மீண்டும் இந்தியாவுக்கேத் திரும்புகிறேன்- மாதுரி தீட்சித்


அமெரிக்காவில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வரும் முன்னாள் இந்தித் திரையுலக கனவுக் கன்னி மாதுரி தீட்சித் மீண்டும் இந்தியாவுக்கேத் திரும்பி வர தீர்மானித்துள்ளாராம்.

44 வயதாகும் மாதுரி தீட்சித் கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் இந்தித் திரையுலகைக் கலக்கியவர். மிகச் சிறந்த நடனக்கலைஞராக, அட்டகாசமான நடிகையாக அறியப்பட்டவர். ஐஸ்வர்யா ராயின் எழுச்சிக்கு முன்னர் மாதுரியின் நடிப்பிலும், நடனத்திலும் மயங்கிக் கிடந்தனர் இந்தித் திரையுலக ரசிகர்கள்.

1999ம் ஆண்டு அமெரிக்காவின் டென்வரில் வசித்து வரும் டாக்டர் ஸ்ரீராம் மாதவ் நெனேவை மணந்து கொண்டு அமெரிக்காவில் போய் செட்டிலானார் மாதுரி.

இரு குழந்தைகளுக்குத் தாயான மாதுரி தொடர்ந்து அமெரிக்காவிலேயே வசித்து வந்தார். இந்த நிலையில், தற்போது மீண்டும் இந்தியாவுக்கேத் திரும்பவுள்ளாராம். இங்கு ஒரு டிவியில் ஒளிபரப்பாகவுள்ள நடனத்தை அடிப்படையாகக் கொண்ட ரியாலிட்டி ஷோவில் நடுவராக பணியாற்றும் மாதுரி, தனக்கும், தனது குடும்பத்துக்கும் வசதியாக, இந்தியாவிலேயே தங்கி விட தீர்மானித்துள்ளாராம்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில், எனது ரசிகர்களுக்கு, நாங்கள் இந்தியாவுக்கேத் திரும்பவுள்ளோம். மீண்டும் தாயகம் திரும்புவது பெரும் மகிழ்ச்சியாக உள்ளது என்று கூறியுள்ளார்.

திருமணத்திற்குப் பிறகு நடிக்காமல் இருந்த மாதுரி 2007ல் ஆஜா நச்லே என்ற படத்தில் மீண்டும் நடித்தார். இப்போது அவரைத் தேடி நிறைய பட வாய்ப்புகள் வருகின்றன. இதை மனதில் கொண்டுதான் மீண்டும் இந்தியாவுக்கு வரும் முடிவை அவர் எடுத்துள்ளதாக தெரிகிறது.
 

செல்போனில் பேசப் பயப்படும் ஜனனி!


நடிகை ஜனனி ஐயர் செல்போனில் பேசப் பயப்படுகிறார். காரணம் சிலர் பாராட்டுகிறேன் என்ற பெயரில் கசமுசாவென பேசுகிறார்களாம்.

பாலாவின் அவன் இவன் படத்தில் நடித்த 2 கதாநாயகிகளில் ஒருவர் ஜனனி ஐயர். அவர் செல்போன் மணி ஒளித்தால் அதை எடுத்துப் பேச பயப்படுகிறாராம். அவரது படங்களைப் பார்த்துவிட்டு ரசிகர்கள் ஜனனியை போனில் அழைத்து பாராட்டுகிறார்களாம்.

அட பாராட்டத் தான செய்றாங்க, அதுக்கு எதற்கு பயப்பட வேண்டும் என்று நினைக்கிறீர்களா. புகழ்வதெல்லாம் புகழ்ந்துவிட்டு கண்டபடி பேசுகிறார்களாம். அதனால் ஜனனிக்கு ஒரே வருத்தமாம். என்னடா இப்படி பேசுறாங்களேன்னு.

இந்த நம்பர் இருந்தா தானே என்னை அழைப்பார்கள் என்று நினைத்து சிம் கார்டை அம்மாவிடம் கொடுத்துவிட்டார். அவர் வேறொரு நம்பர் வாங்கிவிட்டார். அது என்ன நம்பர் என்று கேட்கிறீர்களா? அட போங்கப்பா, மறுபடியும் மொதல்ல இருந்தா...!
 

4 படமானாலும், 'நச்சு'ன்னு இருக்கணும்: சினேகா


நாலு படங்களில் நடித்தாலும் அது ரசிகர்கள் மனதில் 'நச்'சுன்னு இடம் பிடிக்கும் அளவில் இருக்க வேண்டும் என்று நடிகை சினேகா தெரிவித்துள்ளார்.

குடும்பப் பாங்கான பட நாயகி என்றதும் நம் நினைவுக்கு வரும் முதல் நடிகை புன்னகைச் செல்வி சினேகா. சினேகா பட்டுச்சேலை உடுத்தி, தலை நிறைய மல்லிக்கைப்பூ வைத்து, சிரித்தவாறு போஸ் கொடுத்திருக்கும் போட்டோக்களை பல கடைகளில் பார்க்கலாம்.

என்னடா சினேகாவை கொஞ்ச நாளாக படங்களில் அதுவும் அடிக்கடி பார்க்க முடியவில்லை என்று அவரிடமே கேட்டதற்கு, அவருக்கே உரிய ஸ்டைலில் ஒரு புன்னகைப் பூவை உதிர்த்துவிட்டு பதில் அளித்தார்.

அவர் கூறியதாவது,

நான்கு படம் என்றாலும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடிக்க வேண்டும். அப்படிப்பட்ட படங்களில் நடிக்கத் தான் ஆசைப்படுகிறேன். பிரிவோம் சந்திப்போம், பார்த்திபன் கனவு ஆகிய படங்களில் நடித்த கதாபாத்திரங்கள் போன்று மீண்டும் நடிக்க வேண்டும். அது மாதிரியான ரோல்களுக்காகத் தான் காத்திருக்கிறேன்.

