ரஜினியின் லிங்கா ஆடியோ உரிமையை வாங்கியது சவுந்தர்யாவின் ஈராஸ் நிறுவனம்!!

ரஜினியின் லிங்கா படத்தின் இசை வெளியீட்டு உரிமையை வாங்கியது சவுந்தர்யா தலைமையிலான ஈராஸ் நிறுவனம்.

ரஜினி இரட்டை வேடத்தில் நடிக்கும் ‘லிங்கா' படம் வரும் டிசம்பர் மாதம் வெளியாகிறது.

ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ள இந்தப் படத்தின் ஆடியோவை நவம்பர் 9-ந் தேதி வெளியிட முடிவு செய்துள்ளனர். இந்நிலையில், இப்படத்தின் ஆடியோ உரிமையை ஈராஸ் நிறுவனம் வாங்கியுள்ளது.

ரஜினியின் லிங்கா ஆடியோ உரிமையை வாங்கியது சவுந்தர்யாவின் ஈராஸ் நிறுவனம்!!

பாலிவுட்டில் பெரிய பட்ஜெட் படங்களைத் தயாரித்த ஈராஸ் நிறுவனம், ‘கோச்சடையான்' படம் மூலம் கோலிவுட்டில் கால்பதித்தது. இந்நிலையில், சமீபத்தில் தென்னிந்தியாவில் தனது கிளையை துவக்கிய ஈராஸ் நிறுவனம், அந்நிறுவனத்தின் தலைவராக ரஜினியின் இளைய மகளும், இயக்குனருமான சவுந்தர்யா ரஜினிகாந்தை நியமித்தது.

இவருடைய முயற்சியால், இந்நிறுவனம் முதன்முதலாக ‘கத்தி' படத்தின் ஆடியோ உரிமையை வாங்கி, அதற்கு மிகப்பெரிய அளவில் விளம்பரம் செய்தது.

இந்நிலையில், தற்போது ‘லிங்கா' படத்தின் ஆடியோ உரிமையையும் பெற்றுள்ள ஈராஸ் நிறுவனம், இப்படத்தின் ஆடியோவையும் மிகப்பெரிய அளவில் விளம்பரம் செய்யத் திட்டமிட்டுள்ளது.

‘லிங்கா' படத்தை ராக்லைன் வெங்கடேஷ் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளார்.

 

உயிருக்கு அச்சுறுத்தலா? ஷாரூக், தீபாகாவுக்கு திடீர் போலீஸ் பாதுகாப்பு

மும்பை: பாலிவுட் திரைப்பட கலைஞர்களான ஷாருக்கான், தீபிகா படுகோனேக்கு திடீரென போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டு உள்ளது. இருவருக்கும் கொலை மிரட்டல் வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

‘ஹேப்பி நியூ இயர்' படத்தில் ஷாருக்கானும், தீபிகா படுகோனேவும் ஜோடியாக நடித்துள்ளனர். இப்படம் இந்தியா முழுவதும் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடுகிறது. வெளிநாடுகளிலும் கணிசமாக வசூல் ஈட்டி உள்ளது. தமிழ், தெலுங்கிலும் டப்பிங் செய்து வெளியிட்டு உள்ளனர். இப்படம் முதல் வாரத்தில் ரூ.108.86 கோடி வசூல் ஈட்டி சாதனை படைத்துள்ளது.

இந்நிலையில் இருவருக்கும் திடீரென போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டு உள்ளது. சமீப காலமாக ஹிந்தி நடிகர், நடிகைகளுக்கு போனில் மிரட்டல்கள் வருகின்றன. நிழலுலக தாதாக்கள் மூலமாக இந்த மிரட்டல்கள் வருவதாக கூறப்படுகிறது.

உயிருக்கு அச்சுறுத்தலா? ஷாரூக், தீபாகாவுக்கு திடீர் போலீஸ் பாதுகாப்பு

இதனால் பலர் தனியார் அமைப்புகள் மூலம் பாதுகாவலர்களை ஏற்பாடு செய்து வைத்துள்ளனர். ஷாருக்கானும் தனியார் பாதுகாவலர்களை தனக்கு ஏற்பாடு செய்துள்ளார். அத்துடன் போலீஸ் பாதுகாப்பும் அளிக்கப்பட்டு உள்ளது.

ஷாருக்கான் குண்டு துளைக்காத காரை பயன்படுத்துகிறார். மனைவி சவுரிகானுக்கும் குண்டு துளைக்காத காரை வாங்கி கொடுத்துள்ளார். குடும்ப உறுப்பினர் அனைவரையும் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வந்துள்ளார்.

தீபிகா படுகோனேக்கு மும்பை போலீசார் திடீர் பாதுகாப்பு அளித்துள்ளனர். மிரட்டல்கள் காரணமாகவே பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளதாக மும்பை பட உலகில் பேசப்படுகிறது.

 

விபச்சார வழக்கில் கைதான நடிகை ஸ்வேதா பாசு உயிருக்கு தொழிலதிபர்களால் ஆபத்தா?

ஹைதராபாத்: விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகை ஸ்வேதா பாசு, தன் வாடிக்கையாளர்கள் பெயர்களை வெளியே சொல்லிவிடக்கூடும் என்ற அச்சத்தில் ஆந்திர தொழிலதிபர்கள் இருப்பதாக கூறப்படுகிறது. எனவே ஸ்வேதா பாசு உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக உள்ளூர் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

ஹைதராபாத்திலுள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் விபச்சாரம் செய்தபோது கையும் களவுமாக கைதானவர் சுவேதா பாசு. தேசிய விருது பெற்ற 23 வயது நடிகையான சுவேதா பாசு, தமிழில் கருணாசுக்கு ஜோடியாக சந்தாமாமா திரைப்படத்திலும் நடித்தவர். எனவே தேசிய அளவில் இந்த கைது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

விபச்சார வழக்கில் கைதான நடிகை ஸ்வேதா பாசு உயிருக்கு தொழிலதிபர்களால் ஆபத்தா?

இந்நிலையில், ஸ்வேதா பாசுவை, ரிமாண்ட் ஹோமில் அடைத்து வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து, அவர் வெளியுலக தொடர்பு ஏதுமின்றி தொடர்ந்து ஹோமில் உள்ளார். இந்நிலையில், அவரது வாடிக்கையாளர்களான தொழிலதிபர்களுக்கு கிலி ஏற்பட்டுள்ளது. தங்களது தொடர்பு எல்லைக்கு வெளியே இருக்கும் ஸ்வேதா பாசு தங்களது பெயரை போலீசாரிடமோ, ஊடகங்களிடமோ தெரிவிக்க வாய்ப்பு உள்ளதாக பழைய வாடிக்கையாளர்கள் பலரும் பயத்தில் உள்ளனராம்.

