கே பாலச்சந்தருக்கு ஆமீர்கான் இரங்கல்!

இயக்குநர் கே பாலச்சந்தர் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார் பாலிவுட் நடிகர் ஆமீர்கான்.

நேற்று முன்தினம் மரணமடைந்த பாலச்சந்தரின் உடல், நேற்று தகனம் செய்யப்பட்டது. அவர் மரணத்துக்கு ஆமீர்கான் விடுத்துள்ள இரங்கல் செய்தி:

கே பாலச்சந்தருக்கு ஆமீர்கான் இரங்கல்!

'கே.பாலச்சந்தர் அவர்களின் மறைவு தமிழ் சினிமாவுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்திய சினிமாவுக்கும் பேரிழப்பு. சினிமா துறைக்கு அவர் ஆற்றியுள்ள சேவை மகத்தானது. என்னிடம் அவர் காட்டிய பெருந்தன்மையும், அரவணைப்பும் என்றும் என் நினைவில் நீங்காமல் நிலைத்திருக்கும்.

மிகுந்த பணிவு கொண்ட பெரியவர் அவர். என்னுடைய 25 வருட சினிமா வாழ்வில் அவருடன் கலந்துரையாடிய மாலை பொழுதை என்றும் என்னால் மறக்க இயலாது. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு எனது இதயப்பூர்வமான இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்,' என்று குறிப்பிட்டுள்ளார்.

 

மலேசியாவில் "லிங்கா"வுக்கு முன் பப்பு வேகாத "பிகே"!

மும்பை: பாலிவுட் உலகின் புதிய வரவான "பிகே" திரைப்படம் உலக அளவிலான பாக்ஸ் ஆபிஸ் கலெக்‌ஷனில் 150 கோடியை நெருங்கிச் சென்று கொண்டிருக்கும் நிலையில் ஒரே ஒரு பகுதியில் மட்டும் "லிங்கா" திரைப்படத்துடன் போட்டி போட இயலாமல் தவித்து வருகின்றது. அந்த நாடு "மலேசியா".

மலேசியாவில் முதல் வாரத்தில் இப்படம் வெறும் 8 லட்சத்தினை மட்டுமே குவித்துள்ளது. பல்வேறு தரப்பினரும் மலேசியாவில் "பிகே" திரைப்படம் எவ்வளவு வசூலைக் குவிக்கிறது என்ற எதிர்பார்ப்புடன் இருந்து ஏமாற்றத்தில் ஆழ்ந்து போயுள்ளனர்.

மலேசியாவில்

ஆனால், பிகேவால் லிங்கா திரைப்படத்தினை மீறி திரையில் ஜொலிக்க முடியவில்லை. முதல்வாரத்திலேயே லிங்கா திரைப்படம் 2.26 கோடி வசூலைக் குவித்தது.

மலேசியாவில் அதிக அளவில் இருக்கும் தமிழ் மக்களால் தமிழ்ப்படங்கள் அங்கு கொடிகட்டி பறக்கின்றன. ஆனால், பாலிவுட் படங்களின் ஓட்டம் என்னவோ கொஞ்சம் கம்மிதான்.

மலேசியாவினைத் தவிர மற்ற எல்லா இடங்களிலும் நல்ல வசூலைத்தான் குவித்துள்ளது. 600 திரைகளில் ரிலீசான அமீர்கானின் பிகே திரைப்படம் எல்லா தரப்பினராலும் பெரிதும் ரசிக்கப்பட்டுள்ளது.

உலக அளவில் முதல் வாரத்திலேயே 47.6 கோடி ரூபாய் வசூலினைக் குவித்துள்ளது பிகே. வருகின்ற வாரங்களில் மற்ற எல்லா வசூல் சாதனைகளையும் இப்படம் முறியடிக்கும் எனத் தெரிகின்றது.

ராஜூ ஹிரானியால் தயாரித்து இயக்கப்பட்டுள்ள இப்படத்தில், அமீர்கான் மற்றும் அனுஷ்கா சர்மா கதை நாயகன்,நாயகியாக நடித்துள்ளனர்.

