9 முழ பட்டுசேலை உடுத்தி தலைப் பொங்கல் கொண்டாடிய சினேகா

Sneha Celebrates Thala Pongal At Her In Laws House

சென்னை: சினேகா, பிரசன்னா ஜோடி நேற்று தலைப் பொங்கலை கொண்டாடியது.

சினேகா தனது காதலர் பிரசன்னாவை கடந்த ஆண்டு மே மாதம் மணந்தார். இந்த பொங்கல் அவர்களுக்கு தலைப் பொங்கலாகும். தலைப் பொங்கலை சினேகா தனது மாமியார் வீட்டில் கணவர், உறவினர்களுடன் சேர்ந்து பொங்கலிட்டு கொண்டாடினார்.

இது குறித்து சினேகா கூறுகையில்,

தலைப் பொங்கலை மகிழ்ச்சியாக கொண்டாடினேன். பொங்கலுக்காக பிரசன்னா எனக்கு 9 முழம் பட்டுச்சேலையை வாங்கிக் கொடுத்தார். திருமணத்திற்கு பிறகு ஓரிரு நிகழ்ச்சிகளில் தான் பட்டுப்புடவை உடுத்தியுள்ளேன். பொங்கல் பண்டிகை குடும்ப பண்டிகை. இது போன்ற பண்டிகைகளால் குடும்பத்தார் ஒன்று சேர்கின்றனர். மேலும் குடும்ப உறவுகளும் வலுப்படுகிறது என்றார்.

பிரசன்னா கூறுகையில்,

பள்ளிப் பருவத்தில் கிராமத்தில் பொங்கல் கொண்டாடியது மகிழ்ச்சி அளித்தது. தற்போது சினேகா என்னுடன் இருப்பதால் இது எனக்கு விசேஷமான பண்டிகை என்றார்.

 

ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட பாம்பே ஜெயஸ்ரீ பாடல் காப்பியடிக்கப்பட்டதா?

Did Bombay Jayashree Copy The Legendary Malayalam

சென்னை: ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட பாடகி பாம்பே ஜெயஸ்ரீ எழுதிய தாலாட்டு 18வது நூற்றாண்டில் எழுதப்பட்ட மலையாள தாலாட்டு பாடலில் இருந்து காப்பியடிக்கப்பட்டுள்ளது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

லைப் ஆப் பை படத்தில் பிரபல பாடகி பாம்பே ஜெயஸ்ரீ எழுதிய தாலாட்டு பாடல் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அப்படத்தை பார்த்த கேரள மக்கள் ஜெயஸ்ரீ எழுதிய தாலாட்டு ஓமனத்திங்கள் கெடாவோ என்ற பிரபல மலையாள தாலாட்டு போன்றே உள்ளது என்று தெரிவித்தனர். ஓமனத்திங்கள் கெடாவோ என்ற பாடல் 18வது நூற்றாண்டில் இறையிம்மன் தம்பி என்பவரால் எழுதப்பட்ட தாலாட்டாகும்.

கேரளத்து மக்களில் இத்தாலாட்டை கேட்டிராதவர்களே இல்லை என்று கூறும் அளவுக்கு இன்றும் பிரபலமாக உள்ள தாலாட்டு பாடல் ஆகும். இந்நிலையில் தம்பியின் வம்சத்தைச் சேர்ந்தவரும், தம்பி அறக்கட்டளை செயலாளருமான ருக்மிணி பாய் கூறுகையில்,

ஜெயஸ்ரீ தம்பியின் பாடலை காப்பியடித்துள்ளார். அவர் எங்களிடம் அனுமதி பெறவே இல்லை. நஷ்ட ஈடு கேட்டு அவர் மீது வழக்கு தொடர்வோம். அவர் தனது நிலையை தெளிவுபடுத்த வேண்டும் என்றார்.

ஜெயஸ்ரீ எழுதி பாடியுள்ள பாட்டில் முதல் 8 வரிகள் தம்பியின் தாலாட்டில் வருவது போன்றே உள்ளது. ஆனால் தன் மனதில் பட்டதை பாட்டாக எழுதியதாக ஜெயஸ்ரீ தெரிவித்துள்ளார்.

 

அலெக்ஸ் பாண்டியனுக்காக சமருக்கு பிரச்சனை கொடுத்தாரா ஞானவேல் ராஜா?

