சேலையில் யார் அழகு?- வித்யா, மஹி இடையே போட்டி!


பாலிவுட்டில் அவ்வப்போது ஹீரோயின்களுக்குள் திடீர் போட்டிகள் கிளம்புவதுண்டு. அந்தவகையில் இப்போது வித்யா பாலனுக்கும், மஹி கில்லுக்கும் இடையே ஒரு சேலைப் போட்டி கிளம்பியுள்ளதாம்.

தி டர்ட்டி பிக்சர்ஸ் படத்தில் கலக்கலான கிளாமருடன் சில்க் ஸ்மிதா வேடத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் வித்யா பாலன். அதேபோல சாஹேப் பீவி ஆர் கேங்ஸ்டர் என்ற புதிய படத்தில் நடித்திருப்பவர் மஹி கில். இருவருமே இப்படத்தில் ஒரு கவர்ச்சிகரமான காட்சியில் வருகிறார்கள். இருவருமே அதில் சேலையில் வருகின்றனர்.

இதை வைத்து சேலையில் யார் அதிக கவர்ச்சியுடன் இருப்பது என்று கிசுகிசுக்க ஆரம்பித்து விட்டது பாலிவுட். வித்யாதான் செம கவர்ச்சி என்று ஒரு தரப்பும், மஹிதான் மயக்குகிறார் என்று இன்னொரு தரப்புமாக வாதப் பிரதிவாதிங்கள் சூடாகியுள்ளனவாம்.

ரசிகர்களுக்கோ இரண்டு பேருமே கலக்கலாகத்தான் இருக்கிறார்கள் என்று இருவருக்குமே தங்களது வாக்குகளை மானாவாரியாக செலுத்தி வருகிறார்கள்.

மஹி கில் கவர்ச்சிக்குப் பெயர் போனவர் என்பது நினைவிருக்கலாம். அதிலும், சாஹேப் படத்தில் தாறுமாறான கவர்ச்சிக் காட்சிகளில் கலக்கியுள்ளார். ஆனால் வித்யா பாலன் இப்போதுதான் உச்சகட்ட கிளாமர் கடலில் நீந்த ஆரம்பித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

சி்ம்புவுடன் நடிப்பது திரில்லானது- ஹன்சிகா


சிம்பு நடிக்கும் வேட்டை மன்னன் படத்தி்ல் அவருக்கு ஜோடியாக ஒப்பந்தமாகியுள்ள நடிப்பு 'பப்பாளி' ஹன்சிகா மோத்வானி, சிம்புவுடன் இணைவது திரில்லானது என்று புளகாங்கிதப்பட்டுக் கூறியுள்ளார்.

இந்தப் படத்தில் முதலில் சிம்புவுக்கு ஜோடியாக நடிக்கவிருந்தவர் தீக்ஷா சேத். இப்போது அவர் இரண்டாவது ஹீரோயினாகிவிட, மெயின் ரோலுக்கு ஹன்ஸிகா வந்திருக்கிறார்.

இதுகுறித்து ஹன்ஸிகா கூறுகையில், "வேட்டை மன்னன் எனக்கு மிக முக்கிய படம். காரணம், கதைப்படி எனக்கு ஹீரோவுக்கு சமமான ரோல். சிம்புவுடன் நடிப்பது ரொம்ப த்ரில்லாக உள்ளது," என்றார்.

வேட்டை மன்னன் படத்தை இயக்குபவர் நெல்சன். நிக் ஆர்ட்ஸ் எஸ்எஸ் சக்ரவர்த்தி தயாரிக்கும் இந்தப் படத்துக்கு இசை யுவன் சங்கர் ராஜா.

சந்தானம் காமெடியை கவனித்துக் கொள்ள, சிம்புவுடன் இன்னொரு ஹீரோவும் படத்தில் உண்டு. அவர் ஜெய்!
 

ஒரு வழியாக ரிலீசாகிறது கரு பழனியப்பனின் சதுரங்கம்!


சதுரங்கம்... கரு பழனியப்பன் இயக்கத்தில் எப்போதோ தயாரான படம் இது. ஸ்ரீகாந்த் - சோனியா அகர்வால் ஜோடியாக நடித்துள்ள படம்.

