அரவானில் தாசியாக ஸ்வேதா மேனன்!


வசந்தபாலன் இயக்கும் அரவான் படத்தில் தாசி வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் மலையாள நடிகை ஸ்வேதா மேனன்.

ஆதி - தன்ஷிகா ஜோடியாக நடிக்கும் சரித்திரப் படம் அரவான். அங்காடித் தெரு படத்துக்குப் பின் வசந்த பாலன் இயக்கும் இப்படத்தை அம்மா கிரியேஷன்ஸ் டி சிவா தயாரிக்கிறார்.

தமிழகத்தின் தென் மாவட்டங்களில் படப்பிடிப்பு தொடர்ந்து நடந்து வருகிறது.

பசுபதி, கபீர் பேடி என முக்கிய நடிகர்கள் நடிக்கும் இப்படத்தில் புதிதாக இணைந்துள்ளவர் கவர்ச்சி நடிகை ஸ்வேதா மேனன். தாசி வேடத்தில் அவர் நடிக்கிறாராம்.

காமசூத்ரா விளம்பரம், செக்ஸ் வீரிய மருந்து விளம்பரத்தில் படத்தை உபயோகித்ததற்காக வழக்கு என தொடர்ந்து பரபரப்பைக் கிளப்பி வரும் ஸ்வேதா, சமீபத்தில் நடித்து வெளியான மலையாளப்படம் ரதிநிர்வேதம் நன்றாகப் போகிறது.

அந்த சூட்டோடு, அவரை தமிழுக்கு மீண்டும் அழைத்து வருகிறார் வசந்தபாலன்.
 

சூப்பர் ஸ்டாராக ஆசையில்லை; அவரைப் பார்க்கத்தான் ஆசை! - 'முதல் இடம்' விதார்த்


எனக்கு சூப்பர் ஸ்டாராகும் ஆசை எதுவும் இல்லை. ஆனால் ஒரு ரசிகனாக சூப்பர் ஸ்டாரைப் பார்க்கும் ஆசை மட்டும்தான் உள்ளது என்றார் நடிகர் விதார்த்.

வளரும் நடிகர்களில் குறிப்பிடத்தக்க இடத்தைப் பிடித்திருப்பவர் விதார்த். தொட்டுப்பார் படத்தில் ஹீரோவாக அறிமுகமாகி, மைனா மூலம் முன்னணி நடிகர் வரிசையில் இடம்பிடித்தவர் விதார்த்.

இப்போது பாரம்பரியம் மிக்க ஏவிஎம் நிறுவனத்தின் 175வது படமான முதல் இடத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். இந்தப் படம் கடந்த வெள்ளிக்கிழமை தமிழகம் முழுவதும் வெளியானது.

நல்ல பொழுதுபோக்குப் படம் என 'முதல் இடம்' குறித்து சாதகமான தகவல்கள் வெளிவரத் துவங்கியுள்ள நிலையில், ஏவிஎம் படத்தில் பணிபுரிந்த அனுபவம் குறித்து செய்தியாளர்களுடன் விதார்த் பகிர்ந்து கொள்ளும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர். நிகழ்ச்சிக்கு வந்த அனைவரையும் பெரு துளசி பழனிவேல் வரவேற்றார்.

பின்னர் விதார்த் பேசுகையில், "என் தாத்தா சினிமாவில் நடிகராக விரும்பி சென்னை வந்தார். இதே ஏவி எம் நிறுவனத்தில் பராசக்தி, ஓர் இரவு போன்ற படங்களில் துண்டு வேடங்களில் நடித்தார். ஆனால் ஒரு இடத்தைப் பிடிக்க முடியவில்லை. எனவே மீண்டும் ஊருக்கே திரும்பிவிட்டார்.

அவர்தான் என்னை நடிகனாக்கிப் பார்க்க விரும்பி, என்னை சென்னைக்கு அனுப்பியவர். ஏவிஎம்முக்கு எதிரில் உள்ள சந்தில்தான் தங்கியிருந்தேன். கார்ப்பெண்டர்களுடன் அவ்வப்போது ஏவிஎம்முக்கு வந்து போவேன். இன்று அதே ஏவிஎம் நிறுவனத்தில் கதாநாயகனாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளதை எண்ணும்போது பெருமையாக உள்ளது.

முதல் இடம் படம் எனக்கு நல்ல பெயரைப் பெற்றுத் தந்துள்ளது. இந்தப் படம் பார்த்து நிறைய பேர் எனக்கு போன் செய்து பாராட்டி வருகிறார்கள்," என்றார்.

முதல் இடம் என்று பெயர் வைத்துள்ளீர்களே, அப்படியானால் சூப்பர் ஸ்டாராகும் ஆசை உள்ளதா என்று ஒரு நிருபர் கேள்வி எழுப்பினார்.

உடனே பதறிப் போன விதார்த், "சூப்பர் ஸ்டாராகும் ஆசையெல்லாம் எனக்கு இல்லை. ஒரு ரசிகனாக சூப்பர் ஸ்டாரை போய்ப் பார்க்க வேண்டும் என்ற ஆசை மட்டுமே உள்ளது," என்றார்.

அடுத்து, கொள்ளைக்காரன், பாலுமகேந்திரா உதவியாளர் இயக்கும் படம், பாலா உதவியாளர் இயக்கும் ஒரு படம் மற்றும் ஒரு மெகா பட்ஜெட் மலையாளப் படம் மற்றும் தமிழ் - தெலுங்கு இருமொழிப்படம் ஒன்று என பெரிய 'லைன் அப்' வைத்திருக்கிறார் விதார்த்.
 

மோசடியாக தன்னிடம் விற்கப்பட்ட நிலத்தை ஒப்படைத்தார் வடிவேலு-வழக்கு பைசல் ஆனது


சென்னை: மோசடியாக தன்னிடம் விற்கப்பட்ட நிலத்தை அதற்கு உரியவரிடம் ஒப்படைத்தார் நடிகர் வடிவேலு. இதையடுத்து அவர் மீதான வழக்கு பைசல் செய்யப்பட்டது.

வடிவேலு மீது அசோக்நகரைச் சேர்ந்த ஓய்வு பெற்ற வங்கி உதவி பொதுமேலாளர் பழனியப்பன் புகார் அளித்திருந்தார். அதில்,

2006-ம் ஆண்டில் தாம்பரம் அருகே உள்ள இரும்புலியூரில் ஒரு தொழில் முதலீட்டு நிறுவனம் சார்பில் 34 சென்ட் நிலம் ஏலத்துக்கு வந்தது. அந்த நிலத்தை எனது மகன் சொக்கலிங்கம் பெயரில் ரூ. 20 லட்சத்துக்கு வாங்கினேன்.

முன்னதாக, இந்த நிலத்தை அடமானமாக வைத்துத் தொழில் முதலீட்டு நிறுவனத்திடம் மேற்கு தாம்பரத்தைச் சேர்ந்த டி.கே.ராமச்சந்திரன் கடன் பெற்றிருந்ததாகக் கூறப்படுகிறது. கடனை அவர் திருப்பிச் செலுத்ததால் அந்த நிலம் ஏலத்துக்கு வந்துள்ளது.

எனது மகன் வெளிநாட்டில் இருந்ததால் நான்தான் அந்த நிலத்தை அவ்வப்போது கண்காணித்து வந்தேன். இதற்கிடையே அந்த நிலத்தை நடிகர் சிங்கமுத்துவுக்குப் போலி ஆவணங்கள் மூலம் ராமச்சந்திரனின் மகன் பிரபு விற்றதாக கூறப்படுகிறது. சிங்கமுத்து அந்த நிலத்தை நடிகர் வடிவேலுக்கு விற்றாராம். போலி ஆவணங்கள் அடிப்படையில் அந்த நிலத்தை இப்போது வடிவேலு தனது மகன் பெயரில் வைத்துள்ளார்.

2009ம் ஆண்டு அந்த நிலத்தில் நடிகர் வடிவேலுவின் ஆதரவாளர்கள் சுற்றுச்சுவர் கட்ட ஆரம்பித்தனர். அதைத் தடுக்க நான் முயன்ற போது எனக்கு அவர்கள் மிரட்டல் விடுத்தனர்.

