வெள்ளியங்கிரியில் மாயமான ஆர்ட் டைரக்டர்... இன்னும் கிடைக்கலை

கோவை:மகாசிவராத்திரி தினத்தன்று வெள்ளியங்கிரி மலைக்கு போன சினிமா ஆர்ட் டைரக்டர் மாயமாகி ஒருமாதமாகியும் இன்னும் கண்டுபிடிக்க முடியாமல் வனத்துறையினர் திணறிவருகின்றனர்.

மதுபானக் கடை படத்தில் தன் விவசாய நிலத்தை டாஸ்மாக் கடை வைக்க கொடுத்துவிட்டு குடித்து குடித்து சாகும் விவசாயி கேரக்டரில் நடித்தவர் வினோ மிர்தாத்.

அவர்தான் அந்தப் படத்தின் ஆர்ட் டைரக்டரும்கூட. திண்டுக்கல்லைச் சேர்ந்த வினோவுக்கு டிரக்கிங் டூர் எனப்படும் மலையேறும் பழக்கம் உண்டு. அடிக்கடி மலைக்கு சென்று வருவாராம்.

மகாசிவராத்தியில் பயணம்

மகாசிவராத்திரியை முன்னிட்டு கடந்த மாதம் பிப்ரவரி 27ந் தேதி கோவைக்கு அருகில் உள்ள வெள்ளியங்கிரி மலைக்கு செல்வதாக நண்பர்களிடம் சொல்லிவிட்டு சென்றிருக்கிறார்.

வழி தவறிய வினோத்

அடுத்த நாள் மதுபானக்கடை இயக்குனர் கமலக் கண்ணனுக்கு போன்செய்து "வழி தவறி வந்துட்டேன்"னு மெசேஜ் அனுப்பி இருக்கிறார். மீண்டும் அவரை தொடர்பு கொண்டபோது "எங்கே இருக்கேன்னு தெரியல ஏதாவது லேண்ட் மார்க் வந்ததும் போன் பண்றேன்"னு சொல்லியிருக்கிறார். அதன்பிறகு அவரது தொலைபேசி சுவிட்ச் ஆஃப் ஆகிவிட்டதாம்.

தேடுதல் வேட்டை

இது தொடர்பாக போலீசில் புகார் செய்யப்பட்டிருக்கிறது. நண்பர்கள், போலீசார், காட்டு இலாகா அதிகாரிகள் தேடியும் இதுவரை வினோவை கண்டுபிடிக்க முடியவில்லை. அவர் எங்கிருக்கிறார், எப்படி இருக்கிறார் என்று தெரியவில்லையாம்.

ஒரு மாதம் நிறைவு

வினோ காணாமல் போய் இன்றுடன் ஒரு மாதமாகிறது. அவர் தற்போது ஒன்பது குழி சம்பத், நீர் நிலம் காற்று படங்களில் ஆர்ட் டைரக்டராக பணியாற்றி வந்தார். கடந்த ஒருமாதகாலமாக அவரைக் காணாமல் அவரது உறவினர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

 

நடிகை சீதாவின் தந்தை காலமானார்

சென்னை: பிரபல நடிகை சீதாவின் தந்தை பி.எஸ்.மோகன்பாபு இன்று அதிகாலை மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 76.

சீதாவின் தந்தை கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்தார். இன்று அதிகாலை மூன்று மணியளவில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார்.

நடிகை சீதாவின் தந்தை காலமானார்

இறந்த மோகன்பாபு அவர்களுக்கு பி.எஸ்.சந்திராவதி என்ற மனைவியும் பாண்டு, துஷ்யந்த் என்ற இரண்டு மகன்களும் சீதா என்ற ஒரு மகளும் உள்ளனர். அவரது உடல் சாலிகிராமத்தில் உள்ள புஷ்பா காலனியில் அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. பின்பு இறுதி சடங்குகள் இன்று மாலை 3.30 மணியளவில் போரூரில் உள்ள மின் மயானத்தில் நடைபெற உள்ளது.