 

2014... அதிக எண்ணிக்கையில் படங்கள் தயாரித்து சாதனைப் படைத்த கோலிவுட்!

இந்த வாரம் கிறிஸ்துமஸுக்கு வெளியான 4 படங்களையும் சேர்த்து மொத்தம் 212 படங்கள் இந்த ஆண்டு வெளியாகியுள்ளன. தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை இது ஒரு சாதனை என்றுதான் சொல்லவேண்டும். இவை அனைத்துமே நேரடித் தமிழ் திரைப்படங்கள்.

டப்பிங் படங்களும் கணிசமாக வந்தன. அந்தக் கணக்கு தனி.

இந்த 220 படங்களில் எத்தனைப் படங்கள் மெகா ஹிட்.. எத்தனைப் படங்கள் குறைந்த பட்ச லாபத்தோடு தப்பித்தன என்று பார்த்தால், பெருமைப்பட்டுக்கொள்ள பெரிதாக இல்லை என்பதுதான் உண்மை.

அதே நேரம், கடந்த ஆண்டுகளோடு ஒப்பிட்டால் இந்த ஆண்டு சற்று அதிக எண்ணிக்கையிலான படங்கள் வெற்றி பெற்றுள்ளது ஆறுதலான விஷயம்.

2014... அதிக எண்ணிக்கையில் படங்கள் தயாரித்து சாதனைப் படைத்த கோலிவுட்!

இந்த ஆண்டில் முதல் பெரிய வெற்றியைப் பெற்ற படம் என்றால் அது கோலி சோடாதான்.

அஜீத் நடித்த வீரம், விஜய் நடித்த ஜில்லா ஆகிய படங்களுடன் வெளியானது நடுத்தர பட்ஜெட் படமான கோலி சோடா. ஆனால் வீரமும் ஜில்லாவும் பெறாத வெற்றியை இந்தப் படம் பெற்று, 2014-ம் ஆண்டின் முதல் வெற்றிப் படம் என்ற பெருமையைப் பெற்றது.

இந்த ஆண்டில் வெளியான படங்களில் 25 படங்களுக்கு மேல் வெற்றி பெற்றன மற்றும் தப்பித்துவிட்டன எனலாம்.

2014... அதிக எண்ணிக்கையில் படங்கள் தயாரித்து சாதனைப் படைத்த கோலிவுட்!

தெகிடி, நான் சிகப்பு மனிதன், வல்லினம், குக்கூ, மான் கராத்தே, யாமிருக்க பயமே, என்னமோ நடக்குது, மஞ்சப்பை, முண்டாசுப்பட்டி, அரிமா நம்பி, சதுரங்க வேட்டை, வேலையில்லா பட்டதாரி, ஜிகிர்தண்டா, கதை திரைக்கதை வசனம் இயக்கம், சலீம், அரண்மனை, ஜீவா, மெட்ராஸ், கத்தி, பூஜை, திருடன் போலீஸ், நாய்கள் ஜாக்கிரதை, லிங்கா, பிசாசு, வெள்ளக்கார துரை போன்ற படங்களை இந்தப் பட்டியலில் சேர்க்கலாம்.

2014... அதிக எண்ணிக்கையில் படங்கள் தயாரித்து சாதனைப் படைத்த கோலிவுட்!

இந்திய சினிமாவின் முதல் 3டி மோஷன் கேப்சரிங் தொழில்நுட்பப் படமான ரஜினியின் கோச்சடையான் மிகப் பெரிய ஆரம்ப வசூலை தமிழகத்தில் பெற்றது. முதல் வாரத்தில் நூறு கோடி ரூபாய்க்கும் மேல் அந்தப் படம் ஈட்டினாலும், தெலுங்கு, இந்தி போன்ற பிற மொழிகளில் படம் தோல்வியைத் தழுவியது. அந்தப் படத்தால் தங்களுக்கு நஷ்டம் என்பதை ரஜினியும் மேடையிலேயே அறிவித்துவிட்டார்.