அது குறித்து, அப்போதைய சென்னைப் புறநகர் காவல் ஆணையர் எஸ்.ஆர்.ஜாங்கிட்டிடம் புகார் செய்தேன். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று பழனியப்பன் தனது புகாரில் கூறியிருந்தார்.

இந்த மனு மீது போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் தன்னிடம் மோசடியாக விற்கப்பட்ட நிலத்தை ஒபப்டைக்க வடிவேலு முன்வந்தார். அதன்படி காவல்துறையிடம் ஒப்படைத்தார். இதையடுத்து விவகாரம் தீர்ந்ததால் அவர் மீ்தான வழக்கை போலீஸார் முடித்து வைத்தனர்.
 

பாரதிராஜாவின் ஹீரோ பார்த்திபன்!


பாரதிராஜா இயக்கும் அன்னக்கொடியும் கொடி வீரனும் படத்தில் நாயகனாக நடிக்கிறார் பார்த்திபன்.

மூன்று ஆண்டு இடைவெளிக்குப் பிறகு பாரதிராஜா தயாரித்து இயக்கும் படம் அன்னக்கொடியும் கொடி வீரனும். இந்தப் படத்தில் முற்றிலும் புதுமுகங்கள் நடிப்பதா முதலில் அறிவிக்கப்பட்டது.

ஆனால் இப்போது ஹீரோவாக இயக்குநரும் நடிகருமான பார்த்திபனும், அவருக்கு ஜோடியாக பூ படத்தில் நடித்த பார்வதியும் நடிக்கின்றனர்.

முதல்முறையாக ஜீவி பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். பாரதிராஜாவின் ஆஸ்தான ஒளிப்பதிவாளர் கண்ணன் ஒளிப்பதிவு செய்கிறார்.

முழுக்க முழுக்க தேனி மாவட்டத்தில் படமாகிறது, அன்னக்கொடியும் கொடி வீரனும்.
 

தெலுங்கில் சக்கைப் போடு போடும் இளையராஜாவின் ஸ்ரீராம ராஜ்யம் பாடல்கள்!


'மீண்டும் இளையராஜாவின் பழைய ஃபார்முக்கு திரும்பிவிட்டார்' - இதுதான் தெலுங்கு திரையுலகில் இன்றைய பேச்சு.

காரணம் அவரது இசையில் வெளிவந்துள்ள ஸ்ரீராம ராஜ்யம் பாடல்கள்தான்!

பிரபல இயக்குநர் பாபு இயக்கத்தில் பெரும் பொருட்செலவில் பாலகிருஷ்ணா, அக்கினேனி நாகேஸ்வர ராவ், நயன்தாரா நடித்துள்ள படம் ஸ்ரீராம ராஜ்யம்.

சமீபத்தில் இந்தப் படத்தின் பாடல்கள் வெளியாகின. பாடல் வெளியாகும் வரை இந்தப் படத்தை தெலுங்கு விநியோகஸ்தர்கள் கண்டுகொள்ளவே இல்லை. தமிழ் டப்பிங் படங்களை வாங்க ஆர்வம் காட்டி வந்த விநியோகஸ்தர்கள், ஸ்ரீராமராஜ்யத்தை வாங்க மறுத்தனர்.

ஆனால் பாடல்கள் வெளியாகி இரண்டு நாட்களில் சூப்பர் டூப்பர் ஹிட்டாகிவிட்டன. இந்தப் படத்துக்காக மொத்தம் 16 பாடல்களை போட்டுக் கொடுத்துள்ளார் இளையராஜா. இவை அனைத்துமே ஆந்திராவில் படு பிரபலமாகிவிட்டதால், சிடி, கேசட் விற்பனை சூடுபிடித்துள்ளது.

இதுவரை படத்தை வாங்க மறுத்து வந்த விநியோகஸ்தர்கள் போட்டி போட்டுக் கொண்டு படத்துக்கு அட்வான்ஸ் தந்து வருவதாக தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.

இசைத் தட்டை வெளியிட்டு ஆதித்யா மியூசிக், "நீண்ட நாட்களுக்குப் பிறகு முதல்முறையாக தெலுங்குப் பட இசைக் குறுந்தகடுகள் இத்தனை பிரமாண்டமாக விற்பனையாவது மகிழ்ச்சியைத் தருகிறது. இளையராஜா இசைக்காக காத்திருந்த மிகப்பெரிய ரசிகர் கூட்டம் முழு திருப்தி அடைந்துள்ளது ஸ்ரீராமராஜ்யம் பாடல்கள் மூலம்," என்று கூறியுள்ளது.

இந்தப் படத்தின் இசை குறித்து படத்தில் வால்மீகியாக நடித்துள்ள நாகேஸ்வரராவ் கூறுகையில், "இந்தப் படத்துக்கு இசை இளையராஜா என்று சொன்னபோதே, அதன் வெற்றியை நான் கணித்துவிட்டேன். அவரது இடத்தில் வேறு யாரையும் நினைத்துப் பார்க்க முடியவில்லை. இவ்வளவு அருமையான பாடல்களைத் தந்த அவருக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன்," என்றார்.

மீண்டும் முதல் வரியைப் படியுங்கள்... தெலுங்குப் பட உலகினர் சொல்வது நிஜம்தானே!
 

நடிகர் விக்னேஷ் மீது நில அபகரிப்புப் புகார்-80 வயது மூதாட்டி கொடுத்தார்


சென்னை : நடிகர் விக்னேஷ் மீது 80 வயது மூதாட்டி நில அபகரிப்புப் புகார் கொடுத்துள்ளார்.

சென்னை கமிஷனர் அலுவலகத்திற்கு இன்று தனது வக்கீலுடன் வந்த வீரம்மாள் என்ற அந்த மூதாட்டி ஒரு புகார் மனுவைக் கொடுத்தார்.

அதில், எனது பெயர் வீரம்மாள், வயது 80 ஆகிறது. எனக்குச் சொந்தமாக ஈக்காட்டுத்தாங்கலில் 5000 சதுர அடி நிலம் உள்ளது. இந்த நிலத்தை நடிகர் விக்னேஷ் என்கிற அந்தோணி, மோசடியான பத்திரம் மூலம் அபகரித்துக் கொண்டார்.

நான் உயிருடன் இருக்கும்போதே இறந்து விட்டதாக போலியான சான்றிதழைத் தயாரித்து இந்த அபகரிப்பைச் செய்துள்ளார். அந்த நிலத்தை மீட்டுத் தர வேண்டும் என்று வீரம்மாள் கோரியுள்ளார்.

வீரம்மாளின் வக்கீல் கூறுகையில், விக்னேஷுடன் ஓய்வு பெற்ற டிஎஸ்பி வீரபாண்டியன் என்பவரும் இதற்கு உடந்தை என்றார். தற்போது இந்த நிலத்தில் விக்னேஷும், அவரது மனைவி உமா மகேஸ்வரியும் புதிய கட்டடம் கட்டி வருவதாகவும் வீரம்மாள் குற்றம் சாட்டியுள்ளார்.
 

சினிமா தயாரிப்பாளர் மகனைக் கடத்திய கார் டிரைவர் உள்பட 6 பேர் கைது


தூத்துக்குடி: சினிமா தயாரிப்பாளர் ராஜ்குமாரின் 4 வயது மகனைக் கடத்திய வழக்கில் கார் டிரைவர் கருப்பசாமி உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தூத்துக்குடி பிரையண்ட் நகரை சேர்ந்தவர் ராஜ்குமார், தூத்துக்குடியில் ஷிப்பிங் ஏஜென்சி நிறுவனம் நடத்தி வருகிறார். மார்கழி 16 என்ற படத்தை எடுத்துள்ளார். இவரது மனைவி பிளவர் தூத்துக்குடி மாநகராட்சி 16-வது வார்டு தி.மு.க.கவுன்சிலராக உள்ளார். இவர்களது மகன் ஜெயவிஷால் உமேஷ் ஒரு தனியார் பள்ளியில் எல்.கே.ஜி. படித்து வருகிறான். ராஜ்குமார், பிளவர் தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர்.