விபச்சாரத்தில், ஸ்வேதா பாசு காஸ்ட்லியானவர் என்பதால் அவரிடம் பெரும் தொழிலதிபர்கள்தான் வாடிக்கையாளர்களாக இருந்தனர். அவர்களின் பண பலம், அரசியல் பலம் போன்றவை ஸ்வேதா பாசு உயிருக்கே ஆபத்தாக முடியும் என்ற அச்சம் சினிமாத்துறையிலுள்ளோருக்கு ஏற்பட்டுள்ளது.

ஸ்வேதா பாசு விபச்சாரத்தில் ஈடுபட்டதாக மீடியாக்களுக்கு பேட்டியளித்த ஹைதராபாத் போலீசார், அவரது வாடிக்கையாளர்கள் பெயரை இதுவரை வெளியிடவில்லை. எத்தனை முறை மீடியாக்கள் கேட்டாலும் அதை சொல்வதில்லை. எனவே போலீஸ் துறையில் சிலர் நன்கு 'கவனிப்புக்கு' உள்ளாகியிருக்க கூடும் என்று ஆந்திர மீடியாக்கள் கூறுகின்றன. இந்த நிலையில் ஸ்வேதா பாசுவுக்கு உரிய பாதுகாப்பு கிடைக்குமா என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது.

 

பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து மிரட்டுகிறார்.... பஞ்சாபி பாடகர் மீது நடிகை பரபரப்பு புகார்

சண்டிகர்: பஞ்சாபி பாடகர் ஜெல்லி என்கிற ஜர்னைல் சிங் மற்றும் 3 பேர் மீது 30 வயதான பஞ்சாபி நடிகை ஒருவர் பாலியல் பலாத்கார புகார் அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தன்னை இந்த நால்வரும் சேர்ந்து கடத்திக் கொண்டு போய், தாக்கி சரமாரியாக பலாத்காரம் செய்து அதை வீடியோ எடுத்து மிரட்டுவதாகவும் அந்த நடிகை தனது புகாரில் கூறியுள்ளார்.

சண்டிகரில் வசித்து வரும் பஞ்சாபி நடிகையான இவர், போலீசில் அளித்துள்ள புகாரில், ஜெல்லியும் அவரது நண்பர்களும் சேர்ந்து என்னை கடத்திக் கொண்டு சென்றனர்.

பின்னர் என்னை நால்வரும் சேர்ந்து கூட்டாக பலாத்காரம் செய்தனர். இதைச் செய்தனர். பின்னர் இதை வீடியோவில் படமாக்கி வைத்து அதை காட்டி என்னை மிரட்டினர்.

இதை யாரிடமும் சொல்லக் கூடாது. மீறிச் சொன்னால் கடும் விளைவுகளைச்சந்திக்க நேரிடும் என்றும் மிரட்டினர். ஆன்லைனில் போட்டு விடுவோம்என்றும் கூறினர். இவர்களின் செயலால் நான் கர்ப்பமும் அடைந்து விட்டேன். இதையடுத்து ஜெல்லியும் அவரது நண்பர்களும் கட்டாயப்படுத்தி அபார்ஷன் செய்து விட்டனர்.

என்னை வயிற்றில் எட்டி உதைத்து சித்திரவதையும் செய்தனர். பின்னர்

அக்டோபர் 17ம் தேதி தங்களது காரியம் முடிந்ததும் மொஹாலியில் உள்ள பேஸ் 1பகுதியில் போட்டு விட்டுச் சென்றனர்.

எனக்கு சுய நினைவு வந்ததும் எனது தோழியை அழைத்து உதவி கோரினேன். பின்னர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு் சென்றேன். அங்கிருந்து போலீஸுக்கும் தகவல் கொடுத்தேன் என்று கூறியுள்ளார்.

இவரது புகாரின் பேரில் நால்வர் மீதும் கடத்தல், கொலை செய்யும் நோக்கில்கடத்தியது, பாலியல் பாலாத்காரம், கூட்டாக பலாத்காரம் செய்தல், குற்றச் செயலில் ஈடுபடுவது, காயம் ஏற்படுத்துவது, பெண்ணின் சம்மதம் இல்லாமல் அவருக்கு அபார்ஷன் செய்தது, விஷம் கொடுத்துக் கொல்லப்பார்த்தது, குற்றச் சதியில் ஈடுபடுவது,ஒருவரின் அந்தரங்கத்தில் தலையிடுவது ஆகிய பிரிவுகளின் கீழ் போலீஸார்வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

நான்கு பேருமே தற்போது தலைமறைவாக உள்ளனர். ஜெல்லியின் நண்பர்களின் பெயர் ஸ்வரன் சிங், மனீந்தர் சிங் மங்கா, சரன்ப்ரீத் சிங் என்று தெரியவந்துள்ளது. இந்த வழக்கில் ஜெல்லியின் மனைவி பரம்ஜீத் கெளரையும் போலீஸார் சேர்த்துள்ளனர்.

சம்பந்தப்பட்ட நடிகை திருமணமானவர். ஆனால் கணவரை விட்டுப் பிரிந்துவாழ்ந்து வருகிறார். விவாகரத்தும் கோரியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

லிங்கா, பாபநாசம்... குறுகிய நாட்களில் ஷூட்டிங்கை முடிந்த ரஜினி, கமல்!

அனுபவம், தொழில் நேர்த்தி, சினிமா மீதான நேசம்... இவை நிரம்பப் பெற்ற கலைஞர்கள் தலைமுறைகளைத் தாண்டியும் கோலோச்சுவார்கள்.

உதாரணம் ரஜினி, கமல்.

கமல் 5 தசாப்தங்கள் தாண்டிய நடிகர். ரஜினி நாற்பது தசாப்தங்களைப் பார்த்தவர்.

இந்த இருவருமே படப்பிடிப்பு என்று வந்துவிட்டால் சின்சியர் திலகங்கள்.

இளைய தலைமுறை கலைஞர்களுக்கு இருவருமே மிகச் சிறந்த எடுத்துக்காட்டாய் திகழ்கிறார்கள்.

எப்படி என்று பாருங்கள்...

ரஜினி தன் லிங்கா படத்தை மே மாதம் தொடங்கினார். அன்றைக்கு வந்த செய்திகள், அவர் சும்மா 30 நாள்தான் நடிக்கப் போகிறார். அதிக ரிஸ்க் இல்லாத மாதிரி ஷூட்டிங் வைத்திருக்கிறார்கள் என்றனர்.

