உ தலைப்பு சர்ச்சை தீர்ந்தது.. முழு உரிமை எங்களுக்கே! - இயக்குநர் ஆஷிக்

Vu Title Dispute Solved

உ என்ற தலைப்பை முதலில் பதிவு செய்தவர்கள் நாங்களே. இதே தலைப்பைப் பயன்படுத்த முயன்றவர்கள், முறையாக பதிவு கூட செய்யவில்லை என்பது உறுதியாகிவிட்டதால், இந்தத் தலைப்புக்கு நாங்களே சொந்தக்காரர்கள், என்று இயக்குநர் ஆஷிக் கூறினார்.

தம்பி ராமையா முதன்மை கதாபாத்திரமாக நடிக்கும் உ படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்து விட்டது, இப்போது போஸ்ட் புரொடக்சன் வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது.

இதற்கிடையில் திடீரென உருவான டைட்டில் பிரச்சினை இப்போது தீர்ந்துவிட்டது என்கிறார் இயக்குநர ஆஷிக்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது..

அது பற்றி அவர் கூறியதாவது, படத் தலைப்புகள் பதிவு செய்வதில் உள்ள நடைமுறைகளின் படி... தங்கள் அமைப்பில் பதிவு செய்யப்படும் தலைப்புகளுக்கான முறையான அறிவிப்பை மற்ற அமைப்புகளுக்கு அனுப்புகிறார்கள்.

15 நாட்களுக்குள் மற்ற இரு அமைப்புகளும் அந்த தலைப்பு அவர்களிடம் பதிவு செய்யப்படவில்லை என்பதை உறுதி செய்த பின்னரே பதிவு செய்த நிறுவனத்திற்கு உரிமை வழங்கப்படுகிறது.

அதாவது கில்டில் ஒரு தலைப்பு பதிவு செய்யப்படும் போது அது மற்ற இரு அமைப்புகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. அவர்கள் அந்த தலைப்பில் பதிவு செய்யவில்லை என்றால் மட்டுமே கில்டு அந்த தலைப்பை சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு வழங்க முடியும். ஒரு படத் தலைப்பை பதிவு செய்த பின் உறுதி செய்வதற்கு ஒரு மாத காலம் அவகாசம் எடுத்துக்கொள்கிறார்கள்.

அப்படி நாங்கள் 2012ம் ஆண்டு, ஜூன் மாதம் 30ம் தேதி (30.06.2012) கில்டில் உ தலைப்பை பதிவு செய்தோம். கில்டில் இருந்து முறையாக மற்ற இரு அமைப்புகளுக்கும் இது தெரிவிக்கப்பட்டு அங்கிருந்து எந்த மறுப்பும் வராத நிலையில் ஒரு மாதம் கழித்து ஜூலை மாதம் 31ம்தேதி (31.07.2012) உ தலைப்பை எங்களுக்கு வழங்கினார்கள்.

உ படத்தலைப்பு சம்பந்தமாக எந்த அமைப்புகளிடமும் இருந்தும் இதுவரை எங்களுக்கும் எந்த மறுப்பும் வரவில்லை. எனவே உ தலைப்பு உங்களுக்கு உரிமையானது என மறுபடியும் உறுதி செய்துள்ளனர்.

"உ" தலைப்பை 29.06.2013 வரை பயன்படுத்திக்கொள்ளும் உரிமை எங்களுக்கு மட்டுமே உள்ளது, என்றார். இதற்காக கலைப்புலி தாணுவைச் சந்தித்து முறையிட்டுபோது, அவரும் தலைப்புக்கு சொந்தக்காரர் ஆஷிக்தான் என்பதை உறுதிப்படுத்தினாராம்.

Vu Movie

இந்தப் படத்தில் தம்பி ராமையா, சூப்பர் சிங்கர் ஜூனியர் 3 டைட்டில் வின்னர் ஆஜீத், மதன் கோபால், 'ஸ்மைல்' செல்வா, தீப்ஸ், உ,சத்யா,வருண், நேகா, யோகி தேவராஜ் உள்பட பலர் நடித்துள்ளனர்.

இசை: அபிஜித் ராமசுவாமி இசையமைக்க, ஜெயப்பிரகாஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். பாடல்களை முருகன் மந்திரம் எழுதியுள்ளார். படத்தின் நிர்வாகத் தயாரிப்பாளரும் இவரே. படத்தை எழுதி இயக்கியுள்ளார் ஆஷிக்.

 

பாடகரானார் தம்பி ராமையா... குத்துப் பாடல் பாடி ஆட்டம்!

Thambi Ramaiya Turns Play Back Singer

உ படத்தில் நாயகனாக நடிக்கும் தம்பி ராமையா, அந்தப் படத்தில் ஒரு பாடலையும் பாடியுள்ளார்.

