சென்னை: அரசியலிலும் நான் காமெடிதான் செய்தேன். இப்பவும் அதைத்தான் பலரும் அங்கே செய்து கொண்டிருக்கிறார்கள், என்றார் நடிகர் வடிவேலு.
இரண்டரை ஆண்டு இடைவெளிக்குப் பிறகு வடிவேலு நடிப்பில் வெளியாகும் படம் தெனாலிராமன். இதில் அவர் கதாநாயகனாக, இரண்டு வேடங்களில் நடித்துள்ளார்.
வடிவேலுக்கு ஜோடியாக மீனாட்சி தீக்ஷித் நடிக்கிறார். இப்படத்திற்கு இமான் இசையமைக்கிறார். ராம்நாத் ஷெட்டி ஒளிப்பதிவு செய்துள்ளார். கதை, திரைக்கதை எழுதி யுவராஜ் தயாளன் இயக்கியுள்ளார்.
படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது, வரும் ஏப்ரல் 18-ம் தேதி வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.
படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னை பிரசாத் லேப் தியேட்டரில் நடந்தது.
இந்த விழாவில் கலந்துகொண்ட நடிகர் வடிவேல் தனக்கே உரிய கலகலப்போடு பேசினாலும், இந்த இடைவெளியில் தமிழ் சினிமாக்காரர்கள் அவருக்கு எதிராக செய்த பல வேலைகளை அம்பலப்படுத்தினார்.
வடிவேலு பேச்சு:
தேவையா.. தேவையாடா உனக்குன்னுதானே பாக்குறீங்க... இது நானா எடுத்த முடிவு கிடையாது. காலத்தின் கட்டாயம். ஆனா ஒண்ணு.. இந்த இரண்டு இரண்டறை வருசம் நல்ல ஓய்வு கிடைச்சுச்சி. எனக்கு ரொம்ப மகிழ்ச்சி. எந்த வருத்தமும் இல்லை.
ஒவ்வொரு வீட்டுலயும் ரேஷன் கார்டுலதான் என் பேர் இல்லன்னு ஏற்கெனவே சொல்லியிருக்கிறேன். உங்க வீட்டுல நானும் ஒருத்தங்கறத, இந்த இரண்டு வருஷ கேப்புல உணர்ந்தேன்.
அப்போ எனக்கு நிறைய படங்களும் வந்துச்சி. ஆனா நான்தான் இனி வந்தா ஒரு கிங் மாதிரி வரணும்னு ஆசைப்பட்டு மறுத்திட்டேன். அப்படி வந்ததுதான் தெனாலிராமன்.
இங்க பலபேரு என்னை வச்சி படம் பண்ணவே பயந்தாங்க. அந்த நேரத்துல மலையாளம், தெலுங்கிலெல்லாம் நிறைய பட வாய்ப்புகள் வந்துச்சு. அதிலெல்லாம் நான் நடிச்சிருந்தா வடிவேல் ஊரை காலி செஞ்சிட்டு ஓடிப்போயிட்டான்னு பேசியிருப்பாய்ங்க... அதனால்தான் அந்த படங்களை ஒப்புக்கொள்ளவில்லை.
யுவராஜ் இந்த கதையை என்கிட்ட சொன்னதும் அதைத் தயாரிக்க நான் தயார்னு முன்வந்தார் கல்பாத்தி அகோரம் சார். இந்த சினிமாவுல நான் முதலாளின்னு கூப்பிடற ஒரே ஒருவர் கல்பாத்தி அகோரம்தான். அவராதான் என்னைக் கூப்பிட்டு படத்தை தயாரிக்கிறதா சொன்னார். இந்த மேடையில அதை சொல்லியாகணும். அகோரம் சார், அண்ணண் தம்பி மூணு பேரையும் நான் கடவுளாத்தான் பார்க்கிறேன். அவங்கள கையெடுத்து கும்புடறேன். இந்த படத்துல சும்மாவே நடிக்கிறேன், பணமே வேணாம்னு சொல்ற அளவுக்கு போயிட்டேன். ரொம்ப அற்புதமான படத்துல ஒரு கேப் விட்டு நடிச்சது சந்தோஷமா இருக்கு.
ரொம்பப் பேர் அகோரம் சார்கிட்ட போய், வடிவேலுவை வச்சி படம் பண்ணாதீங்க.. அவ்ளோதான்னு அவர் வீட்டு முன்னால போய் அழுது புரண்டாய்ங்க... மெசேஜெல்லாம் அனுப்பிட்டாங்க.
'ஏ போய்யா... அதெல்லாம் நான் பாத்துக்கறேன். அப்படி என்னய்யா தப்பு பண்ணார் அவர்? போனாரு வந்தாரு... அவ்ளோதானே.. யாரும் செய்யாததையா அவர் பண்ணிட்டார்?' என்று கேட்டு திருப்பி அனுப்பிச்சாரு. அசரல.
இங்க பண்ண காமெடியத்தான் நான் அங்கயும் பண்ணேன். இப்பவும் பலர் அதைத்தான் அங்க (அரசியல்) செஞ்சிக்கிட்டிருக்காங்க...," என்றவர், தனக்கு ஜோடியாக நடிக்க வந்தவர்களை சிலர் மிரட்டி விரட்டியது பற்றி சொன்னது தனி ஸ்டோரி!