லிங்கா, பாபநாசம்... குறுகிய நாட்களில் ஷூட்டிங்கை முடிந்த ரஜினி, கமல்!

ஆனால் அவர் அந்த செய்திகளைக் கண்டு கொள்ளவே இல்லை. 100 நாட்கள் மராத்தான் மாதிரி, மைசூர், ஹைதராபாத், ஷிமோகா, மீண்டும் ஹைதராபாத் என் சுற்றிச் சுழன்றார். 24 மணி நேரத்தில் டப்பிங்கை முடித்தார். சொன்னபடி டிசம்பர் 12-ம் தேதி படத்தை வெளியிடத் தயாராகிக் கொண்டிருக்கிறார்.

இந்தப் பக்கம் கமல் ஹாஸன்...

பாபநாசம் படத்தின் ஷூட்டிங் இரு கட்டங்களாக நடக்கும் என்றார்கள். முதல் கட்டம் திருநெல்வேலியில். அடுத்தது கேரளாவில். இடையில் உடல் நிலை பாதிக்கப்பட்ட போதும், குறித்த நேரத்தில் படப்பிடிப்பை முடித்துவிட்டு... இதோ சென்னைக்கு வந்தேவிட்டார்.

லிங்கா, பாபநாசம்... குறுகிய நாட்களில் ஷூட்டிங்கை முடிந்த ரஜினி, கமல்!

இந்த இரு படங்களோடும் ஆரம்பிக்கப்பட்ட பல படங்கள் இன்னும் கால்வாசி, பாதி கூட முடியாமல் முணகிக் கொண்டிருக்கின்றன. திட்டமிட்டபடி இவர்கள் படப்பிடிப்பை முடித்ததில், தயாரிப்பாளர்களுக்கு பல கோடி செலவு மிச்சம் என்பதைச் சொல்லித்தான் தெரியவேண்டும் என்பதில்லை.

இன்றைய இளம் கதாநாயகர்கள், இயக்குநர்கள் இந்த சாதனையாளர்களைப் பார்த்துக் கற்றுக்கொள்ள வேண்டும்.. அப்போதுதான் சினிமா நிலைக்கும் என்றார் முன்னணித் தயாரிப்பாளர் ஒருவர்.

அது சொல்லிக் கொடுத்து வருவதில்லை. தானாக அமைவது. ரஜினிக்கும் கமலுக்கும் அப்படித்தான் அமைந்தது இந்தத் திரை ஒழுக்கம்!

 

ரசிகனே, ஒரு நிமிஷம்... கத்தி படமும் சூரியூர் கிராமமும்!

தமிழகத்தின் வளமான காவிரிக் கரையோர கிராமமொன்றுக்கு நேர்ந்துள்ள தண்ணீர்க் கொடுமை இப்போது சமூக வலைத் தளங்களில் பரபரப்பாக வலம் வருகிறது. அந்த உண்மைக் கதையை இங்கே பார்க்கலாம்...

திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகம் பின்புறம் அமைந்துள்ள ஓர் அழகிய கிராமம் தான் 'சூரியூர்'. ஜல்லிக்கட்டுக்கு பெயர்போன இங்கு தொன்றுதொட்டு வரும் ஒரே தொழில் விவசாயம்தான்.

ரசிகனே, ஒரு நிமிஷம்... கத்தி படமும் சூரியூர் கிராமமும்!

திருச்சியைச் சுற்றி காவிரியாற்றின் தண்ணீரை நம்பித்தான் விவசாயமே உள்ளது. காவிரி வறண்டு போனதால் பல ஏக்கர் நிலம் பாலைவனம் ஆனதை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் சூரியூரில் சிறு அளவு வாய்கால் பாசனம் கூட இல்லை. வானம் பார்த்த மானாவரி பூமிதான்.

அதே நேரம் தமிழகத்தில் வறட்சி ஏற்பட்டபோதும் முப்போகமும் விளைந்த பூமி இந்த சூரியூர். காரணம், சூரியூரைச் சுற்றி முன்னோர்கள் விட்டுச்சென்ற எண்ணற்ற ஏரிகளும், குளங்களும்தான் நிலத்தடி நீரை வற்றாமல் பார்த்துக்கொண்டன.

ரசிகனே, ஒரு நிமிஷம்... கத்தி படமும் சூரியூர் கிராமமும்!

செயற்கைக் கோள் உதவியோடு சூரியூரில் உள்ள தண்ணீர் வளத்தை கண்டறிந்த பெப்சி நிறுவனம், தனது தொழிற்சாலையை நிறுவ ஆசைப்பட்டது. பெப்சி (Pepsi) நிறுவனத்தின் ஆசையை நிறைவேற்ற அவர்களுடன் கைகோர்த்தது திருச்சியில் உள்ள LA Bottlers Pvt Ltd நிறுவனம். LA Bottlers Pvt Ltd நிறுவனத்தின் உரிமையாளர் அடைக்கலராஜ் காங்கிரஸ் கட்சியிலிருந்து தொடர்ந்து 3 முறை திருச்சி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர்.

சூரியூரில் பாட்டில் (Glass Bottle) தயாரிக்கும் தொழிற்சாலை வரப்போவதாக தவறான தகவலை அப்போதைய சூரியூர் ஊராட்சிமன்ற தலைவர் மலர்விழி மூலம் சொல்லி தொழிற்சாலையின் கட்டிட வேலையைத் தொடங்கி 2012 ம் ஆண்டுமுதல் தொழிற்சாலை இயங்கியது. அடுத்த மூன்றே மாதத்தில் படிப்படியாக விவசாய கிணற்றில் தண்ணீர் வற்றத் தொடங்கியது. அப்போதுதான் சூரியூர் மக்களுக்கு தெரியவந்தது இயங்கிகொண்டிருப்பது பெப்சி குளிர்பான கம்பெனி என்று.

உஷாரான பெப்சி நிர்வாகம் உடனடியாக சூரியூரில் உள்ள சிலருக்கு தினக்கூலியாக வேலை வழங்கப்பட்டது. இருப்பினும் தொடர்ந்து கிணற்றில் தண்ணீர் வற்றியதால் 2012, டிசம்பர் மாதம் சூரியூர் விவசாய சங்கம் சார்பில் திருச்சி மாவட்ட ஆட்சியர் ஜெயஸ்ரீ முரளிதரன் அவர்களிடம் புகார் மனு தந்தனர்.

ரசிகனே, ஒரு நிமிஷம்... கத்தி படமும் சூரியூர் கிராமமும்!

