உலவுச்சாறு பிரியாணி இசை வெளியீடு... இளையராஜாவுக்கு மலரபிஷேகம் செய்து கொண்டாடிய தெலுங்கு சினிமா!

ஹைதராபாத்: உலவுச்சாறு பிரியாணி தெலுங்குப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இசைஞானி இளையராஜாவுக்கு மலர் அபிஷேகம் செய்து மரியாதை செய்தனர் தெலுங்கு திரையுலகினர்.

பிரகாஷ் ராஜ் இயக்கத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடத்தில் உருவாகும் படம் உன் சமையல் அறையில். அனைத்துப் பதிப்புகளுக்கும் இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். இதன் தெலுங்குப் பதிப்புக்கு உலவுச்சாறு பிரியாணி என தலைப்பிட்டுள்ளனர்.

உலவுச்சாறு பிரியாணி இசை வெளியீடு... இளையராஜாவுக்கு மலரபிஷேகம் செய்து கொண்டாடிய தெலுங்கு சினிமா!

கன்னடத்தில் ஏற்கெனவே இசை வெளியீடு நடத்தப்பட்டுவிட்டது. தெலுங்கில் நேற்று உகாதிப் பண்டிகையன்று உலவுச்சாறு பிரியாணி படத்தின் இசை வெளியீட்டை மிகப் பிரமாண்டமாகவும், பாரம்பரிய முறையிலும் நடத்தினார் பிரகாஷ் ராஜா.

இந்த இசை வெளியீட்டு விழாவின் சிறப்பு விருந்தினரே இளையராஜாதான்.

அவரை தெலுங்கு சினிமா உலகின் ஜாம்பவான்கள் பலரும் நேரில் வந்து வாழ்த்தி மரியாதை செய்தனர். முன்னதாக இளையராஜா விழா அரங்குக்குள் நுழைந்ததுமே மந்திரங்கள் முழங்க மங்கல இசை ஒலிக்கப்பட்டது.

பின்னர் இளையராஜாவை பெரிய இருக்கையில் அமர வைத்து அவருக்கு மலரபிஷேகம் செய்தனர். இளம் பெண்கள் குச்சுப்புடி நடனம் ஆடி ராஜாவை வணங்கினர்.

உலவுச்சாறு பிரியாணி இசை வெளியீடு... இளையராஜாவுக்கு மலரபிஷேகம் செய்து கொண்டாடிய தெலுங்கு சினிமா!

தெலுங்கின் முன்னணி இசையமைப்பாளர்கள் எம்எம் கீரவாணி, மணிசர்மா ஆகியோர் இளையராஜாவுக்கு பொன்னாடைகள், மலர் மாலைகள் அணிவித்தும் வணங்கினர். பின்னர் தங்களுக்குப் பிடித்த இளையராஜா பாடல்களை மேடையில் பாடினர்.

சாதனை இயக்குநர்கள் ராகவேந்திரராவ், கோதண்ட ராமிரெட்டி, தயாரிப்பாளர்கள் டி ராமாநாயுடு, புஜ்ஜி, டாக்டர் வெங்கடேஸ்வரராவ், சி கல்யாண் உள்ளிட்டோர் இளையராஜாவுக்கு புகழாரம் சூட்டினர்.

உலவுச்சாறு பிரியாணி இசை வெளியீடு... இளையராஜாவுக்கு மலரபிஷேகம் செய்து கொண்டாடிய தெலுங்கு சினிமா!

இளையராஜா பேசுகையில், ""வெறும் இசை வெளியீட்டு விழா என்று சொல்லித்தான் தயாரிப்பாளரும் இயக்குநரும் என்னை அழைத்தனர். ஆனால் இங்கு வந்து பார்த்தால் எனக்கான விழாவாக மாற்றிவிட்டனர். இப்படியெல்லாம் செய்வீங்கன்னு தெரிஞ்சிருந்தா வராம இருந்திருப்பேனே," என்றார் சிரித்துக் கொண்டே!

 

மனோரமா உடல்நிலையில் முன்னேற்றம்!

