலை முதல் நபராக நடிகர் ரஜினிகாந்த் வாக்களித்தார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், அனைவரும் வாக்களிக்க வேண்டும். வாக்களிப்பது கடமை என்றார்.

யாரையும் நான் ஆதரிக்கவில்லை..: வாக்களித்த பின் ரஜினி பேட்டி

அப்போது நீங்கள் தேர்தலில் யாரை ஆதரிக்கிறீர்கள் என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு நான் யாரையும் ஆதரிக்கவில்லை என்றார்.

தமிழகத்துக்கு பிரசாரத்துக்கு வந்த பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, நடிகர் ரஜினிவீட்டுக்கு சென்று சந்தித்தார். அதற்கு முன்னதாக மதிமுக பொதுச்செயலர் வைகோவும் ரஜினியை நேரில் சந்தித்தார். இதனால் ரஜினி தங்களது அணியை ஆதரிப்பதாக பாஜகவினர் கூறிவந்தனர்.

ஆனால் ரஜினிகாந்த் மோடியுடனான சந்திப்பு தனிப்பட்ட முறையிலானது என்றே கூறிவந்தார். இன்றும் வாக்களித்த பின்னரும் தாம் தேர்தலில் யாரையுமே ஆதரிக்கவில்லை என்று கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது,.

 

அஜீத்துக்கு இந்த முறை வில்லன்கள் மட்டுமல்ல... வில்லியும் உண்டு!

சென்னை: கவுதம் மேனன் இயக்கும் புதிய படத்தில் அஜீத்துடன் இரு வில்லன்கள் மட்டுமல்லாது... வில்லியும் உண்டு. அவர் இதுவரை நாயகியாக நடித்து வந்த தன்ஷிகா.

அஜீத்துக்கு இந்த முறை வில்லன்கள் மட்டுமல்ல... வில்லியும் உண்டு!

இந்தப் படத்தில் அஜீத் ஜோடியாக அனுஷ்கா நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன்பு சென்னை கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் தொடங்கி, தொடர்ந்து நடந்து வருகிறது.

இப்படத்தில் அஜீத்துக்கு வில்லன்களாக அருண் விஜய்யும், ஆதியும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

இப்போது, இப்படத்தில் ஒரு வில்லியையும் சேர்க்கப் போகிறார்கள். அந்த வில்லி வேடத்திற்கு அரவான், பரதேசி படங்களில் நடித்த தன்ஷிகா.

வில்லன்களை விட இவருடைய கதாபாத்திரம் இப்படத்தில் முக்கியத்துவம் மிக்கதாக இருக்குமாம்.

 

பில் செலுத்தாமல் படக்குழுவினரை மும்பை ஓட்டலில் திண்டாட விட்ட இயக்குநர்!

சென்னை: பில் தொகையைச் செலுத்தாமல் படக்குழுவினரை மும்பை ஓட்டலில் திண்டாட விட்டுள்ளார் தமிழ் சினிமா இயக்குநர் ஒருவர்.

அவர் பெயர் பி ரவிக்குமார். சமீபத்தில் நடிகை சுஜிபாலா விவகாரத்தில் ஏகத்துக்கும் அடிபட்டவர் இந்த ரவிக்குமார். இவரால் தனக்கு மரண அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாக சுஜிபாலா புகார் தந்தது நினைவிருக்கலாம்.

பில் கட்டாமல் படக்குழுவினரை மும்பை ஓட்டலில் திண்டாட விட்ட இயக்குநர்!

இப்போது மீண்டும் ஒரு சர்ச்சையில் ரவிக்குமார் சிக்கியுள்ளார். தன் சொந்தத் தயாரிப்பான 'லவ் பண்ணலாமா வேணாமா' படப்பிடிப்பிற்காக இரண்டு பெண்கள் உட்பட ஐந்து பேர் கொண்ட குழுவை மும்பை அழைத்துச் சென்ற ரவிக்குமார், அவர்களை ஓட்டலிலேயே திண்டாட விட்டுவிட்டு பாதியில் திரும்பி வந்துள்ளார்.

கடந்த புதன்கிழமை மும்பை ஹோட்டல் நிர்வாகத்தினர் ரவிக்குமார் தங்களுக்கு பெருந்தொகை பாக்கி வைத்திருப்பதாகக் கூறி, உடனே அந்தத் தொகையைச் செலுத்தக் கோரினார்.

ஆனால் இதற்கு பதில் எதுவும் அளிக்காத ரவிக்குமார், மறுநாள் யாரிடமும் சொல்லாமல் ஹோட்டலை விட்டு வெளியேறிவிட்டாராம்.