இந்நிலையில் சில நண்பர்களுடன் சூரியூர் சென்று அங்குள்ள நிலவரத்தை ஆராய்ந்தனர் சில தன்னார்வலர்கள். அப்போதுதான் ஆபத்தான, சுத்திகரிக்கப்படாத கழிவுநீரை அங்குள்ள நிலங்களில் நேரிடையாகக் கலக்க விட்ட கொடுமை தெரிய வந்தது. அன்றுமுதல் சூரியூரைச் சார்ந்த ராஜேந்திரன் பெயரில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் பல்வேறு துறைகளில் இருந்து தொழிற்சாலையின் உரிமம் சம்மந்தமாக ஆவணங்கள் பெறப்பட்டது.

பெறப்பட்ட ஆவணங்களை பார்த்தபோதுதான் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்தன. இந்த தொழிற்சாலை அனுமதி பெறாமலேயே கட்டப்பட்டிருப்பது நகர் ஊரமைப்புத் துறை மூலம் அம்பலமானது.

அதுமட்டுமில்லாமல் போலி ஆவணங்களைச் சமர்ப்பித்து தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திடமிருந்து உரிமம் பெறப்பட்டுள்ளதும் தெரியவந்தது.

இன்னும் பல ஆவணங்களை ஒன்றிணைத்து திருச்சி மாவட்ட ஆட்சியர் ஜெயஸ்ரீ முரளிதரன் அவர்களிடம் புகார் மனு அளிக்கப்பட்டது. ஆனால் நடவடிக்கை எடுக்க முன்வரவில்லை. அதனால் மக்களை திரட்டி போராட்டம் நடத்த திட்டமிட்டு " உலக தண்ணீர் தினம் - 2014 அன்று உண்ணாவிரதம் இருக்க முடிவெடுக்கப்பட்டது. இந்நிலையில் திருச்சிராப்பள்ளி கோட்டாசியர் தலைமையில் நடைப்பெற்ற அமைதி பேச்சுவார்த்தையில், அரசு நிர்வாகம் பெப்சி தொழிற்சாலைக்கு மட்டுமே ஆதரவாக பேசியதைத் தொடர்ந்து பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. திட்டமிட்டபடி உண்ணாவிரதம் நடந்தது.

இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியம் பெப்சி தொழிற்சாலைக்கு உரிமத்தை புதுப்பித்து நீட்டிப்பு வழங்கப்படவில்லை.

இருப்பினும் இன்றுவரை மாவட்ட நிர்வாகம், பத்திரிக்கை, ஊடகம் என்று பல கதவுகளை தட்டிவிட்டார்கள் சூரியூர் மக்கள். ஆனால் அதிகார பலமும், பண பலமும் பாதாளம் வரை சென்று அறவழியில் போராடும் சூரியூர் மக்களுக்கு நியாயம் கிடைக்கவிடவில்லை.

தற்போது வெளிவந்துள்ள "கத்தி" திரைப்படம் மூலம் இந்த பிரச்சினை மீண்டும் அதிகார வர்க்கத்தின் கவனத்தை எட்டும் என்ற நம்பிக்கையில், மீண்டும் சூரியூர் பிரச்சினையை முன்னெடுத்துள்ளனர்.

ரசிகனே, ஒரு நிமிஷம்... கத்தி படமும் சூரியூர் கிராமமும்!

"கத்தி" திரைப்படத்தில் வரும் கற்பனை கதையை பார்த்துவிட்டு கண்ணீர் விடும், ஆதங்கப்படும், கோபப்படும் ரசிகர்களே, சூரியூரில் பெப்சி கம்பெனிக்கு எதிராக நடைபெறும் போராட்டதுக்கு என்ன செய்யபோகிறீர்கள். தன்னால் மட்டும் என்ன செய்யமுடியும் என்று விலகிபோகிறீர்களா? அல்லது "சிறு துரும்பும் பல் குத்த உதவும்" என்று எங்களுடன் இணையபோகிறீர்களா? மனசாட்சியுள்ளவர்கள், மானமுள்ளவர்கள் இந்த விவசாயிகளின் கண்ணீரை துடைக்க எங்களின் அறப்போராட்டத்தில் இணையவார்கள் என்று நம்புகிறோம்" என்று குரல் எழுப்பியுள்ளனர் சூரியூர் மக்கள்.

மேலும் விவரங்களுக்கு: தண்ணீர் இயக்கம்
www.thanneer.org
வினோத்ராஜ் சேஷன்: 9500189319 ivfvinothraj@gmail.com

 

கட்அவுட் விபத்து: 'சேட்டன்கள்' திரட்டிய நிதியை பலியான ரசிகரின் குடும்பத்திடம் அளித்த விஜய்

கோவை: கேரளாவில் தனது கட்அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்கையில் தவறி விழுந்து இறந்த ரசிகரின் குடும்பத்திற்கு விஜய் ரூ.3 லட்சம் நிதி அளித்தார். அப்போது விஜய் கண்கலங்கிவிட்டார்.

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள வடக்கன்சேரியைச் சேர்ந்த உன்னி என்பவர் தீபாவளி அன்று கத்தி படத்தை பார்த்துவிட்டு தியேட்டரில் இருந்து வெளியே வந்தார். வந்தவர் அங்கிருந்த விஜய்யின் பிரமாண்ட கட்அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்கையில் தவறி விழுந்து பலியானார்.

கட்அவுட் விபத்தில் பலியான ரசிகரின் குடும்பத்தை பார்த்ததும் 'அழுத' விஜய்

இறந்த உன்னியின் குடும்பத்திற்கு கேரள ரசிகர்கள் திரட்டிய நிதியை நேரில் விஜய் அளிப்பார் என்று கூறப்பட்டது. இதற்காக அவர் வடக்கன்சேரி செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் கத்தி வெற்றிக் கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள விஜய் திங்கட்கிழமை கோவை சென்றார். கோவைக்கு வந்த உன்னியின் குடும்பத்தாரை சந்தித்த விஜய் அவர்களுக்கு ஆறுதல் கூறினார். அப்போது அவருக்கு அழுகை வந்துவிட்டது. மேலும் ரசிகர்கள் திரட்டிய ரூ.3 லட்சம் நிதியையும் அளித்தார். இனி ஏதாவது உதவி வேண்டுமானால் தன்னிடம் கேட்குமாறும் அவர் தெரிவித்தார்.

கட்அவுட் விபத்தில் பலியான ரசிகரின் குடும்பத்தை பார்த்ததும் 'அழுத' விஜய்

ரசிகர்கள் திரட்டிய நிதியை தான் விஜய் கொடுத்தார் என்று நீங்கள் பார்த்தீர்களா என்று கேட்கலாம். நாங்கள் பார்க்கவில்லை. ஆனால் பிரபல பி.ஆர்.ஓ. தெரிவித்துள்ளார்.

