இளையராஜா இசையில் எஸ் ஏ சந்திரசேகரன் இயக்கும் டூரிங் டாக்கீஸ்

இளையராஜா இசையில் எஸ் ஏ சந்திரசேகரன் இயக்கும் டூரிங் டாக்கீஸ்

டூரிங் டாக்கீஸ் எனும் பெயரில் அடுத்த படம் இயக்குகிறார் எஸ்ஏ சந்திரசேகரன். இந்தப் படத்துக்கு இளையராஜா இசையமைக்கிறார்.

தேனி மாவட்டத்தில் "டூரிங் டாக்கீஸ்' திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த எஸ்ஏசி கூறுகையில், "விஜயகாந்த் நடித்த "சட்டம் ஒரு இருட்டறை' படத்தில் தொடங்கி, இதுவரை 68 திரைப்படங்களை இயக்கியுள்ளேன். எனது 69ஆவது படமாகவும், கனவுப் படமாகவும் "டூரிங் டாக்கீஸ்' திரைப்படம் உருவாகி வருகிறது.

3 சிறிய கதைத் தொடர்களை ஒருங்கிணைத்து, இந்தப் படத்தின் கதையை அமைத்துள்ளேன். இளையராஜா இசையமைக்கிறார்.

படத்தில் 70 வயது முதியவராக பாத்திரமேற்று நான் நடித்துள்ளேன். எனக்கு ஓய்வு தேவைப்படும் என்பதற்காக, இனிமேல் திரைப்படங்களை இயக்க வேண்டாம் என்று என்னுடைய மகன் விஜய் அன்புக் கட்டளையிட்டுள்ளார். ஆனால், உழைப்புக்கு ஏது ஓய்வு என்பது எனது கருத்து.

கத்திக்கு சிக்கல் இல்லை

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் "கத்தி' திரைப்படத்தை வெளியிடுவதில் எந்த சிக்கலும் இல்லை. விளம்பரம் தேடிக் கொள்வதற்காக, சிலர் பிரச்னையாக்கி வருகின்றனர்," என்றார்.

 

கடந்த தலைமுறை ரசித்த புத்தம் புதுக்காலை.. 'மேகா' படத்தில் புத்தம் புதிதாக!

புத்தம் புதுக் காலை.. பொன்னிற வேளை... - எண்பதுகளில் சினிமா இசையை அனுபவித்த எவருடைய காதுகளிலும் இளையராஜாவின் இந்தப் பாடல் நிரந்தரமாய் ரீங்காரமிட்டுக் கொண்டே இருக்கும்.

இந்தத் தலைமுறையினரும் முதல் முறை கேட்டதுமே ரசித்து பரவசப்படும் இனிமையான இந்தப் பாடலை, மகேந்திரன் இயக்கத் திட்டமிட்டிருந்த மருதாணி படத்துக்காகப் போட்டிருந்தார் ராஜா.

ஆனால் அந்தப் படம் தொடங்கப்படவே இல்லை. எனவே அந்தப் பாடலை அலைகள் ஓய்வதில்லை படத்துக்காக பாரதிராஜாவுக்குக் கொடுத்தார் இளையராஜா.

கடந்த தலைமுறை ரசித்த புத்தம் புதுக்காலை.. 'மேகா' படத்தில் புத்தம் புதிதாக!

ஆனால் படத்தின் இசைத் தட்டில் இடம்பெற்ற புத்தம் புதுக்காலை, படத்தில் இடம்பெறவில்லை.

பாடல் வெளியாகி 33 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தப் பாடலை நேற்று வெளியான மேகா படத்தில் இடம்பெறச் செய்துள்ளார் இளையராஜா. இந்தப் படத்துக்கு இசையும் அவரே.

ஒரிஜினல் பாடலுக்கும், ராஜா புதிதாக இசையமைத்துக் கொடுத்துள்ள இந்தப் பாடலுக்கும் சின்ன வித்தியாசம் உள்ளது. அதற்கான காரணத்தை படத்தைப் பார்த்தால் புரிந்து கொள்வீர்கள்.

இந்தப் பாடல் குறித்து இளையராஜா கூறுகையில், "அலைகள் ஓய்வதில்லை படத்துக்காக இந்தப் பாடலை நான் கொடுத்தபோது, அதை படமாக்கிய பாரதிராஜா, நீளம் கருதி பின்னர் நீக்கிவிட்டார். மேகா படத்தில் பொருத்தமான ஒரு சூழலில் இதைப் பயன்படுத்த விரும்பினார்கள். அதற்கேற்ப உருவாக்கிக் கொடுத்துள்ளேன்," என்றார்.