இந்நிலையில் கடந்த 17-ம் தேதி கார் டிரைவருடன் பள்ளிக்கு சென்ற உமேஷ் கடத்தப்பட்டான். கடத்தல்காரன் கார் டிரைவர் கருப்பசாமியின் செல்போனில் இருந்து பிளவரைத் தொடர்பு கொண்டு ரூ. 5 கோடி பணம் கேட்டான். இது குறித்து தென்பாகம் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வந்தனர். இந்நிலையில் கருப்பசாமியும், உமேஷும் தென்பாகம் காவல் நிலையத்திற்கு வந்தனர்.

அவர்களை விசாரித்ததில் கருப்பசாமி மற்றும் சிறுவனின் வாக்குமூலங்கள் முன்னுக்குப் பின் முரணாக இருந்தது. இதையடுத்து உமேஷ் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டான். உமேஷை கார் டிரைவர் கடத்தியிருப்பாரோ என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் ராஜ்குமாரிடம் பணம் பறிப்பதற்காக தானும், தனது கூட்டாளிகளும் சேர்ந்து தான் உமேஷை கடத்தியதாக கருப்பசாமி ஒப்புக் கொண்டார். இதையடுத்து போலீசார் கருப்பசாமியின் கூட்டாளிகளான அசோக், மகேஷ், லட்சுமி காந்தன், ஜெகன், முருகேஷ் உள்ளிட்ட 5 பேரை கைது செய்தனர்.

இது குறித்து தூத்துக்குடி எஸ்பி நரேந்திர நாயர் கூறுகையில்,

சிறுவனைக் கடத்தி ராஜ்குமாரை மிரட்டி பணம் பறித்து சொகுசாக வாழலாம் என்று கார் டிரைவர் கருப்பசாமி தனது கூட்டாளிகளுக்கு ஆசை வார்த்தை காட்டியுள்ளார். இதனால் அவர்கள் சிறுவனைக் கடத்தியுள்ளனர். அவர்களுக்கு பணம் கிடைக்காததோடு, எங்கள் வலையிலும் சிக்கினார்கள் என்றார்.

 

ஆண் குழந்தைக்கு அப்பாவானார் நடிகர் விமல்!


நடிகர் விமல் ஆண் குழந்தைக்கு தந்தையானார். அவரது மனைவி பிரியதர்ஷினிக்கு நேற்று சென்னை தனியார் மருத்துவமனையில் ஆண்குழந்தை பிறந்தது.

பசங்க படத்தில் அறிமுகமாகி களவாணி மூலம் பிரபலமானவர் விமல். கடந்த டிசம்பர் மாதம் எத்தன் படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது, தனது உறவுக்காரப் பெண் பிரியதர்ஷினியை திடீரென திருமணம் செய்தார்.

பெற்றோர் எதிர்ப்பை மீறி நடந்த காதல் திருமணம் இது. திருமணமாகி 9 மாதங்கள் கழித்து இப்போது குழந்தை பிறந்துள்ளது.

குழந்தை பிறந்த மகிழ்ச்சியை, நண்பர்கள் -உறவினர்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினார் விமல்.

 

த்ரிஷாவும் அவங்கம்மாவும்!


நடிகை த்ரிஷாவும் அவரது அம்மா உமா கிருஷ்ணனும் ஒரு விளம்பரத்தில் இணைந்து நடித்துள்ளனர்.

அது பாசுமதி அரிசி பிராண்ட் ஒன்றின் விளம்பரம். மதராசப்பட்டினம் புகழ் விஜய் இயக்கியுள்ளார். எந்திரன் கேமராமேன் ரத்னவேலுதான் ஒளிப்பதிவு.

இந்த விளம்பரத்துக்கு ஒரு பிரபல நடிகை மற்றும் அவரது அம்மா இணைந்து நடித்தால் நன்றாக இருக்கும் என இந்த நிறுவனம் கூறியுள்ளது. உடனே விஜய் த்ரிஷாவை அணுகி விஷயத்தைச் சொல்ல உடனே ஒப்புக் கொண்டாராம். த்ரிஷா அம்மா உமாவுக்கும் இதில் ஏக சந்தோஷமாம். அம்மாவுக்கும் மகளுக்கும் கனமான சம்பளமாம் இந்த விளம்பரத்துக்கு.

இதுகுறித்து த்ரிஷா கூறுகையில், “அம்மாவுடன் இணைந்து இந்த விளம்பரத்தில் நடித்தது மிகவும் சந்தோஷமாக இருந்தது. இதுபற்றி நான் கூறுவதை விட சம்பந்தப்பட்ட விளம்பர நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதுதான் சரியாக இருக்கும். ஆனால் சந்தோஷத்தை வெளிப்படுத்தவே இந்த தகவலை சொல்கிறேன்,” என்றார்.

இதே விளம்பரத்தை இந்தியில் ஷர்மிளா தாகூர், அவர் மகள் நடிகை சோஹா அலி கானை வைத்து எடுத்துள்ளனர்.

 

புலிவேசம்... திருட்டு விசிடியைத் தடுக்க ஒரு டிஜிட்டல் பாதுகாப்பு!


திரைப்படத் துறையினரை பெரிதும் பாதிக்கும் ஒரு விஷயம் திருட்டு விசிடி. இதனை ஒழிக்க எத்தனையோ வழிகளை நடைமுறைப்படுத்தியும் இதுவரை திரையுலகினருக்கு வெற்றி கிடைத்தபாடில்லை.

அரசும் திருட்டு விசிடி ஒழிப்புக்கென்றே காவல் துறையில் தனி பிரிவையும் ஏற்படுத்தியுள்ளது. அவர்களும் அவ்வப்போது ஆயிரக்கணக்கில் புதுப்பட டிவிடிக்களைப் பறிமுதல் செய்தாலும், பிரச்சினை தொடர்ந்த வண்ணம் உள்ளது.

இந்த நிலையில் பி வாசு இயக்கத்தில் வெளியாகும் புலிவேசம் படத்தை பைரசியிலிருந்து காக்கும்பொருட்டு, புதிய பாதுகாப்பு ஏற்பாடு ஒன்றைச் செய்துள்ளார்கள்.

இந்தப் படத்தை ரூ 10 லட்சம் செலவில் டிஜிட்டல் செக்யூரிட்டி செய்துள்ளார் அந்தப் படத்தின் தயாரிப்பாளரும் ஹீரோவுமான ஆர்கே. இதன்படி, படத்தில் இடம்பெறும் பாடல் காட்சிகள், சண்டைக் காட்சிகள், ஹீரோவின் அங்க அடையாளங்கள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டு, ஒரு மென்பொருள் தயாரிக்கப்பட்டுள்ளது.

எங்காவது ஆன்லைனில் இந்தப் படம் டவுன்லோடு செய்யப்படும்போதே, இந்த சாப்ட்வேர் காட்டிக் கொடுத்துவிடும். ஒருவேளை டோரண்ட் போன்ற தளங்களில் பதிவு செய்தவர்கள், அதனை திரையில் ஓடவிட்டால், அடுத்த 15 நிமிடங்களில் புலிவேசம் திருட்டு விசிடி கண்காணிப்பு குழுவுக்குத் தெரிந்துவிடும்.

இந்த வகையில் திருட்டு விசிடி பார்ப்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்கான ஏற்பாடுகளை சர்வதேச நிறுவனம் ஒன்று செய்து தருகிறது.

ஆன்லைன் தவிர்த்து, திருட்டு டிவிடியாக விற்பவர்களைக் கண்டுபிடிக்க தனி டீம் ஒன்றையும் உருவாக்கியுள்ளனர்.

இதுகுறித்து படத்தின் நாயகன் ஆர்கே கூறுகையில், “ஆன்லைன் திருட்டு விசிடியைத் தடுக்க டிஜிட்டல் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது இந்தியாவிலேயே இதுதான் முதல்முறை. இது நிச்சயம் நல்ல பலனைத் தரும் என நம்புகிறேன். அடுத்து வியாபாரிகள் மூலம் நடக்கும் திருட்டு விசிடி விற்பனையைத் தடுக்கவும் ஒரு புதிய திட்டம் வைத்துள்ளோம். இந்த திட்டப்படி, சில்லறையாக விற்பவரை விட்டுவிட்டு, இந்த டிவிடிகளை மொத்தமாக அடித்துக் கொடுப்பவரை பிடிக்க முயற்சிக்கிறோம்,” என்றார்.

திட்டமிட்டபடி ஆகஸ்ட் 26-ம் தேதி வெளியாகிறது புலிவேசம்.