பார்த்திபன் கனவு என்ற வெற்றிப் படம் தந்த கையோடு கரு பழனியப்பன் உருவாக்கிய இந்தப் படம், பல்வேறு காரணங்களால் ரிலீசாகவே இல்லை.

இடையில் ஸ்ரீகாந்த் மார்க்கெட் இழந்தார். உச்சத்திலிருந்து சோனியா அகர்வால் சினிமாவிலிருந்து விலகி, செல்வராகவனை திருமணம் செய்து, பின்னர் விவாரத்தும் ஆகி, இப்போது மீண்டும் நடிக்க ஆரம்பித்துள்ளார். சதுரங்கம் உருவான காலகட்டத்தைச் சொல்ல இது ஒன்றே போதும்!

இந்தப் படம் அவ்வளவுதான் என்றே பலரும் நினைத்திருந்த நேரத்தில், அதை மீண்டும் ரிலீசுக்கு தயார் செய்துள்ளனர். கடந்த சில தினங்களாக நாளிதழ்களில் விளம்பரம் தந்து வருகிறார்கள். இன்று பத்திரிகையாளர் காட்சி.

காலம் கடந்து வந்தாலும், நல்ல படம் என்பதால் சதுரங்கம் ஜெயிக்கும் என்பது இயக்குநர் நம்பிக்கை.

விரும்புகிறேன், உள்ளம் கேட்குமே போன்ற படங்களும் இப்படித்தான் பெரும் தாமதத்துக்குப் பிறகு வந்து ஜெயித்தன என்பதையும் நினைவூட்டுகிறார்கள்.

ஜெயிச்சா சந்தோஷம்!
 

டிங்குவின் மனைவி கொடுத்த புகார் எதிரொலி- டிவி நடிகை கவிதாவுக்கு வலைவீச்சு


நடிகர் டிங்குவின் மனைவி சுப்ரியா கொடுத்த புகாரைத் தொடர்ந்து டிங்கு 2வதாக சட்டவிரோதமாக கல்யாணம் செய்து கொண்டுள்ள டிவி நடிகை கவிதாவை போலீஸார் தேடி வருகின்றனர். இதையடுத்து கவிதா தலைமறைவாகி விட்டார். முன்ஜாமீன் கோரி மனு செய்ய அவர் முயற்சித்து வருவதாக தெரிகிறது.

குழந்தை நட்சத்திரமாக பல திரைப்படங்களில் நடித்தவர் டிங்கு. கமல்ஹாசனுடன் ஜப்பானில் கல்யாணராமன் படத்தில் நடித்துள்ளார். தற்போது டிவி சீரியல்களில் நடித்து வருகிறார். இவரது மனைவி சுப்ரியா. இவர்கள் காதல் மணம் புரிந்தவர்கள். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. டிங்குவின் அக்காள் சோனியா. இவர் சினிமா நடிகை, டிவி தொடர்களில் நடித்து வருகிறார். இவரது கணவர் போஸ் வெங்கட். சீரியல்களில் நடித்து சினிமாவிலும் தலை காட்டியவர்.

டிங்குவின் மனைவி சுப்ரியா சென்னை, திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒரு புகார் மனு கொடுத்துள்ளார்.

அதில், "ஒரு பட்டதாரி பெண்ணான நான் 1999-ல் சின்னத்திரை நடிகரான டிங்கு என்கிற அருண்காந்தை காதலித்து திருமணம் செய்தேன். எங்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. ஆரம்பத்தில் எனது குடும்பத்துக்கு எங்கள் திருமணம் பற்றி தெரியாது. தெரிந்த பிறகு எனது பெற்றோர் எங்களுடைய திருமணத்தை ஆடம்பரமாக நடத்தி வைத்தார்கள்.

திருமணத்தின்போது ரூ.30 லட்சம் மதிப்புள்ள தங்க, வைர நகைகள் எனக்கு அணிவிக்கப்பட்டது. 15 கிலோ வெள்ளி பாத்திரங்கள் சீதனமாக தந்தார்கள். என் கணவருக்கு ரூ.75 ஆயிரம் மதிப்புள்ள திருமண உடைகள் வாங்கி கொடுத்தனர். கணவர் வீட்டுக்கு சென்ற பிறகு அவரது தாயார் அஞ்சனாதேவி, எனது நகைகளையும், சீதன பொருட்களையும் வாங்கிக் கொண்டார்.