 

கேரளாவில் கத்தி விநியோகஸ்தருக்கு ரூ 2 கோடி நஷ்டமாம்!

கேரளாவில் கத்தி படத்தை வெளியிட்ட கேரள விநியோகஸ்தருக்கு ரூ 2 கோடி வரை நஷ்டம் ஏற்படும் சூழல் உருவாகியிருப்பதால், அவர் சோகத்தில் மூழ்கியுள்ளார்.

கத்தி படம் உலகம் முழுவதும் 1400 அரங்குகளில் வெளியானது. பக்கத்து மாநிலமான கேரளாவில் 100 அரங்குகளில் இந்தப் படம் வெளியானது. படத்துக்காக பெரும் விளம்பரம் செய்தனர். ரயில், பஸ்களிலெல்லாம் கத்தி விளம்பரம் செய்தார்கள்.

இந்தப் படத்தின் கேரள உரிமை 4.5 கோடிக்கு விற்கப்பட்டதாகத் தெரிகிறது. கேரளத்தைப் பொறுத்தவரை இது பெரிய தொகை.

கேரளாவில் கத்தி விநியோகஸ்தருக்கு ரூ 2 கோடி நஷ்டமாம்!

படம் வெளியான முதல் நாள் நல்ல வசூல் கிடைத்ததாம். கிட்டத்தட்ட ரூ 1 கோடி வரை வசூல் கிடைத்ததாகவும், அடுத்த நாளிலிருந்து வசூல் 50 சதவீதத்துக்கும் மேல் குறைந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த வாரத்துக்குள் பெரும்பாலான அரங்குகளில் படத்தை எடுக்கும் நிலை வந்துள்ளதால், படத்துக்கு முதலீடு செய்த தொகையில் ரூ 2 கோடி வரை நஷ்டப்படும் சூழல் எழுந்துள்ளதாக கேரள திரையுலகினர் தெரிவித்துள்ளனர்.

கத்தி படம் முதல் நாளே ரூ 23.85 கோடியை வசூலித்துள்ளதாக அதன் இயக்குநரே கூறியுள்ள நிலையில், இப்போது கேரள விநியோகஸ்தர் நஷ்டம் என புலம்ப ஆரம்பித்திருப்பது குறிப்பிடத்தக்கது. வழக்கமாக தமிழ்ப் படங்களை 2 கோடிக்குள்தான் விலைக்கு வாங்குவார்கள் கேரளாவில். ஆனால் ரூ 4.5 கோடிக்கு கத்தியை படத்தை வாங்கிய இந்த விநியோகஸ்தர், மேலும் ஒரு கோடியை விளம்பரத்துக்காக செலவு செய்திருந்தாராம்.

இதையெல்லாம் எப்படி எடுக்கப் போகிறேனோ என்று விநியோகஸ்தர் சங்கத்தில் முறையிட்டுள்ளாராம்.

 

'வெற்றி... வெற்றி... கத்தி வெற்றி...'மீடியாவைச் சந்திக்கும் விஜய்!

கத்தி படம் பிரமாண்ட வெற்றி பெற்றதாகக் கூறி இன்று படத்துக்கு சக்சஸ் மீட் வைத்துள்ளனர். இதில் மீடியாவைச் சந்திக்கிறார் படத்தின் நாயகன் விஜய்.

பெரும் சர்ச்சை, பரப்புகளைக் கடந்து, தீபாவளிக்கு வெளியானது கத்தி. ஏ ஆர் முருகதாஸ் இயக்கியிருந்தார். லைகா நிறுவனம் தயாரித்திருந்த இந்தப் படம், ஆர்ப்பாட்டங்கள் காரணமாக எந்த நிறுவனத்தின் பெயரும் போடப்படாமல் வெளியானது.

'வெற்றி... வெற்றி... கத்தி வெற்றி...'மீடியாவைச் சந்திக்கும் விஜய்!

இந்தப் படம் வெளியான முதல் நாளே ரூ 23.85 கோடியைக் குவித்ததாக படத்தின் இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ் தகவல் வெளியிட்டார்.

இந்த நிலையில் படத்தினை விளம்பரப்படுத்த ஊர் ஊராகப் போய் தியேட்டர்களில் ரசிகர்களைச் சந்தித்து வருகிறார் விஜய்.

தியேட்டர் விஜயம் முடிந்த நிலையில், இன்று மாலை 6 மணிக்கு மீடியாவைச் சந்தித்து படத்தின் வெற்றி குறித்து தன் அனுபவங்கள், தகவல்களைப் பகிர்ந்து கொள்கிறார். இந்த சந்திப்பு சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது!

 

தனது பிறந்த நாளில் தாய்க்கு கோயில் கட்டும் ராகவா லாரன்ஸ்!

நடிகரும் இயக்குநருமான ராகவா லாரன்ஸ், நாளை தனது பிறந்த நாள் அன்று தனது தாய் கண்மணிக்காக கோயில் கட்டத் தீர்மானித்துள்ளார்.

அதற்காக தனது தந்தை ஊரான பூந்தவல்லி அருகில் உள்ள மேவலூர் குப்பம் என்ற ஊரில் இடம் தேர்வு செய்துள்ளார். அவரது தாயாரின் உருவச் சிலையை வடிவமைக்கும் பணியை ராஜஸ்தான் மாநிலத்தில் துவங்கி உள்ளார்.

இவரு மனுஷன்....தாய்க்குக் கோவில் கட்டும் ராகவா லாரன்ஸ்!

இதுபற்றி அவர் கூறும்போது, "தாயின் மனதே ஒரு கோயில்தான். அந்தத் தாய்க்கு, அவர் வாழும் போதே கோயில் கட்டி பெருமைப்படுத்த வேண்டும் என்பதே எனது ஆசை. என் தாய் மட்டும் இல்லை என்றால் எப்போதோ நான் இறந்த இடத்தில் புல் முளைத்திருக்கும்.

எல்லோருக்கும் கண்ணெதிரே தெரியும் ஒரே தெய்வம் பெற்ற தாய்தான். தாயிற் சிறந்ததொரு கோயிலும் இல்லை என்ற உயரிய கருத்தை மெய்ப்பிக்க வேண்டும் என்ற ஆசையால் இந்த கோயிலை கட்ட உள்ளேன். என் தாய்க்கு மட்டுமல்ல உலகத்தில் உள்ள எல்லா தாய்க்கும் நான் இதை சமர்ப்பிக்கிறேன்.