 

போராட்டம் என்ற பெயரில் மக்களை வதைப்பதா....? - ரம்யா கோபம்


ஊழலுக்கு எதிரான போராட்டம் என்ற பெயரில் நடுச்சாலைகளை ஆக்கிரமிப்பதும், ஆம்புலன்ஸ் போன்ற முக்கிய வாகனங்களை செல்லவிடாமல் தடுப்பதும் மிகப்பெரிய தவறு, என நடிகை ரம்யா (திவ்யா) தெரிவித்துள்ளார்.

தமிழ், கன்னடத்தில் முன்னணி நடிகையான ரம்யா இதுகுறித்து கூறியிருப்பதாவது:

நேற்று ஞாயிற்றுக்கிழமை பெங்களூர் விமான நிலையத்துக்கு காரில் சென்று கொண்டிருந்தேன். ஹெப்பல் மேம்பாலம் அருகே போக்குவரத்து கிட்டத்தட்ட அப்படியே நின்றுவிட்டது. விடுமுறை நாள்தானே ஏன் இப்படி என்று பார்த்தால், 9 பேர் மட்டும் பைக்குகளில் தேசிய கொடியை பறக்கவிட்டபடி ஊர்வலம் செல்கிறார்கள். ஊழலுக்கு எதிரான போராட்டமாம்.

இவர்கள் வேண்டுமென்றே மெதுவாக செல்ல, போக்குவரத்து முற்றிலும் நின்று விட்டது. விமான நிலையத்துக்கு செல்ல வேண்டியவர்கள் தாமதமாகிவிட்ட டென்ஷனில் தவிக்க, கொலம்பியா ஏசியா மருத்துவமனைக்கு சென்ற ஆம்புலன்ஸ் வாகனம் அலறியபடி நின்றது. ஆனால் ஒருவரும் இதுபற்றி அக்கறை காட்டியதாகத் தெரியவில்லை.

ஜனநாயகம் என்பது எல்லோருக்கும்தான். மக்களைத் தொல்லைப்படுத்தும் விதத்தில் நடக்கும் போராட்டங்களை அனுமதிக்கவே கூடாது. எங்காவது மைதானத்தில் போய் அமர்ந்து அமைதியாக தங்கள் போராட்டத்தை நடத்த வேண்டும். அதைவிட்டுவிட்டு இப்படி நடுச் சாலையில் யாரோ நான்குபேர் அழிச்சாட்டியம் செய்ய, அதனால் ஏராளமானோர் பாதிக்கப்படுவதற்குப் பெயர் போராட்டமா… இது கொடுமையானது.

உடனே இதை அன்னா ஹசாரேவுக்கு எதிர்ப்பு, காங்கிரஸ் ஆதரவு என்றெல்லாம் சாயம் பூச சிலர் முயல்வார்கள். அதுபற்றி எனக்கு அக்கறையில்லை. நியாயத்தை யார் வேண்டுமானாலும் சொல்லலாம்,” என்றார்.

 

நமீதா - சேரன் மோதல்!


ரசிகர்களை மச்சான்ஸ் என்று அழைத்து, மேடையில் நின்றபடி பறக்கும் முத்தம் கொடுத்தார் நடிகை நமீதா. இதனால் கடுப்பான இயக்குநர் சேரன், நமீதாவுக்கு கண்டனம் தெரிவித்தார்.

வெளி நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் நமீதா, கூடியிருக்கும் ரசிகர்களைக் குஷிப்படுத்தும் விதத்தில் மச்சான்ஸ் என்று விளிப்பது வழக்கம். சில நேரங்களில் தனது அன்பைக் காட்ட அவர் ப்ளையிங் கிஸ் கொடுத்து ரசிகர்களை உற்சாகப்படுத்துவார்.

இரு தினங்களுக்கு முன் அம்புலி என்ற படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னை காமராஜர் அரங்கில் நடந்தது. கலைப்புலி தாணு, கேயார், பார்த்திபன் என முக்கியப் பிரமுகர்கள் பங்கேற்ற இந்த விழாவில், நமீதா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். சேரனும் நிகழ்ச்சிக்கு வந்திருந்தார்.

பாடல் வெளியீடு முடிந்ததும் வாழ்த்திப் பேச வந்த நமீதா, ஹாய் மச்சான்ஸ் என தனது வழக்கமான ஸ்டைலில் பேச்சை ஆரம்பித்தார். பேசி முடித்த பிறகு, ரசிகர்களை நோக்கி முத்தம் ஒன்றைப் பறக்கவிட்டார். உடனே கூட்டத்தில் பயங்கர விசில் மற்றும் கைத்தட்டல்.

பேசி முடித்த உடனே நமீதா அரங்கிலிருந்து கிளம்பிவிட்டார். அடுத்துப் பேச வந்த இயக்குநர் சேரன், “என்ன இந்தப் பொண்ணு இப்படி பேசிட்டுப் போகுது… ரசிகர்களை மச்சான்கள் என்கிறார். அதை கேட்டு எல்லோரும் கை தட்டி விசில் அடிக்கிறீர்கள். பொதுமேடையில் அவர் இது போல் பேசி இருக்கிறார். இது சரிதானா? நம்ம வீட்டு பொண்ணுங்க இதுபோல் மேடையில் நின்னு கிஸ் கொடுத்தாலோ மச்சான்கள் என்றாலோ ரசிப்போமா… மக்கள் மனசு மாறிப் போச்சு,” என்றார் கடுப்புடன்.

அப்படி என்ன தப்பா பேசிட்டேன்?

இது குறித்து நமீதாவிடம் கேட்டபோது, “நான் அப்படியொன்றும் தவறாகப் பேசிவிடவில்லையே. எப்போதும் போல மச்சான்ஸ் என்று தானே அழைத்தேன். ஒவ்வொரு பிரபலமும் மக்களை ஒவ்வொரு விதமாக அழைப்பதில்லையா… ரசிகர்கள் மீது நான் வைத்துள்ள அன்பைக் காட்டவே அப்படி அழைக்கிறேன். இது பல வருடங்களாக நான் செய்து வருவது தான். இதை சேரன் புரிந்து கொள்ளட்டும். எதற்கெடுத்தாலும் குறை சொல்லிக் கொண்டிருக்கக் கூடாது!,” என்றார்.

 

சென்னையில் நாளை திரையுலகினர் உண்ணாவிரதம்!


ஜன் லோக்பால் ஊழல் ஒழிப்பு மசோதாவை நிறைவேற்றக்கோரி தமிழ் திரையுலகினர் நாளை உண்ணாவிரதம் மேற்கொள்ளப் போவதாக அறிவித்துள்ளனர்.

தாங்கள் தயாரித்துள்ள ஜன் லோக்பால் மசோதாவை எந்த மாறுதலும் இல்லாமல் அப்படியே அரசு ஏற்க வேண்டும் என்று கோரி அன்னா ஹஸாரே டெல்லியில் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார்.

அவரை ஆதரித்து ஆங்காங்கே சாலைகளில் திடீர் திடீரென ஊர்வலம் போவதும் உண்ணாவிரதம் இருப்பதும் நடக்கிறது. இது பொதுமக்களைக் கடுமையாக பாதிக்க ஆரம்பித்துள்ளது.

இந்த நிலையில் சினிமாக்காரர்களும் தங்கள் பங்குக்கு ஹஸாரேவை ஆதரித்து ஊர்வலம் உண்ணாவிரதம் என பரபரப்பு கிளப்பி வருகின்றனர்.

பாலிவுட், தெலுங்கு மற்றும் கன்னட திரையுலகினர் இதுவரை ஊர்வலம் நடத்தி முடித்துவிட்டனர். இப்போது தமிழ் திரையுலகினர் தங்கள் பங்குக்கு உண்ணாவிரதம் நடத்த முடிவு செய்துள்ளனர்.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் கவுன்சில் சார்பில் இந்த உண்ணாவிரதம் நடக்கிறது.

பிலிம்சேம்பர் வளாகத்தில் நடைபெற உள்ள இந்த போராட்டத்தில் கவுன்சில் தலைவர் எஸ்ஏ சந்திரசேகரன், நடிகர் சங்க பொதுச் செயலாளர் ராதாரவி, திரையரங்கு உரிமையாளர்கள் சங்க தலைவர் அபிராமி ராம நாதன் இயக்குனர் சேரன், திரைப்பட தொழிலாளர் சங்க செயலாளர் சிவா, விநியோகஸ்தர் சங்க தலைவர் கலைப்புலி சேகரன் போன்றோர் தலைமையில் பெரும் திரளான திரையுலகினர் பங்கேற்கின்றனர்.