Samar Director Thiru Fires At Alex Pandian Makers

சென்னை: தன்னுடைய சமர் படத்தை பொங்கலுக்கு ரிலீஸ் செய்யவிடாமல் ஸ்டுடியோ கிரீன் தடுத்ததாக இயக்குனர் திரு ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

திரு இயக்கத்தில் விஷால், த்ரிஷா நடித்துள்ள சமர் பொங்கலுக்கு ரிலீஸாகி ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் சமர் படத்தை பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய விடாமல் ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ கிரீன் பிரச்சனை செய்ததாக திரு ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

அன்புள்ள எகோ பிரண்ட்லி ஸ்டுடியோ... எங்கள் பட ரிலீஸை தடுத்து நிறுத்த நீங்கள் உங்களால் முடிந்ததை செய்தீர்கள் என்று எனக்கு தெரியும். ஆனால் உங்கள் முயற்சி தோற்றது. அடுத்த முறையாவது உங்கள் முயற்சி வெற்ற பெறட்டும். பிற படங்களில் கவனம் செலுத்துவதை விட்டுவிட்டு உங்கள் படத்தைப் பற்றி மட்டும் யோசியுங்கள். உங்களின் அடுத்த படத்திற்கு என்னுடைய வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார்.

அவர் எகோ பிரண்ட்லி ஸ்டுடியோ என்று கூறியிருப்பது ஸ்டுடியோ கிரீனைத் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

 

அமிதாப் பச்சனை கசாபோடு ஒப்பிட்ட கவிஞர்

Amitabh Bachchan Compared Kasab

பெங்களூர்: உருது கவிஞர் நிதா பாசில் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனை மும்பை தாக்குதல் வழக்கில் தூக்கிலிடப்பட்ட பாகிஸ்தான் தீவிரவாதி அஜ்மல் கசாபுடன் ஒப்பிட்டுப் பேசியுள்ளார்.

உருது கவிஞரான நிதா பாசில் (74) அண்மையில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

கோபக்கார இளைஞர் என்ற பட்டம் அமிதாபி பச்சனுக்கு ஏன் அளிக்கப்பட்டது? அவர் அஜ்மல் கசாப் போன்று ஒரு பொம்மை. ஒரு பொம்மையை சலீம்-ஜாவீதும், இன்னொரு பொம்மையை ஹபீஸ் சயீதும் உருவாக்கினர். பொம்மை தூக்கிலிடப்பட்டுவிட்டது. ஆனால் அதை உருவாக்கியவர் சுதந்திரமாக உள்ளார் என்றார்.

இந்த கருத்தை தெரிவித்த அவர் நேற்று செய்தியாளர்களிடம் கூறுகையில்.

நான் அமிதாபை தீவிரவாதி என்று கூறவேயில்லை. சர்ச்சையை கிளப்ப மீடியா தான் என் கருத்தை திரித்துவிட்டது. நான் அமிதாபை பற்றி பேசவில்லை. கோபக்கார இளைஞர் இமேஜைப் பற்றி தான் பேசினேன். அவர் திறமையான கலைஞர். அது ஏன் அமிதாபை மட்டும் கோபக்கார இளைஞர் என்கிறோம்? 74 வயதாகும் அன்னா ஹசாரேவை மறந்துவிட்டோமா? என்றார்.

 

கண்ணா லட்டு தின்ன ஆசையா?

Kanna Laddu Thinna Aasaiya Review   

நடிப்பு: சந்தானம், சீனிவாசன், சேது, விசாகா

இசை: தமன்

தயாரிப்பு: ராம நாராயணன், சந்தானம்

இயக்கம்: மணிகண்டன்

திரைக்கதை சூப்பர் ஸ்டார் கே பாக்யராஜின் எவர்கிரீன் நகைச்சுவைப் படமான இன்று போய் நாளை வா கதையை சுட்டு, கொஞ்சம் வசனங்களை மட்டும் அப்படி இப்படி மாற்றிப் போட்டு படமாக எடுத்திருக்கிறார்கள்.

கதைத் திருட்டு விவகாரத்தை மறந்துவிட்டு படத்தைப் பார்ப்போம்.