சென்னை: நடிகை மனோரமாவின் உடல்நிலையில் முன்னேற்றம் காணப்படுவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்த மனோரமாவுக்கு நேற்று முன்தினம் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. மூச்சுத் திணறலும் அதிகமாக இருந்தது.

மனோரமா உடல்நிலையில் முன்னேற்றம்!

இதையடுத்து ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சைப் பிரிவில் அவருக்கு சிகிச்சை அளித்தனர். செயற்கை சுவாசமும் பொறுத்தப்பட்டது.

உடல் நிலை கவலைக்கிடமாகவே இருந்தது. உயிரை காப்பாற்ற டாக்டர்கள் போராடினார்கள்.

மாலையில் இவரது உடல் நிலையில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டது. ஆனாலும் டாக்டர்களின் தீவிர கண்காணிப்பிலேயே அவர் வைக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து சில நாட்கள் மருத்துவமனையிலேயே அவர் இருப்பார் என தெரிகிறது.

மனோரமாவுக்கு ஏற்கனவே மூட்டு வலி இருந்தது. அதற்கு அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அதன் பிறகும் பல்வேறு உடல் நிலைக் கோளாறுகளால் அவதிப்பட்டு வந்தார் மனோரமா.

 

தமிழ்ப் பட வாய்ப்புகளைப் புறக்கணிக்கிறேனா? - ஸ்ருதி விளக்கம்

சென்னை: தமிழ்ப் பட வாய்ப்புகளைப் புறக்கணிப்பதாக தன் மீது எழுந்துள்ள குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார் ஸ்ருதிஹாஸன்.

ஸ்ருதி ஹாசன் தற்போது முதல் நிலை நடிகையாக உள்ளார். இந்திப் படங்களிலும் நடித்து வருகிறார்.

தமிழில் 7-ம் அறிவு, 3 ஆகிய இரண்டு படங்கள்தான் இதுவரை அவர் நடித்துள்ளார்.

தமிழ்ப் பட வாய்ப்புகளைப் புறக்கணிக்கிறேனா? - ஸ்ருதி விளக்கம்  

தமிழ் இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் அவரிடம் கால்ஷீட் கேட்டுப் போனாலும் அவர் மதிப்பதில்லை என்றும், தமிழ்ப் பட வாய்ப்புகளை கண்டுகொள்வதில்லை என்றும் குற்றச்சாட்டு கிளம்பியது.

இந்த நிலையில் விஷாலுக்கு ஜோடியாக ‘பூஜை' என்ற தமிழ் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

பூஜை படத்தோடு வந்த வேறு தமிழ்ப் படங்களில் நடிக்க மறுத்துவிட்டாராம் ஸ்ருதி.

ஆனால் இதையெல்லாம் ஸ்ருதி ஹாசன் மறுத்தார்.

‘‘நான் தமிழ் படங்களில் நடிக்க மறுக்கவில்லை. தமிழ் படங்களில் நடிக்க நிறைய வாய்ப்புகள் வந்ததென்னவோ உண்மைதான்.

ஆனால் அப்போது, தெலுங்கு, இந்தியில் பரபரப்பாக நடித்துக் கொண்டு இருந்ததால் என்னிடம் கால்ஷீட் இல்லை. இதை வைத்து தமிழ் படங்களை புறக்கணிக்கிறேன் என்று தவறான செய்தி பரவிவிட்டது. இப்போது பூஜை படத்தில் நடிக்கிறேன்.

தமிழ் படங்களில் தொடர்ந்து நடிக்க ஆவலாகவே இருக்கிறேன். கதை பிடித்திருந்து கால்ஷீட்டும் இருந்தால் நிச்சயம் தமிழில் நடிப்பேன்,'' என்றார்.

 

ஷங்கர் இயக்கத்தில் அஜீத்.... செய்தியா, வதந்தியாப்பா?

சமீப காலமாக மீடியாவில் அதிகம் அடிபடும் செய்தி அல்லது வதந்தி ஷங்கர் - அஜீத் கூட்டணியில் ஒரு படம் வரப் போகிறது என்பதுதான்.