இந்தத் தகவலை தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் நேற்று தெரிவித்தார்.

 

மீண்டும் நடிப்பில் தீவிரம்.... விஷாலுக்கு ஜோடியானார் த்ரிஷா!


அம்மா மாப்பிள்ளை பார்த்துவிட்டார், இதோ விரைவில் திருமணம் என்றெல்லாம் செய்திகளில் அடிபட்ட த்ரிஷா மீண்டும் சினிமாவில் பிஸியாகிவிட்டார்.

தமிழில் மீண்டும் புதிய படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். இதில் விஷால் ஜோடியாக நடிக்கிறார் த்ரிஷா.

இந்தப் படத்தை திரு இயக்குகிறார்.

இந்தப் படம் முடிவானபோதே, ஹீரோயினாக த்ரிஷா நடித்தால் சிறப்பாக இருக்கும் என்று விஷால் பிரியப்பட்டார். அவரை அணுகி கால்ஷீட் கேட்டனர். கதை முழுக்க கேட்ட திரிஷாவுக்கும் பிடித்து போனது. விஷால் ஜோடியாக நடிக்க சம்மதம் தெரிவித்து உள்ளார்.

ஏற்கனவே ‘சத்யம்’ படத்தில் விஷால் ஜோடியாக நடிக்க முதலில் த்ரிஷாவிடம்தான் கேட்டனர். அவர் மறுத்ததால் நயன்தாரா நடித்தார். ‘தோரணை’, ‘தீராத விளையாட்டுப் பிள்ளை’ தற்போது விஷால் நடித்து வரும் ‘வெடி’ என எல்லா படங்களுக்கும் த்ரிஷாவைதான் நாயகியாக நடிக்கும்படி கேட்டனர்.

ஆனால் விஷாலுடன் ஜோடி சேர அவர் விரும்பாததால் தவிர்த்து வந்தார். தற்போது மனமாற்றம் ஏற்பட்டு புதிய படத்தில் ஜோடி சேர சம்மதம் தெரிவித்து உள்ளார். இந்த வாரம் இறுதியில் இப்படத்தில் நடிப்பதற்கான ஒப்பந்தத்தில் திரிஷா கையெழுத்திடுகிறார்.

இதன் மூலம் தனது கல்யாணப் பேச்சுக்களுக்கு த்ரிஷா தற்காலிகமாக முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

 

'ரஜினிகாந்த்'துக்கு வயசு 36!


சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்க வந்து கடந்த ஆகஸ்ட் 18-ம் தேதியுடன் 36 வருடங்கள் ஆகின்றன. இந்த மறக்க முடியாத நாளில் அவர் என்ன செய்தார் தெரியுமா… தனது அபூர்வ ராகங்கள் படத்தை டிவியில் குடும்பத்துடன் பார்த்து ரசித்தார்.

படம் நடிக்கத் தொடங்கியதிலிருந்து, படம் ரிலீஸாகி அதை நண்பர்களுடன் பார்த்தது வரை நடந்த நிகழ்ச்சிகளை குடும்பத்தினருடன் பகிர்ந்து கொண்டாராம்.

கர்நாடகாவில் பஸ் கண்டக்டராக வாழ்க்கையை தொடங்கிய சிவாஜி ராவ் கெய்க்வாட், நண்பர்கள் உதவியுடன் பிலிம் இன்ஸ்டிடியூட்டில் நடிப்புப் பயிற்சி பெற்றார்.

படிக்கும்போதே, கேபி எனப் புகழப்பட்ட கே பாலச்சந்தரின் அறிமுகம் கிடைத்தது அவருக்கு. படித்து முடித்து சினிமாவில் வாய்ப்பு தேடிக் கொண்டிருந்தபோது, ரஜினியை அழைத்தார் பாலச்சந்தர்.

சினிமாவில் ஏற்கெனவே நடிகர் திலகம் சிவாஜி கோலோச்சிக் கொண்டிருந்த நேரம், சிவாஜி ராவ் எனும் பெயரில் நடிக்க வந்தால், எடுபடாமல் போகும் என்பதால், ரசிகர்களை கவரும் விதத்தில் அவரது பெயரை மாற்ற விரும்பினார் பாலசந்தர்.

தீவிர ஆலோசனைக்கு பிறகு ஒரு ஹோலி பண்டிகை அன்று சிவாஜி ராவ், ‘ரஜினிகாந்த்’ ஆனார். ரஜினி நடித்த ‘அபூர்வ ராகங்கள்’ திரைப்படம் 1975ம் ஆண்டு ஆகஸ்ட் 18ம் தேதி வெளியானது. அதிலிருந்து ‘ரஜினிகாந்த்’ என்ற பெயரில் புகழடையத் தொடங்கினார் ரஜினி.

நேற்றுடன் அந்த படம், வெளியாகி 36 ஆண்டுகள் நிறைவு பெற்றுவிட்டது.

தற்போது உடல்நிலை தேறி, போயஸ்கார்டனிலும் மகள் ஐஸ்வர்யாவின் வீனஸ் காலனி வீட்டிலும் ஓய்விலிருக்கும் ரஜினி, இந்த நாளை மறக்காமல் தனது குடும்பத்தினருடன் மிக எளிமையாகக் கொண்டாடினார். கொண்டாட்டமென்றால், எதுவும் விசேஷமாக இல்லை.

அபூர்வராகங்கள் படம் பார்த்தபடி, தனது பழைய நினைவுகளை மகள்கள், மனைவி, மருமகன்கள் மற்றும் நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டாராம்.

பொன்விழாவும் காண வாழ்த்துக்கள் ரஜினி சார்!

 

தமிழ் சினிமாக்களுக்கு இந்தி, தெலுங்கில் கிடைக்கும் அசத்தல் வரவேற்பு


ஒரு காலத்தில் தெலுங்கு, இந்திப் படங்களை தமிழில் ரீமேக் செய்ய பெரும் போட்டியே நடக்கும்.

இன்று நிலைமை தலைகீழ். தமிழில் வெளியாகும் படத்தை இந்தியிலும் தெலுங்கிலும் துடிக்கிறார்கள். பல கோடிகள் கொடுத்து அவற்றின் இந்தி, தெலுங்கு உரிமையை வாங்கி செல்கின்றனர்.

இதுவரை வெளியான தமிழ்ப் படங்களிலேயே டப்பிங்கில் அதிக வசூல் பார்த்த படம் சூப்பர் ஸ்டாரின் எந்திரன்தான். ஆந்திராவிலும் பாலிவுட்டிலும் ஒரிஜினல் படங்களையே நடுங்க வைக்கும் அளவு வசூல் குவிந்தது. இதனால் இந்தப் படத்தை ரீமேக் செய்ய வேண்டிய அவசியமில்லாமல் போய்விட்டது.

தற்போது காதலன், காவலன், காக்க காக்க, விண்ணைத்தாண்டி வருவாயா, சந்தோஷ் சுப்ரமணியம், சுப்ரமணியபுரம், காதல் ஆகிய படங்கள் இந்தியில் தயாராகி வருகின்றன. இவை அனைத்தும் ஏற்கெனவே தெலுங்கில் வெளியாகிவிட்டவை என்பது குறிப்பிடத்தக்கது. இவற்றில் சந்தோஷ் சுப்பிரமணியம் தெலுங்கில் வெளியாகி தமிழுக்கு வந்த படம். ஆனாலும் இந்த தமிழ்ப் பதிப்புக்கு கிராக்கி அதிகம்!

கோ படம் சமீபத்தில் ரிலீசானது. ஜீவா, கார்த்திகா நடித்த இந்த படம் தற்போது வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கிறது. இப்படமும் இந்தியில் ரீமேக் ஆகிறது.

இந்தப் படங்கள் அனைத்தும் இந்த ஆண்டு இறுதிக்குள் ரிலீசுக்கு வந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவைகள் தவிர காஞ்சனா, நான் மகான் அல்ல, சாமி, சிறுத்தை போன்ற படங்களும் இந்தியில் ரீமேக் ஆகின்றன.