மற்ற ஆண்டுகளைக் காட்டிலும் இந்த ஆண்டு வெளியான படங்களும் அதிகம், வெற்றி பெற்ற படங்களின் எண்ணிக்கையும் அதிகம்.

ஒரு வாரத்துக்கு சராசரியாக நான்கு படங்களுக்கும் மேல் வெளியானதால் வெளியிட போதிய அரங்குகள் கிடைக்காமல் பட அதிபர்களும், பார்க்க முடியாமல் ரசிகர்களும் கொஞ்சம் திண்டாடித்தான் போனார்கள்.

சரியாகத் திட்டமிட்டு படங்களை வெளியிட்டால் 2015-ல் இந்த வெற்றியின் விகிதாச்சாரம் அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது.

 

கிறிஸ்துமஸ் படங்கள் குவிந்தாலும் 'கிங்காக' நிற்கும் லிங்கா!

கிறிஸ்துமஸுக்கு புதிய படங்கள் வெளியானாலும், பல அரங்குகளில் நிலையாக ஓடிக் கொண்டிருக்கிறது ரஜினியின் லிங்கா.

தமிழகத்தில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் லிங்கா இன்னும் நல்ல கூட்டத்துடன் ஓடிக் கொண்டிருப்பது படத்தை வாங்கியவர்களுக்கு மகிழ்ச்சியளித்துள்ளது.

கடந்த டிசம்பர் 12-ம் தேதி ரஜினியின் பிறந்த நாளையொட்டி வெளியானது லிங்கா படம். இதுவரை இந்திய சினிமாவில் பார்த்திராத அளவுக்கு பெரிய ஆரம்ப வசூல் கிடைத்தது தமிழ், தெலுங்கில் மட்டும் வெளியான லிங்காவுக்கு.

கிறிஸ்துமஸ் படங்கள் குவிந்தாலும் 'கிங்காக' நிற்கும் லிங்கா!

முதல் மூன்று தினங்களில் ரூ 104 கோடியை இந்தப் படம் குவித்தது. இந்தியில் வெளியாகும் படங்களுக்கு இந்த வசூல் சாத்தியம் என்ற நிலையில், மாநில மொழியில் வெளியான லிங்கா மூன்றே நாட்களில் நூறு கோடி க்ளப்பில் சேர்ந்தது. அடுத்து வந்த ஆமீர்கானின் பிகேவால் கூட இந்த சாதனையை முறியடிக்க முடியவில்லை.

இந்த நிலையில் தமிழகத்தில் சில பகுதிகளில் லிங்காவுக்கு சரியான கூட்டமில்லை, நஷ்டம் என்றெல்லாம் சிலர் புகார் கிளப்பி வந்தனர். அரையாண்டு தேர்வுகள் முடிந்து கிறிஸ்துமஸ் விடுமுறை தொடங்கியதும் கூட்டம் வரும் என்று அவர்களுக்கு பதில் அளித்தனர் தயாரிப்பாளர்கள் தரப்பில்.

கிறிஸ்துமஸ் விடுமுறையில் புதிய படங்கள் வருவது படத்தை பாதிக்கும் என்று இன்னொரு தரப்பினர் கூறிவந்தனர்.

ஆனால் அனைவரின் கணக்கையும் கணிப்புகளையும் பொய்யாக்கும் விதத்தில் லிங்கா படம் வெளியிட்ட திரையரங்கள் பலவற்றில் ஓடிக் கொண்டுள்ளது. காட்சிகளின் எண்ணிக்கை மட்டும் குறைக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து இயக்குநர் கே எஸ் ரவிக்குமார் கூறுகையில், "லிங்கா படம் 720 அரங்குகளில் வெளியானது. எங்கு பார்த்தாலும் அந்தப் படம்தான் கடந்த இரு வாரங்களாக ஓடிக் கொண்டிருந்தது. என்னைக் கேட்டால் முதல் வாரம் முடிந்ததுமே கொஞ்சம் அரங்குகளைக் குறைத்திருக்க வேண்டும். அப்போதுதான் படம் ஹவுஸ்புல்லாகவே தொடரும்.