இது மீடியாவில் உள்ள அஜீத் அபிமானிகளின் நீண்ட நாள் ஆசையும் கூட.

ஷங்கர் இயக்கத்தில் அஜீத்.... செய்தியா, வதந்தியாப்பா?

சரி.. என்னதான் விஷயம்?

சமீபத்தில் அஜீத்தும் ஷங்கரும் திடீரென சந்தித்தார்களாம். அந்த சந்திப்பின் போது, அஜித்திடம் ஒரு கதையின் கருவை நான்கு வரிகளில் ஷங்கர் சொன்னாராம்.

ஷங்கர் பட வாய்ப்புக்காக காத்திருந்த அஜீத்தும், உடனடியாக நடிக்க சம்மதம் தெரிவித்துவிட்டாராம்.

ஐஸ்வர்யா ராய்

இப்படத்தில் அஜித்தைக் கவர்ந்த ஒரு விஷயம் படத்தின் நாயகி. அது வேறு யாருமல்ல, திருமணமாகி, குழந்தை பெற்ற பிறகும் இன்னும் பல நாயகர்களின் கனவில் கண்ணாமூச்சி காட்டிக் கொண்டிருக்கும் ஐஸ்வர்யா ராய்.

ஆர்வம்

ஐஸ்வர்யா ராய்தான் கதாநாயகியாக அஜீத் ஜோடியாக நடிக்கப் போகிறார் என்பது உறுதியானதும் அஜீத்தின் ஆர்வம் பலமடங்கு அதிகமாகிவிட்டதாம்.

டபுள் ட்ரீட்

படத்தில் அஜித்துக்கு இரட்டை வேடம். அவருக்கு மட்டுமல்லாமல், ஐஸ்வர்யாராய்க்கும் இரட்டை வேடம் என்பது இன்னொரு சுவாரஸ்ய தகவல்!

விஜய்யும்...

ஆனால் இந்த செய்தி இன்னமும் வதந்தி நிலையில்தான் உள்ளது. அதற்குள் விஜய் தரப்பில் ஒரு வதந்தி கிளம்பிவிட்டது. ஆம்.. அவரும் ஷங்கரின் இயக்கத்தில் மீண்டும் நடிக்க ஆர்வமாக உள்ளாராம்!

 

படைப்புச் சுதந்திரம் என்ற பெயரில் இனம் போன்ற படமெடுத்து வெந்த புண்ணில் வேல்பாய்ச்சாதீர்கள்!- சீமான்

சென்னை: உணர்வுகளை மதித்து இனம் படத்தை நிறுத்திய லிங்குசாமிக்கு நன்றி தெரிவிப்பதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை விடுத்துள்ளார்.

ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் இயக்கத்தில் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் ரிலீஸ் செய்த 'இனம்' படத்துக்கு தமிழ் மக்கள் மத்தியில் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து படத்தை எந்தத் தியேட்டரிலும் ஓடாதபடி நிறுத்திக் கொள்வதாக திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்தின் சார்பாக இயக்குநர் லிங்குசாமி அறிவித்தார்.

இதுகுறித்து இன்று சீமான் வெளியிட்டுள்ள அறிக்கை:

'இனம்' படம் தமிழர்களுக்கு எதிரான சித்தரிப்புப் படம். கொஞ்சமும் உண்மையற்ற விவரங்களோடு இப்படியொரு படம் வேண்டுமென்றே வெளியிடப்பட்டு இருக்கிறது.

ஈழத்தில் கடைசியாக நிகழ்ந்த நிகழ்வுகளின் கொடூரங்கள் மறைக்கப்பட்டும், தவறான தகவல்கள் சித்தரிக்கப்பட்டும் உருவாக்கப்பட்டுள்ள இனம் படத்தை எதிர்த்து தமிழகம் முழுக்கப் போராட்டங்கள் நடந்தன‌.

