சென்னை: நடிகை மனோரமாவுக்கு எதிராக அவரது அண்ணன் மகன் தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
பல ஆண்டுகளாக நடித்து வரும் மனோரமா வீடு, நிலம் என்று சம்பாதிக்கும் பணத்தில் ஏராளமான சொத்துக்கள் வாங்கி போட்டுள்ளார். இந்நிலையில் அவரது குடும்பத்தில் சொத்து பிரச்சனை தலை தூக்கியதுள்ளது.
மனோரமாவின் 2வது அண்ணனின் மகன் கே. காசிநாதன் கடந்த ஜனவரி மாதம் 10ம் தேதி சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் ஒன்றை அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது,
மன்னார்குடியை சேர்ந்த காசிக்கிளாக்குடையார்-ராமாமிர்தம் தம்பதியர்களுக்கு ஆறுமுகம், கிட்டு என்ற இருமகன்களும், மனோரமா என்ற மகளும் பிறந்தனர். இதில் ஆறுமுகம், கிட்டு பல ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டனர்.
மூத்தவர் ஆறுமுகத்துக்கு மனைவி தனலட்சுமி, மகன்கள் கணேசன், தென்னவன், ரவி, சேனாதிபதி, சங்கர், மகள்கள் அமுதா, விஜி ஆகியோர் குடவாசல் தாலுகாவில் உள்ள திருக்கண்ணமங்கை கிராமத்தில் வசிக்கின்றனர்.
இரண்டாவது மகன் கிட்டுவுக்கு முத்துலட்சுமி, மகன்கள் நித்தியானந்தம், காசிநாதன் (நான்), மகள்கள் மகேஸ்வரி, அகிலாண்டேஸ்வரி, பரமேஸ்வரி ஆகியோர் சென்னையில் வசித்து வருகிறோம்.
எங்கள் பாட்டி ராமாமிர்தம் பெயரில், சென்னை புலியூர் கிராமம், (சூளைமேடு அருகே) இந்திரா நகரில் 6 கிரவுண்டு நிலம் இருந்தது.
என் பெரியப்பாவும், என் அப்பாவும் இறந்த பின்னர், எங்கள் பாட்டி ராமாமிர்தம், அத்தை மனோரமா வீட்டில் வாழ்ந்தார். இந்த சூழ்நிலையில், மாம்பலம்-கிண்டி வட்டாச்சியர் அலுவலகத்தில், ராமாமிர்தத்தின் ஒரே வாரிசு நான் தான் என்று கூறி கடந்த 5-1-1993-ம் அன்று என் அத்தை மனோரமா வாரிசு சான்றிதழை பெற்றுள்ளார். அப்போது, என் பெரியப்பா, என் தந்தை ஆகியோரும் வாரிசு என்பதை அவர் மறைத்து இந்த சான்றிதழை பெற்றுள்ளார். இவ்வாறு மோசடியாக பெறப்பட்ட வாரிசு சான்றிதழ் மூலம், புலியூர் கிராமம் நிலத்தை தன் பெயருக்கு மாற்றிக் கொண்டார்.
இந்த மோசடி எங்களுக்கு காலதாமதமாகத்தான் தெரிய வந்தது. எனவே, மோசடியாக சான்றிதழ் பெற்று, நிலத்தை அபகரித்த மனோரமா மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து, எங்களது சொத்தை மீட்டு தரவேண்டும் என்று அவர் அதில் தெரிவித்திருந்தார்.
இது குறித்து போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. இதையடுத்து காசிநாதன் கடந்த பிப்ரவரி மாதம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அவரது மனுவை விசாரித்த நீதிபதி சி.டி. செல்வம், காசிநாதன் புகார் குறித்து நடவடிக்கை எடுக்குமாறு போலீசாருக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை தள்ளி வைத்தார்.
இது குறித்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினார்கள். பின்னர் இந்த வழக்கு நீதிபதி டி.எஸ். சிவஞானம் முன்பு விசாரணைக்கு வந்தபோது அரசு வழக்கறிஞர் எமிலியாஷ் கூறுகையில் 1993ம் ஆண்டு மனோரமாவின் பெயருக்கு மாற்றப்பட்ட நிலத்தை அவர் தனது பேரன் பெயருக்கு மாற்றிவிட்டார். அதனால் போலீசார் இந்த புகாரை முடித்து வைத்துவிட்டார்கள் என்று கூறி போலீசாரின் அறிக்கையையும் அவர் சமர்பித்தார்.
அறிக்கையை பார்த்த நீதிபதி கூறுகையிலல், ராமாமிர்தம் 1992ம் ஆண்டு இறந்துள்ளார். ஆனால் மனுதாரரோ தற்போது தான் புகார் கொடுத்துள்ளார். மேலும் போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி அதை முடித்து வைத்துள்ளதால் மனுவை தள்ளுபடி செய்கிறேன் என்றார்.