சிநேகாவின் காதலர்கள் - விமர்சனம்

Rating:
3.0/5

எஸ் ஷங்கர்

நடிப்பு: கீர்த்தி, உதய், அதிஃப் ஜெய், திலக், ரத்னகுமார்

ஒளிப்பதிவு: ஆனந்த்

இசை: இரா ப்ரபாகர்

மக்கள் தொடர்பு: நிகில்

தயாரிப்பு: கா கலைக்கோட்டுதயம்

எழுத்து - இயக்கம்: முத்துராமலிங்கன்


ஒரு ஆண் முப்பது வயதுக்குள் நான்கு பெண்களைக் கடந்து வந்து, கண்ணாடி போட்ட பின் அவர்களை நினைத்துப் பார்ப்பதை 'ஆட்டோகிராஃப்' என சிலாகிக்கிறோம். ஆனால் இதுவே ஒரு பெண்ணின் வாழ்க்கையில் நடந்தால்.. அதை அழகாகவும் கண்ணியமாகவும் சொல்லியிருக்கிறார் எழுத்தாளர் - இயக்குநர் முத்துராமலிங்கன் (சுஜாதாவின் 'அனிதாவின் காதல்கள்' தலைப்பு மீதான காதலில், இப்படியொரு தலைப்பை வைத்திருப்பார் போலிருக்கிறது!).

பத்திரிகை நிருபராக பணியாற்றும் சிநேகாவுக்கு மாப்பிள்ளை பார்க்கிறார்கள் அண்ணனும் அண்ணியும். வேண்டா வெறுப்பாக மாப்பிள்ளையைப் பார்க்க வரும் சிநேகா, 'என்னைப் பிடிக்கவில்லை என்று சொல்லிவிட்டு போ' என காபி கோப்பையில் குறிப்பனுப்ப, அவனும் (அதிஃப் ஜெய்) மவுனமாக கிளம்புகிறான்.

சிநேகாவின் காதலர்கள் - விமர்சனம்

அடுத்தநாள், அவனைச் சந்திக்கிறாள் சிநேகா. 'என்னை ஏன் பிடிக்கவில்லை என்ற காரணத்தையாவது சொல்' என அதிஃப் கேட்க, அவனை ஒரு மருத்துவமனைக்கு அழைத்துப் போகிறாள். அவன் கண்ணெதிரில் தனக்கு மருத்துவப் பரிசோதனை செய்யச் சொல்கிறாள். 'தொன்னூறு நாட்கள்' என்கிறார் மருத்துவர். 'ஏதாவது புரிகிறதா' என அவனை சிநேகா கேட்க, 'கொஞ்சம் புரிஞ்ச மாதிரி இருக்கு' என்கிறான்.

'மீதியையும் சொல்கிறேன்.. என்னோடு கொடைக்கானல் வரை வா' என அவன் காரிலேயே கிளம்புகிறாள் சிநேகா. வழியில் தனது தொன்னூறு நாள் கர்ப்பத்துக்கு காரணம் யார் என்பதை இரண்டு மூன்று ப்ளாஷ்பேக்குகளோடு சொல்கிறாள் சிநேகா.

கல்லூரி காலத்தில் தனக்கு நேர்ந்த முதல் காதல்... காதலை விட கேரியர் முக்கியம் என்பதால் அதை உதறிவிட்டு சென்னையில் பத்திரிகையில் சேர்ந்த பிறகு, உதவி இயக்குநர் பாண்டியனுடன் ஏற்படும் காதல், பாண்டியனின் திடீர் முடிவால் வெறுத்துப் போய், ஒரு அசைன்மென்ட்டுக்காக கொடைக்கானல் செல்லும்போது இளவரசனுடன் ஏற்பட்ட காதல் அனுபவங்களைச் சொல்லிக் கொண்டே வருகிறாள் சிநேகா. இப்போது அந்த இளவரசனைத்தான் தேடிப் போவதாகச் சொல்கிறாள்.

கொடைக்கானல் போனதும் இளவரசனைத் தேடுகிறாள் சிநேகா. எங்கும் காணவில்லை. இருவரும் சேர்ந்தார்களா என்பதை சின்ன முடிச்சு வைத்து முடித்து வைக்கிறார் இயக்குநர்!

பொதுவாக இன்றைய சினிமாக்களில் நாயகன் முரடனாக அல்லது எதிர்மறை ஆசாமியாக இருப்பான். அவன் செய்வதெல்லாம் ஹீரோயிசமாகிவிடும். நாயகி கிட்டத்தட்ட லூசாகத்தான் இருப்பாள்.