பின்னர் 'எனது தாய் வீட்டில் இருந்து வரதட்சணையாக கார் வாங்கி வரவேண்டும்' என்றார். எனது மாமியாரும், கணவரின் சகோதரி நடிகை சோனியா போஸும் கார் வாங்கி வரும்படி தொடர்ந்து வற்புறுத்தினார்கள். என்னை கேவலமாகவும் ஏசினார்கள். எனது கணவரும், `கார் வாங்கி வராவிட்டால் உன்னுடன் சேர்ந்து வாழமாட்டேன்' என்று மிரட்டினார்.

கார் வராவிட்டால் வேறு பெண்ணை என் மகனுக்கு கட்டி வைத்து விடுவேன் என்று மாமியார் அஞ்சனாதேவி சொல்லி வந்தார். ஆரம்பத்தில் என்னிடம் அன்பாக இருந்த என் கணவர் டிங்கு, குழந்தை பிறந்த பிறகு வீட்டுக்கு தாமதமாக வந்தார்.

சில நாட்கள் வீட்டுக்கே வருவது இல்லை. இதற்கிடையே என் கணவர் கவிதா என்ற நடன நடிகையை 2-வது திருமணம் செய்தது எனக்கு தெரியவந்தது. எனக்கு தெரியாமல் சட்டவிரோதமாக அந்த பெண்ணை அவர் மணந்துள்ளார். இதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது. எனவே எனது கணவர் டிங்கு மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்று கூறியிருந்தார் சுப்ரியா.

இதையடுத்து முன்ஜாமீன் கோரி சென்னை முதன்மை செஷன்ஸ் கோர்ட்டை அணுகினார் டிங்கு. ஆனால் சுப்ரியா தரப்பில் முன்ஜாமீன் தரக் கூடாது என்று வாதிடப்பட்டது. மேலும் டிங்கு, நடிகை கவிதாவை கல்யாணம் செய்தது தொடர்பான ஆதாரங்களையும் அவர்கள் தாக்கல் செய்தனர். இதையடுத்து உத்தரவை அக்டோபர் 20ம் தேதிக்கு நீதிபதி தேவதாஸ் ஒத்திவைத்தார்.

இந்த நிலையில் தற்போது சுப்ரியா கொடுத்த புகாரின் அடிப்படையில் நடிகை கவிதாவைப் பிடிக்க போலீஸார் முடிவு செய்து அவரைத் தேடி வருகின்றனர். போலீஸார் தேடி வருவதை அறிந்த கவிதா தலைமறைவாகி விட்டார்.

கவிதாவைக் கைது செய்து விசாரணை நடத்த போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.
 

ராணா படப்பிடிப்புத் தேதி டிசம்பரில் அறிவிக்கப்படும்! - கே எஸ் ரவிக்குமார்


ராணா படத்தின் படப்பிடிப்புத் தேதிகள் வரும் டிசம்பரில் வெளியாகும் என இயக்குநர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், "நாங்கள்தான் படப்பிடிப்பை தள்ளிப் போட்டு வருகிறோம். ஆனால் ரஜினி சார், வாரம் இருமுறை என் அலுவலகத்துக்கு வந்து 'படத்தை எப்போது தொடங்கலாம்...எதுக்காக காத்திருக்கணும்?' என்று கேட்கிறார். சார் இன்னும் கொஞ்ச நாள் ரெஸ்ட் எடுத்தா நல்லாருக்கும் என்பதால்தான் தள்ளிப் போடுகிறோம்.

நானும் ரஜினி சாரும் எப்போதும் போல அலுவலகத்தில் பேசிக் கொண்டிருந்தோம். அது வேறு மாதிரி வந்துவிட்டது. ரஜினி சாருக்கு, எனக்கு, தயாரிப்பாளருக்கு ராணா ஒரு பெருமைக்குரிய படம். இதை நிச்சயம் எடுப்போம். என்ன, கொஞ்சம் லேட் ஆகுது. இந்தப் படப்பிடிப்பு ரஜினிக்கு ஒரு இனிய அனுபவமாக அமைய வேண்டும். அதற்காக இன்னும் கொஞ்ச நாள் காத்திருக்கிறோம்.

