பீட்ஸா என்று படத்திற்கு தலைப்பு வைத்தாலும் வைத்தார்கள் அது ஹிட் அடிக்கவே தொடர்ந்து பிரியாணி, ஜிகர்தண்டா என்று உணவு வகைகளின் பேராகவே படங்களுக்கு பெயரிட ஆரம்பித்து விட்டனர்.
கிராமப்புறங்களிலும் பேருந்துகளிலும் பிரபலமாக விற்பனை செய்யப்படும் ‘இஞ்சி முறப்பா' என்ற மிட்டாயின் பெயரை புதிய படத்திற்கு தலைப்பாக வைத்துள்ளனர்.
இந்த ‘ இஞ்சி முறப்பா' திரைப்படத்தினை புளு ஹில்ஸ் புரொடக்ஷன்ஸ் வழங்க ராதாகிருஷ்ணா பிலிம் சர்க்யூட் பட நிறுவனம் தயாரிக்கிறது.
கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் S. சகா. இவர் திரைப்பட கல்லூரியில் பயின்றதுடன் எஸ்.ஏ.சந்திரசேகரனிடம் உதவியாளராக பணியாற்றியவர். P.R.K. ராஜு ஒளிப்பதிவை கவனிக்க படத்திற்கு மணிசர்மா இசையமைக்கிறார்.
புதுமுகங்கள்
இஞ்சி முறப்பாவில் ஸ்ரீபாலாஜி என்ற புதுமுகம் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக சோனி ஸ்ரீஷ்டா நடிக்கிறார்.
இன்னும் யார்? யார்?
புதுமுகம் கிருஷ்ணா, ரிஷிகா, நெல்லை சிவா, லொள்ளு சபா மனோகர், சிட்டிபாபு, சாய்முருகன், ராதாகிருஷ்ணா ஆகியோர் நடிக்கிறார்கள்.
அண்ணன் தங்கை பாசம்
தன் தங்கையை எப்படியெல்லாம் வாழ வைக்க வேண்டும் என்று அண்ணன் கண்ட கனவு ஒரு கட்டத்தில் பொய்யாகிப் போகிறது.
ஏமாந்த தங்கை
தன் தங்கை காதலனிடம் ஏமாந்து போய் நிற்க அண்ணன் எடுக்கிற முடிவுதான் கதை என்கிறார் இயக்கநர்.
காதலா? பாசமா?
பாசத்தையும், நாயகனின் காதலையும் திரைக்கதையில் சுவையாக சொல்லி இருக்கிறோம். தனது தங்கையின் வாழ்க்கைக்காகப் போராடும் அண்ணனின் கதையை காதல், மோதல், காமெடி என்று அதிரடியாக உருவாக்கியுள்ளோம் என்றார் இயக்குனர்.
பாடல் ஹிட்
படத்தில் கதாநாயகனாக நடித்துள்ள ஸ்ரீபாலாஜிக்கு முறைப்படி பயிற்சி கொடுத்து நடிக்க வைத்துள்ளோம்.மணிசர்மாவின் இசையில் அனைத்து பாடல்களும் ஹிட் ரகம் என்றும் கூறினார்.
காதலியும், தங்கையும்
காதலியாக சோனி ஸ்ரீஷ்டாவும், தங்கையாக ஸ்ரீ என்ற புதுமுகம் கதாப்பாத்திரத்தின் சிறப்பு அம்சம். படப்பிடிப்பு சென்னை, பாண்டி, ஹைதராபாத் போன்ற இடங்களில் நடைபெற்றுள்ளது.
டேஸ்ட் எப்படி?
அதெல்லாம் சரிதான், இந்த இஞ்சி முறப்பா, அஜீரணத்தைப் போக்குமா? இல்லை வயிற்றை வலிக்குமா? என்று படம் பார்த்த பின்னாடிதானே தெரியும்.