காஞ்சனாவை ரீமேக் செய்ய சல்மான்கான் மற்றும் அமீர்கான் இடையே பெரும் போட்டியே ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

சூப்பர் ஸ்டாருடன் ஒரு இமாலயப் பயணம்!


சூப்பர் ஸ்டாருடன் ஒரு இமாலயப் பயணம் எனும் பெயரில் ஒரு புதிய நிகழ்ச்சியை ஒளிபரப்புகிறது விஜய் டிவி, நாளை காலை 11 மணிக்கு.

இமயமலை மீதான ரஜினியின் காதல் உலகமறிந்தது. இமயமலையையே தனது பூஜயறையாக கருதுபவர் ரஜினி.

எந்திரன் படத்தின் மெகா வெற்றிக்குப் பிறகு தனது நண்பர்களுடன் பாபாஜி குகைக் கோயிலுக்கு ஆன்மீகப் பயணம் போய் வந்தார் ரஜினி.

இந்தப் பயணத்தின் வீடியோ வடிவம் விஜய் டிவியில் நாளை காலை 11 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

சூப்பர் ஸ்டாருடன் ஒரு இமாலயப் பயணம் என்பதுதான் நிகழ்ச்சியின் தலைப்பு. இமயமலையின் அழகிய இயற்கைக் காட்சிகள், பாபாஜி குகைக் கோயில் அமைந்துள்ள புனிதமான இடம் மற்றும் அந்த சிலிர்க்க வைக்கும் அனுபவத்தை இந்த வீடியோவில் காணலாம். இது முழுக்க முழுக்க ரஜினி இடம்பெறும் வீடியோ என்பதுதான் ஸ்பெஷல்.

பாபாஜி குகைக் கோயிலுக்கு சென்று வந்த அனுபவங்களை ரஜினியின் நண்பர்கள் ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்வதையும் இந்த வீடியோவில் காணலாம்.

 

பேரறிவாளன், சாந்தன், முருகனை விடுவிக்க கோரி 1000 பேர் ஊர்வலம்; சத்யராஜ் தொடங்கி வைத்தார்!


சென்னை: ராஜீவ் கொலை வழக்கில் தூக்கு தண்டனைக்காக காத்திருக்கும் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவரையும் விடுவிக்கக் கோரி சென்னையிலிருந்து வேலூர் வரை 500 இருசக்கர வாகனங்களில் 1000 பேர் ஊர்வலம் சென்றனர்.

இதனை நடிகர் சத்யராஜ், இயக்குநர் மணிவண்ணன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

சென்னையில் இருந்து வேலூர் செல்லும் வழி நெடுக பல கிராமங்களில் பேரறிவாளன், சாந்தன், முருகன் தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று விழிப்புணர்வு பிரச்சாரங்களை மேற்கொண்டனர். மக்கள் இதற்கு பெரும் ஆதரவை அளித்தனர்.

இதுவரை இப்படி ஒரு பெரு முழக்கக் கூட்டத்தை வேலூர் சிறைச்சாலை காவலர்கள் பார்த்ததில்லை எனும் அளவுக்கு உணர்ச்சிப்பூர்வமான ஊர்வலம் இது.

சிறைச்சாலை வந்தடைந்ததும் ஓங்கி முழக்கமிட தொடங்கிய தமிழுணர்வாளர் டையை கண்டவுடன் ஒரு கணம் அதிர்ச்சியுற்றனர் சிறைக் காவலர்கள்.

தாரை தப்பட்டைகளை முழக்கி பேரறிவாளன், சாந்தன், முருகனை விடுவிக்க கோரி மீண்டும் மீண்டும் முழக்கங்களை எழுப்பினர்.

 

மார்க்கண்டேயன் 'கிஸ்'-தப்பே இல்லை என்கிறார் நிவேதிதா!


மார்க்கண்டேயன் படத்தில் ஹீரோ சபரீஷுக்கு உதட்டு முத்தம் கொடுத்து நடித்ததை தப்பாக நினைக்கவில்லை. கதைக்குத் தேவைப்பட்டதால் கொடுத்தேன். கதையில் அப்படி காட்சி வந்தால் மறுக்க முடியாதே என்று கூறியுள்ளார் நிவேதிதா.

ஸ்டண்ட் மாஸ்டரும், வில்லன் நடிகருமான பெப்சி விஜயனின் மகன் சபரீஷ். இவர் மார்க்கண்டேயன் படம் மூலமாக ஹீரோ அவதாரம் எடுத்துள்ளார். தனது மகனை தானே இயக்கி, தயாரித்து ஹீரோவாக அறிமுகப்படுத்தியுள்ளார் விஜயன்.

இப்படத்தி்ன் நாயகி நிவேதிதா. படத்தில் இவர் ஹீரோ சபரீஷுடன் நெருக்கமான முத்தக் காட்சியில் நடித்துள்ளார். இதுகுறித்து கேட்டபோது, இதைப் போய் ஏன் பெரிதாக பேசுகிறார்கள் என்று தெரியவில்லை. அந்தப் படத்தில், அந்தக் கதையில், அந்தக் காட்சி அவசியம் என்று ஸ்கிரிப்ட் கூறியதால் அதில் நடிக்க நான் ஒத்துக் கொண்டேன்.

இந்தக் காட்சியில் நான் துணிச்சலுடன் நடித்ததை அனைவருமே பாராட்டினர். மேலும் அந்தக் காட்சி ஆபாசமாக எல்லாம் வரவில்லை. அழகாகத்தான் வந்திருக்கிறது.

கதையில் அந்தக் காட்சி முக்கியமானது என்பதால் நானும் நடிக்கத் தயங்கவில்லை. இந்தக் காட்சி குறித்து இயக்குநர் விஜயன் என்னிடம் முன்கூட்டியே கூறியிருந்தார். மேலும் அக்காட்சியை மிகவும் நுட்பமாகவும், அழகாகவும் படமாக்கியிருந்தார் என்றார் நிவேதிதா.

மார்க்கண்டேயன் திரைக்கு வந்து சுமாராக ஓடிக் கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

ஹஸாரேவுக்கு லதா மங்கேஷ்கர், தெலுங்கு நடிகர்கள் ஆதரவு!


அன்னா ஹஸாரேவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் தெரிவித்துள்ளார்.

பாடகி லதா மங்கேஷ்கர் இன்று காந்திவாதி அன்னா ஹசாரேவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், அவர், எனக்கு அரசியல் பற்றி எதுவும் தெரியாது. ஆனால் ஊழலை நமது நாட்டில் இருந்து ஒழிக்க வேண்டும் என்பதை உணர்கிறேன்.

எனவே உங்களுக்கு ஆதரவாக உள்ளேன் என்று கூறியுள்ளார்.

இதேபோல, ஹைதராபாதில் தெலுங்கு நடிகர் நடிகைகள் ஹஸாரேவுக்கு ஆதரவு தெரிவித்து உண்ணாவிரதமிருந்தனர்.

அனைவரும் ஊர்வலமாக வந்து உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டார்கள். நடிகர் சங்கத்தலைவர் முரளிமோகன் தலைமை வகித்தார். நடிகர்கள் ராஜசேகர், ஜெகபதிபாபு, விஜயசங்கர், நடிகை ஜீவிதா, சஞ்சனா, ஹேமா வந்தனா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

இயக்குனர்கள், தயாரிப்பாளர்களும் கலந்து கொண்டார்கள். ஆனால் முன்னணி நடிகர்கள் நாகார்ஜூனா, மோகன் பாபு போன்ற பெரிய நடிகர்கள் யாரும் வரவில்லை.

பழைய நடிகர் நாகேஸ்வர ராவ் மாலையில் பழச்சாறு கொடுத்து உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார்.

 

டிராவல் செய்து கஷ்டப்படாமல் எடையைக் குறைக்கும் தபசி


உடற்பயிற்சி, டயட், யோகா என்று வியர்க்க விறுவிறுக்க சிரமப்பட்டு எல்லோரும் உடலைக் குறைத்துக் கொண்டிருக்கையில், இந்த கஷ்டமே இல்லாமல் எளிதில் எடைக் குறைக்கிறார் நடிகை தபசி. தபசிக்கு பயணம் செய்தாலே உடல் எடைக் குறைகிறதாம்.