அதனால் தான் வரும் படத்தை எல்லாம் ஒப்புக் கொள்வதில்லை என்றார்.

தெலுங்கில் நாகர்ஜுனாவுடன் ராஜன்னா, தமிழில் சரத்குமாருடன் விடியல், சுந்தர். சி.யுடன் முரட்டுக்காளை ஆகிய படங்களில் நடித்துள்ளார். அவை தனக்கு நிச்சயம் நல்ல பெயர் வாங்கிக் கொடுக்கும் என்று நம்புகிறார்.

தெளிவான பொண்ணுதானுங்க சினேகா...!
 

நடிகை சோனாவுக்கு மாரடைப்பு- மருத்துவமனையில் அனுமதி


பிரபல பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் மகனும், தயாரிப்பாளர் மற்றும் பின்னணிப் பாடகருமான எஸ்.பி. சரண் மீது பாலியல் குற்றச்சாட்டுக் கூறியுள்ள கவர்ச்சி நடிகை சோனாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாம். இதனால் அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

எஸ்.பி.சரண் தன்னிடம் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டார், மானபங்கம் செய்தார் என்பது உள்ளிட்ட பாலியல் குற்றச்சாட்டுக்களை சோனா கூறியுள்ளார். இதையடுத்து அவர் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக பதட்டமாக இருந்ததால் சோனாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டதாம். இதையடுத்து அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த டாக்டர்கள் லேசான மாரடைப்பு ஏற்பட்டதை கண்டுபிடித்தனராம். இதையடுத்து அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறதாம்.
 

ஹாலிவுட் பாணியில் உருவாகும் விஸ்வரூபம் : கமலுக்கு இன்னொரு மைல்கல்!


கமல்ஹாசன் இயக்கி, நடிக்கும் விஸ்வரூபம் ஹாலிவுட் பாணியில் தயாராகிறது. இந்த படம் கமலுக்கு இன்னொரு மைல் கல்லாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

உலக நாயகன் கமல்ஹாசன் தசாவதாரம் படத்தில் 10 வேடங்களில் வந்து கலக்கினார். அந்த படத்தைப் பார்த்தவர்கள் அடேங்கப்பா இதெல்லாம் கமலால் மட்டுமே முடியும் என்று ஆச்சரியப்பட்டனர். தமிழ், தெலுங்கு, இந்தி என்று 3 மொழிகளிலும் வசூலில் சாதனை படைத்த படம்.

தற்போது தயாராகி வரும் விஸ்வரூபம் தசாவதாரத்தின் சாதனையை முறியடித்துவிடும் என்று பேசப்படுகிறது. கமல் படங்களில் நாயகன், தேவர் மகன், அபூர்வ சகோதரர்கள், தசாவதாரம் போன்ற பல படங்களை மைல்கற்கள் என்று கூறலாம். ஆனால் விஸ்வரூபம் புதிய மைல்கல்லாக அமையும் என்றும், தொழில்நுட்ப ரீதியாக தமிழ் திரையுலகில் இப்படி ஒரு படத்தை யாருமே எடுத்ததில்லை என்று பேசப்படும் என்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தெரிவித்தனர்.

ஹாலிவுட்டில் தான் படத்தை துவங்கும் முன்பு அதன் திரைக்கதை புத்தகம் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் வழங்கப்படும். அதே பாணியில் விஸ்வரூபம் படத்தின் திரைக்கதை புத்தகம் ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர், ஆர்ட் டைரக்டர் என அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

விஸ்வரூபம் படத்தின் நாயகியாக ஏமி ஜாக்சன் நடிக்கவுள்ளதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.
 

சேலை கட்ட மறுக்கும் அமலா பால்!


நடிகை அமலா பாலுக்கு மாடர்ன் டிரஸ் தான் பிடிக்குமாம். அதனால் எந்த விழாவுக்கு வந்தாலும் மாடர்ன் டிரஸ் தான். சேலையில் வர அவர் விரும்புவதில்லையாம்.

மைனா புகழ் அமலா பால் எந்த விழாக்களுக்கு வந்தாலும் மாடர்ன் டிரஸ்ஸில் தான் வருகிறார். அவரைப் புடவையில் பார்க்க வேண்டும் என்றால் திரையில் மட்டுமே அது சாத்தியம். காரணம் அவருக்கு சேலை கட்டுவதில் இஷ்டம் இல்லையாம், அது கஷ்டமான வேலை என்கிறார்.

அழகாக இருக்கிறீர்கள், லட்சணமாக தழையத் தழைய அழகாக புடவை அணிந்து வரலாமே என்று கேட்டால், விழாக்களுக்கு புடவையில் வருவது கஷ்டம். புடவை கட்ட நேரமாகும். அதனால் தான் விழாக்களுக்கு நான் புடவை கட்டி வருவதில்லை என்றார்.

யாராவது விழா ஏற்பாட்டாளர்கள் அம்மணியை புடவையில் வரச் சொன்னாலும் கூட ஸாரிங்க என்று 'சாரி' கட்ட மறுத்து விடுகிறாராம்.

தெய்வத் திருமகள் படத்தில் வண்ண வண்ண புடவைகளில் வந்து அசத்தினாரே, நிஜத்திலும் அப்படி வந்தால் நன்றாக இருக்கும் என்று ரசிகர்கள் நினைக்கிறார்கள்.

என்ன பண்றது, கொசுவம் வைத்து சேலை கட்ட அமலாவுக்கு கஷ்டமா இருக்குதாமே...!