அடுத்து சுதீப்பை இயக்குகிறார் கேஎஸ் ரவிக்குமார்!

லிங்கா படத்தில் ரஜினியை இயக்கிய கேஎஸ் ரவிக்குமார், அடுத்து சுதீப்பை வைத்து புதிய படம் இயக்குகிறார்.

‘லிங்கா'வை இயக்கியது முழு திருப்தியைத் தந்ததாகக் கூறும் ரவிக்குமார், அடுத்த படத்துக்கு தயாராகிவிட்டார்.

ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம் என மூன்று மொழிகளிலும் உருவாகும் அந்த படத்தில் சுதீப் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

அடுத்து சுதீப்பை இயக்குகிறார் கேஎஸ் ரவிக்குமார்!

லிங்கா படம் தொடங்குவதற்கு முன்பு சுதீப்பை வைத்துதான் படம் செய்வதாக இருந்தார் ரவிக்குமார். அட்வான்சும் வாங்கிவிட்டார். ஆனால் ரஜினி பட வாய்ப்பு வந்ததால், முதலில் லிங்காவை முடியுங்கள், காத்திருக்கிறோம் என சுதீப் சொல்லிவிட்டார்.

இப்போது தன் அடுத்த படத்தில் சுதீப்பை வைத்து பிரமாண்டமாய் உருவாக்குகிறார் கேஎஸ் ரவிக்குமார்.

இது குறித்து கேஎஸ் ரவிக்குமார் கூறுகையில், "அடுத்த படம் சுதீப்புடன்தான். தமிழ், தெலுங்கு, கன்னடத்தில் உருவாகிறது. இந்தப் படத்தை முடித்த பிறகுதான் வேறு படங்களில் கமிட் ஆகப் போகிறேன்," என்றார்.

 

நாலே நாலு மணி நேரத்தில் பாடகியான ரஜினி நாயகி சோனாக்ஷி

மும்பை: பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹா தேவர் படத்தின் மூலம் பாடகியாகியுள்ளார்.

பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹா அர்ஜுன் கபூருடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ள இந்தி படம் தேவர். படத்தை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரித்துள்ளார். இந்த படம் மூலம் சோனாக்ஷி பாடகியாகியுள்ளார். படத்தில் வரும் லெட்ஸ் செலபிரேட் பாடலில் சில வரிகளை சோனாக்ஷி பாடியுள்ளார்.

நாலே நாலு மணி நேரத்தில் பாடகியான ரஜினி நாயகி சோனாக்ஷி

இது குறித்து அவர் கூறுகையில்,

மியூசிக் வீடியோ ஷூட் செய்ய சென்றோம். அங்கு பேச்சுவாக்கில் இந்த பாடலில் வரும் பெண் பகுதியை யார் பாடப் போகிறார்கள் என்று கேட்டேன். அதற்கு நீங்கள் தான் என்றார்கள். எனக்கு பாட வரும் ஆனால் படத்தில் பாடும் அளவுக்கு என் குரல் நன்றாக உள்ளதா என தெரியவில்லை என்றேன்.

உடனே எனக்கு நான்கு மணிநேரம் பாட பயிற்சி அளித்தனர். அதன் பிறகு நான் அந்த பாடலை பாடினேன் என்றார்.

வரும் ஜனவரி மாதம் 9ம் தேதி தேவர் படம் ரிலீஸாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

சர்ச்சைக்குரிய தி இன்டர்வியூ படத்தை யுட்யூபில் வெளியிடுகிறது சோனி!

சர்ச்சைக்குரிய தி இன்டர்வியூ படத்தை யு ட்யூபில் வெளியிடுகிறது சோனி பிக்சர்ஸ் நிறுவனம்.

வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னை இரண்டு செய்தியாளர்கள் கொலை செய்வது போல சித்தரித்து எடுக்கப்பட்டுள்ள காமெடிப் படம் தி இன்டர்வியூ.

இந்தப் படத்தின் கதை வெளியில் தெரிந்ததுமே, வட கொரியா இந்தப் படத்தை வெளியிடக் கூடாது என சோனியை நேரடியாகவே எச்சரித்தது. இதைத் தொடர்ந்து சோனி நிறுவனத்தின் கம்ப்யூட்டர் நெட்வொர்க்கை முற்றாக செயலிழக்க வைத்தனர் சில ஹேக்கர்கள். இது வட கொரியாவின் வேலைதான் என தகவல் வெளியிட்டது அமெரிக்க உளவுத் துறை.

