தீபாவளி ரிலீஸ் படங்களுக்கு கூடுதல் காசு பறித்தால் கடும் நடவடிக்கை-அரசு எச்சரிக்கை


தீபாவளிக்கு வெளியாகும் படங்களைத் திரையிடும் தியேட்டர்கள் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதலாக வசூலித்தால் தியேட்டர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு எச்சரித்துள்ளது. இதையடுத்து தியேட்டர்கள் மீது அதிகாரிகள் அதிரடியாக நடவடிக்கையில் குதித்துள்ளனர்.

தமிழ் சினிமா நலிவடைந்து விட்டது, மக்கள் தியேட்டர்களுக்கு படம் பார்க்க வருவதில்லை, திருட்டு விசிடி, டிவிடி தொல்லை அதிகரித்து விட்டது என்று தமிழ்த் திரையுலகில் தொடர்ந்து புலம்பல்கள் இருந்தவண்ணம் உள்ளது. ஆனால் தியேட்டர்களில் வசூலிக்கப்படும் அநியாய கட்டணத்தால் வெகுண்டுதான் மக்கள் தியேட்டர்களுக்குப் போவதையே கைவிட்டு விட்டனர் என்ற உண்மை அவர்களுக்குப் புரியவில்லை.

தியேட்டர்கள் புதுப் படங்கள் குறிப்பாக தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைகளின்போது வெளியாகும் படங்களுக்கு தாறுமாறாக கட்டணம் வசூலிக்கிறார்கள். இதனால் தியேட்டருக்குப் போய் படம் பார்க்கலாம் என்ற எண்ணம் வருகிறவர்களும் கூட போகாமல் இருந்து விடுகின்றனர்.

இந்த நிலையில் தற்போது தீபாவளியையொட்டி ஒரு வாரத்திற்கு தியேட்டர்களில் தினசரி 5 காட்சிகளைக் காட்டிக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது. ஆனால் இந்த 7 நாட்களிலும் மிகப் பெரிய அளவில் வசூலை அள்ளிவிட தியேட்டர்காரர்கள் தயாராகி வருவதாக கூறப்படுகிறது. படம் எத்தனை நாள் ஓடுமோ என்னவோ என்ற பயத்தில் உள்ள தியேட்டர்காரர்கள், பெருமளவில் கட்டணத்தை வசூலிக்கும் திட்டத்தில் உள்ளதாக தெரிகிறது.

ஏற்கனவே, அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தியேட்டர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டசபையில் ஏற்கனவே அமைச்சர் செந்தமிழன் அறிவித்துள்ளார்.

தற்போது தீபாவளி படங்களுக்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்க அதிகாரிகள் அதிரடி வேட்டையில் இறங்கி உள்ளனர். திருப்பூர் பகுதியில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார் வந்ததை தொடர்ந்து நேற்று ஒரே நேரத்தில் 11 தியேட்டர்களில் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

கோவையில் நிர்ணயித்த கட்டணத்தை விட அதிக கட்டணம் வசூலித்த ஒரு தியேட்டரின் உரிமத்தை ரத்து செய்து கலெக்டர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதேபோல தமிழகம் முழுவதும் ஒரு தியேட்டர் விடாமல் அரசு அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பாவி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
 

பாய்ந்து பாய்ந்து தாக்கும் ஷாயாலி பகத்!


காட்டுப் புலி படத்தில் அர்ஜூன் மட்டும்தான் பைட் செய்திருக்கிறார் என்றால் சற்றே திருத்திக் கொள்ளுங்கள். படத்தின் நாயகியான ஷாயாலி பகத்தும் கூட அதி பயங்கரமான சண்டைக் காட்சிகளில் நடித்து அசத்தியுள்ளாராம்.

இந்த செய்தியை அர்ஜூன்தான் சொல்லியுள்ளார். காட்டுப்புலி என்ற படத்தில் டாக்டர் வேடத்தில் வருகிறார் அர்ஜூன். காட்டுக்குள் சிக்கிக் கொண்ட ஒரு குழுவை பத்திரமாக மீட்டுக் கொண்டுவரும் கதையாம். இப்படத்தில் அர்ஜூனுக்கு ஜோடி போட்டிருப்பவர் ஷாயாலி.