என்னுடைய தாய் என்னை வளர்ப்பதற்காக பட்ட கஷ்டங்களை ஒரு புத்தகமாக அடுத்த வருடம் எனது பிறந்தநாளான இதே தேதியில் அந்த கோயில் திறப்பு விழாவில் வெளியிட உள்ளேன்," என்றார்.

 

விவசாயிகளின் இன்னல் புரிந்ததால்தான் கத்தியில் நடித்தேன் - விஜய் பேச்சு

கோவை: விவசாயிகள் படும் இன்னல்கள் புரிந்ததால்தான் இந்த கத்தி படத்தில் நடித்தேன் என நடிகர் விஜய் கூறினார்.

விஜய் நடித்த கத்தி படத்தின் வெற்றி விழா, நல உதவி வழங்கும் விழா, கோவை இந்துஸ்தான் கல்லூரி வளாகத்தில், நேற்று நடந்தது. கோவை மாவட்ட ரசிகர்கள் ஏற்பாடு செய்திருந்த விவசாய உபகரணங்கள், தையல் இயந்திரங்கள், லேப்டாப், வேட்டி, சேலை உள்ளிட்ட நல உதவிகளை விஜய் தன் கையால் வழங்கினார்.

பின்னர் அவர் பேசுகையி, "கோவை மண் மரியாதைக்கும் உபசரிப்புக்கும் பெயர் பெற்றது. வேறெந்த மண்ணிலும் இதைப் பார்க்க முடியாது.

விவசாயிகளின் இன்னல் புரிந்ததால்தான் கத்தியில் நடித்தேன் - விஜய் பேச்சு

விவசாயிகளின் முக்கியப் பிரச்னை, எதற்காக அவர்கள் தற்கொலை செய்கின்றனர் என்பது உட்பட பல்வேறு இன்னல்களை நான் அறிந்து கொண்டதன் வெளிப்பாடுதான், கத்தி படம். அதைச் சொல்லவே இந்தப் படத்தில் நடித்தேன். அப்படி நடிதத்தில் எனக்கு ரொம்பவே மகிழ்ச்சி.

விவசாயிகளின் கஷ்டங்களை எல்லோரும் புரிந்து, அவர்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.

ஏழைகளுக்கு உதவுவதால், எவ்விதத்திலும் நாம் குறைந்து போவதில்லை. நல உதவி வழங்க பலர் முன்வந்தாலும், அதை வாங்க, மக்கள் வராமல் இருக்கும் நிலை ஏற்படும்போதுதான், நம் நாடு வல்லரசாகும்," என்றார்.

இயக்குனர் முருகதாஸ், இசையமைப்பாளர் அனிருத் உள்ளிட்டோரும் இந்த விழாவில் பங்கேற்றனர்.

 

பெங்களூரில் நடிகர் ராஜ்குமார் நினைவு மண்டபம் திறப்பு: ரஜினி, கமலுக்கு அரசு அழைப்பு

பெங்களூர்: கன்னட நடிகர் ராஜ்குமாரின் நினைவு மண்டபம் திறப்பு விழாவில் பங்கேற்க சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல்ஹாசன், ஹிந்தி நடிகர் அமிதாப்பச்சன் உள்ளிட்ட முக்கிய நடிகர், நடிகைகள் கர்நடாக அரசு சார்பில் அழைக்கப்பட்டுள்ளனர்.

கன்னட முன்னணி நடிகராக விளங்கிய மறைந்த ராஜ்குமாரின் நினைவு மண்டபம், பெங்களூர் நந்தினி லேஅவுட்டிலுள்ள கண்டீரவா ஸ்டூடியோவில் ரூ.7 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ளது.

பெங்களூரில் நடிகர் ராஜ்குமார் நினைவு மண்டபம் திறப்பு: ரஜினி, கமலுக்கு அரசு அழைப்பு

மாநில அரசு சார்பில், நினைவு மண்டப திறப்பு விழா வரும் நவம்பர் 29ம்தேதி நடைபெற உள்ளது. இந்த விழா ஏற்பாடு குறித்து கர்நாடக செய்தி, விளம்பரத் துறை அமைச்சர் ரோஷன்பெய்க் கூறியதாவது: ராஜ்குமார் சிலை திறப்பு விழாவில் பங்கேற்க ரஜினிகாந்த், கமல்ஹாசன், சிரஞ்சீவி, மம்முட்டி, மோகன்லால், அமிதாப்பச்சன், நடிகைகள் சரோஜா தேவி ஆகியோருக்கு அரசு சார்பில் அழைப்புவிடுக்கப்படும் என்றார்.

இதுகுறித்து டாக்டர். ராஜ்குமார் பிரதிஷ்டானா அமைப்பின் செயலாளர் ரவிகுமார், கூறுகையில், இந்த நினைவு மண்டபத்தில் 800 இருக்கைகள் கொண்ட திறந்த வெளி அரங்கம், மினி குளம், ராஜ்குமாரின் 3 அடி உயர வெண்கல சிலை, தேர்ந்தெடுக்கப்பட்ட திரைப்படங்களில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.

ராஜ்குமாரின் சமாதியும் இதே இடத்தில்தான் உள்ளதால், இனிமேல் இது ராஜ்குமார் புண்ணிய பூமி என்று அழைக்கப்படும். மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்தும் மக்கள் இங்கு வருவதால் சுற்றுலா தலமாகவும் மாறிவிட்டது என்றார்.

 

60 அடி உயரத்தில் ராத்திரி பூராவும் பறந்து மிரட்டும் அழகிய பிசாசு!

ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்திற்குப் பின்னர் மிஷ்கின் இயக்கும் படம் பிசாசு. இது ஹாரர் மூவி என்கிறார்.

இயக்குனர் பாலாவின் பி ஸ்டூடியோஸ் தயாரிக்கும் பிசாசு படத்தின் பகுதிகள் பெருமளவு முடிந்து விட்டது. இந்த படத்தை பற்றி இயக்குனர் மிஷ்கின் தற்போது பரபரப்பான தகவல்களை கூறி வருகிறார்.

ரசிகர்களை பயமுறுத்தனும்

நீண்ட நாட்களாகவே எனக்கு ஒரு ஹரார் படம் இயக்க வேண்டும் என்று விருப்பம். ரசிகர்களை வெறுமென பயமுறுத்துவது மட்டுமே ஹரார் படம் அல்ல என்பது என்னுடைய கருத்து ஆகும். பிசாசு பயமுறுத்தும் விஷயம் மட்டும் இல்லை, மனதை வருடும் விஷயமும் கூட.