வரும் டிசம்பரில் படப்பிடிப்புக்கான தேதி, மற்ற நட்சத்திரங்கள் பற்றியெல்லாம் அறிவித்துவிடுவோம். படத்தின் கதையில் எந்த மாற்றமும் இல்லை. திரைக்கதை மாற்றப்படவில்லை. சொல்லப் போனால் முன்னிலும் அதிக சுவாரஸ்யமாக, விறுவிறுப்பாக இந்த திரைக்கதை வந்துள்ளது. ரஜினி சார் வரும் ஆக்ஷன் காட்சிகள் முக்கியத்துவம் மிகுந்தவை. அதற்கேற்ப ரஜினி சார் தயாராக வேண்டும். அதற்காகத்தான் இந்த இடைவெளி. இனி ராணா பற்றி எதிர்மறையாக எந்த செய்தியும் வராது என நம்புகிறேன்," என்றார்.
 

தூம் 3-பிகினியை அடுத்து முத்தக் காட்சிக்கும் கத்ரீனா தடா?


தூம் 3 படத்தில் முத்தக் காட்சிகள் வேண்டாமே என்று நடிகை கத்ரீனா கைப் இயக்குனர் ஆதித்யா சோப்ராவிடம் கோரிக்கை வைத்துள்ளார்.

தூம் 3 படத்திற்கு ஊரெல்லாம் அலசி இறுதியில் கத்ரீனா கைபை கதாநாயகியாக ஒப்பந்தம் செய்துள்ளனர். கத்ரீனா ஆமிர் கான் ஜோடியாக நடிக்கிறார். இந்நிலையில் அவர் நிபந்தனை மேல் நிபந்தனை விதித்து வருகிறார்.

முதலில் பிகினி உடையில் வர மாட்டேன் அதனால் அதுபோன்ற காட்சியை வைக்காதீர்கள் என்றார். அதற்கு இயக்குனர் சம்மதித்தார். தற்போது படத்தில் முத்தக் காட்சிகள் எதுவும் வேண்டாமே என்று கத்ரீனா கூறியுள்ளார்.

தூம் 2 படத்தில் ரித்திக்கும், ஐஸ்வர்யா ராயும் சேர்ந்து ஹாட்டான முத்தக் காட்சியில் நடித்தனர். அது போன்ற காட்சியைத் தான் கத்ரீனா வேண்டாம் என்று கூறியுள்ளார்.

முதல் படத்திலேயே பிகினியில் வந்த கத்ரீனா தற்போது பிகினிக் காட்சிகளை தவிர்க்கிறார். தற்போது அந்த பட்டியலில் முத்தக் காட்சியும் சேர்ந்துள்ளது.

இதற்கு இயக்குனர் ஆதித்யா என்ன சொல்லப் போகிறார்? இத்தனை நிபந்தனைகள் போடும் கதாநாயகியை வைத்துக் கொண்டு என்ன செய்யப்போகிறார் ஆதித்யா? என்று பாலிவுட்டில் 'கவலையோடு' பேசிக் கொள்கிறார்கள்!
 

ரஷ்யாவில் கேவி ஆனந்தின் மாற்றான்!


தமிழ் சினிமா அதிகம் பார்த்திராத லொகேஷன்கள்தான் இயக்குநர் கேவி ஆனந்தின் இலக்கு.

அயன் படத்துக்காக நைஜீரியா, காங்கோ என ஆப்ரிக்காவில் முகாமிட்டவர், கோ படத்துக்கு சீனாவுக்கும் நார்வேக்கும் போனார்.

இப்போது, சூர்யா நடிக்கும் மாற்றான் படத்துக்காக அடுத்து ரஷ்யா சென்றுள்ளனர் ஆனந்த் குழுவினர். கடந்த செப்டம்பர் 29-ம் தேதியே மாஸ்கோ சென்றுவிட்டனர். ஹீரோ சூர்யாவும் இவர்களுடன் சென்றுள்ளார்.

