சென்னை: ஒரு நடிகனாக வேண்டும் என்றுதான் வந்தேன். ஆனால் இப்போது இயக்குநராகிவிட்டேன். ஆனாலும் நான் பெரிதாக எதையும் சாதித்ததாக நினாக்கவில்லை என்றார் இயக்குநர் ஷங்கர்.
30 ஆண்டுகளுக்கு முன் தான் இயக்கி வெற்றி பெற்ற சட்டம் ஒரு இருட்டறை படத்தை, தன் உதவியாளர் சினேகா பிரிட்டோவை வைத்து மீண்டும் ரீமேக் செய்கிறார் எஸ் ஏ சந்திரசேகரன். இதன் தயாரிப்பு மற்றும் இயக்க மேற்பார்வையை மட்டும் அவர் கவனிக்கிறார்.
இயக்குநர் சினேகாவை அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. அதில் இயக்குநர் ஷங்கர் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.
சினேகா பிரிட்டோவை அறிமுகம் செய்து வைத்து, ஷங்கர் பேசுகையில், "நான் பெரிதாக எதுவும் சாதித்து விட்டதாக எனக்கு தோன்றவில்லை. அப்படி நான் ஏதாவது சாதித்திருப்பதாக கருதினால், அந்த பெருமை மொத்தமும் எஸ்.ஏ.சந்திரசேகரனைத்தான் சாரும்.
அவரிடம் உதவி டைரக்டராக சேருவதற்கு முன், சில மேடை நாடகங்களில் நடித்திருந்தேன். நடிப்பதற்காக வாய்ப்பு கேட்டுத்தான் எஸ்.ஏ.சந்திரசேகரனிடம் சென்றேன்.
நடிப்பதற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும், உதவி டைரக்டர் ஆகிவிட்டேன். சுறுசுறுப்பு, ஒழுக்கம், நேரம் தவறாமை, திட்டமிடல் ஆகியவற்றை அவரிடம் கற்றுக்கொண்டேன். இளம் பெண் இயக்குனர் சினேகா பிரிட்டோவும், இந்த படமும் வெற்றி பெற வாழ்த்துகிறேன்,'' என்றார்.
முன்னதாகப் பேசிய எஸ் ஏ சந்திரசேகரன், இயக்குநர் ஷங்கரின் நேரம் தவறாமை மற்றும் கொடுத்த வாக்கைக் காப்பாற்றும் பண்பு பற்றி பாராட்டிப்பேசினார்.
"எந்த சூழலிலும் கொடுத்த வாக்கைக் காப்பாற்றும் குணமுடையவர் ஷங்கர். இந்த நிகழ்ச்சிக்காக அவரை அழைக்க தொலைபேசியில் தொடர்பு கொண்டேன். விஷயத்தை முழுவதுமாகக் கூட அவர் கேட்கவில்லை. நிச்சயம் வருகிறேன் சார் என்றார். தன் ஷூட்டிங்கைக் கூட விட்டுவிட்டு இந்த நிகழ்ச்சிக்காக அவர் வந்திருக்கிறார்," என்றார்.
நிகழ்ச்சியில் தயாரிப்பாளர்கள் விமலாராணி, சேவியர் பிரிட்டோ, இசையமைப்பாளர் விஜய் ஆன்டனி, நடிகர் தமன்குமார், நடிகைகள் ரீமாசென், பிந்து மாதவி, பியா, டைரக்டர் சினேகா பிரிட்டோ ஆகியோரும் பேசினார்கள்.