ஆனால் இந்த வாரம் புதிய படங்கள் நான்கைந்து வந்துள்ளன. இவற்றைத் திரையிடுவதற்காக சில காட்சிகளை, அரங்குகளைக் குறைத்திருக்கிறார்கள். இது இயல்பான விஷயம்தான். இப்போது இன்னும் ஹவுஸ்புல் காட்சிகளுடன் லிங்கா ஓடுவதாக ரிப்போர்ட்ஸ் வருகிறது," என்றார்.

தமிழகத்தில் சென்னையில் லிங்கா இன்னும் பெருமளவு அரங்குகளில் மூன்றாவது வாரமாக ஓடிக் கொண்டுள்ளது. சத்யம், ஐநாக்ஸ் உள்ளிட்ட மால்களில் இன்றைக்கும் இந்தப் படத்துக்கு டிக்கெட் கிடைக்கவில்லை.

கோவை, திருச்சி, மதுரை போன்ற நகரங்களில் நல்ல வசதியான மால்களில் படத்துக்கு நல்ல கூட்டம். விடுமுறை நாட்கள் என்பதால் மற்ற அரங்குகளிலும் 90 சதவீத பார்வையாளர்களுடன் லிங்கா வெற்றி நடை போடுவதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

 

பாலச்சந்தர் படங்களை ஆவணப்படுத்த ரஜினி, கமல் முயற்சிக்க வேண்டும் - சிவகுமார்

கே பாலச்சந்தரின் படைப்புகளை ஆவணப்படுத்த ரஜினி, கமல் போன்றவர்கள் முயற்சிக்க வேண்டும் என்று நடிகர் சிவகுமார் கூறினார்.

மறைந்த பாலச்சந்தர் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பிறகு நடிகர் சிவகுமார் கூறியதாவது:

தமிழ் சினிமா உலகில் எம்.ஜி.ஆரும், சிவாஜியும் நடிப்பில் இமயமாக திகழ்ந்ததுபோல இயக்குநர் பாலச்சந்தர் இயக்குனர் இமயமாக திகழ்ந்தார். திரைஉலகில் பல்வேறு சாதனைகளை அவர் செய்துள்ளார்.

பாலச்சந்தர் படங்களை ஆவணப்படுத்த ரஜினி, கமல் முயற்சிக்க வேண்டும் - சிவகுமார்

ரஜினி, கமல் மட்டுமின்றி 60- க்கும் மேற்பட்ட நடிகர், நடிகைகளை அறிமுகப்படுத்திய பெருமை அவரையே சாரும். நடிகர் விவேக், பிரகாஷ் ராஜ், சரிதா, ஸ்ரீபிரியா ஆகியோருக்கு வாழ்க்கைக் கொடுத்தவர் பாலச்சந்தர்.

பாலச்சந்தர் பெரிய கோடீஸ்வரர் அல்ல. சாதாரண குடும்பத்தில் இருந்து வந்தவர். 12 வயதிலேயே நாடகங்களை நடத்தி காட்டி பரிசுகளை பெற்றவர். எந்த ஒரு இயக்குனரிடமும் உதவியாளராக பணியாற்றாமல் தனது திறமையை மட்டுமே நம்பி திரை உலகில் சாதித்து காட்டியவர்.

100 - க்கும் மேற்பட்ட படங்களை இயக்கி இருக்கும் பாலச்சந்தர் ‘சிந்து பைரவி' உள்ளிட்ட 6 படங்களை என்னை வைத்து இயக்கி இருக்கிறார். தான் இயக்கியதில் பிடித்த பல படங்களை அவர் பட்டியலிட்டுள்ளார். அதில் நான் நடித்த படங்களும் இடம் பிடித்துள்ளது. அது எனக்கு பெருமையாக உள்ளது.

அவர் இயக்கிய ‘அரங்கேற்றம்' படம் தமிழகம் முழுவதும் பிராமணர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பை சம்பாதித்தது. எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் தான் சொல்லவேண்டிய கருத்துக்களை துணிச்சலாக சொல்லக் கூடியவர் அவர்.