அடுத்த மூன்று வாரங்களுக்கு சூர்யா குழுவினர் இங்குதான் முகாமிட்டிருப்பார்கள். ரஷ்ய நகரங்களை விட, அங்குள்ள கிராமங்கள் மற்றும் இயற்கைக் காட்சிகளை மையப்படுத்தி அதிக காட்சிகளை எடுத்து வருகிறாராம் கே வி ஆனந்த்.

கல்பாத்தி அகோரம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு, ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.
 

தரக்குறைவான புரொஜக்டர்கள்; ஏமாற்றப்படும் ரசிகர்கள் - 'ஒஸ்தி' தயாரிப்பாளர் ஆவேசம்


படத்தை ஒஸ்தியா எடுத்து என்ன பிரயோஜனம்... தியேட்டர்கள் ஒஸ்தியான பரொஜக்டர்கள், சவுண்ட் தரத்தோடு படத்தை திரையிட்டால்தானே காசு கொடுத்து படம் பார்க்கும் ரசிகர்கள் திருப்தியாக உணர்வார்கள், என்று வருத்தப்படுகிறார் ஒஸ்தி பட தயாரிப்பாளர் ரமேஷ்.

தனுஷை வைத்து உத்தமபுத்திரன் படத்தை தாயாரித்தவரும் பெரும் பொருட்செலவில் சிம்புவை வைத்து ஒஸ்தி படத்தை தயாரித்து வருபவருமான ரமேஷ் இது தொடர்பாக மேலும் கூறுவதாவது:

படங்களை திரையரங்குகளில் திரையிடுவத‌ற்கு என்று விதிமுறைகள் மற்றும் நெறிமுறைகளும் இருக்கின்றன. திரையரங்களில் படங்களை காண்பிக்க குறைப்பிட்ட அளவு துல்லியம் மிக்க புரஜக்டர்கள் பயன்படுத்தப்பட வேண்டும் என்ற விதிகள் இருக்கின்றன. அதாவது 4கே அளவிலான துல்லியம் கொண்ட புரஜக்டர்கள் பயன்படுத்தப்பட வேண்டும்.

திரைப்படங்கள் தொடர்பான தொழில்நுட்ப விஷயங்களை நெறிப்படுத்தும் ஹாலிவுட் அமைப்பான எஸ் எம் பி டி ஈ வலியுறுத்தும் இந்த நெறிமுறைகளுக்கு உட்பட்டே திரையரங்குகளில் படங்கள் திரையிடப்பட வேண்டும் .உலகம் முழுவதும் இந்த விதிகள் பின்பற்றப்பட்டு வருகின்ற‌ன.

இந்தியாவிலும் கூட திரைப்படங்கள் தொடர்பான சட்டம் இவற்றை வலியுறுத்துகின்றன.

ஆனால் சமீப காலமாக பல திரையரங்குகளில் இவை பின்பற்றப்படவில்லை என்பது தான் வேதனை. பெரும்பாலான திரையரங்குகளில் 1 கேவுக்கும் குறைவான துல்லியமான காட்சியை தரக்கூடிய புரஜக்டர்களே இருக்கின்றன. முன்னணி திரையரங்களில் சிலவும் இதற்கு விதிவிலக்கல்ல!

ஒரு சில மல்டிபிலக்ஸ் அரங்குகளில் ஒரு திரை தவிர மற்றவற்றில் தரக்குறைவான புரஜக்டர்கள் பயன்படுத்தப்படுகின்ற‌ன. இதனால் ரசிகர்கள் உயர்ந்த தரத்தில் காட்சிகளை பார்க்க முடியாமல் போகிறது. படங்கள் புள்ளி புள்ளியாக தெரியலாம்.

த‌யாரிப்பாளர்கள் கோடிக்கணக்கில் முதல் போட்டு அதிந‌வீன தொழில்நுட்பத்தில் படம் எடுத்தாலும் அதன் உண்மையான நோக்கம் நிரைவேறுவதில்லை. காரனம் தரக்குறைவான புரஜக்டர்களால் ரசிக‌ர்கள் உருவாக்கப்பட்ட தரத்தில் படங்களை பார்த்து ரசிக்க முடிவதில்லை.