இந்தப் படத்தின் பத்திரிகையாளர் காட்சியில் புத்தம் புதுக் காலை பாடலுக்கு அத்தனை வரவேற்பு.

மேகா படம் நேற்று வெளியானது. படத்தை டாக்டர் ஆல்பர்ட் ஜேம்ஸ் தயாரித்துள்ளார். அஸ்வின்- சிருஷ்டி நடித்துள்ளனர். கார்த்திக் ரிஷி இயக்கியுள்ளார்.

 

நடிகர் ஜெயராம் மகன் காளிதாஸ் நடிக்கும் ”ஒரு பக்க கதை” – தமிழில் அறிமுகம்!

நடிகர் ஜெயராம் மகன் காளிதாஸ் நடிக்கும் ”ஒரு பக்க கதை” – தமிழில் அறிமுகம்!

சென்னை: மலையாளத்திலும், தமிழிலும் பிரபலமான நடிகரான ஜெயராமின் மகன் காளிதாஸ் தமிழில் அறிமுகம் ஆக உள்ளார்.

"நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்" என்ற வெற்றிப் படத்தினை விஜய் சேதுபதியின் நடிப்பில் இயக்கியவர் பாலாஜி தரணிதரன்.

"என்னாச்சு?" என்ற வசனம் பிரபலமாவதற்கு காரணமே இப்படம்தான்.

ஒரு பக்க கதை:

இப்படத்தை தொடர்ந்து பாலாஜி தரணிதரன் இயக்கும் புதிய படத்திற்கு "ஒரு பக்க கதை" என்று பெயர் வைத்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பை நாளை மறுநாள் கமல்ஹாசன் தொடங்கி வைக்கிறார்.

ஜெயராம் மகன் காளிதாஸ்:

பிரபல மலையாள நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ் இந்த படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். கதாநாயகி இன்னும் தேர்வாகவில்லை.

ஒளிப்பதிவாளர்கள்:

"நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்" படத்தின் ஒளிப்பதிவாளர்களான சி.பிரேம்குமார் மற்றும் ஆர்.கோவிந்தராஜ் ஆகியோர் இப்படத்திலும் பணியாற்றவுள்ளனர்.

தயாரிப்பு, இசையும்:

இப்படத்திற்கு கோவிந்த மேனன் என்பவர் இசையமைக்கிறார். வாசன் விஷுவல்ஸ் வென்சர்ஸ் நிறுவனம் சார்பாக கே.எஸ்.ஸ்ரீனிவாசன் இப்படத்தை தயாரிக்கிறார்.

 

எனக்கு கல்யாணமெல்லாம் நடக்கலீங்க... - நடிகை பாவனா!

தனக்கு திருமணம் நடந்ததாக வந்த செய்திகளுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார் நடிகை பாவனா.

தமிழில் வெயில், தீபாவளி, அசல் போன்ற படங்களில் நடித்தவர் பாவனா. தெலுங்கிலும் நடித்துள்ளார். பின்னர் சொந்த ஊரான கேரளாவுக்குப் போய் மலையாளப் படங்களில் நடித்து வருகிறார்.

இவருக்கு சமீபத்தில் திருமணம் நடந்து விட்டதாக செய்திகள் வெளியாகின.

எனக்கு கல்யாணமெல்லாம் நடக்கலீங்க... - நடிகை பாவனா!

ஆனால் இந்த செய்தியை முற்றாக மறுத்துள்ளார் பாவனா. இது குறித்து அவர் கூறுகையில், "அடுத்த வருடம் ஜனவரியில் எனது சகோதரருக்குத்தான் திருமணம் நடைபெற இருக்கிறது. எனக்கு இல்லை. எனக்கு திருமணம் ஆகி விட்டது என்று பலரும் தவறாக நினைத்துக் கொண்டுள்ளனர்," என்றார்..

சமீபத்தில், கன்னட பட இயக்குநர் ஒருவர் புதுப்படத்துக்கு ஒப்பந்தம் செய்ய நடிகை பாவனாவை தொலைபேசியில் அழைத்துள்ளார். அடுத்த இரு தினங்கள் கழித்து, 'உங்களுக்கு திருமணம் ஆகிடுச்சாமே... அப்ப நடிக்க மாட்டீங்கதானே," என்று கேட்டுள்ளார்.