எதிர்வீட்டுக்குப் புதிதாய் குடிவரும் விசாகா யாருக்கு என்பதில், நெருக்கமான நண்பர்களாகத் திரியும் பாக்யராஜ்... ச்சே... பழக்க தோஷம்... சந்தானம் - சீனிவாசன் (அதாங்க பவர் ஸ்டார்) - சேது (புதுமுகம்) ஆகியோருக்குள் மோதல். கடைசியில் விசாகா யாருக்குக் கிடைத்தார் என்பதுதான் இந்தப் படத்தின் ஒரு வரிக் கதை.

ஹீரோயினைக் கவர்வதற்காக ஒரிஜினல் படத்தில் மூன்று பேரும் ஹீரோயின் அம்மா, அப்பா, தாத்தா மூலம் விதவிதமான டெக்னிக்குகளைக் கையாள்வது போலவே, இந்தப் படத்திலும். ஆனால் ஒரிஜினல் படத்தில் இருந்த உயிர்ப்புடன் கூடிய நகைச்சுவை இந்தப் படத்தில் மிஸ்ஸிங்.

இருந்தாலும் சில காட்சிகள் இயல்பாய் சிரிக்க வைக்கின்றன. குறிப்பாக சீனிவாசனை சந்தானம் கலாய்க்கும் இடங்கள்... தியேட்டர் அதிர்கிறது.

சாம்பிளுக்கு...

சீனிவாசன் அழுகிற போஸை படமெடுத்து அவரிடமே காட்டுவார் சந்தானம். அவர் இன்னும் அழுதபடி, 'நல்லால்ல' என்று சொல்ல.. 'தெரியுதுல்ல' என்பார். இப்படி படம் முழுக்க சந்தானம் தன் பெஸ்ட் ஒன் லைனர்களை அள்ளிவிட்டுக் கொண்டே இருக்கிறார்.

மூன்றாவது ஹீரோவாக வரும் சேதுவுக்கு வாய்ப்பும் கம்மி, நடிப்பும் சுமார்தான்.

நான்கைந்து வருடங்கள் கழித்து வந்திருக்கிறார் விசாகா. சில காட்சிகளில் பார்க்க நன்றாகத்தான் இருக்கிறார்.

படம் ஆரம்பத்திலிருந்து கடைசி வரை ஜாலியாகப் போவது உண்மைதான். ஆனால் ஒரு நூறு முறையாவது அந்த இன்றுபோய் நாளை வா படத்தை டிவியிலும் டிவிடிகளிலும் திரும்பத் திரும்ப பார்த்தவர்கள் நிச்சயம் ஒரிஜினல்தான் பெஸ்ட் என்பார்கள்.

காரணம், அந்தப் படத்தில் பாக்யராஜ் முதல் காட்சியிலிருந்து க்ளைமாக்ஸ் வரை அப்பாவியாக நடித்துக் கொண்டே அசாதாரணமான புத்திசாலித்தனத்துடன் திரைக்கதை அமைத்திருப்பார். காட்சிகள் அனைத்தையும் நம் தெருவிலோ, பக்கத்து ஊரிலோ பார்த்த மாதிரி இயல்பாக அமைந்திருக்கும்.

கலதிஆ-வில் அதெல்லாம் மிஸ்ஸிங்.. எப்படியாவது சிரிக்க வைத்தால் போதும் என்ற ஒரே நோக்கம் தெரிகிறது. இருந்தாலும், இந்த பொங்கல் விடுமுறையை சிரித்தபடி கொண்டாட ஏற்ற படம்தான்!

-எஸ்எஸ்

 

'சமர்' பட விமர்சனம்: அமர்களமா ஆரம்பிச்சு...

Samar Review   

நடிப்பு: விஷால், திரிஷா, சுனைனா,

இசை: யுவன்ஷங்கர்ராஜா,

இயக்கம்: திரு,

வசனம்: எஸ்.ராமகிருஷ்ணன்.

ஒளிப்பதிவு: ரிச்சர்ட் எம்.நாதன்,

எடிட்டிங்: ரூபன்

தயாரிப்பு: ஜெயபாலாஜி ரியல் மீடியா பி.லிட்.