அது மட்டுமல்ல; இப்படி தரக்குறைவான முரையில் படங்களை பார்ப்பதால் கண்க‌ளுக்கு பாதிப்பு ஏற்படலாம். அனுமதிக்கப்பட்ட ஒலி அளவுகளை விட கூடுதல் ஒலி அளவால் காதுகள் பாதிக்கப்படலாம். அதிலும் குறிப்பாக குழந்தைகளின் மெனையாம செவிகளுக்கு இவை ஏற்றதல்ல. மேலை நாடுகளில் திரையரங்குகளில் ஒலி அளவை கண்காணிக்க மீட்டர் பொருத்தியிருப்பார்கள். இங்கு இது பற்றியெல்லாம் கவலைப்படுவதுல்லை.

குறிப்பிட்ட சில திரையரங்குகள் தவிர மற்றவற்றில் தரக்குறைவான புரஜக்டர்களே இருக்கின்றன. இந்த புரஜக்டர்கள் திரையரங்குகளில் திரையிட ஏற்றவை அல்ல. கருத்தரங்கு போன்றவ‌ற்றில் பயன்படுத்த மட்டுமே உகந்தவை.

ஆனால் திரையிடல் தொழிலை கைக்குள் வைத்திருக்கும் குறிப்பிட்ட சில நிறுவனங்கள் இத்தகைய தரக்குறைவான புரஜக்டர்களை விநியோகித்து வருகின்றன. இதனால் ரசிகர்கள்தான் ஏமாற்றப்படுகின்ற‌னர்.

திரையரங்குகளில் விதிமுறை மீறப்படுவது குறித்து நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டு நிலுவையில் உள்ளது. இந்த நிறுவனங்கள் சார்பில் செல்வாக்கு மிக்க பெண் வழக்கறிஞ‌ர் ஆஜராகி வாதிட்டுள்ளர் என்பது வேதனையானது.

இதில் மேலும் வேதனை என்னவென்றால் வங்க தேசம் மற்றும் மலேசியா போன்ற நாடுகளில் இந்த நிறுவனங்கள் தரக்குறைவற்ற புரஜக்டர்களை பயன்படுத்தியதால் வெளியேற்றப்பட்டு விட்டன என்ப‌துதான். ஆனால் இந்தியாவில் இவை சுத‌ந்திரமாக செயல்ப‌டுகின்ற‌ன. இது ஏன்?

சில நிறுவன‌ங்கள் லாப நோக்கிற்காக மோசமான புரஜக்டர்களை விநியோகித்து வருவதால் படம் எடுக்கும் தயாரிப்பளர்களும் பாதிக்கப்படுகின்றன‌ர். ரசிகர்களும் ஏமாற்றப்படுகின்ற‌னர்.

இது குறித்து முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து முறையிட உள்ளேன்.

திரையுலக பிரமுகர்கள், குறிப்பாக ஃபிக்கி போன்ற அமைப்பில் பொறுப்பில் உள்ளவர்கள் இது குறித்து மவுனமாக‌ இருப்பது ஏன் என்று தெரியவில்லை.

திரையுலகை காப்பாற்ற‌ ரசிகர்களை பாதுகாக்க திரையிடல் தொடர்பான விதிமுறைகள் கண்டிப்பாக அமல்படுத்தப்பட வேண்டும்", என்றார்.
 

தீபிகாவின் புதுமனை புகு விழாவில் 'ஓவர் சத்தம்'-போலீஸ் வந்து நிறுத்தியது


மும்பை: இந்தி நடிகை தீபிகா படுகோனின் புது மனை புகு விழாவின்போது அதிக சத்தத்துடன் பாடலை ஒலிக்க விட்டு அக்கம் பக்கத்தினரை பெரும் துயரப்படுத்தி விட்டனர். இதையடுத்து அவர்கள் போலீஸாரை அழைக்க போலீஸார் வந்து சத்தத்தை நிறுத்தி பார்ட்டியையும் நிறுத்தினர்.

நடிகை தீபிகா படுகோன் மும்பை பிரபாதேவி பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் புது பிளாட் வாங்கியுள்ளார். இந்த பிளாட்டில் புதுமனை புகுவிழா நடந்தது. இதையொட்டி கோலாகல பார்ட்டிக்கும் ஏற்பாடு செய்திருந்தார் தீபிகா.