இந்த விஷயம் தெரிய வந்ததும் ஷாக் ஆகிவிட்டார்களாம் படக்குழுவினர். தொடர்ந்து படக்குழுவினருக்கு எந்த சேவையும் தர முடியாது என கூறிவிட்டது ஓட்டல் நிர்வாகம்.

கிட்டத்தட்ட இரண்டு நாட்களுக்கு இவர்களுக்கு உணவு கூட தரப்படவில்லை. தங்க மட்டுமே அனுமதித்துள்ளனர்.

இதுகுறித்து ரவிக்குமாரைத் தொடர்புகொண்டபோது, "படப்பிடிப்புக் குழுவினர் மும்பை ஷூட்டிங்கில் இருக்கிறார்கள். தேர்தல் சமயம் என்பதால் தன்னால் ஹோட்டல் பாக்கியை செலுத்த முடியவில்லை," என்று தெரிவித்தார்.

இப்போது கிடைத்துள்ள தகவல்படி, ஓட்டல் பாக்கியைச் செலுத்த ரவிக்குமார் ஒப்புக் கொண்டுள்ளாராம். எனவே படக்குழுவினருக்கு சேவைகளைத் தொடர்கிறது ஓட்டல் நிர்வாகம்.

 

அடையாறு மாநகராட்சி பள்ளியில் வாக்களித்தார் விஜய்

சென்னை: நடிகர் விஜய் தனது வாக்கை காலை 10 மணிக்கு செலுத்தினார்.

தமிழ் சினிமா நடிகர்கள் வாக்களிப்பதை மிக முக்கிய கடமையாகக் கருதி, தவறாமல் வாக்களிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

தன்னைப் பின்பற்றும் ரசிகர்களும் இதுபோல ஜனநாயகக் கடமையாற்ற வேண்டும் என்றும் கோரி வருகின்றனர்.

அடையாறு மாநகராட்சி பள்ளியில் வாக்களித்தார் விஜய்

வெளியில், க்யூ போன்றவற்றைப் பொருட்படுத்தாமல் காத்திருந்து வாக்களிப்பதையும் காண முடிகிறது.

முன்னணி நடிகர் விஜய் எங்கே எப்போது வாக்களிப்பார் என்ற தகவலை அவரது பிஆர்ஓ வெளியிட்டுள்ளார்.

அடையாறு தொலைபேசி இணைப்பகத்துக்கு அருகில் உள்ள மாநகராட்சிப் பள்ளியில் இன்று காலை 10 மணிக்கு விஜய் வாக்களிப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. அதன்படி வாக்களிக்க வந்த விஜய், வரிசையில் நின்று வாக்களித்தார்.

விஜய் இந்தத் தேர்தலுக்கு முன் கோவை சென்று பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியைச் சந்தித்தது நினைவிருக்கலாம், கடைசி நேரத்தில் மோடிக்கு ஆதரவாக இவர் அறிக்கை தருவார் என கூறப்பட்டது. ஆனால் விஜய் அப்படி எந்த அறிக்கையும் தரவில்லை.

 

காலில் காயத்துடன் வந்து வாக்களித்த சூர்யா!

சென்னை: காலில் காயம் ஏற்பட்டிருந்தாலும், அதைப் பொருட்படுத்தாமல் பாராளுமன்றத் தேர்தலில் வாக்களித்தார் நடிகர் சூர்யா.

சென்னை தி நகர் கிருஷ்ணா தெருவில் சிவகுமார் குடும்பத்தினர் வசிக்கின்றனர். இவர்கள் இந்தி பிரச்சார சபாவில் உள்ள வாக்குச் சாவடியில் ஓட்டுப் போட வேண்டும்.

காலில் காயத்துடன் வந்து வாக்களித்த சூர்யா!

இன்று பிற்பகல் குடும்பத்துடன் சென்று தங்கள் வாக்கைப் பதிவு செய்தார் சிவகுமார்.

அவருடன் மகன்கள் சூர்யா, கார்த்தியும் வாக்களித்தனர்.

அப்போது காலில் ஏற்பட்ட காயம் காரணமாக சற்று தாங்கித் தாங்கி நடந்து வந்த சூர்யா சிரமம் பார்க்காமல் வரிசையில் நின்று வாக்களித்தார்.

ஆனால் அவரது மனைவி நடிகை ஜோதிகா வாக்களிக்க வரவில்லை.

