வானவில் வாழ்க்கை: இயக்குநராகும் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன்!

வானவில் வாழ்க்கை: இயக்குநராகும் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன்!

சென்னை: தமிழில் சுப்பிரமணியபுரம் மூலம் இசையமைப்பாளரான ஜேம்ஸ் வசந்தன் விரைவில் ஒரு படத்தை இயக்கவிருக்கிறார்.

சுப்பிரமணியபுரம் படத்தில் கண்கள் இரண்டால் பாடல் நன்கு பிரபலமானதால் தொடர்ந்து இசையமைப்பாளராக பல படங்களில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது ஜேம்ஸ் வசந்தனுக்கு.

இப்போது இயக்குனராகவும் அவதாரம் எடுத்துள்ளார் ஜேம்ஸ்.

கல்லூரி மாணவர்கள் இடையே நடக்கும் கலை நிகழ்ச்சிகளை மையமாக கொண்டு உருவாகும் ‘வானவில் வாழ்க்கை' என்ற படத்தை இயக்குகிறார். பொருத்தமான நடிகர் நடிகைகளைத் தேர்வு செய்து வரும் ஜேம்ஸ் வசந்தன், இந்தப் படம் குறித்து கூறியது:

‘ஒரு படத்தில் நிறைய பாடல்கள் இருந்தால் அதனை இன்னிசை சித்திரம் என்பார்கள். என்னைப் பொருத்தவரை படத்தில் நடிப்பவர்களே பாடி ஆடினால்தான் அது இன்னிசை சித்திரம்.

அந்த வகையில் இப்படம் ஒரு இன்னிசை சித்திரம். மொத்தம் 19 பாடல்கள். ஜாஸ், ஹிப்ஹாப், கானா, கர்நாடக இசை, நாட்டுபுற இசை என பல தொகுப்புகளில் பாடல்கள் இடம்பெறுகின்றன. அதனை இப்படத்தில் நடிப்பவர்களே எழுதி, பாடி, ஆடப் போகிறார்கள் என்பதுதான் படத்தின் விசேஷம்," என்கிறார் ஜேம்ஸ்.

 

உன் சமையலறையில்.. கன்னடத்தில் மிகப் பெரிய வெற்றி..பிரகாஷ் ராஜ் மகிழ்ச்சி!

பிரகாஷ் ராஜ் தயாரித்து, இயக்கி, நடித்த மும்மொழிப் படமான உன் சமையலறையில் தமிழ், தெலுங்கில் சுமாராகப் போனாலும், கன்னடத்தில் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது.

பிரகாஷ் ராஜுக்கு இது பெரும் ஆறுதலைத் தந்துள்ளது.

உன் சமையலறையில்.. கன்னடத்தில் மிகப் பெரிய வெற்றி..பிரகாஷ் ராஜ் மகிழ்ச்சி!

மலையாளத்தில் சால் அன்ட் பெப்பர் என்ற பெயரில் வெளியான படத்தின் உரிமையைப் பெற்ற பிரகாஷ் ராஜ், அதனை தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மூன்று மொழிகளில் ரீமேக் செய்து வெளியிட்டார். மூன்று மொழிகளிலும் இளையராஜா இசையமைத்திருந்தார்.

தெலுங்கில் இந்தப் படத்துக்கு உலவுச்சாறு பிரியாணி என்று பெயரிட்டிருந்தார். கன்னடத்தில் ஒக்கரானே என்ற தலைப்பில் வெளியானது.

தமிழிலும் தெலுங்கிலும் படத்துக்கு சுமாரான வரவேற்புதான் கிடைத்தது. படம் ஆபாசமின்றி சிறப்பாகவே இருந்தாலும், படத்தில் சுவாரஸ்யமான காட்சிகள் குறைவாக இருந்ததை விமர்சனங்கள் சுட்டிக் காட்டின. தெலுங்கிலும் இதே நிலைதான்.

ஆனால் கன்னடத்தில் இந்தப் படத்துக்கு அபாரமான வெற்றி கிடைத்துள்ளது. குறிப்பாக நகர்ப்புறங்களில், மல்டிப்ளெக்ஸ்களில் படம் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இதுகுறித்து பிரகாஷ் ராஜ் கூறுகையில், "ஆமாம்... இந்தப் படம் தமிழிலும், தெலுங்கிலும் சுமாராகத்தான் போகிறது. இந்த வாரம் பிக்கப் ஆகும் என நம்புகிறேன். ஆனால் கன்னடத்தில் பிரமாதமான வெற்றி கிடைத்துள்ளது. குடும்பம் குடும்பமாக வந்து பார்க்கிறார்கள். இத்தனைக்கும் படம் வெளியாகும்போது பெரிய பப்ளிசிட்டி கூட இல்லை..," என்றார்.

கன்னடத்தில் இந்தப் படத்தை நடிகர் தர்ஷனின் சகோதரர் தினகர் வெளியிட்டிருந்தார்.

 

வாடகைத் தாய் மூலம் குழந்தைப் பெற்ற லட்சுமி மஞ்சு!

தெலுங்கு நடிகையும் தயாரிப்பாளருமான லட்சுமி மஞ்சு வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுள்ளார்.

ஷாரூக் கான், ஆமீர் கான் போன்றவர்கள் ஏற்கெனவே இதே போல குழந்தைப் பெற்றுள்ள நிலையில், அந்தப் பட்டியலில் லட்சுமியும் இணைந்துள்ளார்.

வாடகைத் தாய் மூலம் குழந்தைப் பெற்ற லட்சுமி மஞ்சு!

ரஜினிகாந்தின் நெருங்கிய நண்பரும், தெலுங்குத் திரையுலகின் பிரபல தயாரிப்பாளரும், நடிகருமான மோகன் பாபுவின் மகள் லட்சுமி மஞ்சு. 2 முறை திருமணமாகி விவாகரத்து பெற்ற இவர் தெலுங்கில் பல படங்களில் நடித்துள்ளார். மணிரத்னம் இயக்கத்தில் வெளியான, 'கடல்' படத்திலும், முக்கியமான வேடத்தில் நடித்துள்ளார். தயாரிப்பாளராகவும் முத்திரைப் பதித்துள்ளார்.

இந்நிலையில் லட்சுமி மஞ்சு சமீபத்தில் வாடகைத் தாய் மூலம் குழந்தை ஒன்றை பெற்றிருக்கிறார். நடிகர் மோகன் பாபு அவருடைய மகள் லட்சுமி மஞ்சு வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றிருப்பதை ட்விட்டரில் உறுதிப்படுத்தியுள்ளார்.

மேலும் இது தன்னுடைய வாழ்க்கையில் மிகவும் மகிழ்ச்சியான விஷயம் என்றும் அதில் கூறியுள்ளார். அவர்களுக்கு தெலுங்குத் திரையுலக பிரபலங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

இதற்கு முன்பு நடிகர்கள் ஷாரூக் கான், ஆமீர் கான் ஆகியோர் வாடகைத் தாய் மூலம் குழந்தையை பெற்றெடுத்துள்ளனர். அவர்களைத் தொடர்ந்து தற்போது நடிகை லட்சுமி மஞ்சுவும் இந்தப் பட்டியலில் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.