படைப்புச் சுதந்திரம் என்ற பெயரில் இனம் போன்ற படமெடுத்து வெந்த புண்ணில் வேல்பாய்ச்சாதீர்கள்!- சீமான்

இந்நிலையில், தமிழ் மக்களுக்கு மதிப்பு கொடுத்து படத்தின் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்குவதாக இயக்குநர் லிங்குசாமி அறிவித்தார். அடுத்தடுத்தும் நடந்த போராட்டங்கள் அவர் மனதை முழுவதுமாக மாற்றி இப்போது எந்தத் திரையரங்கிலும் படத்தைத் திரையிடாதபடி நிறுத்துக் கொள்வதாக இயக்குநர் லிங்குசாமி அறிவித்திருக்கிறார். இது வரவேற்கத்தக்கது.

நாங்கள் செய்ததே சரி என்கிற வீண் பிடிவாதம் செய்யாமல், தமிழ் உணர்வாளர்களின் மனக்கொதிப்பைப் புரிந்துகொண்டவராகவும், படத்தினால் விளையக்கூடிய தவறுகளை உணர்ந்து கொண்டவ‌ராகவும் லிங்குசாமி எடுத்திருக்கும் இந்த முடிவு பாராட்டத்தக்கது.

அதேநேரம் கருத்துச் சுதந்திரம் என்கிற பெயரில் இதேபோன்ற தவறான திணிப்புகளைப் படைப்பாக்க எவர் துணிந்தாலும் நாம் தமிழர் கட்சி அதனை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்காது. கருத்துச் சுதந்திரம் என்பது நடுநிலையானதாக இருக்க வேண்டுமே தவிர, எதையும் திட்டமிட்டுச் சித்தரிப்பதாக இருக்கக் கூடாது.

ஈழத்தில் நடந்த துயரங்கள் குறித்து நம்மவர்கள் எடுத்த 'ஆணிவேர்', 'எல்லாளன்', 'தேன்கூடு' ஆகிய படங்களுக்கு தணிக்கைக் கொடுக்க மறுக்கும் தணிக்கைத் துறை 'இனம்' மாதிரியான தவறானத் திணிப்பு கொண்ட படங்களுக்கு எந்த விதத்தில் தணிக்கைக் கொடுத்தது?

அண்ணன் புகழேந்தி தங்கராஜின் 'காற்றுக்கென்ன வேலி' படத்துக்கு தன்னாலான எல்லாவித தடைகளையும் உண்டாக்கிய தணிக்கைத் துறை இனம் படத்தின் இட்டுக்கட்டு கருத்துக்களுக்கு எப்படி தணிக்கை சான்றிதழ் வழங்கியது?

தேன்கூடு படத்தின் வடிவம் ஈழ தேசத்தின் வரைபடம் போல் இருப்பதை நீக்க வேண்டும் எனச் சொல்லும் தணிக்கைத் துறை 'மல்லி', 'டெரரிஸ்ட்' என சர்ச்சைக்குரிய படங்களை எடுப்பதையே வழக்கமாக வைத்திருக்கும் சந்தோஷ் சிவனின் 'இனம்' படத்துக்கு கொஞ்சமும் கவனம் காட்டாமல் தணிக்கை வழங்கி இருப்பது சந்தேகத்தை உண்டாக்குகிறது.

இத்தகைய கேள்விகளை எழுப்பினால், கலைத்துறையை அரசியல் ஆக்கிரமிக்கிறதா என அதிபுத்திசாலியாக சிலர் குரல் எழுப்புகிறார்கள். கடந்த ஐம்பது ஆண்டுகளாக திரைத்துறைதான் அரசியலை ஆக்கிரமித்திருக்கிறது என்பதை இந்த ஆவேசக்காரர்கள் புரிந்துகொள்ள வேண்டும். அரசியலின் அற்புதத்தையும் அவலத்தையும் சுட்டிக்காட்டும் கருத்துச் சுதந்திர கருவியாக திரைப்படம்தான் காலாகாலத்துக்கும் பங்காற்றி வருகிறது.