பன்முகத் திறமை கொண்ட தேசிய விருது பெற்ற நடிகர் தம்பி ராமையா. வடிவேலு இல்லாத குறையை இப்போது நிவர்த்தி செய்து வருபவர் அவர்தான்.

உ படத்தில் முதன்மை கதாபாத்திரமாக நடித்திருக்கிறார். நாலு வால் சிஷ்யர்களுடன் அவர் அடிக்கின்ற காமெடி தான் உ படம். படப்பிடிப்பு முழுவதும் முடிந்து போஸ்ட் புரொடக்சன் நடக்கிறது.

இப்போது இன்னொரு சர்ப்ரைஸ் செய்தி, தம்பி ராமையாக உ படத்தில் முதல் முறையாக பின்னணிப் பாடகராகவும் அறிமுகம் ஆகிறார்.

அறிமுக இசையமைப்பாளர் அபிஜித் இராமசாமி இசையில், முருகன் மந்திரம் எழுதியுள்ள "ஒரு படி மேல" என்று தொடங்கும் தத்துவக் குத்துப்பாடலை பாடி அசத்தியுள்ளார்.

மிக அழகாக பாடியதோடு அதே பாடலுக்கு சென்னை பிலிம் இன்ஸ்டியூட்டில் நடந்த படப்பிடிப்பில் செம ஆட்டமும் போட்டிருக்கிறார்.

இது பற்றி தம்பி ராமையா கூறுகையில், "இந்த யூத் டீம் கூட ஒர்க் பண்றது உற்சாகமான அனுபவம், கிட்டத்தட்ட இந்த டீம்ல எல்லாருக்குமே 24 வயசுக்கும் குறைவு. அதோட இந்த டீம் கிட்ட ஈகோ அப்டிங்கிறது சுத்தமா இல்ல. நான் அதைப் பார்த்து ரொம்ப ஆச்சர்யப்பட்டேன்.

இந்த 'ஒரு படி மேல...' பாட்டை நான் ரசிச்சி பாடி இருக்கேன். என் பாட்டுக்கு நானே பாடகராகவும் டான்சராகவும் இருப்பது இதுதான் முதல் முறை.

தம்பி அபிஜித்தோட அற்புதமான ட்யூன் தம்பி முருகன் மந்திரம் ஆழமான வரிகள் எழுதி இருக்கிறார். கண்டிப்பா இந்தப் பாட்டு மெலடியாவும் அதே சமயம் கமர்சியலாவும் பெரிய ஹிட் ஆகும்னு நம்புறேன். இந்த யூத் பெரிசா வருவாங்க. அவங்களுக்கு என்னோட அட்வான்ஸ் வாழ்த்துக்கள்," என்றார்.

 

இளையராஜா - மணிரத்னம் சந்திப்பு... மீண்டும் இணைகிறார்கள்?

Ilayarajaa Manirathnam Meet After 2 Decades

கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளுக்குப் பிறகு இசைஞானி இளையராஜாவும் இயக்குநர் மணிரத்னமும் மீண்டும் சந்தித்தனர். வெகுநேரம் மனம் விட்டுப் பேசினர்.

பிரபல இந்தி இயக்குநர் பால்கிதான் இந்த சந்திப்புக்கு ஏற்பாடு செய்துள்ளார். இதனால் இருவரும் மீண்டும் ஒரு படத்தில் இணையப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இளையராஜாவும் மணிரத்னமும் இணைந்த அத்தனை படங்களும் வெற்றிதான். இந்தப் படங்களில் அனைத்துப் பாடல்களும் சிகரம் தொட்டவை.

ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக, 1991-ம் ஆண்டு வெளியான தளபதிக்குப் பிறகு இருவரும் பிரிந்தனர். அந்த கோபத்தில்தான் ஏ ஆர் ரஹ்மானை அறிமுகப்படுத்தினார் மணிரத்னம்.

கடந்த இருபத்தி இரண்டு ஆண்டுகளாக மணிரத்னம் படங்களுக்கு ரஹ்மான்தான் இசை.

ஆனாலும் இன்றுவரை இளையராஜா - மணிரத்னம் கூட்டணியில் படம் வராதா என்ற ஆவல் சினிமா ரசிகர்களுக்கு உள்ளது.

இந்த நிலையில் மணிரத்னம் இயக்கவிருந்த பொன்னியின் செல்வன் படத்துக்கு இளையராஜாவும் ரஹ்மானும் இணைந்து இசையமைக்கப் போவதாகக் கூட செய்தி வெளியானது. ஆனால் அந்தப் படம் கைவிடப்பட்டது.