என்னடா இது.. பொழப்பைக் கெடுத்துடுவாங்க போலிருக்கே.. என்று அலறியடித்துக் கொண்டு இந்த மறுப்புச் செய்தியை வெளியிட்டுள்ளார் பாவனா.

 

வெளியாகின இயக்குநர் பாலா - பூஜாவின் கிஸ் கிஸ் படங்கள்!

அந்தப் படங்களை முதலில் பார்த்தபோது நம்ப முடியவில்லை. காரணம் இயக்குநர் பாலா மீதான இமேஜ் அப்படி.

ஆனால் சினிமாவில் அப்படி எந்த பிம்பத்தையும் நம்பத் தேவையில்லை என்பதைச் சொல்லும் வகையில் பாலாவும் அவரது விருப்ப நடிகை பூஜாவும் நெருக்கமாக முத்தமிட்டுக் கொள்ளும் படங்கள் நேற்று வெளியாகியுள்ளன.

வெளியாகின இயக்குநர் பாலா - பூஜாவின் கிஸ் கிஸ் படங்கள்!

பாலாவின் நான் கடவுள் படத்தில் நடித்தவர் பூஜா. அதற்கு முன் வரை சுமார் நடிகையாக இருந்தவரை, சூப்பர் நடிகையாக்கியது நான் கடவுள்தான்.

பின்னர் பாலா இயக்கிய பரதேசியில் நடிக்க வாய்ப்பு வந்தும் ஏனோ மறுத்துவிட்டார். ஆனால் பாலா எப்போது அழைத்தாலும் நடிப்பேன் என்று சமீப காலமாக சொல்லிக் கொண்டிருந்தார் பூஜா.

இந்த முத்தச் சம்பவம் எங்கே எப்போது நிகழ்ந்ததெனத் தெரியவில்லை. ஆனால் 'இந்த வகை முத்தங்கள் காமத்தில் சேர்த்தியில்லை' எனும் விளக்கம் நிச்சயம் தயாராக இருக்கும்!

 

ஈராஸ் நிறுவனத்தின் தலைமைக் குழுவில் சவுந்தர்யா ரஜினிகாந்த்!

மும்பை: கோச்சடையான் இயக்குநர் சவுந்தர்யா ரஜினிகாந்தை தங்களின் தலைமைக் குழுவில் இணைத்துக் கொண்டது இந்திய சினிமாவின் முக்கிய தயாரிப்பு நிறுவனமான ஈராஸ் இன்டர்நேஷனல் மீடியா.

கிரியேட்டிவ்-செயல்திட்ட இயக்குனர் மற்றும் தென்னிந்தியாவின் ஈராஸ்நவ் உள்ளிட்ட டிஜிட்டல் முன்முயற்சிகளின் தலைவர் என இரு பெரிய பொறுப்புகளில் சவுந்தர்யாவை நியமித்திருப்பதாக ஈராஸ் நிறுவனம் நேற்று அறிவித்துள்ளது.

இந்த இரட்டைப் பொறுப்பின் மூலம், ஈராஸ்நவ் உள்பட அனைத்து புதிய ஊடக தளங்களுக்கும் தலைவராகிறார் சவுந்தர்யா. இந்நிறுவனத்தின் படங்களுக்கு தனது படைப்புத் திறனை வழங்க உள்ளார்.

ஈராஸ் நிறுவனத்தின் தலைமைக் குழுவில் சவுந்தர்யா ரஜினிகாந்த்!

ஈராஸ் நிறுவனத்தின் தலைமைக் குழுவிற்கு சவுந்தர்யாவை வரவேற்பதில் மகிழ்ச்சியடைவதாக நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஜோதி தேஷ்பாண்டே தெரிவித்துள்ளார்.

மேலும், ஈராஸ்நவ், மொபைல், டிடிஎச், ஐபிடிவி மற்றும் பிராண்பேண்ட் உள்ளிட்ட டிஜிட்டல் துறையில் நிறுவனம் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டிப்பதாகக் கூறிய அவர், டிஜிட்டல் களத்தில் சவுந்தர்யாவின் அனுபவம், நிறுவனத்தின் செயல்திட்டங்களை வழிநடத்தும் அளவுக்கு அவரை சிறந்த தலைவராக உருவாக்கும் என்றார்.