சர்ச்சைக்குரிய தி இன்டர்வியூ படத்தை யுட்யூபில் வெளியிடுகிறது சோனி!

மேலும் சோனி நிறுவனம், அதன் தலைவர், படத்தின் தயாரிப்பாளர், சோனி ஊழியர்கள் போன்றவர்களின் அலுவல் ரீதியான மற்றும் தனிப்பட்ட தகவல்களைக் கூட கைப்பற்றிய ஹேக்கர்கள், அவற்றை வெளியிட்டனர். ஜேம்ஸ் பாண்ட் படத்தின் கதையைக் கூட சோனி நிறுவன சர்வர்களிலிருந்து உருவி வெளியிட்டனர் இந்த ஹேக்கர்கள். அதே நேரம் இந்த ஹேக்கர்களுக்கும் தமக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என வட கொரிய அரசு அறிவித்துவிட்டது.

இதைத் தொடர்ந்து படத்துக்கு திரையரங்குகள் தர பல மால்களும் தயக்கம் காட்டின. சினிமார்க், சினிப்ளெக்ஸ், ரீகல் சினிமாஸ், ஏஎம்சி போன்ற வட அமெரிக்க சினிமா அரங்குகளில் படத்தின் பிரிமியர் நிறுத்தப்பட்டுவிட்டது. உடனே, தி இன்டர்வியூ படத்தை வெளியிடுவதை ரத்து செய்தது சோனி. அமெரிக்க அதிபர் ஒபாமா இந்த முடிவு தவறு என்று கூறியும், படத்தை திரையிடவில்லை சோனி.

இப்போது தி இன்டர்வியூ படத்தை யு ட்யூப், நெட்ப்ளிக்ஸ், க்ராக்கிள் போன்ற சமூக வலைத் தளங்களில் வெளியிடப் போவதாக சோனி நிறுவனத் தலைவர் மைக்கேல் லிண்டன் தெரிவித்துள்ளார். திரையரங்குகளில் விநியோகிக்கவும் முயற்சிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

 

அமெரிக்காவில் உத்தம வில்லன் இசை வெளியீடு?

கமல் நடித்துள்ள உத்தமவில்லன் படத்தின் இசையை அமெரிக்காவில் நடத்தத் திட்டமிட்டுள்ளனர். படத்தை பிப்ரவரி மாதம் திரைக்குக் கொண்டுவருகிறார்கள்.

கமலுடன் ஆன்ட்ரியா, பார்வதி, பூஜா நடித்துள்ள ‘உத்தம வில்லன்' பட வேலைகள் இறுதி கட்டத்தில் உள்ளது. ஜெயராம், இயக்குநர் பாலச்சந்தர் முக்கிய கேரக்டரில் வருகிறார்கள். ரமேஷ் அரவிந்த் இயக்கியுள்ளார்.

படத்தின் இசை வெளியீட்டு விழாவை பிரமாண்டமாக நடத்தத் திட்டமிட்டு உள்ளனர். அமெரிக்காவில் இவ்விழாவை நடத்த ஏற்பாடுகள் நடப்பதாக கூறப்படுகின்றன.

அமெரிக்காவில் உத்தம வில்லன் இசை வெளியீடு?

இதற்காக நடிகர், நடிகைகள் பலரை அமெரிக்கா அழைத்து செல்ல திட்டமிட்டுள்ளனர். இதுகுறித்து படத்தின் தயாரிப்பாளரான சுபாஷ் சந்திரபோஸ் கூறுகையில், "உத்தம வில்லன் பாடல்கள் வெளியீட்டு விழாவை எங்கே எப்போது நடத்துவது என்று இன்னும் முடிவு செய்யவில்லை.

கமல் சவுண்ட் மிக்சிங் பணிகளுக்காக அமெரிக்கா சென்றுள்ளார். அவர் திரும்பி வந்ததும் முடிவு செய்யப்படும். பாடல்கள் வெளியீட்டு விழா ஜனவரி இரண்டாவது வாரத்தில் நடக்கும். படத்தை பிப்ரவரி மாதம் ரிலீஸ் செய்ய திட்டமிட்டு உள்ளோம்," என்றார்.