விஷாலை வைத்து தீராத விளையாட்டுப் பிள்ளை இயக்கிய ‘திரு'தான் இதில் விஷாலை வைத்து கொஞ்சம் விளையாடியுள்ளார். பணக்காரர்களின் ‘விளையாட்டு' தான் இந்தப் படத்தின் கரு. தங்களையே கடவுளாக நினைத்துக் கொண்டு மனிதர்களுடன் விளையாடும் இரண்டு வில்லன்கள். அவர்களுடைய விளையாட்டை அவர்களுக்கு எப்படி திருப்பிக் கொடுக்கிறார் விஷால் என்பதுதான் கதை

அழகான காடு... இயற்கை எழில் கொஞ்சும் வனப்பகுதியில் மரங்களை வெட்டுபவர்களை முதல் காட்சியிலேயே புரண்டு புரண்டு அடிக்கிறார் விஷால்... இயற்கையின் காவலராக நடித்திருக்கிறார் போல என்று நினைத்தால் கடைசியில் புஸ்ஸ்ஸ்... என்றாகிவிட்டது படம்.

விஷால் வனக்காவலர் என்று நினைத்தால் கடைசியில் ஏமாந்து போக வேண்டியதுதான். விஷாலின் அப்பாதான் வனக்காவலர். அழகான வனத்தை சுற்றிக் காட்டும் கைடாக வருகிறார் விஷால். அவரை காதலிக்கும் சுனைனா இரண்டாவது காட்சிலேயே காதலை முறித்துக்கொண்டு பாங்காக் பறந்து விடுகிறார்.

காதலை முறிக்க சுனைனா சொல்லும் காரணம் தெரியுமா?... என்னோட ஹிப் சைஸ் தெரியுமா? செப்பல் சைஸ் தெரியுமா? இதெல்லாம் தெரியாதுல்ல அப்ப நாம காதலை ப்ரேக் பண்ணிக்கலாம் என்கிறார். இவ்வளவு தான் காரணம். இதெல்லாம் விஷாலுக்கு தெரியாது என்பதை தெரிந்து கொள்ள காதலி சுனைனாவிற்கு 3 ஆண்டுகள் ஆகியிருக்கிறது என்பதுதான் கொடுமை.

காதலி இருக்கும் போது அவரைப் பற்றி நினைக்காத விஷால் முறிந்து போன உடன்தான் அதிகம் நினைக்கிறார். பாங்காங்கில் இருந்து வரும் கூரியரில் காதலி சுனைனாவின் கடிதத்துடன் விமான டிக்கெட் வரவே உடனடியாக பாங்காக் செல்ல சென்னை வருகிறார். அங்கு விமான நிலையத்தில் ஒன்றுமே தெரியாத விஷாலுக்கு திரிஷா உதவிக்கு வருகிறார்.

பரபரக்கும் கதை

பார்த்த உடனேயே தன்னுடைய காதலைப் பற்றியும் காதலியைப் பற்றியும் திரிஷாவிடம் பகிர்ந்து கொள்கிறார்! பாங்காங்கில் விஷால் இறங்கியதில் இருந்து ஒரே பரபர காட்சிகள்தான். அவரை கொல்ல ஒரு டீம் முயற்சிக்கிறது... விஷால் போகும் இடத்தில் எல்லாம் ராஜ மரியாதை. திடீரென சில நாளில் அந்த மரியாதை காணாமல் போகிறது... என்ன நடக்கிறது... என்றெல்லாம் யோசிக்க கூட நேரம் இல்லாமல் தவித்துப் போகிறார் விஷால்.

அட அதுக்குள்ள இடைவேளை வந்திருச்சா என்று எண்ணத்தோன்றும் பரபர காட்சிகள். வில்லன்கள் அறிமுகம் வரைக்கும் நீடிக்கும் சஸ்பென்ஸ்.. என கண்ணாமூச்சி ஆடியிருக்கும் ‘திரு' வை பாராட்டலாம்.

குழப்பிய இயக்குநர்

ஆனால் படத்தில் ஆங்காங்கே சில குழப்பமான முடிச்சுகள்... பார்வையாளர்களை குழப்புகிறது. பாங்காங்கே நடுங்கும் பிரபல பணக்கார ஜோடி நண்பர்கள் சக்கரவர்த்தி, மனோஜ் பாஜ்பாய் இருவரும் கடைசியில் கார் விபத்தில் சிக்கி விஷாலிடம் மாட்டி உயிர்ப்பிச்சை கேட்கின்றனர். கிளைமாக்ஸ்தான் நெருடுகிறது. புதிதாய் ஏதாவது யோசித்திருக்கலாம்.