பார்ட்டி விடிய விடிய நடந்தது. மது விருந்துடன் தடபுடலாக நடந்த இந்த பார்ட்டியில் கலந்து கொண்டவர்கள் உச்சகட்ட ஆட்டத்தை வெளிப்படுத்தினர். பாடலையும் மிக சத்தமாக ஒலிக்க விட்டுள்ளனர். இதனால் அக்கம் பக்கத்தில் வசிப்போர் கடும் அவதிக்குள்ளானார்கள். இந்த குடிகார கூட்டத்தின் பாடல் மற்றும் ஆட்டத்தால் அந்த அடுக்குமாடிக் குடியிருப்பு முழுவதும் கடும் கோபமடைந்தது. உடனடியாக போலீஸாருக்குத் தகவல் அனுப்பினர்.

இதையடுத்து விரைந்து வந்த போலீஸார், 26வது மாடியில் உள்ள தீபிகாவின் பிளாட்டுக்குச் சென்று விசாரணை நடத்தினர். பின்னர் பாடல்களையும், ஆட்டத்தையும் நிறுத்துமாறு உத்தரவிட்டனர். அதன் பின்னர் ஆடிக் கொண்டிருந்த தீபிகா உள்ளிட்டோர் வருத்தம் தெரிவித்ததோடு பார்ட்டியையும் நிறுத்திக் கொண்டனர். அப்போது மணி அதிகாலை 3.15 ஆகும். பார்ட்டி முடியும் வரை அக்கம் பக்கத்தில் வசித்தோர் தூங்கக் கூட முடியாமல் தவித்துள்ளனர்.

தீபிகா வீட்டில் நடந்த இந்தக் கூத்து குறித்து தகவல் காட்டுத் தீ போல பரவியது. இதையடுத்து அடுக்குமாடிக் குடியிருப்பின் கீழே பெருமளவில் மக்கள் திரண்டு விட்டனர். அதேபோல பத்திரிக்கையாளர்களும் வந்து விட்டனர். இதைப் பார்த்த போலீஸார் அந்த வழியாக வந்தால் பத்திரிக்கையாளர்கள் கேள்விகளைக் கேட்டு துளைத்து எடுப்பார்கள் என்று பயந்து வேறுவழியாக வெளியேறி விட்டனர்.

இப்படி அக்கம் பக்கத்தில் உள்ளவர்களை நிம்மதியிழக்கச் செய்து, ஆட்டம் போட்ட தீபிகா உள்ளிட்டோருக்கு அபராதம் ஏதும் விதிக்கப்பட்டதா என்பது குறித்து போலீஸ் தரப்பில் ஒன்றும் தெரிவிக்கவில்லை.

தீபிகா வீட்டில் நடந்த இந்த கூத்து நிகழ்ச்சியில் விஜய் மல்லையா, நடிகர்கள் இம்ரான் கான், அவரது மனைவி அவந்திகா, அபய் தியோல், ப்ரீத்தி தேசாய், அமிதாப் பச்சன், கரண் ஜோஹர், பிரியங்கா சோப்ரா, சித்தார்த் மல்லையா, ஷாஹித் கபூர், அனுஷ்கா சர்மா, ரிதீஷ் தேஷ்முக், ரன்வீர் சிங், ஜெனிலியா உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

இந்த விருந்து குறித்து அமிதாப் பச்சன் விடுத்துள்ள ட்விட்டர் செய்தியில், நான்தான் இந்த பார்ட்டியிலேயே மிகவும் வயதான கெஸ்ட் எனறு பெருமையுடன் குறிப்பிட்டுள்ளார்.

நடிகர், நடிகையர்களுக்கு வழக்கமாக ஏதாவது பண்ணை வீடு ஒன்று இருக்கும். அங்குதான் இதுபோன்ற கூத்துக்களை பெரும்பாலும் அரங்கேற்றுவார்கள். . தீபிகாவும் பேசாமல் ஒரு பண்ணை வீட்டை வாங்கிக் கொண்டால் எதிர்காலத்தில் இதுபோன்ற குழப்பங்களைத் தவிர்க்கலாம்.
 

மீண்டும் விஷ்ணுவை வைத்து படம் இயக்கும் சுசீந்திரன்!


வெண்ணிலா கபடி குழு, நான் மகான் அல்ல, அழகர்சாமியின் குதிரை போன்ற படங்கள் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி இடம் பிடித்துவிட்ட சுசீந்திரன் தனது அடுத்த படத்தை அறிவித்துள்ளார்.