தனுஷுடன் ஜோடி சேர்ந்த பஞ்சாபி குடி தபசி பண்ணு (வயசு 24). தற்போது ஜீவாவுடன் வந்தான் வென்றானில் நடிக்கிறார். நடிகைகள் கடுமையான உடற்பயிற்சி, டயட், யோகா எல்லாம் செய்து உடல் எடையைக் குறைக்கிறார்கள். ஆனால் தபசிக்கோ பயணம் செய்தாலே எடை குறைகிறதாம்.

வந்தான் வென்றானுக்காக தபசி எப்பொழுதும் பயணம் செய்து கொண்டே இருக்கிறார். கேரளா, மும்பை, புதுச்சேரி், கோவா என்று பயணிக்கும் தபசிக்கு எடை தானாக குறைகிறதாம். இதனால் அவர் குஷியாகியுள்ளார்.

வந்தான் வென்றான் குழுவோடு பணி புரிவது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இந்த படத்தில் ஸ்லிம்மான தபசியைப் பார்ப்பீர்கள் என்கிறார் அவர்.

வந்தான் வென்றானுக்கு தமன் என்பவர் இசையமைக்கிறார். நா. முத்துகுமார், கபிலன், யுகபாரதி மற்றும் வைரமுத்துவின் மகன் கார்க்கி ஆகியோர் பாடல்கள் எழுதியுள்ளனர். இந்த படத்தை கே.எஸ். ஸ்ரீனிவாசன் தயாரிக்க, ஆர். கண்ணன் இயக்குகிறார்.

 

நண்பனில் கரீனா மாதிரி நடிக்க மாட்டேன்: இலியானா


நண்பன் படத்தில் 3 இடியட்ஸில் நடித்த கரீனா கபூர் மாதிரி நடிக்க மாட்டேன் என்று இலியானா தெரிவித்துள்ளார்.

நடிகை இலியானா ஷங்கரின் நண்பன் படத்தில் நடித்து வருகிறார். இது இந்தியில் ஆமீர் கான், கரீனா கபூர் நடிப்பில் வெளியான 3 இடியட்ஸ் படத்தின் ரீமேக். தமிழில் கரீனாவின் கதாபாத்திரத்தில் இலியானா நடிக்கிறார்.

இந்த படம் குறித்து இலியானா கூறியதாவது,

நான் 3 இடியட்ஸ் படத்தை பல முறை பார்த்துள்ளேன். அதில் கரீனா கபூரின் நடிப்பு எனக்கு மிகவும் பிடிக்கும். ஆனால் நான் தமிழில் அவரை மாதிரி நடிக்க மாட்டேன். எனக்கே உரிய தனித்துவத்துடன் தான் நடிப்பேன் என்றார்.

அம்மணிக்கு டோலிவுட், கோலிவுட்டை விட பாலிவுட் தான் ரொம்ப இஷ்டம் என்று கூறப்படுகிறது.

 

ரூ 12 கோடி மில் அபகரிப்பு வழக்கில் சக்சேனாவுக்கு காவல் நீட்டிப்பு!


உடுமலை: ரூ 12 கோடி உடுமலை பேப்பர் மில்லை அபகரித்ததாக தொடரப்பட்ட வழக்கில் சன் பிக்சர்ஸ் ஹன்ஸ்ராஜ் சக்சேனா, அவரது உதவியாளர் அய்யப்பன் ஆகியோருக்கு வரும் ஆகஸ்ட் 30 வரை காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

உடுமலையைச் சேர்ந்தவர் சீனிவாசன். இவருக்குச் சொந்தமான ரூ. 12 கோடி மதிப்புள்ள பேப்பர் மில் அபகரிக்கப்பட்டது தொடர்பாக திருப்பூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்யப்பட்டது.

இது தொடர்பாக சென்னை சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன், சன் பிக்சர்ஸ் தலைமை நிர்வாகி சக்சேனா, அவரது உதவியாளர் அய்யப்பன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

சக்சேனா, அய்யப்பன் ஆகியோர் உடுமலை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை 19-ந் தேதி (நேற்று) வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது. அதன்படி இருவரும் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். காவல் முடிந்ததை தொடர்ந்து சக்சேனா, அய்யப்பன் இருவரும் நேற்று உடுமலை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இருவருக்கும் வருகிற 30-ந் தேதி வரை காவலை நீடித்து உடுமலை குற்றவியல் நடுவர் மன்ற நீதிபதி (பொறுப்பு) ஷர்மிளா உத்தரவிட்டார். அப்போது சக்சேனா, அய்யப்பன் சார்பில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு வருகிற 23-ந் தேதி விசாரணைக்கு வருகிறது. காவல் நீடிப்பு செய்யப்பட்ட சக்சேனாவும், அய்யப்பனும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோவை மத்திய சிறைக்கு அழைத்து வரப்பட்டனர். இன்று காலை புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

 

மதுரைக்கு வரும் விஜய்-வரவேற்புக்கு பிரமாண்ட ஏற்பாடுகள்!


மதுரைக்கு வரும் நடிகர் விஜய்க்கு வரலாறு காணாத வரவேற்பு தர ரசிகர்களும், விஜய்யின் மக்கள் இயக்கத்தினரும் தடபுடலாக ஏற்பாடுகள் செய்து வருகின்றனராம்.

150 கார்கள் பின் தொடர விஜய்யை விமான நிலையத்திலிருந்து விழா நடக்கும் இடத்திற்கு அழைத்து வரத் திட்டமிட்டுள்ளனராம்.

விஜய் நடித்துள்ள வேலாயுதம் படத்தின் ஆடியோ வெளியீடு பிரமாண்ட விழாவாக மதுரையில் ஆகஸ்ட் 28ம் தேதி நடைபெறுகிறது. விஜய் நடித்த படத்தின் ஆடியோ வெளியீடு சென்னையைத் தாண்டி வேறு ஒரு நகரில் நடைபெறுவது இதுவே முதல் முறை.

மேலும் காவலன் பட ரிலீஸின்போது மிகப் பெரிய சோதனைகளைச் சந்தித்து விட்டதால் வேலாயுதம் விழாவை மிகப் பெரிய விழாவாக்க வேண்டும் என்று விஜய் ரசிகர்கள் ஆர்வத்துடன் உள்ளனர்.

மதுரைக்கு வரும் விஜய்க்கு, விமான நிலையத்தில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கவுள்ளனராம். பின்னர் அங்கிருந்து 150 கார்கள் பின் தொடர விஜய்யை அழைத்துச்செல்கின்றனர். விழா மேடைக்கு விஜய்யை பிரமாண்ட பேரணி மூலம் அழைத்துச் செல்லவுள்ளனர்.

மேலும் நகர் முழுவதும் விஜய்யின் கட் அவுட்கள், வேலாயுதம் பட பேனர்கள் பெருமளவில் வைக்கப்படவுள்ளதாம். விழாவுக்கான ஏற்பாடுகளை படத் தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன் செய்து வருகின்ற போதிலும், ரசிகர்களும் பல்வேறு ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர்.

விழாவில் வேலாயுதம் படத்தில் இடம் பெற்றுள்ள பாடல்களைப் பாடியுள்ள பின்னணிப் பாடகர்கள் கலந்து கொண்டு நேரடியாக மேடையில் பாடல்களைப் பாடவுள்ளனராம். கலகலப்பான நடன நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

விஜய், நாயகிகள் ஜெனீலியா, ஹன்சிகா மோத்வானி, எஸ்.ஏ.சந்திரசேகர், ஆஸ்கர் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்துகொள்கின்றனர்.

நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு வெளியே கேசட்கள், சிடிக்கள் விற்பனைக்கு வைக்கப்படவுள்ளன. இதற்கான ஏற்பாடுகளை ஆடியோ உரிமையைப் பெற்றுள்ள சோனி மியூசிக் நிறுவனம் செய்துள்ளதாம்.

 

நண்பன் குழுவினருக்கு விஜய் விருந்து!


நண்பன் படக்குழுவைச் சேர்ந்த 250 பேருக்கு விருந்தளித்தார் படத்தின் ஹீரோ விஜய்.