யுவன் சங்கர் ராஜா எங்கே?

இசை ‘யுவன் சங்கர் ராஜா' டைட்டிலில் பார்த்த ஞாபகம். ஆனால் ஒரு பாடல் கூட மனதில் ஒட்டவில்லை. பின்னணி இசையில் மனிதர் பரவாயில்லை.

ரிச்சர்டு எம்.நாதனின் ஒளிப்பதிவு சபாஷ் ரகம். ஹாலிவுட் படங்களுக்கு இணையாக போட்டி போடுவோம் என சொல்லும் விதமாக பாங்காங் காட்சிகளில் மிரட்டியுள்ளார். பல இடங்களில் கேமராவும், பின்னணி இசையும் போட்டி போடுகிறது.

வசனத்திற்கு கைதட்டல்

எஸ். ராமகிருஷ்ணனின் ரொம்ப பேசாத சின்ன சின்ன வசனங்கள் கைத்தட்டலை அள்ளுகிறது.

ஒரு பெக் அடிக்க ஆரம்பிச்சா காதலி நினைவு வந்திடும்...

அமெரிக்காவில அப்துல் கலாமை சோதனை போட்டா ஏன்னு கேட்க மாட்டீங்க... போன்ற வசனங்களுக்கு தியேட்டரில் கைத்தட்டலும் விசிலும் பறக்கிறது.

தியேட்டரில் பாதியில் யாரும் எழுந்து போனதாக தெரியவில்லை. கொடுத்த காசுக்கு பாதகமில்லை என்கின்றனர் ரசிகர்கள்.

 

3 சேனல்களில் இவர் படமே…. விஜய்க்கே போட்டியான விஜய்!

Tv Channals Telecasted Vijay Film

மாட்டுப்பொங்கல் தினத்தில் பிரபல சேனல்களில் எல்லாம் விஜய் படம்தான். எந்த படத்தை பார்ப்பது? விஜய் ரசிகர்களுக்கு இது சந்தோசமான சமாச்சாரம்தான் என்றாலும் எந்த படத்தை பார்ப்பது என்பதில்தான் குழப்பமாகிப் போனது.

பொங்கல் பண்டிகையை ஒட்டி சிறப்பு நிகழ்ச்சிகள் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகிவருகின்றன. சில செய்தி சேனல்களில் ஜல்லிக்கட்டு ஒளிபரப்பானாலும் சன், கலைஞர், விஜய், ஜீ போன்ற தொலைக்காட்சிகளில் காலை 11.30 மணிக்கு திரைப்படங்களை ஒளிபரப்பினார்கள்.

இதில் மூன்று முக்கிய சேனல்களில் நடிகர் விஜய் நடித்த திரைப்படங்கள் ஒளிபரப்பானது. சன் டிவியில் விஜய் அனுஷ்கா நடித்த ‘வேட்டைக்காரன்' ஒளிபரப்பானது.

கலைஞர் டிவியில் விஜய் திரிஷா நடித்த ‘குருவி' திரைப்படம் ஒளிபரப்பானது. இந்த படத்தை பலமுறை ஒளிபரப்பிவிட்டனர். இருந்தாலும் போட்டிக்கு ஒளிபரப்பவேண்டுமே? அதான்... குருவி போட்டுவிட்டனர். ஆனால் விஜய் டிவியில் ‘நண்பன்' ஒளிபரப்பினார்கள். ஒரே நேரத்தில் பிரபல சேனல்களில் விஜய் படங்கள் ஒளிபரப்பானது விஜய் ரசிகர்களுக்குத்தான் திண்டாட்டமாகிப் போய்விட்டது.

 

அஜீத்-விஷ்ணுவர்தன் படப்பெயர் 'வ'-வில் ஆரம்பம்

Ajith Film Title Begins With V

சென்னை: விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜீத் குமார் நடிக்கும் படத்திற்கு 'வ' என்ற எழுத்தில் துவங்கும் வார்த்தையை தலைப்பாக வைக்கவிருக்கிறார்களாம்.