சுசீந்திரன் இப்போது இயக்கிவரும், விக்ரம் நடிக்கும் ராஜபாட்டை படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. இன்னும் சில காட்சிகள் பாக்கியிருந்தாலும், இப்போதே போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை ஆரம்பித்துவிட்டார்கள்.

உடனடியாக தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார் சுசீந்திரன்.

இந்தப் படத்தில் அவரது ஹீரோ விஷ்ணு. வெண்ணிலா கபடி குழுவில் சுசீந்திரன் அறிமுகப்படுத்திய அதே விஷ்ணுதான்!

இந்தப் படம் முழுக்க முழுக்க நகைச்சுவை ஆக்ஷன் படமாக வருகிறது. இன்னும் பெயர் சூட்டப்படாத இந்தப் படத்தின் ஷூட்டிங் முழுக்க முழுக்க சென்னையிலேயே நடக்கிறது.

பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இந்தப் படத்தின் நாயகி மற்றும் இதர தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம் விரைவில் வெளியாக உள்ளது.
 

ரா ஒன் படத்துக்காக மும்பையில் மூன்று மணிநேரம் நடித்துக் கொடுத்த ரஜினி!


ஷாரூக்கானின் ரா ஒன் படத்தில் ஒரு காட்சியில் மட்டும் தோன்றுகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இந்தக் காட்சியில் அவர் நடிப்பாரா இல்லையா என பலத்த சந்தேகம் நீடித்தது.

ஆனால் கடைசியில், அந்த சந்தேகத்தையெல்லாம் தூளாக்கிவிட்டு, மும்பையில் மூன்று மணிநேரம் இந்தப் படத்துக்காக நடித்துக் கொடுத்துள்ளார் ரஜினி.

ஆரம்பத்தில் இந்தப் படத்தில் ரஜினி நடிக்க கூடாது என்றே அவரது குடும்பத்தினர் கூறிவந்தனர். ஆனால் ஷாரூக்கானே ரஜினியிடம் போனில் இதுகுறித்துக் கேட்டுள்ளார்.

டாக்டர்கள் இன்நும் ஒரு மாதம் ரெஸ்ட் எடுக்கச் சொல்லியிருக்கிறார்களே என ரஜினி நாசூக்காக அப்போது சொன்னாராம். ஆனால் சில தினங்கள் கழித்து ரஜினி மகள் சௌந்தர்யாவே ஷாரூக்கானைத் தொடர்பு கொண்டு, அந்தக் காட்சி எப்படி வர வேண்டும் என்று கேட்டுள்ளார். உடனே ஷாரூக்கும் அதுகுறித்த வீடியோவை அனுப்ப, இந்தப் படத்தின் ஷூட்டிங் ஹைதராபாத் ராமோஜி ராவ் சிட்டியில் அக்டோபர் 4-ம் தேதி நடத்த திட்டமிட்டிருந்தார்களாம்.

ஆனால் கடைசி நேரத்தில் ரஜினியின் விருப்பப்படி மகாத்மாவின் பிறந்த தினமான அக்டோபர் 2-ம் தேதியே மும்பையில் உள்ள இயக்குநர் சுபாஷ் கய்யின் பிலிம் இன்ஸ்டிட்யூட் நிறுவன வளாகத்தில் உள்ள ஸ்டுடியோவில் வைத்து இந்தக் காட்சி படமாக்கப்பட்டுள்ளது.

இந்தக் காட்சியை எடுத்து முடிக்க சரியாக மூன்று மணி நேரம் பிடித்துள்ளது. இந்த மூன்று மணி நேரமும் ரஜினி மிக இயல்பாக, தனக்கே உரிய ஸ்டைலில் நடித்துக் கொடுத்துள்ளார்.

இந்த தகவலை நேற்று மாலை ஷாரூக்கான் தனது ட்விட்டரில் உறுதிப்படுத்தியிருந்தார்.

இதைத் தொடர்ந்து ரஜினியின் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். ரா ஒன்னை தீபாவளி திரை விருந்தாகவே அவர்கள் கருத ஆரம்பித்துள்ளனர்.