படைப்புச் சுதந்திரத்தைக் காட்டிலும் இனத்தின் சுதந்திரம் முக்கியமானது என்பதை படைப்பாளர்கள் புரிந்துகொள்ள வேண்டும். ஈழத்தின் துயரச் சுவடுகள் கொஞ்சமும் மறையாத நிலையில், அது குறித்துச் சொல்கிறோம் என்கிற பெயரில் தவறான இட்டுக்கட்டுகளைப் பரப்புவது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் கொடூரம்.

ஓர் தேசிய இனத்தின் விடுதலைக் கனவை விற்பனைக்குக் கொண்டுவருகிற வேலையை யாராக இருந்தாலும் தயவு செய்து கைவிடுங்கள். கருத்துச் சுதந்திரம் என்கிற பெயரில் எம் இனத்தின் மீது பழி பரப்புகிற வேலையை இனியும் யாராவது செய்யத் துணிந்தால் அதற்கான பலனை அனுபவிக்கவும் தயாராக வேண்டியிருக்கும் என்பதை நாம் தமிழர் கட்சி வலியுறுத்திச் சொல்லிக் கொள்கிறது.

இவ்வாறு அந்த அறிக்கையில் சீமான் கூறியுள்ளார்.

 

இந்தியாவின் ஒரே சூப்பர் ஸ்டார் ரஜினிதான்... அவருடன் நடிக்கும் பெருமை கிடைக்குமா?- கஜோல்

இந்திய சினிமாவின் ஒரே, நிஜ சூப்பர் ஸ்டார் என்றால் அவர் ரஜினிகாந்த் மட்டும்தான். அவருடன் நடிக்கும் பெருமை எனக்குக் கிடைத்தால் மறுபேச்சின்றி சென்னை சென்றுவிடுவேன், என்று நடிகை கஜோல் தெரிவித்தார்.

ரஜினி மூன்று வேடங்களில் நடித்துள்ள கோச்சடையான் படத்தின் இந்திப் பதிப்பு இசை - ட்ரைலர் வெளியீட்டு விழா நேற்று முன்தினம் மும்பையில் நடந்தது.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை கஜோல், தான் ரஜினியின் மிகப் பெரிய ரசிகை என்றார்.

இந்தியாவின் ஒரே சூப்பர் ஸ்டார் ரஜினிதான்... அவருடன் நடிக்கும் பெருமை கிடைக்குமா?- கஜோல்

செய்தியாளர்களிடம் மேலும் அவர் பேசுகையில், "இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றது எனக்கு அளவில்லாத மகிழ்ச்சியைத் தருகிறது. உண்மையில் நான் வாயடைத்துப் போயிருக்கிறேன். ரஜினி சாரின் அத்தனை தீவிர ரசிகை நான்.

நான் பார்த்த ஒரே, நிஜ சூப்பர் ஸ்டார் ரஜினி சார். அவரைப் பார்த்து வளர்ந்தவள் நான். அவருடன் நடிக்க எனக்கொரு வாய்ப்பு கிடைத்தால், மறுபேச்சின்றி சென்னைக்குக் கிளம்பிவிடுவேன்.

ரஜினி என்ற சகாப்தத்துடன் வாழ்கிறோம்.. அவரது நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறோம் என்பதே மிகப் பெரிய பெருமை," என்றார்.

 

இன்டர்நெட்டில் தீயா பரவும் லக்ஷ்மி மேனன், விஷால் முத்த போட்டோ

சென்னை: குடும்ப பாங்கான பெண்ணான லக்ஷ்மி மேனனா இப்படி விஷாலுக்கு லிப் டூ லிப் முத்தம் கொடுத்துள்ளது என்று ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கவர்ச்சி காட்டாமல் நடிப்பவர் லக்ஷ்மி மேனன். இந்நிலையில் அவர் விஷாலுடன் ஜோடி சேர்ந்துள்ள நான் சிகப்பு மனிதன் படத்தில் ஒரு காட்சியில் துணிந்து நடித்துள்ளார்.

