நடிகைகள் நட்பாக பழக மாட்டார்களா என்பதற்கு அசின் பதிலளித்தார். இதுபற்றி அவர் கூறியதாவது: சினிமாவில் நடிகைகள் நட்புடன் இருக்கமாட்டார்கள் என்று சிலர் கூறுவதுண்டு. அது வெறும் கட்டுக்கதைதான். நடிகைகளுக்குள் நட்புடன் இருக்கிறோம். ஷூட்டிங்கில் இருக்கும்போது சக தோழிகள் நிறைய விஷயங்களை மனம் விட்டு பகிர்ந்து கொள்வோம். நிறைய நடிகைகள் எனக்கு நண்பர்களாக இருக்கின்றனர். அவர்களில் சில பெயர்களை மட்டும் சொன்னால் சரியாக இருக்காது. நடிகைகள் மட்டுமல்ல நடிகர்களுடன் நான் நட்பாகவே பழகுவேன். அவர்கள் எல்லோருமே என் மனதில் நல்ல இடம் பிடித்தவர்கள். அவர்களுடன் இன்றும் நான் தொடர்பில் இருக்கிறேன்.
'தமிழில் நடிக்க மாட்டீர்களா?' என்கிறார்கள். சமீபத்தில் விஜய்யுடன் 'காவலன்' படத்தில் நடித்தேன். விரைவில் நல்ல கதை அம்சமுள்ள படத்தில் நடிப்பேன். 'காவலன்' படத்தில் நடிப்பது எனக்கும், விஜய்க்கும் சவாலாகவே இருந்தது. சவாலான வேடங்கள் வரும்போது நிச்சயம் தவறவிட மாட்டேன். 'கோச்சடையான் படத்தில் ரஜினியுடன் நடிக்கிறீர்களா?' என்கிறார்கள். இப்படத்திற்காக என்னை அணுகினார்களா என்பதற்கு ஆம், இல்லை என்று எந்த பதிலும் இப்போதைக்கு நான் சொல்ல முடியாது. ஒரு நடிகையாக ரஜினியுடன் நடிக்க எப்போதும் ஆசையாகவே இருக்கிறேன். திரையுலகில் அவர் மிகச் சிறந்த மனிதர். அவருடன் விரைவில் ஜோடியாக நடிப்பேன் என்று நம்புகிறேன். இவ்வாறு அசின் கூறினார்.