60 அடி உயரத்தில் ராத்திரி பூராவும் பறந்து மிரட்டும் அழகிய பிசாசு!

ராதாரவி

இந்த படத்தில் மூத்த நடிகர் ராதா ரவி சார் மிகவும் முக்கியமான கதாபாத்திரத்தில், வித்தியாசமாக நடித்து உள்ளார்.

அறிமுக ஹீரோ நாகா

கதாநாயகனாக அறிமுகம் ஆகிறவர் நாகா, முதல் படத்தில் அவர் காட்டும் உழைப்பும் ஆர்வமும் அவருக்கு நல்ல எதிர் காலம் உண்டு என்பதை கட்டாயம் கூறுகிறது.

60 அடி உயரத்தில் ராத்திரி பூராவும் பறந்து மிரட்டும் அழகிய பிசாசு!

மலையாள நாயகி

கதாநாயகியாக அறிமுகம் ஆகிறவர் பிரயாகா, மற்றொரு மலையாள வரவு. நடன கலைகளில் வல்லவராம்.

பயிற்சி கொடுத்தேன்

இந்த படத்துக்கான முக்கிய கதாபாத்திரங்கள் மட்டுமின்றி மற்ற சிறிய பாத்திரங்களுக்கு கூட நான்கு மாதம் பயிற்சிக் கொடுத்து நடிக்க வைத்து உள்ளேன்.

60 அடி உயரத்தில் ராத்திரி பூராவும் பறந்து மிரட்டும் அழகிய பிசாசு!

நள்ளிரவில் பறக்கும் பிசாசு

60 அடிக்கும் மேல் உயரத்திலிருந்து ஒரு இரவு முழுவதும் பிசாசாக பறந்து நடித்த காட்சி பிரமிப்பூட்டும்.

ரவிசங்கர் ஒளிப்பதிவு

பிரபல ஒளிப்பதிவாளர் ஒய்டு ஆங்கிள் ரவிசங்கர் இந்த படம் மூலம் ரவி ராய் என்ற பெயரில் மிகவும் வித்தியாசமான கோணங்களில் இந்த காட்சிகளை பிரமாதமாக படம் பிடித்து உள்ளார்.

அறிமுக இசையமைப்பாளர்

அர்ரால் கோர்லி என்ற புதிய இசையமைப்பாளரை இந்த படத்தில் அறிமுகபடுத்துகிறேன். எனக்கு வேண்டிய இசை அல்லது நான் கேட்கும் இசை வரும் வரை உழைக்க தயாராக இருக்கிறான்.

மிரட்டும் சண்டைக் காட்சி

பிசாசு படத்தின் உயிர் நாடி க்ளைமாக்ஸ் காட்சிதான். பல்வேறு ஹாலிவுட் படங்களில் ஸ்டண்ட் இயக்குனராக பணியாற்றிய டோனி இந்த காட்சி அமைப்பில் மிரட்டி இருக்கிறார்.

பெரிய பட்ஜெட்

புதுமுகங்களை வைத்து படமெடுத்தாலும் பட்ஜெட் பெரிது. அந்த சுதந்திரத்தை எனக்கு அளித்த எனது நண்பரும் தயாரிப்பாளருமான பாலாவுக்கு கடமைப்பட்டு இருக்கிறேன் என்று கூறியுள்ளார் மிஷ்கின்.

 

2015ல் கமல் ஆதிக்கம்! கால் நூற்றாண்டுக்கு பிறகு கமலின் 3 படங்கள் ஒரே வருடத்தில் ரிலீஸ்

சென்னை: சுமார் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு பிறகு உலக நாயகன் கமல்ஹாசன் நடித்த 3 படங்கள் ஒரே ஆண்டில் ரிலீசாக உள்ளன. அந்த வகையில் அடுத்த ஆண்டு கமல் ரசிகர்களுக்கும், கலை ரசிகர்களுக்கும் தித்திக்கும் ஆண்டாக அமையப்போகிறது.

கமல்ஹாசன் இந்தாண்டு முழுவதுமே மூன்று படங்களில் நடிப்பதில் மிகவும் பிசியாக இருந்தார். உத்தமவில்லன், பாபநாசம், விஸ்வரூபம்-2 ஆகிய மூன்று படங்களுக்காக ஆண்டு முழுவதையுமே அவர் செலவிட்டார். ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் உருவாகும், உத்தமவில்லன் இந்த மாதம் ரிலீசாகும் என எதிர்பார்க்கப்பட்டது.

2015ல் கமல் ஆதிக்கம்! கால் நூற்றாண்டுக்கு பிறகு கமலின் 3 படங்கள் ஒரே வருடத்தில் ரிலீஸ்

ஆனால் படப்பிடிப்புக்கு பிந்தைய வேலைகள் நிலுவையிலுள்ளதால், அடுத்த ஆண்டு தொடக்கத்தில் உத்தம வில்லன் ரிலீஸ் ஆகும் என தெரிகிறது. அதையடுத்து பாபநாசமும், மூன்றாவதாக விஸ்வரூபம்-2 ஆகிய படங்களும் அடுத்தடுத்து ரிலீசாகி கமல் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தப்போகின்றது.

ஓராண்டில், கமலின் மூன்று படங்கள் வெளியாகி சுமார் இருபத்தைந்து ஆண்டுகளாவது இருக்கும் என்கிறார், திரைப்பட எழுத்தாளர் தனஞ்சயன் கோவிந்த். அந்த வகையில் இரு கால் நூற்றாண்டு சாதனையாகும்.

உத்தமவில்லன் படத்துக்கான சவுண்ட் மிக்சிங் பணிகளுக்காக, கமல்ஹாசன் விரைவிலேயே அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் செல்ல உள்ளார். அதே ஸ்டூடியோவில் விஸ்வரூபம்-2 படத்தின் சவுண்ட் மிக்சிங்கையும் முடித்துவிடப்போகிறார் கமல். மூன்று படங்களுக்குமான சூட்டிங் முடிந்துவிட்ட நிலையில், பிந்தைய பணிகள் மட்டுமே பாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

சீக்கியர்களுக்கு எதிராக கலவரத்தை தூண்டியதாக அமிதாப் பச்சனுக்கு யு.எஸ். கோர்ட் சம்மன்

லாஸ் ஏஞ்சல்ஸ்: 1984ம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தை தூண்டிவிட்டது பற்றி பதில் அளிக்குமாறு அமெரிக்க நீதிமன்றம் நடிகர் அமிதாப் பச்சனுக்கு சம்மன் அனுப்பியுள்ளது.