இன்டர்நெட்டில் தீயா பரவும் லக்ஷ்மி மேனன், விஷால் முத்த போட்டோ

அதாவது விஷாலுக்கு லிப் டூ லிப் கொடுத்துள்ளார். இந்த புகைப்படத்தை யாரோ இணையதளத்தில் கசியவிட அது தீயாக பரவிக் கொண்டிருக்கிறது. புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் குடும்ப பாங்கான கதாபாத்திரங்களில் நடிக்கும் லக்ஷ்மி மேனனா இப்படி என்று அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இன்டர்நெட்டில் தீயா பரவும் லக்ஷ்மி மேனன், விஷால் முத்த போட்டோ

அடுத்த வீட்டு பெண் போன்று இமேஜ் வைத்துள்ள அவர் என்ன கூடுதல் சம்பளத்திற்காக இப்படி விஷாலுக்கு முத்தம் கொடுத்துள்ளாரா, இல்லை பரபரப்பை கூட்டவா என்று ரசிகர்கள் பேசிக் கொள்கிறார்கள்.

இந்த முத்தக் காட்சியால் படத்திற்கு யு சான்றிதழ் கிடைப்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

'இந்த விருது என்னையும் என் மண்ணையும் பெருமைப்படுத்துகிறது!' - கமல்

சென்னை: அரசிடம் விருது பெற்ற, பெறப்போகும் இந்தியர்களை என் மனம் நெடுஞ்சான்கிடையாக விழுந்து வணங்கியது! -

குடியரசுத் தலைவரிடமிருந்து பத்மபூஷண் விருது பெற்ற கமல் ஹாஸன், அதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கை இது:

ஜனாதிபதி மாளிகையின் சரித்திர அழுத்தமும், என்னுடன் விருது பெற்றவர்களின் தனிப்பெரும் சாதனைகளும் எனக்கு மீண்டும் பணிவை பெற்றுத் தந்தது.

'இந்த விருது என்னையும் என் மண்ணையும் பெருமைப்படுத்துகிறது!' - கமல்

இத்தகைய விழாக்களை நடத்த வேண்டிய அவசியம் என்ன என்ற கேள்விக்கான பதில் எனக்குக் கிடைத்தது. எனக்கு வழங்கப்படும் விருது என்னை பெருமைப்படுத்த மட்டும் அல்ல; என் மண்ணையும் பெருமைப்படுத்தும் செயல்.

மீண்டும் ஒரு முறை குடிமகனான என் கடமைகளை நிறைவேற்ற உறுதிமொழி அளிக்கும் விழாவாகவும் நான் இதை உணர்ந்தேன். தேசிய கீதம் இசைத்தபோது மனது ஏதோ நெகிழ்ந்து நான் ஒரு பெரும் விருட்சத்தின் விழுது என்பதுணர்ந்து நெஞ்சம் விம்மியது.

மனத்திரையில் தேச பக்தியுள்ள என் தாய், தந்தையரின் முகம் தோன்றி மறைந்தது. கொஞ்சம் குழந்தைத்தனமான உணர்வு என்றாலும் பிடித்திருந்தது. ஒரு சிலர் இந்தியா கிரிக்கெட் விளையாடி வென்றால் புல்லரித்துப் போவார்கள். நான் இந்தியா எத்துறையில் வென்றாலும் பூரிப்படைவேன்.

இன்று பல்துறை வித்தகர்களுடன் தோளுரசி நின்றதில் பெருமை அடைகிறேன். இன்னும் இப்பெருமையைப் பெறப் போகிறவர்களையும், பெறாவிட்டாலும் தன் கடமையைச் செய்யப் போகும் இந்தியர்களையும் என் மனம் நெடுஞ்சான்கிடையாக விழுந்து வணங்கியது.

அன்பன்

கமல்ஹாசன்

 

இந்திய சினிமா வரலாற்றை ரஜினியின் கோச்சடையானுக்கு முன் - பின் என்றே எழுத வேண்டும்! - அமிதாப்

மும்பை: இந்திய சினிமா வரலாற்றை எழுதுவோர் இனி கோச்சடையானுக்கு முன், கோச்சடையானுக்குப் பின் என்றே எழுத வேண்டும். அத்தனை சிறப்பு வாய்ந்த சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த படம் இது, என பாலிவுட் சாதனையாளர் அமிதாப் பச்சன் கூறினார்

'கோச்சடையான்' படத்தின் இந்தி முன்னோட்டக் காட்சி மற்றும் இசை வெளியீட்டு விழா மும்பையில் ஞாயிற்றுக் கிழமை நடந்தது.