ஆனால் இந்தப் படத்தில் நாயகி புத்திசாலி.. தன்னம்பிக்கை மிக்கவள். தனக்கான துணை யார் என்பதில் தெளிவாக இருப்பவள். நாயகர்கள் இயல்பானவர்கள். காட்சிகளை இன்னும் கொஞ்சம் வேகமாகவும், பக்குவமாகவும் அமைத்திருந்தால் இது இன்னொரு 'அவள் அப்படித்தான்'!

சிநேகாவின் காதலர்கள் - விமர்சனம்

படத்தின் பெரும்பலம் வசனங்கள். அந்த வகையில் படத்தின் ஹீரோ முத்துராமலிங்கன்தான்... இன்றைய சினிமாவில் வழக்கொழிந்து போன இலக்கிய மேற்கோள்களை பொருத்தமான இடத்தில் அவர் வைத்திருப்பது பாராட்டத்தக்கது.

'ஒரு கிளை மேல் பறவை அமர்வது, கிளை பலமானது என்பதால் அல்ல, தன் இறக்கை மீதுள்ள நம்பிக்கையால்!' - இப்படி பல 'தூண்டில் கதை' ரக வசனங்கள் படம் முழுக்க.

அந்த சிவன் பார்க்கில், சிநேகாவிடம் உதவி இயக்குநர்கள் படும் பாடுகளை வைத்து பாண்டியன் சொல்லும் அனுபவங்கள் அத்தனையும் கதையல்ல நிஜம். அதே பார்க்கில் அடிக்கடி தோன்றும் கதாசிரியன் பாத்திரம் இன்னும் சுவாரஸ்யமானதாக இருந்திருக்கலாம்!

இந்தப் படத்தின் ஆகச் சிறந்த பகுதி, செருப்புத் தைக்கும் உதயகுமாருக்கும், 'ஆண்ட சாதி'ப் பெண்னுக்கும் நேரும் காதல். பெற்றோரை மீறி பதிவுத் திருமணம் செய்யும் அந்தப் பெண்ணை, சாதி வெறி பெரு நெருப்பாக மாறி கருக்கிப் போட்ட கோரத்தை வலிக்க வலிக்கப் பதிவு செய்திருக்கிறார் இயக்குநர். ஆனால் அந்த வலி தீரும் முன்பே, இளவரசன் சிநேகாவிடம் காதல்வசப்படுவதுதான் நெருடல். இந்த இடத்தில் மட்டுமல்ல.. படம் முழுக்கவே, சிநேகாவின் காதல்களில் ஒரு அவசரம் தெரிகிறது. அதனாலேயே அவை அழுத்தமில்லாமல் தெரிகிறது.

நடிகர்கள் அனைவருமே புதுமுகங்கள்தான். நாயகி அத்வைதா எனும் கீர்த்தி உண்மையிலேயே பிரமாதப்படுத்திவிட்டார். குறும்பு, அழகு, கோபம், எளிதில் உணர்ச்சி வசப்படுதல் என ஒவ்வொரு விஷயத்தையும் மிகச் சரியாக வெளிப்படுத்தியுள்ளார்.

சிநேகாவின் காதலர்கள் - விமர்சனம்

நாயகர்களில் உதவி இயக்குநர் பாண்டியனாக வரும் ரத்னகுமார் மிகக் கச்சிதமாக நடித்திருக்கிறார். குரல் பெரும் பலம். அடுத்து இளவரசனாக வரும் உதய். சிநேகாவின் ஒருதலைக் காதலான கூடவே வரும் அதிஃப் ஜெய் இயல்பாக நடித்திருக்கிறார்.

இர ப்ரபாகரின் இசையில் மதுரைப் பாடல் ரசிக்க வைக்கிறது. பின்னணி இசை அத்தனை பிரமாதம் என்று சொல்லமுடியவில்லை. ஆனந்தின் ஒளிப்பதிவு, கொடைக்கானலில் அபாரம்!

கோடிகள் புரளும் கோடம்பாக்கத்தில், வெறும் அறுபது லட்சத்தை வைத்துக் கொண்டு லட்சியப் படம் எடுப்பது சாத்தியமில்லை. ஆனால் பெரும் வணிக சமரசங்களில்லாமல், ஒரு கதையை இயல்பாகத் தர முயற்சித்திருக்கிறார் முத்துராமலிங்கன். சின்னச்சின்ன நெருடல்கள் இருந்தாலும், நிறைவான படமாகத் தர முயன்றிருக்கிறார். முதல் முயற்சி. வரவேற்போம்!