ஈராஸ் நிறுவனத்தின் டிஜிட்டல் மற்றும் படைப்பாற்றல் செயல்முறைகளில் பங்குபெறும் வாய்ப்பு கிடைத்ததால் மகிழ்ச்சி அடைந்திருப்பதாக சவுந்தர்யா கூறினார்.

ஈராஸ் நிறுவனத்தின் புதிய பொறுப்புகளில் சவுந்தர்யா கவனம் செலுத்தினாலும், தனக்கு விருப்பமான தொழிலான திரைப்பட இயக்குனர் பணியையும் தொடருவார்.

அடுத்து ஈராஸ் தயாரிக்கும் ஒரு படத்தின் திரைக்கதை உருவாக்கத்தில் அவர் ஈடுபட்டுள்ளார். இவர் ஏற்கெனவே இயக்கிய ‘கோச்சடையான்' படத்தின் தயாரிப்பாளர்கள் ஈராஸ் நிறுவனம்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

 

சினிமா சான்ஸ் தருவதாக பெண்களிடம் செக்ஸ்: மன்னிப்பு கேட்டார் கன்னட இயக்குநர்

சினிமா சான்ஸ் தருவதாக பெண்களிடம் செக்ஸ்: மன்னிப்பு கேட்டார் கன்னட இயக்குநர்

பெங்களூர்: நடிகைகளுடன் தவறாக நடந்து கொண்டதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக கன்னட இயக்குநர் ஓம் பிரகாஷ் ராவ் தெரிவித்தார்.

கன்னடத்தில் 25க்கும் மேற்பட்ட படங்களை இயக்கி முன்னணி இயக்குநர்களில் ஒருவராக இருப்பவர் ஓம் பிரகாஷ் ராவ். சமீபத்தில் கன்னட செய்தி சேனல் ஒன்று நடத்திய ஸ்டிங் ஆபரேசனின்போது, செக்ஸ் விவகாரங்களில் இவர் வீக்கானவர் என்பது அம்பலமானது.

சினிமாவில் நடிக்க வாய்ப்பு கேட்பது போல ஒரு பெண்ணை அனுப்பி, ரகசிய கேமரா மூலமாக ஓம் பிரகாஷ் நடவடிக்கைகளை பதிவு செய்தபோது, அவர், அந்த பெண்ணிடம் செக்ஸ் வைத்துக்கொள்ள சம்மதமா என்று கேட்பது பதிவானது. மேலும் இதற்கு முன்பு பல நடிகைகளுடன் இவ்வாறு செய்த பிறகுதான் அவர்களுக்கு நடிக்க சான்ஸ் கொடுத்ததாகவும் அவர் 'ஒப்புதல் வாக்குமூலம்' அளித்ததும் அதில் பதிவானது.

இந்த வீடியோக்கள் குறிப்பிட்ட கன்னட சேனலில் காண்பிக்கப்பட்டதும் திரையுலகம் அதிர்ச்சியடைந்தது. இந்த ஒரு இயக்குநர் மட்டுமின்றி மேலும் சில இயக்குநர்கள், தயாரிப்பாளர்களின் செக்ஸ் ஒப்பந்தத்தையும் அந்த சேனல் அம்பலப்படுத்தியது.

இதில் ஓம்பிரகாஷ் ராவ் மட்டும் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுக்கொண்டுள்ளார். "எனது தவறான நடத்தைகளுக்காக என்னை மன்னித்துவிடுங்கள். நான் இந்த விஷயத்தில் குற்றவாளிதான்" என்று கூறியுள்ளார்.

 

நடிகர் அஜீத் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீஸ் பாதுகாப்பு

சென்னை: நடிகர் அஜீத் வீட்டில் வெடிகுண்டு இருப்பதாக தொலைபேசியில் பேசி மிரட்டல் விடுத்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். அஜீத் வீட்டிற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

நடிகர் அஜீத்குமார் வீடு திருவான்மியூரில் கவுதம்மேனன் இயக்கும் படத்தின் படப்பிடிப்பில் அவர் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.

இந்த நிலையில் நேற்று இரவு 108 ஆம்புலன்ஸ் சேவை எண்ணுக்கு பேசிய மர்ம ஆசாமி நபர், திருவான்மியூரில் உள்ள அஜீத் வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டு இருப்பதாகவும், விரைவில் அது வெடிக்கும் என்று சொல்லி போனை வைத்துவிட்டார்.