ஆணாதிக்கம் மிகுந்த இந்த சமூகத்தில் பெண்களின் பெருமையை போற்றிய ‘அவள் ஒரு தொடர் கதை', ‘மனதில் உறுதி வேண்டும்' உள்ளிட்ட படங்களையும் இயக்கி இருக்கிறார்.

எதிர்கால சந்ததியினரும் அவர் இயக்கியுள்ள படங்களை தமிழ் திரை உலகினர் ஆவணப்படுத்த வேண்டும். இதற்கான முயற்சிகளையும், நடவடிக்கைகளையும் ரஜினியும், கமலும் மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

 

தள்ளிப் போனது ஐ.. ஜனவரி 14-ம் தேதி வெளியாகிறது!

முன்பு அறிவிக்கப்பட்ட ஜனவரி 9-ம் தேதிக்கு பதில், பொங்கல் தினமான 14-ம் தேதி வெளியாகிறது ஷங்கரின் ஐ படம்.

விக்ரம் - எமி ஜாக்ஸன் நடிப்பில், ஷங்கர் உருவாக்கியுள்ள பிரமாண்ட படமான ஐ வெளியீடு பலமுறை தள்ளி வைக்கப்பட்டுவிட்டது. ஒரு வழியாக பொங்கலுக்கு முன் ஜனவரி 9-ம் தேதி படம் வெளியாகிவிடும் என அறிவித்தனர்.

தள்ளிப் போனது ஐ.. ஜனவரி 14-ம் தேதி வெளியாகிறது!   | எமி ஜாக்ஸன்   

திரையரங்குகளும் அறிவிக்கப்பட்ட நிலையில், படத்தின் வெளியீட்டுத் தேதியை மீண்டும் மாற்றியுள்ளார் தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரன்.

அதன்படி ஜனவரி 9-ம் தேதிக்கு பதில், ஜனவரி 14-ம் தேதி படம் வெளியாகிறது.

இதே தேதியில் அஜீத்தின் என்னை அறிந்தால், விஷாலின் ஆம்பள, சிவகார்த்திகேயனின் காக்கிச் சட்டை படங்களும் வெளியாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.

 

புத்தாண்டின் அதிகாலையில் அஜீத்தின் என்னை அறிந்தால் இசை வெளியீடு

சென்னை: அஜீத்தின் என்னை அறிந்தால் படத்தின் இசை வரும் புத்தாண்டு தினத்தன்று அதிகாலை 12 மணிக்கு மேல் வெளியாகிறது.

அஜீத் நடிப்பில் தற்போது திரைக்கு வர காத்திருக்கும் படம் ‘என்னை அறிந்தால்'. கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் அஜீத்துக்கு ஜோடியாக அனுஷ்கா, த்ரிஷா நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் அருண் விஜய், விவேக் ஆகியோரும் நடித்துள்ளனர்.

புத்தாண்டின் அதிகாலையில் அஜீத்தின் என்னை அறிந்தால் இசை வெளியீடு   | த்ரிஷா    | அனுஷ்கா  

ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். படப்பிடிப்பு முடிந்து, ரிலீசுக்கான வேலைகள் வேகம் பிடித்துள்ளன.

படத்தின் டீசர் வெளியாகி பட்டையைக் கிளப்பிக் கொண்டுள்ளது. அடுத்து பாடல் வெளியீடுதான். ‘என்னை அறிந்தால்' படத்தின் பாடல்களை டிசம்பர் 31-ம் தேதி நள்ளிரவில் வெளியிட உள்ளனர். இதை படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ சாய் ராம் கிரியேசன்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

புத்தாண்டின் அதிகாலையில் அஜீத்தின் என்னை அறிந்தால் இசை வெளியீடு

அஜீத்தின் ரசிகர்களுக்கு 2015 ஆம் ஆண்டின் விடியல் மிக இனிமையாக அமைய வேண்டும் என்பதால் இந்த ஏற்பாடாம்.

படம் வரும் பொங்கலுக்கு பிரமாண்டமாக ரிலீசாகிறது.