சென்னை: தலைவா படம் தமிழகத்தில் நாளை திட்டமிட்டபடி வெளியாகாத சூழல். ஆனால் எப்படியாவது விடிவதற்குள் பிரச்சினை தீர்ந்துவிடாதா என்ற யோசனை மற்றும் ுழப்பத்தில் உள்ளன பல திரையரங்குகளும் ரசிகர்களும்.
முன்னணி திரையரங்குகளான சத்யம், எஸ்கேப், ஐநாக்ஸ் போன்றவை Coming Soon என்ற பகுதியில் வைக்கப்பட்டிருந்த தலைவா பட ஸ்லைடுகளையும் அகற்றிவிட்டன.
தலைவா படம் தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, மும்பை மற்றும் உலகம் முழுவதிலும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தியேட்டர்களில் திரையிடப்படும் என்று சந்திர பிரகாஷ் ஜெயின் கூறினார்.
புதன்கிழமை காலை தியேட்டர்களில் முன்பதிவு துவங்க இருந்த நிலையில்தான் திடீரென்று தலைவா படத்தை திரையிடும் தியேட்டர்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் மாணவர் புரட்சிப்படை என்ற பெயரில் தியேட்டர்களுக்கு வந்த மர்ம கடிதத்தில் தலைவா படத்தை திரையிட்டால் உங்கள் தியேட்டரில் குண்டு வெடிக்கும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தத. போன் மூலமும் மிரட்டல்கள் வந்தன.
இதையடுத்து டிக்கெட் முன்பதிவு நிறுத்தப்பட்டது. இப்பிரச்சினை குறித்து விவாதிக்க தியேட்டர் அதிபர்கள் சங்கம் கூட்டம் நேற்று மாலை பிலிம்சேம்பரில் நடந்தது. சங்க தரைவர் அபிராமி ராமநாதன் தலைமை தாங்கினார். இதில் தியேட்டர் அதிபர்கள், விநியோகஸ்தர்கள் பங்கேற்றனர்.
நள்ளிரவு வரை கூட்டம் காரசாராக நடந்தது. தலைவா படத்துக்கு மற தணிக்கைக் குழு யு சான்றிதழ் அளித்துள்ளது. வரி விலக்கு குழுவினருக்கு படத்தை திரையிட்டு காட்டி வரி விலக்கு பெற்று தர வேண்டும் என்று தியேட்டர் அதிபர்கள் தரப்பில் வற்புறுத்தப்பட்டது. அதன்படி இன்று போர்பிரேம்ஸ் திரையரங்கில் அரசு அதிகாரிகளும் வரிவிலக்கு பரிந்துரைக் குழுவினரும் படம் பார்த்தனர்.
வரி விலக்குச் சான்றிதழ் நகல் அளிக்கப்பட்டால் மட்டுமே படத்தைத் திரையிட முடியும் என தியேட்டர் உரிமையாளர்கள் உறுதியாக உள்ளனர். இன்று இரவுக்குள் எப்படியும் வரி விலக்கு சான்றிதழ் கிடைத்துவிடும் என தயாரிப்பாளர் தரப்பில் உறுதி தரப்பட்டுள்ளது.
இதற்கிடையில், விஜய்யையும் அவர் தந்தை எஸ்ஏ சந்திரசேகரையும் சந்திக்க மறுத்து முதல்வர் திருப்பியனுப்பிய செய்தி திரையரங்க உரிமையாளர்களை எந்த முடிவுக்கும் வரவிடாமல் செய்துவிட்டது.
இந்தப் படத்தின் பிரச்சினைக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை உணர்த்தவே முதல்வர் ஜெயலலிதா அவர்களைச் சந்திக்க மறுத்துள்ளார். மற்றபடி நாளை படம் வெளியாவது உறுதி என தலைவா குழுவினர் தரப்பில் கூறி வந்தனர்.
ஆனால் வியாழன் இரவு வரை படம் வருமா வராதா என விஜய், தயாரிப்பாளர், எஸ்ஏசி தரப்பிலிருந்து எந்த தகவலும் கிடைக்கப் பெறாததால், நாளை தலைவா ஷோ இருக்கமா என்ற குழப்பத்தில் ரசிகர்களும், எப்போது ரிலீஸ் என்ற குழப்பத்தில் தியேட்டர்களும் உள்ளன.