தமிழ் சினிமா நட்சத்திரங்கள் பங்கேற்கும் பிரமாண்ட பேட்மிண்டன் போட்டி

தமிழ் சினிமா நட்சத்திரங்கள் பங்கேற்கும் பிரமாண்ட பேட்மிண்டன் போட்டி

நட்சத்திர கிரிக்கெட் மாதிரி இப்போது நட்சத்திர பேட்மிண்டன் போட்டி ஆரம்பமாகிறது.

பேட்மிண்டன் எனும் இறகுப் பந்தாட்டம் வெகு பிரபலமானது. விளையாடவும் லகுவானது. இந்த விளையாட்டு தமிழகத்தின் பட்டிதொட்டியெங்கும் அனைத்து வயதினராலும் விளையாடப்பட்டு வருகிறது.

இப்போது திரையுலகினரை வைத்து இந்த விளையாட்டை தொழில் முறையிலான ஒரு பெரிய போட்டியாக நடத்த முடிவு செய்துள்ளனர், இந்தியன் பேட்மிண்டன் செலிபிரிட்டி லீக் எனும் அமைப்பினர்.

இதில் கலந்து கொள்ள தமிழின் முன்னணி நடிகர்கள் பலரும் ஆர்வம் காட்டி, தங்கள் பெயர்களைப் பதிவு செய்து வருகின்றனர்.

இதுவரை 50 நடிகர்கள் தங்களது பெயரை பதிவு செய்துள்ளனர். அவர்களில், ஆர்யா, பரத், ஜெய், ஜெயம் ரவி, சிவா, ஆரி, தமன், சுந்தர்.சி., எஸ்.பி.பி.சரண், நரேன், ஜான் விஜய், விடிவி கணேஷ், வெங்கட் பிரபு, பிரேம்ஜி, ஆதி, உதய், ராகுல், கிருண்ணா, நடிகைகள் அமலா பால், ஓவியா, ராய் லட்சுமி, ரூபா மஞ்சரி, ஜனனி ஐயர் உள்ளிட்டோர் அடங்குவர். இன்னும் பலர் இதில் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த பேட்மிண்டன் போட்டிகளுக்கான பயிற்சி வருகிற ஜுலை மாதம் முதல் வாரத்தில் தொடங்குகிறது. நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் ஜுலை 8-ஆம் தேதி பிரம்மாண்டமாக தொடங்குகிறது இந்தப் போட்டி. அன்றைக்கு துவக்க மட்டும்தான்.

தொடர்ந்து 9, 10 ஆகிய தேதிகளில் போட்டிகள் நடக்கின்றன. இதில், வசூலாகும் நிதியை வைத்து பேட்மிண்டன் வீரர்களின் வளர்ச்சிக்காக செலவிட உள்ளனர்.

 

கூச்சநாச்சமில்லாத உலகமிது.... தமிழ் சினிமாவில் பாய்கிறது ராஜபக்சே பணம்!

தமிழர்களின் வாழ்வில் அதிகநேரத்தை ஆக்கிரமிப்பது சினிமாதான், ஏதோ ஒரு வகையில்.

அரசியல் என்றாலும் சினிமாதான் தீர்மானிக்கும் சக்தியாகத் திகழ்கிறது. ஒரு இலக்கியக் கூட்டத்தை பிரமாண்டமாக்க வேண்டுமென்றால் ஒரு சினிமாக்காரர் இருந்தால் போதும். ஒரு போராட்டமா... அதை முன்னெடுக்க ஒரு சினிமா நட்சத்திரம் வந்தால் மாபெரும் வெற்றிதான்.

கூச்சநாச்சமில்லாத உலகமிது.... தமிழ் சினிமாவில் பாய்கிறது ராஜபக்சே பணம்!

இப்படி எங்கும் வியாபித்துள்ள சினிமாவை வைத்தே ஈழ ஆதரவுக் குரல்களை முடக்கிப் போட முயற்சித்துள்ளார் இலங்கை அதிபரும், தமிழ் இனப் படுகொலையை அரங்கேற்றியவருமான ராஜபக்சே.

ஈழப் போருக்குப் பின் தமிழ் உணர்வாளர்கள், போராட்ட இயக்கங்களை வலுவிழக்கச் செய்யும் அத்தனை வழிகளையும் அவர் மேற்கொண்டு வருகிறார். புலம்பெயர் தமிழர்களால்தான் ஈழத்துக்கு விடிவு என்றெண்ணிக் கொண்டிருந்த வேளையில், அந்த மக்களுக்குள் ஏகப்பட்ட கருத்து மோதல்கள். ஒரு நாட்டில் ஆயிரம் இலங்கை தமிழர்கள் இருந்தால், அவர்களுக்குள் 1001 குழுக்கள் உருவாகியிருக்கின்றன.