நடிகர் அஜீத் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீஸ் பாதுகாப்பு

அவர்கள் உடனடியாக இதுகுறித்து போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து போலீசார் அஜீத் வீட்டுக்கு விரைந்தார்கள். வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது.

அஜீத் வீட்டில் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர். ஒவ்வொரு அறையாக சென்று வெடி குண்டு இருக்கிறதா என்று சோதனை போட்டனர். இறுதியில் வெடிகுண்டு எதுவும் இல்லை என்பது தெரிய வந்தது. எனினும் அஜீத் வீட்டிற்கு பாதுகாப்பு போடபட்டு உள்ளது.

108 நம்பருக்கு பேசி வெடி குண்டு மிரட்டல் விடுத்த நபர் எந்த போன் நம்பரில் இருந்து தொடர்பு கொண்டார் என்று போலீசார் ஆய்வு செய்தனர். அந்த நம்பரை கண்டு பிடித்து விட்டதாகவும் மிரட்டல் விடுத்த நபர் விரைவில் பிடிபடுவார் என்றும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

விநாயகர் குறித்த சர்ச்சைக்குறிய டிவிட்டுக்கு மன்னிப்பு கேட்டார் இயக்குநர் ராம்கோபால் வர்மா

மும்பை: விநாயக பெருமான் குறித்து ராம் கோபால் வர்மா டிவிட்டரில் கூறிய கருத்துக்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதை தொடர்ந்து அவர் மன்னிப்பு கேட்டுக்கொண்டுள்ளார்.

பிரபல திரைப்பட இயக்குநர் ராம்கோபால் வர்மா நேற்று தனது டிவிட்டரில் ஒரு கீச்சு வெளியிட்டார். அதில் விநாயகர் சதுர்த்தி குறித்து சில ஆட்சேபகரமான கருத்துக்கள் இருந்தன. சிவபெருமானால் துண்டிக்கப்பட்ட விநாயகரின் தலைக்கு பதிலாக யானையின் தலையை பொருத்தியதாக புராணங்கள் கூறுகின்றன.

விநாயகர் குறித்த சர்ச்சைக்குறிய டிவிட்டுக்கு மன்னிப்பு கேட்டார் இயக்குநர் ராம்கோபால் வர்மா

இதுகுறித்து கருத்து தெரிவித்திருந்த ராம்கோபால் வர்மா, விநாயகரின் வயிறு பெரிதாக இருப்பதற்கு, யானை தலையை அறுவை சிகிச்சை செய்து பொருத்தியதுதான் காரணமாக இருக்குமோ? அல்லது, சிறு வயதில் இருந்தே விநாயகருக்கு பெரிய வயிறுதானா? என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

மேலும், விநாயகர் சதுர்த்தி என்பது விநாயகர் பிறந்த தினத்தை குறிப்பதா, அல்லது யானையின் தலையை பொருத்திய தினத்தை குறிப்பதா? என்ற கேள்வியையும் எழுப்பியிருந்தார்.

புராணங்கள் தெரிந்த பண்டிதர்கள் இந்த கேள்விக்கான விடையை தெரிவித்திருந்தால் பிரச்சினையாகியிருக்காது. ஆனால் வட இந்திய அரசியல்வாதிகள் இதை சர்ச்சையாக்கிவிட்டனர். ராம்கோபால் வர்மா உள்நோக்கத்துடன் இதை வெளியிட்டிருப்பதாக அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

சிவசேனாவின், பிரேம் சுக்லா கூறுகையில், விநாயகர் சதுர்த்தி என்பது, மகாராஷ்டிர மாநிலத்தாரின் கலாசாரத்தில் ஊறியது. விழா கொண்டாடப்பட்டு வரும் வேளையில் ராம்கோபால் வர்மா இவ்வாறு ஒரு கருத்தை தெரிவித்திருப்பது மராட்டியர்களை அவமரியாதை செய்வதை போலவாகும் என்றார்.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பியான சஞ்சய் நிருபம் கூறுகையில், ராம்கோபால் வர்மா மீது போலீஸ் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அவர் மாநிலத்தின் சட்டம் ஒழுங்கை சீர்கெடுக்கும் செயலில் ஈடுபட்டுள்ளார் என்று தெரிவித்தார். பாஜகவின் என்.சி.சாய்னாவும் ராம்கோபால் வர்மாவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

அனைத்து கட்சிகளில் இருந்தும் கண்டனம் வெளியானதை தொடர்ந்து, ராம்கோபால் வர்மா தனது டிவிட்டுக்காக மன்னிப்பு கேட்டுள்ளார்.