பிரபல இந்தி இயக்குநர் பால்கி தற்போது ஒரு புதிய படம் இயக்கி வருகிறார். அந்தப் படத்துக்கு இசை இளையராஜாதான். இதன் பின்னணி இசை சேர்ப்பு சமீபத்தில் மும்பையில் நடந்தது. அப்போது இளையராஜாவுடன் மணிரத்னத்தை சந்திக்க வைக்க முயற்சி மேற்கொண்டார் பால்கி.

மும்பை ஸ்டுடியோ ஒன்றில் இந்த சந்திப்பு நிகழ்ந்தது. இளையராஜாவுடன் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தார் மணிரத்னம். இருவரும் கருத்து வேறுபாடுகளை மறந்து, அடுத்த படம் குறித்துப் பேசியதாகத் தெரிகிறது.

இதன் மூலம் இருவரும் அடுத்த படத்தில் இணையும் வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

 

’நாங்க குடிக்க மகேஷ்பாபு தான் காரணம்’: ஆந்திர மனித உரிமை ஆணையத்திற்கு வந்த விநோத புகார்

Alcoholics Blame Actor Mahesh Babu

ஹைதராபாத்: பிரபல தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு நடித்த விளம்பரத்தால் ஈர்க்கப்பட்டதால், நாங்கள் குடிகாரர்களாகிவிட்டோம், எனவே, அவர் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று 2 பட்டதாரிகள் புகார் கொடுத்துள்ளனர்.

ஆந்திர மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் நலகொண்டா மாவட்டத்தை சேர்ந்த சதீஷ்குமார், அம்ரு நாயக் என்ற 2 முதுநிலை பட்டதாரிகள் தான் இப்படி ஒரு புகாரை கொடுத்துள்ளனர்.

ரசிகர்கள்:

இருவரும் பிரபல நடிகர் மகேஷ் பாபுவின் தீவிர ரசிகர்களாம்.

மதுவுக்கு அடிமை...

மகேஷ்பாபு ஒரு மது கம்பெனியின் விளம்பரத்தில் இருப்பதை பார்த்த இவர்களும் அந்த மதுவை குடிக்க ஆரம்பித்தார்களாம். பின்னர் மதுவுக்கு அடிமையாகி விட்டார்களாம்.

தலைவன் வழி...

'நாங்கள் மகேஷ் பாபுவுக்கு ரசிகர்களாக இருந்ததால் குருட்டுத்தனமாக அவரை பின்பற்றி விட்டோம். குடிப்பழக்கத்தால் இப்போது நாங்கள் தினமும் ரூ.1000 மதுவுக்காக செலவு செய்ய வேண்டியிருக்கிறது. அதோடு எங்கள் உடல்நிலையும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது' என்று கூறுகிறார்கள் இருவரும்.

இண்டர்வியூக்கும் போகல...

மதுப்பழக்கத்தினால், அவர்களால் வேலைக்கான நேர்முகத் தேர்வில் கூட கலந்து கொள்ள முடியவில்லையாம்.

மனைவி பிரிந்தார்...

குடிப்பழக்கத்தால் நாயக்கின் மனைவியும் பிரிந்து சென்றுவிட்டாராம்.

வேண்டாமே, தவறான வழிகாட்டல்...

பிரபலமாக விளங்குபவர்கள் இதுபோன்ற விளம்பரங்களில் தயவுசெய்து ஈடுபடாதீர்கள் என இருவரும் கேட்டுக் கொண்டுள்ளனர்.

அபாய எச்சரிக்கை இல்லை...

இத்தனைக்கும் அந்த மது விளம்பரத்தில் குடிப்பழக்கத்தால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் என்ற எச்சரிக்கை வாசகங்களும் இல்லையாம்.

நஷ்ட ஈடு வேண்டும்...

உரிய நஷ்ட ஈடு வழங்குவதுடன், சட்டப்படி நடிகர் மகேஷ் பாபு, அந்த மதுக்கம்பெனி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த மது விளம்பர பலகை அகற்றப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

டி.ஜி.பி.க்கு உத்தரவு...

ஆணையம் இந்த புகாரை படித்துப் பார்த்துவிட்டு, இதுகுறித்து 3 வாரங்களுக்குள் ஒரு அறிக்கை தாக்கல் செய்யும்படி போலீஸ் டி.ஜி.பி.க்கு உத்தரவிட்டுள்ளது.

 

அஜீத்தின் புதிய படம் ஹைதராபாதில் தொடங்கியது!

Ajith New Flick Starts Rolling

விஜயா புரொடக்ஷன் நிறுவன அதிபர் மறைந்த நாகிரெட்டியின் நூற்றாண்டையொட்டி தயாராகும் பிரமாண்ட திரைப்படத்தில் அஜீத் நடிப்பது தெரிந்ததே.