இவர் தலைமை அவருக்குப் பிடிக்காது... அவர் தலைமை இவருக்குப் பிடிக்காது... என தமிழ் நண்டுகளாக அவர்களை பிளவுபட வைத்த ராஜபக்சே, அவர்களில் பலரை தனது பைக்குள் போட்டுக்கொண்டுவிட்டார். பெரும் பணக்காரர்களாக உள்ள தமிழர்களோ, ஈழப் போராட்டம் தங்கள் சம்பந்தமே இல்லாத சமாச்சாரம் என்ற ரீதியில் கோட்டு சூட்டுடன் கொழும்பு போய் ராஜபக்சே, கோத்தபாயக்களுடன் விருந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கின்றனர். அவர்களின் வர்த்தக கூட்டாளிகளாகவும் மாறியுள்ளனர்.

ஆக, புலம்பெயர் அமைப்புகளின் வேர்களை கலகலக்க வைத்த ராஜபக்சேவால், நெருங்கவே முடியாத இடமாகத் திகழ்வது தமிழகம்தான். இங்கே இன்னும் 2009-ம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் நடந்த கோரத்தின் தாக்கம் குறையவே இல்லை. இன்னொரு பக்கம் தமிழக முதல்வரும் முழுமையாக ராஜபக்சே மற்றும் அவருக்கு ஆதரவு தருவோரை எதிர்த்து வருகிறார். மற்ற யாரைக் காட்டிலும் ராஜபக்சேவுக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்வது ஜெயலலிதாதான்.

தமிழகத்தில் தன் ஆதரவுத் தளத்தைப் பதிக்க அரசியல் பயன்படாது என்பதைப் புரிந்து கொண்ட ராஜபக்சே, சினிமா மூலம் அதைச் சாதிக்க முனைந்துள்ளார்.

அதன் முதல் கட்டமாகவே தனது வர்த்தக கூட்டாளியான லைக்கா மொபைல்காரர்களை அய்ங்கரன் கருணா மூலம் கோடம்பாக்கத்துக்கு அனுப்பி வைத்துள்ளார். ஆரம்பத்தில் சின்னச் சின்ன முணகல்கள் எழுந்ததோடு சரி. இப்பதோது சர்வம் லைக்கா மயம். முதல் படமே விஜய் நடிக்க ஏ ஆர் முருகதாஸ் இயக்கும் கத்தி. போதாக்குறைக்கு ஏ ஆர் முருகதாஸ் கிட்டத்தட்ட லைக்கா நிறுவனத்தின் பிஆர்ஓவாகவே மாறியிருக்கிறார்.

லைக்கா புரொடக்ஷனில் படம் பண்ண இளம் இயக்குநர்கள், பிரபல இயக்குநர்களிடம் பேசி வருகிறாராம் ஏஆர் முருகதாஸ். அதுமட்டுமல்ல, பிரபல நிறுவனங்களுடன் லைக்காவும் இணைந்து பெரிய படம் பண்ண தயாராக உள்ளது என்று பேசி வருகிறார். லைக்காவுடன் தன் முருகதாஸ் புரொடக்ஷன்ஸும் படம் பண்ணும் என்று கூறிவருகிறார் முருகதாஸ்.

இன்னொரு பக்கம் சிங்கள சினிமாவையே தமிழகத்தில் திரையிட, தன் முகவர்கள் மூலம் ஏற்பாடு செய்துள்ளார் ராஜபக்சே. அந்தப் படத்தை திரையிடக் கூடாது என்று தமிழ் அமைப்புகள் சொன்னபோது, சினிமா வேறு இனப்பிரச்சினை வேறு என்று வெட்டி நியாயம் பேசி, அனைவரையும் பார்க்க வைத்திருக்கிறது அறிவு ஜீவிகள் எனும் பெயரில் வக்கிரங்களைப் படைக்கும் ஒரு கூட்டம்.

ஆக தமிழ் சினிமாவில் ராஜபக்சேவின் முதல் முயற்சி மகா வெற்றிகரமாக நிறைவேறிய, மகிழ்வோடு மேலும் மேலும் கோடிகளைக் கொட்டத் தயாராகி வருகிறார்கள் லைக்கா மாதிரி நிறுவனங்கள், தமிழர் போர்வையில் சிங்களத்துக்கு ஏவல் செய்யக் காத்திருக்கும் வியாபாரிகள்!

சொல்வதற்கில்லை.. இன்று டெல்லிக்கு வந்து பெண்களுடன் ஆனந்தக் குளியல் போட்டு கும்மாளமாய் திரும்பிய நாமல் ராஜபக்சேவை வைத்து, நாளை பிரமாண்டமாய் ஒரு தமிழ்ப் படம் உருவாகலாம்... அதை முருகதாஸ்கள் பெருமிதத்தோடு இயக்கவும் செய்யலாம்.

நேற்றிருந்தவர் இன்றில்லாததுதானே சினிமா உலகம்!

 

நடிகைகளுக்கு நான் பாடும் வாய்ப்பு தரவே மாட்டேன்! - இசையமைப்பாளர் எஸ்எஸ் குமரன்

சென்னை: நடிகைகளுக்கு நான் ஒருபோதும் பாடும் வாய்ப்பைத் தர மாட்டேன் என்று இசையமைப்பாளர் எஸ்எஸ் குமரன் கூறினார்.