 

ஐ படத்திற்காக விமானத்தில் பறந்தபடி எழுதிய பாடல்! - கவிஞர் கபிலனின் பாட்டனுபவம்!

ஏ.ஆர்.ரஹ்மான் - ஷங்கர் கூட்டணியில் உருவாகி வரும் ஐ படத்தில் மூன்று பாடல்களை எழுதியிருக்கிறார் பாடலாசிரியர் கபிலன். இப்படத்திற்காக ஒரு பாடலை விமானத்திலும், மலை வாசஸ்தலமான கொடைக்கானல் உச்சியில் அமைந்த தோட்டத்திலும், இயக்குனர் ஷங்கருடன் அமர்ந்து பாடல் எழுதியுள்ளார்.

அந்த அனுபவத்தைப் அவரே சொல்கிறார்....

ஐ படத்திற்காக விமானத்தில் பறந்தபடி எழுதிய பாடல்! - கவிஞர் கபிலனின் பாட்டனுபவம்!

ஷங்கர் சாருடன் அமர்ந்து பாடல் எழுதுவது மிகவும் சுகமான விஷயம். முதலில் நம்மை அமர வைத்து அந்த பாடல் வரிகள் படத்தில் எந்த சூழ்நிலையில் இடம் பெறுகிறது என்பதை சுருக்கமாக கூறிவிடுவார். பிறகு அந்த பாடல் எங்கெல்லாம் படமாக்கப்படவிருக்கிறது என்பதை அந்தந்த லொக்கேஷன்களை இன்டர்நெட்டில் காட்டி விளக்குவார். குறிப்பிட்ட அந்த பாடல் காட்சியில் ஹீரோவும் ஹீரோயினும் எந்த விதமான உடைகள் அணிவார்கள் என்பதை கூட அந்த உடைகளின் புகைப்படங்களை காட்டி பிரமிக்க வைப்பார்.

பிறகு ஏ.ஆர்.ரஹ்மானின் ட்யூனை ஒலிக்க செய்வார். இப்படியெல்லாம் அந்த பாடல் எழுதுவதற்கான உற்சாகமான மன நிலையை எனக்குள் உருவாக்கிவிடுவார்.

அதற்கப்புறம் அந்த பாடல் வரிகளில் எவையெல்லாம் வர வேண்டும் என்பதையும் சுருக்கமாகக் கூறிவிடுவார். அதற்கப்புறம் நமது கற்பனை குதிரையை தட்டிவிட வேண்டியதுதான்.

ஒரு பாடலை எழுதுவதற்காக நாங்கள் கொடைக்கானலுக்கு கிளம்பினோம். அந்த பாடலை மிக உயர்ந்த இடத்தில் வைத்துதான் எழுத வேண்டும் என்று நினைத்திருந்தார் அவர். விமானத்தில் மதுரை செல்வதற்குள்ளாகவே விறுவிறுவென பாடலை எழுத ஆரம்பித்துவிட்டோம். இறங்குவதற்குள் சில பல்லவிகள் தயாராகிவிட்டது. பின்பு அங்கிருந்து காரில் கொடைக்கானலுக்கு சென்று மலை உச்சியில் தங்கினோம். ‘உயர்வான பாடல் இது. உச்சியில் அமர்ந்துதான் எழுத வேண்டும்' என்று ஷங்கர் சார் சிரித்துக் கொண்டே கூறினார்.

அந்த பாடல் வரிகள் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு அனுப்பி வைக்கப்பட்டு பின்பு பிரமாதமான பாடலாக உருமாறி வந்தது. இந்த பாடல்களை எழுதி முடிக்கும் வரை நான் இரவில் எந்த நேரமும் தயாராக விழித்துக் கொண்டிருப்பேன். திடீரென ஏ.ஆர்.ரஹ்மான் போன் செய்வார். சில வார்த்தைகளைக் குறிப்பிட்டு மாற்றச் சொல்வார். ஐ படத்திற்காக நான் எழுதிய இன்னொரு பாடலை இசையமைப்பாளர் அனிருத் பாடியிருக்கிறார்.

இவ்வாறு பாடலாசிரியர் கபிலன் கூறினார்.