பாலிவுட் பிரபலங்கள் பலரும் பங்கேற்ற இந்த விழாவில் ட்ரைலர் - பாடல்களை வெளியிட்டுப் பேசினார் அமிதாப் பச்சன்.

இந்திய சினிமா வரலாற்றை ரஜினியின் கோச்சடையானுக்கு முன் - பின் என்றே எழுத வேண்டும்! - அமிதாப்  

அவரது பேச்சு முழுமையாக:

இதை எப்படி வார்த்தைகளில் வர்ணிப்பதென்று தெரியவில்லை. ஆனால் இந்தப் படத்தை இயக்கியிருப்பவர் ஒரு பெண் என்று சொல்ல விரும்புகிறேன். செளந்தர்யா ஒரு படி முன்னே வந்து, இந்திய பெண்களால் சாதிக்க முடியாததே இல்லை என்பதை நிரூபித்திருக்கிறார்.

ஒரு மகளாக, தன் பாசமிக்க அப்பாவுக்கு மிகவும் பெருமை சேர்த்துள்ளார். ஒரு அப்பாவாக தன் மகளின் நம்பிக்கைக்கு ஆதரவாக இருந்து மிகப் பெரும் சாதனை நிகழ காரணமாக இருந்திருக்கிறார் ரஜினி.

நானும் ரஜினியும் மிக நெருக்கமானவர்கள். ஒரு குடும்பம் போல பழகியிருக்கிறோம். பல படங்களில் நாங்கள் இருவரும் இணைந்து பணியாற்றியிருக்கிறோம். அவர் மிக எளிமையான மனிதர். திரைக்குப் பின்னால் நேரமிருக்கும்போதெல்லாம் எங்களுடைய சந்திப்பில் சினிமா, குடும்பம், வாழ்க்கையைப் பற்றி நிறைய பேசுவோம்.

‘எந்திரன்' தயாரிப்பின்போது இந்த வாழ்க்கை தனக்கு மிகவும் போரடிப்பதாகச் சொன்னார் ரஜினி. ஆனால் நான் ரஜினியிடம் சொன்னேன், படங்களில் நடிப்பதை நிறுத்தி விடாதீர்கள் என்று.

இப்போது பாருங்கள்.. என்ன மாதிரியான ஒரு படத்தை உருவாக்கியிருக்கிறாரென்று? தன்னை மீண்டும் அவர் கண்டெடுத்த விதம் நம்ப முடியாதது! சினிமா ரசிகர்களுக்கு ஒரு வித்தியாசமான அனுபவத்தைத் தரவிருக்கிறார் ரஜினி.

இந்திய சினிமாவின் வரலாற்றை எழுதுபவர்கள் நிச்சயமாக கோச்சடையானுக்கு முன்பும், பின்பும் என்றுதான் எழுத முடியும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

ரஜினியின் ரசிகர்களைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டுமெனில் நீங்கள் தென் இந்தியாவுக்குப் போக வேண்டும்.

ரஜினியின் படங்களின் முதல் நாள், முதல் ஷோவின் டிக்கெட்டுகளை உங்களால் வாங்கவே முடியாது. அது முழுக்க முழுக்க அவரது ரசிகர்களிடத்தில்தான் இருக்கும். அப்படியே டிக்கெட்டுகளை நீங்கள் வாங்கி தியேட்டருக்குள் நுழைந்தாலும் அங்கே உங்களால் எதையும் கேட்கவே முடியாது. அந்த அளவுக்கு கைதட்டல்களும், விசில்களும் பறக்கும்.

‘கோச்சடையான்' பல ஆண்டுகள் தியேட்டர்களை ஆளும் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது," என்றார்.