இப்படத்தில் தான் மட்டுமல்லாமல், நாயகி ஷாயாலியும் ஆபத்தான சண்டைக் காட்சிகளில் நடித்திருப்பதாக கூறுகிறார் அர்ஜூன். சண்டைக் காட்சிகளில் நடிக்க வேண்டும் என்று அவரிடம் கூறியபோது அவர் சற்றும் தயக்கம் காட்டவில்லை என்றும் துணிச்சலாகநடித்தார் என்றும் கூறியுள்ளார் அர்ஜூன்.

தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் இந்தியிலும் இப்படத்தை உருவாக்கியுள்ளனர். தமிழ் ரிலீஸ் உரிமையை கலைப்புலி தாணு வாங்கியுள்ளார்.

காட்டுப் புலியை வாங்கிய கலைப்புலி - செம பொருத்தம் போங்க...!
 

127 அவர்ஸ் படத்திற்காக ரஹ்மானுக்கு 'பப்ளிக் சாய்ஸ்' விருது


டெல்லி: பெல்ஜியம் நாட்டில் நடந்த உலக சவுண்டு டிராக் அகாடமி விருதுகள் 2011 நிகழச்சியில் இசைப்புயல் ஏ. ஆர். ரஹ்மானுக்கு 127 அவர்ஸ் படத்திற்காக ப்பளிக் சாய்ஸ் விருது கிடைத்துள்ளது.

இசைப்புயல் ஏ. ஆர். ரஹ்மான் ஸ்லம்டாக் மில்லியனர் படத்திற்காக இரண்டு ஆஸ்கர் விருதுகள், இரண்டு கிராமி விருதுகள் வாங்கி இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார். 127 அவர்ஸ் என்ற ஹாலிவுட் படத்தில் இடம் பெறும் ஒரு பாடலுக்கு சிறப்பான முறையில் ஒரிஜினல் இசையை கம்போஸ் செய்துள்ளமைக்காக ஏ. ஆர். ரஹ்மானின் பெயர் மறுபடியும் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது.

ஆனால் அவருக்கு ஆஸ்கர் கிடைக்காமல் போனது. இந்நிலையில் பெல்ஜியம் நாட்டில் உலக சவுண்டு டிராக் அகாடமி விருதுகள் நிகழ்ச்சி நடந்தது. அதில் 127 அவர்ஸ் படத்தில் சிறப்பாக இசையமைத்தற்காக ஏ. ஆர். ரஹ்மானுக்கு பப்ளிக் சாய்ஸ் விருது வழங்கப்பட்டது.

127 அவர்ஸ் படத்திற்காக எனக்கு பப்ளிக் சாய்ஸ் விருது கிடைத்ததற்காக எனது ரசிகர்கள் மற்றும் உலக சவுண்டு டிராக் அகாடமிக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று ரஹ்மான் பேஸ்புக்கில் தெரிவித்துள்ளார்.

சத்தமில்லாமல் விருதுகள் வாங்கிக் குவிக்கிறார் இசைப்புயல்...
 

ஆன்ட்ரியாவைப் பார்த்து பயப்படுகிறேனா..? - சோனியா அகர்வால் கோபம்


"சினிமாவில் யாரைப் பார்த்தும் நான் பயந்ததில்லை. குறிப்பாக ஆன்ட்ரியாவைப் பார்த்து நான் பயப்பட மாட்டேன். அவருக்காக எந்த வாய்ப்பையும் உதறிவிட மாட்டேன்," என்றார் நடிகை சோனியா அகர்வால்.

மலையாளத்தில் ஒரு படத்தில் மோகன்லாலுடன் நடிக்க சோனியா அகர்வாலுக்கு வாய்ப்பு வந்தது. ஆனால் இந்தப் படத்தில் ஆன்ட்ரியாவும் ஒரு நாயகியாக ஒப்பந்தம் ஆகியுள்ளார். முதலில் ஒப்புக் கொண்ட சோனியா அகர்வால், பின்னர் நடிக்க மறுத்துவிட்டாராம்.