தற்போது சுமார் நாற்பதுக்கும் மேற்பட்ட படங்களில் பாடல் எழுதி வருகிறார் கபிலன்.

 

ஆபத்தான இந்தோ - திபெத் எல்லையில் அஜீத் படப்பிடிப்பு

அஜீத்தை வைத்து கவுதம் மேனன் இயக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பை மிக ஆபத்தான இந்தோ - திபெத் எல்லையில் படமாக்குகின்றனர். இதற்காக மத்திய அரசின் அனுமதிக்கு காத்திருக்கிறது படக்குழு.

தல 55 என தற்காலிகமாக அழைக்கப்படும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களாக சென்னையில் நடந்தது.

ஆபத்தான இந்தோ - திபெத் எல்லையில் அஜீத் படப்பிடிப்பு

ஆபத்தான பகுதி

இப்பொழுது அடுத்தக்கட்ட படப்பிடிப்பை இந்தோ-திபெத் எல்லையில் படமாக்கவுள்ளார்கள். இந்தோ-திபெத் எல்லை மிகவும் அபாயகராமான ஒரு பகுதியாகும். இங்கு படப்பிடிப்பு நடத்துவதற்கு மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் ஒப்புதல் பெறவேண்டும்.

காத்திருப்பு

தற்போது, மத்திய அரசின் ஒப்புதலுக்காக படக்குழுவினர் காத்திருக்கின்றனர். அவர்கள் ஒப்புதல் கொடுக்கும் பட்சத்தில் இந்தோ-திபெத்திய எல்லை போலீசாரின் உதவியுடன் படப்பிடிப்பைத் தொடங்குவார்கள்.

முறுக்கு மீசை

போலீஸ் கதையான இதில் அஜீத்துக்கு ஜோடியாக அனுஷ்கா, த்ரிஷா ஆகியோர் நடித்துள்ளனர். அஜீத் இப்படத்தில் மிகவும் இளமையான தோற்றத்துடன், முறுக்கு மீசை, நரையில்லா தலையுடன் நடிக்கிறார்.

இப்படத்தின் புகைப் படங்கள் ஏற்கெனவே வெளியாகிருந்த நிலையில், அஜீத்-த்ரிஷா சம்பந்தப்பட்ட புகைப்படங்கள் நேற்று வெளியாகின. இணையதளத்தில் இந்தப் படங்களுக்கு ஏக வரவேற்பு. கொண்டாடிவிட்டார்கள் அவரது ரசிகர்கள்.

 

நானும் ரவுடிதான்... தனுஷ் தயாரிப்பில் விஜய்சேதுபதி - நயன்தாரா நடிக்கும் படம்!

தனுஷின் சொந்தப் பட நிறுவனமான வுண்டர்பார் பிலிம்ஸ் அடுத்து தயாரிக்கும் படத்தில் நாயகனாக நடிக்கிறார் விஜய் சேதுபதி. இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார் நயன்தாரா.

தனுஷ் சமீபத்தில் தயாரித்து நடித்த ‘வேலையில்லா பட்டதாரி' படம் பலத்த வரவேற்பை பெற்றது. வசூலும் குவித்தது. இதைத் தொடர்ந்து இந்த நிறுவனம் சார்பில் தயாரிக்கப்படும் புதுப்படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நானும் ரவுடிதான்... தனுஷ் தயாரிப்பில் விஜய்சேதுபதி - நயன்தாரா நடிக்கும் படம்!

இந்தப் படத்துக்கு நானும் ரவுடிதான் என தலைப்பிடப்பட்டுள்ளது. நயன்தாரா - விஜய் சேதுபதி நடிக்கிறார்கள். அனிருத் இசையமைக்கிறார். ‘போடா போடி' படத்தை எடுத்த விக்னேஷ் இயக்குகிறார்.

நயன்தாராவுடன் நடிக்க வேண்டும் என்பது விஜய் சேதுபதியின் நீண்ட நாள் ஆசையாகும்.

முன்பு ஒரு விழாவில், நயன்தாராவைக் கடத்த வேண்டும் என ஆசை இருக்கிறது என்று கூறி அதிரவைத்தார் விஜய் சேதுபதி. அதை முன் வரிசையில் அமர்ந்து ரசித்துக் கேட்டார் நயன்தாரா.

இந்தப் படத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக நடிக்க வேண்டும் என நயன்தாராவிடம் கேட்டதும், சந்தோஷமாக ஒப்புக் கொண்டாராம்.