டோலிவுட், கோலிவுட்டில் தலா ஒன்று, பாலிவுட்டில் நான்கு.... இது ஸ்ருதி ஹாசன் கணக்கு!

சென்னை: நடிகை ஸ்ருதி ஹாசனுக்கு இந்த வருடம் கை நிறைய படம் கொட்டிக் கிடக்கிறது. இந்த வருடம் ஸ்ருதி நடித்து ரிலீசாக உள்ள ஆறு படங்களில் 4 பாலிவுட் படங்கள் என்பது கூடுதல் சிறப்பு.

டோலிவுட், கோலிவுட்டில் தலா ஒன்று, பாலிவுட்டில் நான்கு....  இது ஸ்ருதி ஹாசன் கணக்கு!

கமல்ஹாசன் மகள், ஸ்ருதி, தமிழில் நடித்த படங்கள் இன்னும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. ஆனால் தெலுங்கில் ராசியான ஹீரோயின் என்ற பெயரை தட்டிச் சென்றுள்ளார். இந்தி திரையுலகமான பாலிவுட்டிலும், ஸ்ருதி ஹாசன் முன்னணி ஹீரோயினாக உருவாகியுள்ளார். 2015ம் ஆண்டு பாலிவுட்டில் ஸ்ருதிஹாசன் கொடி பறக்கப்போகிறது என்றால் அது புகழ்ச்சியாகாது.

ஏனெனில் இவ்வாண்டு பாலிவுட்டில் ஸ்ருதி நடித்து நான்கு படங்கள் வெளியாக உள்ளன. முன்னணி நடிகர் அக்ஷய் குமாருடன் ஜோடியாக நடித்துள்ள கப்பார் என்ற திரைப்படமும் அதில் ஒன்றாகும். ஜான் ஆப்பிரஹாமுடன், ராக்கி ஹேண்ட்சம் மற்றும் வெல்கம் பேக் ஆகிய படங்களில் அவர் நடித்துள்ளார். இதுதவிர, தமிழ் மற்றும் தெலுங்கில் தலா ஒரு படங்களில் ஸ்ருதி ஹாசன் நடித்து வருகிறார்.

 

அரசு புறம்போக்கு இடத்தில் தியேட்டர் கட்டியதாக திலீப் மீது வழக்கு

அரசு நிலத்தில் தியேட்டர் கட்டியதாக முன்னணி நடிகர் திலீப் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

மலையாள திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் திலீப். இவர் திருச்சூரை அடுத்த சாலக்குடியில் 3 தியேட்டர்கள் கொண்ட டி சினிமா என்ற மல்டி பிளக்ஸ் தியேட்டர் கட்டியுள்ளார். இதன் திறப்பு விழா சமீபத்தில் நடந்தது.

திலீப் தியேட்டர் கட்டி இருக்கும் இடம் அரசுக்கு சொந்தமானது என்றும், எனவே அரசு நிலத்தில் தியேட்டர் கட்டிய நடிகர் திலீப் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சந்தோஷ் என்பவர் கேரள ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார்.

அரசு புறம்போக்கு இடத்தில் தியேட்டர் கட்டியதாக திலீப் மீது வழக்கு

அந்த மனுவில், "சாலக்குடியில் நடிகர் திலீப் தியேட்டர் கட்டி இருக்கும் இடம் கொச்சி மன்னர் குடும்பத்திற்கு சொந்தமானது. 1964 - ம் ஆண்டு இந்த நிலத்தை அரசு கையகப்படுத்தியது. இந்த நிலத்தை மன்னர் குடும்பத்தை சேர்ந்தவர்களைத் தவிர மற்றவர்கள் யாரும் பயன்படுத்த முடியாது. ஆனால் கடந்த 2006-ம் ஆண்டு இந்த இடத்திலிருந்து 92.9 சென்ட் நிலத்தை நடிகர் திலீப் வாங்கி உள்ளார்.