 

புலிப் பார்வை, கத்தியை தடை செய்ய வலுப்பெறுகிறது கோரிக்கை! 50 அமைப்புகள் ஒன்று கூடுகின்றன!!

சென்னை: சர்ச்சைக்குரிய புலிப்பார்வை மற்றும் கத்தி ஆகிய திரைப்படங்களை தடை செய்யக் கோரும் கோரிக்கை வலுப்பெற்று வருகிறது. இத்திரைப்படங்களை தடை செய்யக் கோரி அரசியல் கட்சிகள், தமிழர் அமைப்புகள் மற்றும் மாணவர் அமைப்புகளின் பிரதிநிதிகள் நாளை சென்னையில் ஒன்று கூடுகின்றனர்.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரனை சிறார் போராளியாக சித்தரிக்கிறது புலிப் பார்வை திரைப்படம்; இலங்கையில் தமிழினப் படுகொலையை நிகழ்த்திய ராஜபக்சேவின் உறவினர்களை அங்கமாகக் கொண்ட லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகிறது கத்தி திரைப்படம்.

புலிப் பார்வை, கத்தியை தடை செய்ய வலுப்பெறுகிறது கோரிக்கை! 50 அமைப்புகள் ஒன்று கூடுகின்றன!!

இந்த திரைப்படங்களை தடை செய்யக் கோரி பல்வேறு அமைப்புகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. சென்னையில் சனிக்கிழமையன்று புலிப்பார்வை திரை இசை வெளியீட்டு விழாவில் சில கேள்விகளை எழுப்பியதற்காக மாணவர்களை நாம் தமிழர் இயக்கத்தினர் மற்றும் இந்திய ஜனநாயகக் கட்சியினர் இரும்பு தடிகள் கொண்டு தாக்கி மண்டைகளை உடைத்தனர்.

இத்தாக்குதலை பல்வேறு அரசியல் கட்சிகள், இயக்கங்கள் கண்டித்துள்ளன .இந்த நிலையில் புலிப்பார்வை, கத்தி திரைப்படங்களை தடை செய்யக் கோரி தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள், தமிழர் அமைப்புகள் மற்றும் மாணவர் அமைப்புகளின் பிரதிநிதிகள் என சுமார் 50க்கும் மேற்பட்ட இயக்கங்களின் நிர்வாகிகள் நாளை சென்னையில் ஒன்று கூடுகின்றனர்.

இந்த கூட்டத்தில் தமிழரது உரிமைப் பிரச்சனைகளுக்காக "தமிழர் வாழ்வுரிமைக்கான கூட்டமைப்பு" என்ற புதிய இயக்கம் உருவாக்கப்படுவது குறித்தும் அறிவிக்கப்பட இருக்கிறது. இப் புதிய அமைப்பான தமிழர் வாழ்வுரிமைக்கான கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளராக தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் தி.வேல்முருகன் செயல்படுகிறார்.

சென்னையில் நாளை நடைபெறும் செய்தியாளர்கள் சந்திப்பில் இத்திரைப்படங்களை தடை செய்யக் கோரியும் அடுத்த நடவடிக்கைகள் குறித்தும் அறிவிப்பு வெளியிடப்பட இருக்கிறது என்று தி.வேல்முருகன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

 

இயக்குனருக்கு போன் போட்டு அவரை திட்டித் தீர்த்த புஸு புஸு நடிகையின் அம்மா

சென்னை: என் மகளை ஏமாற்றி பிக்கப் டிராப் நடிகருடன் நெருக்கமாக நடிக்க வைத்து அதை கூறி விளம்பரம் தேடுகிறாயா என்று புஸு புஸு நடிகையின் அம்மா நான்கு எழுத்து பட இயக்குனரை செல்போனில் திட்டித் தீர்த்துவிட்டாராம்.

புஸு புஸு நடிகை பிக்கப் டிராப் நடிகருடன் சேர்ந்து அந்த 4 எழுத்து படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் வரும் ஒரு பாடலுக்காக அவர் பிக்கப் டிராப் நடிகருடன் ஓவராக நெருக்கமாக நடித்துள்ளாராம். நடித்து முடித்த பிறகு அய்யய்யோ இந்த பாடலால் என் இமேஜ் எல்லாம் கெட்டுவிடுமோ என்று ஓவென்று கதறி அழுதுள்ளார் நடிகை.

இது குறித்து நடிகையின் அம்மா இயக்குனர் மீது கோபம் அடைந்துள்ளார். அந்த ஆளே என் மகளை ஏமாற்றி நெருக்கமாக நடிக்க வைத்து அதை வெளியில் கூறி விளம்பரமும் தேடிக் கொண்டுள்ளார் என்று நடிகையின் அம்மா குமுறியுள்ளார். உடனே செல்போனை எடுத்து இயக்குனரை அழைத்து தனது கோபம் தீரும் வரை அவரை திட்டித் தீர்த்துவிட்டாராம்.