இந்தப் படத்தின் ஷூட்டிங் இன்று ஹைதராபாதில் தொடங்கியது.

இந்தப் படம் கடந்த ஏப்ரல் 2-ம் தேதி தொடங்குவதாக இருந்தது. ஆனால் ஈழத் தமிழர் உண்ணாவிரதம் காரணமாக நான்கு நாட்கள் ஒத்திப் போடப்பட்டது.

விஜயா வாஹினி சார்பில் தயாராகும் இந்தப் படத்தை, சிறுத்தை படம் இயக்கிய சிவா இயக்குகிறார். அஜீத்தின் ஜோடியாக தமன்னா நடிக்கிறார். இவர்களுடன் விதார்த், பாலா, முனீஸ், சுஹைல், சந்தானம், நாடோடிகள் அபிநயா, நந்தகி உள்பட பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடிக்கிறது.

தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இன்று தொடங்கும் படப்பிடிப்பு வரும் 20 தேதி வரை ஹைதராபாதில் நடக்கிறது.

அஜீத்-விஷ்ணுவர்த்தன் கூட்டணியில் உருவாகி வந்த 'வலை' படம் அண்மையில் மும்பையில் நடந்த படப்பிடிப்புடன் முடிவுக்கு வந்தது.

தற்போது இதன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடக்கின்றன. கோடை விடுமுறை ஸ்பெஷலாக 'வலை' திரைக்கு வருகிறது.

 

கமல்ஹாசன், விஞ்ஞானி சிவதாணுப்பிள்ளைக்கு புதியதலைமுறையின் தமிழன் விருதுகள்

Actor Kamal Haasan Honoured Pt Tamilan Award

சென்னை: கவிக்கோ அப்துல்ரஹ்மான், நடிகர் கமல்ஹாசன், டாக்டர் சிவதாணுப்பிள்ளை ஆகியோருக்கு புதியதலைமுறையின் ‘தமிழன் விருதுகள்' வழங்கப்பட்டது.

புதிய தலைமுறை தொலைக்காட்சியின் தமிழன் விருது வழங்கும் விழா சென்னை நந்தம்பாக்கம் வணிக மையத்தில் நேற்று நடைபெற்றது.

இதில், கலை, விளையாட்டு, இலக்கியம், அறிவியல், வணிகம், சமூகசேவை ஆகிய 6 பிரிவுகளில் சாதனை படைத்த தமிழர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

தொழில்துறையில் முருகப்பா குழுமத்தைச் சேர்ந்த வெள்ளையன் விருதினை பெற்றார். நம்பிக்கை நட்சத்திரமாக கண்டெய்னரை வசிப்பிடமாக மாற்றித் தொழில் பயன்பாட்டுக்குக் கொண்டுவந்த வான்மதி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இலக்கியத்துறையில் கவிக்கோ அப்துல் ரஹ்மானுக்கு வழங்கப்பட்டது. இந்தத் துறையின் நம்பிக்கை நட்சத்திரத்துக்கான விருதை தமிழ்ச்செல்வி பெற்றார்.

விளையாட்டுத்துறையில் ஹாக்கி வீரர் தன்ராஜ் பிள்ளைக்கு விருது வழங்கப்பட்டது. நம்பிக்கை நட்சத்திரமாக கால்பந்து வீராங்கனை ராதிகா தேர்ந்தெடுக்கப்பட்டு விருது வழங்கிச் சிறப்பிக்கப்பட்டார்.

சமூகசேவையில் சாதனை படைத்த தமிழராக நிலமற்ற ஏழை விவசாயிகளுக்காகப் போராடி வரும் கிருஷ்ணம்மாள் ஜெகநாதன் தேர்வு செய்யப்பட்டு, விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். இந்தத் துறையின் நம்பிக்கை நட்சத்திரத்துக்கான விருது ஏரிகளைச் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வரும் அருண் கிருஷ்ணமூர்த்திக்கு வழங்கப்பட்டது.

அறிவியல் துறையில் சாதனை படைத்த தமிழராக டாக்டர் சிவதாணு பிள்ளை தேர்வு செய்யப்பட்டுள்ளார். இத்துறையின் நம்பிக்கை நட்சத்திர விருதை சிறிய ரக டிராக்டர்களை வடிவமைத்த ரங்கசாமி பெற்றார்.

கலைத்துறையின் சாதனைத் தமிழராக நடிகர் கமல்ஹாசன் கௌரவிக்கப்பட்டார். இந்தத் துறையின் நம்பிக்கை நட்சத்திரமாக வீதி நாடகக் கலைஞர் சந்திரன் தேர்வு செய்யப்பட்டார்.