இது சட்டப்படி தவறு என அப்போதே நான் திருச்சூர் கலெக்டருக்கு புகார் மனு கொடுத்தேன். ஆனால் கலெக்டர் இது புறம்போக்கு நிலம் இல்லையென்று கூறி உள்ளார்.

ஆனால் இந்த இடம் அரசு நிலம்தான். அதற்கான ஆதாரங்கள் இருப்பதால் இந்த நிலத்தில் தியேட்டர் கட்டிய நடிகர் திலீப் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு விட வேண்டும்," என்று கூறப்பட்டுள்ளது.

அடுத்த வாரம் இந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது.

 

தாரை தப்பட்டையில் மீண்டும் விஸ்வரூபமெடுக்கும் இளையராஜா!

தனது ஆயிரமாவது படமான தாரை தப்பட்டை-க்கு 12 பாடல்கள் போட்டுக் கொடுத்துள்ளார் இளையராஜா.

பாலா இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இதில் இடம்பெற்றுள்ள பாடல்கள் அனைத்தையும் முடித்துக் கொடுத்துவிட்டார் ராஜா.

தாரை தப்பட்டையில் மீண்டும் விஸ்வரூபமெடுக்கும் இளையராஜா!

விரைவில், மிகப்பெரிய அளவில் இப்படத்தின் ஆடியோவை வெளியிடவும் முடிவு செய்துள்ளனர்.

தாரை தப்பட்டை படம் கிராமிய நடனக் கலைஞர்கள் சம்பந்தப்பட்ட கதை. குறிப்பாக கரகாட்டக் கலைஞர்களின் வாழ்க்கையை இதில் படம்பிடித்துள்ளாராம் பாலா.

இதில், சசிகுமார், வரலட்சுமி ஆகியோர் வித்தியாசமான கதாபாத்திரம் ஏற்று நடித்து வருகின்றனர். பாலா தனது பி ஸ்டுடியோஸ் நிறுவனம் மூலம் தயாரித்து வருகிறார்.

தஞ்சை, குடந்தை பகுதிகளில் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

 

ஆமீர்கானின் பீகே... ரூ 278 கோடி குவித்து புதிய சாதனை

இந்திப் பட வரலாற்றிலேயே முதல் முறையாக ஆமீர்கானின் பீகே ரூ 278.52 கோடியைக் குவித்து புதிய சாதனைப் படைத்துள்ளது.

அமீர் கான் நடிப்பில் கடந்த மாதம் 19-ம் தேதி வெளியான ‘பிகே' திரைப்படம் பெரும் வரவேற்பைப் பெற்று ஓடிக் கொண்டுள்ளது.

ஆமீர்கானின் பீகே... ரூ 278 கோடி குவித்து புதிய சாதனை

இதற்கு முன்னர், அதிக வசூலை வாரிக் குவித்த ‘பாக்ஸ் ஆபிஸ் ஹிட்' படங்களின் முதல் வரிசையில் அமீர் கான் நடிப்பில் வெளியான ‘தூம் 3' (ரூ.271.82 கோடி), இரண்டாவது இடத்தில் சல்மான் கான் நடிப்பில் வெளியான ‘கிக்' (ரூ. 244 கோடி) மூன்றாவது இடத்தில் ஷாருக் கான் நடிப்பில் வெளியான ‘சென்னை எக்ஸ்பிரஸ்' (ரூ.228 கோடி) ஆகிய படங்கள் இருந்தன.

‘தூம் 3' படத்தின் வசூல் சாதனையை (ரூ.271.82 கோடி) தற்போது வெளியாகியுள்ள ‘பிகே' (ரூ.278.52 கோடி) முறியடித்து விட்டதாக பாலிவுட் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதேபோல், வெளிநாடுகளிலும் சுமார் 124 கோடி ரூபாயை இந்தப் படம் வசூலித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

உள்நாடு, வெளிநாடுகளில் சேர்த்து மொத்தம் ரூ 400 கோடிக்கும் மேல் இந்தப் படம் வசூலித்துள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.