தமிழ் பட உலகில் நடிகைகள் பலர் பாடகிகளாகி வருகின்றனர். ஆண்ட்ரியா, ரம்யா நம்பீசன், லட்சுமி மேனன், சினேகா என பல நடிகைகள் சினிமாவில் பின்னணி பாட ஆரம்பித்துவிட்டனர்.

நடிகைகளுக்கு நான் பாடும் வாய்ப்பு தரவே மாட்டேன்! - இசையமைப்பாளர் எஸ்எஸ் குமரன்

மேலும் பல நடிகைகளும் பாடுவதற்கு ஆர்வம் காட்டுகிறார்கள். இது தொழில் முறையில் பின்னணி பாடும் கலைஞர்களுக்கு பெரும் பாதகமாக முடிந்துள்ளது.

இந்த நிலையில் இசையமைப்பாளர் எஸ்எஸ் குமரன் இந்தப் போக்குக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில், "படங்களில் நடிகைகளை பாட வைக்கும் போக்கு அதிகரிக்கிறது. ஆனால் நான் அவர்களைப் பாட வைக்க மாட்டேன். பெரும்பாலான நடிகைகளுக்கு தமிழ் டப்பிங் பேசவே தெரியவில்லை. வேறு டப்பிங் கலைஞர் குரல் கொடுக்கிறார். ஆனால் பாடல் பாட மட்டும் வந்துவிடுகிறார்கள். இவர்களெல்லாம் தமிழ் பாடல்கள் பாடினால் எப்படி இருக்கும். நவீன தொழில் நுட்பத்தில் அவர்களை பாட வைத்து விடலாம். ஆனாலும் அப்பாடலில் ஜீவன் இருக்காது.

திறமையான பாடகர் பாடகிகளுக்கு வாய்ப்பளிக்க இணையதளத்தில் குரல் வங்கியொன்றை தொடங்கியுள்ளேன்," என்றவரிடம், ஏன் இசையமைப்பதைக் குறைத்துக் கொண்டீர்கள் என்று கேட்டபோது, "பூ, களவாணி உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்தேன். தேநீர் விடுதி, கேரள நாட்டிளம் பெண்களுடனே போன்ற படங்களை இயக்கினேன்.

தற்போது இயக்குவதை நிறுத்தி வைத்து விட்டு முழு நேர இசையமைப்பாளராக இறங்கியுள்ளேன். இனிப்பு காரம் மற்றும் அங்காடி தெருவின் கன்னட ரீமேக் படங்களுக்கு இப்போது இசையமைத்துக் கொண்டிருக்கிறேன்," என்றார் எஸ்எஸ் குமரன்.

 

ஜித்தன் படத்தின் அடுத்த பாகம் தயாராகிறது... ரமேஷே நடிக்கிறார்!

சென்னை: வெற்றி பெற்ற திரை படங்களின் தொடர்ச்சியான இரண்டாம் பாகம் வெளியாவது இப்போதெல்லாம் அடிக்கடி நடக்கும் விஷயமாகிவிட்டது.

தயாரிப்பாளர் ஆர் பி சவுத்திரி மகன் ரமேஷ் நடித்த படம் ஜித்தன். அந்தப் படம் தந்த அறிமுகத்தால் அவர் பெயரே 'ஜித்தன்' ரமேஷ் ஆகிவிட்டது.

ஜித்தன் படத்தின் அடுத்த பாகம் தயாராகிறது... ரமேஷே நடிக்கிறார்!

இப்போது மீண்டும் ஜித்தன் ரமேஷ் கதாநாயகனாக நடிக்க, ஜித்தன் 2 என்ற பெயரில் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. மனித கற்பனைக்கு அப்பாற்பட்ட சில அமானுஷ்யங்களின் அடிப்படையில் நடக்கும் சம்பவங்களின் கோர்வையே 'ஜித்தன்2'.

ராகுல் பரமஹம்சா என்ற புதிய இயக்குனர் இந்தப் படம் மூலம் அறிமுகமாக , ஸ்ரீகாந்த் தேவாவின் இசையில் தயாராகும் 'ஜித்தன் 2' படத்தில் இரண்டு நாயகிகள். மும்பையின் பிரபல விளம்பர மாடல்களான இவர்களுக்கு தமிழில் இது முதல் படமாகும்.

மேலாண்மை கல்வியில் தங்கபதக்கம் வென்றவர் இயக்குனர் ராகுல்.

'படத்தை இயக்குவது மட்டுமல்லாமல், சரியான முறையில் விளம்பரம் செய்து வெளியிடுவதுதான் இன்றைய காலகட்டத்தில் சவாலான சூழ்நிலை . எனவே என் படிப்பும் அனுபவமும் அதை திறம் பட செய்ய உதவும் என நம்புகிறேன்," என்கிறார்.