விஜய் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்திற்கு இத்தனை நாட்களாக பெயர் வைக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் அந்த படத்திற்கு தலைவா என்று பெயர் வைத்துவிட்டனர். இதையடுத்து விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜீத் குமார் நடிக்கும் படத்திற்கு என்ன பெயர் வைக்கப் போகிறார்கள், அதை எப்பொழுது அறிவிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் அஜீத் படத்திற்கு 'வ' என்ற எழுத்தில் துவங்கும் பெயர் வைக்கவிருக்கிறார்கள் என்ற தகவல் கிடைத்துள்ளது. வ என்ற எழுத்தில் துவங்கிய வாலி, வில்லன் ஆகிய படங்கள் அஜீத்துக்கு பெரிய பெயர் வாங்கிக் கொடுத்தவை. அந்த வகையில் தற்போது நடிக்கும் படத்திற்கும் வ என்ற எழுத்தில் துவங்கும் பெயரை வைக்கிறார்கள் போல.

அஜீத் ரசிகர்கள் இப்பொழுதே பெயரை கணிக்கத் துவங்கிவிட்டனர். சீக்கிரம் தலைப்பைச் சொல்லுங்க 'தல'.

 

பின்வாங்கிய கமல் - தியேட்டரில் ரிலீசான பின்னரே டி.டி.எச்.சில் பிப்.2-ல் வெளியீடு என அறிவிப்பு!

Vishwaroopam Dth Release Kamal Film Postponed

சென்னை: கமல்ஹாசனின் விஸ்வரூபம் திரைப்படம் பிப்ரவரி 2-ந் தேதியன்றுதான் டி.டி.எச்.சில். வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கமல்ஹாசன் இயக்கி, நடித்து, தயாரித்திருக்கும் விஸ்வரூபம் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் முன்பே டி.டி.எச்.சில்.வெளியிடப்படும் என்ற அறிவிப்பு பெரும்புயலைக் கிளப்பியது. அப்போது கடந்த 10-ந் தேதி டி.டி.எச்.சில் முதலில் ஒளிபரப்படும் என்றுன் 11-ந் தேதிதான் திரையரங்குகளில் வெளியிடப்படும் என்றும் உறுதிபட அவர் கூறியிருந்தார். ஆனால் கடுமையான எதிர்ப்புகளைத் தொடர்ந்து சில நாட்களுக்கு முன்பு வரும் 25-ந் தேதியன்று விஸ்வரூபம் திரைப்படத்தை திரையரங்குகளில் வெளியிடுவேன் என்று அறிவித்தார்.

ஆனால் டி.டி.எச்.சில் எப்போது வெளியிடப்படும் என்ற கேள்விக்கு பதில் இல்லாமல் இருந்தது. இந்நிலையில்தான் நேற்று பிப்ரவரி 2-ந் தேதியன்று டி.டி.எச்.சில் விஸ்வரூபம் வெளியிடப்படும் என்று கமல் அறிவித்தார்.

தமது முந்தைய உறுதியான நிலையிலிருந்து அப்படியே மாறியிருக்கிறார் கமல்!

 

பிக்பாஸ் சீசன் 6: வெற்றி பெற்ற ஊர்வசி டோலக்யா… சனா கான்

Bigg Boss 6 Grand Finale Urvashi Dholakia Is The Winner

90 நாட்கள்... 15 பிரபலங்கள் என பரபரப்பாக தொடங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவுக்கு வந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் டிவி பிரபலமான ஊர்வசி டோலக்யா வெற்றி பெற்று பல லட்சம் ரூபாய் பரிசை தட்டிச் சென்றுள்ளார்.

இந்தியாவின் மிகப் பிரபலமான ரியாலிட்டி ஷோ பிக்பாஸ். சல்மான் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியின் ஆறாவது சீசனில் சினிமா நட்சத்திரங்கள், மாடல்கள், அரசியல்வாதிகள், எழுத்தாளர்கள் உள்ளிட்ட பல பிரபலங்கள் பங்கேற்றனர்.