மும்பையில் நடந்த அஞ்சான் படப்பிடிப்பின்போது சூர்யாவுக்கு காலில் காயமேற்பட்டது நினைவிருக்கலாம். வாக்குச் செலுத்துவதற்காகவே அவர் மும்பையிலிருந்து சென்னை வந்தார். இன்று மாலை மீண்டும் மும்பை திரும்புகிறார்.

 

''கட்டிங், வெட்டிங், ஒட்டிங்.. வோட்டிங்.''. டிவிகளை கலக்கும் கவுண்டமணி...!!!

சென்னை: தேர்தல் காலம் பார்த்து செம டைமிங்காக நகைச்சுவை அரசர் கவுண்டமணி நடித்துள்ள 49 ஒ படத்தின் விளம்பரங்களை டிவியில் போட்டு கலக்கி வருகின்றனர்.

டிவி சானல்களில் காலை முதலே இந்தப் பட விளம்பரம்தான். கவுண்டமணியின் டிப்பிகல் வசனங்களை வைத்தே விளம்பரத்தை ஒளிபரப்புகின்றனர்.

''கட்டிங், வெட்டிங், ஒட்டிங்.. வோட்டிங்.''. டிவிகளை கலக்கும் கவுண்டமணி...!!!

கட்டிங், வெட்டிங், ஒட்டிங், வோட்டிங் என்று பன்ச் விடுகிறார் கவுண்டர். அதேபோல மேலும் சில அவரது பாணி வசனங்களுடன் கூடியதாக விளம்பரம் உள்ளது.

ஒட்டுப் போடுங்க, ஒட்டுப் போடுங்க என்று கவுண்டர் பாடும் பாடலும் இடம் பெறுகிறது.

இறுதியாக அன்பார்ந்த வாக்காளப் பெருமக்களே என்று ஒலிபெருக்கிக் குரலுடன் விளம்பரம் முடிகிறது.

முற்றிலும் மக்கள் பிரச்சினையை மையமாக எடுக்கப்பட்ட இந்தப் படம் தேர்தல் ஆணையத்தின் 49 ஓ விதியையே தலைப்பாக வைத்து உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இப்போது அந்த விதியைத்தான் நோட்டா என்ற பெயரில் பொத்தானாக வாக்குப்பதிவு இயந்திரத்திலேயே தேர்தல் ஆணையம் பொருத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

முதல் ஆளாக வாக்களித்த '49 ஓ ஹீரோ' கவுண்டமணி!

சென்னை: பாராளுமன்றத் தேர்தலில் தான் வசிக்கும் பகுதியின் வாக்குச் சாவடியில் காலை 7 மணிக்கே வாக்களித்தார் காமெடி கிங் கவுண்டமணி.

தேர்தல் தொடர்பாக 49 ஓ எனும் படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். அதுவும் தேர்தல் நடக்கும் நாளான இன்று அவரது 49 ஓ படத்திலிருந்து 'கட்டிங், வெட்டிங்... ஓட்டிங்' என்ற விளம்பரம் வெளியாகி பரபரப்பு கிளப்பி வருகிறது.

முதல் ஆளாக வாக்களித்த '49 ஓ ஹீரோ' கவுண்டமணி!

இன்று ரஜினி, கமல் தொடங்கி அத்தனை நடிகர்களும் வாக்களித்த விவரங்கள் வெளியாகிக் கொண்டிருக்க, கவுண்டமணி வாக்களித்த செய்தி மட்டும் தெரியாமல் இருந்தது.

இதுபற்றி விசாரித்தபோது, காலை 7 மணிக்கே செனடாப் சாலையில் உள்ள வாக்குச் சாவடியில் கவுண்டமணி முதல் வாக்காளராகப் போய் வாக்களித்த விவரம் தெரியவந்தது.

கூட்டம் அதிகமாக சேர்வதற்கு முன்பே வாக்குச் சாவடிக்குப் போன கவுண்டர், விறுவிறுவென தன் வாக்கைச் செலுத்திவிட்டுத் திரும்பினாராம்.

'49 ஓ படத்துல நடிச்சிட்டு ஜனநாயகக் கடமையைச் செய்யலன்னா சரியா இருக்குமா?' என தன் நண்பர்களிடம் கமெண்ட் அடித்தாராம் கவுண்டர்.

 

விஷாலுக்கு முறைப் பெண்ணான அபிநயா

சென்னை: பூஜை படத்தில் விஷாலுக்கு முறைப்பெண்ணாக நடிக்கிறாராம் அபிநயா.