இதையடுத்து நடிகையின் அம்மா மற்றும் இயக்குனரை சமாதானம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளாராம் பிக்கப் டிராப் நடிகர்.

 

அஞ்சான்- விமர்சனம்

-எஸ். ஷங்கர்

Rating:
2.0/5

நடிகர்கள்: சூர்யா, சமந்தா, வித்யூத் ஜம்வால், சூரி, பிரம்மானந்தம், மனோஜ் பாஜ்பாய்

இசை: யுவன் சங்கர் ராஜா

மக்கள் தொடர்பு: ஜான்சன்

வசனம்: பிருந்தா சாரதி

தயாரிப்பு: யுடிவி - திருப்பதி பிரதர்ஸ்

இயக்கம்: என் லிங்குசாமி

லிங்குசாமியிடம் நான்கு கதைகள் கேட்டு, அதில் இதை நான் தேர்ந்தெடுத்தேன் என்று சூர்யா அழுத்தமா சொன்ன போதே, மண்டைக்குள் மணியடித்தது. கதைத் தேர்வை முழுக்க முழுக்க ஹீரோக்களை நம்பி ஒப்படைப்பதன் பலனை பலமுறை பார்த்ததுதான் தமிழ் சினிமா!

சரி.. சூர்யா தேர்வு செய்த அஞ்சான் எப்படி?

கதை... நிறைய படங்களில் பார்த்ததுதான். குறிப்பாக நண்பனைக் கொன்றவனை பழிவாங்க பாஷாவாக ரஜினி மாறுவதைப் போல, இதில் 'ராஜூ பாய்' சூர்யா! மற்ற இடங்களில் கொஞ்சம் மானே தேனே பொன்மானே, டுமீல் டிஷ்யூம்..சேஸிங், சத்தமெல்லாம் போட்டு நிரப்பிக் கொள்ளுங்கள். அவ்ளோதான்!

அஞ்சான்- விமர்சனம்

எண்பது, தொன்னூறுகளில் அடிக்கடி சொல்வார்களே.. ஃபார்முலா படம்.. அப்படி ஒரு படம் இந்த அஞ்சான்!

சூர்யா... தான் பார்த்துப் பார்த்து தேர்வு செய்தது நல்ல கதை என்ற நம்பிக்கையில் அபாரமாக உழைத்திருக்கிறார். சிலுப்பிய தலைமுடி, குளிர் கண்ணாடி, தோலாடை என கலக்குகிறார். மும்பை தாதா ராஜூ பாய், கிருஷ்ணா என இரு வேடங்களிலும் கச்சிதமாகவே நடித்திருக்கிறார். இந்த இரு வேடங்களுக்கும் வித்தியாசம் காட்ட ரொம்பவே மெனக்கெட்டிருக்கிறார் சூர்யா.

ஒரு நடிகராக தன் பங்களிப்பைச் சரியாகச் செய்தவருக்கு, வெற்றி இலக்கு தப்பிவிட்டது. காரணம்... லிங்குசாமியின் சுவாரஸ்யமற்ற திரைக்கதை!

நாயகி சமந்தா... நேரில் பார்ப்பதை விட திரையில் பார்ப்பவர்களை கிறங்கடிக்கிறார். சூர்யா படம் என்பதாலோ என்னமோ கூடுதல் கவர்ச்சி வேறு. ஒரு வழக்கமான தாதா படத்தில் வழக்கமான நாயகிக்கு என்ன வேலையோ, அதுதான் சமந்தாவுக்கும். ஆனால் தன் அழகால் ரசிக்க வைக்கிறார். இவரைத் தவிர பெரிதாக பெண் பாத்திரங்களே படத்தில் இல்லை.

அஞ்சான்- விமர்சனம்

மனோஜ் பாஜ்பாய் உள்பட ஏகப்பட்ட வில்லன்கள் படத்தில். ஆனால் எவரும் கவரவில்லை.

சூர்யாவின் நண்பனாக வரும் வித்யுத் ஜம்வாலின் உதட்டசைவும், குரல் ஒலியும் ஒட்டவே இல்லை. இத்தனை பிரமாண்ட படத்தில் இந்த சிறு குறையைக் கூட கவனிக்காதது ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது. சரி, சூர்யாவுக்கும் வித்யுத்துக்குமான நட்பையாவது அழுத்தமாக காட்சிப்படுத்தியிருக்கிறார்களா.. என்றால், நஹி!