ஆன்ட்ரியா நடிப்பதால்தான் சோனியா நடிக்க மறுத்தார் என்று செய்தி பரவியது. ஆன்ட்ரியா குறுக்கிட்டதால்தான் சோனியா - செல்வராகவன் திருமண வாழ்க்கை விவாகரத்தில் முடிந்ததாக ஒரு பேச்சு உள்ளது. எனவே திருமண வாழ்க்கையைக் கெடுத்த ஆன்ட்ரியா, இப்போது சினிமா வாழ்க்கையையும் கெடுக்கப் பார்க்கிறார் என்ற ரீதியில் செய்தி வெளியாகின.

இந்த நிலையில், சோனியா அகர்வாலிடம் இதுகுறித்து நிருபர்கள் கேட்டனர்.

அவர் கூறுகையில், "பெரிய நடிகர்களுடன் நடிக்க வேண்டும் என்றுதான் இப்போது மிகவும் விரும்புகிறேன். ஆனால், இந்தப் படத்தின் கதையில் என் பாத்திரத்துக்கு எந்த முக்கியத்துவமும் இல்லை. நமக்கு எந்த வகையிலும் பெருமை சேர்க்காத ஒரு படத்தில் நடித்து என்ன ஆகப்போகிறது. அதனால்தான் நடிக்கவில்லை.

ஆனால் ஆன்ட்ரியாவுக்காக நான் நடிக்கவில்லை என்பது தவறு. சினிமாவில் யாரைப் பார்த்தும் நான் பயப்படமாட்டேன். அதிலும் ஆன்ட்ரியாவைப் பார்த்து நிச்சயம் நான் பயப்பட மாட்டேன்," என்றார்.
 

விமான நிலையங்களில் தொடர்ந்து சிக்கும் நடிகை மினிஷா லம்பா


துபாய்: துபாய் விமான நிலையத்தில் நடிகை மினிஷா லம்பாவின் பாஸ்போர்ட்டை பறித்து கொண்ட, குடியுரிமை அதிகாரி ஒருவர், அவரை காத்திருக்க கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

காஷ்மீரை சேர்நதவர் மினிஷா லம்பா (26). மாடலிங் துறையில் பொழுது போக்காக நடிக்க வந்த இவர், தற்போது இந்தி நடிகையாக உள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன் துபாய் சென்ற நடிகை மினிஷாவிடம், விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் சில விவரங்களை கேட்டனர். அதிகாரி ஒருவர், நீங்கள் எந்த லாட்ஜில் தங்கியிருக்கிறீர்கள் என கேட்டுள்ளார்.

அதற்கு மினிஷா, அந்த விபரங்கள் எனக்கு ஞாபகம் இல்லை. விமான நிலையத்தில் என்னை அழைத்து செல்ல காத்திருக்கும் நபருக்கு தான் அது தெரியும் என கூறியுள்ளார். அந்த பதிலில் திருப்தியடையாத அதிகாரி, நடிகையின் பாஸ்போர்ட்டை பறித்து கொண்டு, அங்கிருந்த ஒரு நாற்காலியை காட்டி, வாயை மூடி கொண்டு அங்கே போய் உட்கார் என உறுதியாக கூறிவிட்டார். பின்னர் அங்கிருந்த மூத்த அதிகாரி ஒருவர் வந்து நடிகைக்கு பாஸ்போர்ட்டை திரும்ப வாங்கி கொடுத்து சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தார்.

இதுகுறித்து நடிகை மினிஷா கூறியதாவது, என்னிடம் தங்கியுள்ள ஹோட்டல் குறித்த விவரங்களை கேட்டார். அது பற்றி எனக்கு ஞாபகம் இல்லை. விமான நிலையத்தின் வெளியே எனக்கு வேண்டியவர் நிற்பதாக தெரிகிறது. அவருக்கு தான் அந்த விபரங்கள் தெரியும் என கூறினேன்.