நாடோடிகள் படம் மூலம் பிரபலம் ஆனவர் அபிநயா. அண்மையில் அஜீத் நடித்த வீரம் படத்தில் நடித்திருந்தார். அவர் தமிழ் தவிர தெலுங்கு, மலையாளம், கன்னட மொழி படங்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார்.

விஷாலுக்கு முறைப் பெண்ணான அபிநயா

இந்நிலையில் ஹரி தனது பூஜை படத்தில் அபிநயாவை ஒப்பந்தம் செய்துள்ளார். படத்தில் அபிநயா விஷாலின் முறைப்பெண்ணாக வருகிறார். பூஜை படத்தின் நாயகி ஸ்ருதி ஹாஸன் என்பது குறிப்பிடத்தக்கது.

பார்க்க அமைதியாக பக்கத்து வீட்டுப் பெண் போன்று இருக்கும் அபிநயாவுக்கு இந்த படம் நல்ல பெயரை வாங்கிக் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பூஜை பட வேலைகள் மளமளவென நடப்பதை பார்த்து ஸ்ருதி அதிசயித்துள்ளார்.

 

தமிழ்நாட்டுக்கு தண்ணி வேணும்... புதிய பிரதமரிடம் நதிநீர் இணைப்பு பற்றி பேசுவேன்!!- இது சிவகுமார்

சென்னை: தண்ணீரின்றி தவிக்கும் தமிழகத்துக்கு நீர் வேண்டும். கங்கையில் வீணாய் போகும் நீரை தமிழகத்துக்கு தர வேண்டும். இதுகுறித்து புதிய பிரதமரிடம் நான் வலியுறுத்துவேன் என ஆவேசமாகத் தெரிவித்தார் நடிகர் சிவகுமார்.

நடிகர் சிவகுமார் தன் மகன்கள் சூர்யா மற்றும் கார்த்தியுடன் இன்று இந்திப் பிரச்சார சபா சாவடியில் வாக்களித்தார்.

காலில் காயமடைந்திருந்த சூர்யா, ஊன்று கோல் உதவியுடன் வாக்களிக்க வந்தார்.

தமிழ்நாட்டுக்கு தண்ணி வேணும்... புதிய பிரதமரிடம் நதிநீர் இணைப்பு பற்றி பேசுவேன்!!- சிவகுமார்

வாக்களித்து முடிந்ததும் செய்தியாளர்களிடம் பேசிய சிவகுமார், "இந்த முறை அமையும் அரசு மூலம் தமிழகத்துக்கு நல்லது நடக்க வேண்டும். மக்களின் அத்தியாவசியத் தேவைகள் தண்ணீரும் மின்சாரமும்தான்.

தமிழகம் இந்த இரண்டுமின்றித் தவிக்கிறது. ஆனால் வடக்கில் கங்கை நதியில் 60 சதவீத தண்ணீர் வீணாகக் கடலில்தான் கலக்கிறது. இந்த நீரை தமிழகத்துக்கு திருப்ப வேண்டும். அதற்கு நதிநீர் இணைப்புதான் ஒரே வழி. இதுபற்றி நிச்சயம் புதிய பிரதமரிடம் பேசுவேன்.

மேலும் காற்றாலை, சூரிய சக்தி மூலம் மின்சாரம் தயாரித்து தமிழத்தின் மின் தேவையைப் பூர்த்தி செய்யுமாறும் வலியுறுத்துவேன்.

சொந்த மக்கள் தண்ணீரின்றி தவிக்கும் நிலையில் செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருக்கிறதா என்ற ஆராய்ச்சியெல்லாம் தேவையா.., " என்றார்.

 

கமலின் உத்தம வில்லன் செப் 10-ல் ரிலீஸ்... அப்போ விஸ்வரூபம் 2?

சென்னை: கமலின் உத்தம வில்லன் செப் 10-ல் ரிலீஸ்... அப்போ விஸ்வரூபம் 2?  

லிங்குசாமி தயாரிப்பில், ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் கமல் ஹாசன் ‘உத்தம வில்லன்' படத்தில் நடிக்கிறார்.

‘விஸ்வரூபம் 2' படத்திற்கு இசை அமைக்கும் ஜிப்ரானே இந்த படத்திற்கும் இசையமைக்கிறார். படத்தின் கதை, திரைக்கதையை கமலஹாசன் எழுத, ஷியாம் தத் ஒளிப்பதிவு செய்கிறார்.

இப்படத்தில் கமலுக்கு ஜோடியாக பூஜாகுமார் மற்றும் ஆண்ட்ரியா ஆகிய இருவரும் நடிக்கின்றனர்.