இந்தியில் கலக்கிய ’3 இடியட்ஸ்’ படம் தமிழில் நண்பன் பெயரில் தயாராகிறது. விஜய், சத்யராஜ், ஜீவா, ஸ்ரீகாந்த், எஸ்ஜே சூர்யா, லாரன்ஸ் என பெரும் நட்சத்திரப் பட்டாளமே படத்தில் நடிக்கிறது. கதாநாயகியாக இலியானா நடித்துள்ளார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். எந்திரன் படத்துக்குப் பிறகு ஷங்கர் இயக்கும் படம் இது.

இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததையடுத்து இப்படத்தில் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் தொழிலாளர்கள் 250 பேருக்கு விஜய் நேற்று இரவு தனது சொந்த செலவில் விருந்தளித்தார். வடபழனியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இந்த விருந்து நிகழ்ச்சி நடந்தது. சைவம் மற்றும் அசைவ உணவுகள் விருந்தில் பரிமாறப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில் மிமிக்ரி உள்ளிட்ட பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் நடந்தன. ஆட்டம் பாட்டம் என கலகலப்பாக போனது அன்றைய மாலைப் பொழுது.

விருந்துக்கு வந்த எல்லோரிடமும் விஜய் சகஜமாக சிரித்து பேசினார். அவர்களுடன் போட்டோவும் எடுத்துக்கொண்டார். இந்த விருந்தில் விஜய்யுடன் நடித்த சத்யராஜ், ஜீவா, ஸ்ரீகாந்த் மற்றும் இயக்குனர் ஷங்கர், வெங்கட்பிரபு, பிரேம்ஜி ஆகியோரும் பங்கேற்றனர்.

 

டொரண்டோ சர்வதேச திரைப்பட விழாவுக்கு செல்லும் அழகர்சாமியின் குதிரை


36-வது டொரண்டோ சர்வதேச திரைப்பட விழாவுக்கு சுசீந்திரனின் அழகர்சாமியின் குதிரை செல்கிறது.

இளையராஜா இசையில், அப்புக்குட்டி, சரண்யா மோகன், யோகி தேவராஜ் ஆகியோர் நடிப்பில் உருவாகி வெளியான படம் அழகர்சாமியின் குதிரை. இதை இயக்கியவர் சுசீந்திரன். கடந்த மே மாதம் ரிலீஸ் ஆன அழகர்சாமியின் குதிரை வெளியாகும் முன்பே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. அதனால் நல்ல படம் என்ற பெயரை எடுக்க முடிந்ததே தவிர, வசூலை அள்ளிக் குவிக்க முடியவில்லை.

ஆனால் சுசீந்திரன் உழைப்பு வீண் போகவில்லை. ஏனென்றால் 36-வது டொரண்டோ சர்வதேச திரைப்பட விழாவுக்கு அழகர்சாமியின் குதிரை தேர்ந்தெடு்ககப்பட்டுள்ளது. இந்த திரைப்பட விழாவுக்கு தென்னிந்தியாவில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் ஒரே படம் அழகர்சாமியின் குதிரைதானாம்.

 

போதுமப்பா நியூமராலஜி: மீண்டும் பெயரை மாற்றிய ஈஷா கோபிகர்


பிரபல இந்தி நடிகை இஷா கோபிகர் தனது பெயரை நியூமராலஜிபடி ஈஷா கோபிகராக மாற்றினார். நியூமராலஜி மாற்றத்தால் எதுவும் நடக்காததால் தனது பெயரை மீண்டும் இஷா கோபிகர் என்றே மாற்றியுள்ளார்.

பிரபல பாலிவுட் நடிகை இஷா கோபிகர். அவ்வப்போது தமிழிலும் வந்து தலைகாட்டிவிட்டு போவார். நியூமராலஜிபடி பெயரை மாற்றினால் வெற்றி மேல் வெற்றி கிட்டும் என்று யாரோ சொல்ல தனது பெயரை ஈஷா என்று மாற்றினார்.

ஆனால் அப்படியும் ஒன்றும் நடக்காததால் தனது பெயரை மீண்டும் இஷா என்றே மாற்றியுள்ளார்.

இது குறித்து அவர் டைம்ஸ் ஆப் இந்தியாவுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது,

நான் எனது பெயரை மறுபடியும் இஷா கோபிகர் என்றே மாற்றியுள்ளேன். நியூமரலாஜி படி தான் ஈஷா என்று மாற்றினேன். போதுமப்பா நியூமராலஜி என்றார்.

தொழில் அதிபரை மணந்த இஷா கோபிகர் தற்போது ராம் கோபால் வர்மாவின் ஷப்ரி என்ற படம் மூலம் பாலிவுட்டில் மறுபிரவேசம் செய்கிறார். இந்த படம் வரும் 26-ம் தேதி வெளியாகிறது.

இஷா மட்டுமல்ல பல நடிகர், நடிகையர்கள் தங்கள் பெயரை நியூமராலஜி படி மாற்றுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இஷா கோபிகர் என்ற பெயர் ராசியாக இருக்க வாழ்த்துக்கள்!

 

கவுதம் மேனன் - ஜீவா இணையும் படம்: சமந்தா ஹீரோயின்!


ஜீவாவை வைத்து ஒரு புதிய படம் இயக்குகிறார் கவுதம் மேனன். இந்தப் படத்துக்கு நித்யா எனப் பெயரிட்டுள்ளார்.

இந்தப் படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக நடிக்கிறார் சமந்தா. பாணா காத்தாடி மூலம் அறிமுகமாகி, விண்ணைத் தாண்டி வருவாயாவில் கடைசி நேரத்தில் வரும் முக்கிய கேரக்டரில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர் சமந்தா. தமிழில் இன்னும் சரியான இடத்தைப் பிடிக்க முடியவில்லையே என தவிக்கும் சமந்தாவுக்கு மிகப் பெரிய வாய்ப்பாக இந்தப் படம் பார்க்கப்படுகிறது.

இந்தப் படம் வரும் 2012-ல் வெளியாகவிருக்கிறது. கோ படத்தைத் தயாரித்த ஆர்எஸ் இன்போடைன்மெண்ட் இந்தப் படத்தை தயாரிக்கிறது.

மனோஜ் பரமஹம்ஸா ஒளிப்பதிவு செய்ய, ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். ராணாவுக்கான பாடல்கள் அனைத்தையும் ரஹ்மான் முடித்துக் கொடுத்துவிட்டதால், இப்போது புதிய படங்களை தமிழில் ஒப்புக் கொள்ள ஆரம்பித்துள்ளார் ரஹ்மான். அப்படி ஒப்புக் கொண்ட முதல் படம் இதுதான்.

வரும் ஆகஸ்ட் 29-ம் தேதி சென்னையில் ‘நித்யா’வின் படப்பிடிப்பு நடக்கிறது.

 

'ஜட்ஜ்' ஆனார் நவ்யா நாயர்!


திருமணமாகி, குழந்தையும் பெற்று விட்ட நவ்யா நாயர் புதிய அவதாரம் எடுக்கிறார். டான்ஸ் நிகழ்ச்சி ஒன்றில் நடுவராக அவர் பணியாற்றப் போகிறார்.

திருமணத்திற்குப் பின்னர் நவ்யா நடிக்கவில்லை. இப்போது குழந்தையும் பெற்று தாயாகி விட்டார். இந்த நிலையில் சின்னத்திரைக்கு ஷிப்ட் ஆகியுள்ளார் நவ்யா. மன்ச் டான்ஸ் டான்ஸ் என்ற நடன நிகழ்ச்சியில் நடுவராக அவர் பணியாற்றவுள்ளார். இந்த நிகழ்ச்சியில் இன்னொரு நடுவராக நடிகரும், நடனக் கலைஞருமான அரவிந்த் பணியாற்றவுள்ளார். மலையாளத்து ஆசியாநெட் இந்த நிகழ்ச்சியை ஒளிபரப்பவுள்ளது.

இந்த நடன நிகழ்ச்சி சிறார்களுக்கானது. 10 பேர் இதில் போட்டியாளர்களாக பங்கேற்கின்றனர். வாரந்தோறும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 8 மணிக்கு இது ஒளிபரப்பாகும்.

இந்த நிகழ்ச்சியின் தொடக்க விழா சமீபத்தில் நடந்தது. நடிகர் குஞ்சாக்கோ போபன் மற்றும் நடிகை தன்யா மேரி வர்கீஸ் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.