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி சுட்டுக்கொல்லப்பட்டதையடுத்து 1984ம் ஆண்டு டெல்லியில் சீக்கியர்களுக்கு எதிராக கலவரம் வெடித்தது. இதில் பல சீக்கியர்கள் கொல்லப்பட்டனர். இந்நிலையில் இந்த கலவரத்தை பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் தான் தூண்டிவிட்டார் என்று கூறி அமெரிக்காவில் உள்ள மனித உரிமை அமைப்பான சீக்ஸ் பார் ஜஸ்டிஸ் என்ற அமைப்பின் சார்பில் அதன் சட்ட ஆலோசகர் குருபத்வந்த் பன்னூன் என்பவர் லாஸ் ஏஞ்சல்ஸ் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கால் அமிதாப் பச்சனுக்கு பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

சீக்கியர்களுக்கு எதிராக கலவரத்தை தூண்டியதாக அமிதாப் பச்சனுக்கு யு.எஸ். கோர்ட் சம்மன்

அமிதாப்

பன்னூன் தனது மனுவில் கூறியிருப்பதாவது, இந்திரா காந்தி கொலை செய்யப்பட்ட பிறகு ரத்தத்திற்கு ரத்தம் என்று கோஷமிட்டு கலவரத்தை தூண்டியதே அமிதாப் பச்சன் தான் என்று தெரிவித்துள்ளார்.

காந்தி குடும்பம்

காந்தி குடும்பத்திற்ரு நெருக்கமாக இருந்த அமிதாப் பச்சன், 1984ம் ஆண்டு அக்டோபர் மாதம் 31ம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து வெளியே வந்தார். அப்போது அவர் சீக்கியர்களுக்கு எதிராக கலவரத்தை தூண்டி விட்டார் என்று பன்னூன் தெரிவித்துள்ளார்.

சம்மன்

பன்னூனின் மனுவை ஏற்றுக் கொண்ட லாஸ் ஏஞ்சல்ஸ் நீதிமன்றம் இது குறித்து பதில் அளிக்குமாறு அமிதாப் பச்சனுக்கு சம்மன் அனுப்பியுள்ளது. அவர் 21 நாட்களுக்குள் பதில் அளிக்க வேண்டும்.

சாட்சியம்

சீக்கிய கலவரம் தொடர்பான வழக்கின் முக்கிய சாட்சியமான ஜக்தீஷ் கௌர் கூறுகையில், ரத்தத்திற்கு ரத்தம் என்று அமிதாப் பச்சன் இரண்டு முறை கோஷமிட்டதை தூர்தர்ஷனில் நேரடி ஒளிபரப்பு செய்ததை நான் பார்த்துள்ளேன். அவர் மீது ஏன் இந்தியாவில் வழக்கு தொடரப்படவில்லை என்று கேட்டுள்ளார்.

 

2ஜி வழக்கு பற்றி சர்ச்சை வசனம்.. விஜய், முருகதாஸ், லைகாவுக்கு மதுரை நீதிமன்றம் நோட்டீஸ்!

மதுரை: இன்னும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டு வழக்கு குறித்து கத்தி படத்தில் தவறான வசனம் பேசிய, அதை எழுதிய, படமாக எடுத்த நடிகர் விஜய், இயக்குநர் முருகதாஸ் மற்றும் தயாரிப்பாளர் லைகா நிறுவனம் மீது மதுரை உயர்நீதி மன்றக் கிளையில் வழக்கு தொடரப்பட்டது.

இதுகுறித்து பதில் அனுப்புமாறு மதுரை உயர்நீதிமன்றக் கிளை சம்பந்தப்பட்ட மூவருக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

கத்தி படத்தில் விஜய் கழுத்து நரம்பு புடைக்க பேசும் வசனங்களில் முக்கியமானது 2ஜி அலைக் கற்றை ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடுகள் பற்றியதாகும்.

வெறும் காத்தை வச்சே 2ஜிங்கற பேர்ல லேயே கோடி கோடியாக ஊழல் செஞ்ச நாடு இது, என்று வசனம் பேசுவார்.

இந்த வசனம் கேட்டு தியேட்டர்களில் கைத்தட்டல் எழுந்தாலும், அதைத் தாண்டி யோசிப்பவர்களுக்கு பலத்த அதிர்ச்சியைத் தந்தது.

2ஜி வழக்கு பற்றி சர்ச்சை வசனம்.. விஜய், முருகதாஸ், லைகாவுக்கு மதுரை நீதிமன்றம் நோட்டீஸ்!

காரணம், 2 ஜி அலைக் கற்றை முறைகேடு வழக்கு என்பது இன்னும் நிலுவையில் உள்ள ஒன்று. நடந்தது ஊழலா.. அரசுக்கான இழப்பா என்பதை நீதிமன்றம்தான் சொல்ல வேண்டும்.

இந்த 2 ஜி இழப்பு என்பது, மக்களுக்காக சலுகை விலையில் அலைக்கற்றையை விற்றதால் வந்ததுதான் என்ற வாதம் நீதிமன்றத்தில் வைக்கப்பட்டுள்ளது. அதை மத்திய அரசு மறுக்கவும் இல்லை. 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ஊழல் நடந்ததாக நீதிமன்றமும் குறிப்பிடவில்லை. இழப்பு ஏன் என்றுதான் வாதம் நடந்து கொண்டுள்ளது. இதில், துறைக்கு சம்பந்தமே இல்லாத சிலர் தனிப்பட்ட முறையில் ஆதாயமடைந்தது பற்றியும் வழக்கு நடந்து வருகிறது.

நிலைமை இப்படி இருக்கையில், ஒரு சினிமா இயக்குநரும், நடிகரும் இந்த வழக்குக்கு எப்படி படத்தில் தீர்ப்பெழுத முடியும்... 2ஜியில் ஊழல் நடந்ததாகச் சொல்ல முடியும் என்று கேட்டு மதுரை நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த படத்தில் இடம்பெற்றுள்ள வசனங்கள் நீதித்துறையையே அவமதிக்கும் செயல் என்றும் மனுதாரர் தரப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மனுவை பரிசீலித்த நீதிமன்றம், நீதித்துறையை கத்தி படக்குழு அவமதித்ததற்கான முகாந்திரம் உள்ளதாகக் கூறி, விசாரணைக்கு ஏற்று, படத்தில் அந்த வசனத்தைப் பேசிய நடிகர் விஜய், வசனம் எழுதிய ஏ ஆர் முருகதாஸ், படத்தைத் தயாரித்த லைகா (தயாரிப்பாளர் என வேறு யார் பெயரும் குறிப்பிடப்படாததால்) நிறுவனம் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.