உத்தம வில்லன் படத்தின் இரண்டு கட்டப் படப்பிடிப்பு பெங்களூர் மற்றும் சென்னையில் வெற்றிகரமாக முடிந்துவிட்டது. அடுத்ததாக மூன்றாவது கட்ட படப்பிடிப்பு ஆஸ்திரேலியாவில் நடக்க உள்ளது.

இதையடுத்து இன்று உத்தம வில்லன் படத்தின் தயாரிப்பு நிறுவனமான திருப்பதி பிரதர்ஸ் வெளியிட்ட அறிவிப்பு ஒன்றில் உத்தம வில்லன் செப்டம்பர் 10-ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கமல் ஹாஸனின் பெரிய பட்ஜெட் படமான விஸ்வரூபம் 2 படம் ரிலீசாவது குறித்து இதுவரை எந்தத் தகவலும் வெளியாகாத நிலையில், அடுத்த படமான உத்தம வில்லன் ரிலீஸ் பற்றி செய்தி வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

 

கப்பல்... ஷங்கர் உதவியாளர் இயக்கும் முதல் படம்!

மெகா இயக்குநர் ஷங்கரின் உதவியாளர்களில் ஒருவரான கிரிஷ் இயக்குநராகிறார், கப்பல் படத்தின் மூலம்.

இயக்குனர் ஷங்கரின் உதவியாளர்கள் அடுத்தடுத்து இப்போது இயக்குநர்களாக மாறி வருகிறார்கள்.

சமீபத்தில்தான் ராஜா ராணி மூலம் இயக்குநரானார் அட்லி.

கப்பல்... ஷங்கர் உதவியாளர் இயக்கும் முதல் படம்!

இப்போது மேலும் ஒருவர் இயக்குனராக அறிமுகமாகிறார். அவரின் பெயர் கார்த்திக் ஜி.கிரிஷ். ஷங்கரிடம் ‘சிவாஜி', ‘எந்திரன்' ஆகிய படங்களில் உதவி இயக்குநராகப் பணிபுரிந்துள்ளார்.

இவர் இப்போது கப்பல் என்ற படத்தை இயக்குகிறார். இன்று இப்படத்தின் லோகோவை அறிமுகப்படுத்திய அவர், "அதில் தெரியும் வண்ணக் கலவை படத்தில் வரும் எண்ணற்ற உணர்ச்சிகளை படம்பிடித்துக் காட்டுவதாக இருக்கும்," என்றார்.

மேலும் படத்தின் தலைப்பான ‘கப்பல்' கதையின் போக்கையும், கதையில் வரும் கதாபாத்திரங்களின் பயணத்தையும் எதிரொலிக்கும் என்றார்.

இப்படத்தை ஸ்டுடியோஸ் என்னும் புதிய நிறுவனம் தயாரிக்கிறது. தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்கிறார். நடராஜன் சங்கரன் என்பவர் இசையமைக்கிறார்.

படத்தின் நடிகர் நடிகைகள் பற்றிய விவரங்கள் விரைவில் வெளியாக உள்ளது.

 

சாயங்காலம் 6 மணிக்கு மேல சினிமா பார்க்கலாம்!

சென்னை: தேர்தலையொட்டி இன்று பகலில் அனைத்து திரையரங்குகளிலும் காட்சிகள் ரத்து செய்யப்பட்டிருந்தன அல்லவா...

இன்று மாலை 6 மணிக்குப் பிறகு அனைத்து அரங்குகளிலும் சினிமாக்கள் திரையிடப்படும்.

சாயங்காலம் 6 மணிக்கு மேல சினிமா பார்க்கலாம்!

தமிழகம் மற்றும் புதுவையில் இன்று நடக்கும் பாராளுமன்றத் தேர்தலையொட்டி அனைத்து திரையரங்குகளின் காட்சிகளும் ரத்து செய்யப்பட்டன. படப்பிடிப்புகள், தயாரிப்புப் பணிகள் அனைத்தும் நிறுத்தப்பட்டன.

ஆனால் தேர்தல் நேரம் முடிந்த பிறகு 6 மணிக்குப் பிறகு திரைப்படங்களை தொடர்ந்து திரையிட முடிவு செய்துள்ளன திரையரங்குகள்.

அதன்படி இன்று மாலைக் காட்சி 6.30 மணிக்கும், இரவுக்காட்சி 10 மணிக்கும் நடக்கிறுது. 16 திரைகள் கொண்ட மாயாஜால் போன்ற அரங்குகளில் மாலை 6 மணி தொடங்கி இரவு 10.45 மணி வரை தொர்ந்து காட்சிகள் நடைபெறுகின்றன.