அதுகுறித்து எனது மொபைல்போனில் இருந்த விவரங்களையும், அவருக்கு காட்ட முயன்றேன். அதை கவனிக்காத அந்த அதிகாரி என்னை கடினமாக திட்டிவிட்டார். மும்பை திரும்பியவுடன், அந்த சம்பவம் குறித்து புகார் அளிப்பேன். இந்தாண்டில் விமான நிலையங்களில் எனக்கு நேரமே சரி இல்லை. ஒரு ஜோதிடர் கூறியது போல ரயிலில் பயணம் செய்வதே நல்லது என நினைக்கிறேன், என்றார்.

நடிகை மினிஷா கடந்த கடந்த மே மாதம் பிரான்ஸ் நாட்டில் நடந்த கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்டு, மும்பை விமான நிலையம் வந்திறங்கியபோது, 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகளுடன் சுங்கத்துறை அதிகாரிகளிடம் பிடிபட்டார். பின்னர் அவர் விசாரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 

ஏழாம் அறிவு படம் எப்டி இருக்கு!


தீபாவளிக்கு வெளியான ஏ.ஆர்.முருகதாஸ்-சூர்யா கூட்டணி படமான ஏழாம் அறிவு படத்துக்கு அடுத்த ஒரு வாரத்துக்கு சென்னையில் டிக்கெட் இல்லை. இந்தப் படத்துக்கான புக்கிங் ஓபன் ஆனவுடனேயே அடுத்த ஒரு வாரத்துக்கான டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துவிட்டன.

இதனால் சூர்யாவின் ரசிகர்களுக்கு ஒரு பக்கம் ஏமாற்றமே என்றாலும், இன்னொரு பக்கம் தங்களது 'தலைவரின்' படத்துக்கான டிக்கெட்டுகள் இவ்வளவு வேகத்தில் விற்றுவிட்டதில் மகிழ்ச்சியாகவும் இருக்கிறார்கள்.

மிகுந்த எதிர்பார்ப்புக்கிடையில் வெளியாகியுள்ள இந்தப் படம் குறித்து கலவையான விமர்சனங்கள் வெளியே வந்து கொண்டுள்ளன. ஒரு சிலர் ஆகா.. ஓஹோ என்கின்றனர். மற்றவர்கள், ரொம்ப எதிர்பார்த்துப் போனேன்.. அந்த அளவுக்கு ஒன்னுமில்லை என்கின்றனர்.

சீக்கிரமா திரும்பி வந்து விமர்சனத்தை எழுதுப்பா (தீபாவளி லீவுன போன) ஷங்கர்!.

நமது விமர்சனம் வெளியாகும் வரை.. படம் குறித்த உங்கள் கருத்துக்களை எழுதுங்களேன்...
 

ரா.ஒன் முதல் நாள் வசூல் ரூ. 22 கோடி..ரெக்கார்ட் பிரேக்!


இந்தியா முழுவதும் 3,200 தியேட்டர்களில் வெளியாகியுள்ள ஷாருக் கானின் ரா.ஒன் முதல் நாளிலேயே ரூ. 22 கோடியை வசூலித்து ரெக்கார்ட் பிரேக் செய்துள்ளது.

படத்தின் இந்திப் பதிப்பு ரூ. 20 கோடியை ஈட்ட, தமிழ் மற்றும் தெலுங்கு டப்பிங் பதிப்புகள் தலா ரூ. 1 கோடியை ஈட்டியுள்ளன.

ரூ. 145 கோடியில் ஷாருக் தயாரித்துள்ள இந்தப் படம் நாட்டின் பெரும்பான்மையான மல்டி பிளக்ஸ்களில் 20 சதவீதம் அதிகமான டிக்கெட் விலையுடன் திரையிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சல்மான் கானின் பாடிகார்ட் நாடு முழுவதும் 2,700 தியேட்டர்களில் வெளியிடப்பட்டு ஒரே நாளில் ரூ. 21 கோடியை வசூலித்தது. இது தான் இதுவரை இந்திப் படத்தின் ரெக்கார்ட் பிரேக்காக இருந்தது. இதை முறியடித்துள்ளது ரா.ஒன் என்கிறார்கள்.

பாடிகார்ட் ரிலீசான முதல் 5 நாட்களில் ரூ. 80 கோடியை ஈட்டியது. ரா.ஒன் ரூ. 100 கோடி வசூலைத் தாண்டும் என்கிறார்கள்.