சூரி இரண்டு காட்சிகளில் கால் இன்ச் புன்னகை வரவழைக்கிறார். பிரமானந்தம்? தெலுங்குக்காக மட்டுமே அவரைத் திணித்திருப்பது அப்பட்டமாகத் தெரிகிறது!

படம் முழுக்க யாரையாவது போட்டுத் தள்ளிக் கொண்டே இருக்கிறார் நாயகன் சூர்யா. சிலரை அவர் எதற்காக சுட்டார் என்றுகூட புரிந்து கொள்ள முடியவில்லை. அதேபோல பஞ்ச் வசனங்கள். தாங்க முடியவில்லை. ஒவ்வொரு காட்சி முடியும்போதும் அடுத்த காட்சி என்னவென்பதைச் சொல்லிவிடுகிறார்கள், தியேட்டரில் பார்த்துக் கொண்டிருக்கும் ரசிகர்கள்..

அஞ்சான்- விமர்சனம்

படத்தின் நீளம் கிட்டத்தட்ட மூன்று மணி நேரம். இதில் ஒரு மணி நேரக் காட்சிகளை தாட்சண்யம் பார்க்காமல் வெட்டித் தள்ளினால் கூட படத்துக்கு எந்த பாதிப்பும் இருக்காது. அப்படிச் செய்திருந்தால், குறைந்தபட்சம் பார்வையாளர்களின் கோபத்திலிருந்தாவது தப்பித்திருக்கலாமே!

ஒளிப்பதிவும் இசையும் படத்தைச் சகித்துக் கொள்ள ஓரளவு உதவுகின்றன. குறிப்பாக யுவனின் பின்னணி இசை. இரண்டு பாடல்கள் பரவாயில்லை. ஆனால் இசையில் முன்பிருந்த இனிமை இல்லையே யுவன்!

குடும்பப் படங்கள், காதல் கதைகளில் பறக்கும் லிங்குசாமியின் கொடி, டான் கதைகளில் மட்டும் சொதப்பிவிடும் போக்கு ஜீ, பீமாவை அடுத்து அஞ்சானிலும் தொடர்கிறது.

இந்தப் படத்தைப் பொருத்தவரை நாயகன் மட்டுமல்ல, படம் பார்க்கும் ஒவ்வொருவருமே 'அஞ்சான்'தான்!

 

புதிய வாய்ப்புகள், கவர்ச்சி அவதாரம்... தள்ளிப் போகும் திருமணம் - நடிகை மீது கோபத்தில் காதலர்!

புதிய பட வாய்ப்புகள், சம்பள உயர்வு என தமிழ் சினிமா கொண்டாடுவதால் தோல் நடிகை, தனது காதலரான புத்த நடிகரிடம் இப்போதைக்கு கல்யாணம் வேண்டாம் எனச் சொல்லி விட்டாராம்.

இருவரும் ஆம் என்றும் சொல்லாமல், இல்லையென்றும் மறுக்காமல் இருந்தாலும், தோல் நடிகை - புத்த நடிகரின் காதலை அவ்வப்போது ஊடகங்கள் ஆதாரத்துடன் கூறிக் கொண்டே தான் இருக்கின்றன. இதற்கிடையே கடந்தாண்டு நடிகை திடீரென படவாய்ப்புகளைக் குறைக்கிறார், எனவே விரைவில் டும் டும் டும் தான் என தகவல் வெளியானது.

ஆனால், வெற்றிப்படங்களைத் தராத நடிகை என ஒதுக்கி வைத்திருந்த தமிழ் சினிமா திடீரென நடிகையிடம் சரணடைந்தது. முன்னணி நாயகர்கள் இருவரின் படத்தில் ஜோடி சேர்ந்தார் நடிகை. இதனால், அவரது சம்பளமும் எகிறியது.

எனவே, அவரது நலம் விரும்பிகள் சிலர் இப்போதைக்கு திருமணம் செய்து கொள்ளாதே, காற்றுள்ள போதே தூற்றிக் கொள் என அறிவுரை கூறியிருப்பார்கள் போலும், நடிகையும் தனது காதலரிடம் திருமணத்தை தள்ளி வைத்துக் கொள்ளலாம் என கறாராக கூறி விட்டாராம். இதனால், நடிகர் காதலி மீது கோபத்தில் இருக்கிறாராம்.

மேலும், தமிழில் ஒரு ரவுண்ட் வந்தே தீருவது என்ற முடிவுடன், நடிகையின் கவர்ச்சி அவதாரமும், காதலரை முகம் சுளிக்க வைத்துள்ளதாம்.