ஒரே வீட்டிற்குள் உண்டு, உறங்கி, சண்டைபோட்டு, என்னவெல்லாம் செய்து கடைசியில் தாக்குபிடித்து நிற்கவேண்டும். இவர்களின் அனைத்து செயல்களும் காமிரா மூலம் கண்காணிக்கப்படும். எல்லாவற்றையும் தாங்கி வீட்டிற்குள் கடைசிவரை இருப்பவருக்குத்தான் 50 லட்சம் பரிசு கிடைக்கும்.

பிரபலங்களின் கொண்டாட்டம்

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சிக்காக பிரபல ஆர்ட் டைரக்டர் சாபுசிரில் வடிவமைத்த 15000 சதுர அடி வீட்டிற்குள் நவ்ஜோத் சிங் சித்து, சனா கான், டிவி நடிகர் ஆஷ்கா கொராடியா, டிவி நடிகை ஊர்வசி டோலாகியா உள்ளிட்ட 15 நபர்கள் பங்கேற்றனர்.

ஊர்வசி டோலக்கியா வெற்றி

90 நாட்களும் பலகட்டமாக நடந்த நிகழ்ச்சியில் பிரபல மாடலும் டிவி நடிகையுமான ஊர்வசி டோலக்கியா வெற்றி பெற்றுள்ளார். இமான் சித்திக் ரன்னர் அப் பட்டம் வென்றுள்ளார். தென்னிந்திய திரைப்பட நடிகை சனாகான் இரண்டாவது ரன்னர் அப் பட்டம் வென்றுள்ளார்.

அழவைத்த நிகழ்ச்சி

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றது பற்றி கூறியுள்ள சனாகான், என்னை அழவைத்த நிகழ்ச்சி இது. அதை தாக்குப்பிடித்து நின்றதாலேயே வெற்றி பெற முடிந்ததாக கூறினார். யார் யாரோ நாரதர் வேலை செய்ய நினைத்தும் என்னிடம் அது நடக்கவில்லை என்றார். நம்மை யார் எப்படி அணுகுகின்றனர். கெட்ட எண்ணமா? நல்ல எண்ணமா? என்பதை அனுபவப்பூர்வமாக தெரிந்து கொள்ளவைத்த நிகழ்ச்சி இது என்கிறார் சனாகான்.

பிரபுதேவா நடனம்

பிக்பாஸ் இறுதிப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. இந்த பரிசினை சல்மான்கான் நேரடியாக வழங்க உள்ளார். இதில் பிரபுதேவா, ரெமோ டிசோசா நடனமாட இருக்கின்றனர். யனாகுப்தாவின் கலக்கல் நடனமும் இடம்பெறப்போகிறதாம்.

 

விஜய்-விஜய் படத்தின் பெயர் தங்கமகன் இல்லை, 'தலைவா' ஆகிவிட்டார்

Vijay Is Not Thangamagan But Thalaiva    | விஜய்   

சென்னை: ஏ.எல். விஜய் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்திற்கு தலைவா என்று பெயர் வைத்துள்ளனர்.

ஏ.எல். விஜய் இயக்கத்தில் விஜய், அமலா பால் உள்ளிட்டோர் பெயரிடப்படாத படத்தில் நடித்து வந்தனர். இந்த படத்திற்கு தங்கமகன் என்ற பெயரைத் தேர்வு செய்தனர். ஆனால் அந்த தலைப்பு திருப்திகரமாக இல்லை என்று கூறி ரஜினி, மம்மூட்டி நடித்த தளபதி படத்தின் தலைப்பை வைக்க நினைத்தனர்.

ஏற்கனவே துப்பாக்கி பட தலைப்பு சர்ச்சையில் சிக்கியதால் இந்த படத்திற்கு நல்ல பெயராக வையுங்கள் என்று விஜய் தெரிவித்துள்ளார். இதையடுத்து யாருக்கும் பிரச்சனை ஏற்படாத வண்ணம் விஜயின் புதுப் படத்திற்கு தலைவா என்று பெயர் வைத்துள்ளனர்.

தலைவா என்ற தலைப்புடன் கூடிய போஸ்டர் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த படத்தின் ஷூட்டிங் தற்போது மும்பையில் நடந்து வருகிறது.

ஏற்கனவே மும்பையில் எடுக்கப்பட்ட துப்பாக்கி ஹிட்டானதால் இந்த படமும் ஹிட்டாகும் என்று விஜயின் ரசிகர்கள் நினைக்கின்றனர்.